Advertisement

“அடச்சீ… கண்ணைத் துடைச்சுக்கோ, காதல் மேல உனக்கு இப்போதாவது நம்பிக்கை வந்துச்சே… காதலே இல்லைன்னு சொல்லிட்டு திரிஞ்ச உனக்கு அதோட அருமை புரியத்தான் இவ்வளவு நடந்திருக்கும் போலிருக்கு… என்ன, அதுக்கு ஆண்டவன் கொஞ்சம் அதிகமா சோதிச்சுட்டான்… நிலாவோட பேருக்குப் பக்கத்துல உன் பேர் வரணும்னு இருக்கும்போது, அதை நான் எப்படி அழிச்சு என் பேரை எழுத முடியும்… நீங்க இதை நினைச்சு வருத்தப்படாம உங்க வாழ்க்கையைத் தொடங்குங்க… நீங்க தான் பொருத்தமான ஜோடி… சியர் அப் மை பிரெண்ட்…” என்றவன் கெளதமை அணைத்துக் கொண்டான்.

கெளதமின் மனம் நெகிழ்ந்திருந்தது.

“சரி… சரி… உங்களுக்குள்ள பேசிக்கறதுக்கு நிறைய விஷயம் இருக்கும்… நீங்க பேசிட்டு இருங்க… நான் வெளியே இருக்கேன்…” என்ற கார்த்திக் நாசூக்காய் வெளியேறினான். அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான் கெளதம்.

இப்போது சாத்திய அறைக்குள் கௌதமும் நிலாவும் மட்டுமே இருக்க, இருவருக்குள்ளும் யார் முதலில் பேச்சைத் தொடங்குவது எனப் போராட்டமே நடந்து கொண்டிருந்தது. நிலா அவனிடம் எப்படிப் பேசுவது எனத் தயக்கத்துடன் மனதுக்குள் வார்த்தைகளை சேகரித்துக் கோர்த்துக் கொண்டிருக்க, அவளது அவஸ்தைகளை ஓரக்கண்ணால் கண்டு ரசித்தான் கெளதம். அவனது இதழ்களில் சிறு புன்னகை நெளிந்தது.

அவன் தன்னையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவள், அவஸ்தையாய் தலையை உயர்த்தினாள். இன்று ஏனோ புதிதாக வெட்கமும் கூச்சமும் அவளை இம்சைப்படுத்தியது. ஜன்னலின் அருகில் நின்று கொண்டிருந்தவன், அவள் அருகில் வருவதை உணர்ந்தாள். அவளுக்கு கால்கள் நிலத்தோடு வேரோடியது போல ஒரு தவிப்பு தோன்றியது.

“நிலா…” அவனது கம்பீரமான குரலில் அவளது பெயர் இன்னிசையாய் ஒலிப்பது போலத் தோன்றியது.

மெதுவாக அவனை ஏறிட்டாள் அவள். வாயைத் திறந்து ஏதோ சொல்ல வந்தவளுக்கு காற்று மட்டுமே வெளிவர, வார்த்தைகள் தடுமாறியது.

தலையைக் குனிந்து நின்றிருந்தவளின் முன்னில் வந்து நின்றான் கெளதம்.

“நிலா…” மீண்டும் அழைத்தான். அவளது உடலிலுள்ள ரத்தம் முழுதும் முகத்தில் பாய்ந்தது போல சிலிர்த்தது அவளுக்கு. அவன் அருகில் அப்படியே தொலைந்து போய்விடத் துடித்த மனதைக் கண்டு அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. அவளது சிவந்த முகமும், என்னெல்லாமோ சொல்லிவிடத் துடித்துக் கொண்டிருந்த இதழ்களும் அவனுக்குப் புதிதாய் தோன்றியது.

“என் நிலா… எனக்கு மட்டுமே சொந்தமான என் நிலா… நான் இனி அநாதை இல்லை, என் வாழ்க்கையை சோலை வனமாய் மாற்ற வந்த தேவதை என் நிலா…” அவளை நினைத்து மனதுக்குள் சந்தோசம் பொங்கியது அவனுக்கு.

அழகிய தாமரை முகம் கதிரவனைக் கண்டு தலை தாழ்த்தி நிற்பதுபோல் நின்று கொண்டிருந்தாள் அவள். அவளது தாடையை ஒரு விரலால் நிமிர்த்தினான் அவன். அவளது விழிகள் அவன் விழிகளை சந்திக்க, உடலெங்கும் பரவசம் மின்சாரமாய் ஓடுவதை உணர்ந்தாள் அவள். அந்த விழிகளில் தேங்கி நின்ற காதலில் விழுந்து, அப்படியே தொலைந்து விடத் துடித்தான் அவன். இரண்டு கைகளாலும் அவள் முகத்தை கையில் ஏந்தியவன், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளது முகம் வெட்கத்தில் சிவந்தது.

கூச்சத்துடன் நெளிந்தவள், “எத்தனை நேரம் தான் பார்ப்பிங்க…” என்றாள் சிணுங்கலுடன். அவளை அப்படியே அணைத்துக் கொண்டு முகமெங்கும் முத்தமிடத் துடித்த மனதை அடக்கிக் கொண்டு அவளையே ஆசையோடு பார்த்தான் கெளதம்.

“நிலா…” அவனது குரல் மென்மையாய் ஒலிக்க, அவள், “ம்ம்…” என்றாள் கிசுகிசுப்பான குரலில். சத்தம் தான் கேட்கவே இல்லை.

“நடக்கறது எல்லாம் நிஜமா… நீ… எனக்கே, எனக்கு தானா… நான் இனி அநாதை இல்லை… எனக்கு நீ இருக்கே, நம்ம அம்மு இருக்கா… இதெல்லாம் கனவு இல்லையே…” அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டே உதிர்ந்தன அவனது வார்த்தைகள்.

அவனையே குறுகுறுவென்று பார்த்தவள், வெகு நாளாய் அவன் மீசையை இழுக்க வேண்டுமென்ற ஆசையை இன்று நிறைவேற்றிக் கொண்டாள்.

“ஆ…” வலியில் அலறியவன், ராட்சசி… எதுக்கு மீசையை இழுத்தே…” என்றான்.

“ம்ம்… கனவா, நிஜமான்னு தெரிய வைக்கத்தான்…” அழகாய் அசைந்த அவளது உதடுகளை அப்படியே கவ்விக் கொள்ள தோன்றியது அவனுக்கு. இந்த உணர்வுகள் அவனுக்குப் புதிது. அவளை அப்படியே நெஞ்சில் போட்டுக் கொண்டு உலகத்தில் உள்ள எல்லா விஷயங்களையும் பேச வேண்டும் போலத் தோன்றியது. ஏதோ பெரிதாய் சாதித்து விட்டது போல் ஒரு பரவசம் தோன்றியது. தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டவன், தன் மனதில் உள்ளதை முதலில் பேசி விட நினைத்தான்.

“நிலா… உன்னை நான் ரொம்ப வருத்தப்பட வச்சுட்டேனா… உனக்குள்ள என் மேல இப்படி ஒரு நினைப்பு இருக்கும்னு நான் நினைக்கவே இல்லை… என் மனசை உன்னிடம் வெளிப்படுத்தவும் முடியாம, என்னைக் கட்டுப் படுத்திக்கவும் முடியாம நான் ரொம்ப சிரமப் பட்டுட்டேன்… அதான் அப்பப்போ உன்னை வார்த்தையால நோகடிச்சுட்டேன்… என்னை மன்னிச்சிரு மா…” அவனது கம்பீரமான குரல் மென்மையாய் ஒலித்தது.

“வே…வேண்டாம் கெளதம்… நீங்க என்கிட்டே மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை… கார்த்திக் காதலிக்கிறேன்னு சொன்னதும் யோசிக்காம நான் உங்க மேல உள்ள கடுப்புல சரின்னு சொன்னது எவ்ளோ பெரிய முட்டாள் தனம்னு அப்புறம் தான் புரிஞ்சுகிட்டேன்… கார்த்திக்கின் காதலுக்கு சம்மதிச்சேனே ஒழிய, அவனுக்காய் என் மனசு துடிச்சதே இல்லை… ஆனா உங்க மேல உள்ள காதலைப் புரிஞ்சுகிட்டதும் என் மனசு ஒவ்வொரு நொடியும் உங்களுக்காகவே துடிச்சது… வாழ்க்கைல காதல் ஒரு முறை தான் வரும்… அந்த ஒண்ணு எதுன்னு கண்டு பிடிக்கறதுல தான் அதோட வெற்றியே இருக்கு… மயங்கிக் கிடந்த என் மனசை உங்க காதல் தான் தட்டி எழுப்புச்சு… நான் தெளிஞ்சுட்டேன்… நீங்க என்ன நினைக்கறீங்கன்னு தெரியாம நானா இதை சொல்லவும் கூச்சமா இருந்துச்சு… என்னையும் மீறி அம்மு சொல்ல வச்சுட்டா…”

“அதென்ன… என் மேல உனக்கு அப்படி ஒரு கடுப்பு… நான் உன்னை என்ன பண்ணினேன்…” என்றான் கெளதம் குறும்புடன்.

அவனை செல்லமாய் முறைத்தவள், “ஹூக்கும்… ஒண்ணுமே தெரியாதாக்கும்… இந்த ஹீரோ நம்மைப் பார்க்க மாட்டாரான்னு எல்லா பொண்ணுங்களையும் போல நானும் தானே தவம் கிடந்தேன்… பெரிய விஸ்வாமித்திர முனிவர் கணக்கா விறைப்பால்ல திரியுவீங்க… கண்ணுக்கு லட்சணமா கைக்கு எட்டின போல ஒரு பொண்ணு இருக்கேன்னு ஒரு ரசனை இருக்கா… என்னமோ… பொண்ணுங்க எல்லாம் இவரை மயக்கறதுக்குன்னே திரியுற போல அலட்சியமா ஒரு பார்வை… ஹூம், நானும் அதுல விழுந்துட்டேன் போலருக்கு… காலேஜ்ல எல்லாரும் என்னைச் சுத்தி வரும்போது நீங்க மட்டும் கண்டுக்கலையேன்னு ஒரு கடுப்பு தான்… அது கடுப்பு மட்டும் இல்ல… அப்பவே உங்க மேல எனக்கு ஒரு இதுன்னு அப்புறம் தான் புரிஞ்சுகிட்டேன்…” அவள் சொன்னதைக் கேட்டு அவனுக்கு சிரிப்பாய் வந்தது.

“ஓ… அப்போ, அப்பவே உனக்கு என் மேல ஒரு இதுவா… சரி… இதுன்னா… எது…” என்றான் அப்பாவி போல.

“ஹூம்… உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது பாருங்க… கல்லுளிமங்கன் மாதிரி எதையும் சொல்லாம இருந்துட்டு என்னையே சொல்ல வச்சுட்டிங்கல்ல…” என்றாள் அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு.

அவளது முகத்தை தன்னை நோக்கித் திருப்பியவன், அவளது விழிகளில் தன் விழியைக் கலக்க விட்டான். அதில் நிரம்பி வழிந்த காதலின் தாக்கம் தாளாமல் மெல்ல தலையைக் குனிந்து கொண்டாள் அவள்.

“நிலா… என் அம்மா செய்த செயலால பெண்கள் மேல எனக்கு ஒரு வெறுப்பு இருந்துச்சு… அதான் நான் எந்தப் பெண்ணையும் பொருட்படுத்தினது இல்லை… எனக்கு உன்னை எப்பவும் பிடிக்கும்… காதல்னு சொல்ல முடியாது, அது கதிரோட தங்கைங்கிறதாலயான்னு தெரியலை… என்னோட நீ போட்டி போட்டு வாயடிக்கும் போது எனக்குள்ள ஒரு சந்தோசம்… எனக்கு கை அடிபட்டு, முடியாம இருந்தப்போ நீ என்னை கவனிச்சுகிட்டபோது தான் முதன் முறையா, நீ எனக்கே எனக்காய் வேணும்னு மனசுல தோணுச்சு… ஆனா கார்த்திக் உன் மேல எவ்ளோ அன்பு வச்சிருந்தான்னு எனக்குத் தெரியும்… அதுனால உன்கிட்டே என்னை வெளிப்படுத்திக்க முடியாம விலக ஆரம்பிச்சேன்… என் மனசுக்குள்ளே நான் துடிச்ச துடிப்பு எனக்கு தான் தெரியும்… காதல்னு ஒண்ணு இல்லவே இல்லைன்னு சொன்ன நான் காதலில் கலங்கித் துடிச்சேன்… இது எனக்கே ஆச்சர்யமா இருந்துச்சு… காதல் இப்படியெல்லாம் வலியைக் கொடுக்குமான்னு…” அவன் பேசிக் கொண்டே போக யாரோ கதவைத் தட்டினர்.

“அம்மா… கதவைத் திறம்மா, அப்பா… வெளியே வாங்கப்பா…” வெளியே அம்முவின் குரல் கேட்டது.

“அச்சோ… அம்மு கூப்பிடுறா…” என்ற நிலா, அவசரமாய் கதவைத் திறக்கப் போக, அவளைத் தன்னிடம் இழுத்தவன், அவள் இதழில் அழுத்தமாய் ஒரு முத்தத்தை பதித்து விலகினான். அந்த முதல் முத்தம் அவள் உயிர் வரை தீண்ட சிலிர்த்துப் போனவள் கண்ணை மூடி அப்படியே நின்றிருந்தாள்.

அவளது தவிப்பை ரசித்தவன், “இது நம் காதலுக்கு அச்சாரமாய் இருக்கட்டும்… அப்புறம் தொடர்வோம் டார்லிங்…” என்று புன்னகையுடன் உதட்டை தடவிக் கொண்டே கதவைத் திறக்கப் போனான்.

“அப்பா… அம்மா எங்கே… நம்ம வீத்துக்குப் போகலாமா…” என்றாள் அம்மு.

“ம்ம்… போகலாம்டா செல்லம்… அம்மா வருவா… சரி, பாட்டி எங்கே… நீ மட்டும் தனியா இருக்கே…”

“அவங்க அந்த தூம்ல பேசித்து இதுக்காங்க…” என்றாள் அவள். அவளையும் தூக்கிக் கொண்டு அந்த அறையை நோக்கி அவன் செல்ல, நிலாவும் தன்னை சரி செய்து கொண்டு சிறு வெட்கப் புன்னகையுடன் அவனுக்குப் பின்னால் வந்தாள். அங்கே நிலாவின் அன்னையும், சுதாவின் அன்னையும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டதும் அதிர்ச்சியுடன் அப்படியே நின்று விட்டான் கெளதம்.

“என்ன சம்மந்தி சொல்லறிங்க… கெளதம் உங்க பையன்னு உங்களுக்கு இப்போ தான் தெரியுமா… அவங்களைப் பார்த்து, சுதா, அண்ணன் அண்ணி வராங்கன்னு சொன்னதைப் பார்த்ததும் உங்களுக்கு முதல்லையே இது தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன்… சரி, இப்பவாவது பசங்க கிட்டே சொல்லிடலாமா…”

“இல்ல சம்மந்தி, வேண்டாம்… என் பையனை சின்னக் குழந்தையா இருக்கும் போது விட்டுட்டு என் சுயநலத்துக்காக வேறொருத்தர் கூடப் போயிட்டேன்… அவன் எத்தனை வேதனைப் பட்டிருப்பான்… அவனோட அப்பா எத்தனை அவமானப் பட்டிருப்பார்… கல்யாணத்துக்கு முன்னால ஒருத்தரை நேசித்து அவரையும் மறக்க முடியாம, கெளதம் அப்பாவோட வாழவும் முடியாம நான் பட்ட வேதனை எனக்கு தான் தெரியும்… அதான், அவமானப் பட்டாலும் பரவாயில்லைன்னு எனக்குப் பிடிச்ச வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துட்டேன்… என் பொண்ணாவது நான் வாழ்க்கைப் பட்ட ஊருல நல்லா இருக்கட்டும்னு தான் அந்த ஊரு மாப்பிள்ளைன்னதும் சரின்னு சொன்னேன்… இப்போ கௌதம்க்கும் மாப்பிள்ளைக்கும் என்னைப் பத்தி தெரிஞ்சா ரொம்ப கோபப்படுவாங்க… இது உங்களுக்கு மட்டும் தெரிஞ்சதாவே இருக்கட்டும்… கண்ணுக்கு முன்னாடியே பெத்த மகன் இருந்தும், அன்பா ரெண்டு வார்த்தை பேசக் கூட முடியாத பாவி நான்… நான் பண்ணின தப்புக்கு எனக்கு இந்த தண்டனை தேவை தான்…” கண்ணில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டார் கெளதமின் அன்னை.

அறை வாசலில் நின்று கொண்டிருந்த கெளதம் நிலாவும், அன்னையிடம் ஏதோ சொல்வதற்காய் அங்கு வந்த கதிரும் அவர்கள் பேசியதைக் கேட்டு அதிர்ந்து போய் நின்றனர்.

மேகத் திரை விலகிய மனதில் – உன்

முகம் கண்டு மையல் தெளிந்தேன்…

மௌனமான உன் இதழுக்கும் – உன்னிடம்

மண்டியிட்ட என் மனதிற்கும் இடையே

சொல்லப்படாமலே உள்ளதடா நம் காதல்…

வெண்ணை திருடும் கண்ணனாய் – நீ

என்னைத் திருடிக் கொண்டாயடா…

மௌனத்தால் விலகி நின்றாய்…

கோபத்தால் நெருங்கி வந்தாய்…

இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இடையே

இதமான இம்சை நீ தந்தாய்… என் காதலை

நீ கேட்காமலே சொல்லிவிட ஆசை தான்…

என்னிடம் கெஞ்சி நிற்கும் உன் விழிகளை

காணுகையில் அதைத் தவிக்கவிடவே

தோன்றுகிறது… உனைத் தவிக்கவிட்டு

அதில் நான் தத்தளிக்கிறேனடா…

நீரை உறிஞ்சும் வேராக – உன் பார்வையில்

என் உயிரை உறிஞ்சிக் கொண்டாயடி…

மழைத்துளி பட்ட மண்ணாக – நீ எனக்காய்

சிந்திய கண்ணீரில் உயிர்த்தேனடி…

நீயும் நானும் உயிர்மெய்யாய் ஆவோமடி…

காதல் என்று எதுவுமில்லையென்றேன்…

சுவாசிக்கும் சுவாசம் தான் அதுவென

உணர்த்தி விட்டாய் உன் அன்பாலே…

என் மையலைத் தெளிவிக்க

மண்ணில் வந்த வெண்ணிலவே…

உன்னில் மையல் கொண்டேன் நானடி…

Advertisement