Advertisement

“அச்சோ… ரொம்பவும் இருட்டிட்டு வருதே, இன்னும் பஸ்ஸை வேற காணோம்… ஆட்டோவும் ஏதும் வர மாட்டேங்குது… அம்மு எழுந்திருச்சு என்னைக் கேப்பாளே… என்ன பண்ணுறது…” மழைக்கு நிகராய் அவளது மனதும் அரற்றிக் கொண்டிருந்தது.
கௌதமிற்கு விவரம் சொல்லிவிடலாம் என நினைத்து, கைப்பையில் இருந்த அலைபேசியை எடுத்தவள், அது உயிரற்றுக் கிடப்பதைக் கண்டு திகைத்தாள்.
மழையின் குளிர்ச்சியில் தன்னை மறந்து நன்றாய் உறங்கிக் கொண்டிருந்த கெளதம், அம்முவின் குரலில் கண் விழித்தான்.
“அப்பா… எழுந்திதுங்க… அம்மா எங்கே காணும்… வீதேல்லாம் இருத்தா இதுக்கு… அம்முக்கு பயமா இதுக்கு…” என்றாள் அழுதிடும் குரலில். அவள் கட்டிலில் இருந்து இறங்கி வீடு முழுவதும் தேடிவிட்டு நிலாவைக் காணாமல் அழுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தாள்.
“அம்மு, அப்பா தான் இருக்கேன்ல… அழக்கூடாது… அம்மா இப்ப வந்திடுவா…” என்றவன் அவசரமாய் எழுந்து சுவரில் இருந்த சுவிட்சைத் தேய்த்து வீட்டை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தான்.
“என்ன இது… நிலா இன்னுமா வரலை, வெளிய இவ்ளோ இருட்டா இருக்கு… நான் ரொம்ப நேரம் தூங்கிட்டேனோ…” பதட்டத்துடன் எழுந்தவன், சுவரில் கடமையாற்றிக் கொண்டிருந்த கடிகாரத்தில் கண்ணைப் பதிக்க, நேரம் ஆறு மணியை நெருங்கிக் கொண்டிருப்பதாய் காட்டியது.
“ஆறாகப் போகுது… அதுக்கே இவ்ளோ இருட்டிடுச்சா… மழை வேற நிக்காமப் பெய்யுது… நிலா என்ன… இன்னும் காணோம்…” என்று நினைத்தவன், அலைபேசியை எடுத்து அவளுக்கு அழைக்க, அது அணைத்து வைக்கப் பட்டிருப்பதாய்  கூறியது.
பய ஊசி குத்தியது போல அவன் உடலெங்கும் ஒரு அதிர்வு அலை, பயத்துடன் பாய ஒன்றும் புரியாமல் குழம்பினான்.
“அப்பா… அம்மா எங்கே போனாங்க… எனக்கு அம்மா வேணும்…” அம்மு மெதுவாய் அழத் தொடங்கினாள்.
“இங்க பாருடா செல்லம்…. அம்மா கடைக்குப் போயிருக்கா… இப்ப வந்திருவா… உனக்கு ஜெம்ஸ் வாங்கிட்டு வருவா… சரியா… அழாம குட் கேர்ளா இருக்கணும்… அப்பா உனக்கு பால் எடுத்திட்டு வரேன்…” என்று அவளையும் அழைத்துக் கொண்டு அடுக்களைக்கு சென்றான்.
அம்முவிற்கு பாலை சூடாக்கி கலந்து கொடுத்துவிட்டு, தன் மனம் துடிப்பதை அடக்கிக் கொண்டு, மீண்டும் நிலாவின் அலைபேசிக்கு அழைத்துப் பார்த்தான்.
“அம்மா ஏன் இன்னும் வதலை… அம்மாவை தித்தினிங்களா… சந்த போத்திங்களா…” தன் முகத்தை ஆராயும் மகளிடம் என்ன சொல்லுவதென்று புரியாமல் குழம்பியவன்,
“இல்லடாம்மா… அப்பா சண்டை போடலை… நீ சீக்கிரம் பால் குடிச்சிட்டு பாட்டி வீட்டுல இருக்கியா… அப்பா போயி அம்மாவைப் பார்த்து கூட்டிட்டு வரேன்…”
“நானும் உன்னோத வதேன்பா… ப்ளீஸ்… அம்மாவப் பாக்கணும்…” தலையை சாய்த்துக்கொண்டு கேட்டாள் அம்மு.
“இல்லடா… மழை நல்லாப் பெய்யுது… நீ வந்தா உடம்புக்கு முடியாமப் போயிரும்… அப்பா சீக்கிரம் போயிட்டு வந்திடறேன்…” என்றவன் வேகமாய் ரெயின்கோட்டை எடுத்து அணிந்து கொண்டான்.
“இவ்ளோ நேரம் இவ எங்கதான் போனா… குடை தான் கையில் இருக்கே… வரதுக்கென்ன… என்ன வேணும்னு சொன்னா நான் வாங்கிட்டு வர மாட்டேனா… உடம்பெல்லாம் திமிரு… அவளுக்கு தோணின போல தான் செய்யணும்… இப்போ நான் எங்கே போயி இவளைத் தேடுவேன்… கடவுளே… எதுவும் பிரச்சனை இல்லாம இருக்கணுமே…” மனதுக்குள் அவளைத் திட்டியும், ஆபத்து எதுவும் இருக்கக் கூடாது என்றும் யோசித்துக் கொண்டு இருந்தது மனது.
அம்முவின் தலையில் ஒரு தொப்பியை வைத்து அவளை ருக்மணி அம்மாவிடம் விட்டுவிட்டு பைக்கை எடுத்தான்.
கருப்பு நிற சாலைகள், கழுகிவிட்டது போல சோடியம் விளக்கு வெளிச்சத்தில் பளிச்சிட்டன. சீறிப் பாய்ந்த பைக், இருபுறமும் தேங்கி இருந்த தண்ணீரைக் கிழித்துக் கொண்டு வேகமாய் சென்றது.
அவர்களின் சாலையைக் கடந்து திரும்பினதும் தான் பேருந்து நிறுத்தம்.
பைக்கை வளைவில் திருப்பப் போனவன், புடவைத் தலைப்பை உடலைச் சுற்றிப் போர்த்திக் கொண்டு, கை நிறையப் பைகளை எடுத்துக் கொண்டு வேக வேகமாய் நடந்து வரும் நிலாவைக் கண்டான்.
கொட்டும் மழையில், இருண்ட மாலையில், கொண்டு சென்ற குடையும் இல்லாமல் தலையில் நீர் சொட்ட நடந்து வந்து கொண்டிருந்தவளைக் கண்டதும் அவனுக்கு கோபம் தலைக்கேறியது.
பைக்கை வேகமாய் அவளிடம் கொண்டு சென்று நிறுத்தி பிரேக் பிடிக்க, அது “கிரீச்…” என்று அவஸ்தையாய் சத்தம் எழுப்பியது.
திடுக்கிட்டுத் திரும்பிய நிலாவுக்கு கெளதமைக் கண்டதும், சட்டென்று ஒரு நிம்மதி பரவியது. ஆனால் அந்த மழையிலும், தணியாமல் வெப்பமாய் ஜொலித்த கௌதமின் முகத்தைக் கண்டு அவனது கோபத்தைப் புரிந்து கொண்டாள்.
“அ…து…வந்து… நான்…” என்று எதோ சொல்ல வந்தவளைக் கை காட்டித் தடுத்தவன், “வண்டில ஏறு…” என்றான்.
அவனது கரகரத்த குரலில் மிளகாயின் நெடி தூக்கலாய் தோன்றியது நிலாவுக்கு.
“அச்சச்சோ… சும்மாவே சாமியாடுவான்… இப்போ அவன் எடுத்து கொடுத்த குடையையும் தானமாக் கொடுத்திட்டு மழையில் நனைஞ்சிட்டு வந்திருக்கேனே… ம்ம்… இன்னைக்கு என்ன ஆட்டம் போடப் போறானோ… நான் சிக்கினேன்…” மனதுக்குள் யோசனையுடனே அவன் பின்னில் ஏறி அமர்ந்தாள் நிலா.
மனதின் கொதிப்பு, அவனது கைகள் பைக்கை முறுக்கியதிலேயே தெரிய, மழை நீரைக் கிழித்துக் கொண்டு பாய்ந்தது கௌதமின் பைக்.
பின்னால் பயத்துடன் அமர்ந்து கொண்டிருந்தாள் நிலா.
வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தியவன், அவள் இறங்கியதும் பைக்கை ஸ்டாண்டிட்டு விட்டு, கோபத்துடன் வீட்டைத் திறந்து உள்ளே சென்றான்.
பைக் சத்தத்தில் ருக்மணி அம்மா, மேனகாவுடன் வெளியே வந்தாள் அம்மு.
“என்னம்மா நிலா… இப்படிதான் மழைல வெளியே போயி மாட்டிக்குவியா… பாவம் அந்தத் தம்பி எப்படித் துடிச்சுப் போயிருச்சு… என்ன, ஏதுன்னு ஒரு போன் பண்ணி சொல்லக் கூடவா முடியாது… உன்னைக் காணாம உன் வீட்டுக் காரரும், மகளும் ரொம்பதான் கலங்கிட்டாங்க… காலமும் கெட்டுக் கிடக்கு… எப்படி பயப்படாம இருக்கறது சொல்லு…” என்றார் ருக்மணி.
அவள் பதில் சொல்வதற்குள் ஓடி வந்து அன்னையைக் கட்டிக் கொண்டாள் அம்மு.
“அம்மா… என்ன வித்துத்து எங்கமா போனிங்க… நானும் அப்பாவும் எப்பதி பயந்து போயித்தோம் தெரியுமா… அம்முவுக்கு அழுகையா வந்துச்சு… பாவம், அப்பா… உன்னைக் காணோம்னு தேதி வந்தாங்க…” தலையை ஆட்டிக் கொண்டு வருத்தத்துடன் கூறிய மகளை வாரி அணைத்துக் கொண்டாள் நிலா.
“இல்லடா செல்லம்… ஒண்ணும் இல்ல… அதான் அம்மா  வந்துட்டேன்ல…” மகளை சமாதனப் படுத்திவிட்டு ருக்மணியிடம் திரும்பினாள்.
“ரொம்ப நேரம் நின்னுட்டு இருந்தும் பஸ் எதுவுமே வரலை மா… அவருக்கு கூப்பிட நினைச்சு மொபைலைப் பார்த்தா அணைஞ்சு கிடந்துச்சு… அதான் லேட்டாயிடுச்சு…” அவருக்கு விளக்கம் கொடுத்தாள்.
“ஓ… உன் கையில் குடை இருக்குன்னு கெளதம் தம்பி சொல்லிச்சே… அப்புறம் எதுக்கு இப்படி நனைஞ்சிட்டு வந்திருக்கே… சரி… முதல்ல போயி தலையைத் துவட்டு…” என்று அவர்களை அனுப்பி வைத்தார்.
நனைந்து தேகத்துடன் ஒட்டிப் பிடித்த சேலையைப் பிழிந்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தாள் நிலா. அதற்குள் அம்மு டவலைக் கொண்டு வர,, வாங்கித் துவட்டிக் கொண்டே ஹாலில் அமர்ந்திருந்த கௌதமை ஏறிட்டாள்.
முகத்தில் சிறிது கடுகைப் போட்டால் மணலாய் சிதறிப் போய்விடும் போல உர்ரென்ற முகத்துடன், அமர்ந்திருந்தான்.
அவனது முகத்தைக் காணவே நிலாவுக்கு பயமாய் இருந்தது. அவனும் அம்முவும், அவளைக் காணாமல் ரொம்பவே பயந்து போனது தெரிந்ததும் என்ன சமாதானம் சொல்லுவது எனத் தெரியாமல் முழித்தாள் அவள். கையில் இருந்த பைகளைக் கொண்டு சென்று அடுக்களையில் வைத்துவிட்டு அவனிடம் வந்தாள்.
“அது வந்து நான்…” என்று தொடங்கியவளை உறுத்து நோக்கி கையால் தடுத்தவன்,
“என்ன… காரணம் சொல்லப் போறியா… தேவையில்லை… உனக்கு ஏதாவது ஆகியிருந்தா நான் என்ன சொல்ல முடியும்… உன்னை நம்பி வந்தவளை இப்படி விட்டுட்டியேனு உலகம் என்னைத் தானே பழி சொல்லும்…”
“ப்ளீஸ்… நான் சொல்லுறதைக் கொஞ்சம் கேளுங்க… என் மொபைல் ஆப் ஆயிடுச்சு… பஸ் வேற ரொம்ப நேரமா வரலை, அதான் லேட் ஆகிடுச்சு…”
“பஸ் தானே வரலை… கொஞ்சம் நடந்தா பக்கத்துலயே ஆட்டோ ஸ்டேண்ட் இருக்குல்ல… ஒரு ஆட்டோ பிடிச்சு வர வேண்டியது தானே… இல்லன்னா ஒரு பூத்ல போயி எனக்கு ஒரு போனைப் பண்ணி சொல்ல வேண்டியது தானே… எல்லாம் திமிரு….. இவன்கிட்டே எதுக்கு சொல்லணும்கிற அகம்பாவம்…”
“அச்சோ, அப்படி எல்லாம் இல்லை… எங்கிட்ட குடை இல்லை… அதான் என்ன பண்ணுறதுன்னு தெரியாம… பஸ் ஸ்டாப்புலயே  நிக்க வேண்டியதாப் போயிருச்சு…”
“சும்மா புளுகாதே… நான்தானே நீ போகும் போது குடையை எடுத்துக் கொடுத்தேன்… இவன் கொடுத்த குடை எதுக்குனு எங்காவது தூக்கி வீசிட்டுப் போயிட்டியா…” ஆத்திரத்துடன் வந்த அவனது வார்த்தைகள் அவளது மென்மையான மனதை குத்திக் கிழிப்பதை உணராமல் பேசிக் கொண்டிருந்தான்.
கண்களில் கண்ணீர் முத்துக்கள் உருண்டு நிற்க, தலையைக் குனிந்து கொண்டவள், “சுதா குடை இல்லாம நின்னுட்டு இருந்தா… அவளை இன்னைக்கு பொண்ணு பார்க்க வராங்க… அதான் என் குடையைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்…” என்றவள் அவனது பதிலுக்காய் காத்திராமல் குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
யாருமில்லா கானகத்தில்
யாரை எதிர்பார்த்து நீ காய்கிறாயோ…
நான் தேய்கிறேனோ…
இமைக்கின்ற நொடியும் வீணாகும்
என்னருகில் நீ இருந்தால்…
இருக்கின்ற நொடியே வீணென்பேன்
எனைவிட்டு நீ நீங்கினால்…
இரவுக்கும் விடியல் உண்டு…
உன் நினைவுக்கு விடியல் உண்டா…
உனைக் காணாத உள்ளம்
உலைக்களமாய்க் கொதிக்கிறது…
உனக்காக மட்டுமே துடித்திருக்கும்
இதயத்தை எதற்காக வலிக்க வைக்கிறாய்…
கனவில் வந்த காதல் தேவனே…
கண்ணால் காதல் விதையிட்டவனே…
எப்பொழுது உன் அன்பால் நீரூற்றி
நேசப் பயிரை வளர்த்திடுவாய்…
என் செல்லச் சிணுங்களில் பூத்திட்ட
வெட்கப் பூக்கள் தான் – எனைச்
சுற்றி நின்று கண் சிமிட்டும்
வெள்ளி நட்சத்திரக் கூட்டமோ…
சிணுங்காதே…
சிதறிப் போவது பூக்கள் மட்டுமல்ல…
என் போன்ற
பூஞ்சை உள்ளங்களும் தான்…

Advertisement