Advertisement

– 8 –
               நான்கு நாட்கள் தங்கிவிட்டுத்தான் வருவேன் என்று கூறிச்சென்ற நீ இரண்டே நாட்களில் வந்து விட்டாயே என்னடா தவா முகமெல்லாம் வாட்டமாக வேறு உள்ளது. இரவெல்லாம் தூங்கவில்லையா என்று கேட்டாள் மகிழம்பூ அம்மாள்.
               தன் முகத்தில் வலிய புன்னகையை வரவழைத்துக் கொண்டு அதில்லை அத்தை இங்கு ஏசி ரூமில் படுத்து பழகியவர் அங்கு புழுக்கம் அவரால் தூங்க முடியவில்லை. உடலுக்கும் ஒத்துக் கொள்ளவில்லை. கிளம்பி வந்து விட்டோம் என்றாள் மல்லிகை.
               எப்படிச் சமாளிக்கிறாள் பாரேன் என்று மனைவியை கருவிய மாதவன் தானும் தலையை ஆட்டி வைத்தான்.
               இருவருமே அவர்களுடைய பெட் ரூமுக்குள் சென்று ஆடையைக் கூட மாற்றாமல் மெத்தையில் படுத்து விட்டார்கள். இரவு இருவரும் தூங்கவில்லை என்பதால் அசந்து தூங்கி விட்டார்கள்.
               கதவு தட்டப்படும் ஒலி கேட்டு விழித்தெழுந்த மல்லிகை மணி பார்த்தாள் நண்பகல் 12.30.
               என்னம்மா தூங்கி விட்டீர்களா சாப்பிட்டு படுக்கலாமே என்று கூறிச் சென்று விட்டார் மகிழம்பூ.
               மது தூங்கியது போதும் எழுந்திருங்கள். சாப்பாட்டிற்கு அத்தை அழைத்து சென்றார்கள். வாங்க கைகழுவிச் செல்லலாம் என்றாள் மல்லிகை.
               கை கழுவி விடலாம் என்கிறாயா என்றான் மது.
               என்ன மது உளறுகிறீர்கள். சாப்பிடுவதற்கு கையைக் கழுவிக் கொண்டு செல்வோம் என்றேன்.
               எதுவோ பிரச்சினை என்று புரிகிறது என்ன பிரச்சினை காரணம் என்ன என்று புரியவில்லை. எதுவானாலும் நம் இருவருக்குள்ளும் நான்கு சுவர்களுக்குள்ளும் இருக்கட்டும். நாம் பேசித் தீர்க்க வேண்டியது.
               பெரியவர்களின் கண் முன்னே வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டாம். அவர்கள் மனதை ஏன் வதைக்க வேண்டும். அவர்கள் சந்தோசமாய் இருக்க வேண்டிய நேரமிது. அதனைக் கெடுப்பதற்கு நமக்கு உரிமையில்லை என்றாள் மல்லிகை.
               எதற்காக உரிமை இருக்கிறது. நான் தொட்டுத் தாலிகட்டிய மனைவி நீ என்னோடு முழு மனதோடுதான் உறவாடுகிறாயா என்று பதட்டத்துடன் கேட்டான் மாதவன்.
               ஆம் மனதோடுதான் உறவாடுகிறேன் அதில் உங்களுக்கு என்ன சந்தேகம். அதனை விளக்கி நிவர்த்தி செய்வதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. நீங்கள் சொல்லுங்கள் நான் அதன்படி செய்கிறேன் என்றாள் மல்லிகை.
               மல்லிகை வெளுத்ததெல்லாம் பால் என்று நினைத்து ஏமாந்து விட்டேனோ. மல்லிகை மனத்திற்கு மயங்கி விட்டேனோ என்று என் மீது எனக்கே கழிவிரக்கம் ஏற்படுகிறது.
               ஹனி என்ற அமுதமொழியை விட்டு மல்லிகை என்று விழிக்கம் பொழுதே என்னை நீங்கள் எங்கோ விட்டு விலகுவது போல் என் நெஞ்சு பதறுகிறது.
               ஆனால் சுய விமர்சனம் இந்த மல்லிகைக்கு தேவையில்லாதது. மல்லிகையின் உண்மை மனம் என்றுமே உயர்ந்தது என்று உணரப்படும் நாள் வரும் பொறுத்திருப்பேன் என்றாள் மல்லிகை.
               சாப்பாட்டு மேசையின் முன் அமர்ந்து உணவு உண்ணத் தொடங்கினார்கள். மல்லிகை உனக்குப் பிடித்த முருங்கைக்காய் சாம்பார்இ காலிபிளவர் மஞ்சுரி செய்திருக்கிறது. சாப்பிடம்மா என்றாள் பரிவொடு மகிழம்பூ.
               மல்லிகைக்கு மொத்தத்தில் சாப்பாட்டு வாசனையே குமட்டிக் கொண்டு வந்தது. நேற்று இரவு சாப்பிடவே இல்லை. இன்று காலை சாப்பிட்டேன் எ;று பேர் பண்ணி வந்து விட்டேன். அதன் காரணமாகத்தான் இப்படி உள்ளதோ என்று எண்ணியவாறு மடமடவென்று நான்கு வாய் சோறு எடுத்து வைத்தாள். குடல் அத்தனையும் சுருட்டிக் திருவிக் கொண்டு வாந்தி வந்தது.
               வாஷ்பேசினுக்கு சென்று அத்தனை சத்தத்துடன் வாந்தி எடுத்தாள். மயங்கிச் சரிந்தாள் மல்லிகை.
               என்னதான் அவள் மேல் வெறுப்பு தோன்றியிருந்தாலும் அவள் மயங்கிச் சரிந்தது அவனால் தாங்க முடியவில்லை.
               ஹனி என்னம்மா ஹனி என்று கூவியபடி எச்சில் கையோடு அவளை அலாக்காத் தூக்கினான். ஹாலில் உள்ள சோபாவில் படுக்க வைத்தான்.
               அம்மா என்ன செய்வதம்மா பி.ஹெச்.சி டாக்டரைப் பார்க்க வேண்டுமானாலும் நான்கு கிலோ மீட்டர் போக வேண்டும். அதைவிட ஏழு கிலோ மீட்டர் தொலைவில் டாக்டர் காயத்திரியின் நர்ஸிங் ஹோமிற்கே கொண்டு செல்வோம் என்றான்.
               தனது கைகளைக் கழுவிக் கொண்டு அவள் முகத்திலும் தண்ணீரைத் தெளித்து துடைத்தவாறே ஹனி என்னம்மா செய்கிறது என்று பதறினான்.
               முதலில் செய்வதறியாது பதறிய போதிலும் பின்னர் தெளிந்து நல்ல செய்திதான் பதட்டப் படாதே என்றார் மகிழம்பூ.
               மயக்கம் தெளிய நேரம் ஆவதால் காரை எடு. மருத்துவமனை சென்று வந்து விடுவோம் என்றார்.
               நர்ஸிங் ஹோம் வந்தடையும் வரை மயக்கம் தெளியாமலே இருந்ததால் மல்லிகையின் மாமனாருக்கும்இ மாமியாருக்கும் சற்று பயம் ஏற்பட்டது.
               டாக்டரம்மா பார்த்து விட்டு எல்லாம் நல்ல செய்திதான் நீங்கள் தாத்தா பாட்டி ஆகப் போகிறீர்கள். ஆனால் உங்கள் மருமகள் ஆரோக்கிய மற்றும் அனிமிக்காகவும் இருக்கிறாளே ஏன்.
               சாப்பிட மாட்டார்களா? இரண்டு நாட்கள் ஒன்றுமே சாப்பிடவில்லை என்று நினைக்கிறேன். அதனால் தான் மயக்கம் தெளிவதற்கு நீண்ட நேரமாயிற்று. மற்றபடி மசக்கை காலத்தில் மயக்கம் வாந்தியெல்லம் இயல்பு தானே.
               வாந்தி எடுத்தாலும் வேளா வேளைக்கு சாப்பிடச் சொல்லுங்கள். மாதமொருமுறை செக்கப்புக்கு அழைத்து வாருங்கள். ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று டாக்டரம்மா கூறினார்கள்.
               டாக்டர் என் மருமகள் பிரயாணம் செய்யலாமா? என் மகனும் மருமகளும் சிங்கப்பூரில் இருக்கிறார்கள். விடுமுறைக்கு வந்தார்கள். இன்னும் மூன்று நாட்களில் விசா முடிவடைகிறது. புறப்பட வேண்டும். அனுப்பலாமா என்று ஞயமாகக் கேட்டாள் மகிழினி.
               இந்தப் பெண்ணின் உடல் நிலைக்கு மூன்று மாதங்கள் நிறைவடையும் வரை பிரயாணம் செய்ய வேண்டாம். அதன்பின் பார்த்துக் கொள்ளலாம் என்று டாக்டரம்மா சொன்னார்கள்.
               காரை ஓட்டி வந்த மாதவன் சாலைப் போக்குவரத்தில் கவனத்தைச் செலுத்தியிருந்த போதும் நெஞ்சுக்குள் போராட்டமே நடத்திக் கொண்டிருந்தான்.
               இவளை இந்த முறை சிங்கப்பூர் அழைத்துச் செல்லக் கூடாது. அவள் வரவை எப்படித் தவிர்க்கலாம் என்று எண்ணிய வேளையில் தானாகவே அந்த வாய்ப்பு பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாய் அமைந்து விட்டது.
               அவள் வயிற்றிள் வளரும் கரு என் இரத்தம். என் குடும்ப வாரிசு. அது ஆரோக்கியமாக வளர்ந்து உருப்பெற வேண்டுமானால் அவள் மகிழ்சியாக இருக்க வேண்டும்.
               நான் பாசத்துடன் பழகினால்தானே அவள் மகிழ்ச்சியாய் இருப்பாள். ஏனோ என் மனம் அவளிடம் பாராமுகம் காட்டுகிறதே என்ன செய்யலாம். நேரிடையாக அவளிடம் கேட்டு விடலாமா நீ அவனைக் காதலித்தாயா? மடல் எழுதினாயா என்று கேட்டு விடலாம். கேட்டால் உண்மையில் சொல்வாளர். வயிற்றிலிருக்கம் கருவின் மீது ஆணையிட்டுச் சொல் என்றால் சொல்லி விட்டு மன்னிப்புக் கேட்பாள். கேட்டால் சரி பருவத்தின் கோலம் என்று தள்ளிவிட்டு முன்போல் அந்நியோயமாய் பழகி விடுவோமா மனப்பாரம் தீர்ந்து விடுமா என்று பல எண்ணி மனம் குமைந்தான்.
               ஒரு வேளை அந்தக் கார்த்திஸ் ஒரு தலையாகக் காதல் வயப்பட்டு விட்டு இவள் மேல் பழியைப் போட்டிருப்பான். அப்படிப்பட்ட பட்சத்தில் இவள் என்ன நினைப்பாள். எவனோன ஒருவன் பேச்சைக் கேட்டுக் கட்டிய மனைவியை இரண்டறக் கலந்தவளை சந்தேகித்து இவளிடம் எப்படி வாழ்வது என்று நினைத்து விட்டால் என்ன செய்வது திண்டாடினான்.
               அப்படி இருக்காது இருந்தால் மல்லிகை எந்த நிலையிலும் வருத்;தப்படக் கூடாது. நீ அவளை அன்பாக நடத்து என்று கூறியிருக்க மாட்டானே. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வே கிடையாதா முடியைப் பிய்த்துக் கொள்ள வேண்டும்போல் தோன்றிய நேரம் வீடு வந்து விட்டிருந்தது.
               மல்லிகையின் கரத்தைப் பற்றி மாமியார் வீட்டிற்குள் அழைத்து வந்தார். மல்லிகை நீ நன்கு ஒய்வெடுக்க வேண்டும்இ படுத்துக்கொள் நான் உனக்கு கூல்டிரிங்ஸ் கொண்டுவருகிறேன் என்று கூறிச் சென்றாள்.
               தலையாட்டிப் பொம்மைப் போல் அருகில் நின்று கொண்டிருந்தக் கணவனைப் பார்த்து மது உங்களுக்கு மகிழ்ச்சிப் பொங்கவில்லையா. ஏன் எப்போதும் எதையோ பறிகொடுத்த மாதிரி மலங்க விழிக்கிறீர்கள் என்று கேட்டாள்.
               ஆமாம் பறிகொடுத்து விட்டேன். என் சந்தோஷத்தைப் பறிகொடுத்துவிட்டு பரிதவித்து நிற்கிறேன். என் தோற்றம் உனக்கு வேதனையைத்தரவில்லையா. நீ என்னைக் கேலியாக்குகிறாய். என் நிலைமையைப் பார்த்தாயா நான் உண்மையாய் நேசித்தப் பொருள் எனக்கு மட்டுமே உண்மையாய் நேசமாய் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். நீ உண்மையானவள் தானா நான் உன்னை நம்பலாமா என்று கேட்டு விட்டான்.
               என்ன சொல்வது என்று புரியாமல் கண்களில் கசிந்தக் கண்ணீரை மாமியார் வரும் அரவம் கேட்கவும் உதட்டைக் கடித்து அடக்கினாள்.
               மாதவனும் என்ன பேசுகிறோம் என்ற உணர்வில்லாமல் பேசி விட்டுக் கைகளைப் பிசைந்து கொண்டிருந்தான்.
               மல்லிகை நீ அப்படியே படுத்துக் கொள்ளம்மா மாதவா இந்தப் பானத்தை அவள் வாயில் மெதுமெதுவே ஊற்றப்பா என்றாள்.
               வேண்டாம் அத்தை. நான் எழுந்தே குடித்து விடுகிறேன். என்று கூறிய வண்ணம் எழுந்து ஒவ்வொரு மடக்காக ரசித்துக் குடிப்பது போல் குடித்து முடித்தாள்.
               முடித்த வேளை குடிக்கென்று வாந்தி ஒரு டம்ளர் உள்ளே செல்லவும் நான்கு டம்ளர் வெளியே வந்துது. அசதியால் கண்களை மூடி பார்;த்து விட்டாள்.
               மாதவன் வெளியேற பாரி வந்து சுத்தம் செய்துச் சென்றாள்.
               இரவுப் படுக்கையில் மத்தியில் இடம் பிட்டு ஆளுக்கொரு விளிம்பில் படுத்திருந்தார்கள். ஒருவர் மேல் ஒருவர் உரசிவிடக் கூடாதாம்.
               மல்லிகை நீ என்னை விரும்பி மணந்து கொண்டாயா? கலியாணத்துக்கு சம்மதிக்க வைப்பதற்குள் நாங்கள் பட்ட அவஸ்தை இருக்கிறதே அது பெரும்பாதி என்று உங்கள் அம்மா சொன்னார்களே என்று கேட்டான் மாதவன்.
               கலியாணத்திற்குச் சம்மதிக்க முதலில் மறுத்தேன் என்பது உண்மை. உங்களை மறுக்கவில்லை. வெறுக்கவில்லை. விரும்பித்தான் மணந்தேன்.
               கலியாணத்திற்கு ஏன் சம்மதிக்கவில்லை கஷ்டப்பட்ட வீடுகளில் கணவனின் சம்பாத்தியத்தை மட்டுமே எதிர் பார்த்திருக்கிறார்கள். மனைவி படிக்கவில்லை வேலைக்குச் செல்ல முடிவதில்லை. வறுமைத் தாண்டவமாடும்.
               நமக்கு கடவுள் நல்ல அறிவைத் தந்திருக்கிறார். படிப்பில் முதல் தரமாக உள்ளோம். டிகிரி முடித்தால் போதாது. எனக்கு படிக்க வேண்டும். நல்ல வேலையில் அமர வேண்டும். சம்பாதிக்க வேண்டும். என் காலில் நிற்பதற்குத் தைரியம் பெற வேண்டும். என் குடும்பத்தின் வறுமை நீங்க வேண்டும் படிக்க வேண்டும் அதன் பின்னரே மற்ற நினைப்பெல்லாம் என்ற குறிக்கோளில் இருந்தேன்.
               அதனால் திருமணம் என்கவும் மறுத்தேன் முழு முயற்சியாக மறுத்தேன். ஆனால் என் தோழி தாமரை வந்து படிப்பு நீ எந்த நேரத்திலும் படித்துக் கொள்ளலாம். ஆனால் இந்த வாழ்;க்கை வரப்பிரசாதம் எப்பொழுதும் வாய்ப்பதில்லை. நீ திருமணத்திற்கு சம்மதித்து விடு என்று சொல்லிச் சென்றாள். நானும் சிந்தித்தேன். வீட்டிலிருந்த படியே கரஸ்பான்ஸ் கோர்ஸ் சேர்ந்து படித்துக் கொள்வோம்.
               அம்மா அப்பாவிற்குக் கிடைக்கும் சந்தோஷத்தை ஏன் கெடுக்க வேண்டும் என்று சம்மதித்து விட்டேன். இதனை முன்பே நம் திருமணம் நடந்த ஒரிரு மாதத்திலேயே உங்களிடம் சொல்லியிருக்கிறேன். நீங்களும் அது சரிதான் என்று ஒத்திருக்கிறீர்கள் இப்பொழுதும் ஏன் இந்தக் கேள்வி.
               மறந்து விட்டேன் மன்னிக்கவும் அங்குமிகவும் சோர்வாக இருக்கிறாய். நீ மகிழ்ச்சியாக இருந்தால் தான் நம் குழந்தை ஆரோக்கியமாக வளரும் சந்தோஷமாக இரு உனக்கு என்ன வேண்டுமானாலும் அப்பா அம்மாவிடம் கேள் செய்துத் தருவார்கள்.
               நான் இரண்டு நாட்களில் கிளம்ப வேண்டும். உன்னை அழைத்துச் செல்லக் கூடாது என்று டாக்டர் கூறியதால் உன் விசாஇ டிக்கட்டுகளை கேன்சல் செய்ய வேண்டும். மற்றபடி திருமணத்திற்;கு முன்பு போல் மெஸ்ஸில் தான் சாப்பிட வேண்டும்.
               மூன்று மாதங்கள் முடிவடைந்த பின் வந்து கூட்டிச் செல்வீர்களா? திரும்பவும் டெலிவரிக்கு ஒரு மாதம் இருக்கும் பொழுது வந்து விடலாம். எனக்கு உங்கள் அருகாமையில் இருப்பதற்கு தான் ஆசையாக உள்ளது.
               நான் இது மாதிரி சமயத்தில் பெற்றவர்களின் அருகில் இருக்கத்தான் ஆசை தோன்றும் என்று கேள்விப்பட்டிருக்;கிறேன். உன் அம்மா வீட்டில் இருப்பதற்கு ஆசை என்றால் அங்கு சென்று இருந்து கொள் என்றான்.
               அங்கு சென்றால் போனில் கூட தன்னுடன் பேசவேண்டியதில்லை என்ற நினைப்புப்போலும் மனதில் எண்ணியபடி நான் அங்கெல்லாம் செல்ல மாட்டேன். இங்குதான் இருப்பேன் நாளுக்கு ஒரு தடவையாவது போனில் பேசிவிடுங்கள் என்றாள் மல்லிகை
               சிங்கப்பூர் சென்ற மாதவனுக்கு மல்லிகை அருகில் இல்லாதது ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் ஒரு பக்கம் வேதனையாகவும் இருந்தது. மல்லிகையை வெறுப்பதா விருப்பம் குறையாமல் இருப்பதா மனதில் நடந்த போராட்டத்தில் வெறுப்பது ஒன்றே வழி என்று உறுதி படுத்துப்பட்டது.
               மல்லிகை கூறியபடி தினம் ஒரு முறை போன் பண்ணினான். அப்பா அம்மாவிடம் வழக்கம் போல் நன்றாகப் பேசினான். மல்லிகை பேசினால் என்ன உடம்புக்கு ஒன்றுமில்லையே போனை வைத்து விடுகிறேன் அப்புறம் பேசு என்றான்.
               மல்லிகை அவளாகவே ஹால் பண்ணிப்பேச முயன்றால் முக்கியமான வேலையில் இருக்கிறேன் பிறகுப் பார்க்கலாம் என்று கட் பண்ணி விட்டான்.
               மல்லிகை மனது தவித்தது. தன் வயிற்றில் சிசிவிற்காக மனதை மகிழ்ச்சியாக வைப்பதற்கு முயன்றாள். சாப்பிடவும் முயற்சித்தாள்.
               ஒரு முறை கூடுதலாக செக்கப்புக்கு சென்ற அன்று ஆம் நன்றாக உள்ளேன் என்று டாடக்டரம்மா கூறினார்கள். நீங்கள் மூன்று மாதம் கழித்து வந்து என்னை அழைத்துச் செல்லுங்கள். பிள்ளைத்தாச்சிப் பெண்ணின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்வார்கள். நீங்கள் என்ஆசைப்படி என்னை அழைத்துச் செல்லத்தானே செய்வீர்கள் என்றாள் மல்லிகை. அதன் பின் மாதவன் ஒரு வார்த்தை பேசுவதையும் ஒதுக்கி விட்டான்.
               ஏய் தாமரை உனக்கு ஒரு விஷயம் தெரியுமா என்றான் கார்த்திஸ் சொன்னால் தானே தெரியும் சொல்லாமல் அறிந்து கொள்ள நான் மாயக்காரியா என்றாள் தாமரை
               நான் மெனக்கெட்டு சென்றாவது மாதவனைப் பார்த்து நீ சொல்லியது போல் எதையாவது சொல்லிஇ அவன் மனக்குட்டையை கலக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என் நல்ல நேரம் அவனாகவே வந்து என்னிடம் மாட்டினான்.
               டேய் மாதவா புதுப் பெண்டாட்டிக்காரன் எப்படி இருக்கிறாய் என்றேன். நான் நல்லார்க்கேன் நீ எப்படி இருக்க உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்டான்.
               என் தங்கைக்கே இப்பத்தான் திருமணம் நடந்தது. எனக்கு வாழ்க்கையில் திருமணமே கிடையாதடா என்றேன். எதுக்குடா அப்படிச் சொல்கிறாய் என்று கேட்டான்.
               காதல் தோல்விடா என் கண்ணின் மணியாம் உயிரினும் மேலானக் காதலி வேறு ஒருவனை மணந்து கொண்டாள். அவளால் ஏமாற்றப்பட்ட நான் அவள் எங்கிருந்தாலும் நல்லாயிருக்கட்டும். அவள் நினைவிலேயே காலத்தை கழித்துவிட முடிவு செய்து விட்டேன் என்றேன்.
               அவன் இந்தக் காலத்துப் பெண்கள் பொழுது போக்கு அம்சமாக காதலை நினைக்கிறார்கள். பாவம் நீ ஒரு பெண்ணே உன்னை மறந்து வேறு ஒருவனுடன் வாழத் துணியும் போது நீ ஏண்டா வேறு திருமணம் செய்து கொண்டு வாழக் கூடாது. காலம் சிறந்த மருந்து காலத்தால் உன் வடு அழிக்கப்பட்டு உனக்கு நல் வாழ்க்கை அமையும்.
               என்னைப் பார் நான் பள்ளிப் பருவத்திலிருந்து மனைவி மனதில் குடியேற்றி அவள்தான் எனக்குத் துணையாய் வரவேண்டும் என்று பூஜித்து வந்தேன். அவள் அது பற்றி அறிந்ததே கிடையாது. என் தூய்மையான காதல் வந்ததும் காலம் வந்ததும் அவளையே எனக்கு மனைவியாக வரித்து விட்டது என்றான்.
               நான் உடனே முகத்தை பரிதாபமாக வைத்துக்கொண்டு மாதவா நீயும் ஏமாந்து விட்டாயடா என் காதலியானவள்தான் உன் மனைவியாகி இருக்கிறாள். நாங்கள் ஒருவரையொருவர் உயிருக்குயிராக நேசித்தோம். மடல்கள் பரிமாறிக் கொள்வோம். கிழித்தெறிந்து விடுவோம் நானும் அவளும் காதலர்கள் என்பது எங்களைத் தவிர யாருக்கும் தெரியாது. எந்த விதமான சாட்சியும் கிடையாது.
               அவளின் பெற்றோர் அவளைக் கட்டாயப்படுத்தினான் திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்துள்ளார்கள் என்றேன்.
               அவன் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே பேயறைந்தவன் போல்; ஆகிவிட்டான். மின் விசிறிக்குக் கீழ் காற்றிருந்தும் வேர்த்து வடிந்தது. பார்க்க கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. மனதி;ல் சந்தோஷப்பட்டேன் வெளியில் இயல்பாய் இருந்தேன்.
               ஆனால் இப்பொழுது என் மனம் என்னை வதைக்கிறது. ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்துக் குட்டிச் சுவராகிவிட்டாயே.
               உன் தங்கைதானே அதை இதைச் சொல்லிஅவள் மேல் மையல் கொள்ள வைத்தாள். நி எழுதிய காதல் மடலைச் சுக்கலாகக் கிழித்தெறிந்து விட்டு அண்ணா என்னைத் தங்கையாக ஏற்று என் படிப்பைக் குலைக்காமல் கவனமாகப் படிக்க உதவுங்கள் என்று கேட்டதற்கு இப்படி பொய் புனைந்து விட்டாயே அவனை இப்படித் தண்டித்தது சரிதானா என்று என் மனது பதற்றம் அடைகிறது என்றான் கார்த்திஸ்.
               சரிதான் போடா நீ மடல் எழுதியுதும் அவள் பதில் எழுதியதும் உண்மைதானே அவள் நம் இருவர் வாழ்க்கையையும் கெடுத்தவள் அவள் சந்தோஷமாக வாழலாமா வாழவே கூடாது நீ செய்தது சரிதாண்டா மனதைப் போட்டு குழப்பாதே கலங்க விடாதே என்றாள் தாமரை

Advertisement