Advertisement

“வலிக்குதாம்மா…” அவள் செய்வதையே வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்த அந்தக் குட்டிக் கண்கள் பரிவுடன் கேட்டன.
“இல்லடா செல்லம்… சரியாகிடுச்சு… இந்தா உன் ஜெம்ஸ் பாக்கெட்…. நீ போயி சாப்பிடு…”
“ம்ம்… அம்மா… ஆ காத்து…” வாயைத் திறந்த அன்னையின் வாய்க்குள் ஒரு நீல வண்ண குட்டி நிலவைப் போட்டு விட்டு தந்தையிடம் ஓடினாள் அபூர்வா.
“அப்பா… அம்மா கையில கத்தி பத்து நத்தம் வந்துச்சு… அம்மா பாவம்…” என்றாள் தலை துவட்டி லுங்கிக்கு மாறிய கௌதமிடம்.
“ஓ…” என்றவன் அடுக்களைக்குள் வெறுமனே பார்வையை ஓட்ட நிலா சாதாரணமாய் வேலை செய்து கொண்டிருப்பதைக் கண்டான்.
“அம்மு… அப்பா குளிச்சிட்டு வந்திடறேண்டா…” என்றவன் குளித்துவிட்டு வர காப்பியுடன் வந்தாள் நிலா.
“காப்பி…”
“மேசைல வச்சிடு…” என்றவன் அவள் வைத்துவிட்டு நகர்ந்ததும் காப்பியை எடுத்துக் கொண்டு நாற்காலியில் தினசரியுடன் அமர்ந்தான்.
“காப்பியைக் கையில் வாங்கினா என்னவாம்… எல்லாம் ஆம்பளைத் திமிரு… ஒரு நாள் காப்பில சக்கரைக்குப் பதிலா மிளகாத்தூளைக் கலந்து கொடுக்கத்தான் போறேன்…” மனதுக்குள் பொருமிக் கொண்டே அடுக்களையில் தேங்காயைத் திருவிக் கொண்டிருந்தாள் நிலா.
“அப்பா… தீவி பாக்கணும்… வைச்சுக் குது…”
“ம்ம்… சரிடா… வச்சுத் தரேன்…” எழுந்து டிவியை ஆன் செய்துவிட்டு ரிமோட்டை மகளின் கையில் கொடுத்துவிட்டு மீண்டும் பேப்பரை அலசத் தொடங்கினான்.
அவனுக்குப் பின்னில் வந்து நின்ற நிலா, “அம்முக்குட்டி… சாப்பிடலாமா… அம்மா இட்லி ஊட்டி விடவா…” என்றாள் கெளதமை அடிக்கண்ணால் பார்த்துக் கொண்டே.
“ம்ம்…. எனக்கு அப்பா ஊத்தி வித்தா போதும்… அம்மா கையில காயம் இதுக்கில்ல…” என்று பெரிய மனுஷியாகக் கேட்டவள்,
“அப்பா… சாப்பிதலாமா… அம்முக்குத்திக்கு பசிக்குது…” என்றாள் தந்தையிடம்.
“ம்ம்… வா… அப்பா ஊட்டி விடறேன்…” என்றவன் குழந்தைக்கு இட்லியை ஊட்டி விடத் தொடங்கினான்.
“அப்பா… நீயும் சாப்பிது…” என்றவள் அவன் வாயில் இட்லியை எடுத்து ஊட்ட, அவனும் சாப்பிடத் தொடங்கினான்.
அவர்களைப் பார்த்துக் கொண்டே ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்த நிலா, “இங்கொருத்தி நிக்குறாளே… சாப்பிட்டியா என்னன்னு, ஏதாவது கேக்கத் தோணுதா பாரு… சரியான மங்குனி…” மனதுக்குள் கெளதமை அர்ச்சித்துக் கொண்டிருந்தாள்.
அபூர்வா சாப்பிட்டுக் கொண்டே சானலை மாற்றினாள். அதில் அபியும் நானும் படத்தின் “வா… வா… என் தேவதையே…” பாடல் ஓடிக் கொண்டிருக்க, பிரகாஷ் ராஜும், ஐஸ்வர்யாவும் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள்.
குழந்தை பிறந்தது முதல், அடியெடுத்து வைத்து நடப்பது, பள்ளிக்கு செல்வது என குழந்தையின் வளர்ச்சியைப் படிப்படியாகக் காட்ட தாயும் தந்தையும் அதைக் கண்டு ரசிக்கும் உணர்வுப் பூர்வமான காட்சி ஓடிக் கொண்டிருந்தது. அதையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அபூர்வா.
“அம்மு… ஆ காட்டுமா…” மகள் வாயைத் திறக்காமல் இருக்கவே கெளதம் கூறினான்.
“அப்பா… உனக்கு அம்முவைப் பிதிக்குமா…”
மகளின் கேள்வியில் சிரித்தவன், “ரொம்பப் பிடிக்கும் டா செல்லம்…”
“எவ்ளோ பிதிக்கும்…”
“இவ்ளோ பிடிக்கும்…” இரு கைகளையும் விரித்துக் காட்டினான்.
“அப்பதின்னா அம்மாவப் பிதிக்காதா…” அதைக் கேட்டதும் சட்டென்று நிலா நிமிர்ந்து பார்க்க, கௌதமின் பார்வை அவளது கண்களை உரசிச் சென்றது.
மகளின் கேள்விக்கு என்ன பதில் சொல்லுவதென்று திகைத்தவன், “அப்படில்லாம் இல்ல அம்மு… எதுக்கு இப்போ இப்படிக் கேக்கற… சாப்பிடும்மா…” என்று அவள் வாயில் இட்லியை ஊட்டி விட்டான்.
“சொல்லுப்பா… அம்மாவப் பிதிக்குமா… இல்லியா… நீங்க நெண்டு பேரும் இப்படில்லாம் என்னக் கொஞ்ச மாத்திங்களா… உங்களுக்கு சந்தையா…”
மகளின் கேள்வியில் திகைத்துப் போயினர் அவர்கள் இருவரும். இந்தக் காலத்து குழந்தைகள் எத்தனை அறிவாய் யோசிக்கிறார்கள் என நினைத்த கௌதமின் முகத்தில் சின்னதாய் ஒரு புன்னகை எட்டிப் பார்த்தது.
“அம்மு செல்லம்… அப்பாக்குத் தூக்கம் வருது மா… சீக்கிரம் சாப்பிடு… நாங்க சண்டைலாம் இல்லை…”
“அப்ப, அம்மாவை உனக்குப் பிதிக்குமா…”
“ம்ம்… பிடிக்கும் டா செல்லம்…”
“அப்ப அம்மாவுக்கும் நீயே ஊத்தி விது… அம்மா கையில காயம் ஆயிதுக்கில்ல… அம்மா பாவம் தானே…” என்றாள் அவள் பெரிய மனுஷியாக. அவன் நிலாவை முறைக்க அவள் தலையைக் குனிந்து கொண்டாள்.
“எல்லாம் இந்தத் திமிர் பிடிச்சவளால வந்தது… இப்போ குழந்தை என்னைக் கேள்வி கேட்டு, நான் பதில் சொல்ல முடியாம முழிக்க வேண்டியிருக்கு… ஒன்னும் தெரியாதவளை மாதிரி நிக்குறதப் பாரு…” அவனது மனதில் ஓடிய வார்த்தைகள் அவளுக்குப் புரிய அவனுக்கு உதவிக்கு வந்தாள் நிலா.
“அம்மு… அம்மாவுக்கு கையில சின்னக் காயம் தான்டா… சீக்கிரம் சாப்பிடும்மா… அப்பா போயி தூங்கட்டும்… அப்பா ராத்திரி எல்லாம் தூங்காம வேலை செய்திருப்பாங்க…” என்றாள் மகளிடம்.
“உனக்குத் தூக்கம் வதுதாப்பா… சதி… அம்மு சீக்கிதம் சாப்பிததேன்…” என்றவள் அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் சாப்பிடத் தொடங்கினாள்.
அவளுக்கு ஊட்டி விட்டுக் கொண்டே நாலு இட்லியை தனது வாய்க்குள் தள்ளிய கெளதம், எழுந்து கை கழுகி குழந்தைக்கும் வாயைக் கழுவி விட்டான். அதற்கு மேல் நிற்க முடியாமல் தூக்கம் கண்களை சொருக கட்டிலில் சென்று விழுந்தான்.
நிலாவும் மூன்று இட்லிகளை விழுங்கிவிட்டு பாத்திரங்களை எடுத்துக் கொண்டு அடுக்களைக்கு சென்றாள்.
மழை சற்று நின்று வெயில் வரத் தொடங்கியிருந்தது.
“அம்மா… நான் பாத்தி வீத்துல, மேனகாக்கா கூட விளையாத போத்தா…”
“சரி டா செல்லம்… முன்னாடி கதவை சாத்திட்டு போயி விளையாடு… அம்மா துவைச்சிட்டு வந்திடறேன்…”
“நான் போகல… நானும் உன்னோத துவைக்க வதேன்… உன் கையில காயம் இதுக்குல்ல…”  நிலா மறுத்தும் பிடிவாதமாய் அவளுடன் துவைக்க சேர்ந்து கொண்டாள் அந்தப் பெரிய மனுஷி.
நிலா துணிகளைத் துவைத்து வாளியில் போட அதை அலாசுகிறேன் என்று கூறிக் கொண்டு அவள் உடுத்திருந்த துணியை நனைத்துக் கொண்டிருந்தாள் அம்மு.
அதைப் பார்த்துக் கொண்டே புன்னகையுடன் துவைத்து முடித்து அவளிடமிருந்து வாங்கி அலாசி, மற்றொரு வாளியில் போட்டவள், நனைந்திருந்த அம்முவின் உடுப்பை அவிழ்த்து அதையும் துவைத்துவிட்டு அவளைக் குளிக்க வைத்தாள். வாளியில் துவைத்து வைத்த துணியை எடுத்துக் கொண்டு முன்னில் காயப் போட சென்ற நிலாவுடன் அம்முவும் சேர்ந்து கொண்டாள்.
அவள் ஒவ்வொரு துணியாய் எடுத்துக் கொடுக்க, அதை வாங்கி கொடிக் கம்பியில் போட்டாள் நிலா. அதைப் பார்த்துக் கொண்டே அங்கே வந்தனர் ருக்மணியும் அவரது பேத்தி மேனகாவும்.
“அட… நிலாவுக்கு வேலைல ஒத்தாசை செய்ய குட்டி நிலா வந்திருச்சா…”
“ம்ம்… பாருங்கம்மா… அவளும் என்னோட சேர்ந்து துணி துவைக்கறேன்னு அடம் பிடிக்குறா…”
“பாத்தி… அம்மா கையில் கத்தி பத்து நத்தம் வந்துச்சு… எல்லாத்தையும் அம்மாவே பண்ணினா வலிக்கும்ல… அதான் நான் ஹெல்ப் பண்ணதேன்…” என்றாள் அம்மு. அதைக் கேட்டு ருக்மணி வியப்புடன் கன்னத்தில் கை வைக்க, “என் செல்லம்…” என்று மகளைக் கட்டிக் கொண்டாள் நிலா.
“ம்ம்… நல்ல அம்மாவும் மகளும்தான் போங்க…” என்றார் ருக்மணி.
“ம்ம்… பாட்டியும் பேத்தியுமா எங்கயோ கிளம்பிட்டீங்க போலருக்கு மா…”
“ஆமாம் நிலா… கொஞ்சம் மளிகை சாமானும், காய்கறியும் வாங்க வேண்டி இருக்கு… மழை விட்டிருச்சுல்ல… அதான் கடைக்குப் போயிட்டு வந்திடலாம்னு கிளம்பினோம்…”
“பாத்தி… நானும் உங்களோத வதத்தா…”
“வாடி செல்லம்… சரி நிலா… நீ வேலையை முடிம்மா… நான் அம்முவை அழைச்சிட்டுப் போறேன்…” என்றார்.
“சரிம்மா… போயிட்டு வாங்க…” என்று அவள் சம்மதித்ததும், அவர்கள் நகர மீதமுள்ள துணியைக் காயப் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்தாள்.
அம்மு இல்லாமல் வீடு வெறிச்சோடி இருந்தது. அந்த வீடு அம்முவின் சிரிப்பிலும், பேச்சிலும் தான் தனிமையைத் தொலைத்து சந்தோஷத்தை நிறைத்து வைத்திருந்தது.
மகளைப் பற்றி மனதுக்குள் ஓடிய எண்ணங்கள் நிலாவின் முகத்தில் புன்னகையை வரவழைத்தன. மதிய உணவுக்கான பணிகளைத் தொடங்கினாள். காய்கறிகளை நறுக்கிக் கொண்டே அம்முவைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாள். அம்முவின் நினைவில் அவள் மனம் விம்மியது.
இருட்டான என் வாழ்வின் விடிவெள்ளியாய் முளைத்தவள் என் அம்மு… அவள் மட்டும் உன் மகளாக இல்லாவிட்டால் இந்த வாழ்வு எப்படி ஆயிருக்கும்… அவள் மனம் எழுப்பிய கேள்விக்கு அவளால் பதில் சொல்ல இயலவில்லை.
மதியிழந்து மையல் கொண்டோம்…
பால் நிலா நீயும்… பாவை நானும்…
கார் இருளின் வெளிச்சமாய் நீ வந்தாய்…
தவமின்றிக் கிடைத்த வரமாய்…
நான் தாலாட்டும் என் தாயாய்…
என் தலை கோதும் சேயாய்…
அன்பின் ஆழிப் பேரலையாய்…
சிணுங்குகின்ற சின்னப் புயலாய்…
என் வாசல் வந்த செல்ல மகள் நீ…
சில நேரம் சேலையிலும்
பல நேரம் தோளிலும்…
தொட்டில் கட்டினேன் நீயுறங்க…
என்னுறக்கம் மறந்து
உன்னுறக்கம் காத்திருந்தேன்…
உறங்கும் உன்னை கண்களுக்குள்
நிறைத்து ரசித்திருந்தேன்…..
நோயில் நீ வீழ்ந்தாலோ…
ஒவ்வொரு நொடியும் நோன்பிருந்தேன்…
தத்தித் தத்தி நீ நடந்தால்
தங்க ரதமென அசந்து நின்றேன்…
செந்தமிழின் சுவையோ… 
தேன் தமிழின் கவியோ…
உன் மொழியின் பிழையில் கூட
பித்தம் கொண்டேன்… உன்னை
அள்ளி நான் அணைக்கும் போது
உன் தாய் என்பதையே மறக்கின்றேன்…
சித்திரம் விளையாடும் உன் சின்ன விரலில்
என் சித்தத்தை நான் தொலைக்கிறேன்…
என் இரவுகளை மட்டுமல்ல… பகலையும்
நீயே ஆட்சி  செய்கிறாய் என் செல்லமே…

Advertisement