Advertisement

“ஊருல ஒரு சின்ன பிரச்சனை… அதான் ஊரை விட்டு கிளம்பிட்டோம்… இப்போ இங்கே வீடு பார்த்திட்டு இருக்கோம்…” என்றாள் நிலா வேண்டா வெறுப்புடன்.
“இது என்ன வம்பாப் போயிருச்சு… இந்த அம்மா எல்லா விவரத்தையும் கேட்டுட்டு குடைச்சல் பண்ணிட்டு இருக்கே…” என மனதுக்குள் ஓடியது.
ஒரு நிமிடம் அவர்களையே பார்த்த அந்தப் பெண்மணி, “ஏம்மா… இங்க பக்கத்துல தன் என் வீடு… அதுல ஒரு போர்ஷன் காலியாத்தான் இருக்கு… உங்களுக்குப் பிடிச்சிருந்தா வந்து பாக்கறிங்களா…”
அவர் சொன்னதும் ஆவலுடன் அவரை ஏறிட்டாள் நிலா.
“என்ன வாடகை வரும்மா… அட்வான்ஸ் எவ்வளவு குடுக்கணும்…”
“வீட்டுல கோவிச்சுகிட்டு கைக் குழந்தையோட வந்திருக்கேன்னு சொல்லுற… பெருசா அட்வான்ஸ் ஒண்ணும் வேண்டாம்… நாலாயிரம் வாடகை, அஞ்சு மாசம் அட்வான்ஸ் குடுத்தா போதும்… என்னவோ உன்னைப் பார்த்ததும் எனக்கு என் பேத்தியைப் பார்த்த போலத் தோணுது… கையில குழந்தையை வேற வச்சுட்டு எங்கேன்னு வீடு தேடுவிங்க… கஷ்டம்… உன் வீட்டுக்காரரை கூட்டிட்டு வந்து வீட்டை பாரு… பிடிச்சிருந்தா வாங்க…”
“ஓ… ரொம்ப நன்றி மா… ரொம்ப சந்தோஷமா இருக்கு… இதோ இப்பவே அவர் கிட்டே சொல்லறேன்…” என்றவள், “உங்ககிட்டே மொபைல் இருக்குமா…” என்றாள் கூச்சத்துடன்.
“இந்தாம்மா… பேசு…” என்று அவர் அலைபேசியை எடுத்து நீட்ட, கெளதமின் இரண்டாவது எண்ணை பாகில் இருந்த குறிப்பில் பார்த்து அவனை அழைத்து விவரத்தைக் கூறினாள். அவன் வந்ததும் வீட்டை வந்து பார்ப்பதாகக் கூறி அந்தம்மாவிடம் முகவரியை வாங்கிக் கொண்டாள் நிலா. அவர் சென்று சற்று நேரம் கழித்து கெளதம் வர, அவனிடம் நடந்ததைக் கூறினாள்.
“என்ன நிலா… உண்மையை சொல்லாம எதுக்கு நாம ஒரு பாமிலி போல சொல்லி வச்சே…”
“அவங்ககிட்டே நான் சும்மா பேசிட்டு இருந்தேன் கெளதம்… புதுசா ஒருந்தங்க கிட்டே எதுக்கு நம்ம கதையெல்லாம் சொல்லனும்னு பொதுவா பேசிட்டு இருந்தேன்… அப்புறம் வீட்டு விஷயம் சொன்னதும் மாத்தி சொல்ல முடியலை… இப்போதைக்கு இப்படி சொல்லுறது தான் நமக்கும் நல்லது… அப்புறம் கார்த்திக் வந்ததும் வேற வீடு பார்த்துக்கலாம்…”
அவள் சொன்னதை யோசித்த கெளதம், “சரி… இப்போதைக்கு வீட்டைப் போய் பார்க்கலாம்…” என்று அவளையும் அழைத்துக் கொண்டு அந்த முகவரியை விசாரித்துச் சென்றான். கௌதமைக் கண்டதும் அந்த அம்மாவிற்கு அவர்களை மேலும் பிடித்துவிட அழகான அந்த சிறு வீடே அவர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. அந்த வீட்டில் சும்மா கிடந்த இரு கட்டிலும் மின் விசிறியையும் அவர்களையே உபயோகித்துக் கொள்ளுமாறு கூறி விட்டார்.
அன்றே வீட்டுக்கு அத்தியாவசியத் தேவையான பொருட்களை லிஸ்ட் போட்டு வாங்கி வந்தான் கெளதம். அவர்களது வாழ்க்கை அங்கே தொடங்கியது.
ருக்மணி அம்மாவின் வழக்கும் அவருக்கு சாதகமாய் தீர்ப்பு வர, அவருக்கு மிகவும் சந்தோஷமாயிற்று… தனி ஆளான அவர், நிலாவையும், அம்முவையும் சொந்தம் போலப் பார்த்துக் கொண்டார்.
கெளதமிற்கு அவருக்குத் தெரிந்த ஒருவரின் மூலமாய் ஒரு வேலையும் வாங்கிக் கொடுத்தார்.
நிலாவின் எண்ணவோட்டத்தை தடை படுத்துவதற்காய் அடுக்களையில் ஏதோ பாத்திரம் கீழே விழுந்து உருளும் சத்தம் கேட்டது. சட்டென்று நிகழ் காலத்திற்கு மீண்டவள் சுவரில் உறங்காமல் நடந்து கொண்டிருந்த கடிகாரத்தில் பார்வையைப் பதித்தாள்.
இரவு மணி 1.30 தாண்டி இருந்தது.
“இந்நேரத்துல கிச்சன்ல என்ன சத்தம்… பூனையா இருக்குமோ… கதவெல்லாம் நல்லா சாத்திட்டு தானே வந்தேன்…” யோசித்துக் கொண்டே அறைக் கதவைத் திறந்து அடுக்களைக்கு சென்றாள்.
அங்கே கெளதம் தான் தண்ணீர் குடிக்க வந்து சொம்பை கையில் நழுவ விட்டு கீழிருந்து எடுத்துக் கொண்டிருந்தான்.
“தண்ணி வேணுமா கெளதம்… தூக்கம் வரலயா…” என்றவள், அவளே சொம்பில் நீர் எடுத்துக் கொடுத்தாள்.
அவளது முகத்தை ஏறிடாமலே அதை வாங்கிக் கொண்டவன், ஒன்றும் பேசாமல் ஹாலுக்கு சென்று அமர்ந்தான். அவன் பின்னேலேயே சென்றாள் நிலா.
“என்னாச்சு கெளதம்… தலை வலிக்குதா… தைலம் எடுத்திட்டு வரட்டா…”
“ப்ச்… எதுவும் வேண்டாம்…” என்றவன் சொம்பில் இருந்த நீரை தொண்டையில் கவிழ்த்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தான்.
அவனது வருத்தத்தின் காரணம் தெரிந்து கொண்டே அவனிடம் என்ன பேசுவதென்று புரியாமல் அமைதியாய் நின்று கொண்டிருந்தாள் அவள்.
“கெளதம்… ப்ளீஸ், பழசையே நினைச்சு வருத்தப் படாதிங்க…”
“வருத்தப்படாம எப்படி இருக்க முடியும் நிலா… எனக்குன்னு இந்த உலகத்துல இருந்த ஒரே சொந்தம் என் அப்பா மட்டும் தான்… ஒரு புள்ளையா அவருக்கு செய்ய வேண்டிய இறுதி மரியாதையைக் கூட செய்யாத பாவிதானே நான்… என்னால எப்படி அதை மறக்க முடியும்… இப்போ நினைச்சாலும் என் மனசு வேதனையில் துடிக்குது… நான் செய்ததை நினைச்சு வேதனையோடவே போயி சேர்ந்துட்டார்… அவர் ஆத்மா கூட என்னை சபிச்சிருக்கும்…”
அத்தனை கம்பீரமான அவள் மனதைக் கவர்ந்த ஆண்மகன், குற்றவுணர்வில் கண் கலங்க அமர்ந்திருப்பதைக் கண்டு நிலாவின் மனம் விம்மியது.
“இது எல்லாத்துக்கும் நான் தானே காரணம்… இந்தப் பாவம் எல்லாம் என்னைத்தான் வந்து சேரும்… என்னை மன்னிச்சிடுங்க கெளதம்…” இரண்டு கைகளால் தலையைத் தாங்கிக் கொண்டு குனிந்து அமர்ந்திருந்தவனின் தோளில் ஆதரவாய்க் கை வைத்தவள் அவன் அருகில் அமர்ந்தாள். அவளை ஏறிட்டவனின் முகம் சிவந்திருந்தது.
“ம்ம்… இப்படி எல்லாம் நடக்கணும்னு என் தலையில் எழுதி இருக்கும் போது உன்னை குத்தம் சொல்லி என்ன பிரயோசனம்… எனக்குன்னு யாரும் இருக்கக் கூடாதுங்கிறது தெய்வ விதி… எத்தனை நாள் தான் இந்த குற்ற சுமை என் மனசைக் கூறு போடும்னு தெரியலை…” அவனது பிசிறு தட்டிய குரல் அவளை நிலைகுலைய வைத்தது.
“கெளதம்… ப்ளீஸ், இப்படில்லாம் யோசிக்காதிங்க…”
“பி…பின்னே எப்படி யோசிக்க சொல்லற நிலா… இதானே உண்மை…” அவனது வேதனை நிறைந்த முகத்தை நிலாவால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
“கெளதம்…” அழைத்தவள்,
தலையைத் தாங்கியிருந்த அவன் கைகளை மாற்றி, முகத்தை தன்னை நோக்கி திருப்ப, கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடம் அந்த வலி நிறைந்த கண்களையே பார்த்தவள், அவனை இழுத்து தன் மடியில் போட்டுக் கொண்டாள். அவனது கைகள் அவளை விலக்கவும் இல்லை… அணைக்கவும் இல்லை… ஆனால் அவன் குலுங்குவதை அவளது மடியில் உணர்ந்தாள் அவள்.
எத்தனையோ நாட்கள் மனதுக்குள் சுமந்து கொண்டிருந்த வேதனை எல்லாம் அவளது மடியில் இறக்கி வைத்துக் கொண்டிருந்தான் அவன். அவளது கைகள் அவனது சிகையை ஆதரவுடன் வருடிக் கொடுக்க, கண்கள் அருவியாய்ப் பொழிந்து கொண்டிருந்தன. சிறிது நேரம் அவரவர் நினைவுகளில் உழன்று கொண்டு அப்படியே இருந்தவர்கள் அம்முவின் சிணுங்களில் கலைந்தனர்.
கெளதம் நிலாவின் மடியில் இருந்து முகத்தை எடுக்க நிலா அம்முவின் அருகில் சென்றாள்.
“என்னடா செல்லம்… என்ன வேணும்…”
“அம்முக்கு தண்ணி வேணும்மா…” என்றாள் கண்ணைத் தேய்த்துக் கொண்டே.
“ம்ம்… அம்மா எடுத்திட்டு வரேன்…” என்றவள் அடுக்களைக்கு செல்ல, ஹாலில் அமர்ந்திருந்த கௌதமை அம்மு கண்டு விட்டாள்.
கட்டிலில் இருந்து இறங்கியவள், அவனருகே வந்தாள்.
“அப்பா…” அவனது தோளில் கை வைத்தாள்.
திரும்பியவன், “சொல்லுடா செல்லம்… தண்ணி வேணுமா… அம்மா எடுத்திட்டு வருவாங்க…”
“ம்ம்… உனக்கு தூக்கம் வதலியாப்பா… ஏன் இங்க உக்காந்துத்து இதுக்கிங்க…”
அவன் அமைதியாய் இருக்க சோபாவில் ஏறியவள் அவனது முகத்தையே பார்த்துவிட்டு, “அப்பா… பசிக்குதா…” என்றாள் அவனது சோர்ந்த முகத்தைக் கண்டு.
“இல்லடா செல்லம்… நீ தண்ணி குடிச்சிட்டுத் தூங்கு…”
அவன் அருகில் வந்து மடியில் அமர்ந்து இருபுறமும் காலைப் போட்டு அமர்ந்து கொண்டாள். நிலா தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க, அதைக் குடித்துவிட்டு, அவனது தோளைக் கையால் கட்டிக் கொண்டு நெஞ்சில் படுத்துக் கொண்டாள்.
“அம்மு… வாடா, கட்டில்ல போயி படுக்கலாம்…” என்று நிலா அவளை அழைக்க, அவள் கௌதமை இறுக்கிப் பிடித்துக் கொண்டே மறுத்தாள்.
“சரி… விடு நிலா…” என்ற கெளதம், சோபாவில் சாய்ந்து அமர அவனது நெஞ்சில் தலையை வைத்து உறங்கத் தொடங்கினாள் அம்மு. அவளது நெற்றியில் புரண்ட முடிக்கற்றையை ஒதுக்கி விட்டவன் மென்மையாய் முத்தமிட்டான். அவள் உறங்கி விட்டது தெரிந்ததும், நிலா அவளை எடுக்க வந்தாள்.
“குடுங்க கெளதம்… அவளை கட்டிலில் படுக்க வச்சிடறேன்…” என்றவளிடம் கை காட்டித் தடுத்தவன், “வேண்டாம்… இருக்கட்டும் நிலா…” என்று அம்முவின் தலையை வருடிக் கொடுத்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“நிலா… நான் ஒண்ணு சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டியே…”
“சொல்லுங்க கெளதம்…”
“கார்த்திக் அவன் அம்மாவுக்கு தகவல் சொன்ன மாதிரி எப்போ வேணும்னாலும் திரும்பி வரலாம்… அப்படி அவன் வந்துட்டா அம்முவை எனக்குத் தந்திடுறியா…”
“கெளதம்… என்ன சொல்லறீங்க…” நிலாவின் முகத்தில் ஒருவித கோபமும் தவிப்பும் எட்டிப் பார்த்தது.
“அம்மு இல்லாம என்னால இருக்க முடியாது… உன்னாலயும் இருக்க முடியாது தான்… ஆனா கார்த்திக் இருக்குறதால நீ இவள் இல்லாததை மறந்திடலாம்… எனக்குன்னு யாரு இருக்கா… அதுனால அம்முவை எனக்குக் கொடுத்திடறியா…”
அவனது வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந்தாள் நிலா.
இதைப் பற்றி அவள் யோசிக்கவே இல்லை. கார்த்திக் வந்தாலும் அம்முவைத் தங்களுடன் வைத்துக் கொள்ள நினைத்தவள் மனதில் கௌதமும் அம்முவின் மீது வைத்திருக்கும் அன்பை மறந்து விட்டாள்.
அவள் அப்படியே நின்று கொண்டிருக்க, “ஓகே நிலா… நீ போயி படு… அம்முவை இன்னைக்கு என்னோட படுக்க வச்சுக்கறேன்…” என்றவன், அவளை எடுத்துக் கொண்டு தன் அறை நோக்கி நகர்ந்தான். அவர்களையே பார்த்துக் கொண்டு சிலையாய் நின்றாள் நிலா.
சிக்குண்டு கிடக்கிறது மனம்…
சிணுங்கி நிற்கும் நினைவுகளால்…
இமை வாசல் மூடினாலும்
இதயக் கதவைத் திறக்கின்றாய்…
இதயத்தில் நீ வந்து போன தடங்களாய்…
அழிக்க முடியாத காலத்தின் சுவடுகள்…
கண்ணிமையில் வாசம் செய்து
காதலை நெய்கிறாய் சிலந்தியாய்…
காதலின் வலியானது – எந்தக்
கல்லறையிலும் குறையாதது…
பிரியமில்லா பார்வையால் – என்னை
ஏனடா பிரியத் துடிக்கிறாய்…
என்னை நான் சொல்லும் முன்னே
நீ அறிந்து கொள்கிறாய்…
எல்லாம் புரிந்தும் புரியாத போல்
ஏன் வார்த்தைகளால் கொல்கிறாய்…
உன் கண்ணில் துளிர்த்திட்ட
கண்ணீர்த்துளிகள் பாறாங்கல்லாய்
கனக்கிறது என் நெஞ்சில்…
என் மடி சாய்த்து உன் முடி கோதுவேன்…
உன் தாயாய் நானும் மாறிடுவேன்…
பந்தம் ஏதுமின்றி வந்தவனே…
என் எல்லாமாகிப் போனாயே…

Advertisement