Advertisement

முகவரி 15:

 

ஜக்கம்மாவை அந்த நேரத்தில் முரளி எதிர் பார்க்கவில்லை. தனக்கு போன் பண்ணும் போது ஊரில் இருப்பதாகத்தானே சொன்னார்.இப்பொழுது இங்க எப்படி..? என்று யோசனையில் ஆழ்ந்தார் முரளி.ஆனால் தன் தாயின் வரவை அவர் சிறிதும் விரும்பவில்லை.உண்மை தெரிந்த நாள் முதலாய் அவரின் மீது முரளி வைத்திருந்த பாசம்,மரியாதை எல்லாம் உடைந்த கண்ணாடித் துண்டுகளாகியது.

 

என்னப்பா..முரளி.., உன்ன பெத்தவ வந்து குத்துக்கல்லாட்டம் உட்கார்ந்து இருக்கேன்…நீ என்னடான்னா..வந்தவள வான்னு கூட கூப்பிடாம.,அப்படியே நிக்குற..? என்றார் ஜக்கு.

 

ஆனால் அவருடைய கேள்விக்கு முரளியின் அமைதியே பதிலாகக் கிடைத்து.

 

ஆனால் அதை எல்லாம் ஜக்கம்மாள் கண்டுகொள்ளவே இல்லை.”என்ன அப்பு, நான் கேள்வி பட்டது எல்லாம் உண்மையா..? போன சிறுக்கி திரும்பி வந்த கதையா…வந்துருக்காளாமே..அந்த மேனாமினுக்கி..” என்றார் தோரணையாய்.

 

ஜக்குவின் வார்த்தைகளைக் கேட்டு முரளி பல்லைக் கடிக்க…தீபாவோ “போதும் பாட்டி., மரியாதையா பேசுங்க..என்ன பேச்சு இது.?” என்றாள்  கடுப்புடன்.

 

அப்பொழுது தனது அறையில் இருந்த வந்த அருளும் தனது பாட்டியின் வார்த்தைகளைக்  கேட்டு சற்று திகைக்கவே செய்தான். இருந்தாலும் அதை மறைத்த படி..வாங்க பாட்டி..! என்றவாறு வந்தமர்ந்தான்.

 

என்ன ராசா..நல்லாயிருக்கியாய..!” என்றார் பாசமாய் ஜக்கு.அவரின் பாச வார்த்தைகளில் தன்னைத் தொலைத்த அருள்..மற்றதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை.

 

எனக்கென்ன பாட்டி…? ஜம்முன்னு இருக்கேன்”.என்றான் அருள்.

 

உனக்கென்ன ராசா…நீ நல்லாதான் இருப்ப…” என்ற ஜக்கு முரளியின் பக்கம் திரும்பி… “நான் ஒன்னு கேட்டேன் அப்பு..நீ இன்னும் எனக்கு பதில் சொல்லவே இல்லை.. அந்த சிறுக்கி எப்படி வந்தா…?”  என்றார்.

 

போதும் நிறுத்துங்கம்மா…”அவ ஒன்னும் சிறுக்கி கிடையாது.நான் தொட்டு தாலிக் கட்டின என் பொண்டாட்டி..வார்த்தைய பார்த்து பேசுங்க…இல்ல நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..” என்றார் முரளி கோபமாக.

 

என்ன அப்பு வாய் நீளுது..உங்க அப்பாரே என் பேச்சுக்கு மறு பேச்சு பேச மாட்டாரு..” என்றார் ஜக்கு.

 

முரளி..” அந்த காலமெல்லாம் மலையேறிப் போய்டுச்சு..போதும் இதுவரைக்கும் உங்க பேச்சைக் கேட்டுக் கேட்டு., என் வாழ்க்கையில் நான்  செஞ்ச தப்பெல்லாம் போதும்.,நான் இழந்ததும் போதும்., இனி என்ன செய்யனும்ன்னு எனக்கு தெரியும் …உங்க வேலைய மட்டும் நீங்க பாருங்க..அப்பறம் மகேஷ்வரிய வாய்க்கு வந்தபடி பேசுறது..இதுவே கடைசி தடவையா இருக்கட்டும்..” என்றார் உறுமலாய்.

 

பார்த்தியா சுதா…! இப்படித்தான் அவளைக் கல்யாணம் பண்ணி கூட்டி வந்தப்ப என்ன எடுத்தெறிஞ்சு பேசுனான்…இப்பவும் அப்படித்தான் பேசுறான்..முடிவா சொல்றேன் முரளி..இத்தனை வருஷத்துக்கு அப்பறமா அவளோட நினைப்பு எங்க இருந்து வந்துச்சு உனக்கு…இது தற்செயலா நடந்ததா..இல்லை இதுவும் அந்த கைகாரி வேலையா..? இனி நீ அவளைப் பார்க்க போகக் கூடாது.ஓடிப் போனவ ஓடிப் போனவ தான்..சுதா மட்டும் தான் என் மருமக..இதை எப்பவும் உன் நினைப்பில் வச்சுக்க..” என்றார் ஜக்கு.

 

நிறுத்துங்க….! வந்தோம்மா..ரெண்டு நாள் இருந்தோமா…நல்லா சாப்பிட்டோமா…போனோமான்னு இருக்கனும்.அதை விட்டுட்டு..இந்த தேவை இல்லாத வேலையெல்லாம் பார்க்காதிங்க…அப்பறம் அம்மான்னு கூட பார்க்க மாட்டேன்..” என்றவாறு என்று விட்டார் முரளி.

 

என்ன அருள்..? உங்கப்பன் இப்படி பேசிட்டு போறான்..நீ அமைதியா இருக்க..? என்றார் ஜக்கு.

 

தப்பா எடுத்துக்காதிங்க பாட்டி….! நீங்க அவங்க விஷயத்தில் முன்ன அப்படி நடந்துகிட்டது கூட எனக்கு அவ்வளவா சரியா படலை. மறுபடியும் எதுக்கு அதே தப்பை செய்றிங்க…! வேண்டாம் பாட்டி விட்டுடுங்க…” என்றான் அருள்.

 

தீபா..”பரவாயில்லையே அண்ணா..நீ இந்த அளவுக்காவது யோசிக்கிறியா…? நான் கூட உன் மூளை சுத்தமா மங்கிடுச்சோன்னு நினைச்சேன்…ம்ம்ம் பரவாயில்லை…இன்னும் முழுசா மங்காம…கொஞ்ச நஞ்சம் இருக்கு போல..” என்று இடக்காய் கூறினாள்.

 

என்ன தீபா., நானும் வந்ததுல இருந்து பார்த்துகிட்டே இருக்கேன்.. உன் பேச்சு போற போக்கே சரியில்லை.வயசுப் பொண்ணா அடக்க ஒடுக்கமா இருக்க பாரு..” என்றார் ஜக்கம்மாள் எரிச்சலுடன்.

 

வயசானதுக்கு அப்பறமும் உங்களுக்கு வராத அடக்க ஒடுக்கம்.., உங்க பேத்தி எனக்கு., எப்படி பாட்டி இப்பவே அடக்கம் ஒடுக்கம் வரும்..”  என்று  தீபா இழுக்க…

 

தீபா…..! என்ன இது பெரியவங்ககிட்ட எப்படி பேசனும்ன்னு  தெரியாது…?”  என்று கடிந்து கொண்டான் அருள்.

 

அதுக்கு பெரியவங்க..,பெரியவங்களா இருக்கனும்” என்று தலையை ஒரு வெட்டு வெட்டியவள் ஜக்குவை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் சென்றாள்.

 

இப்படித்தான் அத்தை இவ என் கிட்டையும் நடந்துக்கறா…என்கிட்ட பேசுறதும் இல்லை.என்னை மதிக்கிறதும் இல்லை.நான் என்ன தப்பு பண்ணேன்.நீங்க சொன்னதத்தான் செஞ்சேன்…ஆனா இப்ப எல்லாரும் என்னத்தான் குறை சொல்றாங்க..” என்று ஜக்குவிடம் குமுறினார் சுதா.

 

விடு சுதா…!அதான் நான் வந்துட்டேன்ல…நான் பார்த்துக்கறேன்..நீ கவலைப் படாம இரு..” என்று தன் மருமகளுக்கு ஆறுதல் சொல்லியவர்..அருளின் புறம் திரும்பி ..”ராசா  நடந்தது எல்லாம் உனக்கு முழுசா தெரியாது ராசா…உங்கம்மா மேல எந்த தப்பும் இல்லை. எல்லாம் நான் தான் பண்ணினேன்…” என்று பேரனிடம் உண்மையைக் கூறுவது போல் அவனின் மன நிலையை மாற்ற  ஜக்கு அடித்தளம் போட்டார்.

 

என்ன பாட்டி சொல்றிங்க…? அதுக்காக நீங்க பன்னதும் சரின்னு ஆகிடாது. நானும் அம்மாவை விட்டுக் குடுக்க முடியாம தான் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணினேன்…மத்தபடி நீங்க ரெண்டு பேரும் பண்ணது ரொம்ப தப்பு.உங்களுக்கு அவங்களைப் பிடிக்கலைன்னா…முதல்லயே அவங்க கல்யாணத்தை நிறுத்தியிருக்கலாம். அதைவிட்டு இப்படி எல்லாம் அவங்களை அசிங்கப் படுத்தி இருக்க வேண்டாம்.இதை நான் அன்னைக்கே அம்மாகிட்ட சொல்லி இருப்பேன்.ஆனா அப்பாவும் அப்படி  பேசி., தீபாவும் கோபத்துல இருந்தா.அதனால் தான் நான் அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணேன்..மத்தபடி எனக்கு எதுவும் புரியாம இல்லை. ஏத்தி விட்டு வேலை பாக்குற வேலை எல்லாம் வேண்டாம் பாட்டி…” என்றான் கடுமையாக.

 

என்ன ராசா…? உனக்கும் இந்த பாட்டிய பிடிக்காம போய்ட்டதா..?” என்றார் கண்கலங்க.

 

ஐயோ பாட்டி…என்று அவரை கட்டிக் கொண்டவன்…” அப்படி எல்லாம் இல்லை பாட்டி. நான் எப்பவும் உங்க செல்ல பேரன் தான்..” என்று செல்லம் கொஞ்சினான்.

 

ஆமா..ஆமா..உங்க செல்ல பேரன் செஞ்சு வச்சுருக்க வேலையக் கேளுங்க அத்தை..”என்றார் சுதா.

 

என்ன அப்பு….! உங்க ஆத்தா என்னமோ சொல்றா..?” என்றார் ஜக்கு.

 

அருள் புரியாமல் முழிக்க….சுதாவே ஆரம்பித்தார்…”அத்தை உங்க பேரன் லவ் பன்றாராம்….” என்றார் சுதா.

 

என்ன ராசா…உண்மையா….? பொண்ணு யாரு..நல்லா இருப்பாளா…என் பேரனுக்கு ஏத்த மாதிரி…”என்று இழுத்தார் ஜக்கு.

 

அதே நேரம் அங்கு வந்த தீபா..”அதெப்படி பாட்டி..பேரன் லவ் பண்ணா சரி.அதேது எங்கப்பா லவ் பண்ணி கல்யாணம் பண்ணது மட்டும் தப்பா..? நல்லா இருக்கே உங்க நியாயம்….” என்று வார்த்தைகளால் குத்தினாள் தீபா.

 

ஜக்கம்மாவிற்கும்., சுதாவிற்கும் முகம் அப்படியே சுருங்கி விட்டது. அதைப் பார்த்த திருப்தியுற்றவளாய்., வாயைக் கோணி சிரித்தவள்….அருளின் முறைப்பைப் பெற்றுக் கொண்டு சென்றாள்.

 

                                          *********************

 

நிலாவிற்கு அன்று எந்த வேலையும் ஓடவில்லை. அவள் மனம் அவளிடம் இல்லை.அது எங்கெங்கோ பறந்து திரிந்து கொண்டிருந்தது.தன்னுடைய எம்.டி .சூர்யா என்று தெரிந்ததலிருந்து இப்படித்தான் இருக்கிறாள்.என்னதான் அவன் முன் தைரியாமாகக் காட்டிக் கொண்டாலும்..அவளுக்கும் மனதிற்குள் அவ்வப்போது உதறல் எடுக்கத்தான் செய்தது.இப்படி யோசித்துக் கொண்டிருந்தவளை…,

 

மேடம்…! உங்களை எம்.டி.வர சொன்னார்…: என்று ஆபீஸ் பாய் சொன்னதில் நடப்புக்கு வந்தாள்.

 

ஐயோ…! இப்ப இருந்தேவா….இப்ப எதுக்குக் கூப்பிடுறான் அந்த கருவாயன்.அப்படி கூபிடுறதா இருந்தா…என் கேபினுக்கு  கால் பண்ண வேண்டியது தான..அதை விட்டுட்டு ஆபீஸ் பாய் வேற…ச்சச…என்று சலித்துக் கொண்டாள் நிலா.

 

இப்ப உனக்கு என்ன பிரச்சனை….சூர்யாவ பார்க்க போகனும்கறதா..இல்லை…,ஆபீஸ் பாய் வந்து சொன்னதா…” என்று அவளின் உள்மனம் அவளிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது.

 

ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை…!“என்று முனுமுனுத்தவள்… எம்.டி.அறையை நோக்கிப் போனாள்.

 

மே.. .. கம்.. இன்….!“என்றாள் நிலா.

 

எஸ்…கம்..இன்..!“என்று ஒலித்தது சூர்யாவின் குரல்.

 

கடவுளே..!என்ன நடக்கபோகுதோ….உனக்குத்தான் வெளிச்சம்…” என்று நினைத்தபடி உள்ளே சென்றாள் நிலா.

 

சூர்யா..அங்கு கடும் கோபத்தில் இருந்தான்..நிலாவைப் பார்த்தது தான் மாயம்..” என்ன நினச்சுகிட்டு இருக்கிங்க மிஸ்.நிலா. உங்க கேபினுக்கு எத்தனை முறை கால் பன்றது. ரெஸ்பான்ஸ் பன்னவே மாட்டேங்கிறிங்க…! இது ஆபீஸ்ன்னு நினச்சிங்களா..இல்லை வேற எதுமா…? நீங்க கனவு கண்டுகிட்டு உட்கார என் ஆபீஸ் தான் கிடைத்ததா…?”  என்று வசை மாரி பொழிந்து கொண்டிருந்தான் சூர்யா.

 

நிலா..”கனவு ஒன்னுதான் குறைச்சல்…எருமை…உன்னப் பத்திதான்…யோசிச்சுகிட்டு இருந்தேண்டா…கருவாயா..” என்று மனதிற்குள் அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் நிலா.

 

நான் கேட்டுகிட்டே இருக்கேன்…..நீங்க பேசாம இப்படி நின்னுகிட்டு இருந்தா என்ன அர்த்தம்…?”என்றான் சூர்யா.

 

நிலா..” ம்ம் பதில் சொல்ல விருப்பம் இல்லைன்னு அர்த்தம்..” என்றாள் மனதிற்குள்.

 

நிலாவை மார்க்கமாய்ப் பார்த்து வைத்தான் சூர்யா…” திமிர்…எல்லாம் திமிர்…என்றவன்…நான் கேட்ட டிசைன்ஸ் எங்க..?” என்றான்.

 

இதோ.! நீங்க கேட்ட டிசைன்ஸ்..”என்றவாறு பைலை நீட்டினாள் நிலா.

 

ஹோ..இதுக்கு மட்டும் தான் வாயத் திறப்பிங்களோ….!., இதேது அந்த அருள் பேசி இருந்தா..பல்லு சுலுக்குற அளவுக்கு சிரிச்சு சிரிச்சு பேசி இருப்ப இல்லை…” என்றான் குத்தலாய்

 

அது உங்களுக்கு தேவை இல்லாத விஷயம் சார்…!  என்னோட தனிப்பட்ட விஷயங்களை இங்க பேசுவதில் எனக்கு பிடித்தம் இல்லை”என்றாள் கத்தரிப்பது போல்.

 

அதே மாதிரி..உங்க தனிப்பட்ட விஷயங்களை…என் ஆபீஸ் நேரத்துல யோசிக்கிறிங்க..அது மட்டும் தப்பில்லையா..? இங்க..வந்தா வேலையப் பத்தி மட்டும் நினைக்கனும்..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே..அவனுக்கு ஒரு கால் வர அதில் பிஸியானான்.

 

நிலா..”இப்ப நாம என்ன பன்றது…இருக்கனுமா..இல்லை போகனுமா…இவர் பெரிய துரை…ரொம்பத்தான் ஓவரா பேசுறான். இந்த நிலா யாருன்னு  தெரியாமா என்கிட்ட மோதிகிட்டே இருக்க. மவனே ஒரு நாள் இல்லை ஒரு நாள் உனக்கு இருக்குடா கச்சேரி..” என்று மனதிற்குள் கறுவியவள்…இதென்ன சோதனை..பேசாம வேலை விட்டுடலாமா..என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

 

அதற்குள்…போன்  பேசி முடித்த சூர்யா…”நீங்க போகலாம்..” என்றான் உத்தரவாய். ஆளை விடுடா சாமி…என்று நினைத்துக் கொண்டே….வெளியேறினாள் நிலா.

 

நிலா வெளியேறவும்., அவளைப் பார்த்துக் கொண்டே உள்ளே..நுழைந்தான் ஜீவா.

 

அப்பறம் மச்சான்..என்ன நடக்குது இங்க..? இவ்வளவு சூடா இருக்க…அந்த நிலா பொண்ணு வேற,…அப்படி கோபமா  போகுது..?” என்ன நடக்குது இங்க..? என்றான் ஜீவா.

 

அதெல்லாம் ஒரு மண்ணும் இல்லை,…நீ தீபாகிட்ட பேசுனியா..?” என்றான் சூர்யா.

 

இல்ல மச்சான்.. எனக்கு தான் அவ நம்பர் தெரியாதே..! அப்பறம் எப்படி பேசுறது..என்றான் அப்பாவியாய்.

 

அப்படி ஒன்னு இருக்கோ…சரி எப்படியும் எனக்கு போன் பண்ணுவா…அப்ப பார்த்துக்கலாம்..இப்ப வேலையப் பார்க்கலாம் சரியா..” என்றான் நக்கலாய்.

 

பார்க்குறேன்டா…! எனக்கும் ஒரு காலம் வரும்…” என்றவன் “நான் கேக்குறேன்னு தப்பா நினைக்காத சூர்யா..? நீ நிலாவை லவ் பன்றியா…?” என்றான்.

 

சூர்யாவின் கண்கள் ஒரு நிமிடம் திகைப்பைக் காட்டி மறு நிமிடமே மாற்றிக் கொண்டது…”அப்படியெல்லாம் இல்லை ஜீவா.நடக்காத ஒன்னுக்கு நான் எப்பவும் ஆசைப் படுறது இல்லைன்னு உனக்குதான்  நல்லாத் தெரியுமே..!அவளை நான் காதலிச்சேன் தான் இல்லைன்னு சொல்லலை. ஆனா..எப்ப சில விஷயஙள் தெரிய வந்ததோ..அப்பவே என் மனச நான் மாத்திகிட்டேன்.அதுமட்டும் இல்லாம…அவ அருளை காதலிக்கிறா…” என்றான் சூர்யா நிர்சிந்தையாய்.

 

ஜீவா..”இல்ல சூர்யா…நீ கடைசியா சொன்னதை மட்டும் என்னால ஏத்துக்க முடியாது. நிலா.,அருளை லவ் பண்ண  வாய்ப்பே இல்லை.நீதான் தப்பா புரிஞ்சுக்கிட்டயோன்னு எனக்குத் தோணுது…” என்றான்.

 

அவ வாயாலயே சொன்னா ஜீவா…..அவ அருளை லவ் பன்றதாகவும்..,அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்க போறதாகவும் என் கிட்டயே சொன்னா.எது எப்படியோ…அருள் தான் நிலாவுக்கு உரிமை உள்ளவன். அது மட்டும் இல்லாம நீ ஆசைப் படுறது கண்டிப்பா நடக்காது…” என்றான் சூர்யா.

 

நான் ஆசைப்படுறது எங்க நடக்குது..” என்றான் ஜீவா சலிப்பான குரலில்.அவனின் தோளைத் தட்டிய சூர்யா…” இப்ப நீ எது ஆசைப் பட்டு அது நடக்கலை…எதுக்கு இப்படி ஒரு சலிப்பு மச்சான் உனக்கு..” என்றான்.

 

ஜீவா..”இல்ல மச்சான்..தீபாகிட்ட இருந்து இன்னும் எந்த பதிலும் வரலையேடா…எனக்கு என்னவோ அவ ஏத்துக்குக்க மாட்டான்னுதான் தோணுது.ஏன்னா நான் செஞ்சதும் சரி இல்லைதானா. என்ன இருந்தாலும் அவ மனச நான் கஷ்ட்டப் படுத்தியிருக்கேன் சூர்யா.மனசு பாரமா இருக்குற மாதிரி இருக்குடா.பெத்தவங்கதான் இல்லைன்னு பார்த்தா…இப்ப இவளும்…என்று நிறுத்தியவன்,….விடுடா… எனக்கெல்லாம்  நல்லதே நடக்கக்கூடாதுன்னு கடவுள் நினைக்கிறார்,என்ன புலம்பி என்ன ஆகப் போகுது…” என்றான் விரக்தியுடன்.

 

அவனை அணைத்துக் கொண்ட சூர்யா..”சாரிடா..மச்சான்….இதெல்லாம் என்னால் தான்.நான் இப்படி கோணத்தை யோசிக்காமல் நடந்துகிட்டேண்டா….ஐ ஆம் சாரி ஜீவா…ஆனா நீ வேணா பாரு..தீபா கண்டிப்பா ஓ.கே சொல்லிடுவா..எனக்கு அந்த நம்பிக்கை இருக்குடா…எப்பவும் எனக்கு நீதாண்டா மச்சான்..” என்றான்.

 

ஜீவா..”அதெப்படி சூர்யா..அந்த வீட்ல உங்கப்பா முதற்கொண்டு  யாரையும் உனக்கு பிடிக்கலை.ஆனா தீபாவை மட்டும் ஏன் உனக்கு பிடிக்குது…” என்றான்.

 

என்னன்னு தெரியலை ஜீவா. ..!ஆனா பார்த்த முதல் தடவையே., உறவுமுறை தெரியாத போதே…! எனக்கு அவளை ரொம்ப பிடிச்சது. தீபாவைப் பார்க்குறப்ப எல்லாம் என்னன்னே சொல்ல முடியாத ஒரு உணர்வு.எனக்கு இப்படி ஒரு தங்கை இல்லையேன்ற ஏக்கம்..!இப்படி சொல்லிட்டே போகலாம்.அதனால் தான் என்னவோ..எனக்கு தீபா மேல கோபம் வரலை.அதுக்கு மாறா..பாசம் தான் வருது.நானும் கன்ட்ரோல் பண்னனும்ன்னு நினைப்பேன்..ஆனா  முடியலை ஜீவா”… என்றான் ஜீவா.

 

புரியுது மச்சான்…! என்று ஜீவா சொல்லிக்கொண்டிருக்கும் போதே….” சூர்யாவின் மொபைல் ஒலித்தது.

 

புது நம்பராக தெரியவும்....யாரா இருக்கும்…? என்று யோசித்துக் கொண்டே…”அட்டென் செய்தான் சூர்யா.

 

ஹலோ..!”என்றான் சூர்யா.

 

ஹலோ..இந்த பக்கம் தீபா…அந்த பக்கம் யாரு..?” என்றாள் குறும்புடன்.

 

தீபா என்றவுடன்..சூர்யாவிற்கு தன்னையறியாமல் உதட்டில் சிரிப்பு வந்தது…”இந்த பக்கம் சூர்யா…அந்த பக்கம் தீபாவா..?” என்றான் அவனும் அவளைப் போலவே.அதற்குள் தீபா தான் அழைத்திருக்கிறாள் என்று அறிந்த ஜீவா..”டேய் மச்சான் ஸ்பீக்கர்ல போடு…”என்றான் ரகசியமாய்.

 

சூர்யாவும் ஸ்பீக்கரில் போட….”அந்த தடிமாடு பக்கத்துல இருக்கானா அண்ணா…?” என்றாள் எடுத்த எடுப்பில்.

 

ஜீவா பல்லைக்கடிக்க..சூர்யா சிரிப்பை அடக்கியவனாய்..”இல்லடா…அவன் இங்க இல்லை…என்ன விஷயம் தீபா….மரியாதை எல்லாம் பலமா இருக்கு…என் மச்சானுக்கு..” என்றான் சூர்யா.

 

ஐயோ..! அண்ணா…அவனுக்கு எதுக்கு மரியாதை…தொடை நடுங்கி…நீங்களே..நேத்து பார்த்திங்கள்ள…எப்படி சப்பையா பேசுறான். இவன் எனக்கு சரிப்பட்டு வர மாட்டான் சூர்யா அண்ணா…” என்றாள் தீபா.

 

அவளது பதிலில்  ஜீவா அதிர..சூர்யாவும் சேர்ந்து அதிர்ந்தான்…”என்ன தீபா..சொல்ற..?” என்றான்.

 

தீபா…. “அட ஆமாண்ணா…எப்படியும் அவன் எனக்கு தாலி கட்ட மாட்டான்.நான் தான் அவனுக்கு தாலி கட்ட போறேன்..” என்று நாசூக்காய் தனது சம்மத்தை கூறினாள்.

 

முதலில் திகைத்த சூர்யா..அவள் பதிலின் உட்பொருள் அறிந்து சிரிக்கத் துவங்க…ஜீவாவிற்கு தனது மானம் கப்பலேறுவதற்குள் காப்பாற்ற வேண்டிய நிலை..வேகமாய் செல்லைப் பிடுங்கியவன்….”அடியே..! நான் உனக்கு தடிமாடா….தொடை நடுங்கியா…இருடி உனக்கு நான் யாருன்ன்னு காட்றேன்….அப்பவே சொன்னேன்…நீ ஒரு வாலில்லாத குரங்குன்னு…எங்க கேட்டான் உங்கண்ணன்..ரொம்ப நல்ல பொண்ணுன்னான்…வாய் மட்டும் வாய்க்கா தூரம் இருக்கு….”என்று ஜீவா பொரிந்து தள்ள… அந்த பக்கம் போன் வைக்கப்பட்டதற்கான பீப் சத்தம் மட்டுமே கேட்டது.

 

ஐயோ ..! இவன் எப்ப வந்தான்…” என்று அந்த பக்கம் போனைக் கட் பண்ணிய தீபா..உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

 

இங்கோ சூர்யா…விழுந்து..விழுந்து சிரித்துக் கொண்டிருந்தான்..”எப்படி மச்சான்…என் தங்கச்சி..நாசூக்கா சம்மதம் சொல்லிட்டா…இப்ப சந்தோஷமா..” என்றான்.

 

சூர்யாவின் மொபைலில் இருந்து தீபாவின் நம்பரை எடுத்த ஜீவா.. “தேங்க்ஸ் மச்சான்…என்று அவனுக்கு ஒரு முத்தத்தைக் கொடுத்தவன்….நான் எதிர்பார்க்கலைடா…ரொம்ப சந்தோஷமா இருக்கேன்…நான் என் கேபினுக்கு போறேன் மச்சி..” என்றாறு ஓடிவிட்டான்.

 

ஜீவாவின் சந்தோஷத்தை பார்த்த சூர்யாவிற்கும் சந்தோஷமாய் இருந்தது.

 

அதே நேரம் நிலாவின் முகம்  நினைவுக்கு வர…அவனின் முகம் பாறையாய் இறுகியது.

 

தன் இடத்திற்கு வந்த நிலாவிற்கு மனம் நிலைகொள்ளாமல் தவித்தது.”எதுக்கு எப்ப பார்த்தாலும் என்ன ஏதாவது சொல்லிட்டே இருக்கான்.எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நிம்மதியும் இவனால் போய்டுச்சு.இதுல அந்த அருள் வேற..நான் எப்ப அவன என் ஹஸ்பெண்ட்னு சொன்னேன்.சரி அப்படியே அது உண்மையா இருந்தாலும் இந்த கருவாப்பய எதுக்கு அன்னைக்கு அந்த குதி குதிக்கனும்..என்று ஒவ்வென்றாய் யோசித்துக் கொண்டிருந்த நிலாவிற்கு…தன்னையும் அறியாமல் கண்கள் கலங்கியது…”

 

இப்ப எதுக்கு நிலா…. நீ அழற…?”  என்று  மனம் கேள்விகேட்டது.

 

நான் எங்க அழறேன்…? நான் எதுக்காக அழனும்….என்று தனக்குத் தானே உரைத்தவள். சூர்யாவைப் பற்றி ஒரு முடிவுக்கும் வர முடியாமல் தவித்தாள். இவன் எங்கூட நல்ல விதமா பேசினா எப்படி இருக்கும்..? என்று யோசிக்க…அதிர்ந்தாள் நிலா…..தன் மனதின் நினைப்பை எண்ணி. அவன் உன்கிட்ட எப்படி நடந்தா உனக்கு என்ன…? உன் வேலையை மட்டும் பார்..! என்று உத்தரவிட்டது மனசாட்சி”

 

நிலாவும் தன் மனதை அடக்க எண்ணி எதில் தோற்றாள். அவள் கண்முன் சூர்யாவின் பிம்பமே வந்து நின்றது.அவன் தன்னை முதன் முதலாய் அவன் வீட்டில்..திருடன் என்று பிடித்தது..அவன் குடித்துவிட்டு புலம்பியது..என்று அவள் கண்முன்னால் வந்து கொண்டிருந்தது.இப்ப எதுக்கு இவனப் பத்தி நான் நினைக்கனும்..என்று வீராப்பாய் எழுந்தவள் கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

 

ஆனால் அங்கு நடந்த அனைத்தையும்..,சூர்யா அவன் அறையில் கண்காணிப்பு கேமராவில் பார்த்ததை அவள் அறியாள்.

 

சூர்யா..”இப்ப எதுக்கு இவ தேவை இல்லாம அழறா…ஒரு வேளை நாம ஓவரா திட்டிட்டமோ..?” என்று ஒரு மனம் யோசிக்க..:”நீ எங்க திட்டுன…அவதான் உன் கொட்டித் தீர்த்துட்டு போனா..” என்று ஒரு மனம் நியாபகப் படுத்த…சூர்யா தலையை உலுக்கிக் கொண்டான்.

 

த்தை வேண்டாம்…வாங்க போய்டலாம்…அவருக்கு மட்டும் தெரிஞ்சது…அவ்வளவுதான்.தயவுசெஞ்சு நான் சொல்றதைக் கேளுங்க…”  என்று கெஞ்சிக் கொண்டிருந்தார் சுதா.

 

நீ சும்மா இரு சுதா.நடக்கறதை மட்டும் வேடிக்கை பார்.இடையில் எதுவும் பேசக்கூடாது.என்ன நினச்சுக்கிட்டு இருக்கா..அவ மனசுல.போனவ அப்படியே போக  வேண்டியது தான.இப்ப எதுக்கு வந்தா. காலம் போன கடைசில..புருஷன் கேக்குதா..புருஷன் அவளுக்கு….” என்று சுதாவிடம் பொரிந்த படி.. சூர்யாவின் வீட்டிற்குள் சென்று கொண்டிருந்தார் ஜக்கம்மாள்.

 

இப்ப எதுக்கு அத்தை இந்த தேவை இல்லாத சண்டை.உங்க மகன் ஏற்கனவே என் கூட பேசுறது இல்லை.இதுல இதுவும் தெரிஞ்சா..,இதுக்கும் நான் தான் காரணம்ன்னு குதிப்பார்..வாங்க நாம போகலாம்..” என்றார் சுதா.

 

நீ பேசாம வா…! என்றவாறு உள்ளே..சென்றார் ஜக்கம்மாள்.சுதா கண்களில் பயத்துடன்  தயங்கி நிற்க…அவர் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றார் ஜக்கு.

 

நாம அத்தையை….. வர சொன்னது தப்போ..!” என்று முதன் முறையாக யோசித்தார் சுதா.

 

யாருடி வீட்ல….? என்று கத்தியவாறே சென்றார் ஜக்கு.

 

சத்தம் கேட்டு வெளியே வந்த மகேஷ்வரி…அங்கு ஜக்கம்மாவைப் பார்த்து திகைத்தார்….! அவரின் திகைப்பு அவர் கண்களில் தெரிய…”அதை பயம் என்று தவறாக எடுத்துக் கொண்டார் ஜக்கு.

 

மகேஷ்வரியை விலக்கியவர்…சட்டமாய் சென்று ஹாலில் உள்ள..சோபாவில் அமர்ந்தார்.மகி அதிர்ச்சி விலகாமல் பார்த்துக் கொண்டிருக்க…சுதா செய்வதறியாது கைகளை பிசைந்து கொண்டிருந்தார்.

 

மகேஷ்வரியை..ஜக்குவின் கண்கள எடை போட்டது…” முன்ன இருந்த மகேஷ்வரிக்கும் .,இப்பொழுது இருக்கும் மகிக்கும் அவ்வளவு வித்யாசம்..எப்பொழுதும் அப்பாவியாய் இருக்கும் அவரின் முகம் இப்பொழுது தீர்க்கமாய் இருப்பதாகத் தோன்றியது ஜக்குவிற்கு.தூக்கிப் போடப்பட்ட கொண்டை….அவரின் நெற்றியில் வீற்றிருந்த திருநீர் கோடுகள்…இறுக்கமாய் இருந்த அவரது முகம்”என்று அவரை அலசி ஆராய்ந்தார் ஜக்கு.

 

பொட்டு வச்சதாரு..யாரு…?

அன்னையே..!வட்ட முகத்துல…

தொட்ட அழிச்சது யாரு….?

கட்டி வச்சதாரு…யாரு…?

தாலிய தேதி குறிச்சு …

வெட்டி வச்சது யாரு…?

 

என்னடி பயம் விட்டுப் போய்டுச்சா…? விட்டது சனியன்னு நினைச்சா…மறுபடியும் வந்து நிக்குற….ஏன் இத்தனை வருஷத்துல வேற யாரும் கிடைக்கலையாமறுபடியும் யார் குடிய கெடுக்க வந்துருக்க..?  ” என்றார் ஜக்கு.

 

உங்க குடியைத்தான் கெடுக்க வந்துருக்கோம்…!”என்றாவாறு வீட்டிற்குள் நுழைந்தான் சூர்யா.

 

சூர்யாவைப் பார்த்தவுடன்…மகேஷ்வரிக்கு வந்த தெம்பை வார்த்தைகளால் அறிய முடியாது. நிம்மதிப் பெரு மூச்சு விட்டவர்…ஜக்குவிற்கு எதிரே உள்ள சோபாவில் அமர்ந்தார்.

 

அங்கு நின்றிருந்த சுதாவை முறைத்துக் கொண்டே வந்த சூர்யா….ஜக்குவிற்கு எதிரில் உள்ள சோபாவில் கால் மேல் கால் போட்டு …..மிடுக்காய் அமர்ந்தான்.அவனின் குரலில்…ஒரு நிமிடம் படபடத்த தன் உடலை அடக்கியவாறு சூர்யாவைப் பார்த்தார் ஜக்கு.பார்த்தவர் அதிர்ச்சியானார்.மகேஷ்வரி இங்கு இருப்பது மட்டும் தான் அவருக்கு சொல்லப் பட்ட செய்தி. ஆனால் அங்கு…ஆறடியில் வளர்ந்த சிங்கமாய், கண்களில் கனலுடன்…..இப்படி  ஒருவன் இருக்கிறான் என்பது ஜக்குவிற்கு புது செய்தி.இருந்தாலும் அதை மனதிற்குள் மறைத்தவராய்…

 

நீ யாருடா….? இவளுக்கு என்ன ஒட்டா..இல்லை உறவா…?” என்றார்.

 

ஹா..ஹா..ஹா..என்று சிரித்த சூர்யா…”என்னை உண்மையாலுமே யாருன்னு தெரியலையா..?இல்லை தெரியாத மாதிரி நடிக்கிறிங்களா…? இருந்தாலும் கேட்டுக்கங்க…நான் யாரா…? நான் சூர்யவேந்தன்..சன் ஆப் முரளிதரன்.என்னோட தாத்தா பேரு…. தி கிரேட் வீரபாண்டியன்…” என்றான் அதிகாரமாக.

 

ஜக்குவிற்கு நாக்கு எழும்பவில்லை…அறிந்து கொண்ட அதிர்ச்சி அவர் முகத்தில் தெரிய….அதை கண்டு கொண்ட சூர்யா  மீண்டும் சிரித்தான்.

 

என்ன அப்படிப் பார்க்குறிங்க்…? நானே தான்…உங்களை இங்க வர வச்சவனும் சாட்ஷாத் நானே தான்…!”…என்றான் சூர்யா.

 

இப்பொழுது சுதாவும் சேர்ந்து அதிர்ந்தார்.”தான் சொன்னதால் தான் அத்தை வந்திருக்கிறார் என்று பார்த்தால்…இது புதுக்கதையா இருக்கே…” என்ற அதிர்ச்சிதான் அது.

ஜக்குவின் முகத்தில் ஈயாடவில்லை….!

 

வேம்புக்கு தண்ணி வச்சா…

அது வெயிலுக்கு நல்லதம்மா…

பாம்புக்கு பாலு வச்சா..

கொஞ்சம் பார்த்து நடந்துக்கம்மா….

முகவரி 16

 

ஜக்குவிற்கு கண் அப்படியே இருட்டிக் கொண்டு வந்தது.இதுவரை தான் நினைத்ததையே செய்து பழக்கப்பட்டவர்.,தன் பேச்சால் மற்றவர்களை அடக்கியவர்.., இன்று சூர்யாவைப் பார்த்து பேச வார்த்தையின்றி அமர்ந்திருந்தார்.”மிஞ்சிப் போனா..ஒரு இருபது நாள் இவ இருந்துருப்பாளா..? ” என்று யோசித்த ஜக்கு…சூர்யாவைப் பார்க்க…”நிச்சயம் நான் முரளியின் மகன் தான் என்று பறை சாற்றிய அவனது ஜாடையைக் கண்டு …”தன் யோசனையை மாற்றிக் கொண்டார்.

 

சூர்யா அமர்ந்திருந்த விதமும்..அவன் கண்களில் தெரிந்த கடுமையான கோபமும்..நடந்த விஷயங்கள் அவனுக்கு சொல்லப் பட்டிருக்கிறது என்பதை ஊகித்தார் ஜக்கு.இருந்தாலும் சூர்யாவின் முன் தாழ்ந்து போக..ஏனோ ஜக்குவின் மனம் இடம் தரவில்லை.

 

ஜக்கு..” அப்ப..எனக்கு வந்த கடுதாசி…நீ போட்டதுதானா…? நான் அப்பவே யோசிச்சேன்..என்னடா எப்பவும் போன்ல பேசுறவ…இப்ப கடுதாசி போட்டு இருக்காளேன்னு….எல்லாம் உன் வேலைதானா..?” என்றார் கோபமாய் சூர்யாவிடம்.

 

ஜக்குவை உறுத்துப் பார்த்த சூர்யா..”அதைத்தான் அப்பவே சொன்னேன்..” என்றான் எகத்தாளமாய்.

 

ஜக்கு..”ஓ..ஹோ..அந்த அளவுக்கு வந்துடுச்சா…சுதா சொன்னப்ப கூட நான் நம்பலை.ஆத்தாளுக்கு இருக்கிற திமிர் அப்படியே இருக்கும் போல உனக்கும்…கொஞ்சம் கூட மட்டு மரியாதை தெரியாம..வயசுக்கு மூத்தவ முன்னாடி கால் மேல் கால் போட்டு உட்கார்ந்துருக்க…?” என்றார் ஜக்கு.

 

அத்தை வாய மூடுங்க…!”என்றார் மகேஷ்வரி ஆத்திரமாக.

 

ஜக்கு..”என்னடி வாய மூட….என்ன, திமிர் ரொம்ப கூடிப் போய்டுச்சு போல.இன்னும் கொழுப்பு கொஞ்சம்  கூட குறையல…நீ பெத்ததையும் அப்படியே வளர்த்து  வச்சுருக்க…” என்றார் ஆங்காரமாய்.

 

மகேஷ்வரி..” வாய மூடுங்க…!  என்ன நினச்சுகிட்டு இருக்கிங்க…போனாப் போகுதுன்னு பார்த்தா ரொம்ப ஆடுறிங்க. எனக்கு என்ன பேசத் தெரியாமலா…அப்பவும் சரி,இப்பவும் சரி  நான் அமைதியா இருக்கேன். என்ன பத்தி பேசவே.உங்களுக்கு அருகதை இல்லைங்கும் போது..,என் பையனப் பத்தி பேசுற யோக்கியதை யாருக்கும் இல்லை. நான் ஒன்னும்  என் பிள்ளைய..உங்க பிள்ளை மாதிரி…பொண்டாட்டிய சந்தேகப் படுறவனா வளர்க்கலை”.

 

இதோ..என்று சுதாவை காட்டியவர்…இவள மாதிரி “தன் அம்மா செஞ்ச தப்பு தெரிஞ்சும்…அவங்களை தலைல தூக்கி வச்சுட்டு ஆடுற..புத்தி கெட்டவனாவும் என் பையன நான் வளர்க்கலை…யாருக்கு மரியாதை குடுக்கனும்…யாருக்கு குடுக்க கூடாது…யாரை மதிக்கனும்,யாரை மதிக்க கூடாதுன்னு என் பிள்ளைக்கு ரொம்ப நல்லாவே தெரியும்..” என்றார் ஆங்காரமாய்.

 

சுதா கோபமாக மகேஷ்வரியைப் பார்க்க…ஜக்குவோ..”என்னடி பையன் பக்கத்துல இருக்கான்ற திமிரா…?” என்றார் கோபத்தில் சிவந்த முகத்துடன்.

 

மகேஷ்வரி..”இல்லவே இல்லை…என்னை என்ன முட்டாள்ன்னா நினச்சிங்க. நான் என்ன படிக்காதவளா..? நாட்டு நடப்பு தெரியாதவளா..? ஒவ்வொரு தடவை நான் அமைதியா போனதுக்கு காரணம்..கொஞ்ச நாளா இருந்தாலும்..என்ன பெத்தா பொண்ணா பார்த்தார் என் மாமனார்.அவருக்காகவும்.,நான் காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டேனே…உங்க பிள்ளைக்காகவும் தான்…..பொறுத்து போனேனே தவிர…பேசத் தெரியாமலோ..இல்லை உங்கமேல இருந்த பயத்தாலயோ

 

இல்லை.  ஆனா அதுக்காக இப்பவும் நான் அப்படியே இருப்பேன்னு நினைச்சா அது உங்க முட்டாள்தனம்”. என்றார் கோபத்தில் சிவந்த முகமாய்.

 

வக்கத்து வந்தவளுக்கு வாயப் பார்த்தியா சுதா…?இத்தனை வருஷத்துல நீ ஒழுக்கமாவா இருந்துருப்ப…?” என்று அவரை மேலும் கீழும் பார்த்தார் ஜக்கு. ஜக்குவின் வார்த்தைகள் மகேஷ்வரியை…இடியாய் தாக்கியது.

 

 

சந்தேகம் தீர்ந்ததுன்னா…

பிறக்குமய்யா நியாயம்…

சங்கடங்கள் சேர்ந்ததுன்னா..

வாழ்க்கை எல்லாம் காயம்..

கண்ணாடி போல தெளிவான மனம் தானே..

கல் மீது விழுந்து உடைந்தாச்சு.. அட மானே…

சந்தேக திரை விழுந்து மறைந்தது நீதி…

சம்சார வாழ்க்கையில் முடிந்தது சரி பாதி…

 

அவரது வார்த்தையில் தன் பொறுமை எல்லாம் தொலைத்த சூர்யா..இடியென முழங்கினான்.. “வயசாயிடுச்சேன்னு பார்க்குறேன்..இல்லை..” என்று இழுக்க…

 

இல்லைன்னா என்னடா பன்னுவ..?”என்று எகிறினார் ஜக்கு.

 

சூர்யா…”என்னை என்ன உங்க பிள்ளைன்னு நினச்சிங்களா..? கொலை பண்ணக் கூட தயங்க மாட்டேன்..! இப்படி எல்லாம் பேச உங்களுக்கு வெட்கமா இல்லை. உங்களை இங்க வர வச்சதே..எங்கம்மா,அவங்க மனசுல இருக்குறத கொட்டுறதுக்குத்தான்….” என்று சூர்யா பேசிக்கொண்டிருக்கும் போதே…

 

வக்கத்து வந்தவளா…யாரு நானா…? உங்க பிள்ளைய கூட்டிட்டு ஓடிப் போயா வயித்துல பிள்ளைய வாங்குனேன்.நான் ஒன்னும் பிச்சக்காரியும் இல்லை.ஒன்னுமில்லாம வந்தவளும் இல்லை.நான் காதலிச்சேன்ற ஒரே காரணத்துக்காக..என் கல்யாணத்துக்கு சம்மதிச்சாங்க என் அம்மா..அப்பா.ஊர் மெச்ச ..சீர் செஞ்சு… வானவேடிக்கையோட…முறைப்படி தாலி வாங்கி ….உங்க வீட்டுக்குள்ள..காலடி எடுத்து வச்சவ நான்.அதே நேரம் என் புருஷன் செத்துட்டார்ன்னு சொன்னப்பக் கூட…அவர் நினைப்ப மட்டும் நெஞ்சுல சுமந்துக்கிட்டு…இத்தனை வருஷம் வாழ்ந்தவ நான். சிலர மாதிரி..அடுத்தவ புருஷன..வளைச்சுப் போட்டு..குடும்பம் நடத்தி அதில்  பிள்ளைப் பெத்தவ கிடையாது. அதை நடத்தி வச்ச நீங்க எல்லாம் ஒழுக்கத்தை பத்தி பேசக் கூடாது”. என்றார் மகேஷ்வரி மூச்சு வாங்க.

 

மகேஷ்வரி பேசப் பேச..சூர்யாவிற்கு கண்கள் கலங்கினாலும்.,அவன் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.ஆனால் மகிக்கோ..தன் ஒழுக்கம் சந்தேகத்திற்கு இடமாவதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

 

சுதா..”அத்தை வேண்டாம்…வாங்க நாம போகலாம்..” என்றார்.

 

நீ இரு சுதா…”ஆமாண்டி ..,நான் தான் நடத்தி வச்சேன்..இப்ப அதுக்கு என்னான்ற….?மருமக.,மருமகன்னு ஒருத்திய நான் வீட்லயே வளர்த்துட்டு

 

வந்தா…எங்க இருந்தோ வந்தவ..நோகாம நொங்கு சாப்பிடுவாளாம்..நாங்களும் வேடிக்கை பர்க்கனுமா….?”.

 

மகேஷ்வரி ஏதோ பேசப் போக., அவரைத் தடுத்தான் சூர்யா…”நானும் மனுஷனா இருக்கத்தான் ஆசைப் படுறேன்.ஆனா..நீங்க இருக்க விட மாட்டிங்க போல இருக்கே..!” என்றான்.

 

என்னடா..? மிரட்டுறியா..? என்றார் சக்கு.

 

யார் மிரட்டுறது….நானா..? அட நீங்க வேற…காமெடி பண்ணாதிங்க…! உங்களைப் போய் யாராவது மிரட்ட முடியுமா..? நீங்க யாரு..தி கிரேட் வீர பாண்டியனோட மனைவி இல்லையா..? உங்களுக்கும் வீரம் இல்லாமயா இருக்கும்..? என்றான் சூர்யா இடக்காய்.

 

நீ என்ன தலை கீழா நின்னாலும்… எப்பவும் …என் குடும்ப வாரிசாக முடியாது…!” என்றார் ஜக்குவும்.,சூர்யாவைப் போல இடக்காக.

 

வாய்விட்டு சிரித்தான் சூர்யா. ஜக்கு முறைக்க…சுதா புரியாமல் பார்க்க…”ஐயோ..! பாட்டி..நீங்க டெரர்ன்னு சொன்னாங்க..ஆனா இப்படி டம்மியா இருக்கிங்க..! உங்களுக்கு சட்டம் தெரியுமா..?என்றவன்..ஹோ சாரி..சாரி..உங்களுக்கு பஞ்சாயத்து மட்டும் தான் தெரியுமோ..! சாரி பாட்டி மறந்துட்டேன். இருந்தாலும் சொல்றேன் கேட்டுக்கோங்க…சட்டம் என்ன சொல்லுதுன்னா…நான் தான் உங்க மூத்த பேரன்னு சொல்லுது சரியா.அப்பறம்..என் அம்மா உயிரோட இருக்குறப்ப..உங்க பையன் ரெண்டாவது கல்யாணம் பன்னது முதல் தப்பு….அதை நீங்களே  நடத்தி வச்சது ரெண்டாவது பெரிய தப்பு.இதுல உங்க பையனுக்கு பத்து வருஷம்ன்னா…உங்களுக்கு குறைந்தது ஏழு வருஷமாவது தண்டனை

 

கிடைக்கும்.அப்பறம் என் அப்பாவை ஏமாத்தி கல்யாணம் பண்ணினாங்களே.. அவங்களுக்கும் சேர்த்துதான் சொல்றேன்..பாட்டி ” என்றான் சூர்யா அப்பாவியாய்.

 

பல்லைக் கடித்த ஜக்கு…”என்னடா பூச்சாண்டி காட்டுறியா..?” என்றார்.

 

ச்ச்சச…இந்த பூச்சாண்டி காட்டுறது…புடுச்சு வெளிய தள்ளுறது இதெல்லாம் உங்க வேலை பாட்டி…”என்று நக்கலாய் சொல்லியவன்….திடிரென்று கடுமையான முகபாவத்துக்கு மாறினான்.”என்னை என்ன ஒன்னும் தெரியாத பச்ச பிள்ளைன்னு நினச்சிங்களா…நான் சூர்யா…,சூர்ய வேந்தன்.எத எதை… எப்ப எப்ப…. …பண்ணினா…சரியா இருக்கும்ன்னு கணக்கு போட்டு பன்றவன்.என் கணக்கு எப்பவுமே தப்புனதே இல்லை.நீங்க மட்டும் விதி விலக்கா என்ன..?” என்றான் பல்லைக் கடித்தபடி.

 

ஒரு நிமிஷம் இரு சூர்யா..என்ற மகேஷ்வரி…சுதாவின் அருகில் சென்று..” இத்தனை நாள் ஏமாளியா இருந்துட்டேன்.இனியும் அப்படி இருப்பேன்னு கனவு கூட காணாத…எப்ப என் ஒழுக்கத்தைப் பத்தி இவ்வளவு கேவலமா..மாமியாரும் மருமகளும் பேச துணிஞ்சிங்களோ…இனியும் நான் பொறுமையா இருந்தா அது என் பிள்ளைக்கு தான் அசிங்கம்.நான் என் புருசனுக்கு மட்டும் தான் உண்மையா இருந்தது நிஜம்ன்னா…உண்மையான காதலுக்குத்தான்…என் பிள்ளையப் பெத்தது உண்மைன்னா…இனியும் என் புருசன உன்கிட்ட விட்டுவைக்க…நான் ஏமாந்தவ கிடையாது. உண்மை தெரிஞ்சப்ப கூட..நான் அமைதியா விலகி தான இருந்தேன். ஆனா சும்மா இருந்தவள..தேடி வந்து,தேவை இல்லாததைப் பேசி..உங்களுக்கு நீங்களே குழி தோண்டிகிட்டிங்க…”  பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு..! என்றார்.

 

அப்பறம்..என் மனசு சொல்றது சரின்னா..”என் புருஷன்..மனம் ஒப்பி உன் கூட வாழ்ந்து இருக்க மாட்டார்.என்று ஒரு கேலி புன்னகையை முகத்தில் தவழ விட்டவர்…” அதுல கூட ஒரு கட்டாயம் இருந்துருக்குமே தவிர.,காதல் கண்டிப்பா இருந்துருக்காது…” என்றார் மகேஷ்வரி.

 

நடந்ததை நேரில் பார்த்தது போல்., மகேஷ்வரி சொல்லவும்..சுதா திகைத்து நின்றார்.சுதாவின் முகத்தைப் பார்த்த மகேஷ்வரிக்கு..இருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகமும் விலகியது.

 

ஆமாமா  அப்பத்தான  சொத்தை சுருட்ட முடியும்….என்னடா..இத்தனை நாள் கழிச்சு வந்துருக்காளே  அப்படின்னு யோசிச்சேன்.இப்பத்தான தெரியுது..எதுக்கு ஆத்தாளும் மகனும் வந்துருக்கிங்கன்னு..” என்றார் ஜக்கு ஆத்திராமாய். இவன் முன் தான் தோற்பதா என்ற எண்ணம் அப்படியே அவர் முகத்தில் தெரிந்தது.

 

இதெல்லாம்., ரொம்ப பழைய டயலாக் பாட்டியம்மா.நான் என்ன கையாலாகதவனா..?அப்பன் சொத்துல உக்கார்ந்து சாப்பிடுறதுக்கு…என்னைய என்ன அந்த அருள் பையன்னா நினைச்சிங்க.சொந்த உழைப்புல முன்னுக்கு வந்தவன்.என் அம்மாவையும்…நான் கட்டிக்க போறவளையும்..ராணி மாதிரி வச்சுக்க  உழைக்கிற அளவுக்கு எனக்கு தெம்பும் இருக்கு..,மூளையும் இருக்கு. அதனால உங்க சொத்தெல்லாம் எனக்கு தேவை இல்லை..” என்றான் சூர்யா.

 

ஜக்குவின் முகத்தில் நிம்மதி ரேகைகள் தெரிய…” அப்படி எல்லாம் சொல்லுவேன்னு நினைக்காதிங்க பாட்டி.நான் கடைசியா சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன். அப்பன் சொத்து எப்படி இருந்தாலும் மூத்த பிள்ளை எனக்கு வந்துதான் ஆகும் பாட்டி. என்றவன்..என் அம்மாவை எந்த ஊர்ல

 

இருந்து துரத்துனிங்களோ.அதே ஊர்ல என் உரிமைய எப்படி நிலை நாட்ட  போறேன்னு..கொஞ்சம் பொறுத்து இருந்து பாருங்க. அப்ப தெரியும், உங்களுக்கு இந்த சூர்யா யாருன்னு.” என்றான் இதற்குமேல் பேச ஒன்றும் இல்லை என்பதைப் போல்.

 

ஆத்தாளும்., மகனும் சேர்ந்துகிட்டு இஷ்ட்டத்துக்கு பேசிறிங்களா..? அதையும் தான் பார்ப்போம்டா..நீ ஜெய்க்கிறியா..? இல்லை நானான்னு…? நீ வா சுதா..என்றபடி வெளியேறினார் ஜக்கு.

 

ஆனால்  சுதாவுக்கோ..மகேஷ்வரி சொன்னதை நினைத்து மனதிற்குள்.. ஒரு பய பிரளயமே தோன்றியது.ஒரு வேளை மகேஷ்வரி சொன்னது போல் செய்து விட்டால் என்ன செய்வது..? என்று அவரின் உடல்….. நடுக்கத்திற்கு சென்றது. எல்லாம் இந்த அத்தையால் வந்தது…மகன அடக்க சொன்னா…இங்க வந்து கலாட்டா பண்ணி.. சும்மா இருந்தவளயும் உசுப்பேத்தி…இப்ப உள்ளதும் போகப் போகுதே…! என்று முதன் முறையாக சுதாவிற்கு ஜக்குவின் மேல் கோபமும்., எரிச்சலும் வந்தது.

 

சுதாவின் கோபத்தை அறியாத ஜக்கு…சூர்யாவும்.,மகியும் பேசிய பேச்சில் ஆத்திரம் அடைந்தவராய் சென்று கொண்டிருந்தார்.

 

அவர்கள் சென்ற பின்…மகேஷ்வரியின் கண்கள் தானாக அழுகைக்குத் தாவியது.என்னதான் அவர்கள் முன்பு தைரியமாகக் காட்டிக் கொண்டாலும்..ஜக்கம்மாவின் வார்த்தைகளின் தாக்கம் மகியை விட்டு போகவில்லை.

 

அம்மா…இனி அழ வேண்டியது அவங்கதான்.தயவு செய்து என் முன்னால் இப்படி அழாதிங்க.இது என் மேல் ஆணை.என்னால நீங்க அழறதை எல்லாம் பார்க்க முடியலை…ப்ளீஸ்.” என்றபடி தாயை ஆதரவாய் அணைத்துக் கொண்டான் சூர்யா.

 

                                          ******************

 

நிலா  ஏதோ யோசனையாக அமர்ந்து இருந்தாள்.மனம் முழுதும் ரம்யாவை சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது.நடந்து முடிந்த சம்பவங்கள் ரம்யாவிற்கு எதிராக இருந்தாலும்..,நிச்சயம் அவளுக்கு நியாயம் கிடைக்கும்.கிடைக்க வேண்டும்.அவள் பட்ட காயங்களுக்கு எல்லாம்…கூடிய சீக்கிரம் விடிவு காலம் பிறக்க வேண்டும் ..என்று நினைத்துக் கொண்டிருந்தாள் நிலா.

 

என்னம்மா…!யோசனை பலமா இருக்கு…என்ன விஷயம்..? இப்ப எல்லாம் நீ நிஜத்துல பேசுறதை விட கனவுல பேசுறதுதான் அதிகமா  இருக்காம்.உங்கம்மா சொல்றா..!” என்றார் பிரபு.

 

நிலா..”அதெல்லாம் ஒன்னும் இல்லைப்பா..எல்லாம் ரம்யாவைப் பத்திதான் யோசிச்சுகிட்டு இருந்தேன்.இன்னும் எத்தனை நாளுக்கு அவ இப்படி மறைஞ்சு மறைஞ்சு இருக்குறது.உயிருக்கு பயந்து எத்தனை நாள் இப்படி அவ தலைமறைவா வாழுறது…அதான்ப்பா யோசிச்சுகிட்டு இருந்தேன்…” என்றாள்.

உண்மைதான் நிலா.ஆனா அதுதான் அவ உயிருக்கு பாதுகாப்புன்னா…வேற ஒன்னும் பண்ண முடியாது நிலாமா.இப்படி எல்லாம் நடக்கும்ன்னு நாம என்ன கனவா கண்டோம்.எல்லாம் விதிப்படி நடக்கனும்ன்னு இருந்திருக்கு…அதான் நடந்திட்டது…” என்றார் பிரபுவும்.

 

பாவம்ப்பா.., அவ.பேசாம ரம்யாவை இங்கையே வர சொல்லலாம்ப்பா.நான் தான அவளை அங்க தனியா தங்க வச்சேன்.இப்ப நானே நினைக்கிறேன்…அவளை இங்கயே கூட்டிட்டு வந்துடலாம்ன்னு.என்னையும் துரத்துறாங்க.., அவளையும் தேடுறாங்க…எதுக்கு தனித் தனியா இருந்து கவலைப் படனும்.எதா இருந்தாலும் ஒன்னா இருந்து சமாளிக்கலாம்ன்ற முடிவுக்கு வந்துட்டேன்ப்பா..” என்றாள் நிலா.

 

அவள் பேசுவதைக் கேட்ட மாலா அதிர்ந்து நிற்க…பிரபு யோசித்தார்.பிறகு தானும் சம்மதம் சொல்ல,நிலா…ரம்யாவை அழைத்து வர வேண்டும் என்ற முடிவில் உறுதியாய் இருந்தாள்.

 

மாலாவிற்கு இனி வரும் பிரச்சனைகளை நினத்து மனம் கவலை கொண்டது.ஆனால் இனியும் பிரச்சனைகளைக் கண்டு பயப்படக் கூடாது என்று அவர் மனம் தெளிவான ஒரு முடிவை எடுத்தது.

                                       —————–

தீபா..சரியான கோபத்தில் இருந்தாள்.”என்ன நிச்சுகிட்டு இருக்கான் இவன் மனசுல.நானே போன் பண்ணி சம்மதம் சொல்லி இவ்வளவு நேரம் ஆகிவிட்டது. ஒரு போன் பண்ணத் தோணலை இந்த மாங்க மடையனுக்கு. இதுல பெரிய ரொமான்ஸ் மன்னன்னு நினைப்பு மனசுல.எப்ப டார்லிங் கல்யாணம் அப்படின்னு மட்டும் கேட்க தெரியுது.ஆனா…ஒரு போன் பண்ண தெரியலை.  தீபா…..உன்ன இப்பவே இந்த புலம்பு புலம்ப விடுறான்….  பார்த்துக்க பின்னாடி டீல்ல விட்டுட போறான்..”என்று  அவளின் மனம் அவளை எச்சரித்து.

 

அதெல்லாம் எனக்கு தெரியும்.. உன் வேலையப் பாரு..” என்று மனதை அடக்கினாள்.இருந்தாலும் ஜீவாவிற்கு போன் பண்ணலாமா..? வேண்டாமா..?

 

என்று இங்கி..பிங்கி போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள் தீபா”.வேண்டாம் என்று நினைத்த தீபா…போனை வைக்க போக..”இல்லை தீபா…நீயே கால் பண்ணு…அவன் போன் பண்ணுவான்னு நீ வெய்ட் பண்ணினா..நீ ஔவையாரா தான் ஆகனும்..” என்று அவளது மூளை அவளை எச்சரித்தது.

 

போனைக் கையில் எடுக்க….வீட்டின் காலிங் பெல்  அடித்தது. “யாரா..இருக்கும்..இந்த அம்மாவும் பாட்டியும் எங்க..?” என்று கடுப்பான தீபா…சென்று கதவைத் திறக்க..அங்கு யாரும் இல்லை.”இதென்னடா…இப்ப பெல் அடிக்கிற சத்தம் கேட்டதே..! ஆனா யாரையும் காணாம்…” என்று தீபா சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருக்க…சடனாக அவள் முன் வந்தான் ஜீவா.

 

ஒரு நிமிடம் தீபாவிற்கு எதுவும் புரியவில்லை.தன்னைக் கிள்ளிப் பார்த்தவள்.., அது உண்மை என்று புலப்பட…உடனே பயம் வந்து அப்பிக் கொண்டது.ஜீவா கூலாக நிற்க…வீட்டிற்கு உள்ளேயேயும்., வெளியேயும் பார்த்த தீபா..யாரும் இல்லை என்பதை உறுதி படுத்திக் கொண்டு…ஜீவாவை முறைத்தாள்.

ஆனால் ஜீவாவோ..அவளை அதி முக்கியமாய் சைட் அடித்துக் கொண்டிருந்தான்.இப்ப இங்க எதுக்கு வந்திங்க…?யாராவது பார்த்தா என்ன ஆகுறது…?” என்றாள் கோபமாய்.

 

ஆனால் ஜீவா..அதை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல்…”யாராவது பார்த்தா என்ன ஆகும்..?” என்றான் அசட்டையாய்.அவனது பதிலில் தீபா..”ஆஆ.வென வாயைத் திறக்க…” ஜீவா சிரித்தான்.

 

ஜீவா..”என்ன டார்லிங்..இந்த தடிமாடு இங்கையே வருவேன்னு நீ எதிர்பார்க்கலை இல்ல. சரி சின்ன பொண்ணா இருக்கா…கொஞ்சம் விட்டுப்

 

பிடிப்போம்..அப்படின்னு நினச்சா..என்னமா பேசறடி வாய். அப்படியே அருவி மாதிரி கொட்டுற..ம்ம்ம்..இப்ப சொல்லு..நேர்லயே வந்துட்டேன்..” என்றான் கண்களில் காதலுடன்.

 

ஐயோ..! முத இங்க இருந்து போங்க..அண்ணா வர நேரம்..அவன் மட்டும் உன்ன இங்க பார்த்தான்..அவ்வளவுதான்…எல்லாமே சொதப்பிடும்..” என்றாள் அவசரமாக.

 

அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே..அவள் கையிலிருந்த செல்லை வெடுக்கென்று பிடுங்கியவன்..அதில் இருந்து தன் செல்லுக்கு ஒரு கால் பண்ணிவிட்டு., மறுபடியும் அவளிடமே கொடுத்தான்.”இதுக்குத்தாண்டி வந்தேன்.உன் சூர்யா அண்ணன் பெரிய இவனாட்டம்.முடிஞ்சா..நீயே நம்பர் வாங்கிக்க… அப்படின்னான்..” அதான் வந்தேன்.

 

அப்ப இதுக்குத்தான் வந்தானா..? என்ன பார்க்க வரலையா..?” என்று ஒரு நிமிடம் யோசித்த தீபாவின் மனம் புஸ் என்று ஆகியது.  

 

அப்ப நான் வரேன்..என்று ஜீவா செல்ல…தீபா திகைத்து நிற்க…”திரும்பி வந்த ஜீவா..அவள் திகைத்து நிற்கும் அந்த நொடியைப் பயன்படுத்தி..அவள் கையில் ஒரு கிப்ட்..பாக்ஸை திணித்தவன்…அவள் கன்னத்திலும் பட்டென்று ஒரு முத்தத்தை பதித்து விட்டு வேகமாய் சென்று விட்டான்…”. ஆனால் தீபாவிற்கு தான் அதிர்ச்சி மீண்ட பாடில்லை.

 

தன் கையில் இருந்த செல்போன் ஒலி எழுப்ப..அதில் நிஜ உலகிற்கு வந்தாள் தீபா.நம்பரைக் கூட பார்க்காமல் போனைக் காதில் வைக்க..” என்ன டார்லிங்..இன்னும் எவ்வளவு நேரம் வெளியவே நிற்ப…சீக்கிரம் உள்ள போ 

 

என்றவன்..அப்பறம் எல்லா நேரமும் ஒருத்தன் தடிமாடவே இருக்க மாட்டான் டார்லிங்.இனி தான் பார்க்க போற…மச்சானோட பெர்பாமன்ஸ….” என்று ஜீவா சொல்லிக் கொண்டிருக்கும் போதே…தீபாவின் உடலில் ஒரு சிலிர்ப்பு மறைந்தோடியது.

 

ஜீவா..எப்பொழுது போனைக் கட் பண்ணினான் என்று தீபாவிற்கு தெரியாது. ஆனால் அவள் இருந்தது கனவுலகம் என்று மட்டும் நம்பிக் கொண்டிருந்தாள்.இன்னும் ஜீவா வந்ததை அவளால் நம்ப முடியவில்லை.ஆனால் கையில் இருந்த பரிசு உண்மை என்று பறைசாற்றியது.தீபாவிற்கு அப்படியே குதிக்க வேண்டும் போல் இருந்தது.இருந்தாலும் அடக்கிக் கொண்டாள்.

 

தீபா வேக வேகமாய்…கிப்ட்டை பிரிக்க..அதில் இருந்த பரிசைப் பார்த்து…அவள் ஆச்சர்யத்தின் உச்சிக்கே சென்றாள்.அது மற்ற காதலர்கள் தருவது போல் இல்லாமல் வித்தியாசமாய் இருந்தது.ஒரு ஆண் பறவையும்.,பெண் பறவையும்..தங்களின் சேய் பறவையை சிறகுகளால் அணைத்திருப்பது போன்ற  சிலை தான் அது.கூடவே ஒரு பேப்பர்..மடித்து வைக்கப் பட்டிருந்தது. அதைப் பார்த்த தீபா..வேகமாய் அதைப் பிரிக்க..அதில்.

 

பிறந்ததில் இருந்து தாய் முகம்.,தந்தை முகம் நான் அறியேன்…!

இதில் இருக்கும் பறவையைப் போல்…அன்பென்னும் சிறகிற்குள்…!

என்ன சிறை வைக்க நீ வருவாயா…ஒரு தாயாய்..தோழியாய்….!

 

என்று எழுதியிருந்ததைப் பார்த்த தீபாவிற்கு,…என்னவென்று சொல்ல முடியாத ஒரு கணம் மனதில் நின்றது.காதல் வசனங்கள் இல்லை.தன் அன்பை யாசிக்கும் ஒரு ஜீவன்..என்று மனதிற்குள் நினைத்த தீபா…தீர்க்கமான ஒரு முடிவை அந்த நொடியில் எடுத்தாள்.

 

நிலாவிற்கு அன்று எழும் போதே தலை மிகவும் பாரமாய் இருந்தது.நாங்கு பேர் சேர்ந்து தன்னை தள்ளுவதைப் போல் உணர்ந்தாள்.இன்னைக்கு லீவ் சொல்லலாம என்று ஒரு நிமிடம் யோசிக்க,…இன்று அந்த டிசைன்ஸ் எல்லாம்  பைனல் பண்ண வேண்டும் என்று சூர்யா சொன்னது நியாபகத்திற்கு வர…தன் சிரமத்தையும் பொருட்படுத்தாமல்  அலுவலகம் கிளம்ப எத்தனித்தாள்.மெல்ல எழுந்து., ஒரு வழியாய் குளித்து முடித்து.,வெளியே வந்தாள்.

 

நிலா…வந்து சாப்பிடு..!” என்றார் சுதா…சைகையில்.நிலா அமைதியாய் சென்று..சாப்பிட முடியாமல் இரண்டு இட்லிகளை வலுக்கட்டாயமாக உள்ளே..தள்ளினாள்.அவளது முகத்தைப் பார்த்தே..அவளது சோர்வைக் கண்டு கொண்ட சுதா..பிரபுவை அழைத்து கண் ஜாடையில் சொன்னார்.

 

நிலாம்மா..!ஏண்டா டல்லா இருக்க.முடியலைன்னா..இன்னைக்கு லீவ் சொல்லிட்டு ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானடா..!” என்றார் பிரபு.

 

இல்லைப்பா…கொஞ்சம் அசதியா   இருக்கு….  அவ்வளவுதான். இன்னைக்கு முக்கியமா நான் போய்தான் ஆகனும்ப்பா…இன்னைக்கு என் டிசைன்ஸ் எல்லாம் முடிவு பண்ணுவாங்கப்பா…” என்றாள் நிலா.

 

சரிமா..இருந்தாலும் கொஞ்சம் பார்த்து போம்மா…நீ இன்னைக்கு ஸ்கூட்டியில் போக வேண்டாம்.நான் போய் ஆட்டோ பிடிச்சுட்டு வரேன்….அதுல போம்மா..என்றவர் ஆட்டோவைக் கூப்பிட சென்றார்.

 

எப்படியும் இன்னைக்கு என் டிசைன்ஸ…,அந்த கருவாயன் அக்ஸப்ட் பண்ண மாட்டான்.ஏற்கனே என்ன கண்டாலே அவனுக்கு ஆகாது. இன்னைக்கு இத வச்சு என்னை என்ன பாடு படுத்த போறானோ..?” என்று நினைத்தபடி பிரபு அழைத்து வந்த ஆட்டோவில் ஏறி சென்றாள் நிலா.

 

நிலாவிற்கு மதியத்திற்கு மேல் அமரவே முடியவில்லை. உடல் தூக்கத்திற்கு ஏங்கியது.ஆனால் சூர்யா இன்னும் அலுவலகம் வந்தபாடில்லை.”என்ன மனுஷன் இவன்….ரொம்ப முக்கியம் அப்படி இப்படின்னு ஓவரா பேசுனான்.இப்ப என்னடான்னா இவனையே இன்னும் காணாம்…இவன் எல்லாம் எப்படித்தான் இப்படி முன்னுக்கு வந்தானோ…இதுல இளம் தொழிலதிபர் பட்டம் வேற…காசு குடுத்து வாங்கியிருப்பான் கருவாயன்…”என்று சூர்யாவை மனதிற்குள் தாளித்துக் கொண்டிருந்தாள் நிலா.

 

சரி அவன் வரும் போது வரட்டும் என்று நினைத்து தனது முன் இருந்த டேபிளில் தலை சாய்த்தவள் உறங்கிப் போனாள்.உடல் சற்று காய்ச்சலின் கதகதப்பைக் காட்ட ..நிலா தன்னை மறந்து  உறங்கிவிட்டாள்.அவளே நினைத்தாலும் எழ முடியாத அளவிற்கு அடித்துப் போட்டது போல் உறங்கிக் கொண்டிருந்தாள். மதிய உணவையும் அவள் தன் வயிற்றுக்கு தரவில்லை.

 

அதே நேரம் அங்கு புயலாய்..முரளியின் அலுவலகத்திற்குள் நுழைந்தான் சூர்யா.சூர்யாவைப் பார்த்த முரளி ஒரு நிமிடம் திகைத்தாலும்..மறு நிமிடம் அவர் முகம் சந்தோஷ ரேகையைக் காட்டியது.”சூர்யா….வாப்பா..” என்றவாறு முன் செல்ல….

 

உங்க வரவேற்பு ஒன்னும் எனக்கு தேவையில்லை.என்ன நினச்சுகிட்டு இருக்கிங்க உங்க மனசுல…! இன்னும் எத்தனை நாளைக்கு உங்கம்மாவ

 

பேசவிட்டு வேடிக்கைப் பார்க்க போறிங்க…?வீட்டு பொம்பளைங்க என்ன பன்றாங்க ஏது பன்றாங்கன்னு கூட தெரியாம..அப்படி  என்ன வேலைய கட்டிகிட்டு திரியறிங்க…என்ன பத்தி உங்களுக்கு இன்னும் சரியா தெரியலைன்னு நினைக்கிறேன்…இதுதான் முதலும் கடைசியுமா இருக்கனும்…இல்லை நான் யார்ன்னு காட்ட வேண்டியது வரும்..” என்று உறுமினான்.

 

முரளிக்கா மகனைப் பற்றி தெரியாது…?. என்றைக்கு சூர்யா தன் மகன் என்று தெரிந்ததோ..அன்றே  அவன் ஜாதகத்தையே முரளி திரட்டி விட்டார்.அப்படி சூர்யாவைப் பற்றி அவர் கேள்விப்பட்டது எல்லாம் அவரைப் பெருமை கொள்ள செய்ததே தவிர…சூர்யாவைப் பற்றி குறை என்று யாரும் சொல்லவில்லை.அவன் பேசியது எல்லாம் காதில் விழுந்தாலும் முரளியோ மகனைப் பார்த்த மகிழ்ச்சியில் இருந்தார்.

 

இருந்தாலும் சூர்யாவின் கோபத்திற்கான காரணம் தெரியாததால்…”நீ என்ன சொல்ல வரன்னு எனக்கு புரியலை சூர்யா..” என்றார்.

 

சூர்யா..”உங்களுக்கு எப்ப எதுதான் புரிந்திருக்கு…அப்படி புரிந்திருந்தாதான்…இன்னைக்கு இப்படி ஒரு பிரச்சனையே வந்துருக்காதே..!” எல்லாம் காலம் கடந்து  புத்தி வந்து என்ன செய்ய..?” என்றான் வெருப்பாய் சூர்யா.

 

அதே நேரம் சரியாக உள்ளே நுழைந்தான் அருள்.சூர்யாவை அங்கு எதிர்பார்க்காத அருள்…கடுப்பாக..அவனைப் பார்த்த சூர்யா நக்கலாய் சிரித்தான்.பிறகு முரளியைப் பார்த்தவன்…” இனியாவது ஒரு ஆண்

 

பிள்ளையா நடந்துக்குவிங்கன்னு நினைக்கிறேன்..” என்றவாறு..அருளை முறைத்துக் கொண்டே புயலாய் வெளியேறி விட்டான்.

 

கோபமாய் முரளியிடம் திரும்பிய அருள்..”அப்பா ..துரை எதுக்காக இங்க வந்துட்டு போறார்..? “என்றான் எரிச்சலுடன்.அவனை அமைதியாய்ப் பார்த்த முரளி…”அவனுக்கும் இது அவன் அப்பா ஆபீஸ் தானே…! அவனும் உரிமைப்பட்டவன் தானே,…அதான் வந்துட்டு போறான்.இதில் உனகென்ன கஷ்ட்டம்  அருள்..” என்றார் முரளி.

 

உங்ககிட்ட போய் கேட்டேன் பாருங்க…என்ன சொல்லனும்…”என்றபடி செல்ல..,முரளிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. தலையைப் பிடித்தவாறு அமர்ந்துவிட்டார்.

 

அடிபட்ட பந்தாக ஆகிவிட்டேன் இப்போது…

சொந்தம் என்பது பொய்யடா…

பந்தம் என்பதும் பொய்யடா…

பாசம் என்பது நோயடா..

வாழ வைக்கிற தீயடா…

ஒன்று பட்டது சென்று விட்டது…

ரெண்டு பட்டது வாழ்வே…!

 

Advertisement