Advertisement

நிலா – 5
கலண்டரில் மீண்டும் சில தினங்கள் கிழிக்கப் பட்டிருக்க, மேலும் சில நாட்கள் நகர்ந்திருந்தது. மழைக்காலம் தொடங்கி விட்டதால் வானில் அவ்வப்போது சூரியனை மறைத்துக் கொண்டு மேகங்கள் உலா வரத் தொடங்கி இருந்தன. தங்களுக்குள் ஆனந்தமாய்ப் பேசி சிரித்துக் கொண்டு மழையைப் புன்னகையாய்த் தூவிச் சென்றன. மேகங்களின் புன்னகைத் தூறல் மனிதர்களுக்கும் வெயிலின் சூடைத் தணித்து முகத்தில் புன்னகையை வரவழைத்திருந்தது.
மதிய உணவு முடிந்து கௌதமின் அருகில் அம்மு உறங்கிக் கொண்டிருக்க, அவன் கையில் ஏதோ புத்தகம் இருந்தது. அதில் பார்வையைப் பதிய வைத்திருந்தவன், அறை வாசலில் கேட்ட நிலாவின் கனைப்பில் எழுந்து அமர்ந்தான்.
“ஹூக்கும்……” மெதுவாய்த் தொண்டையைக் கனைத்தாள்.
“ஹூம்… என்ன…” கேள்வியாய் ஏறிட்டான் கெளதம்.
“கொஞ்சம் காய்கறி எல்லாம் வாங்கணும்… நான் மார்க்கட் போயிட்டு வந்திடறேன்…”
“நான் காலைல வரும்போது வாங்கிட்டு வந்தா போதாதா…” என்றான் எங்கோ பார்த்துக் கொண்டு.
“வந்து… எனக்கு கொஞ்சம் திங்க்ஸ் எல்லாம் வாங்கணும்… நானே போயிட்டு வந்திடறேன்…” என்றாள் அவள் தலையைக் குனிந்து கொண்டே.
அவளுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காய் அவ்வப்போது அவள் வெளியே செல்லும் வழக்கம் இருந்ததால் அவன் புரிந்து கொண்டான்.
“ம்ம்… சரி…” என்றவன் எழுந்து அவன் சட்டையில் இருந்து பணத்தை எடுத்து அவளிடம் நீட்டினான்.
அதை வாங்கிக் கொண்டவள், “அம்மு எழுந்தா, பால் மட்டும் சூடு பண்ணிக் கொடுக்கணும்… நான் சீக்கிரம் வந்திடறேன்… கதவை சாத்திட்டு வந்துக்கங்க…” என்றுவிட்டு கையில் ஒரு பையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
“கொஞ்சம் நில்லு…” அவள் பின்னால் வந்தவனின் குரலில் சட்டென்று நின்றவள் திரும்பினாள்.
கேள்வியாய் ஏறிட்டவளை அதட்டும் பார்வை பார்த்தவன், “லூசு மாதிரி அப்படியே கிளம்பறே… மழை வர மாதிரி இருக்கு… குடை எடுத்திட்டுப் போகணும்னு தெரியாதா…” கண்டிப்புடன் வெளியே வந்து விழுந்தாலும் அந்த வார்த்தையில் ஒளிந்திருந்த அவள் மீதான அக்கறை அவளுக்குள் எங்கேயோ குளிர வைத்தது.
அவளது உணர்ச்சிகள் தொலைந்த முகத்திலும், அந்த வார்த்தை புன்னகையை எட்டிப் பார்க்க வைத்தது. செல்பில் இருந்த குடையை எடுத்து அவளிடம் நீட்டியவன், “பத்திரமா போயிட்டு வா…” என்றான்.
அவனது வார்த்தைகளை நம்ப முடியாமல் ஒரு நிமிடம் திகைப்புடன் நின்றவள், குடையை வாங்கிக் கொண்டாள்.
“பத்திரமாய் போ…” என்று அவன் சொன்ன வார்த்தைகளே அவள் காதில் மீண்டும் ஒலித்தது. வாசலில் இறங்கியவள், கதவின் அருகே நின்றிருந்தவனை மீண்டும் திரும்பிப் பார்த்து தலையசைத்தாள்.
அவளது திகைப்பான முகம் கௌதமிற்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் உணர்ச்சியைத் துடைத்த முகத்துடன் கதவைத் தாளிட்டு விட்டு கட்டிலில் சென்று விழுந்தான்.
அம்மு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவளது முன் மண்டையிலிருந்த முடிக் கற்றைகள் அவள் முகத்தில் விழுந்து கண்ணை மறைத்திருந்தது. அதை ஓரமாய் ஒதுக்கி விட்டவன் மகளின் நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டு அவள் அருகில் படுத்துக் கொண்டான்.
“மாநிறம், சிவந்த சிறிய உதடுகள்…” அல்லி மலர் போன்ற விழிகள் லேசாய்த் திறந்திருந்தது. ஒரு சின்ன பொம்மை போல உறங்கிக் கொண்டிருந்தாள் அம்மு.
உறங்கும் குழந்தையை ரசிக்கக் கூடாது என்று ருக்மணி அம்மா சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வர தன் பார்வையை மாற்றிக் கொண்டான். பாதியில் நிறுத்தி வைத்திருந்த தி. ஜானகி ராமனின் மோக முள் மீண்டும் அவன் கைகளில் தவழத் துவங்கியது.
காய்கறி மார்க்கெட்டில் வேண்டிய கீரை, காய்கறிகளை எல்லாம் வாங்கிக் கொண்ட நிலா, அருகில் இருந்த மருந்துக் கடையில் அவளுக்குத் தேவையான சில பொருட்களை வாங்கிக் கொண்டாள்.
ஒரு சிறிய துணிக் கடைக்குள் நுழைந்தாள். அங்கு இரு பெண்கள் மட்டும் இருக்க அதில் ஒரு பெண் சிநேகமாய் சிரித்தாள்.
“வாங்கக்கா, எங்கே உங்களை ரொம்ப நாளாக் காணலை… நல்லார்க்கீங்களா… அம்முவை கூட்டிட்டு வரலியா… அவ நல்லார்க்காளா… அக்கறையாய் முகத்தில் புன்னகை தவழ விசாரித்தாள் அங்கே பணிபுரியும் சுதா.
நிலா வழக்கமாய் செல்லும் கடையாதலால் அந்தப் பெண்ணுடன் அவளுக்கு நல்ல பழக்கம் இருந்தது.
“நல்லார்க்கேன் சுதா… அம்முவும் நல்லார்க்கா… நீ எப்படி இருக்கே…”
“நானும் நல்லார்க்கேன் கா… என்ன பார்க்கணும்…” சுதா கேட்க, நிலா வேண்டியதைக் கூறவும், அவள் எடுத்துக் கொடுத்தாள்.
“அக்கா… புதுசா நிறைய நைட்டீஸ் வந்திருக்கு… பாக்குறீங்களா, டிசைன் நல்லார்க்கும்… விலையும் கம்மி தான்., தெரிஞ்ச ஒரு அக்கா தச்சு குடுக்குறாங்க… தையலும் நல்லா நிக்கும்…” 
“ம்ம்… சரி எடும்மா…” என்றவள் அதில் அவளுக்குப் பிடித்த இரண்டு நைட்டிகளை வாங்கிக் கொண்டு, அம்முவுக்கும் சிலதை வாங்கிக் கொண்டாள்.
“அப்புறம் சுதா… உனக்கு மாப்பிள்ளை பாக்குற வேலை எல்லாம் எந்த லெவல்ல இருக்கு… ஏதாவது சரியாகி இருக்கா…”
“ம்ம்… வீட்டுல பார்த்திட்டு இருக்காங்கக்கா… வரவங்க எல்லாருக்கும் பணம் தானே முக்கியமா இருக்கு… நாம எவ்ளோ செய்வோம்னு தான் எதிர்பார்க்கிறாங்க… அம்மாவுக்கு என்னை எப்படியாவது கல்யாணம் பண்ணிக் கொடுத்துடனும்னு ஒரே கவலை… நம்ம தலைல என்ன எழுதி இருக்கோ, அதானே நடக்கும்… விதிப்படி நடக்கட்டும்கா…” என்றவள் நிலா வாங்கிய பொருட்களுக்கு பில் எழுதி நீட்ட, அதற்கான தொகையைக் கொடுத்துவிட்டு கவரை வாங்கிக் கொண்டாள் நிலா.
சுதாவுக்கு அவள் அன்னை மட்டுமே… சின்ன ஒரு ஹோட்டல் வைத்து நடத்தி வந்தார். மகள் பிளஸ் டூ படிக்கும்போது சுதாவின் தந்தை மாரடைப்பில் இறந்து போனதால் ஹோட்டலில் வரும் சொற்ப வருமானத்தில், அதற்கு மேல் அவளைப் படிக்க வைக்க முடியாமல் பனிரெண்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டார். 
“சரி நான் கிளம்பறேன் சுதா… கல்யாணம் சரியாச்சுன்னா  போன் பண்ணி சொல்லு…”
“ம்ம்… சரிக்கா, உங்களுக்கு சொல்லாமலா… நீங்க பஸ் ஸ்டாப்க்கு தானே… நானும் வரேன்… இன்னைக்கு யாரோ புதுசா ஒருத்தங்க பொண்ணு பார்க்க வரேன்னு சொன்னாங்களாம்… அம்மா சீக்கிரம் வர சொல்லுச்சு…” என்றவள், அவளது சக ஊழியையிடம் சொல்லிவிட்டு கைப்பையை எடுத்துக் கொண்டு நிலாவுடனே கிளம்பினாள்.
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டே பேருந்து நிறுத்தத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.
வானம் இருண்ட அரக்கனாய் எப்போது வேண்டுமானாலும் பொழிந்து விடுவேன்… என பயமுறுத்திக் கொண்டிருந்தது.
“சுதா மழை வந்திடும் போலருக்கே… நீ குடை வச்சிருக்கியா…”
“அய்யய்யோ… இல்லையே அக்கா…” வானத்தை அச்சத்துடன் பார்த்துக் கொண்டே கூறினாள் சுதா. அவளது பயம் சரிதான் என்பது போல அவள் முகத்தில் வேகமாய் வந்து விழுந்தது பெரிய மழைத்துளி ஒன்று.
சடசடவென்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் பூமியில் வந்து விழுந்த நீர்த்துளிகள் சட்டென்று அதிகமாக, மேகம் தான் சேகரித்து வைத்த  நீரையெல்லாம் பேரிரைச்சலோடு பூமிக்கு அனுப்பிக் கொண்டிருந்தது.
நிலா தன் பையில் வைத்திருந்த குடையை எடுத்து விரிக்க, இருவருமாய் அதற்குள் நுழைந்து கொண்டு பேருந்து நிலையத்தை வந்து சேர்ந்தனர்.
ஹோவென்று கொட்டிய மழையில் இடுப்புவரை மட்டுமே தான் நனையாமல் இருந்தது. கால்களை நனைத்து ஓடத் தொடங்கிய மழைநீரில் நனையாமல் இருக்க, புடவையை ஒரு கையால் சற்றுத் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஓரமாய் ஒதுங்கி நின்றனர்.
அந்தப் பேருந்து நிறுத்தத்தில் முன்னமே நிறையப் பேர் காத்துக் கிடந்தனர். வெகுநேரமாய் வராத பேருந்தை வருகிறதா எனப் பார்த்துக் கொண்டே தவிப்புடன் நின்றிருந்தனர். அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டனர் நிலாவும் சுதாவும்.
“என்னக்கா, மழை இப்படிப் பெய்யுது… இப்போதைக்கு நிக்காது போலருக்கே…”
“ம்ம்… பஸ் வந்திருச்சுன்னா ஏறிப் போயிடலாம்… பஸ்ஸையும் காணோம்… உன் வீடு பஸ் ஸ்டாப் பக்கமா… இல்ல, இறங்கி நடக்கணுமா…”
“பஸ் இறங்கி இருபது நிமிஷம் நடக்கணும்கா… இப்படி மழை பெய்தா எப்படிப் போறது… புல்லா நனைஞ்சிடுவோம்… அம்மா வேற எனக்காக காத்திட்டு இருப்பாங்க…” அவள் முகம் யோசனையை காட்டியது.
“ம்ம்… பஸ் வந்துட்டா பரவால்லை… காத்திருப்போம்…” என்ற நிலா அங்கே நின்று கொண்டிருந்தவர்களின் மீது பார்வையைப் பதித்தாள்.
கல்லூரி, பள்ளி மாணவியர் பலரும் அங்கே நின்றிருக்க, வெகு நேரமாய் பேருந்துகள் எதுவுமே வந்திருக்கவில்லை… ஆளாளுக்கு கையில் குடையும் பிடித்திருந்ததால் அந்த இடமே நெருக்கடியாய் இருந்தது. மழைக்கு ஒடுங்க இடம் இல்லாமல், மேலாடையால் தலையை மறைத்துக் கொண்டு, கையில் குடையும் இல்லாமல் முழங்கால் வரை உயர்த்திப் பிடித்த புடவையுமாய் சில பெண்கள் ஓடி வந்தனர்.
டவுன் பஸ் ஒன்று வருவதற்கு அறிகுறியாய் ஒரு நீண்ட ஹாரனும் அதைத் தொடர்ந்து, டயர்களின் நறநறவென்ற ஒலியும் கேட்டது. வீதியில் தேங்கி நின்ற மழை நீரை இருபுறமும் வாரி இறைத்துக் கொண்டு அநாகரிகமாய் வந்து நின்றது அந்த இரும்பு ஊர்தி.
பயணிகள் முந்திக் கொண்டு மழையில் ஏறத் தொடங்க, கண்டக்டரின் எரிச்சலான குரல் பயணிகளை அதட்டுவது கேட்டது. அனைவரும் ஏறியதும் அவரது விசில் பறக்க புகையைத் துப்பிக் கொண்டு அங்கிருந்து அவஸ்தையாய் நகர்ந்தது அந்த வயதான வாகனம்.
மழை விடாமல் பெய்து கொண்டிருக்க இருட்டிக் கொண்டு வந்தது.
“என்ன சுதா… இன்னும் நம்ம ரெண்டு பேரோட பஸ்சும் வரக் காணோம்… இருட்ட வேற தொடங்கிருச்சே…” நிலாவின் மனமும் பதறத் தொடங்கியது.
“ம்ம்… அக்கா… இப்படியே மழை பெய்தா நான் எப்படி பஸ் இறங்கி நடந்து போவேன்…” அவளது கவலை அவளுக்கு.
அப்போது சுதா செல்வதற்கான பேருந்து தன் வயிற்றில் பெரும் சுமையை ஏற்றிக் கொண்டு ஊர்ந்து வந்து கொண்டிருந்தது.
“அக்கா, என் பஸ் வந்திருச்சு… நான் போயிட்டு வரேன்… நீங்க பார்த்து பத்திரமாப் போங்க…” விடை பெற்றவளை குடையில்லாமல் அப்படியே அனுப்ப மனம் வரவில்லை நிலாவுக்கு.
“சரி… பார்த்துப் போ சுதா… இந்த குடையை வேணும்னா நீ கொண்டு போ… நான் அப்புறம் உன்கிட்டே வாங்கிக்கறேன்…” என்று தன்னிடம் இருந்த குடையையும் அவளுக்குத் தானம் செய்தாள்.
“ரொம்ப தேங்க்ஸ்கா…” நன்றியுடன் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு, குடையை வாங்கிக் கொண்ட சுதா, வந்து நின்ற பேருந்தில் கூட்டத்தை நீக்கி உள்ளே நுழைந்து கொண்டாள்.
அதுவரை துணைக்கு ஒரு ஆள் இருந்ததில் துன்பம் தெரியாமல் நின்று கொண்டிருந்த நிலா, இன்றே பெய்து தீர்த்துவிடுவது போல, மொத்தமாய் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்த மழையில் சற்றுப் பதட்டத்துடனே நின்று கொண்டிருந்தாள்.

Advertisement