Advertisement

“நிலா பதறாதே, நீ இப்படிப் பேசினா அம்மு ரொம்ப பயந்து போயிருவா… எனக்கு ஒண்ணும் இல்ல… கையில சின்னதா ஒரு பிராக்சர், அவ்ளோ தான்… எக்ஸ்ரே, ஸ்கேன் எல்லாம் எடுத்து பார்த்தாச்சு… கையில மாவுக்கட்டு போட்டு விட்டிருக்காங்க… இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்திருவேன்… நீ கவலைப்படாம இரு, அம்முகிட்டே போனை குடு…” என்றான் தெளிவான குரலில்.
“ம்ம் சரி, சீக்கிரம் வந்திருங்க கெளதம்… எனக்கு உங்களைப் பார்த்தா தான் நிம்மதி…” என்றவள், அவன் சொன்னதும் தான் அம்முவைத் தேடினாள். அதுவரை வேறொரு உலகத்தில் வேதனையோடு உழன்று கொண்டிருந்தாள். அம்மு அவளையே பார்த்துக் கொண்டு சோகமாய் அமர்ந்திருந்தாள்.
“அம்மு செல்லம்… இந்தாடா, அப்பா பேசறாங்க… பேசு…” வேகமாய் அவளிடம் அலைபேசியை நீட்டினாள்.
“அப்பா….”
அந்த வார்த்தையை சொல்லி முடிக்கும் முன் அவளது சின்ன உதடுகள் துடித்து, கோணிக் கொண்டு கண்ணில் கண்ணீரை உற்பத்தி செய்ய கேவிக் கொண்டிருந்தாள்.
“டேய் அம்முக்குட்டி, அழறியா… அப்பாக்கு ஒண்ணும் இல்ல மா…”
“அப்பா… உங்களுக்கு என்ன ஆச்சு… அம்மு உங்கள பத்திதமா போயித்து வத சொன்னேன்ல, அம்மா அழுதுத்தே இதுந்தாங்க… அம்மு பயந்துத்தேன் தெதியுமா…” அந்தப் பிஞ்சு மனம் இத்தனை நேரம் எதுவும் புரியாமல் எப்படி வேதனைப் பட்டிருக்கும் என்பதை அப்போது தான் நிலா உணர்ந்தாள்.
அவளது வேதனையில் குழந்தையை கவனிக்காமல் இருந்ததை நினைத்து அவளுக்கு குற்றவுணர்வு தோன்ற, மகளை அணைத்துக் கொண்டாள்.
“அப்பாக்கு ஒண்ணும் இல்ல மா… பயப்படாதே, இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்திருவேன்… நீ சாப்பிட்டு கொஞ்ச நேரம் தூங்கு… அம்மாவை தொந்தரவு பண்ண வேண்டாம் சரியா…”
“ம்ம் சதிப்பா…” இட வலமாய் தலையாட்டியது அந்தப் பிஞ்சு.
“அம்மு தூங்கி எந்திதிக்கதக்குள்ளே நீங்க வீத்துக்கு வந்திதணும்… உம்மா…” என்று முத்தமிட்டுவிட்டு நிலாவிடம் போனைக் கொடுத்தாள்.
“ம்ம் வந்திடறேன்… உம்மா டா செல்லம்…” என்ற கெளதம், அலைபேசியில் இதழ் பதிக்க அது நிலாவை வந்தடைந்து அவள் முகத்தை சிவப்பு நிலவாக்கியது.
“ம்க்கும்…” என்று அவள் தொண்டையைக் கனைக்க, சட்டென்று திகைத்தவன், “சரி நிலா, நான் வச்சிடறேன்… இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திருவேன்…” என்று அலைபேசியை வைத்தான்.
அதுவரை அவளுக்குள் பதட்டம் மறைந்திருக்க, கௌதமின் வருகைக்காய் காத்திருக்கத் தொடங்கினாள் நிலா.
“அம்மு, உனக்கு சாதம் எடுத்திட்டு வரட்டுமா…”
“ம்ம் சதிம்மா, நீயும் கொஞ்சம் சாப்பிது… அப்பா தான் வந்திதுவேன் சொன்னாங்கல்ல…” அக்கறையாய் சொன்ன மகளை அணைத்துக் கொண்டு உச்சி நுகர்ந்தாள் நிலா.
“ம்ம் சாப்பிடறேன் செல்லம்… நீ முதல்ல சாப்பிட்டுத் தூங்கு…” என்றவள் அவளுக்கு சாதம் ஊட்டி விட்டு உறங்க வைத்தாள்.
கௌதமின் வருகைக்காய் காத்திருக்கத் தொடங்கினாள். காலையில் இருந்து சாப்பிடாமல் இருந்தும் பசி என்னும் உணர்வையே மறந்து தவிப்புடன் அவனுக்காய் காத்திருந்தாள். அவளது நினைவுகள் முழுதும் கெளதமைச் சுற்றியே இருந்தது.
மாலை மணி நாலை நெருங்கியிருக்க வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது. அதற்காய் காத்துக் கொண்டிருந்தவள் வெளியே ஓடினாள். காரிலிருந்து இறங்கிய புதிய ஒருவன், ஓடிவந்த நிலாவைக் கண்டு புன்னகைத்துக் கொண்டே பின் கதவைத் திறந்து விட்டான்.
அவனை நன்றியுடன் நோக்கிக் கொண்டே கௌதமின் அருகில் சென்றாள் அவள்.
காரில் இருந்து இறங்கிக் கொண்டிருந்த கெளதமின் வலது கையில் கட்டு போட்டு, கழுத்திலிருந்து தொட்டில் கட்டித் தொங்க விட்டிருந்தனர். அங்கங்கே சிராய்த்திருந்த காயத்தில் மருந்து போட்டு விட்டிருந்தனர்.
கௌதமிடம் வந்தவள், அவனைக் கண்ணாலேயே எக்ஸ்ரே எடுத்தாள். காலை சிறிது நொண்டியவனை அருகில் வந்து தாங்கிக் கொண்டு வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள். அவளை ஏறிட்டுப் பார்க்காமல் அமைதியாய் வந்தவன் சோபாவில் அமர்ந்தான்.
“சரி கெளதம்,அப்போ நான் கிளம்பட்டுமா… என்ன ஹெல்ப் வேணும்னாலும் என்னைக் கூப்பிட மறக்காதீங்க… இதான் என் கார்டு…” தன் அடையாள அட்டையை நீட்டினான் அந்தப் புதியவன். காலையில் இருந்து ஒன்றாகவே இருந்ததில் பரிச்சயமாகி இருந்தனர்.
“ரொம்ப தேங்க்ஸ் மகேஷ் என் கூடவே இருந்து ஹெல்ப் பண்ணதுக்கு… நிலா, இவர் பேரு மகேஷ்… இவர்தான் கூடவே இருந்து எல்லாத்தையும் பார்த்துகிட்டார்… இருங்க மகேஷ், காப்பி சாப்பிட்டுப் போகலாம்…” என்றவன் நிலாவைப் பார்க்க, அவள் அந்தப் புதியவனிடம்,
“ரொம்ப நன்றி சார், தெரிஞ்சவங்களே எனக்கென்னனு கண்டுக்காமப் போற இந்தக் காலத்துல யாருன்னே தெரியாம இவருக்கு பெரிய உதவி பண்ணி இருக்கீங்க… இந்த உதவியை எப்பவும் மறக்க மாட்டோம்…” நன்றியுடன் பேசிக் கொண்டே போனவளை சிரிப்புடன் குறுக்கிட்டான் மகேஷ்.
“அட என்ன மேடம்… என் காருல பைக்கை மோதி அடிபட்டுக் கிடக்குறவரைப் பார்த்திட்டு அப்படியே போக முடியுமா… நானும் மனுஷன் தானே, இதுக்குப் போயி இவ்ளோ நன்றியெல்லாம் சொல்லிப் பெருசு பண்ணறீங்க… மனுஷனுக்கு மனுஷன் உதவறது இயல்பு தானே…” என்று பெருந்தன்மையாய் கூறிய மகேஷை நோக்கி ஆமோதிப்பாய் ஒரு புன்னகையை உதிர்த்தவள்,
“சரி, நீங்க பேசிட்டு இருங்க… நான் காப்பி எடுத்திட்டு வரேன்…” என்று அடுக்களைக்குள் நுழைந்தாள்.
இருவருக்குமாய் காப்பியை எடுத்துக் கொண்டு வந்தவள் நீட்டினாள். மகேஷ் ஒரு கப்பை எடுத்துக் கொள்ள கெளதம் இடது கையில் எடுத்துக் கொண்டான்.
அப்போது உறக்கம் கலைந்து கண்ணைக் கசக்கிக் கொண்டே எழுந்து வந்தாள் அம்மு. கௌதமைக் கண்டதும் அவனிடம் ஓடி வந்தாள்.
“அப்பா… வந்துத்தியா, அச்சோ, கையில என்ன ஆச்சு…” என்றாள் விழிகளை மலர்த்தி, மெதுவாய் அவனது கைக்கட்டைத் தொட்டுக் கொண்டே.
“அம்மு… அப்பா கீழே விழுந்துட்டேன் மா, அதான் சின்ன காயம் பட்டிருக்கு… நீ நல்லா தூங்கினியா…” என்றான். அதையே பார்த்துக் கொண்டிருந்தவள்,
“நொம்ப வலிக்குதாப்பா…” என்றாள் தலையை ஆட்டிக் கொண்டே. அவர்களைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த மகேஷ்,
“இதான் உங்க பொண்ணு அம்முவா… வெரி கியூட், ஹாய் பேபி… உங்க பேரென்ன…” அம்முவிடம் கேட்டான்.
“என் பேது அபூவா அங்கிள்… எல்லாதும் அம்முகுத்தின்னு கூப்பிதுவாங்க…” என்றாள் அம்மு பளிச்சென்று.
“ஓ வெரி குட்… அம்முக்குட்டி, அங்கிளோட வீட்டுக்கு வரீங்களா… என் வீட்டுல ஒரு குட்டிப் பையன் இருக்கான்… ரெண்டு பெரும் சேர்ந்து விளையாடலாம்…”
“ம்ஹூம்… நான் அப்பா, அம்மாவை வித்துத்து எங்கயும் வத மாத்தேன், இவங்களையும் கூத்தித்து வேணா வதேன்…” என்றவளின் தலையைக் கலைத்து கன்னத்தில் முத்தமிட்டான் மகேஷ். மகள் பேசுவதை சந்தோஷமாய் பார்த்துக் கொண்டிருந்தனர் கௌதமும், நிலாவும்.
“அம்மு ரொம்ப கியூட்டா பேசுறா… ஒரு நாள் கண்டிப்பா எல்லாரும் எங்க வீட்டுக்கு வரணும்…”
“ம்ம் சரி மகேஷ், வந்துட்டாப் போகுது…” சிரித்த கெளதம், இடது கையால் மகளை அணைத்துக் கொண்டான்.
“சரி கெளதம், அப்ப நான் கிளம்பறேன்… டாக்டர் சொன்ன மாதிரி கொஞ்ச நாளைக்கு கையை அசைக்காம வச்சுக்கங்க… அப்பத்தான் சீக்கிரம் கட்டை அவிழ்க்க முடியும்… ஓகே, நான் வரேன்…” என்றவன் விடைபெற்றான்.
மகேஷை வழியனுப்பி விட்டு வந்த கெளதம், சோர்வுடன் சோபாவில் அமர, அம்மு அவனிடம் ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தாள்.
“அப்பா, உனக்கு நொம்ப வலிக்குதா… நான் ஊதித் ததத்தா…” என்றவள், அவனது கைக்கட்டில் “ஊ… ஊ…” என்று ஊதினாள்.
அதைக் கண்ட நிலா,
“அம்மு, நீ போயி விளையாடும்மா… அப்பா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும், கெளதம்… உங்களுக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வரட்டுமா…” என்றாள்.
“இ…இல்ல… ஒண்ணும் வேண்டாம்…”
“கை ரொம்ப வலிக்குதா கெளதம்… மதியம் ஏதாவது சாப்டீங்களா…”
“கை கொஞ்சம் வலிக்க தான் செய்யுது, மதியம் சாப்பிட முடியலை…” எங்கேயோ பார்த்துக் கொண்டு பதில் சொன்னான் அவன். அவனை அப்படியே அணைத்துக் கொண்டு ஆறுதல் சொல்லத் துடித்தது அவளது கைகள்.
“இப்ப கொஞ்சம் சாப்பிடறீங்களா… சாதம் எடுத்திட்டு வரட்டா…” கரிசனத்தோடு அருகில் நின்று கேட்பவளை மௌனமாய் ஏறிட்டான் அவன்.
அவளது விழிகள் வேதனையை சுமந்திருக்க, முகத்தில் நிறைந்திருந்த சோர்வு, அவளும் பட்டினி கிடக்கிறாள் என்பதை உணர்த்தியது.
“நீ சாப்டியா…” முதன் முறையாய் அவளை அக்கறையோடு விசாரித்து அவன் கேட்ட வார்த்தையில் அவளுக்கு கண்ணீரே வந்துவிட்டது.
“இ…இல்ல…”
“ஏன் சாப்பிடலை…”
அமைதியாய் அவனது முகத்தை ஏறிட்டவள், “நீ இப்படி இருக்கும் போது என்னால எப்படி சாப்பிட முடியும் கெளதம்…” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.
“நிலா, ஏன் சாப்பிடலைன்னு கேட்டேன்…”
“பி…பிடிக்கல… அதான் சாப்பிடலை…” என்றாள் அவள் தலையைக் குனிந்து கொண்டே.
“போயி சாப்பிடு…”
ப்ச்… எனக்குப் பசிக்கலை கெளதம், வேண்டாம்…”
“ஏன் பசிக்கலை, நீ ரொம்ப சோர்வாத் தெரியற… முதல்ல சாப்பிடு…” என்றான் அவன்.
“நீங்க சாப்பிடாம இருக்கும்போது எனக்கு எப்படி சாப்பிட மனசு வரும்… நீங்களும் சாப்பிடறதுன்னா சொல்லுங்க… எடுத்திட்டு வரேன்…” என்றாள் அவள் சற்றுக் கோபமாக. அவளையே தீர்க்கமாய் பார்த்தவன், “சரி, எடுத்து வை… நான் வந்திடறேன்…” என்றான்.
“ம்ம் ஓகே கெளதம்… நீங்க டிரஸ் மாத்திட்டு வாங்க… நான் எடுத்து வைக்கிறேன்…” என்றவள் அடுக்களைக்கு செல்ல அவன் எழுந்து அவனது அறைக்கு சென்றான். ஒரு கையால் எப்படியோ சட்டையை அவிழ்த்தவன் பேண்ட்டை அவிழ்த்து கைலியை உடுத்துவதற்குள் வெகுவாய் தவித்துப் போனான். கையைக் கீழே தாழ்த்த முடியாததால் பயங்கரமாய் வலித்தது.
சாப்பாட்டு மேசைக்கு வந்தவனுக்கு, நிலா சாதத்தை ஸ்பூனால் கிளறி ஒரு பாத்திரத்தில் கொடுக்க ஸ்பூனால் இடது கையில் எடுத்து சாப்பிட்டான். அவன் சாப்பிட்டு முடிக்குமுன் சாப்பிட்டு எழுந்தவள், அவனது படுக்கையை விரித்து வைத்து, “நீங்க போயி படுத்துக்கங்க கெளதம்…” என்றாள். அவள் செய்வதையே பார்த்துக் கொண்டிருந்தவன் அமைதியாய் நகர்ந்தான்.
என்னைத் திட்டியாவது இன்னும்
கொஞ்சம் பேசிக் கொண்டிரு…
அப்படியாவது உன் மனதில்
நிறைந்திருக்கிறேன் நான்…
எனைக்கொஞ்ச வேண்டாம்…
கூடி சிரித்துப் பேச வேண்டாம்…
பெருமையாய் கொண்டாட வேண்டாம்…
பெரும் மழையென அன்பைப்
பொழிந்திடவும் வேண்டாம்…
மண்ணை நனைக்கும் சிறு
மழைத்தூறலாய் – என்
மனதைத் தீண்டும் – உன்
ஒற்றைப் பார்வை போதும்…
காணாமல் கண்டு என் உயிரை
உரசிச் செல்லும் – உன்
காந்தப் பார்வை போதும்…
இனிக்க இனிக்க எதையெதையோ
பேசுவதை விட எனைத் திட்டும் போது
உன் மனதில் நான் மட்டுமே நிறைந்திருக்க
இன்னும் கொஞ்சம் திட்டி விட்டுப் போ…
அதில் நான் வாழ்ந்துவிட்டுப் போகிறேன்…

Advertisement