Advertisement

நிலா – 22

சம்மந்தியிடம் கண்கலங்கப் பேசிக் கொண்டிருந்த சுதாவின் அன்னை அங்கே நின்றவர்களைக் கண்டதும் அதிர்ச்சியுடன் எழுந்தார்.

“க…கெளதம்…” அவரது குரல் தொண்டையிலேயே நின்றுவிட, வெறும் காற்று மட்டுமே வெளியே வந்தது. அவரது அதிர்ந்த முகத்தைக் கண்ட நிலாவின் அன்னை திரும்பிப் பார்த்தார்.

அங்கே கோப முகத்துடன் நின்று கொண்டிருந்த கதிரைக் கண்டவர், அவனுக்குப் பின்னில் நின்றிருந்த கௌதமின் முகத்தைப் பார்த்தார். அவனது அதிர்ந்த முகம் அடிபட்ட குழந்தையின் வலியை முகத்தில் சுமந்திருந்தது. ஆனாலும் அதில் கோபத்தைக் காணவில்லை. நிலாவின் முகத்தில், கௌதமும் கதிரும் என்ன செய்யப் போகிறார்களோ என்ற பதட்டமே நிறைந்திருந்தது.

“அத்தை… என்ன சொல்லறிங்க, நீங்கதான் சின்ன வயசுல கௌதமை விட்டுட்டு ஓடிப்போன அவன் அம்மாவா…” அதிர்ச்சியுடன் வந்தது கதிரின் குரல்.

அவர் தலை குனிந்து கண்ணீருடன் நின்றிருக்க, “கதிர்… நீ கொஞ்சம் சும்மாயிரு, நான் பேசிக்கறேன்…” என்றார் அவனது அன்னை.

“என்னம்மா, என்னை எப்படி சும்மாருக்க சொல்றீங்க… இவன் பட்ட ஒவ்வொரு வேதனையையும், அவமானத்தையும், துடிச்ச துடிப்பையும் பக்கத்துல இருந்து பார்த்தவன் நான்… இவன் துவண்டு சுருண்டு போகும் போது பார்த்து துடிச்சவன் நான்… நான் எப்படி சும்மா இருப்பேன்…” கதிரின் முகம் கோபத்தில் ஜொலித்தது.

கௌதமின் முகம் சிவந்திருக்க அவன் தலை குனிந்து நின்றிருந்தான். அவனது உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. கதிர் தான் கோபத்தில் குதித்துக் கொண்டிருந்தான்.

நிலாவின் கையைப் பிடித்துக் கொண்டு நின்ற அம்மு கதிரின் சத்தத்தைக் கேட்டு பயந்து அவளோடு ஒட்டிக் கொண்டாள்.

“டேய் கொஞ்சம் மெதுவா பேசு… வெளியே இருக்கவங்க காதுல விழப் போகுது… அவங்களுக்கு இவங்க தான் கெளதம் அம்மான்னு தெரியாது…”

“ஆமா… உலகத்துக்கே தெரிஞ்ச விஷயம்… நான் சொல்லி அவங்க காதுல விழுந்தா தப்பாகிடப் போகுதா…” என்றவனின் முகத்தில் கோபம் அடங்கவில்லை. ஆனாலும் குரலில் சத்தம் குறைந்திருந்தது. கௌதமின் அன்னை தலை குனிந்து கண்ணீர் வடிக்க, அவரது முகம் வேதனையிலும் அவமானத்திலும் சுருங்கி சிவந்திருந்தது.

“டேய் கதிரு… நீ சொல்லுறது சரிதான்… இவங்க பண்ணினது சரின்னு நான் சொல்லலை… அவங்களோட மனசையும் புரிஞ்சுக்கணும்னு சொல்லறேன்…” மகனை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தார் அன்னை. கதிரின் குரலைக் கேட்டு சுதா அங்கு வர அன்னையின் முகத்தைக் கண்டவள் கலங்கிப் போனாள்.

“அ…அம்மா… என்னாச்சு, எதுக்கு அழறீங்க…” என்றவள் அவர் அமைதியாய் இருக்கவே, “என்னங்க… என்னாச்சு, உங்க குரல் தான் கேட்டுச்சு… அம்மாவை ஏதாவது சொன்னிங்களா…” பதட்டத்துடன் கேட்டாள்.

“ம்ம்… உங்க அம்மாவைப் பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா… இல்லை… உன்கிட்ட எல்லாத்தையும் மறைச்சு சீதை வேஷம் போட்டுட்டு இருக்காங்களா…” நெருப்பாய் விழுந்தது அவனது வார்த்தைகள். அதில் அப்படியே பொசுங்கி வெந்து சாம்பலாகிவிட மாட்டோமா என்றிருந்தது சுதாவின் அன்னைக்கு.

“எ…என்ன சொல்றிங்க… என் அம்மாவை எதுக்கு இப்படி கிண்டல் பண்ணிப் பேசறீங்க… என்ன நடந்துச்சு, அம்மா என்ன பண்ணினாங்க…” என்றாள் அவள் புரியாமல்.

“உன் அம்மா கல்யாணத்துக்கு முன்னாடி ஒருத்தரைக் காதலிச்சுட்டு, கௌதமோட அப்பாவைக் கல்யாணம் பண்ணி அவனுக்கு ரெண்டு வயசு இருக்கும்போது கட்டின புருஷனையும், குழந்தையையும் நிராதரவா விட்டுட்டு, அந்தப் பழைய காதலனோட ஊரை விட்டே ஓடிப் போயிட்டாங்க… அந்தாளோட தான் கடைசி வரைக்கும் குடும்பம் நடத்தினாங்களா… இல்லை மறுபடியும் வேற யார் கூடவாவது…” என்று அவன் சொல்லிக் கொண்டே போக, யாரும் எதிர்பார்க்காத அந்த சம்பவம் நடந்தது.

கையெடுத்துக் கும்பிட்டு அவர்களை நோக்கி காலில் விழுந்தார் சுதாவின் அன்னை. அனைவரும் அதிர்ந்து போயினர். கதிரே வாயடைத்துப் போய்விட்டான். சுதாவிற்கு இப்போதும் முழுமையாகப் புரியவில்லை.

“தப்பா எதுவும் சொல்லிடாதிங்க மாப்பிள்ளை… நான் செத்தே போயிடுவேன்…” தலை குனிந்து கை கூப்பினார் அவர்.

“அய்யோ… என்ன இது, சின்னப்பசங்க கால்ல விழுந்துட்டு… எழுந்திருங்க சம்மந்தி…” பதறினார் நிலாவின் அன்னை. எழுந்து கொண்டவர் கண்ணைத் துடைத்துக் கொண்டார்.

“என் சூழ்நிலை… புத்திக் கோளாறு, நான் செய்தது தான் சரின்னு நினைச்சு அப்படிப் பண்ணிட்டேன்… தெரியாமப் பண்ணிட்டேனு சொல்ல மாட்டேன்… நல்லா யோசிச்சு தெரிஞ்சு தான் பண்ணினேன், என்னையும் நீங்க கொஞ்சம் புரிஞ்சுக்கணும்…” என்றார் கெஞ்சுதலுடன்.

அவர் காலில் விழுந்ததுமே பதறிப் போன இளையவர்கள் அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந்தனர். கதிர் எதுவும் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

“எங்க குடும்பத்துல, சின்ன வயசுல இருந்து என்னை என் முறைப்பையனுக்கு தான்னு சொல்லி சொல்லியே வளர்த்தாங்க… அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு நானும் ஆசையா காத்துட்டு இருந்தேன்… அவரும் என்மேல உயிரையே வச்சிருந்தார்… குடும்பத்துக்குள்ளே வந்த ஒரு சொத்து சண்டைல ஆளாளுக்கு வார்த்தைய விட்டு ரெண்டு குடும்பத்துக்குள்ளயும் பிரச்சனை வந்திடுச்சு… மாமாவும் அப்பத்தான் வெளிநாட்டுல ஒரு வேலைக்குப் போயிருந்தார்… அந்த சமயத்துல என் அப்பாவும், அம்மாவும் செத்திடுவோம்னு மிரட்டி, என்னைக் கட்டாயப்படுத்தி இவங்க அப்பாவுக்குக் கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க…”

“இவங்கப்பா ரொம்ப நல்லவர்… எனக்கு அவர் மேல நல்ல மரியாதை இருந்துச்சு… எந்த வெறுப்பும் இல்லை, ஆனா என்னால என் காதலை மறக்க முடியலை… நானும், வேற வழியில்லை… இவரை ஏத்துகிட்டு தான் ஆகணும், இதான் இனி என் வாழ்க்கைன்னு என்னை சமாதானப் படுத்திக்க முயற்சி பண்ணினேன்… ஆனா அவர் என் பக்கத்துல வரும்போதெல்லாம் எனக்கு என் மாமா நினைவு தான் வரும்… மனசை ஒருத்தர் கிட்ட வச்சுட்டு பேருக்கு இவரோட குடித்தனம் நடத்த எனக்குப் பிடிக்கலை… அவரை ஏமாத்தறமேன்னு என் மனசே என்னை வெட்டிக் கூறு போடுற போல அசிங்கமா இருந்துச்சு… அந்த வேதனையை என்னால தாங்கிக்க முடியல… எப்படியோ மூணு வருஷம் சமாளிச்சேன்… அதுக்கு மேல முடியாம செத்துப் போய்டலாம்னு நினைச்சுட்டு இருக்கும்போது தான் என் மாமா வெளிநாட்டுல இருந்து வந்தார்… நடந்ததைக் கேள்விப்பட்டு என்னைப் பார்க்க வந்தார்… நான் அழுதேன், புலம்பினேன்… சாகப் போறேன்னு சொன்னேன்… சாகறதுக்கு பதிலா என்னோட வந்திடு… பிடிச்ச வாழ்க்கையை, நமக்காக வாழ்ந்து பார்ப்போம்னு கூப்பிட்டார்… ஒவ்வொரு நொடியும் பிடிக்காத வாழ்க்கையை மத்தவங்களுக்காக வாழ்ந்து செத்துப் போறதுக்குப் பதிலா, பிடிச்ச வாழ்க்கையை எங்களுக்காக வாழ்ந்து பார்த்தா என்ன தப்புன்னு தோணுச்சு, அதான் அவரோட போயிட்டேன்…”

விடாமல் சொல்லிக் கொண்டிருந்தவர், மூச்சு விடுவதற்காய் நிறுத்த அப்போது தான் கெளதம் அவரை நிமிர்ந்து பார்த்தான். அவரது முகத்தில் தெரிந்த வலி, சற்று முன் நிலாவின் முகத்தில் தான் கண்ட வலியைப் போல் தோன்றியது.

“நா… நான் நிலாவைக் கல்யாணம் செய்யாமல் இருந்திருந்தால் அவளின் மனமும் இப்படியெல்லாம் தவித்திருக்குமோ… கடவுளே, நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லையே…” அவன் மனது அன்னையின் இடத்தில் நிலாவை யோசித்தது. அவனது அன்னை மீண்டும் சொல்லத் தொடங்க அதை கவனித்தான்.

“நாங்க சென்னைக்கு வந்து சின்னதா ஹோட்டல் வச்சு புதுசா ஒரு வாழ்க்கையைத் தொடங்கினோம்… என் மனசுக்குப் பிடிச்சவரோட நிறைவான வாழ்க்கைதான் வாழ்ந்தேன்… ஆனா அதுவும் ரொம்ப காலம் நிலைக்கலை… சுதா படிச்சிட்டு இருக்கும்போது நெஞ்சு வலி வந்து மாமா இறந்துட்டார்… நான் அவரோட இருந்தாலும், கெளதமோட அப்பாவுக்கு செய்த துரோகத்தை நினைச்சு வேதனைப் படாம இல்லை… அப்பல்லாம் அவர்தான் என்னைத் தேத்துவார்… கௌதமை நினைச்சு கண்ணீர் விட்டு அழும் போதும் அவர் தான் ஆறுதல் சொல்வார்… வருஷா வருஷம் என் பையன் பிறந்த நாள் அன்னைக்கு அவன் வயசுள்ள யாருக்காவது துணி எடுத்துக் கொடுத்து, சாப்பாடு போட்டு ஆறுதல் பட்டுக்குவேன்…” பெருமூச்சுடன் நிறுத்தியவர், கௌதமிடம் வந்தார்.

“க…கெளதம்… என்னை மன்னிச்சிருப்பா, என்னை உன் அம்மான்னு சொல்லிக்க கூட எனக்கு எந்தத் தகுதியும் இல்லை… சுதாவைக் கொஞ்சும் போதெல்லாம் என்னை மட்டும் விட்டுட்டுப் போயிட்டியேம்மான்னு நீ கேக்குற போலவே எனக்குத் தோணும்… அதுக்காகவே அவளை, நான் கொஞ்சக் கூட மாட்டேன்… பெத்த அம்மாவா உனக்கு நான் செய்தது பெரிய துரோகம்… என்னை மன்னிச்சிடுப்பா…” மகனின் முன்னில் கை கூப்பித் தொழுதார் அவனது அன்னை. கண்ணில் இருந்து நிற்காமல் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

அவன் என்ன செய்யப் போகிறான் என எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்க, சுதா கண்ணீருடன் கெளதமின் அருகில் வந்தாள். 

“அ…அண்ணா, நான் அப்படிக் கூப்பிடலாமா அண்ணா… நம்ம அம்மாவோட மனசுல இத்தனை வேதனை இருக்குன்னு எனக்குத் தெரியவே இல்லை… எல்லா அம்மாவையும் போல என் அம்மா என்னைக் கொஞ்சவே மாட்டேங்குறாங்கன்னு நான் எத்தனையோ முறை நினைச்சிருக்கேன்… ஆனா அதுக்கு இப்படி ஒரு காரணம் இருக்கும்னு எனக்குத் தெரியாது… அன்னைக்கு உங்க பிறந்த நாள் அன்னைக்கு அம்மா வாங்கிக் கொடுத்த சட்டையை நீங்க வாங்கிகிட்ட போதே உங்களை அண்ணன்னு மனசு நினைக்க ஆரம்பிச்சிருச்சு… இப்போ அது நிஜமாயிடுச்சு, எங்களை மன்னிச்சு ஏத்துக்குவீங்களா… நான் உங்களை அண்ணான்னு கூப்பிடலாமா…” அவளது முகம் ஏக்கத்துடன் அவனைப் பார்க்க, மகள் சொன்னதைக் கேட்டு அன்னையின் கண்ணில் மீண்டும் கண்ணீர் சுரந்தது.

தன் முன்னில் மன்னிப்புக் கேட்டு கை கூப்பி நிற்கும் அன்னையைப் பார்த்த கௌதமின் கண்களும் கலங்கியது.

“அ…அம்மா…” அவனது வார்த்தைகள் முடிவதற்குள், நெகிழ்ச்சியுடன் அவனது கையைப் பிடித்துக் கொண்டார் அவன் அன்னை.

“கெளதம்… கண்ணா, என் செல்லமே… என்னை மன்னிச்சிடுப்பா… இந்த அம்மாவை மன்னிச்சு ஏத்துக்கப்பா…” அவர் தழுதழுத்தார்.

“அம்மா… போதும், இத்தனை வருஷம் நாம அழுதது போதும்… போன நிமிஷம் வரைக்கும் உங்க மேல எனக்கு வெறுப்பும் கோபமும் வலியும் இருந்ததுங்கிறது தான் உண்மை… ஆனா இப்ப அது இல்லை… உங்க இடத்துல இருந்து யோசிச்சுப் பார்த்தா நீங்க செய்தது தப்பில்லையோன்னு கூட தோணுது… ஆனா… அப்பாவைக் கல்யாணம் பண்ணிக்காம நீங்க உறுதியா இருந்திருக்கணும்… அதை செய்யாம விட்டுட்டு தண்டனையை எனக்கும் அப்பாவுக்கும் கொடுத்திட்டுப் போயிட்டிங்க…” அதற்குள் இடையிட்டது கதிரின் குரல்.

Advertisement