Advertisement

“கெளதம்… அப்படி சொல்லாதிங்க, எனக்கு எப்படி சொல்லறதுன்னு தெரியலை… இந்தக் குழந்தையை நாமளே வச்சுக்கணும்னு தோணுது… கோவில்ல என் கைக்கு வந்த குழந்தையை அந்த அம்மனே கொடுத்த போல நினைக்கறேன்… கார்த்திக் கிட்டே சொன்னா அவன் நிச்சயமா புரிஞ்சுக்குவான்… இந்தக் குழந்தையை நான் பார்த்துக்கறேன்… நமக்குத் துணையா இருந்திட்டுப் போகட்டுமே…” என்றவளை வியப்புடன் பார்த்தான் கெளதம்.
அந்தப் பிஞ்சுக் குழந்தை அவளுக்கு எந்த விதத்தில் துணையாகும் என்பதை எல்லாம் அவள் யோசிக்கவில்லை… அவளது தனிமையை அந்தக் குழந்தை விரட்டிவிடும் என்பதை மட்டும் உறுதியாய் நம்பினாள்.
“ம்ம்… சரி, உன் இஷ்டம் நிலா…” அவன் சம்மதிக்க அவள் முகம் தெளிந்தது.
“ரொம்ப தேங்க்ஸ் கெளதம்…” என்றவள், குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
“கெளதம்… குழந்தைக்கு கொஞ்சம் திங்க்ஸ் எல்லாம் வாங்கணும்… பக்கத்துல ஏதும் கடை இருந்தா பாருங்க…”
“ம்ம்… சரி, வாங்கலாம்…” என்றான் கெளதம் யோசனையாக.
“அப்புறம் கார்த்தி வீட்டுக்குப் போன் பண்ணி அவன் அம்மாகிட்டே சொல்லி இருந்திங்களே… அவுங்க அதுக்குப் பிறகு கால் பண்ணலையா…”
“இல்லை நிலா… நான் இன்னைக்கும் கூப்பிட்டுப் பார்த்தேன்… அவங்க எதுவும் தெரியாமப் பேசுறாங்களா… இல்லை, கார்த்திக் அப்படி சொல்லி வச்சிருக்கானான்னு தெரியலை… ஏதோ வேலை விஷயமா வெளிநாட்டுக்குப் போயிட்டான்னு சொல்லறாங்க… அவங்களுக்கு உன்னைப் பத்தி தெரியுமா இல்லியான்னும் தெரியலை… அதுனால நான் ஏதும் சொல்லலை… உன்னோட அண்ணன் கதிர் வேற ரெண்டு நாள் முன்னாடி அங்கே ஆளுங்களைக் கூட்டிட்டு வந்து நம்மளைப் பத்தி விசாரிச்சிட்டுப் போயிருப்பான் போலருக்கு… இப்போதைக்கு நாம ஊருக்குப் போகவே முடியாது…”
“ஓ… இப்ப என்ன பண்ணறது… நாம எங்கே தங்கப் போறோம், தயவு செய்து லாட்ஜ்ல வேண்டாம்… வேற ஏதாவது யோசிங்க…” என்றவள், கையில் வைத்திருந்த குழந்தை சிணுங்கவே அதை ஆட்டிக் கொண்டே,
“கெளதம்… குழந்தைக்கு பசிக்கும் போலருக்கு… பால் வாங்கணும்…” என்றாள்.
“ம்ம்… ஹோட்டல் பால் எல்லாம் கொடுத்தா குழந்தை வயித்துக்கு ஒத்துக்குமோ என்னவோ… சரி, நாமும் சாப்பிட்டு போகலாம்…” என, அருகில் இருந்த சிறு ஹோட்டலுக்குள் நுழைந்தனர். குழந்தைக்குப் பாலை வாங்கிக் கொடுத்துவிட்டு, அவர்களும் சாப்பிட்டுக் கொண்டே யோசித்துக் கொண்டிருந்தனர்.
“கெளதம்… ஏதாவது யோசிச்சிங்களா… நாம எங்கே தங்கப் போறோம்…”
“நிலா நான் ஒரு யோசனை சொல்லறேன்… உனக்கு என்மேல் நம்பிக்கை இருந்தா பண்ணலாம்…”
அவனையே தீர்க்கமாய் பார்த்தவள், “ஏன்… உங்க மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா… எப்பவும் என்கிட்டே இதையே கேட்டுட்டு இருக்கிங்க… என்ன சொல்ல வந்திங்களோ, அதை சொல்லுங்க கெளதம்…” என்றாள். அதைக் கேட்டதும் அவன் முகத்தில் சிறு புன்முறுவல் எட்டிப் பார்த்தது.
“நிலா… கார்த்திக் பத்தி எதுவுமே தெரியலை… நாம இன்னும் எத்தனை நாள் இங்கே தங்க வேண்டி வரும்னு தெரியலை… கையில உள்ள பணம் கம்மியாதான் இருக்கு… இப்ப நம்மளோட இந்தக் குழந்தையும் சேர்ந்துகிச்சு… நாம சின்னதா ஒரு வாடகை வீடு பார்த்தா என்ன…”
“எ…என்னது வாடகை வீடா…” யோசனையாய் கேட்டாள் நிலா.
“ம்ம்… கார்த்திக் வந்தாலும் உங்களுக்கு தங்கறதுக்கு ஒரு வீடு எடுத்து தானே ஆகணும்… அவன் வர்ற வரைக்கும் நானும் ஏதாவது வேலைக்குப் போகலாம்னு இருக்கேன்… செலவுக்கு பணம் வேணும்ல… இது ஒரு யோசனை மட்டும் தான்… உனக்கு விருப்பம் இல்லைன்னா வேண்டாம்…” என்றான் அவன் அவசரமாக.
“நீங்க சொல்லறதும் நல்ல காரியம் தான்… கண்ட லாட்ஜ்ல ரூம் போட்டு தங்கறதுக்கு இது பெட்டர்… ஆனா வீடு கிடைக்கணுமே… அதுக்கு அட்வான்ஸ் கொடுக்கணும்… வீட்டுக்கு வேண்டிய பொருள் எல்லாம் வாங்கணும்… நிறைய செலவாகுமே…” அவள் யோசித்தாள்.
“ம்ம்… இப்போதைக்கு வீடு கிடைக்குமான்னு பார்ப்போம்… அப்புறம் எவ்வளவு செலவு வரும்னு பார்ப்போம்…” என்றான் அவன்.
“சரி… நீ குழந்தையோட அலைய வேண்டாம்… கோவில்ல இருங்க…. நான் ஏதாவது புரோக்கர் பத்தி விசாரிக்கறேன்…”
“சரி…” என்றவள் அருகில் இருந்த ஒரு சின்ன விநாயகர் கோவிலில் அமர்ந்திருக்க, கெளதம் ஒரு வீட்டு புரோக்கரைத் தேடி மீண்டும் வெளியே கிளம்பினான். அருகில் இருந்த பேக்கரியில் விசாரித்து ஒரு புரோக்கரைப் பிடித்தான். அந்த ஆள், சூளைமேட்டில் நான்கைந்து வீடுகளைக் காட்டுவதாகக் கூற கெளதம் சென்று பார்த்துவிட்டு வந்தான். அந்த வீடுகளுக்கு வாடகையும் முன்தொகையும் அதிகமாகக் கூறவே திகைத்தான்.
“அத்தனை தொகைக்கு எங்கே செல்வது… என்ன செய்வது…” என்று யோசித்துக் கொண்டே இருட்டத் தொடங்கவும், அடுத்த நாள் பார்க்கலாம்… என்று அவரது அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு கோவிலுக்கு வந்தான்.
அவனது களைத்துப் போன முகத்தைக் கேள்வியுடன் நோக்கினாள் நிலா. அவனது மறுப்பான தலையாட்டல் வீடு எதுவும் சரியாகவில்லை என்பதைக் கூற, கவலையுடன் அமர்ந்திருந்தாள்.
குழந்தையை அவள் கைகள் தட்டிக் கொடுக்க மடியில் உறங்கிக் கொண்டிருந்தது.
“நிலா… இன்னைக்குப் பார்த்த வீடு எல்லாமே நாலாயிரதுக்கு மேல வாடகை, நாப்பதாயிரம் அட்வான்ஸ்னு கேக்குறாங்க… வீடு மட்டும் எடுத்தா போதுமா… கொஞ்சம் திங்க்ஸ் எல்லாம் வேற வாங்கணும்… நம்ம கையில் அத்தனை பணமும் இருக்காது… அந்த புரோக்கர் கிட்டே வேற வீடு பார்க்க சொல்லிட்டு வந்திருக்கேன்… நேரம் வேற இருட்டத் தொடங்கிருச்சு… இனியும் இப்படியே இருக்க முடியாது… இன்னைக்கு ஒரு நாள் மட்டும் லாட்ஜ்ல தங்கிக்குவோம்… நாளைக்கு எப்படியாவது வீடு பார்த்துட்டுப் போயிடலாம்…”
“நோ… எனக்குத் தனியா லாட்ஜ்ல தங்கறதுக்கு பயமா இருக்கு கெளதம்…”
“வேற வழியில்லை நிலா… நமக்கு நம்ம மேல நம்பிக்கை இருந்தாலும் நாம ஒரே ரூம்ல தங்கவும் முடியாது… மத்தவங்க கண்ணுல அது வித்தியாசமாத் தெரிந்து ஏதும் பிரச்சனை ஆயிடுச்சுன்னா அசிங்கமாப் போயிடும்…” அவன் இயலாமையுடன் அவளைப் புரிய வைக்க முயற்சித்தான்.
ஒரு நிமிடம் அவன் எதற்காய் சொல்லுகிறான் என யோசித்தவள், “ம்ம்… நீங்க எதுக்கு அப்படி சொல்லறிங்கன்னு எனக்கும் புரியுது… வீடு, கொஞ்சம் திங்க்ஸ் எல்லாம் வாங்கணும்னா பெரிய ஒரு தொகையே வேணுமே…” என யோசித்தவள், “கெளதம்… ஒரு நிமிஷம் அம்முவைப் புடிங்க…” என்றாள்.
“அம்முவா… அது யாரு…” புரியாமல் கேட்டான்.
“இதோ இந்த செல்லக் குட்டி தான்… இவளை நாம அம்முன்னு கூப்பிடலாம்…” என்றாள் குழந்தையின் நெற்றியில் சந்தோஷத்துடன் முத்தமிட்டு. அதுவரை சோகமாய் இருந்த நிலாவின் முகத்தில், குழந்தையைப் பற்றி பேசியதும் புன்னகை மலர்ந்தது. அவளது சந்தோஷத்தைக் கண்ட கெளதமின் முகமும் மலர்ந்தது.
“ஓ… குழந்தைக்குப் பேரும் வச்சுட்டியா…”
“இல்லை கெளதம்… அம்மு, செல்லப் பேரு… இவளுக்கு நல்லவொரு பெயரை அப்புறம் யோசிச்சு சொல்லறேன்… நீங்க குழந்தையைப் பிடிங்க…” என்றாள் அவள். அவன் எடுக்கத் தெரியாமல் தவிக்க, எப்படியோ அவன் கையில் கொடுத்தாள். குழந்தையை முதன் முறையாய் கையில் ஏந்தியவன், அதன் முகத்தையே கவனித்தான்.
“ரோஜாப்பூவின் மென்மை…. ரோஜாவின் இதழ்கள் உதடுகளாய்… சிறிய தலை நிறைய முடிகள்… குட்டி ரோஜாக் கைகள், ரோஸ் கலந்த நிறம்… மெத்தென்ற பட்டுப் போன்ற மேனி…” ஒரு ரோஜாக் குவியலை கையில் வைத்திருப்பது போலத் தோன்றியது.
“கடவுளே… இந்தக் குழந்தையைத் தான் நான் அநாதையாக்க நினைத்தேனா…” அதன் முகத்தையே நோக்கிக் கொண்டிருக்க உறக்கத்தில் புன்னகைத்தது. அப்படியே நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொள்ளத் தோன்றியது. அவனையே பார்த்துக் கொண்டு புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள் நிலா.
“அம்முக்குட்டி ரொம்ப அழகா இருக்கால்ல கெளதம்…” என்றாள்.
“ம்ம்…” என்றவன், மென்மையாய் குழந்தையின் விரலில் முத்தமிட்டான்.
“நிலா… குழந்தைக்கு ஏதோ திங்க்ஸ் வாங்கணும்னு சொன்னியே… போகும்போது வாங்கிட்டுப் போயிடலாம்…”
“ம்ம்… சரி கெளதம்…” என்றவள், அவளது பாகில் இருந்து எதையோ எடுத்தாள். அது ஒரு காகிதப் பொட்டலம். அதைத் திறந்து உள்ளிருந்ததை அவள் வெளியே எடுக்க, கெளதம் குழப்பத்துடன் பார்த்தான்.
“நிலா… இது எங்கிருந்து கிடைச்சது… இதை எதுக்கு இப்போ எடுக்கறே…” கோவிலில் கொடுத்த மஞ்சளுடன் கூடிய சரடை அதில் தான் சுற்றி வைத்திருந்தாள் நிலா.
“சொல்லறேன் கெளதம்… நமக்கு வீடு எடுக்கவும், திங்க்ஸ் வாங்கவும் பணம் வேணும்… லாட்ஜ்ல நான் தனியா தங்கவும் கூடாது… இதெல்லாம் யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்…”
“என்ன முடிவு நிலா… என்ன செய்யப் போறே…” என்றான் அவன் குழப்பத்துடன்.
அவள் கழுத்தில் போட்டிருந்த நாலு பவுன் செயினை கழற்றினாள்.
“இதை எதுக்கு கழட்டறே… வெறும் கழுத்தோட இருக்கப் போறியா… அதெல்லாம் வேண்டாம்…” அவன் அவசரமாய் தடுத்தான்.
“வெறும் கழுத்தோட இல்ல… இப்படி இருக்கப் போறேன்…” என்றவள் அந்த மஞ்சள் கயிறை அவளே கழுத்தில் கட்டிக் கொண்டாள். அவளது செய்கையைக் கண்டு அதிர்ந்து போன கெளதம், அப்படியே பார்த்துக் கொண்டிருக்க,
“இப்போ ஓகே தானே கெளதம்… நாம லாட்ஜ்ல ஒரே ரூம்ல தங்கினாலும் பிரச்சனை இல்லை… வீட்டுக்கும் இந்தப் பணத்தை யூஸ் பண்ணிக்கலாம்… கார்த்திக் வரும்வரை, நீங்களும் எவ்வளவு தான் செலவு பண்ண முடியும்…”
அவளது செயலில் திகைத்துப் போன கெளதம் என்ன சொல்லுவதென்று புரியாமல் சிலையாய் நின்று கொண்டிருந்தான். நிலாவின் அப்போதைக்கு அப்போது முடிவெடுக்கும் புத்தி பின்னாளில் அவளுக்கே பிரச்சனையை கொடுக்கும் என்பதை அவள் யோசிக்கவே இல்லை.
என் கருவறையில் மலராத பூ நீ…
ஆனாலும் மலர்ந்துவிட்டாய் மனதில்…
எந்த செடியிலோ பூத்திட்ட மலர் நீ…
ஆனாலும் மணம் வீசுகிறாய் என்னில்…
பஞ்சான உன் மேனியை – என் நெஞ்சோடு
சேர்ந்தணைத்தேன் – அங்கமெல்லாம்
வீசுதம்மா உந்தன் பால் வாசனை…
பசிக்காய் இதழ் திறந்து நீ அழும்போது
என் கண்ணில் தானே நீர் சுரக்கிறது…
சுமக்காமலே உணர்கிறேன்
என் தாயின் வலியை…
உன்னை மடியில் தாங்கி தானே
என் மனபாரம் மறக்கின்றேன்…
கடவுளின் வரத்திற்காய் எத்தனையோ
கருவறைகள் காத்திருக்க – வேண்டாத
கருவறையில் ஏன் உதித்தாய் கண்ணே…
குற்றம் செய்யாமலே சுற்றமின்றி போனாயே…
மரண வலியோ ஒரு நிமிடம்…
மனம் தரும் வலியால் துடித்திருந்தேன்
ஒவ்வொரு நிமிடமும்… உன்
முத்தான புன்னகையில் – என்னை
நானே மறக்கின்றேன்… உன்னில் தானே
என்னை நானும் தொலைக்கின்றேன்…
எந்தன் வலி தீர்க்க கடவுள்
தந்த வழி நீயோ – என் செல்லமே…

Advertisement