Advertisement

நிலா – 8
“வா மேனகா, உக்காரு… என்கிட்ட என்ன சொல்லணும்? தயங்காம சொல்லும்மா…” என்றாள் நிலா புன்னகையுடன் சோபாவில் அமர்ந்து கொண்டே.
“அது வந்துக்கா… நீங்க என்னைத் தப்பா நினைக்கக் கூடாது…” என்றாள் தயக்கத்துடன்.
“அதெல்லாம் நினைக்க மாட்டேன், எதுவா இருந்தாலும் ஓபனா சொல்லு…”
“வந்து… அந்த புதுசா வந்த பொண்ணை உங்க வீட்டுக்காரர் கூட பைக்ல அனுப்பி வச்சிங்கல்ல…”
“ஆமாம், அதுக்கென்ன…”
“எங்க பாட்டி எப்பவும் சொல்லுவாங்க… எந்தவொரு ஆம்பளையும் சந்தர்ப்பம் கிடைக்குற வரைக்கும் தான் ஸ்ரீராமனா இருப்பான்… சந்தர்ப்பம் கிடைச்சா எல்லா ஆம்பளைங்களும் ஸ்ரீ கிருஷ்ணன் தான்னு…”
“ஓ… சரி, அதுக்கென்ன மேனகா…”
“அது… நீங்க, உங்க வீட்டுக்காரர் கூட ஏதோ ஒரு புதிய பொண்ணை பைக்ல அனுப்பி வைக்குறீங்க… அதான் உங்ககிட்டே சொல்லலாம்னு…” அவள் இழுக்கவும், கலகலவென்று சிரித்தாள் நிலா.
“ஹஹா… அதுனால, இவரும் ஸ்ரீ கிருஷ்ணனா மாறிடுவார்னு சொல்ல வரியா… இவர் அப்படி எல்லாம் இல்லை மா…” சிரித்தாள் நிலா.
“எப்படிக்கா, இப்படி நம்பிக்கையா சொல்லுறிங்க… உங்க முன்னாடி அவர் நல்லபடியா தான் நடந்துக்குவாரு… அதை வச்சு நம்பிடாதிங்க, அவரும் சந்தர்ப்பம் கிடைச்சா…” என்று நிறுத்தியவள், நிலாவின் முகத்தை கவனித்தாள்.
அதே மாறாத புன்னகையுடன் நோக்கியவள், “ம்ம்… சொல்லி முடிச்சிடு மேனகா… அவர் சந்தர்ப்பம் கிடைச்சா என்ன பண்ணுவார்…”
“அக்கா, அது வந்து… இதை நான் சொன்னேன்னு யார் கிட்டயும் நீங்க சொல்லக் கூடாது… பாட்டிகிட்டயோ, உங்க வீட்டுக்காரர் கிட்டேயும் கேக்கக் கூடாது…” என்றாள் பீடிகையுடன்.
“நீ எதுவா இருந்தாலும் ஓபனா சொல்லும்மா…”
“வந்து… அன்னைக்கு நானும் அம்முவும் கண்ணைக் கட்டி ஒளிஞ்சு விளையாடிட்டு இருந்தோமா… உங்களுக்கு கூட காய்ச்சல்னு தூங்கப் போயிட்டீங்களே… அப்ப அம்மு என் கண்ணைக் கட்டி விட்டுட்டு அவ ஒளிஞ்சுகிட்டா… நானும் அவளைத் தேடிகிட்டு இருந்தேனா, அப்போ அவரு வந்து…” திணறினாள் அவள்.
“ம்ம்… சொல்லு… அவர் வந்து என்ன பண்ணினார்…” என்ற நிலாவின் குரலில் ஒரு மாற்றம் வந்திருந்தது.
“அ…அவரு… கண்ணைக் கட்டிட்டு நான் நடந்து வரும்போது வேணுமுன்னே என் காலைத் தட்டி விட்டு என்னைக் கீழே விழ வச்சுட்டார்… நான் விழப் போகும் போது, என்னைத் தாங்கிப் பிடிக்குற போல கட்டிப் பிடிச்சுட்டார்…” என்றாள் திணறிக் கொண்டே.
அதைக் கேட்டதும் நிலாவின் முகம் செவ்வானமாய் சிவந்தது. கோபத்தில் கண்கள் இரண்டும் தெறித்து வெளியே விழுந்து விடுவது போல இருக்க, லேசாய் கலங்கி சிவந்தது.
“அடச்சீ… வாயை மூடு, யாரைப் பத்தி யார்கிட்ட சொல்லுறே… என் கெளதம் பத்தியா இப்படிக் கேவலமா சொல்லுற… ஓங்கி அறைஞ்சன்னா, செலவில்லாம உன் ஊருக்குப் போயி சேர்ந்திடுவ… சின்னப் பொண்ணாச்சே, கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கும்னு கண்டுக்காம விட்டா… இப்ப அவரையே குத்தம் சொல்லுறியா… நீ வெறிச்சு வெறிச்சு, அங்கயும் இங்கேயும் நின்னு அவரையே கண்ணெடுக்காமப் பாக்குறது எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா…” நிலாவின் கோபமான குரலில் நடுங்கிப் போனாள் மேனகா.
“அக்கா… அதுவந்து…” என்று இடையில் ஏதோ சொல்ல வந்தவளை கை காட்டித் தடுத்தவள்,
“நீ ஆணியே புடுங்க வேண்டாம்… என் கெளதம் பத்தி எனக்குத் தெரியும்… நீ மேனகான்னா, உன்னைப் பார்த்து மயங்கிப் போறதுக்கு என் புருஷன் ஒண்ணும் விஸ்வாமித்திரர் இல்லை… கெளதம்… என் கெளதம், சூரியன் மாதிரி… அவரை உரசிப் பார்த்தா பொசுங்கிப் போறது நீயா தான் இருக்கும்…” முகம் சிவக்க, கோபத்துடன் அதே நேரம் குரலை உயர்த்தாமல், அழுத்தமாய் வந்து விழுந்தது நிலாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும்.
அவளது கோபத்தில் வெலவெலத்து நின்றிருந்தாள் மேனகா.
“அன்னைக்கு என்ன நடந்திருக்கும்னு நான் சொல்லவா… கண்ணைக் கட்டிக்கிட்டு தடுக்கி விழற போல அவர் மேல நீதான் விழப் போயிருப்பே… அவர் உன்னை ஓங்கி ஒரு அறை விட்டிருப்பார், இதான் நடந்திருக்கும்… அந்த கோபத்துல ஊருக்குக் கிளம்பறதுக்கு முன்னாடி அவர் மேல பழி சுமத்தலாம்னு நினைச்சியா…” கொந்தளித்தவளை,
“எப்படி, இப்படி நேரில் பார்த்தது போல சொல்லுகிறாள்…” என்ற அதிர்ச்சியுடன் நோக்கினாள் மேனகா.
“இங்க பாரு, நான் என்னை விட என் கௌதமை நம்பறேன்… நீ சொன்ன மாதிரி அவரே அவரைப் பத்தி தப்பா சொன்னா கூட நான் நம்ப மாட்டேன்… புரிஞ்சுதா, ஒழுங்கு மரியாதையா ஊரு போயி சேரும் வழியைப் பாரு… உன் பாட்டி முகத்துக்காக உன்னை சும்மா விடறேன்… இல்லன்னா உன் தோலை உறிச்சிருப்பேன்…” அமர்த்தலாய் கூறியவளின் கண்களில் உணர்ச்சி வேகத்தில் கண்ணீர் நிறைந்திருந்தது.
“விட்டால் போதும்…” என்று மேனகா வெளியே ஓட, வாசலில் அசையாமல் நின்று கொண்டிருந்தான் கெளதம். அவனைக் கண்டும் காணாத போல ஓடி விட்டாள் மேனகா.
பர்ஸ் எடுக்காமல் சென்று விட்டதால் சுதாவை பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டுவிட்டு, காய்கறி வாங்க செல்லாமல் வீட்டுக்குத் திரும்பி இருந்தான். அம்மு சஞ்சய்யுடன் விளையாட சென்றிருக்க, வீட்டுக்குள் கேட்ட மேனகாவின் வார்த்தைகளில் கோபத்துடன் நின்றவன், நிலாவின் வார்த்தைகளில் பிரம்மித்து சிலையாகி விட்டான்.
மேனகா வெளியேறியும், நிலாவின் கோபம் தணியவில்லை. அவளாகவே புலம்பிக் கொண்டிருந்தாள்.
“யாரைப் பத்தி யார் கிட்ட குத்தம் சொல்லுறா… என் கெளதம் பத்தி எனக்குத் தெரியாதா… திமிர் பிடிச்சவ…” சொல்லிக் கொண்டே திரும்பியவள் உள்ளே நுழைந்து கொண்டிருந்த கௌதமைக் கண்டதும் அதிர்ந்தாள்.
“அய்யய்யோ… நாங்க பேசியதைக் கேட்டிருப்பானோ… மேனகா சொன்னதைக் கேட்டிருந்தால் துடித்துப் போயிருப்பானே…” அவள் மனது தவித்தது.
“வ…வந்து… எப்ப வந்திங்க…” என்றவள் அவசரமாய் சோபாவில் இருந்து எழுந்திருக்கப் போனாள்.
மௌனமாய் அவள் அருகில் வந்து அவள் தோளைப் பற்றி அமர்த்தி, அவள் விழிகளை ஏறிட்டவனின் விழிகள் கலங்கியிருக்க, அவளது மனம் சிறகொடிந்த பட்டாம் பூச்சியாய் வேதனையில் துடித்தது.
“க…கெளதம்…” என்றவளின் வேதனையான விழிகளுக்குள் தன் விழிகளைப் புதைத்தவன், அவளது கைகளை எடுத்து அதில் தன் முகத்தை வைத்துக் கொண்டு அமைதியாய் குலுங்கினான். அவன் அழுகிறான் என்பது புரிய அவளுக்குள் சொல்லவொணா வேதனை எழுந்தது. அவனது சிறு வயது முதல் அவன் அனுபவிக்கத் தொடங்கிய அவமானங்களும், வேதனைகளும், ஒற்றையாகிப் போன ஏக்கமும் எல்லாம், அவள் அவன் மீது கொண்டிருந்த நம்பிக்கையில் காணாமல் போகத் தன் கவலைகள் எல்லாவற்றையும் அந்தக் கண்ணீரில் கரைத்து விடுவது போல மௌனமாய் கண்ணீர் விட்டான்.
சிறு குழந்தையாய் தன் முன்னில் அமர்ந்து கண்ணீர் விடுபவனைத் தேற்றும் வழியறியாமல் தவித்தவள், தாயாய் மாறி அவனைத் தன் மடியில் தாங்கிக் கொண்டாள்.
“கெளதம், ப்ளீஸ் கெளதம்… அழுவாதீங்க… நீங்க அழறதை என்னால தாங்கிக்க முடியல, எழுந்திருங்க கெளதம்… உங்களுக்கு நானிருக்கேன்…” என்றவள் அவனது சிகையில் ஆறுதலாய் தடவிக் கொண்டிருக்க, அவளது கடைசி வார்த்தையைக் கேட்டதும் நிமிர்ந்தான் அவன்.
“நி…நிலா… என்ன சொன்ன, எனக்கு நீயிருப்பியா… இன்னைக்கு போல எப்பவும் என்னோட இருப்பியா… என் மேல நம்பிக்கை வைக்க நீயாவது இருப்பியா, சொல்லு… என்னோட இருப்பியா…” என்றான் அவன் அவளை உலுக்கிக் கொண்டே. அவனது கேள்வியில் விக்கித்துப் போனவள் ஒன்றும் பேச முடியாமல் அமைதியாகிப் போனாள்.
“என்ன, ஒண்ணும் பேச முடியலையா… ம்ம், தெரியும்… எனக்குத் தெரியும்… எனக்குன்னு இந்த உலகத்துல யாரும் இல்லை… இதான், இதான் உண்மை…” என்றவன் கன்னத்தில் கட்டுப்பாட்டை மீறி வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.
“கெளதம்… ப்ளீஸ், என்ன ஆச்சு உங்களுக்கு… எதுக்கு இப்படி உணர்ச்சிவசப் படறீங்க…” அவனது வேதனையை பொறுத்துக் கொள்ளவே முடியாமல் தவித்தவள், அவனை சமாதானப் படுத்த தோளில் கை வைத்தாள்.
அவள் கையைத் தட்டி விட்டவன், “வேண்டாம்… யாரோட பரிவும் எனக்கு வேண்டாம், யாரோட நம்பிக்கையும் எனக்கு வேண்டாம்… நான் கிளம்பறேன்…” என்றவன் கை கால் அலம்பி புறப்பட்டு வேலைக்குக் கிளம்பத் தொடங்கினான்.
அவனுக்கு என்ன சொல்லுவதென்று தெரியாமல் தன்னையே குற்றப்படுத்தி வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள் நிலா.
“அம்மா, அப்பா எங்கே…” கேட்டுக் கொண்டே ஓடி வந்த அம்மு நிலாவைக் கட்டிக் கொண்டாள்.
அமைதியாய் இருந்த நிலாவின் சோர்ந்த முகத்தைப் பார்த்த அம்மு, “அம்மா, என்னாச்சும்மா… அப்பா தித்தினாங்களா…” வருத்தத்துடன் கேட்டாள்.
அதைக் கேட்டதும் சட்டென்று திரும்பியவள், “இல்லடா, அப்பா எப்பவுமே அம்மாவைத் திட்ட மாட்டாங்க… இப்படிக் கேக்கக் கூடாது சரியா…” என்றாள் மகளின் பார்வையில் அவனை சண்டைக்காரனாய் காணப் பிடிக்காமல்.
“அப்புதம் எதுக்கு… நீ அழுத போல இதுக்கே…” பெரிய மனுஷியாய் கேட்டவளை,
“அதெல்லாம் ஒண்ணும் இல்லடா செல்லம், நீ அப்பாகிட்ட போயி, கிளம்பிட்டீங்களான்னு கேட்டு முத்தா குடுத்திட்டு வா…  அம்மா அதுக்குள்ளே அப்பாக்கு காப்பியும், உனக்கு பாலும் எடுத்திட்டு வந்திடறேன், சரியா…” எழுந்து அடுக்களைக்குள் நுழைந்தாள் நிலா.                                 
அவளது மனதுக்குள் மேனகாவின் வார்த்தைகளும், கௌதமின் வார்த்தைகளுமே மாறி மாறி வந்து கொண்டிருக்க தலை வலிப்பது போல இருந்தது.
அழகாய் தொடங்கிய பிறந்தநாள் கொண்டாட்டம், அழுகையில் முடிந்தது மனதுக்கு வருத்தமாய் இருந்தாலும், ஏதோ ஒருவித நிறைவு அவளையும் அறியாமல் மனதில் தோன்றியது.
காப்பியை கலந்து கௌதமிடம் சென்று நீட்ட, அவள் முகத்தைப் பார்க்காமலே வாங்கிக் கொண்டான் அவன். அம்முவுக்கு பாலைக் கொடுத்துவிட்டு அவளது காப்பியை எடுத்துக் கொண்டு மீண்டும் சோபாவுக்கு வந்தாள் நிலா.
காப்பியைக் குடித்து முடித்து கிளம்பினான் கெளதம்.
“அப்பாக் குத்தி… பத்திதமா போயித்து வாங்க… காலைல வதும்போது அம்முக் குத்திக்கு ஜெம்ஸ் வாங்கித்து வதணும்… சதியா…” என்றவள், கெளதமைக் கட்டிக் கொண்டு முத்தம் கொடுக்க, அவனும் அம்முவை முத்தமிட்டான்.
“நான் கிளம்பறேன்…” என்றான் நிலாவிடம். பட்டும் படாமலும் அவளது விழிகளை உரசிச் சென்ற அவனது பார்வை அவளுக்குள் தீக்குச்சியை உரசியது போல தகித்துக் கொண்டிருக்க, அது ஏனோ அவளுக்குள் அவஸ்தையான புது உணர்வைக் கொடுத்தது. அவனது ஏக்கம் படிந்த விரக்தியான பார்வை கண்ணுக்குள் மறையாமல் நின்று கொண்டிருந்தது.
அம்மு விளையாடிவிட்டு வந்ததால், உறங்கி விடுவாள் என்று சாப்பாடு ஊட்டி விட்டாள். சாப்பிட்டு முடித்து அவளும் சோபாவில் படுத்து களைப்புடன் உறங்கத் தொடங்கி இருந்தாள். முன் வாசலை சாத்திவிட்டு வந்தவளை மீண்டும் கெளதமின் நினைவுகளே முற்றுகையிட, டீவியை ஆன் செய்து ரிமோட்டுடன் அமர்ந்தாள்.

Advertisement