Advertisement

நிலா – 4
மாலையில் யாரோ மனதோடு பேச…
மார்கழி வாடை மெதுவாக வீச…
தேகம் பூத்ததே ஓ… மோகம் வந்ததோ…
மோகம் வந்ததும் ஓ… மௌனம் வந்ததோ…
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது…
சொர்ணலதாவின் குரல் எப்எம்மில் தேனாய் வழிந்து கொண்டிருந்தது. அடுத்த வீட்டில் இருந்து காற்றில் மிதந்து வந்த பாடலைக் கேட்டுக் கொண்டே முன்னில் இருந்த வாசல் படியில் அமர்ந்திருந்தாள் நிலா. 
“அச்சோ அம்மா… தலையை ஆத்தாம உக்காது…” மேல் படியில் அமர்ந்து கொண்டு அவளுக்கு தலை வாருகிறேன் என்று சீப்பைக் கையில் வைத்து அவள் தலை முடியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் அம்மு.
“அம்மு… என்னம்மா பண்ணற… எனக்குத் தலை வலிக்குது… சீப்பைக் குடு… நானே சீவிக்கறேன்…” சலித்துக் கொண்டாள் நிலா.
“நான்தான் உனக்கு தலை சீவி விதுவேன்… உன் கையில தான் காயம் இதுக்கில்ல… இனி வலிக்காம சீவதேன்… சதியா…” என்றாள் அவள்.
“நான் முதல்ல தலையில் எண்ணை வச்சுக்கறேன்… அப்புறம் நீ சீவு அம்மு… இல்லன்னா முடி எல்லாம் செடுக்கு விழுந்திடும்…” எண்ணை பாட்டிலைக் கையில் எடுத்தவளின் கையில் இருந்து பிடுங்கினாள் மகள்.
“நான்தான் எண்ணை வச்சு விதுவேன்… ப்ளீஸ் என் புஜ்ஜு மம்மி தானே… ஆத்தாம இதுப்பியாம்…” என்று கொஞ்சியவளைக் கண்டு சிரிப்புடன் தலையை அவளிடம் விட்டுவிட்டு திரும்பி அமர்ந்தாள் நிலா.
அவளது பிஞ்சுக் கரத்தில் கொஞ்சமாய் தேங்காய் எண்ணையை எடுத்து நிலாவின் முடியில் தடவி, மஸாஜ் செய்கிறேன் என்று லேசாய்த் தட்டித் தடவி கூந்தலில் விரல் நுழைத்துக் கோதி ஏதேதோ செய்து கொண்டிருந்தாள் அம்மு.
அவள் செய்வதிலேயே தலைமுடியில் நன்றாக செடுக்கு வரும் என்று தெரிந்தாலும் அந்தப் பிஞ்சுக் கரங்கள் தலையில் விளையாடிய சுகத்தில் கண்ணை மூடி அமர்ந்திருந்தாள் நிலா. பரமசுகமாய் இருந்தது அந்த அனுபவம்.
“அம்மா… தூங்கித்தியா…”
“இல்லடா செல்லம்… சுகமா இருக்கு… அதான் கண்ணை மூடி இருக்கேன்…”
“ம்ம்… சதிம்மா… நான் இன்னும் கொஞ்ச நேதம் பண்ணதேன்…” சந்தோஷமாய் மீண்டும் நிலாவின் தலை முடியில் விளையாடத் தொடங்கினாள் அம்மு.
“அம்மா… அப்பாக்கு உன்னைப் பிதிக்காதா…”
மகளின் தலை கோதலில் சுகமாய் கண்ணை மூடி அமர்ந்திருந்தவள், படக்கென்று கண்ணைத் திறந்தாள்.
“என்ன ஆச்சு உனக்கு… ஏன் எப்பவும் இதையே கேக்கற… அம்மு…”
“என் புஜ்ஜூ மம்மி தானே, ப்ளீஸ்… சொல்லும்மா… அப்பாக்கு உன்னைப் பிதிக்குமா… பிதிக்காதா…” என்றாள் முடியை சீப்பில் இழுத்துக் கொண்டே.
“ம்ம்… பிடிக்கும்… அதுக்கு என்ன இப்போ…” என்றாள் நிலா.
“அப்ப ஏன்… அப்பா உன்னை கிஸ் பண்ணவே மாட்டதாங்க…” மகளின் வாயில் இருந்து விழுந்த வார்த்தைகளை ஜீரணிக்க முடியாமல், அதன் காரணம் புரியாமல் திகைப்புடன் திரும்பினாள் நிலா.
“அம்மு… என்ன இது… இப்படில்லாம் பேச எங்க கத்துகிட்டே…” சற்று அதட்டலாகவே வந்தது அவளது குரல். அதைக் கேட்டதும் அம்முவின் முகம் வாடிவிட்டது.
“அம்மு கேத்தது தப்பாம்மா, நம்ம சஞ்சய் தான் சொன்னான் அவன் மம்மியை அவன் தாதி எப்பவும் கிஸ் பண்ணுவாங்களாம்… மம்மியை தாதிக்கு நொம்பப் பிதிச்சா எப்பவும் கிஸ் பண்ணித்தே இதுப்பாங்கன்னு… அதான் நான் கேத்தேன்… நம்ம அப்பா ஏன் உன்னைக் கிஸ் பண்ண மாத்தேங்கிதாது… அப்பாக்கு உன்னப் பிதிக்காதா…”
மகள் சொன்ன விளக்கத்தில் வெலவெலத்துப் போனாள் நிலா.
“அட… என்ன இது, புதுப் பிரச்சனை… மகனுக்கு எதிரில் வைத்தா அந்தாளு பொண்டாட்டியைக் கொஞ்ச வேண்டும்… அதை அந்த சஞ்சய் இவளிடம் வேறு சொல்லி, இப்படிக் குழப்பி வைத்திருக்கிறானே… அந்த சஞ்சயின் அம்மாவிடம் சொல்லி வைக்க வேண்டும்… குழந்தைகள் முன்னால் இப்படியா விவஸ்தை இல்லாம நடந்துக்குவாங்க…” அவளுக்கு அவர்கள் மேல் ஆத்திரமாய் வந்தது.
“இங்க பாரு அம்மு… சின்னப் பசங்க இப்படில்லாம் பேசக் கூடாதுடா… என் அம்மு குட்கேர்ள் தானே… இப்படி பேசலாமா…”
“அப்ப சஞ்சய் பேட் பாயா அம்மா…” மகளின் கேள்விக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் விழித்தாள் நிலா.
“கிஸ் பண்ணுதது தப்பா மா… அப்பா, என்னை எப்பவும் கிஸ் பண்ணுவாங்க தானே… உன்னைப் பண்ணக் கூதாதா… நமக்குப் பிதிச்சவங்களுக்கு முத்தா கொதுக்கக் கூதாதா…”
அவளது கேள்விக்கு என்ன விளக்கம் சொல்லுவது எனப் புரியாமல் யோசித்தவள்,
“அம்மு… இப்ப உனக்கு என்ன தான் தெரியணும்…” என்றாள் கடுப்புடன்.
“அப்பாவை உனக்குப் பிதிக்குமா… இல்லியா…”
“உன் அப்பாவை, எனக்கு ரொம்பப் பிடிக்கும்… போதுமா…” என்றாள் அவள் கேள்வியை நிறுத்தும் நோக்கத்துடன்.
அவள் சொன்னதைக் கேட்டதும் முகம் மலர்ந்த அம்மு, “அப்ப, நீயும் அப்பாவுக்கு முத்தா கொதுப்பியா…” என்றாள் ஆர்வத்துடன்.
“ம்ம்… நிறையக் கொடுப்பேன்… ஆளை விடு… நீ சீவினது போதும்… சீப்பைக்  குடு… நானே சீவிக்கிறேன்…” என்றவள் கையில் இருந்த சீப்பைப் பறித்துக் கொண்டு எழுந்தாள்.
ஹாலில் நுழையப் போனவள் தூங்கி எழுந்து அங்கே வந்து நின்று கொண்டிருந்த கௌதமைக் கண்டதும் திகைத்தாள்.
“நாம அம்முகூட பேசிட்டு இருந்ததைக் கேட்டிருப்பானோ…” என்று நினைத்ததும் அவள் முகம் சட்டென்று சிவந்தது. அவனது முகத்தைப் பார்க்காமல் தலையைக் குனிந்து கொண்டு உள்ளே சென்று விட்டாள்.
“என் அம்முக்குட்டி… என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க… சஞ்சய் கூட விளையாடப் போகலையா…” மகளின் அருகில் அமர்ந்தான் கெளதம்.
“ப்ச்… போகலை…” என்றாள் சோகத்துடன்.
“ஏன்மா… எப்பவும் இந்த நேரத்துல ரெண்டு பேரும் விளையாடுவிங்களே… ஏன் போகலை… அம்மா போக வேண்டாம்னு சொன்னாளா…”
“ம்ஹூம்… இல்லப்பா… சஞ்சய், அவன் அப்பா, அம்மாவோத பாக்குக்குப் போயிதுக்கான்…”
“ஓ… அப்படியா…”
“அப்பா, நாமளும் போலாமா பாக்குக்கு…” தலையை இடமும், வலமுமாய் ஆட்டிக் கொண்டே ஆர்வத்துடன் கேட்டாள்.
“அப்பாக்கு நைட் டியூட்டி இருக்கே செல்லம்…” யோசித்தவன், “சரி கிளம்பு, சீக்கிரம் போயிட்டு வரலாம்…”
“அய்யா… என் செல்ல அப்பாக்குத்தி…” என்று அவன் கன்னத்தில் சந்தோசத்துடன் முத்தமிட்டாள்.
அவர்கள் வீட்டுக்கு அருகிலேயே ஒரு குழந்தைகளுக்கான பார்க் இருந்தது. கெளதம் அவ்வப்போது அம்முவையும் அழைத்துக் கொண்டு அங்கு செல்வான்.
“அப்பா… அம்மாவையும் நம்மோத கூத்தித்து போலாமா… ப்ளீஸ்…” என்றாள் தலையை சாய்த்து கெஞ்சலுடன்.
“அம்மாவையா… அதெல்லாம் இன்னொரு நாள் கூட்டிப் போகலாம்… இப்போ நாம மட்டும் போயிட்டு வரலாம் அம்மு…” என்றான் அவன்.
“போங்கப்பா… எப்பவும் இப்பதியே தான் சொல்லித்து இதுக்கிங்க… எல்லாதும் அவுங்க அப்பா, அம்மாவோத ஜாலியா எல்லா இதத்துக்கும் போதாங்க… நீங்க என்னை மத்தும் தான் கூத்தித்து போதிங்க… அம்மா பாவம் தானே… அம்மாவையும் கூத்தி போலாம்பா…” என்றாள் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு.
“என்னடா… சொன்னாப் புரிஞ்சுக்க மாட்டேங்கிறே… இனி எல்லாரும் கிளம்பி, போயிட்டு வந்து, நைட் டியூட்டிக்கு அப்பா கிளம்ப நேரமாயிடும் டா… இன்னொரு நாள் அம்மாவைக் கூட்டிட்டுப் போகலாம்…” என்றான் மீண்டும்.
“அப்ப எல்லாதும் இன்னொது நாளே போயிக்கலாம்…” என்றவள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அங்கிருந்து எழுந்து ஹாலுக்குப் போனாள்.
மகளது செய்கை அவனுக்கு இன்று புதியதாக இருக்க, “என்னாச்சு இவளுக்கு… எதுக்கு இப்படிப் புதுசா பிடிவாதம் பிடிக்குறா… ஒரு வேளை இவ அம்மா ஏதாவது இப்படி சொல்ல சொல்லி சொல்லிக் கொடுத்தாளோ…” யோசித்துக் கொண்டே சோபாவில் அமர்ந்திருந்த மகளிடம் வந்தான்.
“அம்மு செல்லம்… உன் அம்மாவை சீக்கிரம் கிளம்ப சொல்லு… பார்க்குக்கு போயிட்டு வரலாம்…” என்றான்.
“ஹையா… சூப்பது… என் செல்ல அப்பாகுத்தி…” என்று அவனைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு இறங்கி அன்னையிடம் ஓடினாள் அம்மு.
எந்தவொரு குழந்தைக்கும், அவர்களின் பெற்றோரை அன்பான, சந்தோஷமான தம்பதியராய்க் காணுவதே சந்தோசம். அம்முவும் அப்படிதான் இருந்தாள். அவளுக்கு மற்ற குழந்தைகளின் பெற்றோரைப் போல தனது பெற்றோர் அன்னியோன்யமாக இல்லாமல், எப்போதும் எலியும் பூனையுமாய் முகத்தைத் திருப்பிக் கொண்டிருப்பது வருத்தத்தைக் கொடுத்தது. அவர்கள் இருவரும் சேர்ந்து தன்னைக் கொஞ்ச வேண்டும் என அவளது பிஞ்சு மனம் ஏங்கியது. அம்முவின் சந்தோஷத்தைக் கண்ட கௌதமின் முகம் புன்னகையில் மலர்ந்தது.
மாலையில் தூறலிட்டு சென்ற மழையில் குளித்து வாசலில் நின்று கொண்டிருந்த பைக்கின் அருகில் வந்தான். சீட்டின் மேல் கண்ணாடி முத்துக்களைப் பரப்பி விட்டது போல படர்ந்திருந்த மழைத்துளிகளை, வண்டியின் கவரில் இருந்த துணியை எடுத்துத் துடைக்கத் தொடங்கினான்.

Advertisement