Advertisement

நிலா – 17
குழந்தையுடன் ஒரு லாட்ஜில் அறை எடுத்துத் தங்கினர் நிலாவும் கெளதமும். வரும் வழியில் குழந்தைக்கு வேண்டிய பொருட்களை கடையில் வாங்கிக் கொண்டு இரவு உணவையும் முடித்துக் கொண்டிருந்தனர். குழந்தை கட்டிலில் உறங்கிக் கொண்டிருக்க, கெளதம் இரண்டு கட்டிலில் ஒன்றை சற்று நகர்த்திப் போட்டுக் கொண்டிருந்தான்.
“கெளதம்…” அவனுக்குப் பின்னில் இருந்து சன்னமாய் ஒலித்த நிலாவின் குரலில் திரும்பினான்.
“என்ன நிலா, ஏதாவது சொல்லணுமா…”
“ம்ம்… நாம வீட்டை விட்டு வந்து நாலு நாள் ஆச்சு… கார்த்திக் பத்தி எந்த விவரமும் தெரியலை, நாம இப்ப எடுத்திருக்குற முடிவு சரிதானா…”
“வேற வழியில்லை நிலா… நம்ம ரெண்டு பேரும் இப்போதைக்கு வீட்டுக்குப் போக முடியாது… கொஞ்ச நாள் கழிச்சு தான் வீட்டுல பேச முடியும்… நம்ம ஊர்க்காரங்களை பத்தி உனக்குத் தெரியாதா… இப்போ இருக்கிற ஆத்திரத்தில் ஏதும் காதில் வாங்கிக்க மாட்டாங்க… கதிருக்கு நம்ம மேல உள்ள கோபம் கொஞ்சம் தணியட்டும்… அதுக்குள்ளே கார்த்திக்கும் வந்திட்டா வீட்டுல பேசிப் புரிய வச்சிடலாம்… நீ வருத்தப்படாத நிலா, கதிருக்கு நான் துரோகம் பண்ணிட்டாலும் உன்னை கார்த்திக் கிட்டே ஒப்படைக்காமப் போக மாட்டேன்…”
“அதில்லை கெளதம்… எ…எனக்கு அம்மா நினைவாகவே இருக்கு… அம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு…” அவளது கண்கள் கலங்கின.
அவளுக்கு என்ன பதில் சொல்லுவதென்று தெரியாமல் திகைத்தான் கெளதம். அவளது விழிகளில் இருந்து கரகரவென்று இறங்கிக் கொண்டிருந்த கண்ணீர்த்துளிகள் அவன் மனதை வருத்தியது.
“ஒரு வேளை, பழைய போல் கோபப்பட்டால் அழுகையை நிறுத்திடுவாளோ…” என நினைத்தவன், அவளைக் குற்றப்படுத்தி குரலை உயர்த்தினான்.
“இப்ப எதுக்கு இப்படி கண்ணீர் விட்டுட்டு இருக்கே… இதெல்லாம் முன்னாடியே யோசிச்சிருக்க வேண்டியது… இப்ப அழுது என்ன பிரயோசனம்…” சில நாளாய் அவள் மறந்திருந்த அவனது கோபக் குரல் வெளியே கேட்டதும், கண்ணிலிருந்து வெளியே வரத் தொடங்கிய கண்ணீரை அப்படியே உள்ளிழுத்துக் கொண்டாள் நிலா.
அவனது அன்பான குரலுக்கு முன்னால் வரத் தொடங்கிய அழுகை அதட்டலில் நின்று போனது. ஒன்றும் சொல்லாமல் அமைதியாய் சென்று அம்முவின் அருகில் படுத்துக் கொண்டாள். குழந்தையின் அருகில் முகத்தை வைத்து அதன் பால் வாசனையில் தன் தாயை நினைத்துக் கொண்டே கண்ணை மூடிக் கொண்டாள்.
அவளைத் திட்டிய கௌதமிற்கு தான் கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் அவள் அழுகையை நிறுத்தியதால் சற்று நிம்மதியானது. இரவு விளக்கை ஒளிர விட்டு, டியூப் லைட்டை அணைத்தவன், காலையில் இருந்து அலைந்து திரிந்ததில் சற்று ஓய்வு கொடேன்… எனக் கெஞ்சிய உடலை கட்டிலில் சரித்தான். அவன் படுத்தது தெரிந்ததும், கண்ணை இறுக மூடிப் படுத்திருந்த நிலா கண்ணைத் திறந்தாள்.
“சரியான சிடுமூஞ்சி… ஒரு பொண்ணு கிட்ட எப்படிப் பேசணும்னு ஏதாவது தெரியுதா… அழறவளுக்கு ஆறுதல் சொல்லாம திட்டுறான்… கொரங்கு, கொஞ்ச நாளா ஒழுங்கா பேசிட்டு இருக்கானேன்னு நினைச்சேன்… மறுபடியும் அதே சிடுசிடுப்பு… ச்ச்சே… இவனோட எப்படித் தனியா வீடெடுத்துத் தங்கப் போறேனோ…” என எப்படிக் குடும்பம் நடத்தப் போறேனோ… என்னும் அளவுக்கு அவனை அர்ச்சித்துக் கொண்டே திரும்பிப் பார்க்க,
“என்ன… என்னை நல்லாத் திட்டியாச்சா, இனி படுத்துத் தூங்கு…” என்று குரல் மட்டும்  கேட்டது.
அதைக் கேட்டு திகைத்தவள், கௌதமை அந்த மங்கலான வெளிச்சத்தில் உற்றுப் பார்க்க, மல்லாந்து படுத்து முகத்தின் மீது ஒரு கையை வைத்திருந்தான். அவன் சொன்னதைக் கேட்டதும் அவளையும் அறியாமல் இதழில் ஒரு முறுவல் பூத்தது.
“ராஸ்கல்… எப்படித்தான் நான் மனசுல நினைக்குறதை அப்படியே கண்டு பிடிக்குறானோ…” என நினைத்துக் கொண்டே பேசாமல் படுத்தவள் சற்று நேரத்தில் உறங்கிப் போனாள். வீட்டை விட்டு வந்ததில் இருந்து சரியான உறக்கம் இல்லாமல் தவித்தவள், அவன் அருகில் இருந்த நிம்மதியில் தனை மறந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
நல்ல உறக்கத்தில் இருந்தவர்களை எழுப்பியது யாரோ கதவைத் தட்டும் ஒலி. கண்ணைக் கசக்கிக் கொண்டே நிலா எழுந்து அமர, கெளதம் சுவிட்சைத் தட்டினான். சட்டென்று பரவிய ஒளியில் கண்கள் கூச, அருகில் சிணுங்கிய குழந்தையை கையில் எடுத்துக் கொண்டாள் நிலா.
“யாரு… இந்நேரத்துல கதவைத் தட்டுறாங்க…” கெளதமை ஏறிட்டாள்.
“தெரியலை நிலா, பார்க்கறேன்…” என்றவன், மெல்லக் கதவைத் திறந்து எட்டிப் பார்க்க வெளியே நான்கைந்து போலீசார் நின்று கொண்டிருந்தனர்.
“ம்ம்… கதவை நல்லாத் திறங்க…” என்றவர்கள் பார்வையை உள்ளே ஓட்ட, கட்டிலில் குழந்தையுடன் அமர்ந்திருந்த நிலா பார்வைக்கு சிக்கினாள். போலீசாரைக் கண்டதும் நிலாவின் முகத்தில் திகில் பரவ, அவசரமாய் குழந்தையுடன் எழுந்து கொண்டாள்.
“சார்… என்ன விஷயம் சார்…” பதட்டத்துடன் கேட்டான் கெளதம். அதற்கு பதில் சொல்லாமல் அறை முழுதும் பார்வையை ஓட்டிய அந்த போலீஸ்காரர், 
“இங்க யாரெல்லாம் இருக்கிங்க… நீங்க எந்த ஊரு… இங்க எதுக்கு தங்கி இருக்கீங்க…” என்றார் நிலாவை ஏற இறங்கப் பார்த்துக் கொண்டே.
“சார்… அது வந்து…” என்று நடுவில் குறுக்கிட்ட கெளதமைக் கையைக் காட்டித் தடுத்தவர், “நீ சொல்லும்மா…” என்றார் நிலாவிடம்.
“அ…அது வந்து…” என்று ஒரு நிமிடம் திணறியவள், “நாங்க சேலம் பக்கத்துல ஒரு கிராமம்… இங்கே ஒரு வேலையா வந்தோம்… ஊருக்குத் திரும்ப லேட் ஆகிடுச்சு… அதுனால ரூம் எடுத்துத் தங்கினோம்… இ…இவர் என் புருஷன்… இது எங்க குழந்தை… ஏதாவது பிரச்சனையா சார்…” என்று சரளமாய் கேட்டுக் கொண்டிருக்க திகைத்துப் போனான் கெளதம். அதற்குள் நிலாவின் கையிலிருந்த அம்மு சிணுங்கத் தொடங்க,
“ஓ…ஓகே ஓகே… சாரி பார் த டிஸ்டர்பன்ஸ்… இந்த லாட்ஜ்ல பிராத்தல் நடக்கறதா எங்களுக்கு தகவல் வந்துச்சு… அதான் ரெயிடுக்கு வந்தோம்… நீ குழந்தையைத் தூங்க வைம்மா…” என்றவர் மற்ற காவலர்களை அழைத்துக் கொண்டு வெளியேறினார். நிலாவின் வார்த்தைகளும், கையில் இருந்த கைக்குழந்தையும், கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறும் அவர்களை சந்தேகிக்கத் தோன்றவில்லை.
அவர்கள் சென்றும் அப்படியே சிலையாய் நின்று கொண்டிருந்த கெளதமை உள்ளே இழுத்து கதவை சாத்திவிட்டு தன் கட்டிலுக்கு சென்றாள் நிலா.
“உள்ள வாங்க கெளதம்… எதுக்கு இப்படி பேய் முழி முழிச்சு, எங்கப்பன் குதிருக்குள்ள இல்லன்னு காட்டிக் குடுக்கறிங்க…” என்று கூறியவளைத் திகைப்புடன் நோக்கினான் கெளதம்.
“என்ன நிலா, அந்தப் போலீஸ்காரர்கிட்டே இப்படி சரளமா அடிச்சு விடற… உனக்கு ரொம்ப தான் தைரியம்…”
“பின்னே… உங்களைப் போல அப்படியே சிலையா நின்னா சரியாப் போயிருமா… சூழ்நிலைக்குத் தகுந்த போல நடந்துக்கத் தெரியணும்ல… எங்கிட்ட தான் வெட்டி வீராப்பு எல்லாம்… காக்கி சட்டையைப் பார்த்ததும் அப்படி நடுங்கறிங்க… அவங்களும் நம்மளைப் போல மனுஷங்க தானே…” என்று பெரிய மனுஷியாய் கூறியவள், அவனைப் புருஷன் என்று கூறியதைப் பற்றி யோசிக்கவே இல்லை. ஆனால் கெளதமின் மனதில் அந்த வார்த்தை ஒரு மூலையில் ஒட்டிக் கொண்டது.
“நீங்க பயந்ததும் இதுக்கு தானே… நான் லாட்ஜ்ல ரூம் எடுக்க யோசிச்சதும் இதுக்கே தான்… பயந்த மாதிரியே நடந்திருச்சேன்னு பதறிப் போயி நின்னுட்டா ஆச்சா… அந்த சூழ்நிலையை எதிர்கொள்ளணும்ல… அதுக்கு தான் இப்படி சொல்லி சமாளிச்சு அனுப்பி வைச்சேன்… இன்னையோட இந்த லாட்ஜ் வாசம் போதும்… நாளைக்கு ஒரே நாள்… வீடு தேடுவோம்… கிடைச்சா ஓகே… கிடைக்கலைனா நம்ம ஊருக்கே கிளம்பிடுவோம்… அங்கே என்ன ஆனாலும் சரி… அதை சமாளிக்கறதைத் தவிர வேறு வழியிலை…” தீர்மானமாய் அவள் கூறிய வார்த்தைகள் கெளதமுக்கும் சரியென்று தோண வைத்தது.
அதற்குப் பிறகு அடுத்த நாள் அழகாய் விடிய, அந்த புரோக்கரை அழைத்து விசாரித்தான் கெளதம். அவர் நான்கைந்து வீடுகளை பார்க்கப் போகலாம் என்று வரச் சொல்ல, நிலாவையும் குழந்தையையும் அங்கேயே விட்டுப் போக மனமில்லாமல் அவர்களை ஒரு கோவிலில் விட்டுச் சென்றான். அந்தக் கோவில் தான் அவர்களின் வாழ்க்கையையே மாற்றி அமைத்தது.
கெளதம் அந்த சின்ன பிள்ளையார் கோவிலில் நிலாவை விட்டு விட்டு புரோக்கருடன் வீடு பார்க்க சென்று விட்டான். சாமியை மனதாரக் கும்பிட்டு விட்டு சற்று ஒதுக்குப்புறமாய் நிழலில் குழந்தையுடன் அமர்ந்தாள் நிலா. சாமி கும்பிட வந்து போவோர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது அங்கு வந்தார் ஒரு மத்திய வயது பெண்மணி. மங்கலத்தை தொலைத்த நெற்றியாய் இருந்தாலும் மங்களகரமான வட்ட முகம். சாமி முன்பு நின்று கும்பிட்டவர், ஒரு சீட்டில் எதையோ எழுதி பூசாரியிடம் கொடுத்து சாமியின் காலில் வைத்துக் கொடுக்குமாறு கேட்டார். அவரும் அதே போல செய்து விட்டு அந்த சீட்டை அவரிடம் கொண்டு வந்து நீட்டினார்.
“ம்ம்… நான் எடுக்கலை சாமி… ஏதாவது குழந்தை கையால எடுக்க சொல்லுவோம்…” என்றவர் சுற்றிலும் பார்வையை ஓட்டினார்.
“அதோ, அங்க ஒரு பொம்மனாட்டி குழந்தையை வச்சுண்டு உக்கார்ந்திருக்கா பாருங்கோ… அவளாண்டே ஒரு சீட்டை எடுத்து தர சொல்லுங்கோ…”
“ம்ம்… சரி சாமி…” என்ற அந்தப் பெண்மணி நிலாவிடம் வந்தார்.
“அம்மா… இந்த ரெண்டு சீட்டுல ஒண்ணை குழந்தை கையால எடுத்துக் குடும்மா…” என்று இரு சீட்டுகளை வைத்திருந்த கையை நீட்டினார்.
நிலா, குழந்தையின் கையைப் பிடித்து ஒரு சீட்டை எடுத்துக் கொடுக்க, அதைப் பிரித்துப் பார்த்தவரின் முகம் மலர்ந்தது.
“ரொம்ப சந்தோசம்மா… என் மனசுக்கு நிறைவா ஒரு சீட்டை எடுத்துக் குடுத்திருக்கீங்க… இன்னைக்கு என்னோட சொத்து வழக்குக்கு தீர்ப்பு வரப் போகுது… எனக்கு சாதகமா வரும்னு குழந்தை உருவத்தில் கடவுளே சொன்ன போல நிம்மதியா இருக்கு… குழந்தைக்கு எத்தனை மாசம் ஆச்சு…” என்றார் புன்னகையுடன்.
“ஓ… நீங்க நினைச்ச போல எல்லாம் நல்லபடியா நடக்கும் மா… இவளுக்கு ஒரு மாசம் ஆச்சு…”
“அஞ்சு வருஷமா இழுத்துட்டு கிடக்குற கேசு… நல்ல வார்த்தை சொல்லிருக்கே… ஆமாம், நான் உன்னை இந்தக் கோவில்ல இதுக்கு முன்னால பார்த்ததே இல்லையே… இந்த ஏரியாவுக்குப் புதுசா குடி வந்திருக்கிங்களா…”
“அ… அது வந்து… இல்லை… இங்கே வாடகை வீடு ஏதாவது கிடைக்குமான்னு பார்த்திட்டு இருக்கோம்…”
“ஓ… அப்படியா, நீங்க எந்த ஊரும்மா… உன்னைத் கைக்குழந்தையோட தனியா இங்க விட்டுட்டு உன் வீட்டுக்காரர் எங்க போனாரு…”
“ஏதோ ஒரு புதிய பெண்மணி… இவரிடம் தனது கதையை என்னவென்று சொல்லுவது…” என யோசித்தவள், அவருடன் பேச்சை வளர்த்த விரும்பாமல் ஏதோ பதில் கூறினாள்.
“அவர் வீடு பார்க்க தான் புரோக்கரோட போயிருக்கார்… கொஞ்ச நேரத்துல வந்திருவார்…” என்றவள் சிணுங்கிய குழந்தையை தட்டிக் கொடுத்தாள்.
“ஓ…” என்று யோசித்தவர், “நீங்க எத்தனை பேரும்மா… வீடு பார்த்த பின்னால குழந்தையை எடுத்திட்டு வந்திருக்கலாமே… இப்படி இங்க வந்து உக்கார்ந்துட்டு இருக்கே…” என்றார் அங்கலாய்ப்புடன்.

Advertisement