Advertisement

மண்டபத்தில் அங்கங்கே எல்லாரும் தலை சாய்த்திருக்க மெதுவாகத் தலையைத் திருப்பி அங்குமிங்கும் பார்த்தபடி மண்டபத்தின் பின் வாசலுக்கு சென்றாள்.
அவளது அலைபேசியில் இருந்த டார்ச்சை உயிர்ப்பித்து அதை மேலும் கீழும் ஆட்ட அடுத்த நொடியில் அதே போல எதிர்ப்புறம் இருந்து ஒரு வெளிச்சம் உற்பத்தியாகி மேலும் கீழுமாய் நகர்ந்தது. அதைக் கண்டதும் சிறு சமாதானத்துடன் வேகமாய் பின் பக்க கேட்டைத் திறந்து அந்த வெளிச்சம் உருவான இடத்தை நோக்கி நடந்தாள்.
நிசப்தமான இரவில் வானத்து நிலாவும் அவளுடன் துணைக்கு நடந்தது. அவளது செருப்பின் ஓசை கேட்டுவிடுமோ என்று பதுங்கிப் பதுங்கி நடந்து வந்தாள். கேட்டுக்கு வெளியே அவளுக்காய் காத்திருந்த அந்த உருவம், அவள் அருகில் வந்தது.
“என்ன… ஒண்ணும் பிரச்சனை இல்லையே… யாரும் பார்க்கலை தானே…” கிசுகிசுப்புடன் வார்த்தையை துப்பியது.
“இ…இல்ல… யாரும் பார்க்கல…” அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே கேட்டுக்கு உள்ளே யாரோ பாடிக் கொண்டே வரும் ஓசை கேட்டது.
“அந்த நிலாவத்தான்
நான் கையில புடிச்சேன்…
என் ராசாத்திக்காக…”
“ஹூக்கும்… பூமியிலேயே ஒண்ணும் கிடைக்க மாட்டுது… இதுல நிலாவ எங்க போயி கையில பிடிக்குறது…” என்று தனக்குள் உளறிக் கொண்டே வானில் நிலாவைப் பார்த்துக் கொண்டு அங்கிருந்த மரத்தின் அருகே உறக்கக் கலக்கத்துடன் சென்றது அந்த உருவம்.
மரத்தின் பின்னால் சற்று மறைவாக நின்றவன், பார்வையை சுற்றிலும் ஓட்டிவிட்டு தனது இயற்கை உபாதையைத் தீர்த்துக் கொள்ளத் தொடங்கினான். அவனது குரலைக் கேட்டதுமே கேட்டின் வெளியே இருந்த இருவரும் சுவருடன் சேர்ந்து ஒட்டிக் கொண்டு கீழே குனிந்து கொண்டே சற்றுத் தள்ளி நிறுத்தியிருந்த பைக்கை நோக்கி நகர்ந்தனர். அவனது குரல் நின்று போனதும், பைக்கில் அமர்ந்து ஸ்டார்ட் செய்ய, சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே வண்டியின் பின்னில் ஏறி அமர்ந்தாள் நிலா.
அவளது பார்வையில் இவன் படாமல் போனது அவளது கெட்ட காலம்… தன் தேவையை முடித்துக் கொண்டு நிமிர்ந்தவன் பார்வையில் பைக்குடன் நின்றவனும், அதில் அமர்ந்த நிலாவும், நிலா வெளிச்சத்தில் தெளிவாகத் தெரிந்தது கடவுளின் கணக்கு.
நிலாவைக் கண்டதும் திகைத்தவன், “ஏய்… யாரு அது… நிலாம்மா… எங்க போறீங்க…” சத்தம் போட்டுக் கொண்டே கேட்டுக்கு வெளியே ஓடினான். அவனது சத்தத்தைக் கேட்டதும் வேகமாய் பைக்கை நகர்த்தித் திரும்பிப் பார்த்த உருவத்தைக் கண்டு அதிர்ந்து நின்றான் ஓடி வந்தவன்.
“அய்யய்யோ… எல்லாரும் எந்திரிங்க… கல்யாணப்பொண்ணை அந்த கெளதம் பய பைக்ல கூட்டிட்டுப் போறான்… ரெண்டு பேரும் ஓடிப் போறாங்கன்னு தோணுது…” என்று கத்திக் கொண்டே உள்ளே செல்ல, அங்கங்கே ஓய்வெடுத்துக் கொண்டிருந்த விளக்குகள் ஒளிரத் தொடங்கின.
சத்தம் கேட்டு மண்டபத்தில் வெளியே படுத்திருந்தவர்கள் எழுந்து கொள்ள, நிமிடத்தில் அங்கே சலசலப்பு தொடங்கியது.
“மணி… என்ன சொல்லுறே… நிலாவையும், கெளதமையுமா சொல்லறே…” கோபத்துடன் கேட்டான் கதிர்.
“ஆமாம்… கதிரண்ணே… எனக்கு அவுங்களை அடையாளம் தெரியாதா… உங்களுக்கு சந்தேகம்னா உங்க தங்கச்சி அறைல இருக்காங்களான்னு போயி பார்த்துக்கங்க…” என்றான் அந்த மணி.
பதட்டத்துடன் நிலாவின் அறைக்கு சென்ற கதிர், கதவைத் தட்டப் போக அது தானாகத் திறந்து கொண்டது. வெளியே கேட்ட சத்தத்தில் உறக்கம் தெளியத் தொடங்கி இருந்த திலகம், கதவு திறந்ததும் சட்டென்று எழுந்தார்.
உள்ளே பரபரப்புடன் நுழைந்த மகனைக் கண்டவர், “என்ன கதிரு… என்னாச்சு… எதுக்கு பதட்டமா இருக்கே…” என்றார். அதற்குள் அறைக்குள் படுத்திருந்தவர்கள் சத்தத்தில் எழுந்து அமர்ந்திருக்க அதில் நிலாவைக் காணாமல் முகம் சிவந்தான் கதிர்.
“அம்மா… எல்லாம் குறட்டை விட்டுத் தூங்கிட்டு நிலாவைக் கோட்டை விட்டுட்டீங்களா…” அன்னையிடம் கத்தியவனின் முகம் கோபத்தில் ஜொலித்தது.
“அடேய்… கெளதம்… என் கூடவே இருந்து எனக்கு குழி பறிச்சுட்டல்ல… உன்னை சும்மா விட மாட்டேண்டா… டேய்… வாங்கடா…” என்றவன் ஆவேசமாய் வெளியே சென்றான்.
“டேய் கதிரு… என்னாச்சுடா… நிலா எங்கே… நீ எதுக்கு இவ்ளோ கோபப்படறே…” பின்னாலேயே ஓடி வந்தார் திலகம்.
அவரிடம் கோபத்துடன் திரும்பியவன், “ஒரே ஒரு பொண்ணுன்னு செல்லமா அவ சொல்லறதுக்கெல்லாம் தலையாட்டிப் பார்த்துப் பார்த்து வளர்த்தியே… உம்பொண்ணு அந்த நம்பிக்கை துரோகி கௌதமோட ஓடிப் போயிட்டாளாம்…”
“எ…என்னடா சொல்லுறே… நம்ம நிலாவா… கெளதமோடயா…” நம்பிக்கை இல்லாமல் அதிர்ச்சியுடன் வந்தது அவரது வார்த்தைகள்.
“நம்ம மணி பார்த்திருக்கான்… அந்த துரோகிங்க மட்டும் என் கையில கிடைச்சாங்க, பொணமாத்தான் வருவாங்க… அவுங்களைக் கொன்னுட்டு ஜெயிலுக்குப் போகவும் நான் தயங்க மாட்டேன்… வாங்கடா… இன்னைக்கு அவுங்களைப் பிடிச்சே ஆகணும்…” கத்திக் கொண்டே அவனது உறவுக்கார இளவட்டங்கள் சிலரை அழைத்துக் கொண்டு அங்கிருந்த வாகனங்களை நோக்கி நகர்ந்தான்.
மகன் சொல்லிச் சென்ற வார்த்தைகள் மனதை சுட்டெரிக்க அப்படியே பொசுங்கி சாம்பலாகி விட மாட்டோமா என்பது போல் அதிர்ச்சியில் சிலையாக நின்றார் திலகம்.
நிலாவும் கௌதமும் ஓடிப் போய்விட்டார்கள் என்ற விஷயம், வைரஸாய் அந்த மண்டபம் முழுக்கப் பரவ, சுதாகருக்கும் அவனது அன்னைக்கும் விஷயம் காதை எட்டியது. அதைக் கேட்ட சுதாகர் அவமானத்தில் முகம் சிவக்க நின்றிருந்தான்.
சுமங்கலியின் மனதோ நிலாவை சுட்டெரிக்கும் அக்னி வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தது. கோபத்துடன் நிலாவின் அன்னை திலகத்தைத் தேடிச் சென்றார்.
கதிரும் மற்ற சிலரும் நான்கைந்து வாகனத்தில் நிலா, கெளதமைத் தேடிக் கொண்டு புறப்பட்டனர். இருட்டைக் கிழித்துக் கொண்டு புறப்பட்டது அவர்களின் வாகனத்தில் இருந்து புறப்பட்ட வெளிச்சப் புள்ளிகள். கையில் கிடைத்தால் இருவரையும் கிழித்துப் போடும் அளவுக்கு ஆத்திரத்துடன் இருந்தான் கதிரவன்.
நெற்றியில் சுருங்கி, நெளிந்தோடிய சிந்தனை வரிகள் சட்டென்று தடைபட்டன நிலாவுக்கு. யாரோ தனது தோளைத் தொட்டு உலுக்குவது போல் இருக்க, மெல்ல கண்ணைத் திறந்தாள்.
“நிலா… எழுந்திரு…” என்ற கெளதமின் அழுத்தமான வார்த்தைகளில் கண்ணைத் திறந்து சுற்றுப் புறத்தில் பார்வையைப் பதித்தாள்.
கதிரவன் கிழக்கில் உதயமாகி தன் பணியை செவ்வனே துடங்கி இருக்க, காலைக் காற்று சுகமாய் முகத்தில் மோதியது. பரபரப்புடன் பயணிகள் இறங்கத் தயாராகிக் கொண்டிருந்தனர். அவர்களது உடமைகளை சரி பார்த்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.
சென்னை மாநகரத்தை அடைந்து விட்டோமா…
முதலில் இறங்கிவிட வேண்டும் என்று அவசரமாய் முன்னில் சென்று நின்று கொண்டிருந்தனர் சிலர். அந்தக் கைக்குழந்தையை வைத்திருந்த பெண் குழந்தையைத் தோளில் படுக்க வைத்துக் கொண்டே அவளது உடமைகளை இருக்கைக்கு கீழிருந்து நீக்கி வைத்துக் கொண்டிருந்தாள். சிலர் முகம் கழுவி பிரஷாகி வந்தனர்.
அவர்களைக் கண்டதும் நிலாவுக்கும் முகம் கழுவினால் தேவலாம் போலத் தோன்றியது. அழுது களைத்த விழிகள் குளிர்ந்த நீரில் புத்துணர்ச்சி கொள்ளக் காத்துக் கிடந்தன. கௌதமைக் கேள்விக் குறியுடன் ஏறிட்டாள்.
“நா… நான் முகம் கழுகிட்டு வந்திடவா……”
“இப்போ… ரொம்ப முக்கியம்…” என்பது போல அந்தப் பார்வை உணர்த்தினாலும் சம்மதமாய்த் தலையாட்டினான் அவன். மெல்ல எழுந்தவள், அந்த போகியின் இறுதிக்கு நடந்தாள்.
ரயிலில் இருந்து இறங்கியதும் வாழ்க்கையில் எல்லாவற்றையும் சாதித்து விடுவதுபோல ரயிலின் இயக்கம் நிற்பதற்காய் காத்துக் கிடந்த மனித முகங்கள்.
“இவர்கள் எல்லாம் என்ன தேவைக்காக, எங்கே செல்லப் பயணித்துக் கொண்டிருப்பார்கள்… எத்தனை மனிதர்கள்… என்னெல்லாம் தேவைகள்… நன்மையையும் தின்மையுமாய் எத்தனை ஓட்டங்கள்…” எப்போதும் போல தன்னை மீறி பறக்கத் தொடங்கிய சிந்தனைக் குதிரைக்கு கடிவாளமிட்டவள், அவர்களைத் தாண்டி நீங்கினாள். எதிரெதிராய் இருந்த அறை ஒன்றுக்குள் நுழைந்து தாளிட்டுக் கொண்டாள்.
முகத்தில் குளிர்ந்த நீர் பட்டதும் சட்டென்று அவளுக்குள் ஒரு புத்துணர்ச்சி பாய்ந்தது. கண்களின் சோர்வுகள் விடைபெறுவதை உணர்ந்தாள்.
இந்த விடியலும் என் வாழ்க்கைக்கு புத்துணர்ச்சியைத் தருமா… மனதில் எழுந்த கேள்வியை ஒதுக்கிவிட்டு, கழுவிய முகத்தை துப்பட்டாவால் துடைத்துக் கொண்டு புது நிலவாய் வெளியே வந்தாள் நிலா.
யார் மீது நாம் கொண்ட மையலோ
நித்திரையின்றி நித்தம்
உலவிக் கொண்டிருக்கிறோம்…
நீ வானத்திலும்…
நான் வீதியிலுமாக…
என்னருகில் நீ இருக்கும் போது
உலகை நான் மறக்கிறேன்…
நீ விலகும் போதோ
எனையே நான் மறக்கிறேன்…
உன் நினைவுத் தீயில் எரிந்து
சாம்பலாக நினைக்கிறேன்…
மீண்டும் வரும் உன் நினைவுகளில்
மீண்டு வரத் துடிக்கிறேன்…
என் ஞாபக ஏட்டில் உன் நினைவுகளே
மயிலிறகாய் மனம் வருடுகிறது…
வெட்கம் கொண்ட கொலுசாய் – என்
மனம் சிணுங்கி சிலிர்க்கிறது… எனைத்
தீண்டி செல்லும் உன் பார்வையால்….
நான் தேடும் ஸ்ரீ ராமனே…
நட்சத்திரக் காவல் தாண்டி
எனை சிறை மீட்க வருவாயோ…
மேகத் தேரேறி…

Advertisement