Advertisement

உதடுகள் உலர்ந்திருக்க சோர்வுடன் கெளதமைப் பார்த்தாள்.
“இப்ப எப்படி இருக்குமா, பீலிங் பெட்டரா… தலைவலி இருக்கா…” நரைத்த தலையுடன் நின்று கொண்டிருந்த டாக்டர், வாங்க வேண்டிய மருந்துகளைக் குறித்துக் கொண்டே, மூக்குக் கண்ணாடியை ஏற்றிக் கொண்டு விசாரித்தார்.
“ம்ம்… கொஞ்சம் பரவால்ல டாக்டர்…”
“ம்ம்… குட்…. ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்தே ஆகணும்… உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு… வைரஸ் பீவர் போல தான் இருக்கு… ரெண்டு நாள் பார்த்திட்டு பீவர் குறையலைனா மறுபடியும் ஒரு பிளட் டெஸ்ட் பண்ணிப் பார்த்துடலாம்… ஏதாவது சாப்பிட்டதும் இந்த மாத்திரையைக் கொடுங்க… காரம், புளிப்பு சேர்த்துக்க வேண்டாம்… நர்ஸ்… அவங்களுக்கு சலைன் பாட்டில் முடிஞ்சதும் மாத்திடுங்க… நிறுத்த வேண்டாம்…” என்றவர்,
“ஓகே… டேக் கேர்…” என்று கூறிவிட்டு அடுத்த நோயாளியை கவனிக்க நகர்ந்தார். கெளதமையே ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு இதழில் புன்னகை வழிய நின்றிருந்த நர்சும் அவர் பின்னாலேயே செல்ல கதவைச் சாத்திவிட்டு அவளுக்கு சற்றுத் தள்ளி இருந்த கட்டிலில் அமர்ந்தான் கெளதம்.
கெளதம் முன்னில் ஒரு நோயாளியாய் படுத்துக் கிடக்க நிலாவுக்கு கூச்சமாய் இருந்தது. போர்வையை கழுத்து வரை போர்த்திதான் படுத்திருந்தாள். இருந்தாலும் அவன் முன்னில் சற்றுத் தயக்கமாய் இருந்தது.
“நிலா… இப்ப எப்படி இருக்கு… தலை வலிக்குதா…” அவனது பார்வையில் அக்கறை மட்டுமே இருந்தது.
“ம்ம்… தலை வலி இல்லை…”
“அலைச்சல் உன் உடம்புக்கு சேரல போலருக்கு… அதான் காய்ச்சல் வந்திருச்சு, சரி… சூடா காப்பி வாங்கிட்டு வரேன்… குடிக்கறியா…”
அவளுக்கும் உதடுகள் எல்லாம் உலர்ந்திருக்க, குடித்தால் தேவலாம் போல இருந்தது. சம்மதமாய் தலையசைத்தாள். வாடிய மலராய் அவள் கிடந்த கோலம் அவன் மனதை வருத்தியது.
“நான் அப்படியே சாப்பிட ஏதும் வாங்கிட்டு வரேன் நிலா…”
“ம்ம்… கெளதம்… நர்ஸ் யாரையாவது வர சொல்லுறிங்களா…”
“எதுக்குமா… ஏதாவது வேணுமா…”
“வந்து… இந்த டிரிப்ஸ் கொஞ்சம் எடுத்து விட சொல்லணும்…”
“அதை எதுக்கு எடுக்கணும்… டாக்டர் தொடர்ந்து ட்ரிப்ஸ் ஏத்தணும்னு சொல்லிட்டுப் போயிருக்கார்…”
அவஸ்தையுடன் நெளிந்தவள் தயங்கினாள்.
“வந்து… எனக்கு பாத்ரூம் போகணும்…” என்றாள் கூச்சத்துடன்.
“ஓ… அவ்ளோதானே, நானே டிரிப்ஸ் எடுத்து விடறேன்… நீ போயிட்டு வா…” என்றவன் அவள் கையில் குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்த டியூபை விலக்கிவிட்டு அதன் மேலிருந்த சிறு பிளாஸ்டிக் மூடியால் மூடி வைத்தான்.
மெதுவாய் எழுந்து அவள் பாத்ரூமிற்கு செல்ல, அவள் வரும்வரை காத்திருந்தான் கெளதம். அவள் வந்ததும் பாட்டிலை முன் போல குத்திவைத்து விட்டு வெளியேறியவன், அவளுக்கு ரொட்டியும் காப்பியும் வாங்கி வந்தான். அவளை சாப்பிட வைத்து மாத்திரையைக் கொடுத்தான். ஒரு குழந்தையைப் போல கவனித்துக் கொண்டான். அன்று இரவு முழுதும் அவள் நிம்மதியாய் உறங்க, அவன் உறக்கம் விழித்துப் பார்த்துக் கொண்டான்.
நர்ஸ் இரவில், அவ்வப்போது அவளைப் பரிசோதிக்க வரும்போது நிலா கண்ணைத் திறந்து பார்க்க, கெளதம் உறங்காமலே இருப்பதைக் கண்டாள். குளுக்கோஸ் பாட்டில் தீரும்போது நர்சிடம் சொல்லி மாற்றிவிட்டான். ஒரு நாள் முழுதும் நல்ல ஓய்வில் இருந்ததால் அடுத்த நாள் காலையில் நிலாவுக்கு சற்று தேவலாம் போல இருந்தது.
நிலா மருத்துவமனையில் இருந்ததால் அந்த லாட்ஜ் அறையைக் காலி செய்து வந்துவிட்டான் கெளதம். அவளது மருத்துவ செலவுக்காய் கையில் இருந்த தொகை கரையத் தொடங்கி இருந்தது. கெளதம் ஏதோ வாங்குவதற்காய் வெளியே சென்றிருந்தான். கையில் டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்க நிலா கட்டிலில் சாய்வாய் அமர்ந்திருந்தாள்.
அப்போது அவளைப் பரிசோதிக்க வந்தாள் டியூட்டி நர்ஸ். மிகவும் அழகாய் இருந்தாள்.
“என்ன நிலா, தூக்கம் வரலையா… ஏதாவது சாப்பிட்டிங்களா… எங்கே உங்க பிரதர்…” அவளைப் பரிசோதித்துக் கொண்டே கேட்டாள். அதைக் கேட்டதும் ஏனோ நிலாவுக்கு சுள்ளென்று கோபம் வந்தது.
“அவர் ஒண்ணும் என் பிரதர் இல்லை…”
“ஓ… அப்படின்னா அவர் யாரு… உங்களைப் பார்த்தா கல்யாணம் ஆன போல தெரியலை… அதான் பிரதரா இருக்கும்னு நினைச்சேன்…”
“கௌதமை யாரென்று கூறுவது…” அவள் கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமல் விழித்தாலும் அண்ணனாய் ஒத்துக் கொள்ள மனது வரவில்லை நிலாவுக்கு.
“சரி நிலா… எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணறிங்களா… என் வீட்டுல ரொம்ப நாளா மாப்பிள்ளை பார்த்திட்டு இருக்காங்க… யாரையுமே எனக்குப் பிடிக்கல… இவரை ஏனோ பார்த்ததும் பிடிச்சிருச்சு… உங்களை எவ்வளவு நல்லா பொறுமையா கவனிச்சுக்கிறார்… ஆளும் ஹாண்ட்சமா இருக்கார்… அவர் தங்கையா இருந்தா உங்க கிட்ட சொல்லி ஒரு அப்ளிகேஷன் போட்டு வைக்கலாமேன்னு பார்த்தேன்… நீங்க அவர்கிட்டே சொல்லறிங்களா… அவர்க்கும் என்னைப் பிடிச்சிருந்தா மத்த விஷயமெல்லாம் வீட்டுல வந்து பேசட்டும்…” ஆவலுடன் கேட்டாள் அவள்.
அவளை எரித்துவிடுவது போலப் பார்த்தாள் நிலா. அவளுக்கு  கன்னாபின்னாவென்று கோபம் வந்தது. சற்று நிதானித்தவள், “நீங்க போட்டிருக்கிற யூனிபார்ம்க்கு தகுந்த போல பேசுங்க… ஒரு நர்ஸ் இப்படில்லாம் தான் பேசுவாங்களா…”
“ஏன் நிலா… நர்சா இருந்தாலும் நாங்களும் பெண்தானே… எங்களுக்கும் ஆசாபாசமெல்லாம் இருக்கும் தானே… இதுல என்ன தப்பிருக்கு…”
“நோயாளியை கவனிச்சுகிற வேலையை விட்டுட்டு கூட வந்தவங்களை எல்லாம் ரொம்ப கவனிக்குறிங்க… இதெல்லாம் ஒரு நல்ல நர்ஸ் செய்யுற காரியமா… இதைப் பத்தி டாக்டர்கிட்டே கம்ப்ளைன்ட் பண்ணவா…”
“இங்க பாருங்க நிலா… எனக்கு அவரைப் பார்த்ததும் பிடிச்சது… உங்களுக்கு சொல்ல விருப்பம் இருந்தா சொல்லுங்க… இல்லைன்னா விடுங்க, இதுக்குப் போயி என்னவோ உங்க புருஷனை எனக்கு மாப்பிள்ளை கேட்ட போல குதிக்கறிங்க… ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்குப் புரியும்னு நினைச்சு பேசினேன் பாருங்க… என்னை சொல்லணும்…” என்றவள் ஏதோ வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே வெளியேறினாள்.
அவள் கேட்ட கேள்வியில் அப்படியே சிலையாக அமர்ந்திருந்தாள் நிலா.
உடனே கௌதமை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட வேண்டும் போலத் தோன்றியது. அவளுக்கு கோபம் அடங்கவே இல்லை. அன்று மாலை அவளைப் பரிசோதித்த டாக்டர், இரவு முழுதும் பார்த்துவிட்டு காலையில் டிஸ்சார்ஜ் செய்து கொள்ளுமாறு கூறிவிட்டார்.
அன்று இரவு ஏனோ அவளுக்கு உறக்கமே வரவில்லை… உறங்க முடியாமல் புரண்டு கொண்டிருந்தவள் மெல்ல எழுந்து அமர்ந்தாள். அருகில் சற்றுத் தள்ளி இருந்த கட்டிலில் கெளதம் காலைக் குறுக்கிக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தான். அவன் படுத்திருப்பதைக் கண்டு அவளது மனம் கலங்கியது.
கார்த்திக்கைப் பற்றி எந்த விஷயமும் தெரியாமல் எதற்காக இந்தக் காத்திருப்பு… அவளது மனது இலக்கில்லாமல் ஒவ்வொன்றாய் யோசித்துக் கொண்டிருக்க, தண்ணீர் பாட்டிலை எடுப்பதற்காய் கட்டிலில் இருந்து மெல்ல இறங்கினாள். அந்த ஓசையில் கண்விழித்த கெளதம், எழுந்துவிட்டான்.
“என்ன நிலா… ஏதாவது வேணுமா, என்னைக் கூப்பிட்டிருக்கலாமே…” கண்ணைத் தேய்த்துக் கொண்டே கேட்டவனைப் பாவமாய்ப் பார்த்தாள் அவள்.
“கெளதம்… நான் ஒண்ணு சொன்னா கேப்பிங்களா…”
“என்ன நிலா… என்ன சொல்லப் போறே… அதும் இந்த நேரத்துல…”
“அதுவந்து… கார்த்திக் பத்தி இன்னும் எந்த விவரமும் தெரியலையே… இனி அடுத்து என்ன பண்ணப் போறோம்… பேசாம என்னை எங்க வீட்டுல கொண்டு போயி விட்டுடறிங்களா… அவங்க என்னை அடிச்சு கொன்னாலும் பரவாயில்லை… நீங்களும் எத்தனை நாள் தான் எனக்காக இப்படி கஷ்டப்படுவிங்க…” சொல்லும்போதே அவளது கண்கள் கலங்கியது.
“அதெப்படி நிலா, கார்த்திக் இல்லாம நாம ஊருக்குப் போக முடியாது… உன்னைப் பத்தி ஊரே தப்பாப் பேசும்… கார்த்திக் வந்து கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்… தப்போ, சரியோ… இந்த விஷயத்துல இறங்கியாச்சு… கார்த்திக் வரும்வரை உன்னை பத்திரமாய்ப் பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு…”
“கார்த்திக் எப்ப வருவான்… எங்கே இருக்கான், எதுவுமே தெரியாம எப்படி கெளதம்… உங்களோட வாழ்க்கை எங்களால கெட்டுப் போகக் கூடாது… இல்லன்னா, ஒண்ணு பண்ணுங்க… என்னை ஏதாவது ஆஸ்ரமத்தில் சேர்த்து விட்டுடுங்க… கார்த்திக் வர்ற வரைக்கும் நான் அங்கிருக்கேன்…”
“என்ன பேசற நிலா… உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா… என்னோட தனியா இப்படி இருக்க வேண்டி இருக்கேன்னு வருத்தப்படறியா…”
“ச்சேச்சே… அப்படில்லாம் இல்லை… உங்களை நம்பாம நான் யாரை நம்புவேன்… கார்த்திக் பத்தி எதுவுமே தெரியாம, என்னோட நீங்களும் உங்க வாழ்க்கையை தொலைக்க வேண்டாம்னு தான் நான் அப்படி சொன்னேன்…”
“ம்ம்… அதைப் பத்தி எல்லாம் நீ யோசிக்காதே… கார்த்திக் உன் மேல உயிரையே வச்சிருக்கான்… அவன் வர முடியாத ஒரு சூழ்நிலைல மாட்டிகிட்டு இருக்கான்னு நினைக்கறேன்… இல்லன்னா கண்டிப்பா வந்திருப்பான்… அவன்கிட்டே உன்னை ஒப்படைக்கும் வரை, என்னைப் பத்தி நான் யோசிக்க மாட்டேன்… ஒண்ணு பண்ணலாம், உனக்கு கார்த்திக் வீட்டு லான்ட்லைன் நம்பர் தெரியுமா…”
“ம்ம்… தெரியும் கெளதம்… ஆனா,. நான் என்ன சொல்ல வர்றேன்னா……”
“நிலா… நீ எதுவும் சொல்லாதே… அந்த நம்பரை மட்டும் குடு… அவன் அம்மாகிட்டே நான் பேசறேன்… கண்டிப்பா அவன் அம்மாவை கூப்பிடாம இருக்க மாட்டான்… அவங்க கிட்டே நான் பேசிக்கறேன்… காதல் மேல எனக்கு பெருசா நம்பிக்கை இல்லை… ஆனா என் காரணமா அது தோத்துப் போகக் கூடாது… என் நண்பனின் காதலுக்காக நான் எதையும் சந்திக்கத் தயாரா இருக்கேன்…”
அவனையே ஒரு நிமிடம் மௌனமாய் பார்த்தாள் நிலா.
அவனுக்கு காதல் மீது நம்பிக்கை வர வேண்டும் என்று தானே அவள் கார்த்திக்குடன் வரும் முடிவையே எடுத்தாள். எனவே மறுத்துப் பேசாமல் நிறுத்திக் கொண்டாள்.
“சரி கெளதம்… நாம இனி என்ன பண்ணப் போறோம்… கார்த்திக் எப்போ வருவான்னு தெரியாம லாட்ஜ்ல ரூம் எடுத்துத் தங்கறதெல்லாம் ரொம்ப கஷ்டம்… செலவு வேற அதிகம் ஆயிடுச்சு… வருமானத்துக்கு என்ன வழி…”
“ம்ம்… யோசிப்போம் நிலா, நாளைக்கு உன்னை டிஸ்சார்ஜ் பண்ணினதும் யோசிப்போம்… நீ இப்ப தூங்கு…” என்றவன் படுத்துக் கொள்ள அவனையே பார்த்துக் கொண்டு படுத்திருந்த நிலா மெல்ல உறங்கிப் போனாள். அடுத்த நாள் அவளை டிஸ்சார்ஜ் செய்தது போக கையில் சிறிது பணம் மட்டுமே மிச்சம் இருக்க ஹாஸ்பிடலை விட்டு இருவரும் கிளம்பினர். ஆவலாய் கெளதமின் மீது படித்த நர்சின் பார்வையைக் கண்ட நிலாவின் கண்களில் கோபம் கொப்பளித்தது. அவளை முறைத்துக் கொண்டே கெளதமுடன் நடந்தாள்.
அன்னையிடம் உணர்ந்த அரவணைப்பு…
தந்தையிடம் உணர்ந்த பாதுகாப்பு…
அத்தனையும் மொத்தமாய் காண்கிறேன்…
அன்பான உன் அருகாமையில்…
முடிவில்லாத பயணமாய் என் வாழ்க்கை
வழியறியாத பாதையில் பயணிக்கிறேன்…
வழிப்போக்கனாய் உடன் வந்தவனே
வலியை நீக்கும் வழி உன்னிடமோ…
அன்னையை துயர் கொள்ள வைத்தேன்…
அழுதழுது இன்று ஏங்குகிறேன்…
தலையணையை தாயின் மடியாய்
நினைத்துக் கதறினாலும் கிடைக்கவில்லை
என் தாயின் ஆறுதலான தலை வருடல்…
கருவறையில் சுமந்திட்ட – உன்
கனவை எட்டி உதைத்திட்டேன்…
பொத்தி வளர்த்த உன்னை ஒரு நொடியில்
தூக்கி எறிந்து விட்டேன்…
தாயைப் பிரிந்த தனிப் பறவையாய்
தணலில் வெந்து துடிக்கிறேன்…
என் மையல் தெளிய காலம் செய்த சதியோ…
உன் காவலில் நான் இருப்பதுவும் சரியோ…
காலத்திடமே என் கேள்வியை வைத்து
காத்திருக்கிறேன் கண்ணீருடன்…
   

Advertisement