Advertisement

“டேய் கார்த்திக்…” என்று ஓடிச் சென்று அவனைக் கட்டிக் கொண்டான் கெளதம். அம்முவைப் பற்றி நிலா சொல்லிக் கொண்டிருக்கும்போதே கார்த்திக் அங்கு வந்துவிட்டான்.

அவனை வெறுப்புடன் நெருங்கிய கதிர், “ராஸ்கல்… எல்லாத்தையும் நீ செய்துட்டு நடுவுல காணாமப் போயிட்டு இப்போ எதுக்குடா புதுசா வந்து என்ட்ரி கொடுக்கறே…” என்று அவன் சட்டையைப் பிடித்தான். அதற்குள் கெளதம் ஓடிச் சென்று அவனைப் பிடித்து விலக்கினான்.

“கதிர்… ப்ளீஸ் டா… உங்க வீட்ல பொண்ணு கேட்டா நீங்க நிலாவைக் கொடுக்க மாட்டீங்கன்னு தான் அவன் யோசிக்காம இப்படில்லாம் பண்ணிட்டான்…. இனி இதைப் பத்திப் பேசி எதுவும் ஆகப் போறதில்லை… இனி அடுத்தது என்ன செய்யுறதுன்னு யோசிப்போம்…” கதிர் அவன் சட்டையை விட்டுவிட்டு நகர்ந்தான்.

அமைதியாய் நின்று கொண்டிருந்த நிலாவின் முகத்தை நோக்கிய கார்த்திக்கால் அவள் மனதில் உள்ள உணர்ச்சிகளைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

“எப்படிடா இருக்கே… என்னடா இப்படிப் பண்ணிட்டே… இவ்ளோ நாள் எங்கே போயிருந்தே… இங்கே எப்படி வந்தே…” படபடத்தான் கெளதம். கார்த்திக்கைக் கண்டதும் அவன் மனதில் ஒரு நிம்மதி பரவியது. கதிருக்கும், மற்றவர்களுக்கும் எல்லாம் கெளதம் நிலாவின் கணவன் இல்லை என்று தெரிந்ததும் ஏனோ சிறு ஏமாற்றம் மனதில் பரவியது. அது அவர்களுக்கே ஏனென்று புரியவில்லை.

“கெளதம்…” அவனது கைகளை சந்தோசத்துடன் பிடித்துக் கொண்டவன், “எல்லாம் சொல்லறேண்டா….அம்மாகிட்டே நீ கொடுத்த முகவரியை வாங்கிட்டு நேத்து நைட்டே கிளம்பிட்டேன்… காலைல சென்னை வந்து தேடிக் கண்டுபிடிச்சு வீட்டுக்கு வந்தேன்… அங்கிருக்குற ஹவுஸ் ஓனர் அம்மாதான், நீங்க வடபழனில ஒரு கல்யாணத்துக்குப் போயிருக்கீங்கன்னு சொன்னாங்க… சரி… கோவில்லயே உங்களைப் பார்க்கலாம்னு நினைச்சு இங்கே வந்தேன்…” என்றான் அவன்.

“ம்ம்… எப்படியோ இப்பவாவது வந்து சேர்ந்தியே… இவ்ளோ நாள் எங்கடா போன… உனக்காக நிலா எத்தனை நாளா காத்திட்டிருக்கா…”

“ம்ம்… எல்லாத்தையும் சொல்லறேன் கெளதம்… எத்தனை பழிச்சொல்லையும், கஷ்டத்தையும் அனுபவிக்க வேண்டி வந்தாலும் எனக்காக நீ எல்லாத்தையும் தாங்கிட்டு இருக்கே… உனக்கு நான் நன்றின்னு ஒரு வார்த்தை சொன்னாப் போதாது…” என்றவன் அவனை அணைத்துக் கொண்டு கண் கலங்கினான்.

“டேய்… நீ நிலா மேல உயிரையே வச்சிருந்தேன்னு எனக்குத் தெரியும்… அப்படி இருந்தும் நீ வராமப் போயிட்டேன்னா ஏதோ காரணம் இல்லாம இருக்காது… உன்னைப் பார்த்ததும் தான் எனக்கு நிம்மதியா இருக்கு… இத்தனை நாள் நிலாவோட காத்திருப்புக்கு பலனா நீ வந்து சேர்ந்தியே… எப்படியோ என் கடமை முடிஞ்சுது… நிலாவை உன்கிட்டே நல்லபடியா ஒப்படைச்சுட்டேன்… இனி நீயாச்சு, அவ குடும்பமாச்சு… நீங்களே பேசி என்ன பண்ணனும்னு முடிவு பண்ணிக்கோங்க…” என்றவன், நிலாவின் அன்னையிடம் வந்தான்.

“அம்மா… என்னை மன்னிச்சிருங்கம்மா, ஒரு நண்பனோட காதலுக்கு வேண்டி இன்னொரு நண்பனுக்கு நான் துரோகம் செய்ய வேண்டியதா போயிடுச்சு… அந்த காரியத்தால நாங்க நிறைய துன்பம் அனுபவிச்சிட்டோம்… உங்களுக்கும் பெரிய துன்பத்தைக் கொடுத்திட்டோம்… எல்லாத்துக்கும் சேர்த்து ஒண்ணா மன்னிப்பு கேட்டுக்கறேன்… இனி உங்க பொண்ணுக்கு என்ன பண்ணனும்னு நீங்க தான் முடிவெடுக்கணும்…” என்று அவரது கையைப் பிடித்து மன்னிப்பு கேட்டான்.

“ம்ம்… உங்க மேல எங்களுக்கு கோபமும் வெறுப்பும் இருந்தது உண்மைதான்… இனி அதைப் பத்திப் பேசி என்ன ஆகப் போகுது… நீ சொன்ன மாதிரி அடுத்து என்ன பண்ணறதுன்னு யோசிப்போம்…” என்றவர் நிலாவைப் பார்த்தார். அவள் யாரையும் பார்க்காமல் குனிந்து நின்று கொண்டிருக்க கண்கள் மட்டும் கண்ணீரைப் பொழிந்து கொண்டிருந்தன.

நெஞ்சோடு அணைத்து அவள் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் சொல்ல வேண்டுமென கார்த்திக்கின் நெஞ்சம் துடித்தது. அவனை நினைத்து தான் இப்படிக் கண்ணீர் வடிக்கிறாள் என அவன் நினைத்துக் கொண்டான்.

அவளை மறுபடியும் கார்த்தியிடம் இருந்து பிரித்து விடுவோமோ என நினைத்து தான் அழுகிறாளோ என நிலாவின் அன்னை நினைத்துக் கொண்டார். கதிர் கோபத்துடன் நின்று அவர்கள் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

நிலாவின் அன்னையிடம் வந்த கார்த்திக், “அத்தை… அன்னைக்கு உங்க பொண்ணை எனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுங்கன்னு கேக்காம நானே முடிவு பண்ணி இப்படிப் பண்ணினது தப்புதான்… எல்லாருக்கும் மனக் கஷ்டத்தைக் கொடுத்ததுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன்… இப்ப உங்ககிட்டே கேக்கறேன், உங்க பொண்ணை எனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுங்க… எங்களைப் பிரிச்சுடாதிங்க, ப்ளீஸ்…” என்றான்.

எல்லோரும் அவர் என்ன சொல்லப் போகிறார் எனப் பார்த்துக் கொண்டிருக்க, நிலாவிடம் சென்ற அம்மு, “அம்மா… ஏன்மா மதுபதியும் அழதே… அழாதம்மா…” என்று நிலாவை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தாள். நிற்காமல் அவள் கண்ணில் இருந்து வழிந்து கொண்டிருந்த கண்ணீர், கௌதமின் மனதை கனக்கச் செய்தது. ஓடிச் சென்று அவள் கண்ணீரைத் துடைக்கப் பரபரத்த கைகளை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாய் இருந்தான்.

எல்லோரும் அவரவர் யோசனையில் அமைதியாய் இருக்க, நிலாவின் அன்னை வாயைத் திறந்தார்.

“கதிர்… இவங்க கல்யாணம் நடத்தறதுக்கு பணத்தைக் கட்டிட்டு ஐயரைக் கூட்டிட்டு வா…” என்றார். அதைக் கேட்டதும் கார்த்திக்கின் இதழ்கள் புன்னகையில் விரிய கண்கள் காதலோடு நிலாவை ஏறிட்டது.

அன்னையின் சொல்லைக் கேட்டதும் சட்டென்று நிமிர்ந்தாள் நிலா. கௌதமின் கண்கள் அடிபட்ட பார்வையுடன் அவளை நோக்கின. அவனது கண்களை சந்தித்த அவளது கண்களில் தேங்கி நின்ற வலி அவனது இதயத்துக்குள் பாய, முதன் முறையாய் ஒரு சொல்ல முடியாத உணர்வு மனமெங்கும் பரவுவதை உணர்ந்தான்.

“அவ்வளவு தான்… என் நிலா, இனி வேறொருவனுக்கு சொந்தமாகி விடுவாள்… என்னை விட்டுப் போய் விடுவாள்… நான் மீண்டும் அநாதை தான்… என் நிலாவா, இனி அப்படி நினைக்க கூடக் கூடாது… அவள் எப்போது என் நிலாவானாள்… அவள் என்ன, என்னையா காதலித்தாள்… நான் ஏன் கலங்க வேண்டும்…” ஒரு நிமிடம் அவனையும் மீறி முகத்தில் தெரிந்த வேதனையை மனதுக்குள்ளேயே அடக்கிக் கொண்டான்.

கார்த்திக் வந்ததில் தன் பொறுப்பு முடிந்தது என மிகவும் சந்தோஷமாகத் தன்னைக் காட்டிக் கொண்டவன் மனதுக்குள் அழுது கொண்டிருந்தான். காதலின் வலி இத்தனை கொடுமையாய் இருக்கும் என அவன் நினைக்கவில்லை.

“அம்மா… நீங்க என்ன சொல்லறிங்க…” எகிறினான் கதிர்.

“கதிர்… யாருக்கு யாருன்னு நாம முடிவு பண்ண முடியாது… அது கடவுள் போட்டு வச்ச முடிச்சு… அதன்படி தான் எல்லாம் நடக்கும்… கெளதம் நிலாவைக் கல்யாணம் பண்ணிட்டான்னு தானே இவ்ளோ நாள் கோபப்பட்டே… இப்போ கார்த்திக் தான் அவள் புருஷனா வரணும்னு இத்தனை நாள் காத்திட்டு இருக்கான்னு தெரிஞ்சு போச்சு… இதான் கடவுளோட கணக்குன்னு நினைச்சு நாமளே கல்யாணத்தை நடத்திக் கொடுக்கறது தான் மரியாதை… நான் சொன்னதை செய்…” என்றவர் நிலாவிடம் திரும்பினார்.

“நிலா, போய் முகத்தைக் கழுவிட்டு கல்யாணத்துக்குத் தயாராகு… மாப்பிள்ளை, மத்ததை அப்புறம் பேசிக்கலாம்… நீங்களும் தயாராகுங்க…” என்றவர், “சம்மந்தி… நீங்க இவங்க கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைப் பண்ணிடுங்க…” என்றார் கதிர் கோபத்துடன் நிற்பதைப் பார்த்து. மகளிடம் கல்யாணத்துக்கு சம்மதம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை… என்று அவருக்குத் தோன்றியது.

“அலமு… நிலாவைக் கூட்டிட்டுப் போமா…” என்ற சுதாவின் அன்னை, நிலாவோடு ஒட்டிக் கொண்டு நின்ற அம்முவை, “செல்லம்… நீ அப்பாகிட்ட போடா… அம்மா முகம் கழுவி வரட்டும்…” என்றார். கெளதமின் வாடிய முகம் அவருக்கு மனதை வருத்தியது. அவரே கோவில் அலுவலகத்தில் இவர்களின் கல்யாணத்துக்கு பணத்தைக் கட்டி ரசீது வாங்கி ஐயருடன் வந்தார்.

அம்முவுக்கு எதுவும் புரியா விட்டாலும் எல்லோரும் கோபம் இல்லாமல் பேசியதே சந்தோஷமாய் இருந்தது. “அப்பா…” என்று கெளதமிடம் ஓடியவள் அவனைக் கட்டிக் கொண்டாள்.

ஐயர் அதே சன்னிதியில் அடுத்து இவர்களின் கல்யாணத்துக்கான ஏற்பாடுகளை கவனிக்கத் தொடங்கினார். அவருக்கு இன்னொரு வருமானம் கிடைத்த சந்தோசம்.

கோபமாய் நின்று கொண்டிருந்த கதிரைக் காட்டி, சுதாவிடம் பேசுமாறு கண்ணில் ஜாடை காட்டினார் அவளது அன்னை. தயக்கத்துடன் கணவனின் அருகில் வந்தாள் சுதா.

“எ…என்னங்க…” யோசனையுடன் திரும்பினான் கதிர்.

“ம்ம்… சொல்லு…”

“இல்ல… நான் இந்த விஷயத்துல ஏதாவது சொன்னா உங்களுக்குப் பிடிக்குமா, இல்லியான்னு தெரியலை… உங்களோட மனைவியா இருந்தாலும் இப்படி  சொல்லுறது சரியா தப்பா… எனக்கு அந்த உரிமை இருக்கான்னும் புரியலை, அதான் சொல்லலாமான்னு யோசிக்கறேன்…” என்றாள் தயங்கிக் கொண்டே.

“சுதா… சொல்ல வந்ததை சொல்லு…” அதட்டலாய் ஒலித்தது அவனது குரல்.

“அது…வந்து… நடந்தது நடந்திருச்சு… இப்போ கல்யாணம் வரைக்கும் வந்தாச்சு… இனியும் நீங்க இப்படி கோபமா இருக்கறதுல அர்த்தமே இல்லை… நிலா அண்ணி, இத்தனை நாள் அண்ணனுக்காக எவ்ளோ கஷ்டமெல்லாம் அனுபவிச்சுட்டாங்க… இனியாவது அவங்களை சந்தோஷமா சேர்த்தி வைக்கலாமே…” என்றாள்.

ஒரு நிமிடம் அவள் சொன்னதை யோசித்தவனுக்கு, அது சரிதான் என்று தோன்றினாலும் ஏற்றுக் கொள்ளத்தான் மனது வரவில்லை. யோசித்தவன், அவளிடம் தலையாட்டிவிட்டு அன்னையிடம் சென்றான்.

“அம்மா… திடீர்னு இப்போ நிலாவுக்கும் கார்த்திக்குக்கும் கல்யாணம்னு சொல்லிட்டீங்க… அப்போ அந்தக் குழந்தை…”

“அதைப் பத்தி எல்லாம் இத்தனை நாள் அவங்க யோசிக்காமலா இருப்பாங்க… அதை அவங்க முடிவுக்கே விட்டுடுவோம்…” என்றார்.

ஐயர் பூஜையைத் தொடங்கி இருந்தார். அவசரத்துக்கு மஞ்சள் சரடில் மஞ்சள் கிழங்கை வைத்துக் கட்டி மாங்கல்யமாக்கி இருந்தனர்.

இது எதையும் பார்க்க முடியாமல் கெளதம் அம்முவைக் கூட்டிக் கொண்டு சற்றுத் தள்ளி ஓரமாய் சென்று நின்று கொண்டான். மனதுக்குள் இடி, மழை, புயல் எல்லாம் மாறி மாறி வந்து கொண்டிருக்க தனிமையைத் தேடித் தள்ளிச் சென்றான். அப்படியே நிலத்தோடு புதைந்து விட மாட்டோமா என்பது போல் மனது வலித்தது. அங்கே நின்றால் அவனது முகமே காட்டிக் கொடுத்து விடுமோ என நினைத்து அஞ்சினான்.

“மாப்பிள்ளைக்கு இந்த மாலையைப் போட்டு அழைச்சிட்டு வாங்கோ…” என்றது ஐயரின் குரல். அதைக் கேட்டதும் கதிரே கார்த்திக்கை அழைத்து வரச் சென்றான்.

“கார்த்திக்… வா….” என்ற கதிரை புன்னகையுடன் பார்த்தவன், கதிர்… என்னை மன்னிச்சுட்டியா…” என்றான் அவன் தழுதழுக்க.

“இனி பழசையே நினைச்சுட்டு இருந்து என்ன பிரயோசனம்… அம்மா உன்னை ஏத்துகிட்டாங்க… எனக்கென்ன… சந்தோஷமா மாப்பிள்ளையா வந்து உக்கார்…”

“ரொம்ப நன்றி கதிர்…” என்றவன் நெகிழ்வுடன் கையைப் பிடித்துக் கொண்டான். அவனது கழுத்தில் மாலையைப் போட்டு கதிர் அழைத்து வந்தான்.

மந்திரத்தை சொல்லிக் கொண்டிருந்த ஐயர், “அடுத்து மணப்பெண்ணை அழைச்சிண்டு வாங்கோ…” எனக் குரல் கொடுத்தார்.

நிலாவின் கழுத்தில் மாலையைப் போட்டு அலமுவே அழைத்துக் கொண்டு வந்தாள். அவளது முகத்தில் காதலித்து, காத்திருந்தவனை, கை பிடிக்கப் போகும் சந்தோசம் சிறிதும் இல்லை… கலங்கிய கண்களும் சிவந்த மூக்கும் புன்னகை தொலைத்த முகமும் அவளுக்கு விருப்பமில்லாத கல்யாணத்துக்கு தயாரானவள் போலவே இருந்தாள். கார்த்திக்கின் அருகில் வந்து நின்றவள், அவனைப் பார்க்கவே இல்லை.

“நிலா… என்னம்மா… அதான் நீ நினைச்சவனையே கல்யாணம் பண்ணிக்கப் போறியே… இன்னும் எதுக்கு குழப்பமா இருக்கே…” என்றார் அவளது அன்னை.

“ஒ…ஒண்ணும் இல்லைம்மா…” என்றவள் மெல்லப் பார்வையை உயர்த்தினாள். அவளது கண்கள் கௌதமைத் தேடியது. அம்முவும் அவனும் ஓரமாய் நிற்பதைப் பார்த்துவிட்டு அவனது கண்களை கெஞ்சலோடு ஏறிட்டாள்.

“அப்பா… வாப்பா…” அம்மாகித்த போகலாம்…” என்ற அம்மு கௌதமையும் அழைத்துக் கொண்டு அவளிடம் வந்தாள். கார்த்திக்கும் நிலாவும் மாலையோடு அருகருகில் நிற்பதைக் கண்டவளுக்கு ஏனோ மனதுக்குப் பிடிக்கவில்லை. ஏதோ யோசித்தவள் கௌதமிடம் கேட்டாள்.

“அப்பா… அம்மா ஏன் உங்க பக்கத்துல நிக்காம அந்த அங்கிள் பக்கத்துல நிக்குதாங்க…” அதைக் கேட்டதும் துடித்த மனதை அடக்கிக் கொண்டு பதில் சொல்ல முடியாமல் இறுகிய முகத்துடன் நின்றான் கெளதம்.

“அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்டா செல்லம்… அதான், பக்கத்துல நிக்கறாங்க…” என்றான் கதிர்.

“என்ன அங்கிள் சொல்லதிங்க… அம்மாக்கும், அப்பாக்கும் தானே கல்யாணம் நதக்கும்… அப்பா தானே அம்மாவைக் கல்யாணம் பண்ணனும்…” என்றவள்,

“அப்பா… நீங்க வந்து அம்மா பக்கத்துல நில்லுங்கப்பா…” என்று கோபத்துடன் கத்திக் கொண்டே கௌதமை இழுக்க, அதைக் கேட்ட அனைவரும் திகைத்து நின்றனர். மகளின் வார்த்தையைக் கேட்ட நிலாவிடமிருந்து ஒரு கேவல் வெடித்துக் கொண்டு புறப்பட்டது.

காதல் என்ன காகிதமா பெண்ணே…

கசக்கும் போது கிழித்து எறிய…

கண்களால் எழுதிய கவிதையை

கண்ணீரில் கரைக்கிறேன் நான்…

என் எண்ணம் என்ற மெழுகோ

உன் நினைவுத் தீயில் எரிந்திட

மனம் என்ற ஜோதிதான் உருகிடாதோ…

உன்னிடம் மட்டுமே – நான் ஒவ்வொரு

முறையும் தேர்வின்றி தோற்றுப் போகிறேனடி…

நீ மட்டும் தானடி என் அனுமதியின்றி

எனக்குள் நுழைந்தாய்…

நான் இன்னும் போராடிக் கொண்டு

தானிருக்கிறேன் – எனக்கு

வழிவிட மறுக்கும் உன் விழிகளோடு…

வெறுப்போடு கூட வாழ்ந்திடுவேன்…

விருப்பமில்லா உன்னுடன்

எப்படி சேர்ந்திடுவேன்…

என் விருப்பத்திற்குறியவளே… உன்

விருப்பம் மாறியதும் ஏனடியோ…

Advertisement