Advertisement

அவனுக்கு வண்டி எப்போதும் பளபளவென்று இருக்க வேண்டும். பைக்கைத் துடைக்கும்போது யாரோ தன்னையே கவனிப்பது போல மனதுக்குத் தோன்ற திரும்பிப் பார்த்தான்.
பின்னில் யாரும் இல்லை. சுற்று முற்றும் பார்த்தும் யாரையும் காணவில்லை.
“யாராய் இருக்கும்… யாரோ என்னையே கவனிக்குற போலத் தோணுச்சே…” நினைத்துக் கொண்டே வேகமாய் பைக்கைத் துடைத்து முடித்தான்.
அடுக்களையில் பால் காய்ச்சிக் கொண்டிருந்த நிலாவிடம் ஓடி வந்தாள் அம்மு.
“அம்மா… நாம எல்லாதும் பாக்குக்குப் போகலாம்னு அப்பா சொன்னாங்க…  சீக்கிதம் சேலை மாத்தித்து வா…” என்றாள் சந்தோஷத்துடன்.
“ஹூக்கும்… நான் கேட்டனா உன்கிட்ட… நானும் வரேன், என்னையும் கூட்டிட்டுப் போங்கன்னு சொன்னனா… எதுக்கு உன் அப்பாகிட்ட அவ்ளோ கெஞ்சிட்டு இருக்கே… நான் ஒண்ணும் வரலை, நீங்களே போயிட்டு வாங்க…” என்று பிகு செய்தாள், வாசலில் அவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டே அடுக்களையில் நின்று கொண்டிருந்த நிலா.
“அம்மா… நீயும் வதப் போதியா, இல்லியா… எல்லாக் குழந்தைகளும் அவங்க அப்பா, அம்மவோத பாக்குக்கு வந்து ஜாலியா விளையாதித்து இதுக்காங்க… நீ வதலேன்னா நாங்களும் போகலை… ஹூம்…” என்றவள், முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றாள்.
“அம்மு… என்னாச்சு, உனக்கு… எதுக்கு நீ இன்னைக்கு இப்படி எல்லாத்துலயும் பிடிவாதம் பிடிக்கறே… சரி, இந்தா… உனக்குப் பால் கலந்து வச்சிருக்கேன்… குடி…” என்று அவள் கையில் பாலைக் கொடுத்தாள்.
“எனக்கு ஒண்ணும் வேண்டாம்…” தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ள இன்று ஏனோ அம்மு தயாராக இல்லை.
“சரிடா… அம்மாவும் வரேன்… நான் அப்பாக்கு காப்பி கொடுத்திட்டு வரேன்… நீ பால் குடிமா…” என்று இறங்கி வந்தாள் நிலா.
அம்மு அங்கிருந்து ஹாலுக்கு நகர்ந்ததும் காப்பியைக் கலந்து கொண்டே, “ஹூக்கும்… இந்த முசுடு கூட பார்க்குக்கு போயி என்ன பண்ணுறது… அங்கே போயி ஊமச்சி போல உக்கார்ந்துட்டு இருக்குறதுக்கு நான் இங்கயே இருந்திட்டுப் போகலாம்… இந்த அம்மு வேற இன்னைக்கு சொல்பேச்சு கேக்காம தொல்லை பண்ணுறா…” என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டே காப்பியை எடுத்துக் கொண்டு கௌதமைத் தேடிச் சென்றாள். அவன் அப்போது தான் வண்டியைத் துடைத்துவிட்டு உள்ளே வந்தான்.
“காப்பி…” என்று மேசையில் அவள் வைத்த கப்பை எடுத்து வாயில் வைத்து ஒரு மிடறு குடித்தவன், கப்பை திருப்பி கோபத்துடன் மேசையிலேயே வைத்தான்.
“சக்கரை யாரு… உன் அப்பனா வந்து போடுவான்… என்ன நினைச்சிட்டு எனக்குக் காப்பி போட்டியோ… ஒரே கசப்பா இருக்கு… எடுத்திட்டுப் போ…” என்று கத்தினான்.
அதைக் கேட்டதும் வெலவெலத்துப் போனாள் நிலா.
“ச..சாரி… நான் வேணும்னா வேற காப்பி…” என்று வார்த்தையை முடிக்க முடியாமல் திணறினாள்.
“அடச்சீ… எடுத்துட்டுப் போ… உன்னால எனக்கு எதுலயுமே நிம்மதி இல்லாமப் போயிருச்சு…” என்றவன் டவலை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான்.
அவன் அங்கிருந்து நகர்ந்தும் சிலையாக அங்கேயே நின்று கொண்டிருந்தாள் நிலா.
“ச்சே… எப்படி இவனால் நெருப்பாய் வார்த்தைகளைக் கொட்ட முடிகிறது…”
“காப்பியில் சர்க்கரை போட மறந்தால் அதற்கு இப்படியா சொல்லுவது…” அவளுக்கு கண்ணீரே வந்து விட்டது.
ஹாலில் பால் குடித்துக் கொண்டிருந்த அம்மு, கௌதமின் குரலில் அதிர்ந்து போனாள். பயத்துடன் அமைதியாய் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கண்ணில் நிறைந்திருந்த கண்ணீர் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடுவேன் என்றது.
நிலாவிடம் கத்திவிட்டு டவலை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டான் கெளதம்.
அவனது சுடு சொற்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் படுக்கை அறைக்குள் நுழைந்த நிலா, மௌனமாய் மனதுக்குள் அழுது கொண்டிருந்தாள். அவனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் சிதறிய கண்ணாடித் துண்டுகளாய் அவள் மனதை அறுத்துக் கொண்டிருந்தது. வார்தைகளின் தகிப்பில் மனது கொதித்துக் கொண்டிருந்தது.
“ச்சே… எப்படி எல்லாம் பேசுகிறான்… என்னால் இவனுக்கு எதிலுமே நிம்மதி இல்லாமல் போய் விட்டதாமே… இவனை நம்பி உடன் வந்ததுதான் நான் செய்த பெரிய தவறு… இவனால் நான் மட்டும் மிகவும் சந்தோஷமாய் இருக்கிறேனா என்ன… எப்போது, எதற்கு எப்படிப் பிரதிகரிப்பான் என்று தெரியாமல் ஒவ்வொரு நிமிடமும் பயந்து கொண்டே எல்லாம் செய்வது எனக்கு தானே தெரியும்…” மனதுக்குள் அவன் மீது சாடியவள், அடுத்த நிமிடமே அவளது நிலையை எண்ணி சுய கழிவிரக்கத்தில் கரைந்தாள்.
“எப்படி ராஜகுமாரி போல வாழ்ந்திருந்தேன்… அம்மா, அண்ணன் இருவரும் என்னை எப்படித் தாங்கினார்கள்… எனக்கு எது பிடிக்கும், பிடிக்காது… என்று பார்த்துப் பார்த்துச் செய்தார்களே… அவர்களின் அன்பை உதாசீனப் படுத்திவிட்டு, என் காதல் தான் பெரிது என்று நினைத்து வந்ததால் தான் எனக்கு வாழ்க்கையே தண்டனையாகி விட்டது போல… இந்த நிலை எப்போது தான் மாறும்… அம்மா… உன் வேதனை தான் என்னை சுடுகிறதோ…” தன்னை நினைத்து மௌனமாய் மனதுக்குள் அழுது கொண்டிருந்தவள் சட்டென்று நிமிர்ந்தாள்.
“அச்சோ… அம்மு எங்கே… அவள் பயந்திருப்பாளே… எனது வருத்தத்தில் அவளை மறந்துவிட்டேனே…” அவசரமாய் முந்தானையில் கண்ணைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள். அதற்குள் அறைக்குள் வந்த அம்மு, அவளது கையைப் பிடித்தாள்.
“அம்மா… அப்பா தித்தினதுக்கு அழுவதியா… நமக்குப் பிதிச்சவுங்க நம்ம நல்லதுக்குத்தான் தித்துவாங்கனு நீதான சொல்லிக் கொடுத்த… அப்பாவும் அப்பதி தான் தித்தி இருப்பாங்க… அப்பாக்கு உன்னைப் பிதிக்கும் சொன்னாங்கல்ல… அழுவாத…” என்று பெரிய மனுஷியாய் ஆறுதல் கூறினாள்.
ஒரு விளம்பரத்தைக் கண்டு அவள் கேட்ட சந்தேகத்துக்கு, நிலா கொடுத்த விளக்கத்தை தனக்கே சொன்ன மகளிடம் மண்டியிட்டு அமர்ந்து அவளை அணைத்துக் கொண்டாள்.
அவளது கலங்கிய கண்களைத் துடைத்துவிட்டாள் நிலா.
“அம்மா… நாம இன்னொது நாள் பாக்குக்கு போயிக்கலாம்… சதியா…” என்றவள் “நீ காப்பி குதிச்சியாம்மா…” என்றாள் அன்புடன்.
“என் செல்லமே… எனக்காக யோசிக்க நீ இருக்கியே… இது போதும்டா, நான் அழ மாட்டேன்… இது நானே தேடிகிட்ட வாழ்க்கை… எது நடந்தாலும் அதுக்கு நான் தான் பொறுப்பு… நான் கலங்க மாட்டேன்…” என்று அவளிடம் கூறுவதாய் நினைத்து தனக்கு தானே கூறிக் கொண்டிருந்தாள்.
“என் இருண்ட வாழ்க்கையை வெளிச்சமாக்கதான் என் கண்மணி இருக்கிறாயே… கடவுள் இந்த மாணிக்கத்தை கொடுத்து, என் மனோரதங்களை எல்லாம் நிறைவேற்றி விட்டார்…” அம்முவை இழுத்து அணைத்து முத்தமிட்டாள்.
“சதிம்மா… நான் பாட்டி வீத்துக்குப் விளையாடப் போவத்துமா…” அவள் மனதுக்குள் தாய், தந்தையருடன் பார்க்குக்குப் போகாத ஏக்கம் இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் கேட்டாள்.
“ம்ம்… சரி அம்மு, நீ போயி விளையாடு…” என்று அவளை அனுப்பி வைத்தாள் நிலா.
குளித்துவிட்டு வந்த கெளதம் சாப்பிடாமல், நிலாவிடம் சொல்லாமலே நைட் டியூட்டிக்குக் கிளம்பிப் போயிருந்தான். அதில் மீண்டும் வாடத் தொடங்கிய மனதின் விநோதத்தை புரிந்து கொள்ள முடியாமல் குழம்பினாள் அவள்.
“என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப் போகக் கூட துரைக்கு விருப்பமில்லையோ… என் மேல கோபம்னா, அதுக்காக சாப்பிடாமல் போகணுமா… ரொம்பத்தான்…” அதுவரை அவன் மீது கோபமாய் இருந்த மனது, அவன் சாப்பிடாமல் போனதில் வருத்தப்படத் தொடங்கியது.
“திமிர் எடுத்து சாப்பிடாமப் போனா, அதுக்கு நான் என்ன பண்ண முடியும்… நல்லா பட்டினி கிடக்கட்டும்… நாளைக்கும் இங்க தானே சாப்பிடணும்…” என்று தனக்கு சமாதானம் கூறிக் கொண்டவள், விளையாடிவிட்டு வந்த அம்முவுக்கு தோசையை ஊட்டிவிட்டு அவளைப் படுக்க வைத்தாள்.
“அம்மா… நீயும் வா…” நிலாவையும் அழைத்தாள் அம்மு.
அருகில் படுத்தவள் முதுகில் தட்டிக் கொடுக்க, அன்னையின் மீது ஒரு கையைப் போட்டுக் கொண்டு சிறிது நேரத்தில் உறங்கிப் போனாள் அம்மு. சிறிது நேரம் அப்படியே படுத்திருந்தவள் உறக்கம் வராமல் ஹாலுக்கு வந்தாள்.
கெளதம் சொன்ன வார்த்தைகள் அவள் மனதில் ஓயாத அலையாய் ஒலித்துக் கொண்டிருக்க, மனது வலித்தது.
ஜன்னலைத் திறந்து திரைசீலையை விலக்க, சுகமான குளிர்ந்த காற்று இதமாய் முகத்தைத் தழுவியது. வானில் நிலாவைப் பார்க்க அதுவும் அவளைப் போலவே உறக்கம் வராமல் அங்குமிங்கும் உலவிக் கொண்டிருந்தது.
நிலவுப் பெண்ணே….
நீயும் எதற்காக – உறங்காமல்
நீல வானில் உலாத்துகிறாய்…
உன் மணாளன் உன்னைக்
கடிந்து சென்றானா…
மேகப் படுக்கை விரித்து
நட்சத்திரப் பூக்களிட்டும்
உறக்கம் மட்டும் – ஏன்
உன்னைத் தழுவவே இல்லை…
நிலாமுற்றத்தில் முகம் தேடி
நித்திரையின்றி தவிக்கிறேன்….
என் விழிகள் உனைத் தேடி
அலைந்திருக்க – உன் விழிகள்
உறக்கத்தை தழுவியதோ…
உறைபனியிலும் சுடுகிறது
உன் நீங்காத நினைவுகள்…
பரிதி தீண்டா பனிமலராய் நான்…
உன் ஒற்றைப் பார்வைக்காய் – ஏங்கி
நிற்பதில் நிலவும் நானும் ஒன்றுதானோ…
நீ மேகத்திலும் நான்
மௌனத்திலுமாய்
மறைத்து வைக்கிறோம்
நம் வேதனைகளை…
ஓராயிரம் இரவுகள்
தவமிருந்தேனும்
உனைச் சேர்ந்திடுவேன்
சந்திரகிரகணமாய்…

Advertisement