அன்று அவள் அலுவலகத்திலிருந்து, நாலு மணிக்கே திரும்பி விட்டாள். மிகவும் தலை வலியாய் இருந்ததால் பர்மிஷன் போட்டுவிட்டு வந்து விட்டாள். 

வீட்டுக்கு வந்தால்….பூட்டிய வாசல் முன் ஏக கும்பல். தலைக்கு தலை ஒரே கத்தல். பதறிக் கொண்டு வந்து பார்த்தாள். பூட்டிய கதவின் பின்னே பிரபுவின் அழுகைச் சத்தம், தொண்டைக் கட்டிக் கொண்ட விதத்தில் கதறிக் கதறி கேட்டது. சுமதி துடித்துப் போனாள். அய்யோ குழந்தையை உள்ளே வச்சு பூட்டிட்டுப் போயிட்டாங்களா.?எங்கே போயிட்டாங்க.? சாவி இருக்கா.? பல கேள்விகள் எழுந்தது. 

“உங்க மாமியாரோட தங்கை ஊரிலிருந்து வந்திருக்காங்க. ரெண்டு பெரும் சினிமாவிற்கு போயிருக்காங்க. குழந்தை இந்நேரத்தில் தூங்குவான். அது தான் பயமில்லாம போறோம், அப்படின்னாங்க. சாவி கேட்டேன். கொடுக்கலை.” குழுமி இருந்த பெண்களில் விவரம் சொன்னது கோமதி ஆச்சி தான். பக்கத்து வீட்டுக்காரி. 

“நல்ல போனாங்க போ. குழந்தை கால் மணியா கத்திட்டு இருக்கு.” என்றாள் ஹம்சா என்ற பெண். 

என்ன மனிதர்கள்! சுமதியின் இதயம் வெடித்து சிதறியது. பிரபு….பிரபு என் கண்ணே…நெஞ்சு கூவியது. கண்ணில் நீர் உருண்டோடியது. என்ன செய்யலாம்.?பிரபுவின் அழுகைச் சத்தம் நின்றுவிட்டிருந்தது.  அய்யோ குழந்தைக்கு என்னாச்சோ.? ஆவேசம் வந்தவளாக சுமதி வீதியில் கிடந்த ஒரு பெரிய கல்லை எடுத்தாள். பூட்டை அசுர பலத்துடன் ஓங்கி ஓங்கி அடித்தாள். கடைசியில் அது விட்டுக் கொண்டது. பரபரவென்று உள்ளே நுழைந்தாள். 

அங்கே பிரபு மயக்கமாக கிடந்தான். தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினாள். ஆஸ்பத்திரியில் ஒரு வாரம் இருக்க வேண்டியதாயிற்று. ஒன்றரை வயது குழந்தை துவண்டு போய்விட்டான். குரல் எழும்பவே ரெண்டு நாள் ஆச்சு. ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகள். டிரிபிஸ் என்று சிகிச்சை நடந்த பிறகே அவன் கண் விழித்தான். வாரி அனைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தாள். 

கணவன் வந்த பிறகு அவள் அவனிடம் முறையிட்டாள். 

“உங்கம்மாவுக்கு விவஸ்த்தையே இல்லையா.? இப்படியா பச்சப் புள்ளையை வீட்டில் தனியா விட்டு பூட்டிப் போவாங்க.? தொட்டிலிலிருந்து விழுந்து அடிபட்டு கத்திட்டு இருக்கு. மாடிப்படி வேறு இருக்கு. தவழும் குழந்தை மாடி ஏறி விழுந்திருந்தா.? இது தான் உங்கம்மா பிள்ளையை பார்க்கும் லட்சணமா.?” என்று ஆவேசமாகக் கேட்டாள். 

“அதான் எல்லாம் சரியாப் போச்சே. குழந்தை வழக்கமா மூணு மணி நேரம் தூக்குவான். அதான் முழிக்கறதுக்கு முன்னாடி வந்திடலாமான்னு நூன் ஷோ போயிருக்காங்க. பெருசு படுத்தி குதிக்காதே. ஏதோ தவறு நடந்து போச்சு.?” என்றான் அம்மாவை விட்டுக் கொடுக்காமல். 

சுமதி அவன் பதிலை கேட்டு அதிர்ந்து போனாள். 

“நீங்க ஒரு அப்பனா.?”

மாமியாரும் அவர் தங்கையும்….

“எங்க கெட்ட நேரம் புள்ள இன்னிக்கு முழிச்சிடுச்சு.” என்று குழந்தை செய்த குற்றம் மாதிரி பேசினார்கள். 

“அது சரி….குழந்தைக்கு என்ன ஆனா என்ன.? உங்களுக்கு பாழாய் போன சினிமா தான் முக்கியம். இல்லையா.? குழந்தையை பார்த்துக்க முடியாதுன்னு சொல்லிட வேண்டியது தானே.? நான் மட்டும் சீக்கிரம் வராட்டி என்னாகியிருக்கும்.?” என்று பதறியபடி கத்தினாள். அவளுக்கு தாங்க முடியவில்லை. 

நாத்திகளும் மைத்துனர்களும் அம்மாவுக்கு பரிந்தே பேசினார்கள். இது ஒரு குடும்பமா.? காறி துப்ப வேண்டும் போல் இருந்தது. 

இந்த சம்பவத்திற்கு பிறகு தான், சுமதி இப்படி நடு இரவில் விழித்துக் கொண்டு சிந்திக்கிறாள். இதற்கு ஒரு தீர்வு வேண்டுமே.? அலுவலகத்துக்கு விடுப்பு போட்டு விட்டு சிந்திக்கிறாள். என்ன செய்யலாம்.? இனி இவர்கள் பொறுப்பில் குழந்தையை விட்டு வைத்தால் அதை அஜாக்கிறதையால் கொன்று போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

கதைகளில் வருவதை விட வாழ்க்கை விசித்திரமானது. இனி தாங்க  முடியாது. என் குழந்தை எனக்கு வேணும்…..அவள் தாய்மை பொங்கியது. இவர்களுக்கு இனி பயப்பட வேண்டியது இல்லை. காணவன் விரட்டினாலும் தனியா தைரியமா போய்விட வேண்டியது தான். அன்பிற்குத் தான் நான் அடிமை.! அதிகாரத்துக்கு இல்லை, என்பதை இவர்களுக்கு ஆணித்தரமாக உணர்த்த வேண்டும். 

இனி தன் நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும்? அவள் ஒரு முடிவுக்கு வந்தாள். அதற்கு பிறகு தான் அவளுக்கு தூக்கமே வந்தது

மறுநாள்….விடிந்தது. புது ஐடியாவும் விடிந்தது. கொடியில் பீரோவில் இருந்த தன் துணிகளை பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தாள் சுமதி. அங்கு வந்த ஜானகி அம்மாள் உற்றுப் பார்த்தாள். 

“என்னடி இதெல்லாம்.?” என்றாள் அதிர்ச்சியுடன். 

“தெரியலை. நான் வீட்டை விட்டுப் போறேன்.”

“என்னது.? என்ன சொன்னே.? திருப்பிச் சொல்லு.” என்று சாப்பிட்ட கையோடு வந்தான் கணவன். நாத்தி ஆச்சர்யமாகப் பார்த்தாள். பயந்தாங்க கொள்ளி மன்னியா இது.! 

மைத்துனர்கள் “என்ன மன்னி புது ஸ்டன்ட் போலிருக்கு.” என்று நகைத்தனர். அவர்கள் இவள் கோழை தானே என்று பார்த்தார்கள். 

“கேட்டுக்கிட்டே இருக்கேன்…..திமிரா உனக்கு.? எங்கே போறே.?” என்று மேலும் குரல் உயர்த்தி பேசினான் கணவன். 

“இனிமே இங்க இருக்கப் போறதில்லை.”

“விளையாடறயா.? தொலச்சுப்புடுவேன்.” 

“முடிவாத் தான் சொல்றேன். இங்கே இருந்தா குழந்தையை கொன்னுடுவீங்க. ராட்சச குடும்பம். திருந்த மாட்டீங்க. நான் போறேன். எங்கேன்னு சொல்ல வேண்டிய அவசையமில்லை.” 

அடி ஆத்தி……ஆடுற ஆட்டத்தைப் பாரு. சம்பாதிக்கற திமிர். அவ வாலை ஓட்ட நறுக்குடா.” என்றாள் ஜானகி அம்மாள். 

அவள் நிமிர்ந்து விட்டாள் என்று உணர்ந்த அவள் கணவன்….

“அம்மா….நீ சும்மா இரு. ஏதோ தப்பு நடந்து போச்சு. இனிமே எதுவும் நடக்கம பார்த்துக்கறேன். இதுக்காக நீ போக வேண்டாம் சுமதி.” கணவனின் திடீர் கனிவு அவளை ஏளனமாக சிரிக்க வைத்தது. உஷ்ணத்துடன் சொன்னாள். 

“மன்னிக்கவும் மை இன்-லாஸ். இனிமே இந்த சுமதி உங்களை நம்புவதாக இல்லை. பெண் தெய்வம் மாதிரி, பூ மாதிரின்னு சொல்லிச் சொல்லிய ஐஸ் வச்ச உங்க மாதிரி ஆண்கள், காரியத்தை சாதிச்சுக்கிட்டு இருக்கீங்க. பொண்ணு பொறுமை ஆனவ தான். ஆனா….அவ பொறுமையை மீறிட்டா அந்த அக்னியை உலகமே தாங்காது. நான் பொறுமை இழந்தாச்சு. நான் போகத் தான் போறேன். வழியை விடுங்க.” 

“சுமதி….சுமதி ஐ ஆம் ஸாரி. ரியலி ஸாரி. ப்ளீஸ் போக வேண்டாம்.”

“அலங்கார வார்த்தைகள் வேண்டாம். லீவ் மீ….”

“உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். நான் உணர்ந்து சொல்றேன்.”

சுமதி பெட்டியை கீழே வைத்தாள். இது காரிய கெஞ்சல் என்று அவளுக்குப் புரிந்தது. இதுவரை உபயோகிக்காத திடமான குரலில் ஆணித்தரமாக கேட்டாள். 

“அப்படின்னா நான் சொல்றதுக்கு நீங்க ஒத்துக்கணும்.”

“சொல்லு சுமதி சொல்லு.” என்றான். மாமியார் கசப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். மற்றவர்களும் இந்த புதிய சுமதியை பயத்துடன் பார்த்தார்கள். கோழை சுமதிக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது.? அவர்களால் நம்ப முடியவில்லை. அண்ணனே இறங்கி வந்துவிட்டப் பிறகு வாய் திறக்க முடியுமா.?

“உங்க கிட்டே நம்பிக்கை வரவரைக்கும் என் குழந்தை அம்மா வீட்டில் தான் இருக்கும். வீட்டுச் செலவுக்குன்ணு ஒரு தொகை கொடுத்திடுவேன். அதற்கு மேல் ஒரு பைசா என் கிட்டே கேக்கக்  கூடாது. என் செலவுக்கும், சேமிப்புக்கும் தனியா பணம் போட்டுக்குவேன். வீட்டு வேலை பூராவும் அத்தையும் தங்கச்சியும் செய்யணும்னு நான் சொல்ல மாட்டேன். ஆனா எனக்கு அதிலே உதவியா இருக்கணும்னு எதிர்பார்ப்பேன். ஒண்டியா முன் போல் எல்லா வேலையையும் இழுத்து போட்டு செய்ய மாட்டேன். இதுக்கெல்லாம் சம்மதம்ன்னா இருப்பேன். இல்லேன்னா கிளம்பறேன். என்ன சொல்றீங்க.?’

மாமியாருக்கு பயம் பிடித்துக் கொண்டது. 

“அவ்வளவு தானே சுமதி….நீ சொல்றதும் சரிதான். சம்மதம்.” 

உண்மை தான் குட்டக் குட்ட குனிந்தவள் நிமிர்ந்து விட்டாள். கணவனுக்கு கௌரவத்துக்கும் படுக்கைக்கும் மனைவி தேவை. நாத்திக்கு தன் கல்யாணம் நடக்க மன்னியின் பணம் தேவை. மைத்துனர்களுக்கு, அவர்கள் படிப்புக்கு அவள் சம்பாத்தியம் தேவை. எல்லோரும் அவளுக்கு பணிந்து போகும் போது, மாமியார் அவளை  பகைத்துக் கொள்ள முடியாத நிலை. எனவே சுமதி ஓங்கி நிமிர்ந்ததும், விஷப் பல் பிடுக்கப்பட்ட பாம்பாகி விட்டார்கள். 

சுமதியின் துணிவை மனதுக்குள் பாராட்டி மகிழ்ந்தார் ஒரு நபர். அவர் தான் மாமனார். ஏற்கனவே பல் பிடுங்கப்பட்டு வெறும் தலையாட்டி பொம்மையாய் வீட்டில் இருக்கிறார். 

சுமதி சமயலறைக்குச் சட்னி அரைக்கச் சென்றாள். மாமியார் விழுந்தடித்துக் கொண்டு அரிசி களைய ஆரம்பித்தார். நாத்தி அவசரமாய் பாத்திரம் கழுவத் தொடங்கினாள். மைத்துனர்கள் அழுக்குத் துணிகளை வாஷிங் மிஷினில் போட ஓடினார்கள். 

கணவன் ஏய் சோப்பு எங்கே.? துண்டு எங்கே? எடுத்து வா என்று அதிகாரம் பண்ணாமல் தானே எடுத்துக் கொண்டு குளிக்கப் போனான். குடும்பம் என்பது ஒன் மேன் ஷோ இல்லை. கூட்டுக் குடும்பத்தில் கூட்டாகத் தான் வேலை பார்க்க வேண்டும் என்பதை சுமதி புரிய வைத்தாள். தனக்குரிய மரியாதையையும் காப்பாற்றிக் கொண்டாள். சுமதியின் முடிவில் ஒரு புதிய ஆரம்பம் ஆரம்பமானது. 

குழந்தை பிரபுவை அணைத்துக் கொண்டு உச்சி முகர்ந்தாள் சுமதி. 

“உன்னை சாகடிக்கப் பார்த்தார்களே….அம்மா சும்மா இருப்பேனா டா செல்லம்.? அதான் இந்தப் போடு போட்டேன். என் சுதந்திரத்தை நானே தான் தேடிக்கணும்னு புரிஞ்சுது கண்ணா….” என்று எண்ணினாள். போராடாமல் பெண்ணுக்கு நியாயம் கிடைக்காது அன்றும் இன்றும். 

சங்கரி அப்பன்.