Advertisement

– 7 –
               மல்லிகையும் மாதவனும் திருமணமாகி சிங்கப்பூர் சென்றவாகள் ஓராண்டு முடிந்த பின்னரே தாயகம் திரும்ப முடிந்தது. பெற்றவர்களுக்கும் அவர்களைப் பார்க்க ஆவல். அவர்களுக்கும் பெற்றவர்களையும் சுற்றத்தையும் பார்க்க கொள்ளை ஆவல்.
               விசாஇ டிக்கட் எல்லாம் ரிசர்வ் செய்த பின் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே ஷாப்பிங் துவங்கி விட்டனர். மாமாவுக்கும்இ அத்தைக்கும்இ அப்பாவுக்கும்இ அம்மாவுக்கும்இ அண்ணணுக்கும்இ உறவினர்களுக்கும் வீட்டு உபயோகத்திற்கு ஷோகேஸில் வைப்பதற்கென்று பொருட்களை வாங்கிச் சேகரித்தார்கள்.
               மாதவனின் வீட்டில் வந்து இறங்கிய அவர்களை உறவினர் ஒவ்வொருவரும் வந்து பார்த்துச் சென்றனர். அவர்களுக்குப் பரிசுப் பொருட்கள் கொடுத்து அனுப்பினர்.
               சிலர் ஒரு வருடம் ஆகிவிட்டதே விஷேசம் எதுவும் இல்லையா என்று கேட்டு வைத்தனர். மாதவனும் மல்லிகையும் அப்படிக் கேட்டவர்களிடம் சிரித்துக் கொண்டே ஜாலியாக இருந்து விட்டோம். இனிதான் பட்டம் பார்த்து வித்திட வேண்டும் என்று கூறி விட்டனர்.
               பத்து நாட்கள் சென்றதும் அத்தை மாமா எங்கள் வீட்டிற்குச் சென்று வரட்டுமா என்று கேட்டாள் மல்லிகை.
               இருபது நாட்கள் தானே விடுமுறை உங்கள் வீட்டிற்குச் சென்று வாருங்கள் என்று அனுப்பி வைத்தனர்.
               முருகேசன் வேலை பார்க்கும் கம்பெனியில் அவனுக்கு விடுமுறை கிடைக்கவில்லை. அதனால் வீட்டிற்கு வரவில்லை. மல்லிகையின் வீட்டில் மாதவனுக்கு போர் அடித்தது. நேரம் நகர மறுத்தது.
               அப்பொழுதுதான் பள்ளியிலே படிக்கும் பொழுது இந்த ஊரிலிருந்து கார்த்திஷ் என்றொரு பையன் படித்தானே அவனைப் பார்த்து வரலாமா என்ற எண்ணம் வந்தது. அவனைப் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அடையாளம் தெரியுமோ என்னவோ சரி பஜார் வரையாவது சென்று வரலாமே என்று நினைத்தான்.
               மல்லிகையிடம் சொன்னான். அவள் நீங்கள் தனியாகவா செல்வீர்கள் இருங்கள் வருகிறேன் என்று கூறி அவள் சித்தப்பாவின் பையன் பழனிவேலை அழைத்து அத்தான் பஜார் வரை போய் வர வேண்டுமாம். வீட்டிற்கும் சில சாமான்கள் வாங்கிக் கொண்டு அவரையம் அழைத்துச் சென்று வருகிறாயா என்று கேட்டாள். அவனும் சரி என்று இருவரும் பஜாரில் நடந்து கொண்டிருந்தார்கள்.
               ஒவ்வொரு கடையாகப் பார்த்துக் கொண்டே வந்த மாதவன் சட்டென்று நின்றான். இந்தக் கடையில் கல்லாவில் இருப்பவன் கார்த்தீஷ் போல் உள்ளதே.
               கார்த்திசும் திடிரென்று பார்ப்பவன் போல் பாவனை செய்து அட மாதவன் தானே கேட்டுக் கொண்டே இறங்கி வந்தான்.
               ஆமாம் கார்த்திஷ் நல்லாயிருக்கிறா? இது உங்க சொந்தக் கடையா? வியாபாரம் நல்லபடி நடக்கிறதா என்று கேட்டான்.
என்ன இந்தப் பக்கம் என்றான் கார்த்திஷ்.
               மாதவன் பழனிவேலைப் பார்த்து நீங்கள் வாங்க வேண்டிய பொருட்களை வாங்கி வாருங்கள். இவர் எனது பழைய நண்பன். நான் சற்று நேரம் பேசிவிட்டு வருகிறேன் என்றான்.
               கார்த்திசும் முதன்மை பொறுப்பாளரை விழித்துச் சற்று நேரம் கடையைப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் இதோ டீ குடித்துவிட்டு வருகிறேன் என கூறி மாதவனுடன் டீ ஸ்டாலுக்குச் சென்றனர்.
               ஸ்டாலின் உள் அறையில் அமர்ந்து டீ வரவழைத்து பருகிய படியே உரையாடினர்.
               கார்த்திஷ் உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா. நான் திருமணமான கையோடு சிங்கப்பூர் சென்று விட்டேன். ஒராண்டு கழித்து இப்பொழுது தான் வந்தேன்.
               உனக்கு இந்த ஊர்தான் என்று நினைவிருந்தது. போர் அடிக்கவே கிளம்பி வந்தேன். முடிந்தால் பார்க்கலாம்னு நினைத்தேன். பார்த்து விட்டேன். சொல் எப்படி இருக்கிறாய் என்றான் மாதவன்.
               எனக்குத் திருமணம் ஆகவில்லை. என் தங்கைக்கு இப்பொழுதான் திருமணம் நடந்தது. எனக்கு ஓராண்டு கழித்து திருமணம் நடத்த வேண்டும் என்று பெற்றோர் நினைக்கிறார்கள். அனால் நான் திருமணம் செய்து கொள்வதாய் இல்லை நான் என்று முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டான்.
               ஏன் திருமணம் வேண்டாம் எதுவும் பிரச்சினையா மாதவன் கேட்டான்.
               இல்லையில்லை. நாம் எவ்வளவு காலம் கழித்து சந்தித்திருக்கிறோம். வேறு பேசுவோம். சிங்கப்பூர் பற்றிப் பேசு. என் சோகக் கதையைக் கூறி உன் ஜாலி மூடைக் கெடுக்க நான் விரும்பவில்லை என்றான் கார்த்திஷ்.
               நான் உன் நண்பன் என்று கருதினால் சொல். நான் ஏதாவது உதவ முடியுமா என்று பார்க்கிறேன். நான் யாரோ என்று நினைத்தால் சொல்ல வேண்டாம் வற்புறுத்த மாட்டேன் என்றான்.
               என் காதல் தோல்வியுற்றது. என் காதல் பற்றி என் வீட்டாருக்கோ யாருக்குமே தெரியாது. இந்த ஊரிலேயே மிக அழகான நல்ல பெண் என் காதலி. முதலில் நான் மட்டுமே ஒருதலையாகக் காதலித்து வந்தேன். நாளடைவில் அவளும் என்பால் ஈர்க்கப்பட்டு காதல் வயப்பட்டால். மடல்கள் பரிமாறிக் கொள்வோம்.
               மடல்களை வாசித்து விட்டு இருவருமே கிழித்துப் போட்டு விடுவோம். எங்களுக்குள் அப்படி ஒரு உடன்பாடு. எனக்கு அவள் அவளுக்கு நான் என்று நிச்சயமாக நினைத்தோம். எங்கள் வீட்டில் நல்ல வசதி. அவள் வீட்டில் வசதியில்லை. என் தங்கையின் திருமணம் முடிந்த பின் என் பெற்றோர் அவளை மருமகளாக ஏற்க மறுத்தாலும் எப்படியாவது வாதிட்டு அவளையே மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
               என் ஆசையில் மண் விழுந்து விட்டது. என் கற்பனைக் கோட்டைச் சரிந்தது.
               அவள் மேலும் மேலும் படிக்கவே விரும்புவதையும் படிப்பு முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் சொன்னாள்.
               ஆனால் எதிர்பாராத விதமாய் யாரோ வசதியான மாப்பிள்ளைப் பையன் வந்ததால் இவளிடம் எதுவுமே சம்மதம் கேட்காமல் திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள். அவளுக்கு சாய்ற பக்கம் சாய்ற என்பதை போன்று கழுத்தை நீட்டுவது தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை. மாற்றானை மணம் செய்து கொண்டு போய்விட்டாள். நான் மனதோடு உறவைப் பூட்டி வைத்து அல்லாடுகிறேன். ஆனால் அவள் எங்கிருந்தாலும் நன்றாக வாழ வேண்டும் என மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன். என் வாழ்வு விதிப்படி அமையவேண்டும் என்று கண்ணீர் மல்க கசிந்துரைத்தான்.
               யாருமே அவன் உரைத்தரை பொய் என்று சொல்ல முடியாது. அத்தனை கச்சிதமாகக் கவனமாக இட்டுக் கட்டிய பொய்யை மெய்மைபட கூறினான்.
               இரக்க சுபாவம் கொண்ட மாதவனின் மனமோ அவன் நிலைமைக்கு கசிந்தது. வேதனை அடைந்தது.
               மாதவா அந்தப் பெண் வேறு யாருமல்ல திருமணம் செய்து களிப்படைந்திருக்கிறாயே அந்த மல்லிகையே தான். மல்லிகை மனம் உனக்குத்தான் வாய்த்திருக்கிறது.
               பள்ளித் தேர்வில் நான் தேர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக உன் விடைத்தாள்களைக் களவாடினேன் அல்லவா. அதனால் தான் வாழ்க்கைத் தேர்வில் என் காதலியைப் பிடித்து உன்னிடம் ஒப்படைத்து விட்டான் இறைவன். இது ஆண்டவனின் விளையாட்டு. இதனைத் தடுக்க யாரால் முடியும். நடந்தது நடந்துவிட்டது.
               மாதவா நீ மல்லிகையிடம் என் காதல் பற்றித் தெரிந்ததாகக் காட்டி விடாதே. துவண்டு துடித்து விடுவாள். மல்லிகை என்பதால் வலுவான கொழு கொம்பு கிடைத்ததும் பற்றிக் கொண்டது. நீ அவளை எக்காரணம் கொண்டும் எதற்காகவும் வருத்தப்பட விடாதே. அது போதும் எனக்கு என்றான்.
               ஆனால் மாதவன் மனது கண்ணாடி மீது கல் விழுந்த கதையாய் நொறுங்கிச் சிதறியது. இந்த மல்லிகை அடுத்தவனின் காதலியா. எப்படி என் மனதில் குற்றமில்லா பதுமையாய் குடியேறினாள். இங்கு ஏன் தான் வந்தோமோ. இவனை ஏன் தான் சந்தித்தோமோ என்று மனதில் உறுத்தல் தோன்றியது.
               கார்த்திஷ் சொல்லியது போல் தெய்வ சித்தம் இதுவாக உள்ளது. என் மனைவியின் துரதிஷ்டம் அவள் காதலனை என்னைச் சந்திக்க வைத்துள்ளது. ஐயோ இனி அவளோடு நான் எப்படி உறவாடுவேன்.
               உடலால் கெடவில்லை யென்றாலும் உள்ளத்தால் கெட்டவள் தானே. மனதில் ஒருவனை ஏற்றி வைத்துக் கொண்டு இன்னொருவனிடம் இவ்வளவு இயல்பாக எப்படி இவளால் நடந்து கொள்ள முடிகிறது. என் செய்வேன் தெய்வமே பலப் பல சிந்தித்த மாதவன் எப்படித்தான் வீடு வந்து சேர்ந்தான் என்பதறியாமல் வந்து சேர்ந்தான்.
               பேயறைந்தவன் முகம்போல தன் கணவனின் முகம் இருக்கக் கண்ட மல்லிகை மது உடம்புக்கு ஏதாவது ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்கள் என்றாள்.
               ஒன்றுமில்லை என்ற கணவனிடம் ஒரு செம்பில் தண்ணீர் கொடுத்து முகத்தைக் கழுவித் துடையுங்கள் என்று கூறி துண்டும் கொடுத்தாள்.
               என் உள்ளம் குமுறுகிறதடி முகம் கழுவினால் சரியாகிவிடுமா என்று என்று தனக்குள் நினைத்த மாதவன் சேரில் சாய்ந்தமர்ந்தான்.
               மருதாணி அம்மாள் வெளியே செல்ல வேண்டாம் என்று சொன்னேனே கேட்டியா. அவ்வளவும் கொள்ளிக் கண். இவளுக்கு வந்த வாழ்வைப் பாரேன் என்று எல்லாம் பொறாமைப்படுகிறது. கண் திருஷ்டிதான் பட்டிருக்கிறது. ஒரு வெள்ளைத் துணியைக் கிழித்து வாய் பேசாமல் முகம் உடல் தடவிக் கொழுத்து என்று சொன்னாள்.
               மல்லிகையும் தாய் சொல் தட்டாது ஒரு வெள்ளைத் துணியைக் கிழித்து வந்து மாதவனின் முகம் உடம்பில் தடவினாள். முன் அவள் கரம் பட்டதும் உடம்பில் குளிர்ச்சியுடன் மெத்தென்று ஒரு சுகம் கிடைக்கும் . இன்று அவள் கைபட்டது ஊரல் பூச்சி ஊர்வது போல் ஒரு அசூயை ஏற்பட்டது மாதவனுக்கு.
               அவனுக்கு இங்கிருக்கப் பிடிக்கவில்லை. உடனே எங்கள் வீட்டிற்குப் போக வேண்டும் கிளம்பு என்று மல்லிகை முகம் பார்க்காமல் சொன்னான்.
               என்ன மது வந்து இரண்டு நாட்கள் தானே ஆகிறது. நாளை மாலை செல்வோமே. நாளை என் தோழி தாமரையை போய் பார்த்து வரவேண்டும் என்று நினைத்தேன். அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டதாம். இங்கு வந்திருக்காளாம். அவளைப் பார்த்து விட்டு நாளை மாலையில் கிளம்பி விடுவோம் என்றாள் மல்லிகை.
               இல்லை எனக்கு இங்கிருக்கப் பிடிக்கவில்லை. இப்பொழுது கிளம்பு இல்லையென்றால் நான் செல்கிறேன். நீ மெதுவாகப் புறப்பட்டு வா என்றான்.
               ஏன் மது இப்படிச் சொல்றீங்க நன்றாகத்தானே இருந்தீர்கள். பஜாரில் யாரையாவது பார்த்தீர்களா என்ன நடந்தது. ஏன் இப்படி பேசுகிறிர்கள். இன்று இரவு மட்டுமாவது தங்கி விட்டு காலையில் செல்வோமோ என்று பரிதாபமாகக் கேட்டாள் மல்லிகை.
               மல்லிகை நான் உன் கணவன். நான் சொல்வதை ஏற்றுக் கொள்வது தான் உனக்கு நல்லது. அதை விட்டு எதிர்த்து வாதிடாதே என்றான்.
               ஹனி ஹனி என்று உருகி வழியும் இவர் மல்லிகை என்று கூறிவிட்டாரே. எதுவோ நடந்திருக்கிறது. அவர் சொல்படி கிளம்புவோம் என்று நினைத்து சரிங்க புறப்படுகிறேன் என்றாள்.
               அம்மா அவருக்கு உடலுக்கு சரியில்லையாம். நாங்கள் உடனே கிளம்புகிறோம் என்றாள் மல்லிகை.
               மல்லி இதென்னடிக் கூத்து கருக்கல் நேரத்தில் புதுமணத் தம்பதிகள் வெளியில் செல்லக் கூடாது. நாளைக் காலையில் புறப்படுங்கள். நான் மாப்பிள்ளையிடம் சொல்கிறேன் என்றாள் தாய்.
               கடைக்குச் சென்று வந்த பழனிவேல் சில்லரைக்காசைக் கொடுக்க மறந்து சென்றுவிட்டான். அதை கொடுக்க வந்தவன் மல்லியக்கா என்று அழைத்தான்.
               என்ன என்று வந்தவளிடம் அக்கா பஜாருக்கு போகும் போது இருந்த உற்சாக மனநிலையில் அத்தான் வரும் பொழுது இல்லை. மளிகைக் கடைக்காரன் கார்த்திஷ் அவரது பழைய நண்பராமே அவருடன் தான் வரும் வரைப் பேசிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் கிளம்பி வந்தார்.
               அந்தக் குடும்பமே பிறர் வாழப் பிடிக்காதக் குடும்பம் அவன் என்ன சொல்லி வறுத்தெடுத்தானோ வழியில் அத்தான் என்னிடம் ஒரு வார்த்தைக் கூட பேசாது வந்தார் என்றார்.
               மல்லிகையின் மனம் துணுக்குற்றது. இத்தனை காலம் அவள் மறந்தே விட்ட கல்லூரி காதல் கடிதம் சட்டென்று நினைவில் உதித்தது.
               அண்ணா என்னைத் தங்கையாக ஏற்றுக் கொள்ளுங்கள் என எழுதிய பின்பும் என் வாழ்விற்கு சாவு மணி அடிப்பாரா. அப்படிச் சூது எதுவும் நடந்தால் அவன் மனிதன் அல்லவே என்று நினைத்தாள்.
அவன் தான் ஏதாவது சொன்னான் என்றால் ஒரு வருடம் ஓரூயிராகப் பழகிய இவர் என்னைச் சந்தேகிக்கலாமா? அவன் என்ன சொன்னான் என்பதை என்னிடம் நேரிடையாகக் கேட்க வேண்டியது தானே. இந்த அளவு தெளிவற்றவராகவா இருப்பார்கள். அவராக என்னிடம் எதுவும் கேட்டுத் தெரிந்து தெளிவடையும் வரை நானும் வாய் திறப்பதற்கில்லை.
               ஏன் திறக்க வேண்டும். நானாக முந்திக் கொண்டு இதுதான் நடந்தது. என் மீது தவறு எதுவும் இல்லை என்று கூறி விடலாம். பிள்iயார் பிடிக்கப் போய் குரங்கு பிடித்தக் கதையாகி விடக் கூடாது. என் மீது நம்பிக்கை இருந்தால் என்னிடம் நேராகக் கேட்டிருக்கலாம். என்னையே நம்பாத இவர் என் சொற்களையா நம்புவார்.
               எனக்குக் கிடைத்த இந்த நல்ல வாழ்க்கை நிலைக்கச் செய் என்று இறைவனிடம் வேண்டினேன். அவன் என் வாழ்விற்கு சோதனைக் கல் நாட்டி உள்ளான். பொறுத்திருப்போம். நாரதரின் கலகம் நன்மையில் முடியும் என்பது போல் என் வாழ்விலும் ஏதாவது நல்லது நடக்கவே இப்படித் துன்பம் ஏற்பட்டிருக்கலாம் என்று தன்னைத் தானே தேறுதல் படுத்திக் கொண்டாள் மல்லிகை.
               மாதவனும் அறிவும் ஆற்றலும் பாசமும் மிக்க நல்ல மனிதன் தானே. நான் சின்ன வயதிலிருந்தே ஒரு மயக்கம் கொண்டேன் என்பது உண்மை. நானும் யாரிடமாவது அவளை விரும்புகிறேன் என்று சொல்லியிருக்கிறேனா. இல்லை. அவளுக்கே தான் ஒருவனால் விரும்பப் படுகிறோம் என்பது தெரியாது அதுவும் ஒருதலைக் காதல் தானே. இந்த வயதில் அவளும் மனதால் யாரையாவது விரும்புவது இயல்புதானே. இதில் தவறு என்ன கண்டேன். ஏன் அவள் வாயால் சொல்லியிருக்கலாமே. நான் ஒருவரை விரும்பினேன். படிப்பு படித்ததும் திருமணம் என்றிருந்தேன். ஆனால் படிக்கும் முன்பே நீங்கள் தூக்கி வந்து விட்டீர்கள். இதுதான் விதி என்பதோ என்று சொல்லியிருக்கலாம்.
                              சொல்லியிருந்தால் ஒருவேளை கார்த்திஷ் இன்று சொன்னது என் மனதைப் பாதித்திருக்காதோ. அன்றி வேறு ஒருவேளை விரும்பி உன்னை நான் கட்டாயப் படுத்தி திருமணம் செய்து விட்டேனா. நீ நிறைவான மனதோடுதான் உறவாடுகிறாயா? அல்லது பலவந்தமாக உன் மனதை நிர்பந்திக்கிறாயா என்று கேட்டிருப்பேனே.
               எப்படிப் பார்த்தாலும் அவள் மீது தவறு இருப்பதாகவும் தெரியவில்லை. தப்பு இல்லை என்றும் சொல்ல முடியவில்லை. என்ன செய்வதென்றும் புரியவில்லை.
               என்னிடம் மட்டும் அல்ல என் பெற்றோரிடமும் தங்கமான பெண் என்று நல்ல பெயர் வாங்கி விட்டாளே. இவளை நான் இங்கு விட்டுச் சென்றால் அவர்கள் என்ன ஏதென்று என்னைத் துளைத்தெடுத்து விடுவார்கள். அவர்களிடமும் நான் என்ன பதில் சொல்வேன். உண்மையைச் சொன்னால் என் தன் மானத்தைப் பாதிக்காதா. முருகேசிடம் கேட்கலாமா என்னவென்று கேட்பது கார்த்திஷ் தான் எங்கள் காதல் பற்றி யாருக்குமே தெரியாது என்று சொல்லிவிட்டானே. வெளியூரில் உள்ள அவனுக்கெப்படித் தெரியம். நான் என்ன செய்வது. சிந்திக்கச் சிந்திக்கக் குழப்பம் தான் மிஞ்சியது. இரவு முழுவதும் தூங்;குகிறேன் என்று படுத்துக் கொண்டு தானே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லி தாளம் தப்பிய பல்லவியால் உழன்றான்.

Advertisement