Advertisement

நிலா – 2
மாப்பிள்ளையைக் காணவேண்டும் என்ற நிலாவின் தோழியரை அழைத்துக் கொண்டு சுதாகரின் அறைக்கு சென்றான் கதிர்.
“என்ன கதிரு, யாரு இவங்கல்லாம்… நிலாவோட படிச்சவங்களா…” சுதாகரின் அறைக்கு முன்னால் ஹாலில் அமர்ந்து யாருடனோ பேசிக் கொண்டிருந்த அவனது அத்தை சுமங்கலி கதிரிடம் விசாரித்தார்.
“ஆமாம் அத்தை, நிலாவோட சிநேகிதிங்க… எல்லாரும் ஒரே காலேஜ் தான்… மாப்பிள்ளையைப் பார்க்கணும்னு சொன்னாங்க… அதான் கூட்டிட்டு வந்தேன்… சுதா உள்ளே இருக்கான் தானே…”
“ம்ம்… உள்ளதான் இருக்கான்… போயிப் பாருங்க…”
“சரி அத்தை…” என்றவன் நிலாவின் சிநேகிதிப் பட்டாளத்துடன் அறைக்குள் நுழைந்தான்.
சுமங்கலி, கதிரின் தந்தையின் உடன் பிறந்த சகோதரி. சுதாகரின் சிறுவயதிலேயே அவனது தந்தை பாம்பு கடித்து இறந்துவிட, தங்கையையும் அவரது மகனையும் பொறுப்புள்ள அண்ணனாய் பார்த்துக் கொண்டார் கதிரின் தந்தை. அவர்களுக்கு எந்தக் குறையும் தோன்றாத வகையில் சுதாகரை நன்றாகப் படிக்க வைத்து வெளிநாட்டில் கிடைத்த நல்ல வேலைக்கும் அனுப்பி வைத்தார்.
தங்களைக் கைவிடாமல் கரையேற்றிய அண்ணன் குடும்பத்தின் மீது சுமங்கலிக்கும் நல்ல மரியாதை இருந்தது. நிலா பிறந்த போதே தங்கை மகன் மகன் சுதாகருக்கு என்று பெரியவர்கள் முடிவு செய்து இருந்தனர். சுமங்கலியின் அண்ணன் இறந்திருந்தாலும் அவரது மகளைக் கல்யாணம் செய்வதாய் அண்ணனுக்குக் கொடுத்த வாக்கை அவர் மறக்கவில்லை… கொடுத்த வாக்கை செயலாக்க முடிவு செய்து, இதோ… விடிந்தால் கல்யாணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.
கல்யாணத்திற்காய் இரண்டு மாதம் விடுமுறையில் வந்திருந்தான் சுதாகர்.
நிலாவின் கல்லூரிப் படிப்பு முடிந்து விட்டதால் இருவருக்கும் கல்யாணத்தை முடித்து அவளையும் அவனுடன் துபாய்க்கு அனுப்பி வைக்க முடிவு செய்து அவசரமாய் கல்யாண ஏற்பாட்டை செய்திருந்தனர் வீட்டுப் பெரியவர்கள்.
சாத்தியிருந்த அறைக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் கதிரவன். சோபாவில் அமர்ந்து, அலைபேசியில் ஏதோ நோண்டிக் கொண்டிருந்த மாப்பிள்ளை சுதாகர் அவர்களைக் கண்டதும் எழுந்தான்.
“என்ன மாப்பிள்ள சார்… என்ன பண்ணிட்டு இருக்கீங்க…”
“வா கதிரு… சும்மா மொபைலை நோண்டிட்டு இருந்தேன்…” என்ற சுதாகர் அழகாய் மென்மையாய் இருந்தான். நல்ல உயரத்தில், மீசையில்லாத முகம் சற்று பெண்மை கலந்து ஹிந்தி ஹீரோக்களை நினைவு படுத்தினாலும், குறை சொல்லும்படி இல்லாமல் இருந்தான்.
“சுதா… இவங்கல்லாம் நிலாவோட சிநேகிதிங்க… உன்னைப் பார்க்கணும்னு வந்திருக்காங்க…”
அதற்குள் அவனைப் பார்த்துவிட்ட குறும்பு சுந்தரிகள் அவர்களுக்குள் ரகசியமாய் பேசிக் கொண்டே மாப்பிள்ளைக்கு மார்க் போடத் தொடங்கியிருந்தனர்.
“ம்ம்… ஓகே… எங்க நிலாவுக்கு பொருத்தமா தான் இருக்கீங்க…” என்று ஒருத்தி அவனை கண்களால் அளவெடுத்துக் கொண்டே சர்டிபிகட் கொடுத்தாள்.
“ஏன்… உங்ககிட்டே மாப்பிள்ளை போட்டோவை நிலா காட்டினதில்லையா…” என்றான் கதிர்.
“இல்லண்ணா… இவர் போட்டோவைக் காட்டினா நாங்க எங்காவது கிண்டல் பண்ணுவோம்னு நினைச்சாளோ… என்னவோ… இதுவரைக்கும் இவரைப் பத்தி பேசினதும் இல்லை… போட்டோ காட்டினதும் இல்லை…”
“ஓ… அப்படியா…” என்றான் கதிர்.
“ம்ம்… நாங்க எங்காவது அவ மாப்பிள்ளையைக் கடத்திட்டா என்ன பண்ணுறதுன்னு நினைச்சிருப்பாளா இருக்கும்…” என்று சிரித்தாள் ஒரு சுட்டி.
“சரி…. மாப்பிள்ளை சார்… எங்க நிலாவை, கடத்தி துபாய் கொண்டு போறிங்க… அவளை பத்திரமா பார்த்துக்கங்க… வாழ்த்துக்கள்…” என்று கை நீட்டினாள் ராகவி.
“ஹஹா… கண்டிப்பா பார்த்துக்கறேன்… உங்க நிலா, என் வாழ்வின் நிலாவாச்சே…” என்று சிரித்துக் கொண்டே அவள் கையைக் குலுக்கினான் சுதாகர்.
அந்த அறையே கலகலவென்ற சிரிப்பொலியில் குலுங்கியது.
மற்றவர்களும் வாழ்த்துக் கூற சுதாகரிடம் சிறிது நேரம் கிண்டலுடன் பேசி விட்டு, விடை பெற்று நிலாவின் அறைக்கு செல்ல வெளியே வந்தனர்.
அங்கு அலைபேசியில் நோண்டிக் கொண்டு நின்றிருந்த கௌதமைக் கண்டதும் அப்படியே நின்றாள் ராகவி.
“வாவ்… ஏய், நம்ம கெளதம்டி… பார்த்து எவ்ளோ நாளாச்சு… இப்போ முன்னைவிட அழகா இருக்கான்ல…”
“ம்ம்… ஜீன்ஸ் டீஷர்ட் ல சும்மா கும்முன்னு இருக்கான்…”
“சரியான முசுடு… இவ்ளோ அழகா தேவதை மாதிரி நம்மெல்லாம் புறப்பட்டு நிக்கறோம்… கண்ணைத் திறந்து பாக்குதான்னு பாரு… எப்பப் பார்த்தாலும் விறைப்பா இருக்க வேண்டியது…”
“அவனுக்குப் பெரிய விஸ்வாமித்திரர்னு நினைப்பு… அவன் பாக்கலைன்னா என்ன… நான் போயி அவன்கிட்ட பேசத்தான் போறேன்…” என்ற ராகவி அவனை நெருங்கினாள்.
“குட் ஈவ்னிங் சீனியர்… நல்லார்க்கீங்களா…” மொபைலை நோண்டிக் கொண்டே நின்று கொண்டிருந்தவன், நிமிர்ந்தான்.
“ஓ… வாங்க, நீங்களா… ஏதாவது சாப்பிட்டீங்களா… நிலா அந்த அறையில் இருப்பாங்க…” என்று அறையை சுட்டிக் காட்டியவன்,
“தம்பி, இவங்களுக்கு ஜூஸ் கொண்டு வந்து கொடு…” என்று அங்கிருந்த பையனிடம் கூறிவிட்டு சுயிங்கத்தை மென்று கொண்டு நிற்காமல் சென்றே விட்டான்.
அதைக் கண்டதும் ராகவியின் முகம் சுருங்கிப் போனது.
“சரி விடுடி… அவன் புத்தி தான் தெரிஞ்சதாச்சே… எத்தனை நாள் தான் பொண்ணுங்களை முறைச்சிட்டே திரியப் போறான்னு பார்த்திடுவோம்… இவனும் கல்யாணம், குடும்பம்னு ஆகாம இப்படியே இருந்திடுவானா… என்ன… சரியான ராட்சசி தான் பொண்டாட்டியா வந்து அவன் திமிரை அடக்கணும்…” என்று சபித்துக் கொண்டே நிலாவின் அறைக்கு சென்றனர்.
நிலாவின் அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே வந்த நிலாவின் அன்னை திலகம், அவர்களைக் கண்டதும் முகம் மலர்ந்தார்.
“வாங்கம்மா… காலைல நிச்சயதார்த்தத்துக்கு வரேன்னு சொல்லிட்டு, எல்லாரும் இப்போதான் வரீங்களா… உள்ள ஒருத்தி மூஞ்சத் தூக்கி வச்சிட்டு உக்கார்ந்திருக்கா… போயி அவளை சமாதானப் படுத்துங்க…” என்று வெளியே சென்றார் அவர்.
பிறகு நிலாவைக் கொஞ்சி சமாதானப் படுத்தும் வேலையில் அவர்கள் இறங்க மாலையில் நலங்கு வைக்கும் விசேஷம் முடிந்து இரவும் வந்தது. இரவு உணவை முடித்துக் கொண்டு அனைவரும் கதை பேசிக் கொண்டே அங்கங்கே உறங்கத் தொடங்கினர். சாப்பிட்டுவிட்டு நிலாவும் தோழியருடன் அறைக்கு வந்தாள். அமைதியாய் எதோ யோசித்துக்கொண்டே இருந்தவளை வியப்புடன் பார்த்த ராகவி, அவளிடம் வந்து அமர்ந்தாள்.
“ஏய் நிலா, உனக்கு என்னடி ஆச்சு… வந்ததில் இருந்து நாங்களும் பார்க்கறோம்… ஒரு மாதிரி மூட் அவுட்டாவே இருக்கே… என்னவோ பயங்கரமா யோசிக்கற போல இருக்கு…”
“ப்ச்… அப்படில்லாம் ஒண்ணுமில்லைடி…” என்று திரும்பிக் கொண்டாள் நிலா.
“இல்லையே… உன்னைப் பார்த்தா நார்மலாவே இல்ல… எதோ யோசனையாவே இருக்கே… என்னாச்சுடி உனக்கு…”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல’ எ…எனக்கு கொஞ்சம் பயமாருக்கு…”
“பயமா… எதுக்கு….. கல்யாணத்தை நினைச்சா…”
“ம்ம்…” என்றாள் தலையைக் குனிந்து கொண்டே நிலா.
“அட… உன் அத்தை மகன் தானே… நீ என்ன வேற குடும்பத்துக்கா வாழ்க்கைப் படப் போறே… ஒரு வேளை, அவரோட துபாய்க்குப் போயிட்டா இங்கே எல்லாரையும் மிஸ் பண்ணனுமேன்னு யோசிக்கறியா…” என்று அவளே காரணத்தையும் கண்டு பிடித்துக் கேட்டாள்.
“ஆ… ஆமாம்… புது நாடு… பழக்கமில்லாத மனுஷங்க… அ… அதான் கொஞ்சம் பயமாருக்கு…” என்றாள் அவள் நெற்றியில் பொடிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே.
“ம்ம்… இதெல்லாம் ஒரு விஷயமா… எல்லாம் பழகிக்கறது தானே… உனக்குப் பழக்கமான மாப்பிள்ளை… அமைதியா, நல்லவராகத்தான் தெரியுறார்… நல்லாவும் பழகுறார்… சும்மா தேவையில்லாம யோசிச்சு எதையும் குழம்பிக்காதே… காலைல சீக்கிரமா எழுந்திருக்கணும்… நீ ரொம்ப டயர்டா இருக்கே… படுத்துத் தூங்கு…” என்றாள் அவள்.
“ம்ம்… சரி… நீங்களும் தூங்குங்க… எனக்கு பேச்சு சத்தம் கேட்டா தூக்கம் வராது…” என்று நிலா கூறியதும், அவர்களும் லைட்டை அணைத்துவிட்டு படுத்தனர்.
சிறிது நேரம் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தவர்கள் மெதுவாய் உறங்கத் தொடங்கினர்.
பால் நிலவு மிதமான வெளிச்சத்தை பூமிக்குப் பரப்பிக் கொண்டிருக்க ஜீவராசிகள் ஓய்வெடுப்பதற்காய் நித்திரையில் மூழ்கத் தொடங்கி இருந்தன. அந்தக் கல்யாண மண்டபத்திலும் அனைவரும் அங்கங்கே சோர்வுடன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.
அனைவரும் உறங்குவதற்காய், வான் நிலாவுடன் தானும் உறங்காமல் காத்திருந்தாள் நிலா. மெல்ல எழுந்தவள் தலையணைக்கு அடியில் இருந்த அலைபேசியை எடுத்து சமயம் பார்த்தாள்.
மணி பன்னிரண்டைத் தாண்டி விட்டதை அது உறுதிபடுத்த பக்கத்தில் படுத்திருந்தவர்களை கவனத்துடன் பார்த்துக் கொண்டே மெல்ல எழுந்தாள்.
தலையணையை அவள் படுத்திருந்த இடத்தில் வைத்துவிட்டு மெல்ல எழுந்து குளியலறைக்கு சென்றவள், அலைபேசியை எடுத்து யாருக்கோ வேகமாய் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினாள்.
பதட்டத்துடன் அதைப் பார்த்துக் கொண்டே பதிலுக்காய் காத்திருக்க அது புது செய்தியுடன் ஒளிரவும், அவசரமாய் அதைப் படித்துவிட்டு முகத்தைக் கழுகி தலையை மேலாக ஒதுக்கிக் கொண்டு வெளியே வந்து ஒரு துப்பட்டாவை எடுத்து தலையோடு போட்டு மூடிக் கொண்டாள். கையில் ஒரு கைப்பையை எடுத்துக் கொண்டு கதவை நோக்கி நடந்தாள்.
கீழே படுத்திருந்த அவளது அன்னை திலகம் புரண்டு படுக்க, அதிர்ச்சியுடன் அப்படியே அசையாமல் நின்றாள். அவர் அப்படியே மீண்டும் உறங்கிவிட, பூனையாய்ப் பாதம் பதித்து கதவைத் திறந்து கொண்டு அறைக்கு வெளியே வந்தாள்.

Advertisement