Advertisement

“சரி… பார்க்கலாம்… கடைக்கு எப்ப போகணும்…”

“மத்தியானம் போனா சீக்கிரம் வாங்கிட்டு வந்திடலாம்… கூட்டமும் அதிகம் இருக்காது… சாப்பிட்டதும் கிளம்பிடலாமா…”

“ம்ம்… போகலாம்…” என்ற கெளதம் அதோடு அமைதியாகி விட்டான்.

நிலாவும் அவன் சம்மதித்ததே சந்தோஷமாய் நினைத்து அடுக்களையில் பணியை முடிக்க ஓடினாள்.

“அம்மா…” அழைத்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தான் கதிர். வெறுமனே கண்ணை மூடிப் படுத்திருந்த அவன் அன்னை கண்ணைத் திறந்தார்.

“வா… கதிரு, மாங்கல்யம் கிடைச்சிருச்சா… பூஜை பண்ணி வாங்கினியா… என்னைக் கொஞ்சம் சாய்வா உக்கார வை…”

“ம்ம்… வாங்கிட்டு, நீங்க சொன்ன போல நம்ம குலதெய்வம் கோவில்ல பூஜையும் பண்ணிட்டேன்…” சொல்லிக் கொண்டே அவருக்குப் பின்னில் ஒரு தலையணையை வைத்து சரிவாய் அமர வைத்தான்.

“இந்தாங்கம்மா… பாருங்க…” பாக்கெட்டில் இருந்த நகைப் பெட்டியை எடுத்தவன் மஞ்சள் சரடில் கோர்த்து வைக்கப் பட்டிருந்த அந்த அழகான மாங்கல்யத்தை எடுத்து தாயிடம் நீட்டினான்.

அதை கையில் வாங்காமல் அப்படியே பார்த்தவர், “ரொம்ப அழகாருக்கு கதிரு… சரி, எடுத்து வச்சிரு…” என்றார் புன்னகையுடன்.

“அம்மா… கையில் வாங்கித்தான் பாருங்களேன்… நீங்க சொன்ன போலவே ஆசாரி செய்து கொடுத்திருக்காரான்னு அப்பத்தானே தெரியும்…”

“வேண்டாம்பா… மாங்கல்யத்தை முதன் முதல்ல அமங்கலியான என் கையில கொடுக்காதே… நம்ம குடும்பத்துக்கு எப்பவும் நகை செய்யுற தங்க ஆசாரிதானே… அவர் சரியா தான் செய்திருப்பார்…” என்று மறுத்தார் அவர்.

“என்னம்மா நீங்க, இப்பவும் அமங்கலின்னு எல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க… ஒரு தாயோட வாழ்த்தை விட பெரிய வாழ்த்தை யார் கொடுக்க முடியும்… எனக்கு நீங்க தான் கல்யாணத்துக்கு உங்க கையால தாலியை எடுத்துக் குடுக்கணும்…”

“அய்யய்யோ… அப்படியெல்லாம் ஏதும் சொல்லிடாதேப்பா… நான் கல்யாணத்துல முன்னாடில்லாம் வந்து நிக்க மாட்டேன்…”

“அதெல்லாம் முடியாதும்மா… என் அம்மா தான் என் கல்யாணத்துல முன்னாடி நிக்கணும்… அவங்க வாழ்த்து தான் எனக்கு முதலில் கிடைக்கணும்… இதுல எந்த மாற்றமும் இல்லை… இல்லைன்னா நான் தாலி கட்ட மாட்டேன்…” அவன் தீர்மானமாய் சொல்ல, சரி அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தவர், பேச்சை மாற்றினார்.

“சரி… அதை அப்புறம் பார்த்துக்கலாம், என் மருமகளுக்கு குடுக்க வேண்டிய நகை, பட்டு சேலை எல்லாம் தனியா ஒரு சூட்கேஸ்ல எடுத்து வைக்க சொல்லிருந்தேன்… எடுத்து வச்சாச்சா…”

“ம்ம்… எல்லாம் எடுத்து வச்சாச்சு மா… இனி நாளைக்கு நாம சென்னை கிளம்ப வேண்டியது தான் பாக்கி…”

“ம்ம்… அந்த முருகன் தான் எல்லாத்தையும் நல்லபடியா நடத்திக் கொடுக்கணும்…” என்றவரின் மனது மகளின் நினைவில் வாடியது.

“டேய் கதிரு, நான் ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே…”

“என்னம்மா என்கிட்டே எதுக்கு இப்படில்லாம் சொல்லறிங்க… கேளுங்கம்மா…”

“வந்து… இதுவரைக்கும் நம்ம நிலாவைப் பத்தி எந்த விஷயமும் தெரியலையே… என் பொண்ணு உயிரோட தானே இருக்கா… அவளை நீங்க யாரும் எதுவும் பண்ணிடலையே…”

“அம்மா…”  கத்தியவனின் குரலில் கோபமும் ஆத்திரமும் கலந்திருந்தது.

“இ…இல்ல… கதிரு, அவ வீட்டை விட்டுப் போயி மூணு வருஷமாச்சு… இது வரைக்கும் அவங்களைப் பத்தி எந்த விவரமும் தெரியலை… என் பொண்ணு உயிரோட இருக்காளா, இல்லியான்னு கூடத் தெரியலை… அந்த வருத்ததுல தான் நான் அப்படிப் பேசிட்டேன்… நீ ஒண்ணும் நினைச்சுக்காதப்பா…” அவரது தழுதழுத்த குரலும், கலங்கிய கண்களும் அவரது மனதில் உள்ள தவிப்பை உணர்த்த, அவன் சற்று அமைதியானான்.

“அம்மா… அந்த ஓடுகாலி மேல எனக்குக் கோபம் இருக்கு… அதுக்காக உங்களுக்குத் தெரியாம அவளைக் கொன்னு போடுற அளவுக்கு நான் மோசமானவன் கிடையாது… அவ என் கையில் கிடைச்சா, ஒருவேளை ஏதாவது பண்ணிடுவேனோன்னு நினைச்சு தான், நானே அவளைத் தேடறதைக் கூட நிறுத்திட்டேன்… இப்படில்லாம் பேசாதிங்கம்மா…” அவனது வருத்தமான குரல் அவரையும் வேதனைப் பட வைத்தது.

“ம்ம்… நம்ம வீட்டுல ஒரு பெரிய விசேஷம் நடக்கப் போகுது… முன்னாடி நின்னு பார்த்துப் பார்த்து செய்ய வேண்டிய பொண்ணு இப்ப எங்கிருக்காளோ…” கண்கலங்கியவரை முறைத்தான் கதிர்.

“அம்மா… இப்ப எதுக்கு அவளைப் பத்தின பேச்சு… அவ இல்லைன்னா இந்தக் கல்யாணம் நடக்காதா என்ன… நல்ல காரியம் நடக்கப் போகும் போது அவளை நினைச்சு கண்கலங்கிட்டு இருக்கீங்க…”

அவனது கோபக் குரலில் கண்ணைத் துடைத்துக் கொண்டவர், “சரிப்பா… அவளைப் பத்தி நான் பேசலை, சரி… சுதாகரும், அண்ணியும் நாளைக்கு வந்திடுவாங்க தானே… இப்பவும் கோபமா தான் இருக்காங்களா…”

“சுதாகர் அவனோட சம்சாரத்தைக் கூட்டிட்டு வரேன்னு தான் சொல்லி இருக்கான்… அத்தை தான் வருவாங்களான்னு டவுட்டா இருக்கு… அவங்க இப்பவும் ரொம்ப கோபமா தான் இருக்காங்க…”

“ம்ம்… காலம் தான் அவங்க கோபத்தை தணிக்கணும்… உன் அப்பா வீட்டு உறவு விட்டுப் போயிடக் கூடாது, சரி… நாளைக்கு எத்தனை மணிக்கு சென்னை கிளம்பணும்…”

“நாளைக்கு சாயந்திரம் இங்கிருந்து கிளம்பினா ராத்திரி அங்க போயி ரூம்ல தங்கிட்டு காலைல குளிச்சு கோவிலுக்குக் கிளம்பிடலாம் மா… எனக்கு உங்க உடம்பை நினைச்சா தான் நீங்க சிரமப் படணுமேன்னு கவலையா இருக்கு…”

“என்னை விடு கதிரு… ஏதோ உன்னை வாழ்த்தி அச்சதையைப் போடுறதுக்கு வலது கையாவது உயிரோட இருக்கே… இப்ப கொஞ்சம் உடம்பு பரவால்லாம இருக்கறதாலே வீல் சேர்ல உக்கார முடியுது… என்ன, கார்ல தூக்கி உக்கார வைச்சு, இறக்கணும்… எப்படியோ உன் கல்யாணத்தைப் பார்க்க முடிஞ்சா எனக்கு அதுவே போதும்பா…” நெகிழ்ச்சியுடன் கூறிய அன்னையின் கையைப் பிடித்துக் கொண்டான் கதிர்.

“எத்தனை வண்டில கிளம்புறோம் கதிரு…”

“நம்ம சொந்தக்காரங்க கொஞ்சம் பேர் மட்டும் தான்… மூணு கார், ஒரு வேன் போதும்மா… கல்யாணம் முடிஞ்சு அடுத்த நாள் ரிசப்ஷன்க்கு தான் எல்லாரும் இங்கே வருவாங்களே…”

“ம்ம்… சரிப்பா, நீ சம்மந்திம்மா கிட்ட பேசினியா… அவங்க தனி ஆளா இருந்து கஷ்டப்படப் போறாங்க… உதவிக்கு யாரையாவது அனுப்பி இருக்கலாமே…”

“ம்ம்… அங்கே அவங்க பார்த்துக்கறேன்னு சொல்லிட்டாங்கம்மா…”

“சரி… ஒரு போனைப் போட்டு குடுப்பா, நான் அவங்க கிட்டே கொஞ்சம் பேசணும்…”

“ம்ம்… சரிம்மா…” என்றவன், சுதாவின் அன்னைக்கு அலைபேசியில் அழைத்து ஒரு நிமிடம் அவரிடம் பேசிவிட்டு அன்னையிடம் கொடுத்தான்.

அங்கே கல்யாண ஏற்பாடுகள் எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி விசாரித்து சிறிது நேரம் பேசியவர், சுதாவிடமும் பேசிவிட்டு கதிரிடம் அலைபேசியைக் கொடுத்தார். சுதா லைனில் இருக்க அவன் புன்னகையுடன் பேசிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான்.

**************

“அப்புறம் தம்பி… ரொம்ப குஷியா இருக்க மாதிரித் தெரியுது… நாளைக்கு விடுதலை ஆகப் போற சந்தோஷமா…” ஏதோ யோசித்துக் கொண்டே புன்னகை முகமாய் எதிரில் வந்தவனை, எதிர்கொண்ட மாணிக்கம் விசாரித்தார்.

“ஆமா சார்… எப்பதான் வெளியே போயி எல்லாரையும் பார்ப்போம்னு இருக்கு… தூங்க முடியலை, சாப்பிட முடியலை… மனசு பரபரன்னு இருக்கு…”

“ம்ம்… அப்படித்தானப்பா இருக்கும்… மூணு வருஷமா வெளியுலகத் தொடர்பே இல்லாம இங்க அடைஞ்சு கிடந்திருக்கியே… இனியாவது வெளிய போயி நல்லபடியா வாழ்க்கையை அமைச்சுக்க…”

“ம்ம்… கண்டிப்பா சார்… அதுக்குத்தானே நானும் காத்திட்டு இருக்கேன்…”

“நீ வரப் போறதை உன் அம்மாவுக்கு தகவல் சொல்லிட்டியா தம்பி…”

“நம்ம காளியண்ணன் ரிலீஸ் ஆகிப் போனப்ப அம்மாகிட்ட போன் பண்ணி தகவல் சொல்ல சொல்லிட்டேன் சார்… அவர் சொல்லி இருப்பார்… நான் எப்ப வருவேன்னு அம்மா எதிர்பார்த்திட்டு இருப்பாங்க…”

“ம்ம் நல்லது தம்பி… உன்னோட பிரண்டு கிட்டே சொல்லலையா…”

“இல்லை சார்… அவங்களுக்கு நேர்ல போயி நின்னு இன்ப அதிர்ச்சி குடுக்கலாம்னு இருக்கேன்… அவங்க ரியாக்சனை நேர்ல பார்த்து அனுபவிக்கணும்… என்னைப் பார்த்ததும் திகைச்சுப் போயி நின்னுட மாட்டாங்களா… அதுக்குப் பிறகு எப்படில்லாம் என்னைத் திட்டப் போறாங்களோ… முன்னாடியே சொல்லிட்டா திட்டறதுக்கு ரெடியா இருப்பங்கள்ள… அதான், சொல்லாமக் கொள்ளாமப் போயி நிக்கப் போறேன்… நிலாவும் கெளதமும் ஷாக்காகப் போறாங்க…” அவனது முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பின் வெளிச்சமாய் புன்னகை சிதறிக் கிடந்தது.

அவனது சந்தோஷம், அவரையும் தொற்றிக் கொள்ள, அவரது முகமும் மலர்ந்தது.

“காலைல நேரமே நான் டியூட்டி முடிஞ்சு கிளம்பிப் போயிருவேன்… நீ ரிலீஸ் ஆகுற நேரத்துல இருக்க மாட்டேன்… அதான் இப்பவே உன்னைப் பார்த்து பேசிட்டு போலாம்னு வந்தேன்… சரிப்பா….நல்லா இரு, நான் வரட்டுமா…”

“ரொம்ப சந்தோசம் சார்… உங்க வார்த்தையே எனக்கு வாழ்த்து தான்…” என்றவன் புன்னகையுடன் கூற அவர் விடை பெற்றார்.

என்னை உன் தோழன் என்பாயா

உள்ளம் கவர்ந்த கள்வன் என்பாயா…

யாரென்று நீ சொல்வாய் பெண்பூவே…

உனைக் கண்டாலே எகிறிக் குதிக்கும்

இதயத்திடம் எப்படி சொல்வேனடி… உன்

இதயம் எனக்கு சொந்தமில்லையென்று…

உன் பார்வையின் சீண்டலில் சிலிர்த்து நிற்கும்

நெஞ்சம் – காதல் சிலுவை சுமந்திடுமோ…

நித்தம் முள்ளாய் குத்துகிறது மஞ்சம்…

உள்ளிருந்து துடிக்கிறது என் நெஞ்சம்…

யாருமின்றி நானிருந்தேன்… என்

யாதுமாக நீ வந்தாய்… மயில்தோகையின்

வருடலாய் உன் நேசம் உணர்ந்தேனடி….

நீ என்மீது கொண்ட அன்பு மருந்தானது…

நான் உன்மீது கொண்ட அன்போ – எனக்கு

விஷமானது… என்னை வாழ்ந்து கொண்டே

சாக சொல்லும் இந்தக் காதல்

மருந்தா… இல்லை விஷமா…

உனைச் சேரும் வரம் வேண்டுமென

வேண்ட மாட்டேன் பெண்ணே…

உன் நிழலாய்த் தொடர்ந்திடும்

நிலையாவது நிலைத்திடுமா…

நிலையின்றித் தவிக்கிறேன் பெண்ணே…

நித்தமுன் நினைவில் மரணிக்கிறேன் கண்ணே…

Advertisement