Advertisement

முதலா முடிவா – 8 
“அரவிந்த், எங்கடா புடிச்ச இந்த சாக்பீஸை? எழுதவே மாட்டேங்குது?”
விஷ்வா ஒரு விரலால் சாக் கட்டியை மேலிருந்து கீழே வருடினார். கண்ணுக்கு சட்டென்று புலப்படாத, சாக் கட்டியை சுற்றி வட்டமான ஒரு சின்னஞ்சிறிய மேடு அதன் நடுவில் இருந்ததை விரலால் உணரமுடிந்தது. அதை உற்று கவனித்தவர், குச்சியின் மேல் பாகத்தை கெட்டியாய் பிடித்துக்கொண்டு, கீழ் பாகத்தை தன் புறமாய் திருப்ப, ஆச்சரியப்படும் வகையில் அது திரும்பியது. 
முழுதாய் திருப்பி திறந்தவருக்கு அதன் உள்ளே காப்ஸ்யூல் வடிவ ப்ளாஸ்டிக் குடுவையில் வெள்ளை நிற பொடி தென்பட்டது. மற்ற இருவரும் ஆவலாய் கவனித்திருக்க, விஷ்வா அதில் லாவகமாக சின்ன துளையிட்டார். விரல் நுனியால் பொடியை தொட்டு எடுத்து நாக்கில் வைக்க, அரவிந்தும் செந்திலும் அவரை பின்பற்றினர். பேச்சிழந்த மூவரும் திகைப்புடன் பார்வையை பரிமாறி கொண்டனர். 
நிவேதாவையும் ரேச்சலையும் வைபவ் விடுதியில் விட்டுவிட்டு கிளம்பிச்செல்ல, மிஸஸ் டிசூஸாவிடம் முந்தைய நாள் மாலை களேபரத்திற்கு நிவேதா மன்னிப்பு கேட்டாள். தோழிகள் இருவரும் தங்கள் அறையில் படுக்கையில் உல்லாசமாக விழுந்தனர்.
“ரேச்…”
“ம்ம்ம்ம்?”
“வைபவ் பத்தி சொல்லேன். எங்க மீட் பண்ணீங்க? எப்போ கல்யாணம்?”
ரேச்சல் வாய் விட்டு சிரித்தாள், “வேதா, அரவிந்த் பத்தி தெரியணும்ன்னா நேரடியா கேளேன், ஏன் சுத்தி வளைச்சிட்டு இருக்க?”
தன் குட்டு வெளிப்பட, நிவேதா தர்மசங்கடமாய் உணர்ந்தாள்.
“வைபவும் நானும் ஸ்கூல் நாட்களிலேயே அறிமுகம் ஆனவங்க, எப்படின்னா… ஒரே தெருவுல இருந்தோம். அரவிந்தை சில வாரங்களா தான் தெரியும். உங்கப்பா பத்தி எனக்கு எதுவும் தெரியாது”, ரேச்சல் சுருக்கமாக சொல்ல, நிவேதாவும் அதற்கு மேல் எதுவும் கேட்காமல் மௌனமானாள். அரவிந்த் பற்றி தன் தந்தை தனிமையில் சொன்னது நினைவில் சுற்றிக்கொண்டே இருந்தது.
“நீ ஹாஸ்டல்ல சேர்ந்தப்புறம் ஒண்ணு ரெண்டு மாசம் தான் ஒன்ன சேஃப்டி சர்வெய்லன்ஸ்ல வெச்சிருக்க அவன் கிட்ட சொன்னேன். ஆனா அப்படியே விடாம மூணு வருஷமா ஒன்ன தன்னோட பொறுப்பா ஏத்துக்கிட்டான். நீயும் செக்கு மாடு மாதிரி வேலை, வேலை விட்டா ஹாஸ்டல் அப்படின்னு ஒரு சின்ன வட்டம் போட்டுகிட்ட.” 
“பறக்க வேண்டிய காலத்துல கண்ணாடி ஷோகேஸ்ல அடக்கிட்டீங்களேனு எங்கூட சண்டை போடுவான். மறுபடி படிக்க நீ முடிவெடுத்த போது ‘கிரிஸ்டல் பட்டாம்பூச்சிக்கு உயிர் வர ஆரம்பிச்சிடுச்சு பாஸ்’ னு ரொம்ப பூரிச்சு போனது அரவிந்த் தான். பார்க்க விளையாட்டு பிள்ளையா தெரிஞ்சாலும், ரொம்ப பிரில்லியண்ட். அவனுக்கு உன் மேல ஈர்ப்பு இருக்கறது எனக்கு தெரியும். ஹீ இஸ் எ வெரி குட் பெர்ஸன் அண்ட் ஹேஸ் மை ப்ளெஸ்ஸிங்க்ஸ். இதுக்கு மேல இந்த விஷயத்துல நான் தலையிட மாட்டேன். தி ஃபைனல் டிசிஷன் இஸ் யுவர்ஸ், பேபி”
ரேச்சல் குளிப்பதற்காக அறையை விட்டு சென்றவுடன் அவசரமாக அவள் பேசியை எடுத்து அரவிந்த் எண்னை கண்டுபிடித்தாள். தனக்காக இத்தனை செய்தவனுக்கு ஒரு நன்றியாவது தெரிவித்துவிடவேண்டும் என்று நிவேதாவின் மனம் பரபரத்தது. அவனிடம் என்ன பேசுவது என்று பல முறை மனதிற்குள் ஒத்திகை பார்த்துவிட்டு, இது வேறு அரவிந்தாக இருக்கக்கூடாதே என்ற வேண்டுதலுடன் தன்னுடைய பேசியிலிருந்து அவனுக்கு அழைப்பு விடுத்தாள். மறுமுனையில் கேட்ட குரல் அவனே தான் என்று உறுதிபடுத்தியது.
“இது கனவு இல்லையே, நிவி…?” அவன் உற்சாகம் இவளுக்கு மூச்சு முட்டியதில் ஒத்திகை பார்த்த வரிகள் மறந்து போயின.
 “என்ன பேச்சையே காணோம்? உன் குரலை வேற தேட போகணுமா இப்ப?” அவன் குறும்பில் இவளுக்கு புன்னகை மலர்ந்தது.
“அரவிந்த்…” அவன் பெயரை உச்சரித்ததற்கு மேல் அவள் உதடுகள் அசைய மறுத்தன.
“ஐயோ நிவி, இப்ப என் இதயம் லபோ திபோனு அடிச்சுக்கற சத்தம் உனக்கு கேட்குதா?” கன்னங்களில் சூடு ஏறுவதை நிவேதாவால் உணர முடிந்தது.
“இத்தனை நாள் அப்பாவோட இருந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்”, அவள் குரலிலும் நன்றி தெரிந்தது.
“அவ்வளவு தானா?” அவன் கேள்விக்கு பொருத்தமான பதிலை இவள் யோசிக்க, திடீரென்று விஷ்வாவின் குரல் குறுக்கிட்டது.
“ஆமா, அவ்வளவு தான். நிவேதா! அரவிந்த் உன்னை சாயங்காலம் வந்து மீட் பண்ணுவான்”
அதிர்ச்சியில் பேசியை படுக்கையில் நழுவ விட்டாள். ‘அப்பா அங்கேயா இருக்கார்? அரவிந்த் பேசினது எல்லாம் கேட்டிருப்பாரா? என்னை பத்தி என்ன நெனச்சுப்பார்?’
 
நீண்ட தூர ரயில் பிரயாணத்தால் களைத்த முகத்துடன் நிகில் நிவேதாவை பார்க்க வந்தபோது, மதியம் இரண்டு மணி ஆகியிருந்தது. மதிய உணவிற்கு வெளியே போகலாமா என்று அவன் கேட்டபோது, நிவேதா உடனே சம்மதித்துவிட்டாள். அவனிடம் பகிர்ந்து கொள்ள அவளிடம் கொள்ளை விஷயங்கள் இருந்தனவே.
 திருமதி டிசூஸாவிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வருகிறேன் என்று நிவேதா கிளம்ப, நிகில் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு நிவேதா அறையினுள் புகுந்தான். தரையில் சூட்கேஸ்களும், அட்டை பெட்டிகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 
கட்டிலின் மேல் ரேச்சல் ஆழ்ந்த நித்திரையில் இருப்பது தெரிந்தது. தன்னிடமிருந்த கைப்பெட்டியை நிவேதாவின் பெட்டிகளுக்கு நடுவே வைத்தவன், யாரும் பார்க்கும்முன் அவசரமாக வெளியேறினான். நிகிலுடன் வெளியே சிறிது நேரம் போவதாக ரேச்சலுக்கு ஒரு துண்டு சீட்டில் எழுதி மேஜை மேல் வைத்துவிட்டு, நிவேதா அத்தை மகனுடன் கிளம்பிப்போனாள்.
ஹோட்டல் அன்னபூரணியில் மதிய உணவு சுவையாகவே இருந்தாலும், இருவருமே வேறு வேறு காரணங்களால் அதை உணரவிலலை. கடந்த சில நாட்களில் நடந்தவற்றை உற்சாகமாக விவரித்து கொண்டே போனவள், நிகிலின் பதட்டத்தை கவனிக்கத் தவறினாள்.
“நிவேதா, உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும், உனக்கு இப்போ அவசர வேலை எதுவும் இருக்கா?”
“அப்பா லேட் ஈவினிங் தான் கூட்டிட்டு போக வருவாரு, ஸோ நோ ப்ராபளம், சொல்லு நிகில்?”
“உங்கிட்ட முக்கியமா ஒன்னு சொல்லணும்”, நிகில் சுற்றும் முற்றும் பார்த்தான்.
‘இவன் ஏன் சொன்னதையே சொல்றான்?’ என்று யோசித்தவளுக்கு நிகிலின் பதட்டம் அப்பொழுது தான் மனதில் உறைத்தது. டேபிள் மேல் கிடந்த நிகிலின் கை மேல் தன் கையை வைத்து மென்மையாக கேட்டாள், “என்னாச்சுடா?” 
“இங்க வேண்டாம், நாம எஸ் ஆர் கே பூங்காவிற்கு போலாமா?”
“சரி வா போகலாம்”, நிவேதா எழுந்தாள்.
 சரியாக பூங்கா நுழைவிற்கு இருபது அடி தூரத்தில் வெள்ளை நிற டாட்டா சுமோ, மோட்டார் சைக்கிள் ஒன்றை வழியில் குறுக்கிட்டதையோ, அதில் வந்த ஒரு யுவன் யுவதியை வலுக்கட்டாயமாக காருக்குள் ஏற்றி சென்றதையோ அந்த தெருவில் இருந்த ஒருவரும் கவனிக்கவில்லை. அதற்கு காரணம் ஞாயிற்றுகிழமை மதிய நிகழ்ச்சிகள், அனேக தெருவாசிகளை தொலைக்காட்சி பெட்டி முன்பு கட்டிபோட்டிருந்தது தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
ஓஹ் மை காட்… ஓஹ் மை காட்…’ சாக்பீஸை பார்த்து நம்பமுடியாமல் அரவிந்த் உதடுகள் மீண்டும் மீண்டும் முணுமுணுத்தன.
“எங்க கிடைச்சுது இது, அரவிந்த்?”
“வீட்டுல வேலை செய்யற மீனம்மா, என் பாக்கெட்டுல இருந்ததா சொன்ன ஞாபகம் லேசா வருது. ஆனா பாக்கெட்டுக்கு உள்ளே எப்படி போச்சுனு எனக்கும் மர்மமா தான் இருக்கு”
“ஒரு வேடிக்கையை பாருங்க, விஷ்வா. நேத்து தான் கமிஷனர் போதை பொருள் கடத்தல் பத்தி மீட்டிங் வெச்சாரு, நானும் அது சம்பந்தமா உங்கள வந்து பார்த்துட்டு போனேன். இன்னைக்கு எத்தனை பெரிய கண்டுபிடிப்பு இது? பார்க்க போன துள்ளி குதிச்சிட்டு விசாரணைல எறங்கியிருக்கணும், ஆனா என்னமோ தெரியல, வள்ளி காணாம போனதுல மத்த எதுவும் பெரிசாவே தெரியல”, ஒரு சாதாரண மனிதனாக பேசிய செந்திலை அரவிந்த் பரிதாபமாக நோக்கினான்.
“ஆமா செந்தில், மனுஷ மனசு ஒரு வினோதம் தான். ஒரு நேரத்துல பெரிய விஷயமா இருக்கறது, மத்த நேரத்துல பைசாக்கு லாயக்கில்லாததா போயிடுது. எனிவே இந்த சாக்பீஸ் பத்தி அரவிந்த் அவன் மூளையை கசக்கட்டும், அத அப்புறம் பார்த்துக்கலாம். வள்ளியை பத்திரமா மீட்கறது தான் நம்பளோட முதல் வேலை.”
செந்தில் யூனஸ் லத்தீஃபின் படத்தை பிரிண்ட் அவுட் எடுத்தான். சீர் திருத்த பள்ளியில் அவனை அனுப்பியது எல்லாம் லேசாக நினைவுக்கு வந்தது. மீண்டும் உதவி முதல்வர் ஜீவரத்தினம் வீட்டுக்கு படத்துடன் அரவிந்தும் செந்திலும் சென்றனர்.
“இது கறுப்பன் தான், சந்தேகமேயில்ல”, ஜீவா அடித்து சொன்னார்.
“இவன் நிஜ பேர் யூனஸ் லத்தீஃப். எங்க டிபார்ட்மெண்டோட பழைய விருந்தாளி.”
“அடப்பாவி! பார்க்க சாதுவா இருந்தானே, அவன் க்ரிமினலா? கேட்கவே ரொம்ப அதிர்ச்சியா இருக்கு”, ஜீவாவின் உதறல் வெளிப்படையாகவே தெரிந்தது.
“இவன பத்தி எந்த தகவல் கிடைச்சாலும், இல்லை இவங்கிட்டேர்ந்து தகவல் வந்தாலும் என்னை உடனே காண்டாக்ட் செய்யணும். என் நம்பரை குறிச்சு வெச்சுக்குங்க”
“நிச்சயம் செய்யறேன் சார். உங்க மனைவி நல்லபடியா வீடு திரும்ப நான் என்னால முடிஞ்ச எல்லா உதவியும் செய்ய காத்திட்டு இருக்கேன்.”
“இப்ப நீங்க மொதல்ல செய்யப்போற பெரிய உதவி, இது எதையும் வெளியே யாரு கிட்டயும் சொல்லாம இருக்கறது தான்.”
அந்த குடியிருப்பை விட்டு இருவரும் வெளியே வரவும் மற்றொரு மெசேஜ் கிடைக்கவும் சரியாக இருந்தது. ‘உன் மனைவியை உயிரோட உருப்படியா பார்க்கணும்ன்னா உடனே மதுரைக்கு தனியா கிளம்பி வா. உன் போலீஸ் புத்தியை காட்டினாலோ, உன் ஆளுங்க வேற யாராவது வந்தாலோ, அவ உயிருக்கு உத்தரவாதம் எதுவுமில்ல. அதுக்கு உனக்கு இருக்கற அவகாசம் இரவு ஒன்பது மணி வரை”
இதுநாள் வரை கணவனுக்கும் மனைவிக்கும் பிரியமானதாக இருந்த அந்த எலக்ட்ரானிக் பொருளை இன்று மிகுந்த வெறுப்புடன் செந்தில் வெறித்தான். குறுந்தகவலை வாசித்த அரவிந்த் கண்களை அகல விரித்தான்.
“என்ன அரவிந்த்?”
“சார், ஒரு விஷயம் கவனிச்சீங்களா? இங்கேர்ந்து மதுரை இருநூத்து அம்பது கிலோமீட்டருக்கு கம்மியான தூரம். ரயில்ல போனா மூணு மணி நேரம். ரோடு வழியா போனா மிஞ்சி மிஞ்சி அஞ்சு மணி நேரம். இவன் ஏன் ராத்திரி வரைக்கும்… கிட்ட தட்ட பத்து மணி நேர டைம் தர்றான்? திசை திருப்பறானா இல்ல அவனுக்கே எதாவது பிரச்சனையா? அதுல குழம்பிட்டானா?”
“தட் வாஸ் எ வெரி க்விக் அனாலிசிஸ். விஷ்வா உங்கள பத்தி எங்கிட்ட உயர்வா சொன்னதுல விஷயம் இருக்கு”, செந்தில் குரலில் மெச்சுதல் இருந்தது. ஆனால் அரவிந்த் காதில் இந்த பாராட்டு எதுவும் விழவில்லை. மாறாக செந்தில் எதிரில் விஷ்வா தன்னை குறை சொன்னதே காதில் ரீங்காரமிட்டபடி இருக்க, தலையை சிலுப்பினான்.
“என்ன சார் செய்யப்போறீங்க?”
“இந்த விஷயத்துல எங்க டிபார்ட்மெண்டை ஈடுபடுத்தாம எத்தனை தூரம் முடியுமோ அத்தனை தூரம் போக போறேன். மதுரைக்கு போறது தவிர இப்ப வேற எந்த யோசனையும் வரல. ஆனா அதுக்கு முன்னால என் ஆபீஸுக்கு போய் யூனஸோட ஃபைல்களை கொஞ்சம் குடையணும்.”
அரவிந்த் செந்திலை கமிஷனர் அலுவலகத்தில் இறக்கி விட்டான், ”சார், ரெண்டு மணி நேரத்துக்குள்ள உங்கள வந்து சந்திக்கறேன்.”
விஷ்வாவிடமும் அலைபேசியில் விவரம் தெரிவித்தான்.
“ஓகே அரவிந்த், நீ நேரா நம்ப ஆபீஸுக்கு இப்ப வந்திடு, அப்புறம் செந்திலோட மதுரைக்கும் போயிட்டு வா.”
விஷ்வாவிற்கு பதில் எதுவும் சொல்லாமல் பேசியை அணைத்துவிட்டு பைக்கை எடுத்தான்.
அரவிந்திற்கு காத்திருந்த விஷ்வா ஏமாந்து போனது தான் மிச்சம். ஆபீஸிற்கும் அவன் வரவில்லை, பேசியையும் எடுக்கவில்லை. ‘பையன் முழுசா காதல் மயக்கத்துல விழுந்துட்டான். நிவேதாவை பார்க்க ஓடிட்டான் போல இருக்கு’, பெருமூச்சு விட்டவாறு அடுத்து செய்ய வேண்டியது பற்றி விஷ்வா யோசனையில் இறங்கினார்.
விஷ்வா கணித்தது போல அரவிந்த், நிவேதா பற்றிய சிந்தனையில் கவனத்தை சிதற விட்டுகொண்டிருந்தது என்னமோ உண்மை தான். ஆனால் அவளை காண அவன் செல்லவில்லை. மாறாக அமைதியாக சிந்திக்க ஏற்ற இடம் என்று கல்லூரிக்கு சென்று, முதல் வேலையாக கைப்பேசியை சைலெண்ட் மோடிற்கு மாற்றினான். 
‘புக் ஸ்டோரில் ஞாயிற்று கிழமை கூட நிம்மதியா விட மாட்டேங்கறாங்க’ என்ற பொய்யான புலம்பலுடன் செக்யூரிட்டியிடமிருந்து சாவி வாங்கிக்கொண்டு ஸ்டோரினுள் நுழைந்தவன், சாவி ஹெல்மெட் முதலியவற்றை மேஜை மேல் வைத்துவிட்டு, நாற்காலியில் அமர்ந்தான். 
கால்களை தூக்கி மேஜை மேல் வைத்து எதிர்புறமிருந்த ட்யூப்லைட்டை வெறித்தான். நிவேதா- நிகிலை முதன் முதலாக கல்லூரிக்கு தன் காரில் தொடர்ந்து வந்த நாளிலிருந்து நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியையும் ஞாபகத்திற்கு கொண்டு வர முயற்சித்தான்.
 கோர்வையாக சிந்திக்க முடியாமல் நிவேதாவின் அழகு முகம் அடிக்கடி நினைவில் தோன்றி அவனை தடுமாற செய்தது. காலாற நடந்தால் பலன் கிடைக்கலாம் என்று தோன்ற, அமைதியான வளாகத்தை சுற்றி வரத்தொடங்கினான். நிவேதாவின் வகுப்பறை இருந்த வராண்டாவில் நடந்த போது, முன்பொரு நாள் அவள் பிரித்த பார்சலுடன் எதிரே வந்த காட்சி மனதில் வந்து போனது.
மற்றொரு நாள் உண்மை தெரியாமல் அவள்அவனிடமே ஓடிவந்து தனக்கு நிச்சயிக்கப்பட்டவனாக வந்தவன் பற்றி விசாரித்ததும் நினைவிற்கு வர, அதை எண்ணி வாய் விட்டு சிரித்தான். மாத்ஸ் டிபார்ட்மெண்ட் பக்கம் போன போன போது அவன் முகம் கறுத்தது, ‘இங்க தான் அன்னிக்கு கதை கந்தலாச்சு. வைபவை பார்த்து நான் என்று நிவேதா தவறா புரிஞ்சுக்கிட்ட இடம்.’ அன்று நடந்தது தெளிவாக ஞாபகம் இருந்தது.
 
“என்ன செய்யறீங்க, நிவேதா?”
“வீபி சாரை பார்க்க வந்தேன். அவர் சீட்ல இல்ல”
“ஓஹோ… அதான் டேபிள் அடில ஒளிஞ்சிட்டு இருக்காரோனு பார்த்துட்டு இருந்தீங்களா?”
“ஆமாம்… ஐயோ இல்லை….வந்து… டேபிளுக்கு கீழே சாக்பீஸ் இருந்துச்சு, அதை எடுக்க குனிஞ்சேன், சத்தம் கேட்ட அதிர்ச்சில இடிச்சுக்கிட்டேன்.”
 
‘ஓஹ் மை காட்.. சாக்பீஸ் சாக்பீஸ்… இங்க தான் கீழே கிடந்தது; மேஜை மேல் அவள் கவரையும் சாக்பீஸும் வைத்தாளே, அப்படி தான் என் சட்டை பைக்குள்ள போயிருக்கு.’ அவசரமாக திரும்பி சென்று சேமிப்பில் இருந்த பெட்டிகளையெல்லாம் ஆராய்ந்தான். ‘இது வேலைக்கு ஆகாது. அந்த விவகாரமான விசேஷ சாக்பீஸ் அடங்கிய பெட்டி இங்க இத்தனை வெளிப்படையா இருக்கற வாய்ப்பு கம்மி’ எண்ணமிட்டபடியே கணினியை இயக்கினான். 
விற்பனையாளர்கள் பட்டியலின் ப்ரிண்ட அவுட் ஒன்றை எடுத்துக்கொண்டான். அதிலிருந்து துப்பு துலக்கலாம் என்று தோன்றியது. ஸ்டோர்ஸ் கதவை தாளிட்டு பூட்டியவன் கையில் தலை கவசம், ஸ்டோர்ஸ் சாவிக்கொத்து, வண்டி சாவி, குளிர்கண்ணாடி, போதாத குறைக்கு பிரிண்ட் அவுட் காகிதங்கள் வேறு. ஒன்றை பிடித்தால் மற்றொன்று நழுவ சர்க்கஸ் ஜோக்கர் சாகசம் தோற்றது. அந்த பக்கமாக வந்த கணித துறை ப்யூன் முத்து இவன் உதவிக்கு சிரித்துக்கொண்டே வந்தான்.
“பாத்து சார், இம்மாம் பொருளோட தடுக்கி வீந்துட போற. அன்னிக்கு ஒரு நாள் கறுப்பன் கூட இப்படி தான் பாரு…”, முத்து சுவாரஸ்யமாக விவரித்துக்கொண்டே போக, அரவிந்த் ப்ரேக் அடித்து நின்றான். அரை மணி கழித்து தனக்கு மசால் தோசை காப்பி வாங்கித்தந்த ‘நல்ல மன்ஷன்’ அரவிந்தை சலாம் போட்டு வழியனுப்பி வைத்தான் முத்து.
விஷ்வா, தன் ஊழியர்கள் வைபவ் மற்றும் ஸ்ரீகாந்தனை விபத்து கேஸ்களில் வள்ளி சிக்கி இருக்கிறாளா என்று பார்த்து வர அனுப்பிவிட்டு, ப்ரின்ஸ் ராஜேந்திரா கல்லூரியின் சேர்மன் ராமனை தொலைபேசியில் அழைத்தார்.
“குட் ஆஃப்டர்னூன் மிஸ்டர் ராமன், விஷ்வேஷ்வர் பேசறேன். எப்படி இருக்கீங்க?”
“குட் ஆஃப்டர்நூன் குட் ஆஃப்டர்நூன், எல்லாம் நல்லா போயிட்டிருக்கு. உங்களுக்கு நான் எப்படி உதவி செய்யட்டும்?” ராமனிடம் விஷ்வாவிற்கு பிடித்த ஒன்று இது – சுற்றி வளைக்காமல் விஷயத்திற்கு உடனே வந்துவிடுவார்.
“எங்க க்ளையண்ட் ஒருத்தன், எதோ கணக்கெடுப்பு செய்யறானாம் – ஸ்டேஷனரி தேவை பற்றி. சரியான கழுத்தறுப்பு கேஸ். உங்க காலேஜ் சப்ளையர்ஸ் லிஸ்ட் ஒண்ணு தர முடியுமா?”
“இவ்வளவு தானா? இன்னும் முப்பது நிமிஷத்துல நீங்க கேட்டது கிடைச்சிடும். வேற எதாவது?”
“ரொம்ப நன்றி, ராமன். புதன் கிழமை லயன்ஸ் கிளப் மீட்டிங் வரீங்களா?”
“கண்டிப்பா வருவேன்”
“அங்க பார்க்கலாம். குட் டே சார்”, விஷ்வா போனை கீழே வைத்தார்.
 பதினைந்தாவது நிமிடம் துணை முதல்வர் ஜீவரத்தினமிடமிருந்து விஷ்வாவிற்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
“வணக்கம் சார், எங்க கல்லூரி சேர்மன் மிஸ்டர் ராமன் கிட்ட சில தகவல்கள் கேட்டு இருந்தீங்களாம். அது விஷயமா தான் நான் இப்ப பேசறேன்.”
“எஸ் தாங்க்யூ. உங்க கல்லூரி சப்ளையர்ஸ் பட்டியல் எங்க க்ளையண்ட் ஒருத்தருக்கு வேணும்.”
“சார், உங்க ஐடி குடுங்க, நான் ஈமெயில் செய்யறேன்”
ஜீவா கேட்டபடி தன் ஈமெயில் ஐடியை கொடுத்துவிட்டு, அரவிந்த் வருகைக்காக விஷ்வாவின் விரல்கள் மேஜையில் பொறுமையின்றி தாளமிடத் தொடங்கியது.

Advertisement