Advertisement

நிலா – 19

வா… வெண்ணிலா…..

உன்னைத்தானே வானம் தேடுதே…..

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்……

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்……

வா…… வெண்ணிலா…… உன்னைத்தானே

வானம் தேடுதே…..  வா வெண்ணிலா…..

முற்றிலும் இருள் விலகிடாத அதிகாலையில், சாலையில் வெளிச்சத்தைப் பாய்ச்சிக் கொண்டு விரைந்து கொண்டிருந்தது அந்தப் பேருந்து. காலை எட்டு மணிக்கு சென்னையை அடைந்து ரிப்போர்ட் செய்து விடவேண்டும் என்ற விஷயத்தில் டிரைவர் தீவிரமாய் இருந்தார். சில பயணிகள் உறக்கத்தில் இருக்க, சிலர் கொட்டாவியுடன் விடியலை எதிர்கொள்ளக் காத்திருந்தனர்.

எஸ்பிபியின் கணீர்க் குரலில் இதமாய் ஒலித்துக் கொண்டிருந்தது அந்தப் பாடல். சிறு புன்னகை இதழில் தவழ, கண்களில் கனவுகளை சுமந்து கொண்டு பாடல் வரிகளை ரசித்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.

“நிலா… நீ இப்ப என்ன பண்ணிட்டிருப்ப… என்னைப் பத்தி கனவு கண்டுட்டு இருப்பியா… முன்னை விட அழகா இருப்பியா… இல்ல, என்னைக் காணாத ஏக்கத்துல இளைச்சுப் போயிருப்பியா… எப்படியும் என் மேல கோபமாதான் இருக்கப் போற… என்னைப் பார்த்ததும் நீ என்ன பண்ணுவ… கார்த்தி, வந்துட்டிங்களான்னு ஓடி வந்து என்னைக் கட்டிப் பிடிச்சு முத்தம் குடுக்கப் போறியா… இல்ல, இவ்ளோ நாள் என்னை விட்டுட்டு எங்கடா போனேன்னு பளார் பளார்னு அடிக்கப் போறியா… உன்னோட வெண்டைப் பிஞ்சு விரல்கள் எதைக் கொடுத்தாலும் எனக்கு சந்தோசம் தான்…”

“உன்னை நான் வேணும்னு விட்டுட்டுப் போகலை, சூழ்நிலைதான் இதற்குக் காரணம்னு தெரிஞ்சா உன் கோபமெல்லாம் மேகமாய் விலகிடத்தான போகுது… அப்ப என்ன பண்ணுவ… ஓடிவந்து என் முகமெங்கும் முத்தம் வச்சு என்னைக் கட்டிகிட்டு அழுவியா நிலா… அச்சோ, உடனே உன்னைப் பார்க்கணும் போல இருக்கே…” தவிப்புடன் மனம் நிறையக் கற்பனைகளையும் கனவுகளையும் சுமந்து கொண்டு பயணமாகிக் கொண்டிருந்தது கார்த்திக்கின் நெஞ்சம்.

“கெளதம் நீ எப்படிடா இருக்கே… உனக்கு என்னால என்னெல்லாம் பிரச்சனைகள்… எல்லாரும் நிலாவை நீதான்  கூட்டிட்டுப் போயிருக்கன்னு உன் மேல கோபமா இருக்காங்களாம்… உன்னோட அப்பா இறந்ததுக்கு கூட உன்னால ஊருக்கு திரும்பி வர முடியாமப் போயிருச்சுன்னு அம்மா சொன்னாங்களே… கதிர் இங்கயும் வந்து விசாரிச்சிட்டுப் போனானாம்… என்னால உனக்கு எத்தனை துன்பம்…” அவன் மனது நண்பனை நினைத்துக் கலங்கியது.

“இத்தனை பிரச்சனையிலும் அடிக்கடி என் அம்மாவுக்கு போன் பண்ணி என்னைப் பத்தி விசாரிச்சுட்டே இருந்திருக்கே… உன்னைப் போல ஒருத்தன் என் நண்பனாக் கிடைச்சதுக்கு நான் என்ன புண்ணியம் பண்ணி இருக்கேனோ… என் நிலாவை நீ நல்லாப் பார்த்திட்டு இருப்பேன்னு எனக்குத் தெரியும்… இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களைப் பார்க்கப் போறேன்… நினைச்சாலே மனசெல்லாம் பட்டாம்பூச்சி பறக்குற போல படபடப்பா, சந்தோஷமா இருக்கு…” காலையில் அவர்களை சந்திக்கப் போகும் உற்சாகம் நிறைந்திருந்தது அவன் மனதில்.

முதல் நாள் சென்னையில் இருந்து சேலம் சென்று அன்னையைக் கண்டவன், அன்னையிடம் நடந்த விஷயங்களை எல்லாம் கூறினான். அதைக் கேட்டு அதிர்ந்து போனவர் மகனை நினைத்து கண்ணீர் வடித்தார். அன்னையை சமாதானம் செய்தவன், அவரிடம் கெளதம் கொடுத்திருந்த சென்னை முகவரியை வாங்கிக் கொண்டு அன்று இரவே சென்னைக்கு பஸ் ஏறிவிட்டான். பேருந்து வேகமாய் சென்றாலும் அவனுக்கு நத்தையாய் நகர்வது போலவே தோன்றியது.

சிலுசிலுவென்று காலைத் தென்றல் கவிதையாய் முகத்தில் உரசிச் செல்ல, சிலிர்ப்புடன் கண்ணைத் திறந்து வெளியே பார்த்தான். கிழக்கில் பணியைத் தொடங்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தான் சூரியன். பட்சிகளின் குரல் அங்கங்கே ஒலித்து மறைந்தது. பேருந்து சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தது.

“கெளதம்… நான் ரெடி, கிளம்பலாமா…”

பட்டுசேலை சரசரக்க, லூசாய்ப் பின்னிய கூந்தலில் சரமாய் தொங்கிய மல்லிகைப் பூவுடன் முன்னில் வந்து நின்ற நிலாவை ஏறிட்டான் கெளதம். அழகான விழிகளில் லேசாய் அஞ்சனம் வரைந்திருந்தாள். சின்ன பிரவுன் நிற வட்டப் பொட்டுக்கு மேலே மெலிதாய் சந்தனக் கீற்று… கழுத்தில் மஞ்சள் சரடுடன் ஒரு செயின் மட்டுமே… சின்ன சரிகை வைத்த அந்த ஆனந்த புளூ நிறப் பட்டு சேலை அவளது தங்க நிறத்துக்குப் பாந்தமாய் இருந்தது.

அதே நீல நிறத்தில் கௌதமும் ஷர்ட் போட்டிருந்தான். எதேச்சையாய் அமைந்தது தான். இருந்தாலும் அவனது உடையைக் கண்ட நிலாவின் முகம் மலர்ந்தது. தன் கட்டுப்பாட்டை மீறி ரசனையுடன் அவளது முகத்தில் நிலைத்திருந்த கண்களை அம்முவின் குரலில் அவசரமாய் மாற்றிக் கொண்டான் கெளதம். அவனது பார்வை அவளது மனதுக்குள் இனம் புரியா ஒரு தவிப்பைக் கொடுத்தது.

“அய்… அம்மாவும் அப்பாவும் ஒதே கலர் டெஸ்… அம்மா அழகா இதுக்காங்க இல்லப்பா…” என்றாள் கௌதமிடம்.

“ஹும்… சரி கிளம்பலாமா… பத்து மணிக்கு முகூர்த்தம்… இப்பவே லேட் ஆகிடுச்சு…” என்றான் அவன்.

“அம்மா, எனக்கும் பூ வேணும்…” என்றாள் அம்மு.

“உன் தலயில பூ நிக்காதுடா செல்லம்… சரி, உனக்கு ரோஸ் மட்டும் வச்சு விடறேன்…” என்றவள், ஒரு ரோஜாப் பூவை எடுத்து அவள் ஹிப்பித் தலையில் வைத்து விட்டாள்.

“அம்மா… நானும் அழகா இதுக்கேனா…” என்று தலையை சரித்துக் கேட்டவளின் கன்னத்தில் முத்தமிட்டு, “பர்த்டே டிரஸ்ல குட்டி தேவதை மாதிரி இருக்கேடா செல்லம்… சரி, கிளம்பலாமா…”

“ஹும்… அப்பா, அழகா இதுக்காங்களா…” என்றாள் அம்மு விடாமல்.

அடிக்கண்ணால் அவனைப் பார்த்தாள் நிலா.

மாநிறத்துக்கும் அதிகமான வெளுத்த நிறம்… அடர்த்தியான சிகை, அகன்ற நெற்றி… கூர்மையான நாசி… கட்டியான மீசை… நேர்கொண்ட வசீகரிக்கும் பார்வை… சிறிது கூட ரோமம் இல்லாத வளவளப்பான தாடை… நேர்த்தியான உடை, சட்டையில் மேல் பட்டனை அலட்சியமாய் திறந்து போட்டிருந்தான். அவனைத் தழுவிய அவளது பார்வையில் அவஸ்தையாய் நெளிந்தவன், முள் மீது நிற்பது போல நின்று கொண்டிருந்தான். அவனையே ஒரு நிமிடம் பார்த்தவள்,

“உன் அப்பா, எப்பவுமே அழகன் தான் செல்லம், இதுல உனக்கென்ன சந்தேகம்…” என்றாள் குறும்புடன். அதைக் கேட்டதும் கௌதமின் உதடுகளில் உதித்த புன்னகை உடனே ஒளிந்து கொண்டது.

கார்த்திக்கின் வருகையைப் பற்றி அவன் அன்னை கூறியதை, இன்னும் நிலாவிடம் சொல்லாமல் இருந்தான் கெளதம். முன்பு ஒரு முறை வருவேன் என்று சொல்லி வராமல் இருந்தது போல் இப்போதும் வராமல் தாமதித்தால், நிலா எப்படித் தாங்கிக் கொள்ளுவாள். முதலில் அவன் வரட்டும், அப்போது சொல்லிக் கொள்ளலாம்… என்று நினைத்தவன் அவளிடம் சொல்லவில்லை. எனினும் அவளிடம் சொல்லாமல் இருந்தது அவன் மனதை உறுத்தவே செய்தது.

“கிளம்பலாமா…” என்றான் பூட்டைக் கையில் எடுத்துக் கொண்டே.

“சரி…” என்ற நிலா, “அம்மு வாடா… நாம பாட்டிகிட்ட சொல்லிட்டு வந்திடலாம்…” என்று அவளையும் அழைத்துக் கொண்டு ருக்மணியின் வீட்டுக்கு சென்றாள்.

“அம்மா…” வாசலில் கேட்ட நிலாவின் குரலில் வெளியே வந்தார் ருக்மணி.

“அட… பிறந்த நாளுக்கு கேக் வெட்டின கையோட எல்லாரும் எங்கயோ புறப்பட்டுட்டீங்க போலருக்கு…”

“ம்ம்… ஆமாம்மா… ஒரு கல்யாணத்துக்கு கிளம்பிட்டோம்… சுதான்னு அன்னைக்கு ஒரு பொண்ணு பத்திரிக்கை வைக்க அம்மாவோட வந்திருந்தாளே… அவளுக்கு இன்னைக்கு வடபழனி முருகன் கோவில்ல கல்யாணம்… அதான், போயிட்டு வரலாம்னு…”

“ஓ… அப்படியா, இன்னைக்கு நிறைய முகூர்த்தம் இருக்கும் போலருக்கு… பார்த்து நல்லபடியா போயிட்டு வாங்க… இப்பவே ஒன்பது மணி ஆயிருச்சே… எத்தன மணிக்கு முகூர்த்தம்…”

“பத்து மணிக்குமா… அம்மு பர்த்டேக்கு காலைல கேக் வெட்டினதால கிளம்ப நேரம் ஆயிடுச்சு… சரி, நாங்க போயிட்டு வந்திடறோம்மா…” என்றாள் நிலா.

“பாத்தி… நாங்க போயித்து வதத்தா… இங்க பாது, நானும் பூ வச்சிதுக்கேன்… அழகா இதுக்கா…” என்று தலையைத் தொட்டுக் காட்டினாள் அம்மு.

“ம்ம்… என் ராஜாத்தி… மூணு பேரும் அழகா இருக்கீங்க… எத்தன பேரு கண்ணு படப் போவுதோ… போயிட்டு வந்து சுத்திப் போடனும், சரியா…” என்றவர், நிலாவின் முகத்தைப் பார்த்துவிட்டு, முகம் மாறினார்.

“ஏம்மா நிலா… சுமங்கலிப் பொண்ணு… கல்யாணத்துக்குப் போற… இப்படியா போறது… பாக்குறவங்க என்ன நினைப்பாங்க… ஒரு நிமிஷம் இரு… இதோ, வந்திடறேன்…” என்றவர் உள்ளே சென்றார்.

நிலா ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருக்க, அதற்குள் கெளதம் அவர்கள் வீட்டைப் பூட்டிவிட்டு அங்கு வந்துவிட்டான்.

“அவங்ககிட்டே சொல்லிட்டியா நிலா… கிளம்பலாமா…”

“ம்ம்… ஒரு நிமிஷம் கெளதம்… அம்மா வந்திடறேன்னு சொல்லிட்டு உள்ளே போனாங்க…” என்றவள் குழப்பமாய் அவளது உடையையும் கழுத்தையும் தொட்டுப் பார்த்துக் கொண்டாள்.

“எதுக்கு அப்படி சொல்லி இருப்பாங்க… எல்லாம் சரியாத் தானே இருக்கு…” அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்தார் ருக்மணியம்மா.

“சுமங்கலிப் பொண்ணு… வகிட்டுல குங்குமம் வச்சுக்காமக் கல்யாணத்துக்குப் போனா நல்லாவா இருக்கு… வீட்டுல இருக்கும் போது தான் வைக்கிறதில்லை… எங்காவது விசேஷத்துக்கு கிளம்பும்போது கூட வைக்காமப் போனா எப்படி… இந்தா, இந்தக் குங்குமத்தை வகிட்டில தொட்டுக்கோ…” என்றவர் குங்குமச் சிமிழை நீட்ட, திகைத்தாள் நிலா.

அவள் திகைத்து நிற்பதைப் பார்த்தவர், “ஓ… கண்ணாடி இல்லன்னு பாக்குறியா… இந்தாப்பா கெளதம்… இந்தக் குங்குமத்தை எடுத்து உன் பொண்டாட்டிக்கு நீயே வச்சு விடு… இந்தக் காலத்துப் பொண்ணுங்க நாகரீகம்ங்கிற பேர்ல குங்குமத்தைக் கூட வகிட்டுல வைக்க மாட்டேங்குறாங்க…” என்று அவனிடம் குங்கும சிமிழை நீட்டினார். இப்போது திகைப்பது கௌதமின் முறையாயிற்று.

“அவன் என்ன செய்யப் போகிறானோ…” என நிலா அவன் முகத்தையே பார்த்திருக்க, ஒரு நொடியில் தன்னை சரியாக்கிக் கொண்டான் கெளதம்.

“நிலா… நீயே சீக்கிரம் குங்குமத்தை எடுத்து வச்சுக்கோ… என் கையில் பைக் சாவி, கிப்ட் கவர் எல்லாம் இருக்கு… டைம் வேற ஆகுது…” என்று அவளிடமே அதைத் திருப்பி விட்டான். அதற்கு மேல் தாமதிக்காமல் நிலாவே குங்குமத்தை சிறிது எடுத்து வகிட்டில் வைத்துக் கொண்டாள்.

ருக்மணிம்மாவிடம் விடை பெற்று பைக்கில் அமர்ந்தனர். வடபழனியை நோக்கிப் பாய்ந்தது வண்டி.

வடபழனி முருகன் கோவில்.

வேண்டியதெல்லாம் நிறைவேற்றித் தரும் முருகப் பெருமானை பழனிக்கு சென்று தரிசிக்க முடியாதவர்கள் இங்கு சென்று தரிசிக்கலாம். இத்தலத்தில் பாத ரட்சையுடன் முருகன் அருள் பாலிப்பது கூடுதல் விசேஷம். அழகென்ற சொல்லுக்கு முருகன் என்பதற்கேற்ப மூலவரான முருகன் காலை பூஜை முடிந்து சந்தனக்காப்பு அலங்காரத்தில் துணைவியருடன் அழகாய் காட்சியளித்தார்.

அன்று நல்ல முகூர்த்த நாள் ஆனதால் கோவிலில் நிறையக் கல்யாணம் நடப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. பக்தர்களுடன் கல்யாணத்திற்கு வந்திருந்தவர்களின் கூட்டமும் சேர்ந்து கொள்ள கோவிலே திருவிழாக் கோலமாய் இருந்தது. 

முருகனுக்கு மிகவும் பிடித்தவரான அங்காரகனுக்கு அந்தக் கோவிலில் தனி சன்னதி இருந்தது. அங்குதான் கதிர், சுதா திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. ஐயர் ஹோம குண்டம் அமைத்து திருமண சடங்குகளுக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.

சற்றுத் தள்ளி ஒதுக்கமாய் ஒரு நாற்காலியைப் போட்டு சுதா மணப்பெண் அலங்காரத்தில் அமர்ந்திருந்தாள். அரக்கு நிறப் பட்டுப் புடவையில் தங்க நிற ஜரிகை ஜொலிக்க, அளவான அலங்காரத்தில் அழகாய் இருந்தாள். காதில் ஆடிய ஜிமிக்கியும், கழுத்தில் இருந்த ஆபரணங்களும், தலை நிறைய வைத்திருந்த மல்லிகைப் பூவும், இன்னும் சிறிது நேரத்தில் கழுத்தில் ஏறப் போகும் மாங்கல்யத்திற்காய் காத்திருந்த மனதின் எதிர்பார்ப்பு தந்த நாணச் சிவப்பும் அவள் முகத்தை மேலும் அழகாய் காட்டின.

கல்யாணத்திற்காய் வந்திருந்தவர்கள் மாப்பிள்ளை வீட்டினரின் வரவிற்காய் காத்திருந்தனர். சுதாவின் அருகில் வந்த அவள் அன்னை, மகளை கண் நிறையப் பார்த்தார்.

Advertisement