Advertisement

“ம்ம்… என் ராசாத்தி, அழகா இருக்கே… உன்னை இப்படிக் கல்யாணக் கோலத்துல பார்க்க உன் அப்பாவுக்கு தான் கொடுத்து வைக்கலை… நீ போகுற வீட்டுல சந்தோஷமா இருக்கணும்மா…” மகளை வாஞ்சையுடன் வாழ்த்திக் கொண்டே கன்னத்தை வழித்து திருஷ்டி கழித்தார்.

“அலமு… மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கோவிலுக்குப் பக்கத்துல வந்துட்டதா போன் பண்ணினாங்க… சீர்வரிசைத் தட்டெல்லாம் கொண்டு போயி வச்சாச்சா…”

“ம்ம்… மல்லிகா கொண்டு போயி வச்சுட்டாம்மா…” என்றாள் சுதாவின் தோழியான அலமு.

“மாப்பிள்ளை வீட்டுல எந்தக் குறையும் சொல்லிடக் கூடாது… எல்லாம் நல்லபடியா திருப்தியாப் பண்ணிடனும்…” படபடத்தார் அவர்.

“எல்லாம் பண்ணிடலாம் மா… நீங்க பதட்டப் படாதிங்க…” என்றாள் சுதா.

“சரிம்மா அலமு… நீ சுதா பக்கத்துலயே இரு… அவங்கல்லாம் இப்ப வந்திடுவாங்க… நான் முன்னாடி போய் நிக்கறேன்…” என்று சொன்னவர் அங்கிருந்து நகர்ந்தார்.

சற்று நேரத்தில் அந்த இடமே பரபரப்பாக, மணமகன் வீட்டார் வந்த வாகனங்கள் வரிசையாய் வந்து நின்று இயக்கத்தை நிறுத்திக் கொண்டன. ஒரு காரில் இருந்து வீல்சேர் ஒன்றை டிரைவர் வெளியில் எடுத்து வைக்க, அதில் காரில் அமர்ந்திருந்த அன்னையை எடுத்து அமர்த்தினான் கதிர். மற்றவர்களும் இறங்க, அனைவரையும் வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

அவர்கள் முதல் நாள் இரவே லாட்ஜில் அறை எடுத்துத் தங்கி இருந்ததால் அனைவரும் காலையில் ரூமிலேயே புறப்பட்டு வந்திருந்தனர். இரு வீட்டினரையும் சேர்த்து மொத்தமே நூறு பேர்தான் கல்யாணத்திற்கு வந்திருந்தனர். அதுவும் சுதா வீட்டு சார்பாய் வந்தவர்களே அதிகம். கதிர் ஊரில் உள்ள ஆட்களை ரிஷப்ஷனுக்கு மட்டுமே அழைத்திருந்தான். நெருங்கிய ஆட்கள் மட்டுமே அங்கு வந்திருந்தனர்.

கதிரின் அன்னையை பார்த்துக் கொள்ள கூடவே ஒரு பணிப் பெண்ணும் இருந்தாள். வந்தவர்களை வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்த சுதாவின் அம்மா, கதிரின் அன்னையைக் காண வந்தார். கூட்ட நெரிசலில் அவரை ஒரு ஓரமாக உட்கார வைத்திருந்தனர்.

“வாங்க சம்மந்தி… எப்படி இருக்கீங்க, இப்போ உடம்பு பரவாயில்லையா…” அவரது பேச்சில் இருந்தே அவர்தான் சுதாவின் அன்னை என்று புரிந்து கொண்டார் கதிரின் அன்னை.

“ம்ம்… கொஞ்சம் தேவலை, படுத்திட்டே இருக்காம வீல்சேர்ல உக்கார முடியுது… என் மருமக புறப்பட்டுட்டாளா…” என்றார் அவரை உற்று நோக்கிக் கொண்டே.

“ரெடியாகிட்டா சம்மந்தி… அந்தப் பக்கமா மறைவா உக்கார்ந்திருக்கா… நீங்க ஏதாவது சாப்பிடறீங்களா…”

“இல்லை… சாப்பிட்டு தான் வந்தோம்… முகூர்த்ததுக்கு நேரம் ஆயிருச்சே… இனி யாராவது வரணுமா…” என்றவரின் முகம் அப்போதும் யோசனையாகவே இருந்தது.

“என்ன சம்மந்தி… ஏதோ யோசிச்சுட்டே இருக்கீங்க… என்ன ஆச்சு…”

“இல்ல… அது வந்து, உங்களைப் பார்த்தா, எனக்கு நல்லாப் பழகின முகமாத் தோணுது… நானும் யோசிச்சுகிட்டே இருக்கேன்… ஆனா எங்க பார்த்தேன்னு தான் நினைவு வரலை… ஆமா, உங்களுக்கு எந்த ஊரு…” என்று கேட்க, அவரது முகம் சட்டென்று ஒரு மாற்றத்தைக் காட்டி பிறகு சரியானது.

“என்னோட ஊரு…” என்று அவர் ஏதோ சொல்லத் தொடங்க, அதற்குள் ஐயர் குரல் கொடுத்தார்.

“முகூர்த்ததுக்கு நாழியாகறது… மாப்பிள்ளையை வரச் சொல்லுங்கோ…” என்று அவரது குரலைத் தொடர்ந்து துணை மாப்பிள்ளை சகிதம் அக்னியின் முன்பு வந்து அமர்ந்தான் கதிர். அய்யர் அவசரமாய் மந்திரங்களை சொல்லத் தொடங்கினார். அவருக்கு இந்தக் கல்யாணத்தை முடித்துவிட்டு அடுத்து ஒரு கல்யாணமும் இருந்தது. இந்த பிசினஸ் உலகில் கல்யாணமும் அவசரம் தான்.

“சரி சம்மந்தி… நாம அப்புறம் பேசுவோம்… நீங்க போயி அங்கே கவனிங்க…” என்றார் கதிரின் அம்மா.

“ம்ம்… சரி சம்மந்தி…” என்றவர் வேகமாய் அங்கிருந்து நகர்ந்தார். அவரது முகத்தில் ஏதோ சிறு அதிர்ச்சி தோன்றி மறைந்தது போலத் தோன்றியது கதிரின் அன்னைக்கு. கல்யாண சடங்கில் பார்வையைப் பதிந்திருந்தாலும் நினைவுகள் சுதாவின் அன்னை முகத்தையே பழைய நினைவடுக்கில் தேடிக் கொண்டிருந்தது.

சுதாகரும் அவனது மனைவியும் கல்யாணத்துக்கு வந்திருந்தனர். அவர்களிடம் அவரது அண்ணியைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார் கதிரின் அம்மா. இப்போது தான் சற்று கோபம் குறைந்திருந்தது அவர்களுக்கு. கதிர், வயதானவர்கள் யாரையும் கல்யாணத்திற்கு அழைத்து வரவில்லை… எல்லாரையும் உள்ளூரில் ரிஷப்ஷனுக்கு அழைத்திருந்தான்.

“பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ…” என்ற ஐயரின் குரல் கேட்க, சுதாவை அழைத்து வந்தாள் அலமு. மெதுவாய் அவனை ஏறிட்டவளைப் பார்த்து கதிர் புன்னகைக்க, அது சுதாவையும் தொற்றிக் கொண்டது.

குனிந்த தலையுடன் நடந்து வந்தவள், கம்பீரமாய் மாப்பிள்ளைக் கோலத்தில் அமர்ந்திருந்தவனைக் கண்டதும் நாணத்தில் முகம் சிவந்தாள். மணப்பெண் கோலத்தில் நடந்து வந்த சுதாவைக் கண்ட கதிரின் அன்னைக்கு சட்டென்று நினைவடுக்கில் ஒரு பிளாஷ் அடித்தது. யோசித்துக் கொண்டே சுதாவின் அன்னையை நோக்கினார். அவரது நினைவுகள் வேகமாய் பல ஆண்டுகள் கடந்து பின்னோக்கி சென்றன.

“இ… இதென்ன சுதாவை கல்யாணக்கோலத்தில் பார்த்தா, அப்படியே கௌதமோட அம்மாவை கல்யாணப் பொண்ணா பார்த்த போல இருக்கு… அப்ப இவங்க… கெளதம் சின்னப் பையனா இருக்கும் போது விட்டுட்டு ஓடிப் போன கௌதமோட அம்மாவா… அப்படின்னா சுதா, கெளதம் தங்கையா… அய்யய்யோ, இப்போ என்ன பண்ணுறது… இந்த விஷயம் தெரிஞ்சா கதிர், கல்யாணத்தையே நிறுத்திடுவானே…” அவர் மனது அடுத்தடுத்து ஆலோசித்துக் கொண்டிருக்க, சுதாவை காதலுடன் நோக்கி சிரித்துக் கொண்டிருந்த கதிரைப் பார்த்தார்.

“வேண்டாம்… இதை இப்போ யாருகிட்டயும் சொல்ல வேண்டாம்… பாவம், அம்மா செய்த தப்புக்கு பொண்ணை எதுக்கு தண்டிக்கணும்… அதும் இல்லாம கெளதமோட தங்கைன்னு தெரிஞ்சா என் பையன் அந்தப் பொண்ணையே வெறுத்திடுவான்… அவ இந்தக் கல்யாணத்தை நினைத்து எத்தனை கனவு கண்டிருப்பாளோ… எதுவும் எனக்கு தெரிஞ்ச போல காட்டிக்க வேண்டாம்…” என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே ஐயர், தாலியை எடுத்து கதிரின் கையில் கொடுக்க,

“அதை என் அம்மாகிட்டே கொடுத்து வாங்கிக் கொடுங்க…” என்றான் கதிர்.

“கதிர்… அதெல்லாம் வேண்டாம், நீ தாலியைக் கட்டுப்பா… என்னோட ஆசிர்வாதம் உனக்கு எப்பவும் இருக்கு…” என்று அவசரப் படுத்தினார் அன்னை.

“உங்க கையில வாங்கி ஆசிர்வாதம் பண்ணிட்டு குடுங்கம்மா…” என்றான் கதிர் உறுதியாக. கூடியிருந்தவர்கள் அவர்களுக்குள் சலசலக்கத் தொடங்கினர்.

அதைக் கண்டு தவிப்புடன் கடவுளின் மீது பாரத்தைப் போட்டு ஐயர் நீட்டிய மாங்கல்யத்தை நடுங்கும் விரல்களால் வாங்கிக் கொண்டார், கண்ணை மூடி கடவுளை வேண்டிக் கொண்டார்.

“கடவுளே… கௌதமின் அன்னையைப் பற்றிய உண்மை தெரிந்தால் இந்தக் கல்யாணத்தில் என்னெல்லாம் பிரச்சனை வரப் போகிறதோ… இதில் என் மகன், அமங்கலியான என்னை வேறு தாலியை எடுத்துக் கொடுக்க சொல்லுகிறான்… இந்தக் கல்யாணம் என்றும் நிலைத்திருக்கணும்… இவங்க ரெண்டு பேரும் எந்த மனவருத்தமும் இல்லாம கடைசி வரைக்கும் ஒண்ணா சேர்ந்திருக்கணும்… அதுக்கு நீதான் அருள் புரியணும் முருகா…” என்று மனதார வேண்டிக் கொண்டவர், மாங்கல்யத்தை  நீட்டினார்.

அதை ஐயர் வாங்கி கதிரின் கையில் கொடுக்க, கடவுளை மனதில் நினைத்துக் கொண்டு சுதாவின் கழுத்தில் மூன்று முடிச்சைப் போட்டான் கதிர்.

கூடி இருந்தவர்கள் அட்சதை தூவ, அடுத்து மாலையும் மாற்றிக் கொண்டனர்.

மகளின் கல்யாணத்தை கண்கள் கலங்கப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார் சுதாவின் அன்னை. அதைக் கண்ட கதிரின் அன்னையின் முகத்தில் மகனின் கல்யாணம் முடிந்த சந்தோஷத்தையும் மீறி ஒரு திகில் பரவத் தொடங்கியது.

அதே நேரம் கோவிலுக்கு முன்பு கெளதம் பைக்கை நிறுத்த இறங்கிக் கொண்டனர் நிலாவும் அம்முவும். அவர்கள் ஓரமாய் நிற்க, கெளதம் வண்டியை சற்றுத் தள்ளி நிறுத்திக் கொண்டிருந்தான்.

“கெளதம் சீக்கிரம் வாங்க… முகூர்த்த நேரம் முடிஞ்சிருச்சு… இன்னைக்கு நிறையக் கல்யாணம் இருக்கும் போலருக்கு… ரொம்ப கூட்டமா வேற இருக்கு… சுதாவோட கல்யாணம் எந்த சன்னதிலன்னு வேற பார்க்கணும்…” பரபரத்தாள் நிலா.

“ம்ம்… இதோ… வந்துட்டேன்…” வேகமாய் வந்தான் கெளதம். இருவருக்கும் நடுவில் அவர்கள் கையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு வந்தாள் அம்மு. அதைக் கண்டு இருவரும் சிரித்துக் கொண்டே பிரகாரத்துக்குள் நுழைந்தனர்.

முன்னில் இருந்த கோவில் அலுவலகத்தில் சுதாவின் பெயரை சொல்லி விசாரிக்க, அவர்கள் அங்காரகனின் சன்னதிக்கு செல்லுமாறு கூறினர். அவர்கள் அந்த சன்னதியை நோக்கி நடந்தனர். கூட்ட நெரிசலில் பார்வையை சுழற்றியவாறே அம்முவுடன் பேசி சிரித்துக் கொண்டு அந்த சன்னதியை அடைந்தனர். அப்போது கௌதமின் அலைபேசிக்கு ஏதோ மெசேஜ் வர, அவன் அதைக் குனிந்து பார்த்துக் கொண்டே நடந்தான்.

“அம்மா… எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க…” தம்பதியராய் அன்னையின் காலில் விழுந்து வணங்கினர் கதிரும் சுதாவும்.

அவர்களை சந்தோசத்துடன் ஆசிர்வதித்துக் கொண்டே நிமிர்ந்தவரின் கண்கள் அப்படியே நிலைகுத்தி நின்றன. எதிரில் நிலா, கையில் பிடித்திருந்த குழந்தையிடம் ஏதோ சொல்லிக் கொண்டே அந்த சன்னிதியை நோக்கி வந்து கொண்டிருக்க, அருகில் கெளதம் அலைபேசியை நோண்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தான்.

கதிரின் அன்னையின் உதடுகள், “நிலாம்மா…” என அன்னிச்சையாய் உச்சரிக்க, அதைக் கேட்டு அதிர்ச்சியுடன் நிமிர்ந்தான் கதிர். அன்னையின் பார்வை சென்ற திசையில் திரும்பியவனின் கண்கள் கோபக்கனலாய் மாற, அதே நேரம் அன்னையைப் பார்த்து விக்கித்து நின்றிருந்தாள் நிலா.

அவள் நின்றுவிட்டதைக் கண்ட கெளதம் நிமிர, “அம்….மா…..” என்று தொண்டைக்குள் அடைத்துக் கொண்ட வார்த்தைகளை மெதுவாய் துப்பினாள் நிலா.

அவர்கள் ஏன் இப்படி அதிர்ந்து நிற்கிறார்கள் எனப் புரியாமல் திரும்பிய சுதா, நிலாவைக் கண்டதும் முகம் மலர்ந்தாள். “அம்மா… அண்ணாவும், அண்ணியும் வந்திருக்காங்க… கூப்பிடுங்க….” என்றாள் மெதுவாக. அதைக் கேட்டதும் சரேலென்று திரும்பினான் கதிர். அவனது அன்னையும் அதைக் கேட்டு அதிர்ந்து போக, இது ஒன்றும் புரியாமல், சுதாவின் அன்னை எதார்த்தமாய் அவர்களை வரவேற்றார்.

“வாம்மா… நிலா… கொஞ்சம் முன்னாடி வந்திருக்கக் கூடாதா… இப்பதான் தாலி கட்டினாங்க… ஹேய், அம்மு செல்லம்… வாங்க வாங்க…” என்று அம்முவின் தலையைத் தடவியவர் கெளதமை நோக்கி நிமிர்ந்தார்.

“வாங்க தம்பி… வழக்கமான வரவேற்பு சொல்லை உதிர்த்தவர், அதிர்ச்சியுடன் கதிரையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தவனைக் கண்டதும் அவரது முகமும் அதிர்ச்சியைக் காட்டியது. கெளதம் அப்படியே அவனது தந்தையைப் போன்ற உருவம். சட்டென்று தன் முன்னால் தான் செய்த துரோகம் உருவம் பெற்று நிற்பது போல் அவரது மனது குற்றப்படுத்த துடித்துப் போனார்.

“இ…இவன்… அவரைப் போலவே இருக்கிறானே… ஒருவேளை… எ…என் மகன் கெளதம் தான் இவனா… குழந்தையாய் இருக்கும்போது என் சுயநலத்தை மட்டுமே எண்ணி, அவனுக்கு துரோகம் செய்து, பிறகு தினமும் அந்த குற்றவுணர்ச்சியிலேயே அவனைக் காணத் துடித்த நான் பெற்ற மகனா…  நிலா  என் மருமகளா… அய்யோ, இப்போது நான் என்ன செய்வேன்… என் கண் முன்னில் என் மகனைக் கண்டும் அவனிடம் காட்டிக் கொள்ள முடியாத பாவியாக நிற்கிறேனே…” அவரது மனது அடுக்கடுக்காய் கேள்வியை வைக்க, சட்டென்று சூழ்நிலை உணர்ந்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டார்.

அப்போது தான் நிலாவின் கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர் அவர் கண்ணில் பட, “இவள் எதற்கு அழுகிறாள்…” எனப் புரியாமல் நிமிர்ந்தார். கெளதமின் கண்களும் கலங்கி இருக்க, அவனது சட்டையைப் பிடித்திருந்த கதிரை அதிர்ச்சியுடன் நோக்கினார்.

“மாப்பிள்ளை எதற்கு இவனது சட்டையைப் பிடித்திருக்கிறார்…” அவருக்கு எதுவுமே புரியவில்லை. நிலா, அன்னையின் கோலத்தைக் கண்டு கண்ணீர் வடித்துக் கொண்டே, “அம்….மா…” என கதறிக் கொண்டு ஒரு எட்டு எடுத்து வைக்க, அவளுக்கு முன்னில் கையை நீட்டித் தடுத்த கதிர், “துரோகி…” என சொல்லிக் கொண்டே அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

துடித்துப் போன நிலா, தலையைக் குனிந்து நின்றிருக்க, கௌதமை நோக்கித் திரும்பிய கதிர், “நீ இவளைக் காதலிச்சு ஓடிப் போனதைக் கூட நான் மன்னிச்சிருவேன்… என் நட்புக்கு நீ பண்ணின துரோகத்தை நான் எப்பவுமே மறக்க மாட்டேன்டா… நம்பிக்கைத் துரோகி…” என்று அவனையும் ஓங்கி அறைந்தான். அப்போதும் கெளதம் அமைதியாய் கலங்கிய கண்களுடன் எதுவும் சொல்லாமல் சிலையாய் நின்றிருந்தான்.

பத்துமாதம் சுமந்தவளைப்

பார்த்ததில்லை நானும்…

பாவப் பட்ட பிறவியாக

பிறந்தது என் பாவம்…

தாய் செய்த பழி என்னை

துரத்திடும் பெரும் சாபம்…

உலகம் தான் தூற்றிடுமே…

சொல் அம்பில் வீழ்த்திடுமே…

என் கண்ணீரைத் தன் கண்ணீராய்

கலக்கத்துடன் துடைத்திட்டான் ஒருவன்…

துயரங்களைத் தோளில் தாங்கி

துன்பங்களில் துடித்திடும் என் நண்பன்…

துரோகம் என்ற செயலாலே

என்னைத் தான் வெறுத்திட்டான்…

ஆனாலும் தந்தைக்கு – மகனாக

தன் கடமையைத்தான் செய்திட்டான்…

பெண்ணினத்தை வெறுத்திருந்தேன்…

எண்ணத்தை அழிக்க வந்தாள் என்னவள்…

அன்பென்னும் ஆயுதத்தால் வாழ்வை

அழகாக்கிட வந்த பெண் சிற்பி அவள்…

சுமக்காத பிள்ளையைத் தன்

உறவாக ஏற்றாளே… தன்

உயிராக வளர்த்தாளே – உன்னதமான

அன்பால் எனை அவள் பக்கம் ஈர்த்தாளே…

தாய் தாலாட்ட மறந்த என்னை

சீராட்ட வந்தவளை நேசிக்கவே

இந்த ஜென்மம் கொண்டேனோ…

சுமந்திடுவாளோ என்னையும்

சுகமாக நெஞ்சத்தில்…

Advertisement