Advertisement

நிலா – 6
வானவெளி எங்கும் திட்டுத் திட்டாய் குழப்பத்துடன் நிறைந்திருந்த மேகங்களை இரவு முழுதும் மழையாய் கொட்டித் தீர்த்து மெதுவாய் தெளியத் தொடங்கியது வானம். சாலையில் அங்கங்கே தேங்கி இருந்த நீரை இருபுறமும் வாரி இறைத்துக் கொண்டு விரையத் தொடங்கி இருந்தன இருசக்கர வாகனங்கள்.
மரம், செடி, கொடிகள் எல்லாம் மழையில் குளித்து அழுக்காடையைக் களைந்து புத்துணர்வுடன் நின்றிருந்தன. மரங்களின் இலைகளில் இருந்து சொட்டிக் கொண்டிருந்த மழைநீர் முத்துக்கள், பலரின் மனங்களில் பல கவிதை முத்துக்களை பிரசவித்துக் கொண்டிருந்தன.
மழையின் குளிர்மையில், போர்வையை தலை வரை இழுத்துப் போர்த்துக் கொண்டு சுகமாய் படுத்திருந்த கெளதம் மெல்லக் கண்ணைத் திறந்தான். அன்று ஞாயிற்றுக் கிழமை. அதன் விடுமுறை மயக்கம் அவனை அவசரப் படுத்தாமல் இருந்ததால் மெதுவாய் எழுந்தான்.
சமயம் காலை எட்டு மணி ஆகிவிட்டதாய் கடிகாரத்தின் முள் கடமையோடு காட்டிக் கொண்டிருந்தது.
“அட… எட்டு மணி வரைக்குமா படுத்திருக்கேன்… என்ன இது, வீடே சைலண்டா இருக்கு… அம்மு எழுந்திருக்கலையோ… மழை பெய்ததுக்கு நல்ல தூக்கம் போலருக்கு…” யோசித்துக் கொண்டே அறையை விட்டு வெளியே வந்தவன், வாசல் கதவு இன்னும் திறக்கப்படாமல் இருக்கவே திகைத்தான்.
“நிலா எங்கே காணோம்… இன்னுமா எழுந்திருக்கலை… அதிசயமா இருக்கு… இடியே விழுந்தாலும் காலைல நேரமா எழுந்திருச்சிருவாளே…”
பூட்டியிருந்த வாசல் கதவைத் திறந்து, மஞ்சள் பையில் தொங்கிக் கொண்டிருந்த பாலையும், தினசரியையும் எடுத்துக் கொண்டு உள்ளே வந்தான்.
அப்போது படுக்கை அறைக் கதவைத் திறந்து கொண்டு கண்ணைக் கசக்கிக் கொண்டே வெளியே வந்தாள் அம்மு.
மகளைக் கண்டதும் சட்டென்று முகத்தில் புன்னகை பூக்க, “குட் மார்னிங் அம்மு செல்லம்… எழுந்தாச்சா…” என்றவனின் பார்வை மகளைக் கடந்து பின்னில் ஓடியது.
“கும்மாயிங் அப்பா… அம்மா தூங்கித்தே இதுக்கா… நான் கூப்பித்தும் எழுந்துக்கவே இல்ல… எனக்கு உச்சா போகணும்…”
“உச்சா போகணுமா… சரி, வா… அப்பா கூட்டி போறேன்…” மகளின் கையைப் பற்றியவன், அறைக்குள் தலை வரை போர்வையை இழுத்து மூடிப் படுத்திருந்த நிலாவை எட்டிப் பார்த்துக் கொண்டே குழப்பத்துடன் சென்றான்.
“என்னாச்சு இவளுக்கு… உடம்புக்கு ஏதும் சரியில்லையா… இப்படித் தூங்க மாட்டாளே… ஞாயித்துக் கிழமை உற்சாகமா எழுந்து பார்த்துப் பார்த்து சமையல் செய்துட்டு இருப்பாளே…” யோசித்துக் கொண்டே அம்முவைப் பல் தேய்க்க வைத்து கூட்டி வந்தான்.
“நிலா, நிலா… எழுந்திரு…”
காய்ச்சலின் மயக்கத்தில் படுத்திருந்தவளுக்கு, அவனது குரல் எங்கோ பாதாளத்துக்குள் இருந்து மெதுவாய் ஒலிப்பது போல் கேட்டது. கண்ணைத் திறக்க முயன்றவளின், கண் இமைகளின் மீது யாரோ  பாறாங்கல்லை வைத்து அழுத்துவது போல கனத்து வலித்தது.
தலைக்குள் இருந்து விண்விண்ணென்று சொல்ல முடியாத ஒரு வலி உருவாகி, தலை முழுதும் பரவியது.
அழைத்தும் எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் கிள்ளிப் போட்ட பூ, வாடி உலர்ந்து கிடப்பதைப் போல் உணர்வில்லாமல், அசையாமல் படுத்திருந்தவளின் போர்வையை விலக்கியவன் அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான்.
அனலில் கை வைத்தது போல், கை தகிக்க சட்டென்று கையை இழுத்துக் கொண்டான்.
“அய்யய்யோ… அனலாக் கொதிக்குதே… நேத்து மழைல நனைஞ்சு காய்ச்சலைக் கொண்டு வந்துட்டாளே… இப்படி உணர்வில்லாமக் கிடக்குறா…” மனசுக்குள் சட்டென்று ஒரு வலி பதட்டத்துடன் பரவியது.
அவனுக்கு அருகில் நின்று அவன் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்த அம்முவும் அதே போல நிலாவின் நெற்றியில் கை வைத்துத் தொட்டுப் பார்த்தாள்.
“அச்சோ… அம்மாக்கு காய்ச்சலாப்பா…” கையை உதறிக் கொண்டே கேட்டாள்.
“ம்ம்… ஆமாண்டா செல்லம்… நீ அம்மா கிட்டயே இரு… நான் இதோ வந்திடறேன்…” என்றவன், வேகமாய் மேசையின் மீதிருந்த தண்ணீர் ஜக்கை எடுத்து வந்தான்.
சிறிது தண்ணீரைக் கையில் எடுத்துக் கொண்டு அவள் முகத்தில் தெளித்தான். சில்லென்ற தண்ணீர் முகத்தில் விழுந்ததும், அவள் சட்டென்று முகத்தை சுளித்து கண்களை இறுக்கிக் கொண்டாள். ஒரு டவலை தண்ணீரில் நனைத்து அவளது முகம், கண்களைத் துடைத்து விட்டான்.
குளிர்ந்த நீர் அவள் முகத்தில் பட்டு எங்கேயோ நிலையின்றி அலைந்து கொண்டிருந்த நினைவுகளை பூவுலகத்திற்கு மீட்டு வந்தது. கஷ்டப்பட்டுக் கண்களைத் திறந்தவளைக் காண வருத்தமாய் இருந்தது கௌதமிற்கு.
“நிலா… கண்ணைத் திறந்து பாரு…”  மெதுவாய்க் கண்ணைத் திறந்தவளின் முன்னால் கவலையோடு நின்று கொண்டிருந்தவனைக் கண்டதும் அவளுக்கு மனதைப் பிசைந்தது.
“ச…சாரிங்க… நல்லாத் தூங்கிட்டேன்…” எழுந்து கொள்ளப் போனவளைத் தடுத்தவன், “இல்ல… நீ படு…. நான் மாத்திரை எடுத்திட்டு வரேன்…” அறையிலிருந்து வெளியேறினான்.
“அம்மா… உனக்கு என்னாச்சும்மா….” தன் குட்டிக் கண்களில் வருத்தத்தை சுமந்து நின்ற மகளைக் கண்டதும் அவள் முகம் சற்று மலர்ந்தது.
“ஒண்ணும் இல்லடா அம்மு… கொஞ்சம் உடம்புக்கு முடியலை… நீ பல்லு தேய்ச்சி பால் குடிச்சியா…”
“பல்லு தேச்சித்தேன்… பால் இன்னும் குதிக்கலை…”
“ம்ம்… அம்மா வந்து பால் கலந்து தரவா…” சோர்வுடன் கேட்டாள்.
“வேந்தாம்மா… அப்பா ததுவார்… நீ பதுத்துக்க….” பரிவோடு நிலாவின் நெற்றியில் கை வைத்து வருடிக் கொடுத்தாள் அம்மு.
கெளதம் ஒரு கையில் மாத்திரையும் மறு கையில் வெந்நீருமாய் வந்தான்.
“நிலா… மெதுவா எழுந்துக்க முடியுமா… மாத்திரை போட்டுட்டுப் படுத்துக்கோ…”
“ம்ம்…” என்றவள் சோர்வுடன் எழுந்து கொள்ள முயல, அவளது தோளில் கை கொடுத்து மெதுவே எழுப்பி இருத்தினான் கெளதம்.
“இந்தா… இந்த காய்ச்சல் மாத்திரையை போட்டுக்கோ… டாக்டர்கிட்டே போகலாம்…”
“வே… வேண்டாம்… எனக்கு மாத்திரையே போதும்… சரியாகிடும்…” என்றவள் அவன் கையில் இருந்த மாத்திரையை வாங்கி வேகமாய் விழுங்கினாள்.
“ரொம்ப காய்ச்சல் இருக்கு… டாக்டரைப் பார்த்து ஒரு ஊசி போட்டுட்டா சீக்கிரம் விட்டுடும்… போயிட்டு வந்திடலாம்…” என்றான் அவன் மீண்டும்.
“இ…இல்ல… வேண்டாம்… மாத்திரையே போதும்… நான் வரலை…”
“ஏன் வரமாட்ட… மழைல நனைஞ்சு காய்ச்சல் வர வைக்கத் தெரியுதுல்ல… காய்ச்சல் வந்தா, அப்புறம் டாக்டரைப் பார்க்காம என்ன பண்ணறது…” அவனது குரல் சற்று உயர்ந்தது.
“ஏம்மா… தாக்தர் ஊசி போதுவாங்கன்னு பயமா இதுக்கா…” என்றாள் அம்மு.
அவளைப் பரிதாபமாய்ப் பார்த்தவள், “ம்ம்…” என்று சோகமாய் தலையாட்டினாள்.
“அச்சோ… அம்மா பாவம்பா… அம்மாக்கும் ஊசின்னா பயம் போலதுக்கு… தாக்தர் வேந்தாம்… அவளை ஆதரித்து அம்மு கூற, சட்டென்று சிரித்துவிட்டான் கெளதம்.
“ஹஹஹா… ரெண்டு பெண் புலிகளுக்கும் ஊசின்னா பயமா…” என்றவன், “சரி… மாத்திரைல சரியாகலைன்னா டாக்டர் கிட்டே போகலாம்…” மீண்டும் அம்முவைப் பார்த்துவிட்டு அவனைப் பரிதாபமாய்ப் பார்த்தாள் நிலா.
“சரி… ஊசி வேண்டாம்… மருந்து கொடுங்கன்னு சொல்லிக்கலாம்… பயப்படாதே…” என்றான் கெளதம் சமாதானமாக. அதைக் கேட்டதும் தான் நிலாவின் முகம் சற்றுத் தெளிந்தது.
“ம்ம்… தேங்க்ஸ்…” என்று கூச்சத்துடன் தலையைக் குனிந்து கொண்டவள், மெதுவாய் போர்வையை விலக்கிவிட்டு கட்டிலில் இருந்து இறங்கப் போனாள்.
“எங்கே எந்திரிக்கறே… நீ எதுவும் பண்ண வேண்டாம்… எல்லாம் நான் பார்த்துக்கறேன்… நீ ரெஸ்ட் எடு…” உத்தரவாய் வந்தது கௌதமின் குரல்.
“அது…வந்து… பாத்ரூம் போகணும்…” தயங்கிக் கொண்டே அவள் கூறியதும் அசடு வழிய முகத்தைத் துடைத்துக் கொண்டான் அவன்.
அதைக் காட்டிக் கொள்ளாமல் சமாளித்து தலையைக் கோதிக் கொண்டே, “ம்ம்… போயிட்டு வா…” என்றவன், “அம்மு… வா… அப்பா உனக்கு பால் கலந்து தரேன்…” என்று மகளை அழைத்துச் சென்றான்.
“ம்ம்… சதிப்பா…” தந்தையுடன் சென்றாள் அவள்.
கெளதம் அசடு வழிந்ததையும், அதை சமாளித்துக் கொண்டதையும் நினைத்ததும் அவள் உதடுகளில் சிறு புன்னகை ஒட்டிக் கொள்ள, தலைவலி எங்கோ பறந்து போயிருந்தது.
சோர்வுடன் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு அவள் ஹாலுக்கு வர, சூடான காப்பியுடன் வந்தான் கெளதம்.
“இந்தா… காப்பி… பிரெட் எடுத்திட்டு வரேன்…. காப்பில தொட்டு சாப்பிடு… வெறும் வயித்தோட இருந்தா மாத்திரை வேலை செய்யாது… அப்புறம் டாக்டர் தான்…” என்றான் கிண்டலாக.
அவனது கிண்டல் அவளுக்குப் புதியதாய் இருந்தாலும், மனதை மயிலிறகால் வருடுவது போல ஒரு சுகமாகவும் இருந்தது. அமைதியாய் அவன் சொன்னதைக் கேட்கும் குழந்தை போல மேசையில் சென்று அமர்ந்தாள். கெளதம் அடுக்களையில் ஏதோ உருட்டிக் கொண்டிருந்தான்.
ஒரு குட்டி பொம்மையை வைத்துக் கொண்டு மேசையில் அமர்ந்திருந்த அம்மு, “இப்போ காய்ச்சல் சரியாச்சா அம்மா…” என்றாள் தலையை ஆட்டிக் கொண்டே.
“ம்ம்… கொஞ்சம் பரவாயில்லை… நீ பால் குடிச்சியா…”
“ம்ஹூம்… அப்பா தோசை சாப்பித்து பால் குதிக்கலாம்னு சொன்னாங்க…”
அதற்குள் கெளதம் ஒரு தட்டில் தோசையை வைத்து அதன் மீது ஜாமில் கண், வாய் எல்லாம் வரைந்து எடுத்துக் கொண்டு வந்தான். மறு கையில் ரொட்டியும் இருந்தது.
“அய்யா… எனக்கு பொம்மை தோசை…” என்று சந்தோஷத்துடன் குதித்தாள் அம்மு.
“இது என் அம்முக்குட்டிக்கு… இது அம்முவோட அம்மாக்குட்டிக்கு…” என்று கூறிக் கொண்டே அவர்களுக்கு ஒவ்வொரு தட்டையும் வைத்தான். அவனது செயல் ஒவ்வொன்றும் வியப்பாய் இருக்க அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் நிலா.

Advertisement