Advertisement

“நிலவும் மையல் கொண்டதடி பெண்ணே…

என் நிலாவின் வார்த்தை கேட்டு…”

என்றான் நிலவைக் காட்டி. அவனது கவித்துவமான வரிகளைக் கேட்டு ஆச்சர்யத்தோடு பார்த்தவள்,

“அந்த நிலவின் மையலோ

விடியலில் தீர்ந்துவிடும்… நான்

உன் மீது கொண்ட மையலோ

ஆயுள் வரை தொடர்ந்துவரும்…”

அவளது வார்த்தைகளில் மயங்கியவன், அவளது கன்னத்தில் மென்மையாய் முத்தமிட, அதில் சிலிர்த்தவள் அவன் மார்பில் பூவாய் சரிந்தாள்.

“கெளதம்…” அவள் குரல் குழைந்திருந்தது.

“ம்ம்ம்… சொல்லு நிலா…” என்றவனின் குரலிலோ அத்தனை மென்மை. இருவரும் கண் மூடி நின்றிருந்தனர்.

“உங்களுக்குக் கவிதையா கூட பேச வருமா…” என்றாள் அவள் ஆச்சர்யத்துடன்.

“ஒரு கவிதை என் நெஞ்சில் சாய்ந்திருக்கும் போது கவிதை வரதுல ஆச்சர்யம் என்ன நிலா…” என்றவன் அவளது நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டான்.

அந்த முத்தத்தில் அவள் சொர்கத்தை உணர்ந்தாள். மனதுக்குப் பிடித்தவனின் அன்பான இதழ் முத்தத்தை விட சுகமானது நெற்றியில் தரப்படும் அன்பு முத்தம். மையலுடன் அவன் மார்பில் துவண்டு சரிந்தாள் நிலா.

“கெளதம்… நீங்க எப்ப என் மேல காதலை உணர்ந்திங்க…”

அவளது முகத்தையே ஆசையோடு நோக்கியவன், “நாம உக்கார்ந்து பேசலாமா…” என்று அவளை கட்டிலுக்கு அழைத்து வந்தான்.

அவள் கட்டிலில் அமர்ந்திருக்க அருகில் தலையில் கை வைத்து சரிந்து படுத்துக் கொண்டான் அவன். அவளையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தவனின் நினைவுகள் அவள் கேட்ட கேள்விக்கு பதிலைத் தேடிக் கொண்டிருந்தது.

அவளது முகம் நாணத்தில் சிவக்க, அவன் கன்னத்தில் கை வைத்து முகத்தைத் திருப்பினாள் அவள்.

“பார்த்தது போதும்… கேட்டதுக்கு பதிலை சொல்லுங்க…” அவள் கையைப் பிடித்து நெஞ்சில் வைத்துக் கொண்டான் கெளதம்.

“நிலா… நீ எனக்குள்ள எப்போ எப்படி வந்தேன்னு சரியா சொல்ல முடியாது… ஆனா எப்போதோ வந்துட்ட… இந்த மூணு வருஷமும் உன் அருகாமைல நான் வாழ்ந்த வாழ்க்கை புதுசு… இந்த வாழ்க்கை எனக்கு சொந்தமில்லை… என் கை நழுவிப் போயிடுமேன்னு எப்பவும் மனசுக்குள்ளே ஒரு குரல் கேட்டுட்டே இருக்கும்… எனக்கு ஆக்சிடன்ட் ஆகி கை அசைக்க முடியாம இருந்தப்ப நீ என்னைக் குழந்தை போல பார்த்துகிட்டே… நான் மிஸ் பண்ண தாய்ப்பாசத்தை அப்ப உன்கிட்டே உணர்ந்தேன்… நீ எனக்கே எனக்காய் கிடைக்க மாட்டியா… நாம இப்படியே இருந்துட மாட்டோமான்னு அப்ப தான் நினைக்க ஆரம்பிச்சேன்…” 

அவனது முகத்தில் தெரிந்த உணர்வுகளை அவள் நெகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க தொடர்ந்தான்.

“கதிரோட நட்புக்கு தான் துரோகம் பண்ணிட்டோம்… என்னை நம்பின கார்த்திக்குக்கும் துரோகம் செய்திடுவமோன்னு நினைச்சு தான் கொஞ்சம் விலகிப் போக ஆரம்பிச்சேன்… உன்னோட கண்களில் அப்பப்போ தெரியுற ஏக்கமான பார்வை, ஒரு தடுமாற்றம் எல்லாம் என்னால தான்னு நினைச்சு தான் தயங்கினேன்… ஆனா அம்மு நம்மை இன்னும் நெருங்க வைச்சா… அவதான் அப்பவும் இப்பவும் நம்மை நமக்கு உணர வச்சிருக்கா…”

“ம்ம்… அவ மட்டும் கோவில்ல அப்படி சொல்லலைனா, நீங்க அமைதியா தானே இருந்திருப்பிங்க… என் காதலை நீங்க உணரவே இல்லையா…” அவளது குரலில் ஆதங்கம் நிறைந்திருந்தது.

“உணர்ந்தேன் மா… இந்தக் கண்கள், இந்த இதயம் எனக்காய் துடிப்பதை மேனகா கிட்ட நீ பேசும்போது உணர்ந்தேன்… உன் மனசுல நான் வந்திட்டனோன்னு… அதுக்காக என்னால முழுமையா ஏத்துக்கவும் முடியலை… நீ கார்த்திக்கு வேண்டி காத்திருக்கும்போது இப்படி ஒரு பீல் உனக்கு வர்றதை நினைச்சு என்னால சந்தோசப்பட முடியலை… அதான் தேவையில்லாம உன்கிட்டே எதுக்கெடுத்தாலும் கோபத்தை காட்டினேன்…” அவன் சொல்லிக் கொண்டே போக அவளது கண்கள் திகைப்புடன் விரிந்தன.

அவளது கண்களையே பார்த்தவன், “இப்படிப் பார்த்துப் பார்த்தே என்னை உன் கண்ணில் தோணியா மிதக்க வச்சுட்டியே செல்லம்…” என்று கூறிக் கொண்டே அவளது மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான். சிறு புன்னகையுடன் அவள் முகத்தையே ரசனையோடு பார்த்துக் கொண்டிருக்க, அவள் கூச்சத்துடன் நெளிந்தாள்.

“கெளதம்… ப்ளீஸ்… அப்படிப் பார்க்காதிங்க, எனக்கு ஒரு மாதிரி இருக்கு…”

“ஓ… ஒரு மாதிரின்னா… என்ன மாதிரி இருக்கு…” அவள் அவனை முறைக்க, “ஹப்பா… என்ன கண்ணுடா சாமி… அப்படியே உள்ளே நீச்சலடிக்கலாம் போலருக்கு…”

“ச்சீ… போங்க…” என்றவள் வெட்கத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டாள். அவளது ஒரு கையை எடுத்து அவன் தன் நெஞ்சில் வைத்துக் கொள்ள, மறு கையால் அவன் தலையை வருடிக் கொடுத்தாள் அவள்.

“நிலா… இப்படில்லாம் நடக்கும்னு நான் கனவுல கூட நினைக்கலை… கார்த்திக் மட்டும் பேசலைன்னா எனக்கு நீ கிடைச்சிருப்பியான்னு கூடத் தெரியலை… எத்தனை நல்ல நட்புக்களை எனக்கு ஆண்டவன் கொடுத்திருக்கான்… என் அப்பாவையும் இழந்துட்டு இனி நான் அநாதைதான்னு நினைச்சிட்டு இருக்கும்போது எனக்கு நீ, அம்மு, அம்மா, சுதா இப்படி ஒரு குடும்பமே கிடைச்சிருக்கு…”

“நான் இப்ப ரொம்ப ஹாப்பியா இருக்கேன்… இதை ஸ்வீட் எடுத்துக் கொண்டாடியே ஆகணுமே…” என்றவன், அவளை இழுத்து, இதழில் அழுந்த முத்தமிட்டான். அந்த இனிப்பில் அவர்கள் கரையத் தொடங்க, அங்கே ஒரு கொண்டாட்டம் கும்மாளமிடத் தொடங்கியது.

“பாத்தி… நான் ஸ்கூலுக்குப் போதேன்… எனக்கு லஞ்ச் குது…” அடுக்களையில் இருந்த கௌதமின் அன்னையை நோக்கி குரல் கொடுத்தாள் அம்மு. அவர் பேத்திக்கான லஞ்ச் பேகை எடுத்துக் கொண்டு அவசரமாய் வெளியே வந்தார்.

நிலாவின் குடும்பம் இப்போது கௌதமின் அன்னையோடு அவர்கள் வீட்டுக்கே வந்து விட்டனர். அம்முவை எல்கேஜியில் சேர்த்து விட்டிருந்தனர். அவள் சந்தோஷத்துடன் ஸ்கூலுக்குக் கிளம்பி விட்டாள்.

“இதோ… உனக்குப் பிடிச்ச பிரைடு ரைஸ் வச்சிருக்கேன் செல்லம், புல்லா சாப்பிடணும்… சரியா…” என்று அவளிடம் பாகை நீட்டியவர்,

“கெளதம்… உன்னோட லஞ்ச் பா…” என்று மகனுக்கான பாகை நீட்டினார் புறப்பட்டு வெளியே வந்தவனிடம்.

“அப்பாக்குத்தி… போலாமா…” என்றாள் அம்மு பாகை தோளில் மாட்டிக் கொண்டு. கெளதம் அலுவலகத்திற்கு கிளம்பும் போது அவளை பள்ளியில் விட்டுவிட்டுப் போவான். ஹோட்டலை லீசுக்குக் கொடுத்துவிட்டு அன்னையை வீட்டில் இருந்து ஓய்வெடுக்குமாறு கூறி விட்டான். அவர்தான் மாலையில் அம்முவை அழைத்துக் கொண்டு வருவார்.

“புஜ்ஜூ மம்மி… அம்முக்குத்திக்கு உம்மா குது…” என்றாள் கௌதமின் பின்னில் வந்த நிலாவிடம்.

மகளின் அருகில் புன்னகையுடன் அமர்ந்த நிலா, “உம்மா டா செல்லம்…” என்று கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.

“உம்மா…” என்று அவளும் நிலாவின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு, “அப்பா… நீயும் அம்மாக்கு உம்மா குதுப்பா…” என்றாள் தந்தையிடம். அன்னையின் முன்னில் மகள் அப்படிக் கூறவும், அசடு வழிந்தான் கெளதம். நிலா அவஸ்தையாய் நெளிந்தாள். அதைப் புரிந்து கொண்ட அவன் அன்னை புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்தார்.

“செல்லம்… பாட்டி உள்ள போறேன்… அடுப்புல வேலை இருக்கு, சரியா… பத்திரமா போயிட்டு வா… டாட்டா…” என்று உள்ளே சென்று விட்டார்.

“அம்மு… என்ன செல்லம் இது… பாட்டி முன்னாடி இப்படில்லாம் சொல்லிட்டு இருக்கே…” என்றாள் நிலா.

“அப்பா, எப்பவும் ஆபீஸ் போகும்போது உம்மா கொதுத்துத்து தானே போவாங்க… அதான் கொதுக்க சொன்னேன்… தப்பாப்பா…” என்ற மகளை அணைத்துக் கொண்டான் கெளதம்.

“எந்தத் தப்பும் இல்லடா செல்லம்… அப்பா எப்பவும், அம்முக்கும், அவ அம்மாக்கும் கிஸ் கொடுத்துட்டு தான் போவேன்…” என்றவன், அம்முவின் கன்னத்தில் முத்தமிட்டு, அருகில் நின்று கொண்டிருந்த நிலாவின் கன்னத்திலும் அழுந்த முத்தமிட்டான்.

“செல்ல அப்பாக்குத்தி… புஜ்ஜு மம்மி, நீயும் அப்பாக்கு உம்மா குது…” என்று கூற நிலாவும் கெளதமை முத்தமிட்டாள். அவன் முகம் மலர்ந்தது.

“அப்பா… சஞ்சய் சொல்லதான், அவனுக்கு தங்கச்சி பாப்பா வதப்போவுதாம்… அவளும் அவனோட ஸ்கூலுக்கு வதுவான்னு… நமக்கு எப்ப தம்பிப் பாப்பா வதும்பா…” என்றாள் கெளதமின் கையைப் பிடித்து வாசலை நோக்கி நடந்து கொண்டே. அதைக் கேட்டதும் நிலாவின் முகத்தில் செம்மை படர்ந்தது.

“உன் அம்மா மனசு வச்சா சீக்கிரமே தம்பிப் பாப்பா வந்திருவான் செல்லம்… நீயே உன் அம்மாகிட்ட சொல்லு…” என்றான் அவளை பைக்கில் எடுத்து அமர்த்திக் கொண்டே.

“அம்மா… நமக்கு சீக்கிதமே தம்பிப் பாப்பா வதத்தும்மா… நானே பாத்துக்குவேன்… கை பிதிச்சு ஸ்கூலுக்கு கூத்திப் போவேன்… சீக்கிதம் தம்பிப் பாப்பா குதும்மா…” என்றாள் அவள் தலையை ஆட்டிக் கொண்டே.

நிலா, கெளதமை முறைக்க அவன் குறும்புடன் சிரித்தான்.

“அம்மு செல்லம்… தம்பிப் பாப்பா வரும்போது வருவான்… நீ இப்போ ஸ்கூலுக்குக் கிளம்பு… டைம் ஆச்சு…”

“ம்ம்… என் புஜ்ஜூ மம்மி… டாட்டா…” என்று அம்மு கூற கௌதமும் நிலாவிடம் விடை பெற்றான். அவர்களுக்கு கையசைத்து விடை கொடுத்தவள், அவர்கள் செல்வதையே மனம் நிறையப் பார்த்து நின்றாள்.

அவளது மனவானில் இப்போது எந்த மையலும் மேகங்களாய் சூழ்ந்திராமல் தெளிவாய் இருந்தது. எப்போதும் அவர்கள் வாழ்வு சிறக்க வாழ்த்தி விடை கொடுப்போம்…

மையல் தெளிந்த நிலவே – உன்னில்

மையம் கொண்டேன் நானடி…

மேகப் போர்வையில் ஒளியும் நிலவாய்

ஓரப் பார்வையில் பதுங்காதடி…

செல்லமாய் நீ சிணுங்கினாலே

செத்து நானும் பிழைக்கின்றேன்…

உன் கன்னக்குழி ஓரத்திலே – என்

கர்வத்தை நானும் புதைக்கின்றேன்…

உன் விழிகளுக்குத் திரையிடு கண்ணே…

ஓயாமல் என்னைக் களவாடுகிறது…

பட்டாம்பூச்சியும் திகைக்கிறது – நீ

எந்தவகைப் பூவென்று புரிந்திடாமல்…

உன்னை என் கனவாக நினைத்தேன்…

நிஜமாக நீயே வந்தாய்… உன் கரம் பிடித்து

நடப்பது கனவா நிஜமா தவித்திருந்தேன்…

கனவென்றால் இமை பிரியா நிலை வேண்டும்…

நிஜமென்றால் நம் கரம் பிரியா வரம் வேண்டும்…

உன் விழியாலே காதல் விதையிடுகிறாய்…

செடி போல ஆசை வளருதடா…

ஒரு பூப்போல வெட்கம் மலருதடா…

புதிதாக பாஷையும் மறக்குதடா…

நிலவின் மையல் விடியலில் தெளியலாம்…

உன்னில் நான் கொண்ட மையல்

உயிருள்ள வரை தெளிந்திடாது…

வானத்து நிலவாக என் மன வானை

அலங்கரிக்கும் உயிர் கொண்ட நிஜம் நீ…

…………………………..நிலா உலா முடிந்தது………………………..

நன்றி

Advertisement