Advertisement

ஐஸ்க்ரீம் என்றதும் குழந்தையான அம்முவுக்கு குஷியாகிவிட, மற்றதை எல்லாம் மறந்து போனாள்.
“அம்மா, சீக்கிதம் வா… கோவிலுக்குப் போயித்து ஐஸ்க்ரீம் சாப்பித போகலாம்…” என்றவள் அவளையும் இழுத்துக் கொண்டு உடை மாற்றச் சென்றாள். நிலாவின் நிலை தான் தர்மசங்கடமாகிப் போனது.
கெளதம் அவள் விழிகளுக்குள் எதை விதைத்துச் சென்றானோ… அவள் உணர்வுகளில் அது விருட்சமாய் வளரத் தொடங்கியது. அதற்குப் பிறகு அன்றைய நாள் மிகவும் அழகாய் நகரத் தொடங்கியது. நிலா அவனுக்காய் வாங்கி வந்திருந்த கரு நீல நிற ஷர்ட்டும், ஜீன்சும் அணிந்து கொண்டு கிளம்பியவனின் மீது ரசனையாய் படிந்தது நிலாவின் கண்கள்.
கல்லூரியில் அனைவரையும் கவர்ந்திட்ட கனவு நாயகன் கெளதம், கணவனாய் அவள் அருகில். அவளுக்கு சற்றே பெருமையாகக் கூடத் தோன்றியது. இப்போதெல்லாம் அவன் தன் தோற்றத்தில் கவனம் வைப்பதே இல்லை… ஏனோ தானோ என்று உடையணிந்து கொண்டு தான் அலவலகம் செல்வான். அவனை பழைய கோலத்தில் கண்டதும் தனை மறந்து நோக்கிக் கொண்டிருந்தாள் அவள்.
நிலா தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்த கௌதமின் இதழ்கள் மெல்லப் புன்னகையில் விரிந்தன. அழகான மயில் பச்சை வண்ண கிரேப் சேலையில் நின்று கொண்டிருந்தவளைக் கண்டும் காணாமல், கேசரி சாப்பிட்டுக் கொண்டிருந்த அம்முவின் அருகில் சென்றவன், “அம்மு… கிளம்பலாமா செல்லம்…” என்றான்.
அவனது குரலில், சட்டென்று தன் பார்வையை விலக்கிக் கொண்ட நிலா, “நீங்களும் சாப்பிடுங்க… கிளம்பலாம்…” என்று அவனுக்கும் கேசரியை வைத்து சூடான வெண் பொங்கலை சட்னியுடன் பரிமாறினாள். மூவரும் சாப்பிட்டு விட்டுக் கிளம்பினர். வாசலில் கோதுமையை காயப் போட்டுக் கொண்டிருந்த ருக்மணி, அவர்களைக் கண்டு திகைத்தார்.
“அட… காலைலயே குடும்பத்தோட வெளிய கிளம்பிட்டீங்க போலருக்கு… தம்பி என்ன இன்னைக்கு சினிமா ஸ்டார் மாதிரி ஜொலிக்கறீங்க…” என்றார் சிரிப்புடன்.
“ம்ம்… கோவிலுக்குப் போயிட்டு வரோம்மா…” என்ற கெளதம் பைக்கை எடுக்க,
“அப்பா, நான் முன்னாதி உக்கார்ந்துக்கதேன்…” என்ற அம்மு, முன்னில் அமர்ந்து கொண்டாள்.
நிலா, பின்னில் அமர்ந்து கொள்ள வண்டியை எடுத்தான் கெளதம். அவனது உடையில் இருந்து பரவிய பர்ப்யூமின் நறுமணம், காற்றில் படபடத்துக் கொண்டிருந்த அவள் புடவையோடு மனதையும் படபடக்க வைத்தது. சந்தோஷமா, அவஸ்தையா… எனத் தெரியாத, இனம் புரியாத ஒரு பரவசத்தில் அவள் அமர்ந்திருந்தாள். 
அருகில் இருந்த முருகன் கோவிலுக்கு சென்று வணங்கி, ஒரு அர்ச்சனையையும் செய்து விட்டு, மன நிறைவுடன் கிளம்பினர். ஐஸ்க்ரீம் பார்லருக்கு சென்று அம்முவின் மனதையும் குளிர்வித்து விட்டு வீட்டுக்குத் திரும்பினர்.
மதிய உணவு தயாரிப்பதில் நிலா பரபரப்பாய் இருக்க, அவள் மனதில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த குழப்ப மேகங்கள் அலைப்புறுதலை கொடுத்தது. ஒரு வழியாய் காளான் பிரியாணியும், காலி பிளவர் சில்லியும் செய்து முடித்தாள். எல்லாவற்றையும் உணவு மேசையில் எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் போது அழைப்பு மணியின் ஓசை யாரோ வந்திருப்பதை உணர்த்தியது.
டிவி பார்த்துக் கொண்டிருந்த கெளதம், எழுந்து சென்று வாசல் கதவைத் திறந்தான். வெளியே ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள்.
“நிலாக்கா இருக்காங்களா…” அவளது பார்வை அவனைக் கடந்து வீட்டுக்குள் செல்ல அடுக்களையில் இருந்து நனைந்த கையை டவலால் துடைத்துக் கொண்டே வாசல் கதவை நோக்கி வந்த நிலாவைக் கண்டதும் மலர்ந்தது.
“இருக்கா, நீங்க யாரு…” என்று கெளதம் கேட்பதற்குள்,
“என் பேரு சுதா… தேவி டெக்ஸ்டைல்ஸ்ல வேலை செய்யறேன்…” என்றாள் அவள் புன்னகையுடன்.
“ஓ… நீதானா அது…” அவன் மனதுக்குள் நினைப்பதற்குள், அங்கு வந்த நிலா “வா… சுதா, என்ன இந்தப் பக்கம்… வீட்டுக்கு வரப் போறேன்னு சொல்லவே இல்ல…”
“கௌதம், இவ தான் நான் சொல்லுவேன்ல… சுதான்னு… அந்த துணிக் கடைல வேலை செய்யுற பொண்ணு…” என்றாள் கௌதமிடம்.
“ஓ… வாங்க…” என்ற கெளதம், “இவ எப்போ, நம்மகிட்டே சொன்னா…” என்று யோசித்துக் கொண்டே வழி விட அவள் உள்ளே நுழைந்தாள்.
“என்ன சுதா, இந்த மதிய நேரத்துல இந்தப் பக்கம்… ஏதாவது வேலையா…”
“இல்லக்கா… உங்களைப் பார்க்க தான் வந்தேன்…” உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தாள்.
அங்கே அமர்ந்திருந்த அம்முவைப் பார்த்தவள், “ஹாய் செல்லம், இந்தாங்க… உங்களுக்குப் பிடிச்ச ஜெம்ஸ்…” என்று பாகில் இருந்த பாக்கெட்டை எடுத்து நீட்ட, அதைக் கண்டதும் அம்முவின் கண்கள் ஆர்வத்தில் விரிந்தாலும், அனுமதிக்காய் நிலாவை நோக்கியது அவளது விழிகள். அவள் சம்மதமாய்த் தலையசைக்க புன்னகையுடன் சுதாவிடம் வந்து வாங்கிக் கொண்டாள்.
“அக்கா, இந்தாங்க உங்க குடை… அம்மா உங்ககிட்டே கொடுத்திட்டு உங்களுக்கு நன்றி சொல்லிட்டு வர சொன்னாங்க…”
“அப்படியா… இதுக்கு என்ன இப்போ அவசரம்…” கேட்டுக் கொண்டே அவள் நீட்டிய குடையை வாங்கிக் கொண்டவள்,
“என்னாச்சு சுதா… அன்னைக்கு வந்து பார்த்திட்டு போன சம்மந்தம் எதாவது நல்ல விஷயம் சொன்னாங்களா…”
அதைக் கேட்டதும் சுதாவின் முகம் சட்டென்று நாணத்தில் சிவந்தது.
“அவங்களுக்கு என்னைப் பிடிச்சிருச்சுக்கா… காசு பணம் பெருசில்லை… உங்களால முடியற மாதிரி செய்யுங்கன்னு சொல்லிட்டாங்க… அவங்க சேலத்துக்குப் பக்கத்துல ஏதோ ஊரு… தொலைவுல இருந்து கிளம்பி வந்துட்டதால, மழைலயும் பார்த்துட்டே போயிடலாம்னு வீட்டுக்கு வந்துட்டாங்க… நீங்க மட்டும் அன்னைக்கு குடையைக் கொடுத்து என்னை அனுப்பி விடலைன்னா நான் நேரத்துக்கு வீட்டுக்குப் போயிருக்கவே முடியாது… ரொம்ப நன்றிக்கா…” என்றாள் நிலாவின் கையைப் பற்றிக் கொண்டு.
சேலம் என்றதும் அவள் நினைவு சட்டென்று பின்னோக்கித் தாவியது.
“அட… என்ன சுதா… இதுக்கு போயி நன்றியெல்லாம் சொல்லிட்டு…. என் தங்கையா இருந்தா செய்ய மாட்டேனா… உனக்கு நல்லபடியா அந்த சம்மந்தம் முடிவானதுல எனக்கு ரொம்ப சந்தோசம்…” என்றாள் மகிழ்ச்சியுடன்.
“இல்லக்கா… எனக்குக் குடையைக் கொடுத்திட்டு நீங்க நனைஞ்சுட்டு போனீங்க… உங்க நல்ல மனசு யாருக்கு வரும்… என் கல்யாணத்துக்கு நீங்க குடும்பத்தோட வந்து கலந்துக்கணும், அதான் என் விருப்பம்…” என்றாள் நெகிழ்ச்சியுடன். அவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றான் கெளதம்.
“என்ன சுதா இது, இதுக்குப் போயி இப்படி உணர்ச்சி வசப் படறே… கண்டிப்பா உன் கல்யாணத்துக்கு நாங்க எல்லாரும் வரத்தான் போறோம், என்னங்க…” என்றாள் கெளதமிடம் சம்மதம் கேட்கும் விதமாக.
“ம்… ஆமாமாம், நாங்க இல்லாமலா…” என்றான் அவனும் வேறு வழியில்லாமல் முழித்துக் கொண்டு. அவனது முகத்தைக் கண்டு பொங்கி வந்த சிரிப்பை வாய்க்குளேயே அடக்கிக் கொண்டாள் நிலா.
“ம்ம்… ரொம்ப சந்தோசம் அண்ணா… அப்புறம், அக்கா… இன்னைக்கு அண்ணாக்குப் பிறந்த நாள்னு நீங்க சொல்லிட்டு இருந்தீங்கல்ல… ஒரு சின்ன ஆசை, ஒவ்வொரு வருஷமும் இந்த நாள்ல என் அம்மா தெரிஞ்சவுங்க யாருக்காவது டிரஸ் எடுத்துக் கொடுப்பாங்க… இன்னைக்கு அண்ணாக்கு குடுக்க சொல்லி ஆசையா கொடுத்து விட்டாங்க…” என்றவள், கௌதமிடம், “ப்ளீஸ் அண்ணா, வாங்கிக்குவீங்களா….” என்றாள்.
அவள் அப்படி சொல்லுவாள் என்று எதிர்பார்க்காத கெளதம் திகைத்து நிற்க, அவன் சுதாவிடம் முகத்தில் அடித்தாற்போல ஏதும் சொல்லி விடுவானோ என்று தவிப்புடன் நின்று கொண்டிருந்தாள் நிலா.
சற்று கோபத்துடன் அவன் நிலாவை ஏறிட, அவள் கண்களால் அவனிடம் கெஞ்சினாள்.
“வ..வந்து… எனக்கு அதெல்லாம் எதுவும் வேண்டாம்…” என்று அவன் நாசூக்காய் மறுக்க, சுதாவின் முகம் காற்று போன பலூனாய் சுருங்கி விட்டது.
“ஏன் அண்ணா… யாரோ ஒருத்தங்க கொடுக்கறதை எதுக்கு வாங்கனும்னு நினைக்கறீங்களா… யாரோவா இருந்தாலும் எனக்கு உதவணும்னு அக்காக்கு தோணிச்சே… அது போல என்னைத் தங்கையா நினைச்சு இதை நீங்க வாங்கிக்க கூடாதா…” என்றாள் அவள் வருத்தத்துடன். அவளது வருந்திய முகம் அவனுக்குள் என்னவோ போலத் தோன்ற அவளது கையில் இருந்த கவரை அமைதியாக வாங்கிக் கொண்டான்.
“சரிம்மா… உன் அண்ணனா நினைச்சு இதை நான் வாங்கிக்கறேன்… ஆனா அண்ணன் வீட்டுல நீ சாப்பிட்டு தான் போகணும்…” என்றான் ஆணையாக.
“ரொம்ப சந்தோசம் அண்ணா, நீங்க வாங்கிகிட்டது தெரிஞ்சா அம்மா சந்தோஷப் படுவாங்க…” என்றாள் சந்தோஷத்துடன்.
நிலாவிடம் திரும்பியவள், “அண்ணி… எனக்கும் சேர்த்து சாப்பாடு போடுங்க… அண்ணன் பிறந்த நாளுக்கு, அண்ணி கையால சாப்பிட்டுட்டே போறேன்…” என்றாள் அவள் உற்சாகமாக.
நிலாவுக்கு கௌதமின் செய்கை அதிசயமாய்த் தோன்றினாலும் சுதாவின் அண்ணா என்ற அழைப்பு தான் அவனுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கக் கூடும் என நினைத்துக் கொண்டவள், “பார்ரா… அண்ணன்னு சொல்லறதுக்குள்ள, என்னை அண்ணியாக்கி வேலை வாங்குறதை…” சிரித்துக் கொண்டே கூறியவள், “வாங்க சாப்பிடலாம்…” அனைவருக்கும் பரிமாறத் தொடங்கினாள்.
சுதா அம்முவிடம் ஏதேதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தாள். ஏனோ அவளை கௌதமுக்கு மிகவும் பிடித்து விட்டது. பெண்களிடம் நின்று பேசாமல் ஓடும் அவனும் அவர்களுடன் கலந்து பேசியது நிலாவுக்கு சந்தோஷமாய் இருந்தது.
சாப்பிட்டு விட்டு அவள் கிளம்ப நேரமாகிவிட்டதால், கௌதமிடம் அவளை பேருந்து நிறுத்தத்தில் விடுமாறு கூறினாள் நிலா. அம்முவும் அவர்களுடன் சேர்ந்து கொள்ள, சுதாவை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு காய்கறி வாங்கி வந்து விடுவதாகக் கூறி பைக்கை எடுத்துச் சென்றான் கெளதம்.
அவர்கள் முகத்தில் சிரிப்பையும், கெளதம் சுதாவை வண்டியில் அழைத்துச் செல்வதையும் ஜன்னல் வழியாய்ப் பார்த்துக் கொண்டிருந்த மேனகா, பாட்டி அங்கே இருக்கிறாரா எனப் பார்த்துக் கொண்டே வெளியே இருந்த நிலாவிடம் வந்தாள்.  
“அக்கா, நீங்க இப்போ ப்ரீயா இருக்கீங்களா…”
அவளைப் புரியாமல் பார்த்த நிலா, “ஏன் மேனகா… ஏதாவது சொல்லனுமா…” என்றாள்.
“ம்ம்… ஆமாக்கா, உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்…”
“வா… உள்ள போயி பேசுவோம்…” என்றவள் அவளை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றாள்.
“அப்புறம் மேனகா… நாளைக்கு ஊருக்குக்  கிளம்பப் போறேன்னு பாட்டி சொல்லிட்டு இருந்தாங்க… அப்படியா…”
“ம்ம்… ஆமாக்கா… நாளைக்கு விடியக்காலைல கிளம்பிருவேன்…”
“ம்ம்… சொல்லு மேனகா, ஏதோ சொல்ல வந்தியே…”
“அது வந்துக்கா… நான் இப்படி சொல்லறேன்னு நீங்க தப்பா எடுத்துக்க கூடாது…” பீடிகையுடன் தொடங்கினாள் அவள்.
தாயின்றி நான் வளர்ந்தேன்…
தவறின்றி பழி சுமந்தேன்…
பிறந்ததையே வெறுத்திருந்தேன்…
நீ வந்து திருநாளாக்கினாய்…
இருளான வாழ்வில் நிலவாக வந்தாய்…
வலி தீர வழியின்றி – என்
வார்த்தையில் அமிலமூற்றி
என் வலியை உனக்களித்தேன்…
என்னுள் உயிர்திட்ட உயிர்ப்பூவே…
உன்னால் உயிர்த்தேன் நானே…
உன் விழியென்னும் எழுதுகோலால்
என் இதயமெங்கும் எழுதிவைத்தாய்…
உன் பெயரோடு எனது பெயரை…
நான் என்ற என் கர்வத்தை அழித்து
உன்னை எனக்குள் அறிமுகம் செய்தாய்…
என் பிரியம் உணராமலிருந்தேன்…
உன் பிரிவில் எனை அறிந்தேன்…
என்னைத் தொலைத்த போதோ
தேடவில்லை… உன்னைத்
தொலைத்திடுவேனோ என்று
விழி மூடவில்லை…
பாவம் நிறைந்த என் வாழ்வில்
பாலைவன சோலையாய் வந்தாய் நீ…
பாவை நீ எனக்கு தாயுமானாயே…

Advertisement