Advertisement

நிலா – 9
சூரியக் கதிர்கள் கோபத்தோடு பூமியை முத்தமிட்டுக் கொண்டிருந்த காலைப் பொழுது. இரவு வெகு நேரம் உறங்காமல் பலதையும் நினைத்து குழம்பிக் கொண்டிருந்த நிலா, விடியலுக்கு சற்று முன் தான் விழிகளில் கனவுகளை மிச்சம் வைத்து, உறங்கத் தொடங்கி இருந்தாள். விடியலில், அவள் தன்னை தரிசிக்க வராத கோபத்தில் சூரியன் உக்கிரமாய் உஷ்ணத்தோடு பொரிந்து கொண்டிருந்தான்.
முகத்தில் சுள்ளென்று விழுந்த சூரிய வெளிச்சத்தில் கண்ணைச் சுருக்கிக் கொண்டே கண் விழித்தாள் நிலா. எப்போதும் விடியலில் எழுந்து கொள்ளும் அம்முவும் அதிசயமாய் அதுவரை உறங்கிக் கொண்டிருந்தாள். மகளின் முகத்தில் விழுந்திருந்த முடிக் கற்றைகளை அன்போடு ஒதுக்கி விட்டு அவளது நெற்றியில் மென்மையாய் முத்தமிட, அந்த தொடுதலில் அம்முவும் எழுந்துவிட்டாள். சிணுங்கிக் கொண்டே கண்ணைத் திறந்தவள், அன்னையின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவள் மீது காலைப் போட்டு மீண்டும் கண்ணை மூடிக் கொண்டாள்.
“குட் மார்னிங் அம்மு செல்லம்… என்னாச்சு, இன்னைக்கு ரொம்ப நேரம் தூங்கறீங்க, எழுந்துக்கலையா…” என்றாள் அவளை அணைத்துக் கொண்டே.
“கும்மாயிங் அம்மா, நான் கண்ணு தொதந்து பாத்தேனா… நீ நல்லாத் தூங்கித்து இதுந்த… அதான், நான் மதுபதியும் தூங்கித்தேன்…” என்றாள் அவள்.
“ஓ என் செல்லம்… சரி, எழுந்துக்கலாமா… அப்பா வந்திருவாங்க…” அவள் இடுப்பின் மீதிருந்த அம்முவின் காலை விலக்கிக் கொண்டே கேட்டாள்.
“ம்ம் சதிம்மா…” என்ற அம்மு எழுந்து அமர்ந்தாள்.
எப்போதும் போல குளித்து காலை நேர வேலையில் பரபரப்பாகினாள் நிலா.
அடுப்பில் குக்கர் விசில் அடிக்க, அம்முவை குளிக்க வைத்துக் கொண்டிருந்தவள் ஓடிச் சென்று அதை அணைத்துவிட்டு வந்தாள். அம்முவுக்கு உடை மாற்றி சாப்பிட தோசை ஊற்றி, எடுத்துக் கொண்டு வந்தாள்.
கெளதம் வருகிற நேரமாகி இருந்தது. தனது கட்டுப்பாடில்லாமல் நொடிக்கொரு தரம் வாசலைத் தழுவி மீண்ட விழிகள் அவளுக்கே அதிசயமாய் இருந்தது.
“என்ன இது, என்றும் இல்லாமல் இன்று இப்படி…” என்று அவளையே கடிந்து கொண்டவளுக்கு அந்த வேதிமாற்றம் புதியதாய் தோன்றியது. அவன் வந்து விட்டால் அவனது முகத்தை ஏறிட ஒரு மனது தயங்கிக் கொண்டிருக்க, இன்னொரு மனதோ அவனை எப்போது காணுவோம்… எனத் துடித்துக் கொண்டிருந்தது. இரு வேறு மனநிலையில் போராடிக் கொண்டிருந்தாள் அவள்.
“கடவுளே, நான் ஏன் இப்படி இருக்கிறேன்… இந்த மாற்றம் சரியல்லவே…” மனதுக்குள் எண்ணிக் கொண்டாலும் அம்முவுக்கு தோசை கொடுத்துக் கொண்டே விழிகளை வாசலில் பதித்திருந்தாள்.
“எப்போதும் இந்த நேரத்துக்கு வந்திருப்பானே… இன்று ஏன் இன்னும் காணவில்லை…” நினைத்தவள் மனதுக்குள் ஒரு வித பயம் பரவியது.
“அம்மா, அப்பா ஏன் இன்னும் வதவே இல்ல…” வாயில் தோசையை அடைத்துக் கொண்டே விசாரிக்கத் தொடங்கினாள் அம்மு.
“தெரியலை அம்மு, நீ சீக்கிரம் சாப்பிடு… அப்பாக்கு போன் பண்ணிப் பாக்கலாம்…” என்றாள் சற்று கலவரத்துடன்.
“ம்ம், எனக்குப் போதும்மா… நீ அப்பாக்குப் போன் பண்ணு…” என்றாள் பெரிய மனுஷி.
“இன்னும் ஒரு வாய் தான் செல்லம்… இதையும் சாப்பிடு…” என்றவள், கடைசித் துண்டு தோசையையும் அவள் வாயில் திணித்துவிட்டு தண்ணீரும் கொடுத்து வாயைத் துடைத்து விட்டாள். நனைந்த கையை சேலை முந்தானையில் துடைத்துக் கொண்டு, சார்ஜில் இருந்த அலைபேசியை எடுத்து கௌதமின் எண்ணைத் தட்டினாள்.
அது முழுவதும் அடித்து, யாரும் எடுக்கப்படாமல் ஓய்ந்தது.
நிலாவின் நெற்றியில் குழப்ப ரேகைகள் நெளிந்தன. எப்போதும் அழைத்த உடனேயே அலைபேசியை எடுத்து ஹலோவும் கெளதம், இன்று ஏன் முழுவதும் இசைத்தும் போனை எடுக்கவில்லை… ஒருவேளை என் மீது கோபமாய் இருக்கிறானோ… அவள் மனது ஏதேதோ நினைத்து புலம்பத் தொடங்கியது.
மீண்டும் இரண்டு, மூன்று முறை முயன்று பார்த்தாள். எதிர்ப்புறத்தில் எந்த பதிலும் இல்லை… வயிற்றில் ஒரு பயப்பந்து முளைத்து தொண்டைக்கு நகர்வதை அவளால் உணர முடிந்தது.
“அய்யய்யோ, கெளதம் ஏன் போனை எடுக்கலை… என்னவாருக்கும், நான் இப்ப என்ன செய்வேன்…” பதட்டத்துடன் மீண்டும் முயற்சி செய்து கொண்டிருந்தவளை அழைத்தாள் அம்மு.
“என்னாச்சும்மா, அப்பா போனை எதுக்கலையா…”
“ம்ம், ஆமாம் தங்கம்… ஒரு நிமிஷம் இரு…” என்றவள், அவனது அலுவலகத்தின் லான்ட்லைனுக்கு முயற்சி செய்தாள். அழைப்பு சென்ற அடுத்த வினாடியே, எதிர்ப்புறத்தில் அழகான குரல் கேட்டது.
“ஹலோ, மாருதி ஆட்டோ ஸ்பேர்ஸ்…”
“ஹ…ஹலோ மேடம்… ஸ்டோர் இன்சார்ஜ் மிஸ்டர் கெளதம் கிட்ட பேசணும், கொஞ்சம் லைன் கொடுக்குறீங்களா…”
“நீங்க யார் பேசறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா…” குரல் கொஞ்சியது.
“நா…நான்… அவர் ஒயிப் நிலா பேசறேன், ப்ளீஸ் கொஞ்சம் லைன் குடுங்களேன்…” தவிப்பாய் வந்தது வார்த்தைகள்.
“யா… ஜஸ்ட் எ மினிட் மேம்…” என்று இண்டர்காமில் இசையை ஒலிக்க விட்டவள், ஒரு நிமிடத்திற்குப் பிறகு மீண்டும் லைனில் வந்தாள்.
“சாரி மேம்… அவர் காலைலயே ஷிப்ட் முடிஞ்சு கிளம்பிட்டாராம்…”
அதைக் கேட்டதும் யோசனையாய் முகத்தை சுளித்தவள், “ஓ… அப்படியா, அவர் இன்னும் வீட்டுக்கு வரலை… அதான், அடுத்த ஷிப்ட் அப்படியே கண்டின்யூ பண்ணுறாரோனு நினைச்சு கேட்டேன்… ஓகே, தேங்க் யூ… நான் வச்சிடறேன்….” என்றவள் அலைபேசியை அணைத்துவிட்டாள்.
“அங்கிருந்து எப்போதும் போல் கிளம்பி இருந்தால் எப்போதோ வீட்டுக்கு வந்திருப்பானே… இன்னும் ஏன் வரவில்லை…” பதட்டத்துடன் நகத்தைக் கடித்து அடுத்து விரலைக் கடித்துத் துப்பி விடுபவள் போல யோசித்துக் கொண்டிருந்தவளை அமைதியாய்ப் பார்த்தாள் அம்மு.
“அம்மா என்னாச்சும்மா, அப்பாத்த பேசினியா…”
“இ…இல்லம்மா… நீ கொஞ்ச நேரம் அமைதியா விளையாடிட்டு இரு…” மகளின் கேள்விக்கு பதில் சொல்லும் நிலைமையில் இல்லை அவள்.
யாருக்கு அழைத்துப் பார்ப்பது என்று புரியாமல் மீண்டும் கௌதமின் எண்ணுக்கு அழைத்தாள். இந்த முறை எதிர்ப்புறம் அவளது அழைப்பை ஏற்றுக் கொள்ள ஹலோவியது ஒரு புதிய குரல். குரலைக் கேட்டதும் குழப்பத்துடன் அலைபேசியில் இருந்த எண்ணைப் பார்த்துவிட்டு மீண்டும் காதுக்குக் கொடுத்தாள்.
“ஹ…ஹலோ… நீங்க யாரு,  கெளதம் எங்கே…” குழப்பத்துடன் அவளது குரல் எதிர்ப்புற செவிக்குள் பாய்ந்தது.
“ஹலோ, ஒரு நிமிஷம் மேடம்… நீங்க அவருக்கு என்ன உறவுன்னு தெரிஞ்சுக்கலாமா…” என்றான் அலைபேசியில் பதிந்திருந்த நிலா என்ற பெயரை நோக்கிக் கொண்டே.
“நீ…நீங்க யாரு… கெளதம்க்கு  என்னாச்சு… நான் அவர் ஒயிப் பேசறேன்…” பதறினாள் அவள்.
“மேடம், பதறாதீங்க… அவருக்கு சின்னதா ஒரு ஆக்சிடண்ட் ஆயிருச்சு…” தயக்கத்துடன் வந்தது அந்தக் குரல்.
“எ…என்னது… கெளதம்க்கு ஆக்சிடண்டா… எ…எப்படி….” என்று அலறியவளின் கண்கள் தானாய் கலங்கத் தொடங்கியது.
“மேடம்… பயப்படுற அளவுக்கு ஒண்ணும் இல்லை, சிக்னல் கவனிக்காம எதிர்ல வந்த என் கார்ல மோதி பைக்ல இருந்து கீழே விழுந்துட்டார்… கையில கொஞ்சம் அடி பட்டதால ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு வந்தேன்,டாக்டர் பார்த்திட்டு இருக்காங்க…” என்றது அந்தப் புதிய குரல்.
“அ…அப்படியா, நிஜமாலுமே அவருக்கு பெருசா ஒண்ணும் இல்லியே… எ…எந்த ஆஸ்பத்திரின்னு சொல்லுங்க. நான் உடனே கிளம்பி வரேன்…” என்றாள் அவள் அவசரமாய்.
“இல்ல மேடம், அதுக்கு அவசியமில்லை… ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ண வேண்டி வராது… கையில் பிராக்சர்க்கு கட்டு போட்டுட்டு இருக்காங்க… முடிஞ்சதும் நானே அவரைக் கூட்டிவந்து வீட்டுல விட்டுட்டுப் போறேன்…”
“ஓ ரொம்ப நன்றி சார்… அப்ப நான் வரவேண்டாமா, சரி… அவரை கொஞ்சம் பேச சொல்லுறிங்களா… பத்திரமா கூட்டிட்டு வந்திடுவிங்க தானே…” மீண்டும் தெளிவு படுத்தி அவன் சம்மதித்ததும் அரை மனதோடு அலைபேசியை வைத்தாள்.
அவர்களுக்காய் பதட்டத்துடன் காத்திருக்கத் தொடங்கினாள்.
“அச்சோ கெளதம், உனக்கு என்னடா ஆச்சு… பார்த்து வண்டி ஓட்ட மாட்டியா… உன் மனக் குழப்பத்திற்கு நான் தான் காரணமா, உனக்கு ஏதாவது ஆகியிருந்தா… நான் என்ன பண்ணுவேன்…” வேக வேகமாய் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்த சிந்தனையில் தவித்துப் போனாள் அவள்.
சாமி படத்துக்கு முன்னால் சென்று நின்றவள், கடவுளை அழைத்து அவசரப் பிரார்த்தனை ஒன்றை வைத்தாள். அவளது பதட்டத்தையும் கலக்கத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாலும் அம்மு எதையும் பேசாமல் அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஒவ்வொரு நிமிடமும் பெரும் யுகமாய் நகர்ந்தது அவளுக்கு.
“அம்மா, அப்பாக்கு என்ன  ஆச்சு…”
“ஒ… ஒண்ணுமில்லடா செல்லம்….கொஞ்ச நேரத்துல அப்பா  வந்திருவாங்க…” அவளுக்கு கூறுவதைப் போல தனக்கும் சமாதானம் கூறிக் கொண்டாள். வயிற்றுக்குள் துக்கப் பந்து ஒன்று அங்குமிங்கும் உருண்டு அலைக்கழிக்க தவிப்புடன் நேரத்தைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். 
அவளது பதட்டமான முகத்தைப் பார்த்த அம்மு, தொந்தரவு செய்யாமல் அவள் பாட்டுக்கு எதையோ செய்து கொண்டிருந்தாள். நிலாவின் பொறுமையை சோதித்துவிட்டு இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அவளது அலைபேசி அலற, ஓடிச் சென்று எடுத்தாள்.
“ஹ…ஹலோ, கெளதம்…”
“ம்ம் நிலா, நான் தான்…” சோர்வுடன் வந்தது கௌதமின் குரல். அவனது குரலைக் கேட்டதும் அதுவரை அடக்கி வைத்திருந்த வேதனை முழுதும் முந்திக் கொண்டு வெளியே வர அழத் தொடங்கினாள் நிலா.
“க…கெளதம், என்னாச்சு உனக்கு… எப்படி ஆக்சிடன்ட் ஆச்சு… நீ எப்பவும் கவனமா இருப்பியே, இப்போ எப்படி இருக்கு… நான் கிளம்பி ஹாஸ்பிடல் வரட்டுமா, ரொம்ப அடி பட்டிருக்கா… வலிக்குதா…” நிக்காமல் பேசிக் கொண்டே போனவளின் குரலில் இருந்த சோகமும், அழுகையும் சொல்ல இயலா ஆறுதலைக் கொடுத்தது கௌதமிற்கு.
அவளது குரலைக் கேட்டதும், அவன் உடல் வேதனையோடு மன வேதனையும் அகல முகத்தில் சிறு புன்னகை மலர்ந்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல் அவளிடம் இயல்பாய் பேசினான்.

Advertisement