Advertisement

நிலா – 20

கெளதம் தலை குனிந்து நின்றிருக்க, கதிர் கோபத்துடன் கண்டபடி திட்டிக் கொண்டிருந்தான். கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தவர்களும், கல்யாணத்தில் பங்கெடுக்க வந்தவர்களும் எல்லாம் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க நிலா கண்ணீர் விட்டபடி குற்றவுணர்வுடன் நின்றிருந்தாள். இப்படி ஒரு சந்திப்பை அவள் எதிர்பார்க்கவே இல்லை. அன்னையை சக்கர நாற்காலியில் கண்டதிலேயே அவள் நிலைகுலைந்து போயிருந்தாள்.

கதிர் தான் கல்யாண மாப்பிள்ளை என்று புரியாமல் கௌதமையும் அழைத்து வந்து அவன் அவமானப்படத் தானே காரணமாகி விட்டோமே என்று அவளுக்குள் மருகிக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியுடன் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். கதிர், இத்தனை நாள் மனதில் தேக்கி வைத்திருந்த கோபத்தை எல்லாம் கௌதமைத் திட்டியே தீர்த்துக் கொண்டிருந்தான்.

சுதாவும், அவளது அன்னையும், அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். கதிரின் பேச்சில் இருந்து நிலா அவனது தங்கை, என்பதையும் கெளதமுடன் ஓடிப் போய் விட்டாள் என்பதையும் புரிந்து கொண்டனர். கதிரின் கோபமும், அவனது பேச்சும் எல்லாம் நியாயமே… என்னைத் திட்டுவதில் எந்த வருத்தமும் இல்லை… என்பது போல நின்று கொண்டிருந்தான் கெளதம்.

“துரோகி… நீயெல்லாம் ஒரு நண்பனாடா, எனக்கு உன் தங்கையைப் பிடிச்சிருக்கு… கல்யாணம் பண்ணிக் கொடுன்னு கேட்டிருந்தா சந்தோஷமா பண்ணிக் கொடுத்திருப்பனே… அதை விட்டுட்டு இப்படி வேறோருத்தனுக்கு நிச்சயம் பண்ணி, கல்யாணம் நடக்கப் போறன்னைக்கு அவளைக் கூட்டிட்டுப் போயி ஊரே எங்க குடும்பத்தைப் பார்த்து சிரிக்குற போலப் பண்ணிட்டியே… இதுக்குதான் என்னோட பழகினியா, உனக்காக என்னெல்லாம் விட்டுக் கொடுத்துப் போனேன்… ஆனா நீ…. என்னோட நட்பையே விட்டுக் குடுத்து சுயநலத்தோட இருந்திருக்கே… உன்னைல்லாம் என் நண்பன்னு சொல்லவே அருவருப்பா இருக்கு…” கோபத்துடன் கொப்பளித்தது கதிரின் வார்த்தைகள்.

“அண்ணா, ப்ளீஸ்… அவரை எதுவும் சொல்லாதே… அவர் மேல எந்தத் தப்பும் இல்லை… எல்லாத் தப்பும் என் மேல தான், நீ திட்டுறதா இருந்தா என்னைத் திட்டு…” இடைப்பட்ட நிலாவை முறைத்தவன்,

“ஓடுகாலிக் கழுத… இந்த நம்பிக்கை துரோகிக்கு நீ வக்காலத்தா…” என்று அவளை அடிக்கக் கை ஓங்கினான். 

அதுவரை அமைதியாய் இருந்த கெளதம் அவனது கையைப் பிடித்துத் தடுத்தான்.

“கதிர்… என்னை என்ன வேணும்னாலும் சொல்லு… அடி… நிலாவை எதுவும் பண்ணாதே… அவ தாங்க மாட்டா, உன்னோட கோபம் நியாயமானது தான், நான் உனக்குப் பெரிய துரோகம் பண்ணிட்டேன்… அந்த குற்றவுணர்ச்சி என்னை கொஞ்சம் கொஞ்சமா கொன்னுட்டு இருக்கு… அதுக்காக நீ என்னைக் கொன்னே போட்டாலும் பரவாயில்லை… எந்த தண்டனையா இருந்தாலும் எனக்குக் கொடு… அவளை அடிக்காதே…” என்றான் தலையைக் குனிந்து கொண்டே.

“ஓ… உன் பொண்டாட்டியை அடிக்க எனக்கென்ன உரிமை இருக்குன்னு கேக்கற, அப்படித்தானே…” உறுமினான் கதிர்.

அதைக் கேட்டுப் பதறிப் போன நிலா, “அய்யோ… அப்படில்லாம் இல்லைண்ணா, நீ என்னை அடிச்சுக்கோ, கொன்னுக்கோ… நான் செய்த தப்புக்கு என்ன தண்டனை வேணும்னாலும் குடு… அதுக்கு முன்னாடி என்னையும் கொஞ்சம் பேச விடு… நான் சொல்லுறதைக் கொஞ்சம் கேளு… கெளதம் மேல எந்தத் தப்பும் இல்லைண்ணா…” கண்ணீருடன் கூறினாள்.

“அடச்சீ… வாயை மூடு, வேலிக்கு ஓணான் சாட்சியா… இனி நீ சொல்லுறதுக்கு என்ன இருக்கு… எங்ககிட்டே உன்னைப் பொண்ணு கேட்டு, நாங்க கல்யாணம் பண்ணிக் கொடுக்காம இருந்து நீங்க இப்படி செய்திருந்தா கூட ஒரு வேளை ஏத்துகிட்டு இருக்கலாம்… ஆனா எங்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம, என் நண்பன்கிற பேர்ல வீட்டுக்குள்ளயே உலாவிகிட்டு இப்படி ஒரு துரோகத்தை செய்துட்டுப் போக இவனுக்கு என்னவொரு திமிர் இருக்கணும்…”

“மா…மாப்பிள்ளை… கொஞ்சம் பொறுமையா இருங்க… எல்லாரும் வேடிக்கை பார்க்கிறாங்க… இப்பதான் கல்யாணம் முடிஞ்சிருக்கு… பாக்கி சடங்கெல்லாம் முடிஞ்ச பின்னால இதைப் பத்தி பேசிக்கலாமே…” என்று நடுவில் சமாதானப் படுத்த வந்த மாமியாரை ஒரு முறைப்புடன் நோக்கிவிட்டு நிலாவிடம் திரும்பியவன் தொடர்ந்தான்.

“அப்படியென்ன… ஊரு உலகத்துல இல்லாத பெரிய காதல்… உன்னால அம்மா இப்ப எந்த நிலைமைல இருக்காங்கனு பார்த்தியா… இவன் இப்படிப் பண்ணினது தாங்க முடியாம, இவன் அப்பா நெஞ்சுவலி வந்து உலகத்தை விட்டே போயிட்டார்… அவர் மானஸ்தன்… கொள்ளி வைக்கப் பிள்ளை இருந்தும் இந்தப் பாவி கையால எதுவும் செய்ய விடாம நல்லபடியா போயி சேர்ந்துட்டார்…” அவன் சொல்லிக் கொண்டே போக, சுதாவின் அன்னை அதிர்ச்சியுடன் சுவரைப் பிடித்துக் கொண்டு நின்றார்.

“எ…என்னது, அவர் இறந்துட்டாரா… என்னைப் போலவே என் பிள்ளையும் இப்படி ஒரு காரியத்தைப் பண்ணினது தாங்க முடியாமதான் அந்த நெஞ்சு துடிக்குறதை நிறுத்திடுச்சோ…” கலக்கத்துடன் நின்றவரை கதிரின் அன்னை கவனித்தாலும் அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை.

கௌதமின் தந்தையின் மீது அவருக்குக் காதல் தான் இல்லையே தவிர அன்பும் நல்ல மரியாதையும் இருந்தது. காதலுக்காக நல்ல ஒரு மனிதனுக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்து விட்டோமே என அவர் மனதிலும் வருத்தம் இல்லாமல் இல்லை.

கதிர் அவர்களை மேலும் குற்றப்படுத்தி திட்டிக் கொண்டே போக, கெளதம் கண்கள் கலங்க தலை குனிந்து நின்றிருந்தான். நிலா அழுது கொண்டிருந்தாள்.

நிலாவின் அன்னை எதுவும் செய்ய முடியாமல் கண்ணீர் விட்டுக் கொண்டே நாற்காலியில் அமர்ந்திருந்தார். மகனிடம் நிறுத்துமாறு எத்தனயோ சொல்லியும் அவன் நிறுத்திய பாடில்லை. சுதாவோ அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அன்னையையின் கண்ணீரைக் கண்ட நிலா அவரை நோக்கி கதறினாள்.

“அ…அம்மா… அண்ணன்கிட்டே நான் சொல்லறதைக் கொஞ்சம் கேக்க சொல்லுமா… கௌதமைத் திட்ட வேண்டாம்னு சொல்லும்மா… கெளதம் நல்லவன் மா, அவன் ரொம்பப் பாவம்… அவனை இப்படி அவமானப்படுத்த வேண்டாம்னு சொல்லும்மா… என்ன நடந்துச்சுன்னு நான் சொல்லறேன்…” நிலா எட்ட நின்றே கூறினாள். அங்கே நடப்பதைப் பார்த்து பயந்து போயிருந்த அம்மு, நிலா அழுவதைப் பார்த்ததும், கலக்கத்துடன் அவளைக் கட்டிக் கொண்டு சிறு விசும்பலுடன் அழத் தொடங்கினாள்.

“டேய் கதிரு… போதும் டா, கோவில்ல நின்னு இப்படில்லாம்  பேசக் கூடாது… எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்டா… என் பேத்தியைப் பாருடா… அந்தப் பிஞ்சு குழந்தை, பயத்துல அவ அம்மாவைப் பிடிச்சுகிட்டு அழுதுட்டு நிக்குறா… அவளுக்காகவாவது கொஞ்சம் பேசாம இருடா…” அன்னையின் கண்ணீருடன் கூடிய முகமும், அம்முவின் கலக்கமும், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மனிதக் கூட்டமும் அப்போது தான் கதிரின் மனதில் பதிந்தது.

ஒரு நிமிடம் கண்ணை மூடி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன், “சரிம்மா, நான் எதுவும் பேசலை… இந்த துரோகிங்களை என் கண்ணு முன்னாடி நிக்காம, இங்கிருந்து போக சொல்லுங்க…” என்றான் முகத்தைத் திருப்பிக் கொண்டு.

அவனது வார்தைகள் ஒவ்வொன்றும் அம்பாய் மாறி இதயத்தை துளைக்க அவமானத்தில் கூனிக் குறுகி, முகம் சிவக்க தலை குனிந்து நின்றான் கெளதம். அதைக் கண்டு நிலாவின் இதயம் வேதனையில் புழுவாய் துடித்தது. அவன் மீது எந்தத் தவறும் இல்லை என்று அவர்களுக்குப் புரிய வைத்திட வேண்டும் என்று அவளுக்குள் ஒரு வேகம் வந்தது.

“அண்ணா, தயவு செய்து நான் சொல்லுறதைக் கொஞ்சம் கேளுண்ணா… கெளதம் மேல எந்தத் தப்பும் இல்லை… என்னை நம்புண்ணா, எங்களுக்கு கல்யாணமே நடக்கலை…” என்றாள் கதறலுடன்.

அதைக் கேட்டதும் அனைவரும் அதிர்ச்சியுடன் அவளையே பார்த்தனர். கதிர், அவனது அன்னை சுதா, அவளது அம்மா, சுதாகர், சுற்றி இருந்த அனைவரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

“நிலா…. என்ன உளர்ற…” என்றார் அவளது அன்னை.

“ஆமாம்மா… கொஞ்சம் பொறுமையா கேக்குறதா இருந்தா நான் எல்லாத்தையும் தெளிவா சொல்லுறேன்…” என்றாள் அவள் தலையைக் குனிந்து கொண்டே.

“அம்மா… இவ பொய் சொல்லுறா, கழுத்துல தாலி… நெத்தியில குங்குமம்… கையில புள்ளையோட வந்துட்டு, இப்ப நாடகம் போடறா… அன்னைக்கே நம்பளை நம்ப வச்சுட்டு இவனோட ஓடிப்போனவ தானே… இதெல்லாம் நீங்க நம்பாதிங்க…” என்றான் அன்னையிடம்.

“இ…இல்லம்மா… நான் பொய் சொல்லலை… நடந்த எல்லாத்தையும் சொல்லிடறேன்… இதுக்கு மேல இந்த பாரத்தை சுமக்க என்னால முடியாது… அதுக்கப்புறம் நீங்க என்ன முடிவு பண்ணினாலும் சரி…” என்றாள் அவள்.

“அம்மா… இவ நடிக்குறா… இப்ப ஏதோ புதுசா ஒரு கதையை சொல்லப் போறான்னு நினைக்கறேன்…” என்றான் கதிர் கோபத்துடன்.

“கதிர்… இல்லைடா, அவ உண்மையை தான் சொல்லுறா… ப்ளீஸ் நம்பு…” என்றான் கெளதம் பரிதாபத்துடன்.

“ம்ம்… உங்களை மறுபடியும் நம்ப சொல்லற… சரி சொல்லு…” என்றவனின் வார்த்தைகள் ஈட்டியைக் காட்டிலும் கூரான முனையைக் கொண்டிருந்தன.

எல்லாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட கதிரின் அன்னை, அவர்களை முதலில் அங்கிருந்து அனுப்ப நினைத்தார்.

“கதிர்… நீ கொஞ்சம் பேசாம இரு… சம்மந்தி, கல்யாணத்துக்கு வந்தவங்க எல்லாம் சாப்பிடறதுக்கு ஏற்பாடு பண்ணுங்க… நாங்க இவங்க கிட்டே கொஞ்சம் தனியாப் பேசணும்…” என்றார்.

“சரிங்க சம்மந்தி…” என்ற சுதாவின் அன்னை தெரிந்த ஒரு பையனிடம் வந்தவர்களை சாப்பிட அழைத்துச் செல்லுமாறு கூறினார். பக்கத்தில் இருந்த சரவணபவனில் தான் அனைவருக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அவர்களை அழைத்துக் கொண்டு அந்தப் பையன் ஹோட்டலுக்கு செல்ல அவர்களை சுற்றி இருந்த கூட்டம் கலைந்தது.

“நிலா… என் பேத்தியைக் கூட்டிட்டு இங்க வா…..” அன்னை கை நீட்டி அழைக்க, கதிரின் முறைப்பைக் கண்டு கொள்ளாமல், அம்முவுடன் அவர் அருகில் ஓடினாள் நிலா.

“அம்மா… என்னை மன்னிச்சிருங்கம்மா, நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்… அறியாத வயசுல, என்ன பண்ணுறோம்னு புரியாம பண்ணிட்டேன் மா… அண்ணாவையும் மன்னிக்க சொல்லுங்கம்மா…” கண்ணீருடன் கதறினாள்.

“நிலா… அழறதை முதல்ல நிறுத்து… குழந்தை பயப்படுறா பாரு, இங்க வாடா செல்லம்…” அம்முவை அழைக்க, அவள் அவரிடம் விசும்பிக் கொண்டே வந்தாள்.

“பாத்தி… அம்மாவை அழ வேந்தாம்னு சொல்லுங்க பாத்தி… எனக்கும் அழுகையா வதுது… எதுக்கு, எல்லாதும், அம்மாவையும் அப்பாவையும் தித்துதாங்க…” அம்மு கண்ணைக் கசக்கிக் கொண்டே சொல்ல அங்குள்ள அனைவரின் மனதும் கலங்கியது. கதிரைக் குற்றப்படுத்தும் பார்வை பார்த்தார் அவன் அன்னை. அவனுக்கும் கூட சங்கடமாய் தோன்றியது. அம்முவின் கண்ணீர் முகம் அவனையும் வருத்தியது.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லடா செல்லம்… நீ பயந்துக்காத…. உனக்குப் பசிக்குதா, சாப்பிடறியா…”

“எனக்குப் பசிக்கலை பாத்தி…” என்றாள் அவள் கண்ணைத் துடைத்துக் கொண்டு. அவளது தலையைக் கோதிக் கொடுத்தவர், மகளிடம் திரும்பினார்.

“நிலா… என்ன நடந்துச்சுன்னு சொல்லும்மா…” என்றார்.

அதற்காகவே மனதுக்குள் உருவேற்றிக் காத்திருந்தவள், அவர்கள் வீட்டில் இருந்து வெளியேறியது முதல் ஒவ்வொன்றாய் கூற அனைவரின் முகத்திலும், அதிர்ச்சியும், வியப்பும் திகைப்பும் மாறி மாறி வந்து போயின.

சுதாவின் அன்னை, மகனைப் பற்றி நிலா சொல்லுவதை மௌனமாய் கேட்டுக் கொண்டிருந்தார். அவரது மனதில் கணவர் வளர்த்த மகனின் மீதிருந்த பெருமை கூடிக் கொண்டே போனது.

“என்னைப் போல என் மகன் இல்லை… அவர் வளர்த்த பிள்ளை எப்படித் தப்பாவான்… அவர் தான் தவறுதலாய்ப் புரிந்து கொண்டார் போலிருக்கிறது…” என்று நினைத்துக் கொண்டார்.

எல்லாவற்றையும் சொல்லி முடித்தவள், “கெளதம் எங்க காதலை சேர்த்து வைக்கத்தான் இத்தனை கஷ்டப்பட்டார்… அவர் மேல எந்தத் தப்பும் இல்லை… எனக்காக எத்தனையோ கஷ்டங்களை அனுபவிச்சாலும் எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு என்னை விட்டுப் போகாம அன்பா பார்த்துகிட்டார்…”

“அப்படின்னா இந்தக் குழந்தை…” என்றார் அவள் அன்னை அதிர்ச்சியுடன்.

“அம்மு எங்களுக்கு சாமி கொடுத்த குழந்தை…” என்றவள் அவளைப் பற்றியும் சொல்லி முடித்தாள். அனைவரும் திகைப்புடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.

“அம்மா… நான் அன்னைக்கு கார்த்திக்கை காதலிக்கறதா நினைச்சு தான் வீட்டை விட்டு வெளியே வந்தேன்… ஆனா இப்ப…” என்று எதையோ சொல்ல வந்தவளின் கண்கள் அப்படியே நிலைத்தன. தன் மனதில் இப்போது கெளதம் தான் இருக்கிறான் என்பதை சொல்லிவிட வாய் வரை வார்த்தையைக் கொண்டு வந்து விட்டவள் அதை வெளியே சொல்லாமல் அப்படியே விழுங்கினாள்.

“என்னாச்சு நிலா, ஏன் நிறுத்திட்ட…” என்றார் அவளது அன்னை.

“கார்…த்திக்…” என்றவளின் முகம் சட்டென்று அதிர்ச்சிக்குப் போனது. அவளது பார்வை போன திசையில் திரும்பிய அனைவரும் அங்கு நின்று கொண்டிருந்தவனைக் கண்டதும் திகைத்தனர்.

Advertisement