Advertisement

நிலா – 18

தந்தைக்கு செய்ய வேண்டிய புண்ணிய கர்மங்களை செய்து முடித்து விட்டு வீடு திரும்பினான் கெளதம். இன்றோடு அவன் தந்தை இறந்து மூன்று வருடங்கள் ஆகி விட்டது. ஒவ்வொரு நினைவு நாளன்றும் அவர் இறந்த போது தான் மகனாய் செய்யத் தவறிய கர்மங்களை நினைத்து மிகவும் துடித்துப் போவான். இன்றும் பித்ரு தர்ப்பணம் செய்கையில் தந்தையின் நினைவில் கண்கள் கலங்கின. அவரது நினைவில் சோபாவில் சாய்ந்து கண்ணை மூடியிருந்தான்.

அம்முவை அழைத்துக் கொண்டு நிலா கடைக்கு சென்றிருக்க, சோர்வாய் தலை சாய்த்திருந்த கௌதமின் எண்ணங்கள் மூன்று வருடத்திற்கு முன்னால் இந்த நாளை வட்டமிடத் தொடங்கின.

ருக்மணி அம்மாவின் வீடு வாடகைக்கு கிடைத்ததும், வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதிலும், அதை ஒதுக்குவதிலுமாய் இரண்டு நாட்கள் ஓடியிருந்தது. ருக்மணி அம்மாவிற்குத் தெரிந்த ஒருவரின் மூலம் ஒரு கம்பெனியில் கௌதமிற்கு வேலையும் சரியாகி இருந்தது. அம்முவும் அவர்களுடன் ஒட்டிக் கொள்ள அவர்கள் வாழ்க்கையில் அழகான ஒரு துவக்கம் வந்திருந்தது.

ஏனோ இரண்டு நாட்களாய் தந்தையின் நினைவு வெகுவாய் வாட்ட, அன்று இரவு ராமை அழைத்துப் பார்க்க எண்ணிய கெளதம், வேறு எண்ணில் இருந்து அவனை அழைத்தான். அப்போது அவர்கள் வீட்டை விட்டு வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. ராம் போனில் கூறிய விஷயங்கள் கௌதமின் இதயத்தில் இடியாய் இறங்க, துடித்துப் போனான்.

அவர்கள் ஊரை விட்டு வந்த இரண்டாவது நாள் இரவே கெளதமின் தந்தைக்கு நெஞ்சுவலி வந்துவிட அடுத்த வீட்டுக்காரர்கள் தான் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தனர். கௌதமின் அலைபேசிஎண் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் தகவல் தெரிவிக்க முடியாமல் போய் விட்டது. அடுத்த நாளே சிகிச்சை பயனின்றி அவர் இறந்துவிட்டார். தந்தையின் மரணத்தை எப்படியாவது அறிந்துகொண்டு மகன் வந்து சேர்வான் எனக் காத்திருந்த கதிர் தான் இறுதியில் கௌதமின் தந்தைக்கான இறுதி சடங்குகளை மகனின் இடத்தில் இருந்து செய்திருந்தான்.

எல்லாவற்றையும் கேட்டதும் கெளதமிற்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. கதிரின் முன்பு தான் மேலும் மேலும் சிறுமைப்பட்டுப் போனதாய் தோன்றியது. நட்புக்கு செய்த துரோகத்துடன், தான் தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதிக் காரியத்தை அவன் செய்ததும் சேர்ந்து கெளதமைக் குற்றப் படுத்தியது. மூன்றாவது நாள் காரியத்தையும் கதிர் தான் செய்திருந்தான்.

கதிர் கௌதமின் மீது கோபமாய் இருந்தாலும் நண்பன் இல்லாதபோது அவனது தந்தைக்கு செய்ய வேண்டிய மரியாதைகளை நன்றாகவே செய்திருந்தான். விஷயத்தைக் கேட்டதும் கெளதம் ஊருக்கு வருவதாக சொல்ல, மூன்றாவது நாள் காரியமும் முடிந்து விட்டதால் இப்போது ஊருக்கு வரவேண்டாம் என்று கூறிவிட்டான் ராம். அதும் இல்லாமல் கௌதமின் மீது கதிருக்கு மேலும் கோபம் கூடியிருப்பதால் இப்போதைக்கு ஊர்ப்பக்கமே வரவேண்டாம் என்றும் ராம் கூறிவிட்டான். மௌனமாய் அன்று முழுதும் அழுது கொண்டிருந்தவனை தேற்றும் வழியறியாமல் திகைத்துப் போனாள் நிலா. அவளுக்கும் இது பெரும் அதிர்ச்சியே. 

அந்த இழப்பை மெதுவே ஏற்றுக் கொண்டு புது வாழ்க்கைக்குப் பழகிக் கொண்டாலும் தந்தையின் நினைவுகள் மனதை அலட்டும் போதெல்லாம் நிலாவிடம் சிடுசிடுப்புடன் எரிந்து விழுவான் கெளதம். அதில் அவள் மனம் வருந்தினாலும், அவளால் அவனுக்கு வந்த பெரிய இழப்பைப் புரிந்து எதிர்வாதம் செய்யாமல் அமைதியாய்ப் போகத் தொடங்கினாள். அம்முவைப் பார்த்துக் கொள்வதிலும் அவளது வளர்ச்சியிலுமாய் தன்னை தொலைத்துக் கொண்டாள்.

கெளதமின் எண்ணவோட்டத்தை அவன் அருகில் இருந்த அலைபேசி சிணுங்கி கலைத்து விட்டது. அதில் ஒளிர்ந்த பெயரைக் கண்டதும் யோசனையாய் நெற்றியை சுருக்கியவன் சிறு பதட்டத்துடன் அதை ஆன் செய்தான்.

“ஹலோ… சொல்லுங்கம்மா, நான் கெளதம் பேசறேன்…”

“கெளதம்… நல்லார்க்கியாப்பா…” அவரது குரலில் சந்தோசம் வழிந்தது.

“ம்ம்… இருக்கேன் மா… நீங்க எப்படி இருக்கீங்க…”

“நான் இவ்ளோ நாள் ஏனோ தானோன்னு தான் இருந்தேன்… இப்பதான் ஒரு சந்தோசமான விஷயம் காதுக்கு வந்துச்சு… அதான் உன்கிட்ட உடனே சொல்லலாம்னு கூப்பிட்டேன்…” அவரது சந்தோசம் ஏனோ அவன் மனதுக்குள் சிறு தவிப்பை விதைத்தது.

“எ… என்ன விஷயம்மா… சொல்லுங்க…”

“எப்போ பார்த்தாலும் எனக்கு போன் பண்ணி கார்த்திக் பத்தி விசாரிச்சுட்டே இருப்பியே… கொஞ்சம் முன்னாடி தான் அவன்கிட்டே இருந்து ஒரு நல்ல தகவல் வந்திருக்கு… இத்தனை நாளா எங்கிருக்கான்… எப்படி இருக்கான்… எதுவுமே தெரியாம எத்தனை தவிச்சிருப்பேன்… கடவுளுக்கு இப்பதான் கண்ணைத் திறக்கணும்னு தோணியிருக்கு…” 

“என்னது… கார்த்திக் கிட்ட இருந்து தகவல் வந்துச்சா… ரொம்ப சந்தோசம் மா… என்ன சொன்னான், எங்கே போனானாம்… எப்போ வருவான்…” ஒரு நிமிடம் நண்பனைப் பற்றிய செய்தியில் சந்தோஷித்தவன் மனது அடுத்த நிமிடமே சுணங்கியது.

“அவன் சீக்கிரமே வந்திருவானாம் கெளதம்… யாருகிட்டயோ தகவல் சொல்ல சொல்லி இருக்கான்… எங்கிருக்கான், எங்கே போனான்னு எல்லாம் நேர்ல வந்து சொல்லுவானாம்… சொல்லாமக் கொள்ளாம வந்து நின்னு இன்ப அதிர்ச்சி குடுக்கப் போறானாம்… உன்கிட்ட கூட சொல்ல வேண்டாம்னு சொல்ல சொல்லி இருக்கான்… நான் தான் மனசு கேட்காம உங்கிட்ட சொல்லிட்டேன்…” அவர் சந்தோஷத்துடன் பேசிக் கொண்டே போக, கெளதமின் மனது சந்தோஷிப்பதா, வருந்துவதா… எனத் தெரியாமல் ஒருவித குழப்பத்தில் மிதந்தது.

நீண்ட நாளாய் தன் தலையில் சுமந்து கொண்டிருக்கும் பொறுப்பு இறங்கப் போகிறது என சந்தோஷிப்பதா… அந்த சுமையே சுகமாய் மாறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு செய்தி வந்ததை நினைத்து வேதனைப் படுவதா… எனக் குழம்பியவனின் மனது அடுத்த நொடியே தெளிந்தது.

“அடச்சே… என்ன இது, நானா இப்படியெல்லாம் யோசிக்கிறேன்…” கடிந்து கொண்டே அலைபாய்ந்த மனதைக் கடிவாளமிட்டவன், கார்த்திக்கின் அன்னை பேசுவதை கவனிக்கத் தொடங்கினான்.

“அவனோட போன் நம்பர் எதுவும் குடுத்தானா… இவ்ளோ நாள் எங்க போனான்… அதைப் பத்தி சொல்லலையாம்மா…”

“இல்லைப்பா… எல்லாம் அவனே வந்து நேர்ல சொல்லுறேன்னு சொல்லி இருக்கான்… சரி… இவ்ளோ நாள் பொறுத்தாச்சு… இன்னும் சில நாள் தானேன்னு நானும் அவன் வரவைக் காத்திட்டு இருக்கேன்…” அந்தத் தாயின் குரலில் தழுதழுத்தது.

“ம்ம்… சரிம்மா, வருத்தப் படாதீங்க… இப்பவாவது வரப் போறேன்னு தகவல் சொல்லி இருக்கானே… அதுவரைக்கும் சந்தோசம்… அவன் வரட்டும், அப்புறம் பேசிக்கலாம்…” என்றான் சமாதானமாய்.

“எப்படியோப்பா… என்னோட பிரார்த்தனை வீண் போகலை… அப்படியென்ன பெத்த அம்மாவைக் கூட மறந்திட்டு எந்தத் தொடர்பும் இல்லாம இருக்கறது… ஆனா எம்புள்ளை எது செய்தாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்… அதுக்கு தான் அவன் மேல கோபம் இருந்தாலும் வெறுக்க முடியலை… இத்தனை நாள் நான் தவிச்ச தவிப்புக்கு இப்போவாவது ஒரு தீர்வு கிடைச்சுதே…”

அவர் மேலும் சிறிது நேரம் அவனிடம் புலம்பலும் சந்தோஷமுமாய் பேசி முடித்து அலைபேசியை வைக்க, அவனது மனம் தான் கார்த்திக்கின் வரவை நினைத்து அலைபாயத் தொடங்கியது. “கார்த்திக் வந்தால் நிலா அவனுடன் சென்று விடுவாளே… பிறகு நான் அநாதை தானா… இல்லை, என்னுடன் என் அம்மு இருப்பாள்… அவளை நிச்சயமாய் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்… நிலாவும் கார்த்திக்கும் புரிந்து கொள்வார்கள்…” என அவனை சமாதானித்துக் கொண்டான்.

“இதைப் பற்றி நிலாவிடம் சொன்னால் ரொம்ப சந்தோஷப் படுவாள்… பாவம், எத்தனை நாளாய் அவனுக்காய் காத்திருக்கிறாள்…” நிலாவின் வரவுக்காய் காத்திருந்தான் கெளதம்.

அவனது மனது ஏனோ பரிதவிக்க, அது அம்முவை பிரிய வேண்டி வருமோ… எனத் தோன்றும் தவிப்பாய் தான் நினைத்தான். அவன் மனதுக்குள் நிலா என்னும் விதை காதல் விருட்சமாய் வளரத் தொடங்கி இருந்ததை அந்த மூடன் உணரவே இல்லை.

“அப்பா… அம்மா எனக்கு ஜெம்ஸ் வாங்கிக் குதுத்தா… பிச்சுக் குது…” ஓடிவந்த அம்மு கௌதமின் மடியில் ஏறிக் கொண்டு ஜெம்ஸ் பாக்கெட்டை நீட்டினாள்.

அதை வாங்கிப் பிரித்துக் கொடுத்ததும் வாங்கிக் கொண்டவள், “இது அப்பாக்குத்திக்கு… ஆ… காத்துப்பா…” என்றாள் கையில் ஜெம்சை எடுத்துக் கொண்டு.

“அப்பாக்கு வேண்டாம் செல்லம்… நீயே சாப்பிடு…”

“ம்ஹூம்… ஆ காத்துப்பா, ப்ளீஸ்…” என்று தலையை சரித்துக் கொண்டு உதட்டைச் சுளித்துக் கேட்டவளின் அழகில், அவனது  முகத்தில் புன்னகை எட்டிப் பார்க்க மகளின் பேச்சைத் தட்ட முடியாமல் வாயைத் திறக்க, இரண்டு குட்டி வட்ட வண்ண நிலவை அவன் வாய்க்குள் போட்டாள் மகள்.

“இனி… என் புஜ்ஜு அம்மாவுக்கு…” என்று இறங்கி நிலாவிடம் ஓடியவள், “ஆ… காத்துமா…” என்று அவள் வாயிலும் போட்டாள்.

நிலாவிடம் கார்த்திக்கை பற்றிய விஷயத்தை சொல்லி விடலாமா என கெளதம் யோசித்துக் கொண்டிருக்க அம்மு அவனிடம் வந்து அமர்ந்து கொண்டு ஏதேதோ கேள்வி கேட்டுக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தாள்.

நிலா, அடுக்களைக்குள் நுழைந்திருக்க, “சரி… மதிய உணவு முடிந்து அம்மு உறங்கியதும் அதைப் பற்றிப் பேசிக் கொள்ளலாம்…” என நினைத்தவன், அந்த விஷயத்தை சற்று நேரம் தள்ளிப் போட்டான்.

“இதைக் கேள்விப்பட்டால் நிலா எப்படி ரியாக்ட் பண்ணுவாள்… அவளது இத்தனை நாள் காத்திருப்பு பலன் கிடைக்கப் போகிறது… அவளது கார்த்திக் வரப் போகிறான்… ஒரு தோழியாய், அன்னையாய், எப்படியெல்லாம் என்னைப் பார்த்துக் கொண்டாள்… நிலாவுடன் ஒரு குடும்பமாய் கழிந்த இந்த மூன்று வருடங்கள் வெறும் கனவாய் மாறப் போகின்றன… இனி மீண்டும் நான் யாருமில்லாத அநாதையாய்…” அவன் மனது வலித்தது.

“இந்த நாட்கள் என்னுள் எத்தனை மாற்றங்களைக் கொண்டு வந்தன… அதற்கெல்லாம் காரணம் என் நிலா தானே, என்னது…. என் நிலாவா… ச்சே… நான் ஏன் இப்படியெல்லாம் யோசித்து குழம்புகிறேன்… அவள் என் நண்பனுக்கு சொந்தமாகப் போகிறவள்… இப்படியெல்லாம் யோசிப்பதே தவறு…” தன் எண்ணக் குதிரைக்கு கடிவாளமிட்டு நிறுத்தியவன், விளையாடிக் கொண்டிருந்த அம்முவின் மீது பார்வையைப் பதித்தான்.

அப்போது அவன் அருகே வந்தாள் நிலா.

“கெளதம்… காப்பி சாப்பிடறீங்களா… கொண்டு வரட்டுமா…”

அவனுக்கும் காப்பி குடித்தால் தேவலாம் போலத் தோன்ற சம்மதமாய்த் தலையாட்டினான்.

இரு கப்பில் காப்பியை எடுத்துக் கொண்டு சற்று நேரத்தில் திரும்பி வந்தவள் அவனிடம் ஒரு கப்பை நீட்டினாள்.

அதை வாங்கிக் கொண்டவன் குடிக்கத் தொடங்கினான்.

“கெளதம்… உங்ககிட்டே ஒண்ணு சொல்லணும்…”

“என்ன சொல்லணும்…”

“அம்முவுக்கு ஒரு டிரஸ் வாங்கிட்டு கேக்கும் ஆர்டர் குடுக்கணும்… அப்புறம் சுதாவுக்கு கல்யாணத்துக்கு குடுக்க ஏதாவது பரிசு வாங்கணும்… போயிட்டு வரலாமா…”

“இன்னைக்கா… சரி, சுதாவுக்கு எப்ப கல்யாணம்…” என்றான் யோசனையுடன்.

“ஹூம்… மறந்துட்டிங்களா, நாளன்னிக்கு தான் அம்மு நமக்கு கிடைச்ச நாள்… அதானே அவ பிறந்த நாளா நாம கொண்டாடுவோம்… அன்னைக்கு தான் சுதாவோட கல்யாணமும்… அவளோட அம்மாவும் சேர்ந்து வந்து பத்திரிக்கை வச்சிட்டு நீங்களும் கண்டிப்பா வரணும்னு சொல்லிட்டுப் போயிருக்காங்க… வருவீங்க தானே…” சன்னமாய் ஒலித்த அவளது குரலில் அவன் மறுத்துவிடுவானோ என்ற ஏக்கம் எட்டிப் பார்த்தது.

“இன்னைக்கும் லீவ் போட்டுட்டு நாளான்னிக்கும் எப்படி நிலா லீவ் போடுறது… காலைல அம்முக்கு கேக் வெட்டிட்டு நான் ஆபீஸ் கிளம்பிடறேன்… நீ அம்முவைக் கூட்டிட்டு கல்யாணத்துக்குப் போயிட்டு வந்திடு…”

“அதுவந்து… அவங்க அவ்ளோ தூரம் உங்களை வரணும்னு சொல்லிட்டு போயிருக்காங்க கெளதம்… உங்க பிறந்த நாளுக்கு வந்து, அண்ணன்னு ரொம்ப உரிமையா பேசினா… நீங்க வரணும்னு ஆசைப்பட்டு சொல்லிட்டுப் போனா… வரலைன்னா பொக்குனு போயிடுவா… ப்ளீஸ், நீங்களும் வாங்களேன்…” அவளது கண்களில் தெரிந்த கெஞ்சலும், “அண்ணா…” என்று அன்புடன் அழைத்த சுதாவின் முகம் கண்ணில் தெளிய யோசித்தான்.

Advertisement