Advertisement

நிலா – 16
சூரியன் பொன்னிறமாய் தகதகத்துக் கொண்டிருந்த மதியம் பனிரெண்டு மணி.
அந்த பெரிய மாரியம்மன் கோவிலில், மின்சாரத்தின் உதவியால் இயங்கிக் கொண்டிருந்த இயந்திர மணி, சீரான இடைவெளியில் கம்பீரமாய் ஒலி எழுப்பி அந்த சூழலை தெய்வீகமாக்கிக் கொண்டிருந்தது.
மதிய பூஜைக்காய் கூடியிருந்த பக்தர்கள், அம்மனை மறைத்திருந்த கதவு திறந்ததும் தரிசிக்கப் பக்தியுடன் காத்திருந்தனர். உள்ளே மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே சாமிக்குப் பூஜையுடன் படையல் நடந்து கொண்டிருந்தது. மூடியிருந்த கதவு திறக்க, மணி உச்சத்தில் ஒலிக்கத் தொடங்கியது. தீபங்களும், கற்பூரத்தின் ஒளியும் தேவியின் முகத்தில் பட்டுத் தெறிக்க, கருணை நிறைந்த கண்களுடன் ஜெகஜோதியாய் ஜொலித்துக் கொண்டிருந்தாள் அந்தப் புன்னகை முகத்துக்காரி.
அனைவரும் பக்தியுடன் கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டிருக்க, நிலாவும் கை கூப்பி வணங்கினாள். அம்மனின் கருணை நிறைந்த முகத்தை கலங்கிய கண்களில் நிறைத்துக் கொண்டவளுக்கு மனதில் சற்று அமைதி வந்தது.
கெளதம், நிலாவை ஹாஸ்பிடலுக்கு சற்றுத் தள்ளி இருந்த அந்தக் கோவிலில் விட்டுவிட்டு அவனது செயினை அடகு வைப்பதற்காய் வெளியே சென்றிருந்தான். அர்ச்சகர் நீட்டிய தீபாராதனையை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டவள், அவர் தந்த திருநீரை வாங்கி நெற்றியில் இட்டுக் கொண்டாள். சிறிது நேரம் அந்த அன்னையின் முகத்தையே மனமுருக நோக்கி நின்றாள். மனம் நிறைய கேள்விகளை சுமந்து கொண்டு அந்த முகத்தில் ஏதும் பதில் கிடைக்குமா என்ற தேடலுடன் கண்கலங்க உருகி நின்றாள்.
பூஜை முடிந்தும் வெகு நேரமாய் முகத்தில் நிறைந்த வேதனையுடன் அம்மனையே பார்த்துக் கொண்டு நின்றவளை கவனித்துக் கொண்டிருந்த ஒரு வயதான பாட்டி, அவளிடம் வந்தார்.
“கண்ணு…. ரொம்ப நேரமா கும்பிட்டுட்டு நிக்கறியே…. எந்தப் பிரச்சனையா இருந்தாலும் அம்மா மாதிரி நினைச்சு அவகிட்டே சொல்லு….. ரொம்ப சக்தி வாய்ந்த அம்மன்மா….. நல்லபடியா தீர்த்துக் கொடுத்திருவா…… மூணு வாரம் விடாம கோவிலுக்கு வா……. உன்னோட எல்லாப் பிரச்னையும் தீர்ந்து போகும்…. அங்கே பிரசாதம் கொடுக்கிறாங்க…. போயி வாங்கிக்கோம்மா……” அருள் வாக்கு சொல்லுபவர் போல சொல்லிவிட்டு புன்னகையுடன் நகர்ந்தவரையே அமைதியாய்ப் பார்த்து நின்றாள் நிலா.
சற்றுத் தள்ளி ஒரு அம்மா, பொங்கல் கொடுத்துக் கொண்டிருக்க அவருக்குப் பக்கத்தில் ஒரு இளவயதுப் பெண், புத்தம் புதிய மஞ்சள் சரடு, கழுத்தில் மினுமினுக்க, கவலை நிறைந்த முகத்துடன் வருகின்ற பெண்களுக்கு வெற்றிலை பாக்கு, மஞ்சள் வைத்துக் கட்டிய தாலிச்சரடு ஒன்றை கொடுத்துக் கொண்டிருந்தாள்.
நிலா, பிரசாதம் வாங்கலாமா வேண்டாமா எனத் தயக்கத்துடன் யோசித்துக் கொண்டிருக்க, அவளைக் கண்ட அந்த அம்மா, அருகில் வருமாறு அழைத்தார்.
“வாம்மா…. பிரசாதம் வாங்கிக்கோ…..”
தயக்கத்துடன் அருகில் செல்ல, அவளது கையில் தொன்னை கிண்ணத்தில் பொங்கலை வைத்தவர், “அந்தப் பிரசாதமும் வாங்கிக்கோ மா….” என்றார்.
அவள் தயங்கி நிற்க, “வாங்கிக்கோம்மா…. என் பொண்ணுக்கு ரெண்டு நாள் முன்னாடி தான் கல்யாணம் முடிஞ்சது….. மாப்பிள்ளை ஒரு விபத்துல அடிபட்டு சீரியஸா ஆஸ்பத்திரியில் கிடக்குறார்…… தன்னோட கழுத்தில ஏறின தாலி இறங்கிடக் கூடாதுன்னு வேண்டிகிட்டு தான் அவ இங்கே வந்த எல்லாப் பெண்களுக்கும் மஞ்சள் சரடு கொடுத்திட்டிருக்கா…. அவங்க மனசார வாழ்த்திட்டு போனா அவ மாங்கல்யம் நிலைக்கும்னு நினைக்குறா… நீயும் வாங்கிக்கோம்மா…” அவர் சொன்னதைக் கேட்ட நிலாவுக்கு மறுக்க முடியவில்லை.
அந்தப் பெண்ணின் தாலி நிலைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு கண்ணீருடன் அவள் நீட்டிய மஞ்சள் கயிறு தாம்பூலத்தை வாங்கிக் கொண்டாள்.
கோவிலில் நடையை அடைத்து விட்டதால் அனைவரும் கிளம்பத் தொடங்கினர். ஓரிருவர் மட்டும் வெளியே பிரகாரத்தில் அமர்ந்திருந்தனர். ஒரு தூணுக்கு அருகில் வந்து அமர்ந்தாள் நிலா.
மனது வெறுமையாய் இருந்தாலும் அமைதியாய் இருந்தது.
“கடவுளே… என்னை எதற்கு இப்படி எல்லாம் செய்ய வைத்தாய் எனத் தெரியாது… ஆனால் என்னுடைய எல்லா செயல்களுக்கும் நீதான் காரணம்… நீதான் என்னை ஆட்டுவிக்கிறாய், உன் கைப்பாவையாய் நானும் ஆடிக் கொண்டிருக்கிறேன்… எனக்கு எது நடக்க வேண்டும் என்பதை தீர்மானித்தது நீயே… இனி எது நடந்தாலும் அதற்கு நீயே பொறுப்பு…” அவளது மனது கடவுளின் மீது தன் சுமையை சுமத்திக் கொண்டிருந்தது.
சட்டென்று அவளது எண்ண ஓட்டங்கள் தடைபட்டன. ஒரு குழந்தை அழுகின்ற குரல் அருகில் கேட்க சுற்றிலும் பார்த்தாள். பெரிய அந்தக் கோவிலின் பிரகாரத்தில் சிலர் மட்டுமே இருந்தனர். குழந்தையை எங்கும் காணவில்லை.
மீண்டும் மென்மையான குரலில் சிணுங்கிக் கொண்டே குழந்தை அழும் குரல் கேட்க எழுந்த நிலா சுற்றிலும் பார்த்தாள். அவள் சாய்ந்து அமர்ந்திருந்த பெரிய தூணுக்குப் பின்னால் ஒரு டவலில் சுற்றப் பட்ட பச்சிளம் குழந்தை சிணுங்கிக் கொண்டிருந்தது. குழந்தையின் அன்னை அங்கு இருக்கிறாளா என பார்வையை சுழற்ற, அருகில் யாரையும் காணவில்லை.
குழந்தை பசியில் அழுது கொண்டே இருக்க அதைக் கண்டு அவளால் அமைதியாய் இருக்க முடியவில்லை.
சற்றுத் தள்ளி கோவிலுக்குள் பூஜை சாதனம் விற்பதற்காய் அமர்ந்திருந்த ஒரு பெண்மணியிடம் சென்று விசாரித்தாள்.
“ஏங்க…. அந்தக் குழந்தை அழுதுகிட்டே இருக்கு… யாரு குழந்தைன்னு தெரியலை… அவங்க அம்மாவை பார்த்திங்களா…” அவளை ஏற இறங்கப் பார்த்தார் அந்தப் பெண்மணி.
“எனக்குத் தெரியலையேம்மா, நான் யாரையும் பார்க்கலை… வியாபாரத்தைப் பார்க்கவே இங்கே நேரம் பத்தலை… இதுல வந்துட்டுப் போறவங்களை எங்க பார்க்கறது…” முணுமுணுத்துக் கொண்டே அவர் கடையில் எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தத் தொடங்கினார்.
அப்போதும் குழந்தை பசியில் அழுது கொண்டே இருக்க, யாருமே அருகில் செல்லாமல் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். நிலாவுக்கு குழந்தையின் அழுகையைக் கேட்டு சங்கடமாய் இருந்தது.
அங்கிருந்த ஆட்களிடம் விசாரித்துப் பார்த்தும், குழந்தை யாருடையது என்று தெரியவில்லை என்று கூறிவிட்டனர். குழந்தையை யாரும் சென்று நோக்கவும் இல்லை.
மனது கேட்காமல் அவளே குழந்தையின் அருகில் சென்றாள். குழந்தை பசியில் அழுது, சோர்ந்து போய் சிணுங்கிக் கொண்டே தன் விரலை வாயில் வைத்து சப்புவதும் அழுவதுமாய் இருந்தது.
அழகான சின்ன உதடுகளும், கன்னங்களும் அழுது சிவந்திருந்தன. அழுகை இப்போது விசும்பலாய் மாறியிருக்க, கண்ணை மூடிக் கொண்டே அழுது கொண்டிருந்தது. குழந்தையின் அருகில் வந்த நிலா, சின்னப் பூக்குவியலை கையால் வாரி எடுப்பது போல மென்மையாய் கையில் எடுத்தாள்.
சரியாக எடுக்கத் தெரியாமல் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொள்ள, அது பால் குடிப்பதற்காய் முகத்தைத் திருப்பித் தேடியது. தனக்குத் தேவையானது கிடைக்காமல் மறுபடியும் குவா… குவ்வா… எனக் கத்தத் தொடங்கியது.
“அச்சோ, அழக் கூடாது செல்லம்… உன் அம்மா எங்கயோ போயிருப்பாங்க போலருக்கு… கொஞ்சம் பொறுத்துக்கோங்க அம்முச் செல்லம்…” என அவள் கையில் வைத்துக் கொண்டே மெதுவாய் ஆட்டிக் கொண்டிருக்க அது அழுகையை நிறுத்தி குட்டிக் கண்ணைத் திறந்து அவளைப் பார்த்தது. கருந்திராட்சையை கண்ணுக்குள் வைத்தது போலப் பளபளத்த கருவிழிகள்.
அழுகையை நிறுத்தினாலும் பசிக்காய் அவளது சேலையைத் தேடி முகத்தைத் திருப்பிய குழந்தை மீண்டும் அழத் தொடங்கியது. சுற்றிலும் பார்த்தவள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்தாள். அப்போது அந்த டவலில் நான்காய் மடக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு காகிதம் கீழே விழுந்தது.
அதை எடுத்துப் படித்தவள் அதிர்ந்தாள்.
“என்னம்மா… குழந்தை அழுதுண்டு இருக்கு, பால் கொடுக்காம கையில வச்சு வேடிக்கை பார்த்திண்டு இருக்கே…” கேட்டுக் கொண்டே அவள் அருகில் வந்தார் அப்போது தான் கோவிலுக்குள் நுழைந்த ஒரு மாமி.
“அ…அது வந்து… இது என்னோட குழந்தை இல்லை… இங்கே அழுதுட்டு இருந்துச்சு… யாரையும் காணோமேன்னு அழுகையை நிறுத்துறதுக்காக கையில எடுத்தேன்…”
“ஓ… அதோட அம்மா எங்கே…”
“தெரியலை… குழந்தை கிட்டே இந்த சீட்டை எழுதி வச்சிட்டு விட்டுட்டுப் போயிருக்காங்க…” என்றவள் அதை அவரிடம் வேதனையுடன் நீட்டினாள்.
அதை வாங்கிப் பார்வையைப் பதித்தார் அந்த மாமி.
“இந்த இரக்கமில்லாத உலகில் பாவத்தை சுமந்து கொண்டு வாழ விருப்பம் இல்லாததால் உலகத்தை விட்டே போகப் போகும் அபாக்கியவதி நான்… குழந்தை பாக்கியம் தேடி கோவிலுக்கு வரும் யாராவது இந்தக் குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளவும்… அப்படி யாரும் இல்லாவிட்டால் ஏதாவது அநாதை இல்லத்தில் சேர்த்து விடவும்… நன்றி…” என்று மட்டுமே அதில் எழுதி இருந்தது.
அதைப் படித்து முடித்து குழந்தையின் மீது பரிதாபமாய் பார்வையைப் பதித்தவர், “இப்போல்லாம் யோசிக்காம பெத்துண்டு பிரச்சனைன்னு வந்ததும் கோவில்லயும் குழந்தையை கொண்டு வந்து போட்டுட்டுப் போயிடறா போலருக்கு… ம்ம்… கலி முத்திப் போச்சு… வேற என்ன சொல்லுறது…” என்றார்.
“இந்தாம்மா… நான் அம்மனுக்கு அபிஷேகம் பண்ணுறதுக்காய் பால் எடுத்திண்டு வர லேட் ஆகிடுத்து… நடை வேற சாத்திட்டாங்க… இதைக் குழந்தைக்காவது கொடு… என்ன பாவம் பண்ணுச்சோ, இப்படி ஒரு பிறப்பு… ம்ம்… அதுக்கும் பசிக்குமோன்னோ…” பால் கொண்டு வந்த பாத்திரத்தின் மூடியில் பாலை ஊற்றிக் கொடுக்க அதைத் துளித் துளியாக குழந்தைக்குக் கொடுத்தாள் நிலா.
சில துள்ளிகள் அதன் வாய்க்குள் செல்ல, மீதமெல்லாம் வெளியே வழிந்தது. இருந்தாலும் அதுவே அதற்குப் போதுமாய் இருக்க பொக்கை வாயில் பால் வழிய கண்ணை மூடிக் கொண்டு திருப்தியாய் சிரித்தது. அந்தப் புன்னகை நிலாவின் மனதை என்னவோ செய்தது. அதுவரை கண்டு கொள்ளாமல் அமர்ந்திருந்தவர்கள் ஒவ்வொருவராய் வந்து விசாரித்துக் கொண்டிருந்தனர்.
“எப்படித்தான் இந்தப் பிஞ்சுக் குழந்தையை இப்படிப் போட்டுட்டுப் போக இவ அம்மாக்கு மனசு வந்ததோ… குழந்தையைப் பார்த்தா ஒரு மாசம் தான் ஆகியிருக்கும்னு தோணறது… பெண் குழந்தை வேற, இப்போ என்ன பண்ணலாம்… குழந்தையை எதாவது அநாதை ஆஸ்ரமத்தில் சேர்த்துடலாமா…”
ஒவ்வொருத்தராய் குழந்தையை எட்டிப் பார்த்துக் கொண்டே, “அது செய்யலாம்… இது செய்யலாம்…” என்று இலவசமாய் அபிப்ராயம் சொல்லிக் கொண்டிருக்க, நிலா எதுவும் பேசாமல் குழந்தையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
எதைப் பற்றியும் கவலை இல்லாமல் நிம்மதியாய் அவள் கையில் உறங்கிக் கொண்டிருந்தது. அதன் பட்டுப் போன்ற விரல்கள் அவளது விரலை இறுக்கமாய் பிடித்திருக்க, “என்னை விட்டு எங்கேயும் போய் விடாதே..” என்று கூறுவது போல தோன்றியது. அப்போது தான் கெளதம் போன காரியத்தை முடித்து கோவிலுக்கு திரும்பி வந்தான்.
கோவிலில் கூடியிருந்த கூட்டத்தையும் நிலாவின் கையில் இருந்த குழந்தையையும் புரியாமல் பார்த்துக் கொண்டே நிலாவிடம் வந்தான்.
“என்ன ஆச்சு நிலா… இது யாரோட குழந்தை…” குழந்தையைப் பார்க்கவும், அதே நேரத்தில் சரியாக அது கண்ணை மூடிக் கொண்டு புன்னகைக்கவும் செய்ய அதைக் கண்ட அவன் மனது நெகிழ்ந்தது.
“தம்பி, நீங்க தான் இந்தப் பொண்ணோட வீட்டுக்காரரா…” என்றவர் குழந்தையைப் பற்றிக் கூறிவிட்டு, “பாவம், இதோட அம்மாவுக்கு என்ன கொடுமை நடந்துச்சோ… சாகறேன்னு எழுதி வச்சிட்டு குழந்தையை இங்கே விட்டுட்டுப் போயிருக்கு… அதான், குழந்தையை அநாதை ஆஸ்ரமத்தில் சேர்த்துடலாம்னு பேசிட்டு இருக்கோம்… இந்தப் பொண்ணு எதுவும் சொல்லாம குழந்தையை கையில் வச்சிண்டே இருக்கு… ஒருவேளை, உங்களுக்கு குழந்தை இல்லையா… நீங்களே வளர்த்தலாம்னு விருப்பப் படறேளா…”
அந்த மாமி, கௌதமை நிலாவின் கணவன், என்று நினைத்துக் கொண்டு பேசிக் கொண்டே போக அதை மறுத்துப் பேசும் நிலையில் அவர்கள் இல்லை.
அவளை சற்றுத் தள்ளி அழைத்துச் சென்றவன், “நிலா… நீ எதுக்கு குழந்தையை வச்சிட்டிருக்கே… அதை விட்டுட்டு வா… கிளம்பலாம்…”
அவனை அமைதியாய் ஏறிட்டவளின் விழிகள் கலங்கியிருந்தது. கெஞ்சலான பார்வையுடன் அவனது முகத்தை ஏறிட்டாள் நிலா.
“கௌதம்… ப்ளீஸ், இந்தக் குழந்தையை நாம வளர்த்தலாமா… யாருக்கோ வேண்டாம போட்டுட்டுப் போயிருக்காங்க… இந்த பிஞ்சு முகத்தைப் பாருங்களேன்… இது என்ன பாவம் பண்ணுச்சு… பிறந்ததுமே இது அநாதையா வளரணும்னு வரம் வாங்கிட்டு வந்திருக்கா என்ன, ப்ளீஸ் கெளதம்… நாம இந்தக் குழந்தையை எடுத்திட்டுப் போகலாம்… உங்களை நான் நிர்பந்திக்க நினைக்கலை… நீங்க என் மேல காட்டுற கருணையை கொஞ்சம் குழந்தை மேலயும் காட்டுங்களேன்னு கேக்கறேன்… எனக்கு இந்தக் குழந்தையை இப்படியே விட்டுட்டு வர மனசு வரலை…”
“நிலா… நீ என்ன சொல்லறே, யோசிச்சு தான் பேசறியா… கார்த்திக் வந்தா…”
“அவன் கிட்டே சொல்லிக்கலாம் கெளதம்… நான் நல்லா யோசிச்சு தான் பேசறேன்… இந்தக் குழந்தையை நமக்கு அந்த அம்மன் கொடுத்திருக்கா… ப்ளீஸ், மறுக்காதிங்க…” அவள் கெஞ்சுதலாய் கேட்க, அவனும் யோசித்தான்.
“இவள் என்ன நினைத்துக் கொண்டு இப்படிப் பேசுகிறாள்… நமது நிலைமையே இங்கே தகிடுதத்தம் போடுகிறது… இதில் இந்த பிஞ்சுக் குழந்தையை எப்படி எடுத்துச் செல்வது… நம்மளே அநாதை போல் சுத்திக் கொண்டிருக்க கம்பெனிக்கு இன்னொரு அனாதைக் குழந்தை வேறா…”
அவன் மனது குழப்பமாய் அவளை ஏறிட, அந்தக் கண்களில் தெரிந்த கெஞ்சுதல், அவனை சம்மதமாய் தலையசைக்க வைத்தது.
அதற்குப் பிறகு அங்கே கூடியிருந்தவர்களிடம் பேசி கோவில் அலுவலகத்தில் அவர்களின் முகவரியையும் கொடுத்து குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியே நடந்தனர்.
“கெளதம்… இப்போ என்ன பண்ணப் போறோம்… பணம் கிடைச்சதா…”
“ம்ம்… இப்போதைக்கு தேவையான பணம் இருக்கு… சரி. நீ என்ன நினைச்சுட்டு இந்தக் குழந்தையை எடுத்திட்டு வந்திருக்கே… நமக்கே இருக்க இடம் இல்லை… இந்தக் கைக்குழந்தையை வேற வச்சுக்கிட்டு கஷ்டப் படுத்தணுமா… கார்த்திக் வந்தா என்ன சொல்லுறது, பேசாம ஏதாவது அநாதை ஆஸ்ரமத்தில் சேர்த்துடலாமா…” என்றான் கெளதம்.

Advertisement