Advertisement

அவள் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவன், “என்ன…” என்று புருவத்தைக் கேள்வியாய் மேலே தூக்கினான். அவள் அப்போதும் அவனையே பார்த்திருக்க,
“புரியுது… இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்னு ஆச்சர்யமா பார்க்கற… அதானே… எங்களுக்கும் சிலதெல்லாம் தெரியும்…” என்று டீஷர்ட்டின் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டவன், அவனுக்கும் இரண்டு தோசைகளை சுட்டு எடுத்துக் கொண்டு பொடியை வைத்து சாப்பிட அமர்ந்தான்.
“என்ன… ரொட்டி அப்படியே இருக்கு… சாப்பிடலியா…”
“கசப்பா இருக்கு… வாய்க்குப் பிடிக்கலை…”
“அப்ப கிளம்பு… டாக்டர் கிட்ட போயிட்டு வருவம்…” ஏதோ குழந்தைகளை பயமுறுத்துவது போல அவன் சொல்ல, அவள் ரொட்டியை விழுங்கினாள்.
“சரி… நீ போயி ரெஸ்ட் எடு…” என்றவன், “அம்மு… மதியத்துக்கு நாம சமையல் பண்ணுவோமா…” என்றான் மகளிடம்.
“ஓ… நான் ரெதிப்பா…” சந்தோஷத்துடன் தலையாட்டினாள் அம்மு.
இன்று ஏனோ கெளதமின் செய்கைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாய் இருப்பதாய்த் தோன்றியது நிலாவுக்கு.
உடல் சற்று வேர்க்கத் தொடங்கி சூடு குறையத் தொடங்கி இருந்தது. மீண்டும் கட்டிலில் படுத்து கண்ணை மூடியவள், மாத்திரையின் உதவியால் தனை மறந்து உறக்கத் தொடங்க, நினைவுகள் மெல்ல அவளது கட்டுப்பாட்டை இழந்து எங்கெங்கோ செல்லத் தொடங்கியது.
இருக்கிறாய்… இல்லாமலும் இருக்கிறாய்…
ஆதலால் இருக்கிறேன்…
இல்லாமலும் இருக்கிறேன்…
எங்கும் உன் முக பிம்பம்…
நெஞ்சில் வந்து அது தங்கும்…
வெற்றிடத்தில் எனை விட்டு சென்றதேனடி…
சட்டென்று கண்ணுக்குள் மின்னித் தெளிந்த கௌதமின் முகத்தில் அவள் திடுக்கிட்டுக் கண் விழித்தாள். வேர்த்துக் கொட்டியதில் உடையெல்லாம் தெப்பலாய் நனைந்திருக்க, ஏக்கம் நிறைந்த விழிகளுடன் தனைப் பார்த்த கெளதமின் முகமே அவள் கண்ணுக்குள் நின்றது.
தலையை குலுக்கிக் கொண்டவள், “அச்சோ… எதற்கு இந்த மாதிரி ஒரு கனவு… அந்தக் கண்கள்… அவனது ஏக்கமான முகம், அய்யோ… அவன் முகத்தில் இருக்கும் தவிப்பை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லையே…” யோசனையுடன் எழுந்தவள் அறையை விட்டு வெளியே வரப் போக, உள்ளே நுழைந்த கௌதமின் தலையில் இடித்துக் கொண்டாள்.
“ஆ…” என்று அவள் அலற, “பார்த்து வரக் கூடாதா… எதுக்கு எழுந்து வந்த…” அதற்கும் அவளைக் கடிந்து கொண்டான்.
அவள் ஒன்றும் சொல்லாமல் அமைதியாய் இருக்க, “சரி… சாப்பிடலாம் வா, கூப்பிடத்தான் வந்தேன்…” ஒன்றும் சொல்லாமல் அமைதியாகவே வந்தவளை கேள்வியாய் பார்த்தான் அவன்.
“அம்மா… சாப்பிதலாமா… நானும் அப்பாக்கு ஹெல்ப் பண்ணினனே….” என்றாள் கிளாஸில் தண்ணி ஊற்றிக் கொண்டிருந்த அம்மு.
“ம்ம்… நீ சாப்பிட்டியா…”
“நம்ம எல்லாதும் ஒண்ணா சாப்பிதலாம்னு அப்பாகித்த நான்தான் சொன்னேன்… இன்னைக்கு அம்மு தனியா சாப்பிதப் போதா…”
“ம்ம்…” என்றவள், மேசையில் தயாராய் இருந்த சாதத்தைப் பரிமாறப் போக,
“நீ உக்கார்… நான் பரிமாறுகிறேன்…” என்றான் கெளதம். அவளது தெளிவில்லாத முகம், அவனுக்குள் ஒருவித குழப்பத்தைக் கொடுத்தது. குழைய வேக வைத்த சூடான சாதத்துடன், குருமிளகு ரசத்தை விட்டுப் பிசைந்து அம்முவுக்கு ஒரு ஸ்பூனும் போட்டுக் கொடுக்க, அவள் சந்தோஷமாய் சாப்பிடத் தொடங்கினாள். அவளுக்குப் பிடித்த முட்டைப் பொரியலை ஒரு குட்டிப் பிளேட்டில் வைத்துக் கொடுத்தான்.
“நிலா… என்ன யோசிச்சிட்டு இருக்கே., சாப்பிடு… முடியலைனா மிக்சியில் போட்டு சாதத்தை அடிச்சுத் தரவா…”
“வே…வேண்டாம்… நான் இப்படியே சாப்பிடறேன்… நீங்களும் சாப்பிடுங்க…” குனிந்து கொண்டே வந்தது பதில். அவனும் ஒரு தட்டில் சாதத்தைப் போட்டுக் கொண்டு அமர்ந்து சாப்பிடத் தொடங்கினான்.
நிலாவின் முக மாற்றம் அவனுக்குள் ஏதோ யோசனையைக் கொடுக்க அதற்குப் பிறகு அவனது கிண்டலும் கேலியும் காணாமல் போயிருந்தது.
சாப்பிட்டு முடித்து மாத்திரையை கையோடு விழுங்கி, பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அடுக்களைக்கு சென்ற நிலா தட்டைக் கழுகி வைக்க, அங்கு வந்தவன், அவன்  பார்த்துக் கொள்ளுவதாகக் கூறி விட்டான். ஹாலில் அம்முவிடம் சென்று அமர்ந்த நிலா, அவளுடன் சேர்ந்து டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் பார்க்கத் தொடங்கினாள்.
“ஹஹா… சூப்பர் ஜெர்ரி… தாம்க்கு அப்படிதான் வேணும்… இல்லம்மா…” ஜெர்ரியை விரட்டிவந்த டாமை, ஜெர்ரி ஒரு பொறியில் மாட்டிவிட, திருதிருவென பாவமாய் விழித்துக் கொண்டிருந்த டாமைக் கண்டு கை கொட்டிச் சிரித்த அம்மு, ஜெர்ரியைப் பாராட்டிக் கொண்டிருந்தாள்.
“ம்ம்… சரி, உக்கார்ந்து பாரு அம்மு… விழுந்திருவே…” என்றாள் நாற்காலியின் மீது நின்று கொண்டு கை தட்டிய அம்முவை. அவள் அமர்ந்து ஜெர்ரியில் கவனம் வைக்க, நிலாவின் பார்வையும் தொலைக்காட்சியில் நிலைத்தது.
எப்போதும் ஜெர்ரியை விரட்டிக் கொண்டே இருக்கும் டாம்… டாமின் ஒவ்வொரு செயலையும் தோற்கடிக்கும் ஜெர்ரி… இருவரும் போட்டி போட்டுக் கொண்டு ஒன்றை ஒன்று வீழ்த்திக் கொண்டாலும், டாம் இல்லாத ஜெர்ரியோ, ஜெர்ரி இல்லாத டாமோ எடுபடுவதில்லை… இருவரும் எலியும் பூனையுமாய் அடித்துக் கொண்டாலும் அவர்களை ஒன்றாகக் காண்பதே நமக்கு சந்தோசம்.
தொலைக்காட்சியில் கண்களைப் பதித்திருந்தாலும் எங்கேயோ அலைந்து கொண்டிருந்த நினைவுகளை “நிலா…” என்று வாசலில் இருந்து வந்த அழைப்பு நிகழ்வுக்கு கொண்டு வந்தது.
“வாங்கம்மா… உக்காருங்க…” உள்ளே நுழைந்த ருக்மணியுடன் மேனகாவும் இருந்தாள்.
“அய்… பாத்தி…” அவரிடம் ஓடி வந்தாள் அம்மு. “சாப்டியா அம்மு… பொம்மைப் படம் பாக்குறியா…”
“அச்சோ… இது பொம்மைப் பதம் இல்ல பாத்தி… கார்த்தூன்… உங்களுக்குத் தெரியாதா…” திருத்தினாள் அவள்.
“அப்படியா… சரி கண்ணு, ஏதோ ஒண்ணு… நீ சாப்டியா…”
“ஓ சாப்பித்தனே… நானும் அப்பாவும் தான் இன்னைக்கு வீத்துல எல்லா வேலையும் செய்தோம்… அம்மாவுக்கு காய்ச்சல்…” என்று சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள்.
“இப்போ காய்ச்சல் எப்படி இருக்கு நிலா… பரவால்லியா…”
“ம்ம்… பரவால்லமா, மாத்திரை போட்டதும் வேர்த்து காய்ச்சல் விட்டிருச்சு…”
“ம்ம்… கெளதம் தம்பி சொல்லுச்சு… நீ தூங்கிட்டு இருக்கேன்னு… அதான் தொந்தரவு பண்ண வேண்டாம்னு அப்ப வரலை… ரசம் வைக்கறது எப்படின்னு கேட்டுட்டு வந்துச்சு… நான் வச்சு தரேன்னு சொன்னதுக்கு கேக்கவும் இல்லை…”
“ம்ம்… அவர் ரசம் வச்சு குடுத்தார்மா… சாப்பிட்டேன்…” அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அடுக்களையில் இருந்து கையை டவலால் துடைத்துக் கொண்டு வெளியே வந்தான் கெளதம்.
“ம்ம்… பொண்டாட்டிக்கு உடம்பு முடியலைனா தானே பார்த்துக்கணும்னு நினைக்குற புருஷன் கிடைக்கறது பெரிய பாக்கியம் தான்… நீ பாக்கியம் பண்ணி இருக்க… அதான் உனக்கு இப்படியொரு புருஷன் கிடைச்சிருக்கான்…” கௌதமைப் புகழ்ந்து கொண்டே நிலாவை அவர் பாராட்ட, அதைப் பொறாமையாய் இரு கண்கள் பார்க்க நிலாவின் கண்கள் அவஸ்தையாய் கெளதமை உரசி மீண்டது. 
“மேனகாக்கா… வா, நாம கார்த்தூன் பாக்கலாம்…” அவளை இழுத்துக் கொண்டு தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்தாள் அம்மு. மேனகாவின் கண்கள் தொலைக்காட்சியிலும், அவர்கள் பேசுவதைக் கேட்பதிலுமாய் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
“மேனகாக்கு இன்னும் எத்தனை நாள் லீவ் இருக்கும்மா…”
“காலேஜ் திறக்க இன்னும் நாலு நாள் தான் இருக்கு… இன்னும் ரெண்டு நாள்ல இங்கிருந்து கோவை கிளம்பிருவா… இவ அம்மா இவளை அனுப்ப சொல்லி சொல்லிட்டுதான் இருக்கா… இவதான் இன்னும் ரெண்டு நாளுன்னு கெஞ்சிட்டு போகாம இருக்கா…”
“ஓ… அப்படியா… இன்னும் ஒரு வருஷம் தானே… அப்புறம் படிப்பு முடிஞ்சா எவ்ளோ நாள் வேணும்னாலும் பாட்டி வீட்டுல இருக்கலாமே…” என்றாள் நிலா.
“ம்ம்… என்ன தம்பி,நாளைக்கு எப்ப டியூட்டி…” என்றார் கெளதமிடம்.
“நாளைக்கு நைட் டியூட்டிமா… பகல்ல அம்முவைப் பார்த்துக்கணும்… இவளுக்கும் முடியலையே… அதான் பகல் டியூட்டி போட்டும் நைட்டுக்கு மாத்தி வாங்கிட்டேன்…”
“ம்ம்… எப்படித்தான் இப்படி நைட்டுல தூங்காம வேலை பாக்குறிங்களோ…” என்று அலுத்துக் கொண்டார் அவர்.
“ஹஹா… அதெல்லாம் பழகிருச்சும்மா…. இந்த உலகத்துல எதுவுமே நிலையானது இல்லை… எது நடந்தாலும் அதை ஏத்துக்கப் பழகிக்கிட்டா எல்லாமே ஈசிதான்… சரி, உங்களுக்கு ஜூஸ் கொண்டு வரட்டா…” என்றான் கெளதம்.
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் தம்பி… இப்பதான் சாப்பாடு சாப்பிட்டோம்…” மறுத்தார் அவர்.
“சரிம்மா… நீங்க பேசிட்டு இருங்க, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு…” என்ற கெளதம் தன் அறைக்கு சென்று எதையோ செய்து கொண்டிருந்தான். மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த ருக்மணி, “சரி நிலா… நாங்க கிளம்பறோம்… உடம்பைப் பார்த்துக்க… ஏதாவது உதவி வேணும்னா ஒரு குரல் கொடு…” என்றார்.
“ம்ம்… சரிம்மா…” என்றாள் நிலா சம்மதமாக.
“மேனகா, வா… வீட்டுக்கு போவோம்… வேலை இருக்கு…”
“பாத்தி… மேனகாக்கா இங்கயே இருக்கத்தும்… நாங்க கொஞ்ச நேதம் விளையாதித்து வதோம்… ப்ளீஸ்…” என்றாள் அம்மு.
“ஹஹா… உனக்கு எப்பவும் ஓராளு விளையாடறதுக்கு வேணும்… ஒரு தம்பிப் பாப்பாவைப் பெத்துக் குடுக்க சொல்லு உன் அம்மாகிட்ட…” என்று அவள் கன்னத்தைக் கிள்ளினார். அதைக் கேட்டதும், “அய்யய்யோ…. போகுற போக்குல ஒரு அணுகுண்டைத் தூக்கிப் போட்டுப் போறிங்களேம்மா… என் பொண்ணு இனி சும்மா இருக்க மாட்டாளே…” என்று யோசிக்கத் தொடங்கினாள் நிலா.
“சரி மேனகா… நீ அம்மு கூட விளையாடிட்டு இரு…” என்றுவிட்டு அவர் மட்டும் வீட்டுக்கு சென்றார். தன் பேத்தி மேனகா பெயருக்கு ஏற்றார் போல ஒரு வேலையை செய்து வைக்கப் போகிறாள் என்று தெரியாமல்.
“அக்கா… நாம கண்ணாமூச்சி விளையாதுவோமா…” என்றாள் அம்மு.
தொலைக்காட்சியில் ஒரு கண்ணும், அறைக்குள் இருந்த கெளதமின் மீது ஒரு கண்ணுமாய் அமர்ந்திருந்த மேனகா அம்முவின் கேள்விக்கு சந்தோஷமாய் தலையாட்டினாள்.
முகவரி தேடும் முகிலினம் தன்னில்
முகம் மறைக்கும் நிலவுப் பெண்ணே…
முன்பின் அறியா காட்டில் உன்
முகம் தேடி அலைகிறேன் நான்…
உறங்கும்போது விழித்திருந்து…
உணருகையில் மறைந்து போகிறாய்…
உன்னோடு என் உயிரையும் ஏன்
உறவாக எடுத்துச் சென்றாய்…
உன் முகத்தை யாரும் பார்த்தாலே
உள்ளுக்குள் உடைகிறேன் நான்…
உலகத்து உயிரிலெல்லாம்
உன் நிஜம் தேடி அலைகிறேன்…
உனை நினைத்தே எனை ஆள்கிறேன்…
வானத்தை விட்டு இறங்கி வா
வண்ணமிகு வெண்ணிலவே…
வசந்தகாலக் கதைகளை – சேகரிக்கும்
வண்ணத்துப் பூச்சியாய் நான்…

Advertisement