Advertisement

நிலா – 21

அம்முவின் வார்த்தைகளில் அனைவரும் திகைத்து நின்றிருந்தனர். கெளதம், நிலா இருவரின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான் கார்த்திக். அவர்கள் மௌனமாகவே இருக்க, நிலாவின் அடக்குமுறையைத் தாண்டி அவள் அடக்கி வைத்திருந்த அழுகை, சிறு கேவலாய் வெளிப்பட்டது.

“கெளதம்… இங்க வா…” என்றான் கார்த்திக்.

                           

“நான் இங்க தானே இருக்கேன்…” என்றான் அவன் குனிந்த தலையுடன்.

“கெளதம்… இங்கே நிலா பக்கத்துல வந்து மாப்பிள்ளையா நில்லு…” என்றவனை அனைவரும் அதிர்ச்சியுடன் நோக்கிக் கொண்டிருக்க, நிலா சட்டென்று கார்த்திக்கை நிமிர்ந்து பார்த்தாள்.

“அவளை நோக்கி சரிதானா…” என்பது போல் அவன் கண்ணசைத்துத் தலையாட்ட, அவள் கண்களில் சட்டென்று நீர் கோர்த்துக் கொண்டது.

“அம்மா… அப்பாவை உன் பக்கத்துல வந்து நிக்க சொல்லி கூப்பிதும்மா…” என்ற அம்மு, நிலாவின் கையைப் பிடித்து இழுத்தாள். அவளை கண்ணீருடன் அணைத்துக் கொண்ட நிலா, “இ… இல்லை… என்னால கார்த்திக்கைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது… எனக்கு என் அம்மு வேணும்… அவளோட அப்பா வேணும்… நாங்க இப்ப இருக்குற போல இப்படியே இருந்திடறோம்…” என்றவள் அழத் தொடங்கினாள். அதைக் கண்டதும் எல்லாருக்கும் அவள் மனது புரிய, கார்த்திக்கை கேள்வியுடன் ஏறிட்டனர். கெளதம் அப்போதும் ஒன்றும் சொல்லாமல் கண்கலங்க நின்றிருந்தான்.

“டேய் கெளதம்… இப்பவாவது வாயைத் திறந்து சொல்லேன் டா… நிலாவை உனக்குப் பிடிச்சிருக்கு… யாருக்கும் விட்டுத்தர மாட்டேன்னு…” என்றான் கார்த்திக்.

கெளதம் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

“நீங்க ரெண்டு பேரும் சொல்லுவீங்களான்னு கடைசி வரைக்கும் பார்த்தேன்… ம்ஹூம்… கடைசில அம்மு தான் தொடங்கி வச்சிருக்கா…”

“கார்த்திக்… அது வந்து…” என்று கெளதம் வார்த்தைகள் வராமல் திணறினான்.

“கெளதம்… நிலா உன்னை தான் விரும்பறா… உன் மனசுலயும் அவ இருக்கான்னு உங்களைப் பார்த்ததுமே புரிஞ்சுகிட்டேன்… இப்ப அவளுக்கு நீதான் வேணும்னு அவ வாயாலயே சொல்லிட்டா,இன்னும் தயங்காதே…” என்றான்.

“அடடா… என்ன இது, மாப்பிள்ளை யாருன்னு நீங்க இன்னும் முடிவு பண்ணலையா… முகூர்த்த நேரம் வேற முடியப் போறது… யாராவது ஒருத்தர் பொண்ணு பக்கத்துல வந்து நில்லுங்கோ… கல்யாணத்தை முடிச்சிட்டு நேக்குக் கிளம்பணும்…” அவசரப்படுத்தினார் ஐயர்.

கார்த்திக்கைக் கண்ணீருடன் ஏறிட்ட கெளதம், அவனது கைகளை நன்றியுடன் பிடித்துக் கொண்டான். நிலாவின் அன்னை, மகளிடம் கண்களாலேயே சம்மதம் கேட்க, அவள் கண்ணில் வழியும் கண்ணீருடன், உதட்டில் நிறைந்த சிரிப்புடன் சந்தோஷமாய்த் தலையாட்டினாள்.

“கெளதம்… இனி எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்… கார்த்திக்கே நீங்கதான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படுறான்… முகூர்த்த நேரம் முடியறதுக்குள்ளே நீ நிலாவோட கழுத்துல தாலி கட்டுப்பா… என்ன சம்மந்தி… உங்களுக்கும் இதுல சம்மதம் தானே…” என்றார் சுதாவின் அன்னையிடம்.

“நா…நான் என்ன…” என்று திணறியவர், “சம்மதம் தான் சம்மந்தி…” சம்மதித்துவிட்டு, “நிலா… உன் கழுத்துல நீயே கட்டிகிட்ட மஞ்சள் கயிறை எடுத்திடுமா… கெளதம், வந்து நிலா பக்கத்துல நில்லுப்பா…” என்றார்.

கார்த்திக், அவன் கழுத்தில் இருந்த மாலையை கௌதமின் கழுத்தில் போட, நிலாவின் அருகில் அழைத்து வந்து நிறுத்தினான் கதிர். அவனுக்கும் அவர்கள் சம்மதத்துடன் அவன் நண்பன் நிலாவைக் கை பிடிப்பதில் சந்தோசமே…

நிலாவும், கௌதமும் அருகருகில் மாலையுடன் நிற்பதைக் கண்ட அம்மு, “ஹய்யா… அப்பாவுக்கும், அம்மாவுக்கும் கல்யாணம் நதக்கப் போகுது…” என்று சந்தோஷத்துடன் கை தட்டிக் குதூகலித்தாள்.

அதைக் கண்டதும் கெளதமின் முகத்திலும் மெல்ல புன்னகை எட்டிப் பார்த்தது.  நிலாவை மெல்ல ஏறிட, அவள் தலையைக் குனிந்து நின்றிருந்தாள். 

“சரி… சரி… நாழியாறது, இந்தாங்க… இந்த மஞ்சள் தாலியைப் பொண்ணு கழுத்துல கட்டுங்கோ…” என்றார் அய்யர்.

அனைவரும் அட்சதை தூவ, அவளது சங்குக் கழுத்தில் மங்கள நாணைச் சார்த்தினான் கெளதம். அவனது விரல்கள் அவளது பின் கழுத்தில் மென்மையாய் உரச, கண்ணை மூடிக் கொண்டிருந்த அவளது தேகம் சிலிர்ப்பதை உணர்ந்தான். அடுத்து மாலையும் மாற்றிக் கொண்டனர்.

அம்முவுக்கு பயங்கரக் கொண்டாட்டம். சந்தோசத்துடன் அவர்கள் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கார்த்திக் மனதுக்குள் வேதனையை சுமந்து கொண்டு வெளியே எதையும் காட்டிக்கொள்ளாமல் சிரித்து பேசிக் கொண்டிருந்தான்.

ஒருவழியாய் கல்யாணம் முடிந்த சந்தோஷத்தில் அய்யர் கிளம்பி சென்றார். நிலாவின் அன்னையின் காலில் அவர்கள் விழுந்து ஆசி பெற்றதும் அவர்,

“சம்மந்தி நீங்களும் ஆசிர்வாதம் பண்ணுங்க…” என்றார் சுதாவின் அன்னையிடம். அவரும் ஆசிர்வதித்தார்.

கௌதமும், நிலாவும் கார்த்திக்கின் முன்னில் ஒருவித தர்மசங்கடத்தில் இருந்தனர். இப்படி எல்லாம் நடக்குமென்று அவர்களும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் அமைதியாகவே இருக்க, சுதாவும் கதிரும் தான் சிறிதாவது பேசிக் கொண்டிருந்தனர்.

“சரி சம்மந்தி… மத்த விவரமெல்லாம் வீட்டுல போயிப் பேசிக்கலாம்… எல்லாரும் ஹோட்டல்ல சாப்பிட்டு நமக்காகக் காத்திட்டு இருப்பாங்க… நாமளும் சாப்பிட்டு வீட்டுக்குக் கிளம்பலாம்… மத்த சம்பிரதாயம் எல்லாம் இருக்கே…” என்றார் சுதாவின் அன்னை.

“ம்ம்… சரி சம்மந்தி…” என்று நிலாவின் அம்மா கூறியதும், அனைவரும் கிளம்பினர். அன்னை அமர்ந்திருந்த சக்கர நாற்காலியை நிலாவே தள்ளிக் கொண்டு வந்தாள். அம்மு கௌதமின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தாள்.

நிலாவின் முகம் சிறு குற்றவுணர்வுடன் எதையோ யோசித்துக் கொண்டிருந்தது.

“அப்பா… இவங்கல்லாம் யாது… நாம எங்க போதோம்…” என்றது அம்மு.

“இவங்க தான் உன் பாட்டி… இவர் உன் கதிர் மாமா… நாம எல்லாரும் சாப்பிட ஹோட்டலுக்குப் போறோம்…” விளக்கினான் கெளதம்.

“ஓ… ஏன் இவங்கல்லாம் நம்ம வீத்துக்கு வந்ததே இல்ல… இந்த அங்கிள் யாதுப்பா…” என்றாள் கார்த்திக்கைக் காட்டி.

“அ…அவரு…” என்று கெளதம் திணற, “நான் தான் கார்த்திக் அங்கிள் செல்லம்… உன் அப்பாவோட பிரண்டு…” என்றான் அவளது தலையை கலைத்துக் கொண்டே.

“ஓ… நானும் சஞ்சயும் பிரந்தா இதுக்குத போல நீங்களும் பிரந்தா…” அவளது கேள்வியில் கார்த்திக் சிரித்தான். பிறகு அனைவரும் காரில் ஏற சரவணபவனை நோக்கி வண்டி கிளம்பியது. சாப்பிட்டு முடித்து ஊருக்கு செல்ல வேண்டியவர்களை வண்டியில் அனுப்பிவிட்டு குடும்பத்தினர் மட்டும் சுதாவின் வீட்டுக்கு சென்றனர்.

சுதாவின் வீட்டு வாசலில் கார் நின்றதும், புதுமணத் தம்பதிகளை வாசலில் நிற்க வைத்து ஆரத்தி எடுக்க அடுத்த வீட்டுப் பெண்ணை ஏற்பாடு செய்திருந்தார் சுதாவின் அன்னை. ஆரத்தி எடுத்து முடிந்து இரண்டு ஜோடிகளும் வாசலுக்கு வர,

“நிலா… வலது காலை எடுத்து வச்சு உள்ளே வாம்மா…” என்றார் சுதாவின் அன்னை. அதைக் கேட்டதும் மற்றவர்களுக்கு அது சாதாரண வார்த்தையாய்த் தோண, கதிரின் அன்னையின் முகமோ யோசனையுடன்  மலர்ந்தது.

அடுத்து புதுமணத் தம்பதியருக்கு பால், பழம் கொடுக்கும் சடங்கெல்லாம் முடிந்ததும் கார்த்திக் அவனது கடந்த மூன்று ஆண்டுகளைப் பற்றி சொல்லி முடித்தான். அதைக் கேட்டதும், அனைவரும் அதிர்ந்து போயினர்.

“வாழ்க்கைல இப்படி எல்லாம் கூடவா நடக்கும்… விதி எப்படில்லாம் விளையாடி இருக்கு…” என்று அங்கலாய்த்தார் நிலாவின் அம்மா. நிலாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“கா…கார்த்திக்… நாங்க உன்னைக் காணாம ரொம்பத் தவிச்சுப் போயிட்டோம்… என்ன பண்ணுறது, ஏது பண்ணுறதுன்னு ஒண்ணும் புரியலை… ஊருக்கு திரும்பி போகலாம்னு நினைச்சாலும் பயமா இருந்துச்சு… பண்ணின தப்பு அப்படி… என்னை மன்னிச்சிருடா கதிர்… அம்மா… நீங்களும் மன்னிச்சிருங்க…” என்றான் கெளதம்.

“ம்ம்… எத்தன தடவைதான் மன்னிப்பு கேப்பிங்க… இனி அதெல்லாம் பேசி என்ன ஆகப் போகுது… ஊரை விட்டு என் பொண்ணு ஓடிப் போனது கௌதமோடன்னு தான் எல்லாரும் நினைச்சுட்டு இருக்காங்க… அதை உண்மையாக்குற போல இப்ப உங்களுக்குக் கல்யாணமும் ஆயிடுச்சு… இனி இந்த விஷயத்தைப் பத்தி எல்லாம் அங்கே ஏதும் மாத்தி சொல்ல வேண்டாம்… கார்த்திக் ஜெயிலுக்குப் போன விஷயமும் யாருக்கும் தெரிய வேண்டாம்… இனியாவது எல்லாரும் நிம்மதியா புது வாழ்க்கையை ஆரம்பிக்கப் பாருங்க…” என்றார் கதிரின் அம்மா.

“ம்ம்… சரிங்கம்மா, நீங்க ரெஸ்ட் எடுங்க… நான் கொஞ்சம் கெளதம், நிலாவோட தனியாப் பேசிட்டு வந்திடறேன்…” என்றான் கார்த்திக்.

“அம்மா… நானும் நம்ம கிளம்பறதுக்கான ஏற்பாட்டைக் கவனிக்கிறேன்…” என்ற கதிர் எழுந்து வெளியே சென்றான். கல்யாணத்துக்கு வந்தவர்களில் ஒரு சிலர் மட்டும் வாசலில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தனர்.

“அண்ணி… அந்த ரூமுக்குள்ள போயி பேசிக்கங்க…” என்று அவளது அறையைக் காட்டினாள் சுதா.

“அம்முச் செல்லம்… நான் உனக்கு ஸ்நேக்ஸ் எடுத்துத் தரேன், வா…” என்று அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

கெளதமும், நிலாவும் ஒரு அவஸ்தையுடன் குனிந்து கொண்டே கார்த்திக்கைத் தொடர்ந்து சுதா காட்டிய அறைக்குள் நுழைந்தனர். யார் முதலில் தொடங்குவது எனத் தெரியாமல் நீண்ட ஒரு அமைதி நிலவ, நிலாவே முதலில் தொடங்கினாள்.

“கா… கார்த்திக்… முதல்ல என்னை மன்னிச்சிருங்க… அறியாத வயசுல நீங்க காதல்னு சொன்னதும், கெளதம் மேல உள்ள கோபத்துல நான் சம்மதம்னு சொல்லிட்டேன்… நானும் உங்களை காதலிக்குறதா நினைச்சுக் காத்திட்டும் இருந்தேன்… ஆ…ஆனா… அப்புறம் தான், நான் கௌதமைக் காதலிக்கிறேன்னு புரிஞ்சுகிட்டேன்… ஏத்துகிட்ட காதலை ஒத்துக்கறதா, உணர்ந்த காதலை மறக்குறதான்னு புரியாமத் தவிச்சுகிட்டு இருந்தேன்… கெளதம் கிட்ட சொல்லவும் முடியலை… நீங்க எப்படி எடுத்துக்குவீங்களோன்னு பயமா இருந்துச்சு… ஆனா நீங்க…” தயங்கியவள், “கார்த்திக்… உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னே தெரியலை…” என்றவள் கண்ணீருடன் கை கூப்பினாள். அவளது வார்த்தைகள் மிகவும் மென்மையாய் அதே நேரம் அழுத்தமாய் வந்தது.

அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த கெளதமின் மனதில் தோன்றிய உணர்வு, சந்தோஷமா, வருத்தமா… எனப் புரியவில்லை. நிலாவின் மனதில் தன் மீது தோன்றிய காதலை நினைத்து சந்தோஷப் படுவதா, அதைப் புரிந்து கொள்ளாமல் இருந்த தன்னை நினைத்து வருந்துவதா… குழம்பினான்.

கார்த்திக்கிற்கு அவள் சொல்வதைப் புரிந்து கொள்ள முடிந்தது. நிலா அப்படியொன்றும் அவனை உருகி உருகிக் காதலித்ததில்லை… அவனது காதலை ஏற்றுக் கொண்டாள் அவ்வளவே…

இந்த மூன்று வருடப் பிரிவும், அனுபவமும், கார்த்திக்கிற்கும் நல்லவொரு பக்குவத்தைக் கொடுத்திருந்தது. நிலா இல்லாவிட்டால், செத்துப் போய்விடுவேன் என்று கூறிய பழைய கார்த்திக் இல்லை… மனதுக்குள் வேதனையும், வருத்தமும் இருந்தாலும் அதில் அவன் உடைந்து போய்விடவில்லை. அடுத்து கெளதம் தொடங்கினான்.

“டேய் கார்த்திக், நீ நிலாவ எந்த அளவு லவ் பண்ணினேன்னு எனக்குத் தெரியும்… அதனாலதான் நான் கதிருக்கு கூட துரோகம் பண்ணிட்டு உங்களுக்கு உதவி செய்தேன்… இப்போ நானே உன் காதலை பிரிச்ச போல குற்றவுணர்வா இருக்குடா…” கௌதமின் குரல் உடைந்திருந்தது. நிலாவுக்கும் அவன் சொன்னது மன வருத்தத்தைக் கொடுக்க, தலை குனிந்து நின்றிருந்தாள்.

“கெளதம்… இனிமேல் நீ அதெல்லாம் நினைக்காதே… நான் மட்டும் விரும்பினா போதுமா… நிலாவுக்கு விருப்பம் இல்லாம நாங்க கல்யாணம் பண்ணினாலும் எப்படி சந்தோஷமா வாழ முடியும்… நீ அன்னைக்கு எந்த பலனும் எதிர்பார்க்காம நட்புக்காக இதை செய்ததாலே, உன்னை உயிரா வளர்ந்த உன் அப்பாவும் இறந்துட்டார்… அன்னைக்கு நீ நிலாவை அழைச்சிட்டு வரலைன்னா, அவ அன்னைக்கே சுதாகரோட மனைவியா ஆகியிருப்பா… நிலா உனக்குன்னு இருந்ததால தான் இத்தனையும் நடந்து கடைசில நீங்க சேர்ந்திருக்கீங்க… எதுவும் காரணம் இல்லாம நடக்கறதில்லை… நீங்க சேரணும்கிறது தான் விதி…”

“கார்த்திக்… நீ இவ்ளோ ஈசியா எடுத்துக்குவேன்னு நான் நினைக்கவே இல்லை… நீ எப்படி எங்களைப் புரிஞ்சுகிட்டே…” என்றாள் நிலா.

“நிலா… இவ்ளோ நாள் கழிச்சு என்னைப் பார்த்தும் உன்கிட்டே எந்த சந்தோசமும் தெரியலை… ஒரு தவிப்பு தான் தெரிஞ்சது… கெளதம் முதல்ல சந்தோஷப் பட்டாலும் அப்புறம் அவனோட முகமும் சரியில்லை… அம்முவோட உங்களை பார்க்கும்போது ஒரு அழகான குடும்பம் போல இருந்திங்க… அதைப் பிரிக்க எனக்கு மனசு வரலை… நமக்கு கல்யாணம்னு சொன்னதும் நீ கெளதமைப் பார்த்த பார்வைல அவ்ளோ தவிப்பு இருந்துச்சு…” என்றவன், கெளதமிடம் திரும்பினான். “கெளதம்… இந்தத் தவிப்புக்கு பேர் தான் காதல்… இதை எனக்காக அவ கண்ணில் நான் பார்த்ததே இல்லை… உனக்காக அவ மனசு துடிக்கறதை அந்தக் கண்களின் தவிப்பு உணர்த்துச்சு…”

கார்த்திக், கௌதமிடம் சொல்லிக் கொண்டே போக, அவர்களின் உணர்வுகளை கார்த்திக் எப்படி சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறான் என்று திகைப்புடன் நினைத்துக் கொண்டான் கெளதம்.

“அப்போதான் முடிவெடுத்தேன்… நீங்க சேர்றது தான் சரின்னு… இதுனால நான் மனசொடிஞ்சு போயிடுவனோன்னு நீங்க வருத்தப்பட வேண்டாம்… நான் இப்ப எதுக்கும் தயாரான மனசோட தான் இருக்கேன்… கொஞ்ச நாள் வருத்தம் இருக்கும், அப்புறம் எனக்குன்னு எங்காவது பொறந்திருக்குற சொங்கியோ மங்கியோ கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆயிடுவேன்… நான் ஒரு கடந்த காலம், அது அப்படியே போகட்டும்… உங்களுக்கு எந்த குற்றவுணர்வும் வேண்டாம்… நீங்க சந்தோஷமா இருந்தா போதும்…” நிலா, அவன் சொன்னதைக் கேட்டு மனதில் உள்ள பாரம் குறைந்தது போல உணர்ந்தாள். கெளதம் கார்த்திக்கின் கைகளைப் பிடித்துக் கொண்டான்..

“டேய் கார்த்திக்… உன்னை இங்கே பார்த்ததும் இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு வந்துடுச்சேன்னு எனக்கும் முதல்ல சந்தோஷமா தான் இருந்துச்சு… ஆனா உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்னதும் என்னால தாங்க முடியலை… எப்போ எந்த நிமிஷத்தில் நிலா என் மனசுக்குள்ளே வந்தான்னு எனக்குத் தெரியலை… அதைப் பத்தி யோசிக்கும்போதெல்லாம் அவ உனக்காக காத்திருக்கிறான்னு நினைச்சு என் மனசை சரி பண்ணிக்குவேன்… அதெல்லாம் என்னை நானே ஏமாத்திக்க மட்டும் தான்னு இப்போ புரிஞ்சிடுச்சு… என்னை மன்னிச்சிடு டா… காதலுக்கு இத்தனை சக்தி இருக்கும்னு நான் நினைக்கலை… காதலுக்காக எதையுமே விட்டுக் குடுக்கலாம்… ஆனாலும் காதலை விட்டுக் கொடுக்குறது ரொம்பக் கொடுமைன்னு நான் உணர்ந்துட்டேன்… ரொம்பத் தேங்க்ஸ்டா கார்த்திக்… என்னையும் காதலை உணர வைச்சதுக்கு…” என்றான் கண்ணீருடன்.

Advertisement