Advertisement

“டேய்… கெளதம், என்னடா சொல்ற… அவங்களை ஏத்துக்கப் போறியா… அவங்க பண்ணின தப்பை மன்னிச்சுட்டியா…”

“இல்லடா கதிர்… நடந்ததை மறந்திடுவோம்… யாருன்னே தெரியாத போதே சுதாவை நான் என் தங்கையா உணர்ந்தேன்… அது அப்படியே இருந்துட்டுப் போகட்டும்… சுதா எனக்குத் தங்கைன்னா, அவ அம்மா எனக்கும் அம்மாதானே… என்னை நீ மன்னிச்சு ஏத்துகிட்ட போல இவங்களையும் மன்னிச்சு ஏத்துக்குவோம்…” என்றவனை,

“கெளதம், அப்ப நீ என்னை மன்னிசுட்டியாப்பா…” என்றார் அவன் அம்மா.

“இல்லம்மா, பழசை மறந்துடறேன்னேன்… நீங்க எனக்கு அம்மாதான், சுதா மூலமா வந்த அம்மா… டேய் கதிர், இனியாவது எனக்கு சொந்தங்களோட வாழணும்னு ஆசையா இருக்குடா… நீயும் எனக்காக இவங்களை ஏத்துக்கோ…” என்றான் வலியுடன்.

“கெளதம்… உன் வலியையும், வேதனையையும், பக்கத்துல இருந்து பார்த்தவன் நான்… நீயே, உனக்கு இப்ப சொந்தங்கள் வேணும்னு சொன்ன பின்னால நான் தடுக்கவா போறேன்…” என்றவன், “அத்தை… உங்களை நான் கொஞ்சம் மோசமா பேசிட்டேன்… மனசுல வச்சுக்காம என்னை மன்னிச்சிடுங்க…” என்றான்.

“அய்யோ… மாப்பிள்ளை, உங்களைப் போல என் பிள்ளைக்கு ஒரு சிநேகிதர் கிடைச்சதால தான் அவன் உடைஞ்சு போகாம இருக்கான்… அவனுக்காக நீங்க பேசினீங்களே… அதுலயே உங்க மனசு எப்படிப்பட்டதுன்னு தெரிஞ்சிடுச்சு… சம்மந்தி, நீங்களும் என்னை மன்னிச்சிருங்க… நிலா, இந்த அத்தையை நீயும் மன்னிச்சு ஏத்துக்கோமா…” என்றவரின் கையைப் பிடித்துக் கொண்ட நிலா,

“அய்யோ… அத்தை, நான் உங்க இடத்துல என்னை நினைச்சுப் பார்த்தேன்… ஒருவேளை, நானும் இப்படி தான் பண்ணி இருப்பேனோ என்னவோ தெரியலை…” என்றவள், எல்லோரும் சீரியசாய் இருப்பதைப் பார்த்து புன்னகையுடன்,

“ஹூம்… எனக்கு மாமியார், நாத்தனார் இல்லையே… எந்தத் தொந்தரவும் இருக்காதுன்னு நினைச்சு ரொம்ப சந்தோஷப்பட்டேன்… இப்போ ரெண்டு பேருமே இருக்கீங்க… அதான்… உங்க கொடுமைல இருந்து எப்படி தப்பிக்கலாம்னு யோசிக்கறேன்…” என்றதும் அனைவரின் முகமும் மலர்ந்தது.

அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த அம்மு, “அம்மா… எல்லாதும் இவ்ளோ நேதம் சந்தை போத்துத்து இதுந்திங்க… இப்ப எதுக்கு சிதிக்குதிங்க…” என்றாள்.

“அம்மு, என் செல்லக்குட்டி… உன்னால தான் இப்போ எல்லாரும் ஒண்ணு சேர்ந்து சந்தோஷமா சிரிக்குறோம்…” என்ற கௌதமின் அன்னை பேத்தியை அணைத்துக் கொண்டார். அனைவரின் மனதிலும் சந்தோஷமே இருந்தது.

கதிர் ஏதோ வேலையாக கார்த்தியை அனுப்பி இருக்க, திரும்பி வந்தவனிடம், நடந்ததைக் கூறினர். அவனும் அதைக் கேட்டு மிகவும் சந்தோஷப்பட்டான்.

பிறகு, சற்று நேரம் எல்லோரும் சந்தோஷத்தில் பேசிக் கொண்டிருந்துவிட்டு கதிர் ஊருக்குக் கிளம்ப நேரமாகிவிட்டதால் புறப்படத் தொடங்கினர். அடுத்த நாள் ரிஷப்சனுக்கான வேலை நிறைய இருந்தது.

மகளையும் மாப்பிள்ளையையும் ஊருக்கு வருமாறு நிலாவின் அன்னை அழைக்க, அவர்கள் இப்போது வரவில்லை என்று மறுத்துவிட்டனர்.

கௌதமின் அன்னையும் ரிசப்ஷன் நேரத்தில் அங்கே வந்தால் யாராவது அவரைக் கண்டு கொண்டால் தேவையில்லாத பேச்சு வரும் என்று பிறகு வருவதாய் கூறிவிட்டார். அவரின் காதில் நிலாவின் அன்னை ஏதோ கிசுகிசுத்துவிட்டு கிளம்பினார்.

கதிர் ஜோடி உறவினர்களுடன் கிளம்ப, அவர்களுடன் கிளம்பிய கார்த்திக்கும், கௌதமிடம் வாழ்த்துக் கூறி நிம்மதியுடன் விடைபெற்றான்.

வெண் பஞ்சு மேகத்துக்குள் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்த நிலவை சிறு புன்னகையுடன் ஜன்னல் கம்பி வழியாய் நோக்கிக் கொண்டிருந்தான் கெளதம். அவனது மனம் சந்தோஷத்தில் நிறைந்திருந்தது.

ஒரே நாளில் அவனது வாழ்க்கை எப்படியெல்லாம் மாறிவிட்டது. தொலைந்து போன சொந்தம் மீண்டும் கிடைத்தது… கை நழுவிப் போக இருந்த நிலவு கை வந்து சேர்ந்தது.

எப்போதும் ஏக்கத்திலும், தனிமையிலும் மட்டுமே கழிந்திருந்த இரவுகளுக்கு இன்று ஒருத்தி துணையாக வந்துவிட்டாள். இரவின் மீது மையல் கொண்டு விளையாடிக் கொண்டிருந்த நிலவை விட்டு மேகம் நகர்ந்திருக்க, மயக்கம் தெளிந்த நிலவு, பால் நிலவாய் ஒளி வீசிக் கொண்டிருந்தது. நிலவையே ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த கெளதம், அறைக்கதவு திறக்கப்பட்ட ஓசையில் திரும்பினான்.

கையில் பால் சொம்புடன் உள்ளே வந்து கொண்டிருந்தாள் நிலா. மிதமான அலங்காரத்தில், தலை நிறைய மல்லிகைப் பூவுடன், சின்ன சரிகை வைத்த சந்தன நிறப் பட்டு சேலை உடலை பாந்தமாய் தழுவியிருக்க, வானத்து நிலவு கீழிறங்கி வந்தது போல் நாணத்துடன் நடந்து வந்தாள். அந்த பட்டு சேலையின் பட்டுப் பூச்சிகள் எல்லாம் மோட்சம் கிடைத்த சந்தோஷத்தில் இருந்தன.

அவளையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்த கெளதமின் கண்கள் ரசனையுடன் அவளது அழகை கண்ணில் நிறைத்துக் கொண்டிருந்தன. பால் சொம்புடன் அவன் அருகில் வந்தவளுக்கு ஒரு விதப் படபடப்பாய் இருந்தது.

அவள் மீதிருந்த பார்வையை விலக்கிக் கொள்ளாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் கெளதம். தொண்டையைக் கனைத்துக் கொண்டு மெல்ல ஏறிட்டவளின் மை பூசிய விழிகள் அவனை சொக்கிப் போக வைத்தன.

“ப…பால்…” என்று வார்த்தைகள் தந்தியடிக்க சொம்பை நீட்டினாள்.

அவளது தடுமாற்றத்தை ரசித்துக் கொண்டே ஒன்றும் பேசாமல் அதை வாங்க, அவனது காலில் விழுந்தாள் அவள்.

“ஹேய்… என்ன இது, காலில் எல்லாம் விழுந்துட்டு…” பதறினான் அவன்.

“அத்தை தான் சொன்னாங்க… இன்னைக்கு உங்க கால்ல விழுந்து நமஸ்கரிக்கணும்… இது ஒரு சம்பிரதாயம்னு…” அவளை எழுப்பி நிறுத்தினான் அவன்.

“ஓ… இன்னைக்கு மட்டும் நீங்க எங்க கால்ல விழுவிங்க… அப்புறம் காலமெல்லாம் நாங்க உங்க கால்ல விழுந்து கிடக்கணும்னு லாஜிக்கா சொல்ல வரிங்களாக்கும்…” என்றவன், அவள் முறைக்கத் தொடங்கியதும் விரிந்த பெரிய விழிகளில் தோணியாய் மிதக்கத் துடித்த மனதை அடக்கி, “உன் அத்தை வேற என்ன சொன்னாங்க…” என்றான்.

“இ… இந்தப் பாலை ரெண்டு பேரும் குடிக்கணும்னு சொன்னாங்க…”

“அப்படியா… சரி குடிச்சிடுவோம்…” என்றவன் சொம்பில் இருந்த பாலை உதட்டில் படாமல் அண்ணாந்து குடித்தான். பாதி குடித்துவிட்டு அவளிடம் நீட்ட, வேறு எதையோ எதிர்பார்த்திருந்தவளுக்கு ஏமாற்றமாய் இருந்தது. அதை வாங்கிக் குடித்துவிட்டு காலி சொம்பை டீப்பாயின் மீது வைத்தாள்.

அவள் நின்று கொண்டே இருக்க, அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பார்வையில் கூசியவள், சற்று நகர்ந்து ஜன்னல் அருகில் சென்று நின்றாள். கண்கள் எப்போதும் போல நிலாவைத் தேடி மேலே சென்றது. சிலுசிலுவென்ற காற்று அவளது கூந்தலைக் கலைக்க அதை ஒரு கையால் ஒதுக்கிக் கொண்டே நிலவை ரசித்தாள்.

எத்தனை இரவுகள்… ஒற்றையாய் நிலவை ரசித்திருப்பாள்… அவள் ரசிப்பதை நிலவு அறிந்ததோ என்னவோ வெட்கத்துடன் மேகத்துக்குள் சென்று ஒளிந்து, தெளிந்து விளையாடிக் கொண்டிருந்தது. அவளது முதுகுக்குப் பின்னால் வந்து நின்றான் கௌதம். தளர்வாய் பின்னிய கூந்தலில் சூடியிருந்த மல்லிகையின் மணம் சுகமாய் நாசியைத் தடவி உறங்கிக் கிடந்த அவன் உணர்வுகளை தட்டி எழுப்பத் தொடங்கியது.

பரபரத்த கைகளை அடக்க முடியாமல் அவளைப் பின்னிருந்து மென்மையாய் அணைத்துக் கொண்டு அவளது வளவளத்த தோள் பட்டையில் முகத்தை வைத்து அவனும் நிலவை ரசித்தான். தாறுமாறாய் துடிக்கத் தொடங்கிய தன் இதயத்தின் ஓசையை நிலாவால் உணர முடிந்தது.

“அடடா… ஒரு நிலவே இன்னொரு நிலவை ரசிக்கிறதே… ஆச்சர்யக் குறி…” என்றான் அவளது காதில் கிசுகிசுப்புடன். இந்த கெளதம் அவளுக்குப் புதியதாய் தோன்றினான். அவளுக்குள் ஒருவிதத் தவிப்பு தோன்ற, அவனை நோக்கித் திரும்பினாள். அவனை மௌனமாய் ஏறிட்டவளின் கரிய பெரிய விழிகளில் காதலுடன் விழிகளைக் கலக்க விட்டான். அவளுக்கு இருபுறமும் கையை ஊன்றி நின்றவன் அவள் முகத்தையே பார்க்க அவளுக்குக் குறுகுறுத்தது.

அவன் கண்களைக் காண முடியாமல் தவிப்புடன் தலையைக் குனிந்து கொண்டவளின் முகத்தில் காற்றில் படபடத்து விளையாடித் திரிந்த முடிக்கற்றைகளை ஒரு விரலால் ஒதுக்கினான். அவள் உடலெங்கும் சிலிர்ப்பதை அவனது விரல் நுனியில் உணர்ந்தான். அவளை அப்படியே அள்ளிக் கொள்ள துடித்த மனதை கட்டுப்படுத்திக் கொண்டு அவள் முகத்தை நிமிர்த்தினான்.

“நிலா…” அவனது குரல் மென்மையாய் ஒலித்தது.

“ம்ம்…” அவளது குரல் அவளுக்கே கேட்கவில்லை.

“நான் ஒண்ணு சொல்லட்டுமா…”

“ம்ம்…” என்றாள் ஆசையுடன் அவன் எதோ சொல்லப் போவதாய் நினைத்து.

“வந்து… ரெண்டு பேரும்…” நிறுத்தியவன், “ஓடிப் போயிடலாமா…” என்றான்.

திகைப்புடன் நிமிர்ந்தவளைக் குறும்புடன் நோக்கி சிரித்தான் அவன்.

“என்னது ஓடிப் போறதா….”

“ம்ம்… பர்ஸ்ட் டைம் நாம ஓடிப்போனபோது சரியாவே என்ஜாய் பண்ண முடியலை… அதான் இன்னொரு தடவை ஓடிப் போலாமான்னு கேட்டேன்…” என்றான் சிரிப்புடன்.

அவனை முறைத்தவள், “உங்களை…” என்று அவன் முதுகிலேயே ரெண்டு அடி வைத்தாள்.

“அடிப்பாவி… பர்ஸ்ட் நைட் அன்னைக்கு பொண்டாட்டி ஸ்பெஷலா ஏதாவது கொடுப்பான்னு நினைச்சா, நீ என்னை அடிக்கவா செய்யறே…” என்றவன், அவளது கையைப் பிடித்துத் தடுத்தான்.

“பின்னே இப்படில்லாம் பேசினா அடிக்காம கொஞ்சவா செய்வாங்க…”

“ஏன் கோபப்படாம கொஞ்சித்தான் பாரேன்… கோபத்துல துடிக்குற உதட்டை அப்படியே கடிச்சு வச்சிருவேன்…”

“ஓஹோ… கடிப்பிங்க கடிப்பிங்க… கடிச்சுப் பாருங்க தெரியும்…”

“ஆஹான், ரொம்பதான் சலிச்சுக்குற போல இருக்கு… அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னே தெரியாது… சொல்லிட்டேன்…”

“ஆமாமா… நீங்க ஏதாவது பண்ணுற வரைக்கும் எங்க கை பூப்பறிக்குமாக்கும்…”

“ஓ… அப்ப நீயும் ஏதாவது பண்ணுவேன்னு சொல்லுறியா… நான் உன்னை ரேப் பண்ணலாம்னுல நினைச்சேன்…” என்றான் குறும்புடன்.

“ம்ம்… பண்ணுவிங்க, பண்ணுவிங்க… எங்கே பண்ணிதான் பாருங்களேன்…” என்று ஒரு வேகத்தில் அவளும் சொல்லி விட்டாள்.

அதைக் கேட்டதும் கலகலவென்று சிரித்தான் அவன்.

அவள் நாணத்தில் உதட்டைக் கடித்துக் கொள்ள, “என்ன பண்ணட்டுமா…” என்றான் அருகில் வந்து. அவனையே ஒரு நிமிடம் பார்த்தவள்,

“நான் ஒண்ணு சொல்லட்டுமா…” என்றாள்.

“ம்ம்… சொல்லேன்…” என்றான் அவள் கையை தன் கையில் எடுத்துக் கொண்டு.

“ஒரு பொண்ணோட உடம்பை கெடுக்குறவன் எப்பவுமே ஆம்பளை ஆக முடியாது… அவ மனசைக் கெடுத்து அதுல சிம்மாசனம் போட்டு உக்கார்றவன் தான் உண்மையான ஆம்பளை…”

அவள் சொன்னதைக் கேட்டதும் வியப்புடன் புருவத்தை தூக்கியவன், “ஓ… அப்ப நான்…” என்றான்.

“ஹூம்… அதான் எப்பவோ என் இதயத்தைக் கீழடக்கி நிரூபிச்சுட்டீங்களே…” என்றாள் நாணத்துடன். அதைக் கேட்டு நிலவும் நாணம் கொண்டு மேகத்தின் பின்னால் ஒளிந்து கொண்டது. கெளதமின் முகம் புன்னகையில் மலர்ந்தது.

Advertisement