Advertisement

நிலையில்லாமல் தவிக்கும் அவள் மனதைப் போலவே சானலை மாற்றிக் கொண்டே வந்தவள் அந்தப் பாடலைக் கேட்டதும் அப்படியே பார்வை நிலைக்க, அதைப் பார்க்கத் தொடங்கினாள். ஜானகியின் உருகி வழியும் குழைந்த குரலில், சுஜாதா கைக்குழந்தையை வைத்துக் கொண்டு, உணர்ச்சியைக் குழைத்துப் வாயசைத்துக் கொண்டிருந்தார்.
“இப்படியோர் தாலாட்டு பாடவா… அதில் அப்படியே என் கதையை கூறவா…
கைபிடித்த நாயகனும் காவியத்து நாயகனும் எப்படியோ வேறுபட்டார்…
என் மடியில் நீ விழுந்தாய்… (இப்படியோர்)
நீலவானம் கோபம் கொண்டா நிலவு தேய்ந்தது – கண்ணா…
நேரம் பார்த்து மறுபடியும் ஏன் வளர்ந்தது – இடையினிலே
இந்நிலவு எங்கிருந்தது, அது – இருண்டிருந்த வீட்டினிலே தங்கி வந்தது…
இப்படியோர் தாலாட்டு பாடவா… அதில் அப்படியே என் கதையை கூறவா….
அன்றொரு நாள் மீராவும் கண்ணனை நினைந்தாள்
ஏனோ – அவள் தலைஎழுத்து மன்னனை மணந்தாள்…
அதுவரை தான் தன் கதையை என்னிடம் சொன்னாள்… நான்
அதிலிருக்கும் என் கதையை உன்னிடம் சொன்னேன்…”
அதற்கு மேல் அந்தப் பாட்டைக் கேட்க முடியாமல் டிவியை அணைத்தவளுக்கு, துக்கப் பந்து தொண்டையை அடைத்தது. கலங்கத் தொடங்கிய கண்களில், அருவியாய் கண்ணீர் வழிந்தது. அவள் வாழ்கையை அப்படியே பாட்டில் எழுதி வைத்தது போல், அந்த வார்த்தைகள் அவளை சுமையாய் அழுத்த கேவிக் கேவி அழத் தொடங்கினாள்.
வெகு நேரம் அழுது கொண்டிருந்தவளுக்கு சட்டென்று அன்னையின் நினைவு வந்தது.
“அம்மா, உன்னை வேதனைப்படுத்திட்டு வந்ததுக்கு தான் எனக்கு இந்த தண்டனையா… என் வாழ்க்கையை நானே குளறுபடி ஆக்கிட்டேனே… உன்னைப் பார்க்கணும் போல இருக்கே… உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கணும் போலத் தோணுதே…” மனதுக்குள் அரற்றியவள், சட்டென்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அலைபேசியை எடுத்தாள்.
ஒரு நிமிடம் கண்ணை மூடி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவள் அவளது அலைபேசியை எடுத்து, பழக்கப் பட்டிருந்த வீட்டுத் தொலைபேசி எண்ணை அவளது அமர்த்தினாள். அழைப்பு சென்று எதிர்புறத்தில் கேட்கப் போகும் ஹலோவிற்காய் அவளது இதயம் தாறுமாறாய்த் துடித்துக் காத்திருந்தது.
இதயத்தை கழற்றி வெளியே வைத்தது போல் அவளது இதயம் துடிப்பதை சத்தமாக உணர்ந்தாள். அழைப்பு கட்டாகும் தருவாயில், ரிசீவரை எடுத்த ஒரு பெண் குரல் ஹலோவியது.
“ஹலோ… யாரு பேசறீங்க…”
அந்தக் குரல் அவளுக்குப் பரிச்சயமில்லாத ஏதோ ஒரு புதிய குரல். கண்டிப்பாய் அவளது அன்னையின் குரல் இல்லை. என்ன சொல்லுவதென்று தெரியாமல் அலைபேசியைத் துண்டித்து விட்டாள் நிலா.
“என்னாச்சு, அம்மா தானே எப்பவும் போனை எடுப்பாங்க… இன்னைக்கு ஏன்  எடுக்கலை… ஏன்மா, உங்க குரலைக் கூட இந்தப் பாவி கேக்கக் கூடாதுன்னு தான் நீங்க போனை எடுக்கலையா…” அதற்கும் தன்னைக் குற்றப் படுத்தியவள், எப்படியும் பேசி விடுவது என்று நினைத்துக் கொண்டு மீண்டும் அழைத்தாள்.
மீண்டும் அதே குரல் ஹலோவி, யார் வேண்டும் என்று கேட்டது.
“அம்மா இருக்காங்களா…” என்றாள் சட்டென்று.
“அம்மா உடம்பு சுகமில்லாமப் படுத்திருக்காங்க… நீங்க யாரு, உங்களுக்கு என்ன வேணும்…” என்றாள் அவள்.
“அய்யோ… அம்மா உடம்புக்கு என்ன ஆச்சு…” மனதுக்குள் பதறியவள், “நா… நான் அவங்களுக்கு தெரிஞ்ச குடும்பக்காரப் பொண்ணு… கொஞ்சம் அவங்ககிட்டே போனைக் கொடுக்க முடியுமா…” என்றாள் திணறலுடன்.
“அவங்களுக்கு குடுக்க முடியாது… முடியாமப் படுத்திருக்காக, நீங்க யாருன்னு சொல்லுங்க… அவுகளை மொபைல்ல கூப்பிடச் சொல்லுதேன்…” என்றாள் அந்த வேலைக்காரப் பெண்மணி. யாரென்று சொல்லவென்று தெரியாமல் குழப்பத்தில்  அலைபேசியை அணைத்து விட்டாள் நிலா.
“அம்மாக்கு என்னவா இருக்கும்… உடம்புக்கு முடியலைன்னா எழுந்து வரக் கூட முடியலையா…” அவரது நினைவில் வேதனையுடன் யோசித்துக் கொண்டிருக்க அவளது அலைபேசி அழைத்து அவள் நினைவை மீட்டது.
கௌதமின் எண் ஒளிர்ந்து கொண்டிருக்க “என்னவாயிற்று… இந்த நேரத்தில் அழைக்கிறான்…” ஒரு பதட்டம் பரவ, அதை எடுத்து காதுக்குக் கொடுத்தாள்.
“ஹ…ஹலோ….”
“ம்ம்… நான்தான்…” அவனது கம்பீரமான குரல் கரகரத்தது.
“ம்ம்… சொல்லுங்க…” அவளது குரல் வெளியே கேட்கவே இல்லை. இந்த மாற்றம் அவளுக்கு அதிசயமாய் இருந்தது.
“ஒ…ஒண்ணுமில்லை… எதையாவது யோசிச்சுகிட்டே இருக்காம, சாப்பிட்டு படுத்து தூங்கு… அப்புறம் மறுபடியும் உடம்புக்கு முடியாமப் போயிரும்… கதவைத் தாள் போட மறந்திடாதே…” அக்கறையாய் ஒலித்த அவனது குரல். அவளுக்கு ஏனோ மீண்டும் அழுகை வரும் போலத் தோன்றியது. கட்டுப்படுத்தி பேசிவிட்டு, அலைபேசியை அணைத்து வைத்தாள்.
“நான் அழுவேன் என்று நினைத்து அழைத்திருக்கிறான்… முரடன் போல முசுடாக இருந்தாலும் பலாச்சுளை போல இனிப்பானவன் என் கெளதம்…” மனதுக்குள் உருவான வார்த்தையில் சட்டென்று திகைத்தாள்.
“என் கௌதமா, எப்படி வந்தது இந்த உரிமை…” சின்னதாய் ஒரு அதிர்ச்சி தோன்றினாலும் கூடவே ஒருவித சுகமும் தோன்றியது. எழுந்து சென்று ஜன்னல் கதவைத் திறந்தாள். சிலுசிலுவென்ற காற்று அவள் சேலையைத் தாண்டி சிங்காரமாய் உடலைத் தழுவிச் செல்ல, தேகம் சிலிர்த்தது மனதுக்கு இதமாய் இருந்தது.
காலை முதல் நடந்த நிகழ்வுகள், மேனகாவிடம் பேசியது, கௌதமிடம் தான் நடந்து கொண்டது, அவனது வேதனை தனக்கு தாங்கிக் கொள்ள முடியாமல் வலித்தது, அன்னையின் உடல் நிலை குறித்த வருத்தம் என அடுத்தடுத்த நினைவுகள் மனதை அலைக்கழிக்க, வானத்து நிலவை வெறுமையாய் நோக்கி நின்றாள்.
அவளைப் போலவே குழப்ப மேகங்கள் சூழ வட்ட நிலவு அழகாய் காட்சியளித்தது. மேகத்துள் சென்று ஒளிப்பதும், தெளிவதுமாய் விளையாடிக் கொண்டிருந்தது நிலவு.
அடுக்கடுக்காய் அடுக்கி வைத்தது போன்ற வெண் மேகங்கள் வானுக்கு அழகு சேர்க்க, நட்சத்திரங்கள் அவளைப் பார்த்து கண் சிமிட்டி அழைக்க அதற்கு நடுவே கௌதமின் முகம் புன்னகைத்து மறைந்தது.
“சிரித்தால் எத்தனை அழகாய் கம்பீரமாய் இருக்கிறான், என் கெளதம்…” அவளது கட்டுப்பாடில்லாமல் எண்ண அலைகள் அவனையே சுற்றி வருவதை உணர்ந்தவள் வெகுவாய் தவித்துப் போனாள்.
“அய்யோ, இது என்ன புதுவித உணர்வு… எனக்கு என்னவாயிற்று… ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறேன்… கௌதமை சுற்றியே என் நினைவுகள் சுற்றிக் கொண்டிருக்கின்றனவே… இது எதனால்… அவன் உள்ளங்கை சூட்டில் குளிர் காயும் குருவிக் குஞ்சாய் சுருண்டு கொள்ள மனம் துடிக்கிறதே… எதனால் இந்த மாற்றம்…” வெகு நேரமாய் நிலவைப் பார்த்து யோசித்துக் கொண்டிருந்தவளின் காதில் காற்று உரசிச் சொன்னது.
“பெண்ணே, எதற்கு இந்தக் குழப்பம்… இதுதான் காதல்…” என்று. தன் மனது சொன்ன வார்த்தையைக் கேட்டதும் அதிர்ந்து போனாள் அவள்.
“எ…என்னது… எனக்கு, கெளதமின் மீது காதலா…” தலையைக் குலுக்கிக் கொண்டவள்,
“நோ… இது எப்படி சாத்தியமாகும்… காதல் ஒரு முறை தானே வரும்… பிறகு எப்படி இது காதலாகும்… அப்படியானால் இந்த உணர்வுக்குப் பேர் என்ன…” அவளது கேள்விக்கு மனதுக்குள் இருந்து குரல் கேட்டது.
“காதல் ஒரு முறை தான் வரும்… அதில் குழப்பமில்லை… அந்த ஒன்று இதுவாக இருந்தால்????”
“அய்யோ, இது என்ன புதுக் குழப்பம்… இதுதான் காதலென்றால் கார்த்திக்கின் மீது நான் கொண்ட காதல் பொய்யா… அப்படியானால் கார்த்திக்??? அவளுக்குள் மின்னலாய் கேள்விகள் முளைத்துக் கொண்டிருந்தன.
சென்னை மத்திய சிறைச்சாலை.
குற்றவாளிகளையும், வன்முறை, கண்டிப்பு, அதட்டல், மிரட்டலை மட்டுமே கண்டிருந்த அந்த சிறைச்சாலை கட்டிடமும் கூட முரட்டுத்தனமாய்  விறைப்புடன் இருந்தது. சிறைச்சாலையின் அலுவலக அறையில் நடுநாயகமாய் இருந்த மேசையில் கம்பீரமாய் வீற்றிருந்தார் அந்த காவல்துறை அதிகாரி. அவருக்கு முன்னில் இருந்த பெயர்ப்பலகையில் ராகவன், ஜெயில் சூப்பிரண்டண்ட் என்ற வார்த்தைகள் பொன்னிறத்தில் மின்னிக் கொண்டிருந்தன.
நரைக்கத் தொடங்கி இருந்த முடியை, கறுப்பு மையால் இளமையாக்கி இருந்தார். முறுக்கிய அருவாள் மீசையுடன், போலீஸ் தொந்தியை யூனிபார்ம் பாண்ட்டுக்குள் தள்ளி முறைப்புடன் அமர்ந்திருந்தார். குற்றவாளிகளின் சகவாசம் அவரது முகத்தை கடினமாக்கி இருந்தது. ஏதோ தபாலைப் பிரித்துப் படித்தவர், நிமிர்ந்தார்.
“கான்ஸ்டபிள்… அந்த நூத்தி மூணாம் நம்பர் கைதியை அழைச்சிட்டு வாங்க…” உத்தரவாய் ஒலித்தது அவரது குரல்.
“எஸ் சார்…” என்ற கான்ஸ்டபிள் அந்த கைதியைத் தேடிப் போனார். காலை உணவு முடிந்து கைதிகளை வேலை வாங்கிக் கொண்டிருந்தனர். அங்கு சென்றவர், செடிகளுக்கு தண்ணி ஊத்திக் கொண்டிருந்த ஒருத்தனிடம், “யோவ் பழனிசாமி, எங்கய்யா உன் தோஸ்த் நூத்திமூணு…” கேட்டார்.
“அவன் தென்னை மரத்துக்குப் பாத்தி கட்டிட்டு இருக்கான் சார்…” என்றான் அந்தப் பழனிசாமி.
“ம்ம்… நீ போயி அவனை அழைச்சிட்டு வா, சூப்பிரண்டு அய்யா கூட்டிட்டு வர சொல்லுறார்…” என்றார் அந்த கான்ஸ்டபிள்.
“ம்ம்… சரிங்க சார்…” என்ற பழனிசாமி தோட்டத்தை நோக்கி விரைந்தான்.
தென்னை மரத்தின் கீழே குனிந்து பாத்தி கட்டிக் கொண்டிருந்த அந்த நெடியவனின் பின்னில் சென்று அழைத்தான்.
“ஏய் காசி, உன்னை சூப்பிரண்டு ஐயா வர சொன்னாராம், வார்டன் சொல்லிட்டுப் போறார்… போயி பாரு….” என்றான்.
“என்னை எதுக்கு வர சொல்லுறாங்க…” கேட்டுக் கொண்டே நிமிர்ந்தவனின் முகத்தில் குழப்ப ரேகை நிறைந்திருந்தது. மெலிந்த தேகமும், ஒளியிழந்த கண்களுமாய் வாடிய தோற்றத்தில் இருந்தான்.
“ம்ம்… தெரியலையேப்பா… ஒரு வேளை, உன் தண்டனை முடியறதுக்கு ஆச்சுல்ல, அதைப் பத்தி சொல்லுவாகளா இருக்கும்…” என்றான் அந்த பழனிசாமி.
“ம்ம்… சரிண்ணே, நான் போயி பார்த்திட்டு வரேன்…”
“சரி காசி, உடனே போயி பாரு…” என்றவர் அவர் வேலையை முடிக்க நகர்ந்தார். அவனும் ஜெயில் அலுவலரின் அறையை நோக்கி நடந்தான்.
நீயும் நானுமில்லா
உலகைக் கண்டேன்…
நீரும் காற்றுமில்லா உலகம்
போல் மூச்சு முட்டக் கண்டேன்…
நீயும் நானுமில்லா
நிலவைக் கண்டேன்…
நிஜம் என்னும் ஒளி தொலைத்து
சோகையாய் தவிப்பதைக் கண்டேன்…
நீயும் நானுமில்லா
கவிதையை எழுதினேன்…
உயிரும் மெய்யும் தொலைத்த தமிழாய்
ஜீவனின்றி துடிக்கக் கண்டேன்…
நீயும் நானும் உருவத்தில்
வேறாயினும் உணர்வால் ஒன்றுதானே…
நீரில்லா உலகமும்,
நிலவில்லா வானமும்
உயிர்மெய் இல்லா தமிழும்
எப்படி சாத்தியமில்லையோ
அப்படித்தானே நீயில்லாத நானும்…

Advertisement