Advertisement

நிலா – 3
பால் நிலவு இரவு விளக்காய் வானத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
விரிந்திருந்த ஆகாயத்தில் நிறைந்திருந்த நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டு நிலவுடன் தனித்திருந்தாள் நிலா. குளிர்ந்த காற்று அவள் மனதில் ரகசியம் பேச ஏகாந்தமான அந்த சூழ்நிலையின் அமைதியை ரசித்துக் கொண்டு அதில் தன்னை கரைத்துக் கொண்டிருந்தாள்.
மனதுக்குள் ஒருவித மையல் நிறைந்திருக்க காகிதப் பக்கங்களை கவிதைப் பக்கங்களாய் தன் கற்பனைத் தூரிகையால் மாற்றிக் கொண்டிருந்தாள்.
சட்டென்று அவளது பின்னில் ஏதோ சத்தம் கேட்கத் திரும்பிப் பார்த்தவள் திகைத்தாள். முகமூடி அணிந்த சில மனிதர்கள் கையில் பயங்கர ஆயுதங்களுடன் அவளை நோக்கி வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள்.
ஏதோ ஆபத்து என நினைத்துத் துள்ளி எழுந்தவள், பயத்துடன் தட்டுத் தடுமாறி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினாள்.
ஓடிக் கொண்டிருந்தவளின் கண்களில் தூரத்தில் ஒரு வெளிச்சப் புள்ளி தெரிந்தது. அதை அடைந்து விட்டால் தனக்கு நிச்சயம் பாதுகாப்பு கிடைக்கும் என நினைத்து அதை நோக்கி ஓடத் தொடங்கினாள். அவளைப் பின் தொடர்ந்து விடாமல் ஒலித்தன முகமூடி மனிதர்களின் காலடி ஓசைகள்.
பயத்தில் இதயம் தொண்டையில் துடிப்பதை உணர்ந்தாள். உலர்ந்து போன உதடுகளும், பயந்ததால் வயிற்றில் அதிகமாய் சுரந்த சுரப்பிகளின் அமிலமும் அவளைத் தளரச் செய்தன. இருந்தும் நிற்காமல் தன்னைக் காத்துக் கொள்ள ஓடினாள். முகமூடி மனிதர்களின் காலடிகள் அவளை நெருங்கி வந்தன. வெளிச்சப் புள்ளி இப்போது இன்னும் சற்று அருகில் தெரிந்தது.
திரும்பி நோக்கியவளின் கண்கள் பீதியில் தெறித்து விழுவது போல விரிந்தன. அவளை மிகவும் நெருங்கிவிட்ட முகமூடி மனிதர்கள். பயத்துடன் அந்தத் தெருவின் வளைவில் கவனமில்லாமல் திரும்பியவளின் காலைப் பதம் பார்த்தது சிறிய கல் ஒன்று.
நம்பிக்கை இழந்து கீழே மயங்கி விழப் போன நேரத்தில் வளைவின் மறைவில், சட்டென்று அவளைத் தாங்கிக் கொண்டு, குதிரையின் முன்னில் அமர்த்தி விரைந்தன இரு வலிய கரங்கள்.
அந்த முகமறியா முகமூடிகளின் கையில் சிக்கி விட்டோம்……. நம் கதை அவ்வளவு தான் என நினைத்து கண்ணை இறுக்கமாய் மூடிக் கொண்டிருந்தவள், சட்டென்று மாறிய காட்சி அமைப்பு மெல்ல நினைவுக்கு வர மயக்கத்தில் இருந்து மெல்லத் தெளியத் தொடங்கினாள்.
யாரோ அவளது கன்னத்தில் தட்டி எழுப்புவது போலத் தோன்ற மெல்லக் கண்ணைத் திறந்தாள்.  
“அம்மா…. கும்மாயிங்…….” தன்னைத் தட்டி எழுப்பிக் கொண்டு அருகில் அமர்ந்திருந்த மகளின் குரலில் கண்ணைத் திறந்தவள் சட்டென்று ஒன்றும் புரியாமல், உறக்கம் தெளியாமல் திருதிருவென்று விழித்தாள்.
“அ…அவன்… அது… யாராக இருக்கும்…. முகத்தை மெல்லிய துணியால் மறைத்திருந்தானே… ஆனாலும் அந்த முகம் எனக்கு மிகவும் பரிச்சயமாய் தோன்றியதே…” மீண்டும் கண்ணை மூடிக் கொண்டு கனவில் வந்தவனைக் காண முயன்றாள்.
“அம்மா… எந்திதி… வா…” மீண்டும் தன் சேலையைப் பிடித்து இழுத்து அழைத்த மகளின் குரல், அவளது உறக்கத்தை கலைத்துவிட கனவுகளை விலக்கி நிகழ்வுக்கு வந்தாள் நிலா.
“அம்முக்குட்டி… ஏன் சீக்கிரமே எழுந்துட்டீங்க… சுச்சு போகணுமா…” அன்னையாய் மாறி குழந்தையை விசாரித்தாள்.
“ம்ம்…” என்று அழகாய் சிணுங்கினாள் அழகு மகள் அபூர்வா.
“என் செல்லம்… வாங்க, வாங்க…” என்றவள் குழந்தையை எடுத்துக் கொண்டு குளியலறைக்கு சென்றாள்.
அபூர்வா, மூன்று வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் அழகுக் குழந்தை. அன்னைக்கு அதிகம் வேலை வைக்காமல் பொறுப்பாய் நடந்து கொள்ளும் சமத்துக் குழந்தை.
குழந்தையை பல் துலக்க வைத்து காலைக் கடன்களை முடிக்க வைத்தவள், அவளை அழைத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள்.
“என் அம்மு குட்டிக்கு அம்மா பால் எடுத்திட்டு வருவேனாம்… குடிச்சிட்டு சமத்தா விளையாடுவிங்களாம்… சரியா…”
“ம்ம்… சதி…” என்று தலையாட்டியவளின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்ட நிலா,
“என் செல்லம்…” கொஞ்சிக் கொண்டே அடுக்களைக்குள் நுழைந்தாள்.
குழந்தைக்கு பால் காய வைத்து ஆற்றி, கிளாசில் எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தவள், அவளிடம் குடிக்க கொடுத்துவிட்டு அடுக்களைக்குள் நுழைந்தாள். தனக்கு ஒரு கப்பில் காப்பியைக் கலந்து எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள்.
வெளியே இப்போதும் தூறல் போட்டுக் கொண்டிருந்த மழையை ஜன்னல் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து பார்த்துக் கொண்டே காப்பியைக் ரசித்து பருகத் தொடங்கினாள்.
“ச்சே… மழை பெய்திட்டு இருக்கேன்னு காலையில் எழுந்துக்காமப் படுத்தது தப்பாப் போயிருச்சு… அது என்ன… அப்படி ஒரு கனவு… கனவுகளுக்கும் அர்த்தம் இருக்குமா… நான் கண்ட கனவுக்கு என்ன அர்த்தமா இருக்கும்… அந்தக் குதிரையில் வந்தவன் முகம் எனக்கு நல்லா பழகின முகம் போலத் தோணுச்சு… ஆனா யாருன்னு தெரியலையே…”
குழப்பத்துடன் யோசித்துக் கொண்டிருந்தவளை பின்னிலிருந்து கட்டிக் கொண்டாள் அபூர்வா.
“ம்மா… எனக்கு விளையாடணும்… பாத்தி வீட்டுக்குப் போகத்துமா…”
“அம்மு… வெளியே மழை பெய்துட்டு இருக்கு… நீ டிராயிங் புக் எடுத்து வரைடா செல்லம்… மழை நின்னதும் பாட்டி வீட்டுக்குப் போகலாம்…” இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட அழகான வாடகை வீடு… அந்த வீட்டின் உரிமையாளரான ருக்மணியைதான் பாட்டி என்று அன்புடன் அழைப்பாள் அம்மு.
“ம்மா… அப்பா எப்ப வதுவாங்க…” ரகரம் வராமல் கொஞ்சிப் பேசுபவளின் மூக்கைப் பிடித்து செல்லம் கொஞ்சினாள் நிலா.
“அப்பா மழை நின்னதும் வந்திருவாங்க செல்லம்… நீங்க போயி விளையாடுங்க…”
“ம்ம்… சதிம்மா…” என்றவளின் தலையாட்டலில் அழகாய் அசைந்த அவளது ஹிப்பி முடியைக் கண்டு புன்னகையுடன் நோக்கினாள் நிலா.
அபூர்வா எதற்குமே அடம் பிடிக்க மாட்டாள்… நல்லது கெட்டது என்று நாம் கூறுவதைக் கேட்டுக் கொண்டு அனுசரித்துப் போவாள். மூன்று வயதை நெருங்கிக் கொண்டிருந்தாலும் வயதுக்குத் தகுந்த வளர்ச்சி இல்லாமல் மெலிந்த தோற்றம். மாநிறமாய் இருந்தாலும் லட்சணமாய் அழகாய் இருப்பாள்.
எது சொன்னாலும் உடனே புரிந்து கொள்வாள். பேச்சு இன்னும் சரியாக வராமல் இப்போதும் சற்று திணறிக் கொண்டு தான் பேசுவாள். ர, ட வரிசை எழுத்துக்கள் சுத்தமாய் வராது.
அபூர்வா மேசையின் மீது இருந்த அவளது ஓவியம் வரையும் புத்தகத்தை எடுத்துக் கொண்டு கீழே அமர்ந்து எதையோ கிறுக்கத் தொடங்க, நிலா புன்னகையுடன் அவளிடம் வந்தாள்.
“அம்மு… நீ வரைஞ்சுட்டு இருக்கியா… அம்மா சீக்கிரம் குளிச்சிட்டு ஓடி வந்திடறேன்…”
“ம்ம்… சதிம்மா…” என்று குனிந்து கொண்டே தலையாட்டினாள் அபூர்வா.
மாற்றுத் துணியையும் டவலையும் எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள் நிலா. மழையில் நனைந்து சில்லிட்டிருந்த தண்ணீர் குளிர்ச்சியாய் தேகத்தைத் தழுவ, குளித்து முடித்து உற்சாகத்துடன் மெரூன் நிறப் பருத்தி சேலையை அணிந்து கொண்டாள்.
அவளது எலுமிச்சை நிற உடலைத் தழுவிய பருத்திப் பூக்கள் சந்தோஷத்துடன் தங்களுக்குள் சிலிர்த்துக் கொண்டன. சின்னதாய் நெற்றியில் ஒரு பொட்டைத் தொட்டுக் கொண்டு அடர்ந்த கூந்தலை துவட்டி, உலர்ந்த டவலால் சுற்றிக் கொண்டவள், சாமி படத்துக்கு விளக்கேற்றி சின்னதாய் குங்குமத்தை எடுத்து நெற்றியில் தொட்டுக் கொண்டாள்.
அடுக்களைக்குள் நுழைந்தவள், இட்லியைத் தட்டில் ஊற்றிவிட்டு சட்னிக்குத் தேவையானதை சரி செய்து அடுப்பில் வைத்தாள். துவைக்க வேண்டிய துணிகளை பக்கெட்டில் சோப் பவுடரில் நனைத்து வைத்துவிட்டு காலை டிபனுக்கான வேலையை வேகமாய் முடிக்கத் தொடங்கினாள்.
சற்று நேரத்தில் வாசலில் பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்க, அதைத் தொடர்ந்து வாசலில் பேச்சுக் குரல் கேட்டது.
“என்ன தம்பி… மழை நின்னுட்டு வந்திருக்கலாமே… இப்படி நனைஞ்சிட்டு வந்திருக்கீங்க…”
“என் ஷிப்ட் முடிஞ்சிருச்சு மா… மழை நிக்குற மாதிரி தெரியலை… அதான்… பரவால்லைன்னு நனைஞ்சிட்டே வந்துட்டேன்…” கெளதம் அந்த வீட்டின் சொந்தக்காரர் ருக்மணி அம்மாவிடம் பதில் சொல்லிக் கொண்டிருக்க தந்தையின் குரலைக் கேட்டு வெளியயே ஓடினாள் அபூர்வா.
“ஹை… அப்பா வந்தாச்சு…” ஓடி வந்து தந்தையின் காலைக் கட்டிக் கொண்டாள் அபூர்வா.
“அம்முக்குட்டி… விடுடா… அப்பாவோட பேண்ட் எல்லாம் நனைவா இருக்கு…” உடை முழுதும் மழையில் நனைந்திருக்க கட்டிக் கட்டிக் கொண்ட மகளை விலக்கி விட்டான் கெளதம்.
“அட…. அப்பா குரலைக் கேட்டதும், மக ஓடி வந்துட்டாளே… சரி… தம்பி… நீங்க சீக்கிரம் போயி தலையைத் துவட்டுங்க… உடம்புக்கு சேராமல் போயிடப் போவுது… அம்மு… பாட்டி கிட்ட வரியா  செல்லம்…”
“நான் அப்புதம் வதேன் பாத்தி…” என்று உள்ளுக்குள் ஓடினாள் அபூர்வா.
கெளதம் வீட்டுக்குள் நுழைய, டவலை எடுத்துக் கொண்டு ஓடிவந்தாள் அவனது செல்ல மகள். 
“அப்பா… இந்தா…” டவலை நீட்டிய பிஞ்சுக் கரத்தின் அருகே அமர்ந்தவன், தலையை அவள் அருகே நீட்டினான்.
தந்தையின் தலையை துவட்டிக் கொண்டிருந்தாள் அன்னையாய் மாறிப் போன அம்மு.
கெளதம், கார் உதிரி பாகம் தயாரிக்கும் பெரிய தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தான். அந்த வாரம் முழுதும் அவனுக்கு இரவு ஷிப்ட் போக வேண்டி இருந்ததால் காலையில் வேலை முடிந்து வந்தவனின் கண்கள் சோர்வுடன் உறக்கத்திற்காய் ஏங்கிக் கொண்டிருந்தது.
“அப்பா… தூக்கம் வதுதா… அம்மு குத்திக்கு ஜெம்ஸ் வாங்கித்து வந்தியா…”
“ம்ம்… என் செல்லத்துக்கு வாங்காம வருவேனா… அம்முக் குட்டி டிபன் சாப்பிட்டுதான் இதை சாப்பிடணும்… சரியா…” என்றவன் மழைப் பேப்பரில் சுற்றி பத்திரமாய் பாக்கெட்டில் வைத்திருந்த ஜெம்ஸ் பாக்கெட்டை வெளியே எடுத்தான்.
“அய்… ஜெம்ஸ்…” என்று குதித்தவள், “தேங்க்கூ அப்பாகுத்தி… அம்முக்குத்தி ஒண்ணே ஒண்ணு மத்தும் இப்ப சாப்பிதத்தா…” என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டு, சம்மதமாய் அவன் தலையாட்டலையும் வாங்கிக் கொண்டு அடுக்களையில் இருந்த அன்னையிடம் ஓடினாள்.
“ம்மா… இதைப் பிச்சுக் குது…”
ஹாலில் நடந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டே ஆவி பறக்கும் இட்லியை தட்டில் இருந்து எடுத்துக் கொண்டிருந்தாள் நிலா. மகள் நீட்டிய ஜெம்ஸ் பாக்கெட்டை வாங்கி காய் வெட்டிக் கொண்டிருந்த கத்தியால் கிழிக்க அது அவளது விரலையும் சேர்த்து கிழித்துச் சென்றது.
“ஸ்… ஆ…” என்று அவள் கையை உதற அதைக் கண்டு பதறிப் போனாள் மகள்.
“அச்சோ… என்னாச்சும்மா…” என்றாள் ரத்தத்தைக் கண்ட அம்மு பயத்துடன்.
“ஏய்… ஒண்ணுமில்ல… அம்மு மா… லேசா விரல்ல கத்தி பட்டுருச்சு… சின்னக் காயம் தான்…” என்றவள் வேகமாய் பைப்பைத் திறந்து கையிலிருந்து ஒழுகிய ரத்தத்தைக் கழுகி ஒரு சின்னத் துணியை காயத்தில் சுற்றிக் கொண்டாள்.

Advertisement