Advertisement

நிலா – 7
நிலவு ஓய்வெடுத்துக் கொள்வதற்காய் அதன் பஞ்சு மஞ்சமாம் மேகத்தைத் தேடிச் சென்றிருக்க, பகலவன் பளபளவென்று பொன்னிறக் கதிர்களை பூமிக்குப் பாய்ச்சி உலக இருட்டுகளை எல்லாம் விரட்டத் தொடங்கியிருந்த அழகான காலைப் பொழுது.
கதிரவனை வரவேற்பதற்கான அடையாளமாய் பட்சிகளின் கீச்… கீச்… ஒலிகள் அங்கங்கே ஒலித்து மெல்லத் தேயத் தொடங்க, பூக்களின் மொட்டுக்கள் மெல்ல விரியத் தொடங்கி காற்றில் இதமாய் சுகந்தத்தைப் பரப்பிக் கொண்டிருந்தன.
அவ்வப்போது ஒலித்து ஓய்ந்தது பால்காரரின் பைக் ஹாரன். இதோ உதயமாகி விட்டது, உலகுக்கு மற்றுமொரு கதிரவனின் வெளிச்சம்…..
காலை நேரத்துக்கே உரிய இதமான காற்றில், இன்று புதிதாய் கலந்து வந்து நாசியைத் தழுவியது நெய்யின் மணம். அந்த மணத்தில் உறங்கிக் கொண்டிருந்த மனம் விழித்துக் கொள்ள, கெளதம் எழுந்து அமர்ந்தான்.
அவர்களின் வீட்டு அடுக்களையில் இருந்து தான் மணத்தின் வழியாய் மனத்தைக் கவர்ந்து, பசியைக் கிளப்பி விடும் அபாரமான வாசனை வந்து கொண்டிருந்தது.
“என்ன இது, காலங்கார்த்தால கிட்சன்ல இப்படி மணக்குது… இன்னைக்கு எதுவும் விசேஷமா, உடம்புக்கு கொஞ்சம் சரியானதும் எழுந்து வேலையைத் தொடங்கிட்டாளா… ராட்சசி, இவளாவது… நான் சொல்லிக் கேக்கறதாவது… என்னமோ பண்ணிட்டுப் போகட்டும்…” காலையிலேயே நிலாவுக்கு மனதுக்குள் அர்ச்சனையை முடித்துவிட்டு குளியலறைக்குள் நுழைந்தவன் களைப்பு தீர குளித்து புத்துணர்வுடன் வந்தான்.
அவர்கள் வீட்டு ஹாலின் செல்பில் இருந்த கடவுள் புகைப்படத்திற்கு முன்னால் அழகாய் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்த தீபமும், இனிமையாய் பரவி நின்ற ஊதுபத்தியின் சுகந்தமும், நிலா குளித்துவிட்டு விளக்கு ஏற்றி இருக்கிறாள் என்பதை உணர்த்த, அவனது மனதுக்குள் அவள் மீதிருந்த கோபம் மேலும் அதிகமாகியது.
ஒன்றும் கூறாமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, விளக்கின் முன்னால் நின்று கண்களை மூடிப் பிரார்த்தித்தான். கண்ணைத் திறந்தவன் அருகில் நிலாவும், அவள் கையில் அம்முவும் இருந்தனர்.
“என்ன…” என்பது போல அவன் கேள்விக்குறியாய் நிலாவைப் பார்க்க அம்மு அவன் முன்னில் ஒரு கவரை நீட்டி, “ஹாப்பி பர்த்தே அப்பா…” என்றாள் புன்னகையுடன்.
அதைக் கேட்டதும் அவசரமாய் அவனது பார்வை சுவரில் மாட்டியிருந்த மாதக் கலண்டரைத் தழுவி மீண்டது.
“ஓ… இன்னைக்கு என் பிறந்த நாளா…” யோசித்தவனின் முகம் சட்டென்று வாடியது.
“ஹூம், என் பிறப்பைக் கொண்டாடுறது ஒண்ணு தான் குறைச்சல்… அந்தப் பொம்பளை என்னைப் பெத்துப் போட்டுட்டு, அவ காதல் தான் முக்கியம்னு ஓடிப் போயிட்டா… நான் எத்தனை அசிங்கப் பட்டிருக்கேன்… என் அப்பா எத்தனை வேதனைப் பட்டிருக்கார்… அசிங்கமான என் பிறப்புக்கு கொண்டாட்டம் ஒரு கேடா… இதுக்கு தான் இன்னைக்கு நேரத்துலயே எழுந்து, நிலா தடபுடலா என்னெல்லாமோ பண்ணிட்டு இருக்காளா…” எங்கோ பார்த்து யோசித்துக் கொண்டிருந்தவனின் முகத்தைப் பிடித்து தன்னிடம் திருப்பினாள் அம்மு.
“அப்பா, இதை வாங்குங்க… உங்களுக்கு ஹாப்பி பத்தேக்கு வேண்டி நாங்க புது திரஸ் வாங்கிதுக்கோம்… இன்னும் என்னெல்லாம் பண்ணிதுக்கோம் தெதியுமா…” என்றாள் சந்தோஷத்துடன் தலையை இடமும் வலமுமாய் ஆட்டிக் கொண்டே.
குழந்தையிடம் எதுவும் சொல்ல முடியாமல் நிலாவின் முகத்தை ஏறிட்ட கௌதமின் கண்களைக் கண்ட நிலா அதிர்ந்து போனாள். அவன் கண்களில்  அவமானம் தந்த சுவடுகளின் வலி நிறைந்திருக்க முகம் சுருங்கிப் போயிருந்தது. அந்தக் கண்களில் நிறைந்திருந்த வெறுப்பு அவளுக்கு சொல்லவொணா வேதனையைக் கொடுத்தது. யாருமில்லா அநாதையாய் அன்புக்கு ஏங்கி நிற்கும் சிறு குழந்தை போல வலியோடு பார்த்தவனை அப்படியே நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, “உனக்கு நான் இருக்கிறேன், கெளதம்…” என்று சொல்லத் துடித்த மனதின் எண்ணம் நிலாவுக்கே அதிர்ச்சியாய் இருந்தது.
தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அப்பா, வாங்குப்பா… நான் போயி ஸ்வீத் எதுத்தித்து வதேன்…” அம்முவுக்கோ தந்தைக்கு எல்லாவற்றையும் தானே முதலில் செய்ய வேண்டும் என்ற எண்ணம்.
அவளது பிஞ்சுக் கரங்கள் நீட்டிக் கொண்டிருந்த கவரை வாங்காமல் யோசித்துக் கொண்டிருந்தவனை நோக்கி, “ப்ளீஸ் வாங்கிக்குங்க… எல்லாப் பிறப்புக்கும் ஏதாவது ஒரு அர்த்தம் இருக்கும்… உங்க பிறப்புக்கும் நிச்சயம் அர்த்தம் இருக்கும்… உங்களை சார்ந்து தானே நாங்க இருக்கோம்… எங்களுக்காக வாங்கிக்குங்க…” என்று அவள் அமைதியாய் கூறியதும்,
“அப்பா, சீக்கிதம் பிதிப்பா…” என்று அவசரத்தோடு அவன் கையில் கவரைத் திணித்துவிட்டு இறங்கி ஓடினாள் அம்மு.
அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
“ப்ளீஸ், இந்த டிரஸ்ஸை போட்டுட்டு வாங்க… பக்கத்துல கோவிலுக்குப் போயிட்டு வருவோம்…”
“இல்ல, வேண்டாம்… எனக்கு இதில் எல்லாம் விருப்பம் இல்லை… இன்னைக்கு நீங்க சொல்லுறீங்கன்னு இதை நான் வாங்கிக்குவேன்… நாளைக்கும் என் மனசு ஏங்கும்… அப்ப என்ன பண்ணுவேன்… நான் இப்படியே இருந்துக்கறேன்… எனக்கு எந்த கொண்டாட்டமும் வேண்டாம்…” என்றான் அவன்.
அவனது வார்த்தைகள் அவள் நெஞ்சத்தில் அமிலத்தை ஊற்றியது போல புகைந்தது.
“என்ன வார்த்தை பேசுகிறான்… இவன் மனது வேதனைகளில் புரையோடிப் போய்விட்டதா… எதிரில் நிற்பவரிடம் எப்படி இப்படி அமிலமாய் வார்த்தைகளைத் துப்ப முடிகிறது… இருந்தும் இவன் மீது எனக்குக் கோபமே வரவில்லையே… இவனை அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறத்தானே மனசு விழைகிறது, இது என்ன மாதிரி உணர்வு…” அவள் அவளையே கேள்வி கேட்க அங்கே வந்தாள் அம்மு.
“அப்பா… அம்மா… நந்து பேதும் வாங்க…” அவர்களை இழுத்துக் கொண்டு உணவு மேசையின் அருகே சென்றாள்.
“அப்பா, இங்கே உக்காதுங்க…” அவன் நின்று கொண்டேயிருக்க, “உக்காதுப்பா…” அதட்டினாள் மகள்.
மௌனமாய் அமர்ந்தான் அவன்.
அங்கே ஒரு ஹாட் பாக்ஸில் நிலா மூடி வைத்திருந்த கேசரியைத் திறந்து ஒரு ஸ்பூனால் எடுத்து அவன் வாயருகே நீட்டினாள்.
“ஆ காத்துப்பா… அம்மு தான் அப்பாக்கு பஸ்த் ஸ்வீத் குதுப்பேன்…” என்று கூற அவனது கண்கள் கலங்கத் தொடங்கி இருந்தன. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு குழந்தையின் முன்னில் எதையும் காட்டிக் கொள்ளாமல் வாயைத் திறந்தான்.
“ம்ம்… என் செல்ல அப்பாக்குத்தி… ஹேப்பி பத்தே அப்பா…” அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். மகளைக் கட்டிக் கொண்டு அவனும் முத்தமிட்டான்.
“கேசதி நல்லாதுக்கா… நானும் அம்மாவும்  சேர்ந்து பண்ணோம்…” என்றாள் புன்னகையுடன்.
“அம்மா… நீயும் அப்பாக்கு ஸ்வீட் ஊத்தி விது…” வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்ற நிலாவையும் அழைத்தாள்.
மகள் சொன்னதை மறுத்தால் ஆயிரம் கேள்விகள் கேப்பாள் என நினைத்துக் கொண்டே கூச்சத்துடன் அவன் அருகில் வந்தவள், கேசரியை ஸ்பூனில் எடுத்து அவனிடம் நீட்டினாள்.
அவனது ஏக்கமுடன் கூடிய வலி மிகுந்த கண்களை அவளது கண்கள் தீண்டியதும் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது போல, ஒரு உணர்வு எழுந்தது. அந்தப் பார்வை… அப்படியே அவளை உள்ளே இழுத்துக் கொள்ளத் தூண்டிலிடும் அந்தப் பார்வை… அதற்குள் அப்படியே தொலைந்து விடத் துடித்த மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு தன் கண்களைக் கஷ்டப்பட்டுப் பிரித்தெடுத்தாள்.
அப்போதும் அவன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பது போல அவளுக்குத் தோன்றியது.
“ம்ம்… அம்மா… நீயும் அப்பாக்கு ஹாப்பி பத்தே சொல்லித்து, உம்மா குது…” பெரிய மனுஷியாய் ஆணையிட்டாள் அம்மு.
“அய்யய்யோ… இது என்ன, இப்படி ஒரு சோதனை…” என நினைத்துக் கொண்டவள், “அதெல்லாம் வேண்டாம் அம்மு… அம்மா என்ன சின்னக் குழந்தையா… முத்தமெல்லாம் கொடுக்கறதுக்கு… நான் விஷ் மட்டும் பண்ணிக்கறேன்…” என்றவள், “ஹாப்பி பர்த் டே கெளதம்…” என்றாள் புன்னகையுடன்.
“இல்லல்ல… உம்மா கொதுத்து தான் ஆகணும்… என் புஜ்ஜி மம்மி தானே…” என்றாள் அம்மு கொஞ்சலுடன்.
“என்ன அம்மு இது… அடம் பிடிச்சிட்டு இருக்கே… கோவிலுக்குப் போகணும்ல…” அதட்டினாள் நிலா.
“ம்ம்… அம்மு எங்கயும் வதல… நீங்களே போயித்து வாங்க…” என்றவள் கோவித்துக் கொண்டு திரும்பி நிற்க, “எதுக்கு அம்மு, இப்படி அடம் பிடிக்கற…” என்றவள் சட்டென்று திரும்பி தலையைக் குனிந்து சுய கழிவிரக்கத்தில் நீந்திக் கொண்டிருந்த அவனது கன்னத்தில் பட்டும் படாமலும் இதழ் பதித்தாள்.
அதை எதிர்ப்பார்த்திடாத அவன் விழிகள் அதிர்ச்சியுடன் விரிந்து கொண்டன. அதுவரை கலங்கி இருந்த அவனது விழிகளில் ஒரு கலவரம் தெரிந்தது. கூச்சத்துடன் நிலா எங்கேயோ பார்த்துக் கொண்டு நிற்க, ஓடி வந்து அவளைக் கட்டிக் கொண்டாள் அம்மு.
“அய்யா… என் புஜ்ஜூ மம்மி… அம்மு சொன்ன போல செய்துத்திங்க… அப்பாக் குத்தி, நீயும் எனக்குக் குதுத்த போல அம்மாக்கு முத்தா குது…” என்றாள் உற்சாகத்துடன்.
அதைக் கேட்டதும் வெகுவாய் தவித்துப் போனாள் நிலா. அவள், அவன் எதிர்பாராத நேரத்தில் அவனது சம்மதமில்லாமல் பட்டும் படாமலும் முத்தமிட்டு விலகினாலும் அவன் முத்தமிட்டு விடுவானோ என்று அவளது இதயம் படபடத்தது. அவளது நாடி நரம்புகளில் எல்லாம் ரத்தம் கட்டுப்பாடின்றி தாறுமாறாக ஓடுவதை அவளால் உணர முடிந்தது.
“அய்யோ… இது என்ன, இப்படியொரு அவஸ்தை… அவன் முத்தமிட்டு விடுவானா… வேண்டாம் என்று சொல்லவும் முடியாமல் என் உதடுகள் ஏன் இப்படி உள்நாக்கில் ஒட்டிக் கொண்டு வேலை நிறுத்தம் செய்கின்றன…” அவளது மனம் ஏதேதோ யோசித்துக் கொண்டிருக்க, அவன் நாற்காலியில் இருந்து எழுந்து கொள்வதை அவளால் உணர முடிந்தது. அம்மு அவர்களையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, அவளுக்கு அருகே வந்தவன், குனிந்திருந்த அவளது தலையை நிமிர்த்தினான்.
கலக்கத்துடன் ஏறிட்ட அவளது விழிகளோடு ஒரு நிமிடம் தன் விழியைக் கலக்க விட்டவன், அவளை விட்டு விலகி அம்முவிடம் வந்தான்.
“அம்மு… நீங்க சீக்கிரம் ரெடியாகுங்க… கோவிலுக்குப் போயிட்டு வரும்போது ஐஸ்க்ரீம் சாப்பிட்டு வரலாம்… அப்பா டிரஸ் மாத்திட்டு வந்திடறேன்…” என்றவன் அவள் பதிலை எதிர்பார்க்காமல் கவருடன் அறைக்குள் சென்று விட்டான்.

Advertisement