Advertisement

நிலா – 15
இரவு உணவு முடிந்து கெளதம் அவனது அறைக்கு சென்றிருக்க, உறக்கம் வராமல் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தாள் நிலா. அசதியில் உடலெல்லாம் வலித்தாலும், கண்ணை மூட விடாமல் எதிர்காலம் அவளை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. மங்கலாய் ஒளிர்ந்து கொண்டிருந்த இரவு விளக்கின் ஒளி அறையின் இருட்டை விரட்டினாலும் அவளது மனம் கார்த்திக்கின் நினைவில் இருண்டே கிடந்தது.
“கார்த்திக், நீ எங்கடா போனே… உனக்காக வீட்டை விட்டு வந்து இப்போ நானும், கௌதமும் துரோகிகளா நிக்குறோம்… உனக்கு என்ன ஆச்சு, ஏன் இன்னும் எங்களை காண்டாக்ட் பண்ணலை… ஏதாவது பிரச்சனையா, எதுவுமே புரியாம நாங்க தவிப்போம்னு உனக்குத் தெரியாதா… இப்ப அடுத்து என்ன பண்ணுறதுன்னு தெரியாம இங்க வேற ரூம் எடுத்து… ச்சே…” யோசித்துக் கொண்டே போனவளின் கண்கள் நிற்காமல் கண்ணீரை சுரந்து கொண்டிருந்தன.
புதிய சூழ்நிலை… பழக்கமில்லாத இடம்… தனிமை எல்லாம் சேர்ந்து அவளை மிகவும் அச்சுறுத்தியது. அவளுக்கு இப்படி லாட்ஜில் எல்லாம் தங்கி பழக்கமே இல்லை. காற்றில் அசையும் திரைசீலைக்குப் பின்னில் கூட யாரோ நிற்பதுபோல அச்சம் தோன்றி மனதை வதைக்க கண்ணை இறுக மூடிக் கொண்டாள்.
அன்னையின் குரல் மனதுக்குள் ஒலித்து அவளைக் குற்றப் படுத்தியது… கதிரின் கோபமான முகம் அவளை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி கேள்வி கேட்டது… சுதாகரின் அருவறுப்பான பார்வை அவள் மனதை பொசுக்கியது… ஊர் மக்கள் எல்லாம் ஒன்றாய் நின்று அவளைக் கேவலமாய் பேசுவது போலத் தோன்றியது… தூங்க முடியாமல் கண்ணைத் திறந்து எழுந்து அமர்ந்தாள் நிலா.
அவளது பிறை நெற்றியில் பொடிப்பொடியாய் வியர்த்திருக்க, அருகில் இருந்த தண்ணீர் ஜக்கை எடுத்து வாயில் கவிழ்த்துக் கொண்டாள். உறக்கம் வருவேனா என அடம்பிடிக்க, அழுது சோர்ந்த விழிகள் பயங்கரமாய் எரிந்தது. உடலெல்லாம் கனப்பது போல இருக்க, சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்தாள். ஒரே இரவில் தான் அநாதையாகிப் போனது போல் உணர்ந்தாள்.
எங்கேயோ நாய் ஒன்று ஊளையிடும் சத்தம், நிசப்தமான அந்த இரவைக் கலைத்தது. தூங்க முடியாமல் எழுந்தவள் ஜன்னலைத் திறந்து திரைசீலையை விலக்கி வெளியே பார்த்தாள். இரவுக்காற்று ஈரத்தை சுமந்து கொண்டு முகத்தில் மோதியது. சற்று தூரத்தில் தெரிந்த பேருந்து நிலையத்தை வெறித்துக் கொண்டு நின்றவளுக்கு தலைவலி தாங்க முடியாமல் கண்ணில் இருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது. ஜன்னலை சாத்திவிட்டு மீண்டும் கட்டிலுக்கு வந்தவள், வலி தாங்க முடியாமல் அழுது கொண்டே படுத்திருந்தாள். கஷ்டப்பட்டு இரவைக் கழித்தவள் விடியலில் தன்னை மீறி உறங்கிப் போனாள்.
காலையில் குளித்துவிட்டு நிலாவின் அறைக்கு வந்து அழைப்பு மணியை அழுத்தினான் கெளதம். வெளிர் நீல நிற ஜீன்சும் அடர் நீல டிஷர்ட்டும் அணிந்திருந்தான். சிகையை அழகாய் கையால் ஒதுக்கி விட்டவன், நிலாவின் தரிசனத்திற்காய் கதவைப் பார்த்து நின்றான்.
அவள் கதவைத் திறக்காததால் மனதுக்குள் சட்டென்று ஒரு அச்சம் பரவியது. பிறகு, “ஒருவேளை, குளிச்சிட்டு இருப்பாளோ… சரி, கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுவோம்…” என நினைத்தவன், கீழே ரிசப்ஷனுக்கு சென்றான்.
“ஒரு கால் பண்ணனும்… லான்ட்லைன் யூஸ் பண்ணிக்கலாமா…”
“இந்தாங்க சார், பண்ணிக்கங்க…” என்றவன், தொலைபேசியை இவனிடம் நகர்த்தினான். ரிசீவரை எடுத்து கார்த்திக்கின் அலைபேசி எண்ணிற்கு அழைத்தான்.
ஒரு பீப் ஒலிக்குப்பிறகு ஒலிக்கத் தொடங்கிய போன் முழுதும் அடித்து ஓய்ந்தது. திகைத்தவன், மீண்டும் ரீடயலை அழுத்தினான்.
இப்போது மீண்டும் ரிங் போய் எடுக்கப்பட்டு எதிர்ப்புறம் ஹலோவியது.
“ஹலோ… யாருங்க…”
“ஹ…ஹலோ, இது கார்த்திக் நம்பர் தானே… நீங்க யாரு…” குரல் புதியதாய் இருக்கவே கெளதம் கேட்டான்.
“ஹலோ, நீங்க யாருங்க… அதை முதல்ல சொல்லுங்க…”
“நான் கார்த்திக்கோட பிரண்டு… பேரு கெளதம்… கார்த்திக்கு என்னாச்சு, இது அவனோட போன் தானே… அவன் எங்கே…” பதட்டத்துடன் கேட்டான்.
“அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க… இந்த போன் சேலம் பஸ்டாண்டுல ஆப் ஆகிக் கீழ கிடந்துச்சு… சார்ஜர்ல போட்டேன்., யாராவது கேட்டு போன் பண்ணா கொடுக்கலாம்னு நினைச்சேன்… இது உங்க பிரண்டு போன்னு சொல்லுறிங்க… அவரை வந்து வாங்கிக்க சொல்லுங்க, நான் பஸ் ஸ்டேண்ட் முன்னாடி பூக்கடைல இருப்பேன்… என் பேரு முருகன்… சரி வச்சிடறேங்க…” என்றவர் அலைபேசியை அணைத்து விட்டார்.
யோசனையுடன் நெற்றியை சுளித்தான் கெளதம்.
“கார்த்திக் மொபைலைத் தவற விட்டு விட்டானா… இப்போது என்ன செய்வது., அவனை எப்படித் தொடர்பு கொள்வது… அவன் நேற்று புறப்பட்டு இன்னுமா வந்து சேர்ந்திருக்க முடியாது… ஒருவேளை, என் மொபைல் நம்பருக்கு அழைக்க முடியாமல் தவிக்கிறானோ… அந்த சிம்மை வேறு கழற்றி விட்டோமே… ஆன் பண்ணினால் ஏதும் பிரச்சனை ஆகிவிட்டால்…” குழப்பத்துடன், ரிசப்ஷனில் இருந்தவனுக்கு நன்றி கூறிவிட்டு, மாடி ஏறினான்.
மீண்டும் நிலாவின் அறைக்கு முன்னில் நின்றவன் அழைப்பு மணியை அழுத்தினான். சிறிது நேரத்திற்குப் பிறகு மெல்லக் கதவு திறந்தது.
கதவுக்குப் பின்னால் சோர்வுடன் நின்று கொண்டிருந்த நிலாவைக் கண்டதும் அதிர்ந்து போனான் கெளதம். எழுந்திருக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு எழுந்து வந்து கதவைத் திறந்திருந்தாள். கண்கள் வீங்கியிருக்க, உதடுகள் உலர்ந்து, தலை முடியெல்லாம் கலைந்து, எத்தனையோ நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தவளைப் போல நின்று கொண்டிருந்தாள்.
“எ…என்னாச்சு நிலா, ஏன் இப்படி இருக்கே… உடம்பு சரியில்லையா…”
“மு…முடியல கெளதம், தலை வலிக்குது…” கூறிக் கொண்டே தடுமாறியவளைத் தாங்கிக் கொண்டவன், அவளது கையைப் பிடித்துக் கூட்டி வந்து கட்டிலில் அமர்த்தினான்.
“நேத்து நல்லா தானே இருந்த… கையெல்லாம் சுடுது…” என்று அவள் நெற்றியிலும் கை வைத்துப் பார்த்தான். நல்ல சூடு இருந்தது.
“சரி… நீ படுத்துக்கோ… நான் ரிஷப்ஷன்ல ஏதாவது டாக்டரைப் பத்தி விசாரிக்கறேன்…”
“வேண்டாம் கெளதம்… ப்ளீஸ், என்னை தனியா விட்டுட்டுப் போகாதீங்க… எ…எனக்கு பயமாருக்கு…” சோர்வுடன் வந்து விழுந்தன அவளது வார்த்தைகள்.
“இப்படி சொன்னா எப்படி நிலா… டாக்டர் பார்க்காம எப்படி… சரி, நீ ஜாக்கிரதையா இரு… நான் மெடிக்கல்ல போயி எதாவது காய்ச்சல் மாத்திரை வாங்கிட்டு வரேன்…”
“நா…நானும் வரேன்… என்னைத் தனியா விட்டுப் போகாதீங்க…” குழந்தையாய் அடம் பிடித்தாள் அவள்.
“என்ன நிலா… நீ ரொம்ப சோர்வா இருக்கே, எப்படி வருவே… கொஞ்ச நேரம் படுத்திரு… நான் சீக்கிரம் வந்திடறேன்…” என்றவன், “நான் வர்ற வரைக்கும் தூங்கிடாதே… சரியா…” என்றுவிட்டு வெளியேறினான்.
ரிசப்ஷனில் விசாரித்தவன், மருந்துக்கடைக்கு சென்று மாத்திரையை வாங்கிக் கொண்டான். ஒரு ஹோட்டலில் இட்லியும் தண்ணீரும் வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினான்.
வெறுமனே சாத்தியிருந்த கதவைத் திறந்து கொண்டு அவன் உள்ளே வர உறங்காமல் படுத்திருந்தவள், திடுக்கிட்டு எழுந்தாள். கெளதமைக் கண்டதும் கண்கள் சமாதானமாக சோர்வுடன் அமர்ந்தாள்.
“நிலா… எழுந்திரு… வந்து பிரஷ் பண்ணிட்டு இந்த இட்லியை சாப்பிடு…”
“இ…இல்ல… தலை ரொம்ப வலிக்குது… எனக்கு ஒண்ணும் வேணாம்…” அவளுக்கு வேதனையில் கண்ணீர் வழிந்தது.
“சாப்பிட்டா தான் தலை வலி மாறும்… நேத்து பூரா அழுதிட்டே இருந்தியா… அதான் தலைவலியோட காய்ச்சலும் வந்திருக்கு… போயி பிரஷ் ஆகிட்டு வா…”
“ம்ம்…” மெதுவாய் எழுந்து குளியலறைக்குள் நுழைந்தாள் அவள். சிறிது நேரத்தில் வெளியே வந்தவள் கட்டிலில் அமர்ந்தாள். அவளை வற்புறுத்தி இரண்டு இட்லியை சாப்பிட வைத்தான் கெளதம்.
“நீங்க சாப்பிட்டிங்களா கெளதம்…” அவளுக்கு முடியாத நிலையிலும் அவனைப் பற்றி அவள் விசாரித்ததில் மனம் நெகிழ்ந்து போனான்.
“நீ சாப்பிடும்மா… நான் சாப்பிடறேன்…” என்றவன் அவள் சாப்பிடும் வரை காத்திருந்து மாத்திரையைக் கொடுத்தான். அதைக் குடித்துவிட்டு அவளைப் படுத்துக் கொள்ள சொன்னான். அவன் இருக்கும்போது படுத்துக் கொள்ள கூச்சமாக இருக்கவே அவள் தயங்கினாள்.
“நான் அப்புறம் படுத்துக்கறேன்… நீங்க முதல்ல சாப்பிடுங்க…”
அவள் தயக்கத்தைப் புரிந்து கொண்டவன், “நான் என் ரூம்ல சாப்பிடறேன்… நீ கொஞ்சம் தூங்கு நிலா…” என்றான்.
“வே…வேண்டாம்… கெளதம், நீங்க இங்கயே இருங்க… நான் படுத்துக்கறேன்…” என்றவள் கட்டிலில் ஓரமாய் போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்துக் கொண்டாள். அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாய்ப் படுத்திருந்தவள், அவன் கை கழுகி வந்ததும் கேட்டாள்.
“கெளதம்… கார்த்திக் பத்தி ஏதாவது தெரிஞ்சதா…”
“ம்ம்… கார்த்திக் மொபைலை சேலம் பஸ் ஸ்டேண்டுல மிஸ் பண்ணி இருப்பான் போலருக்கு… ஒரு பூக்கடை வச்சிருக்கிற முருகன் கிட்டே அவனோட மொபைல் இருக்கு… கார்த்திக்கை வந்து வாங்கிக்க சொல்லுங்கன்னு சொன்னார்…”
“ஓ… அப்போ நீங்க மெசேஜ் அனுப்பினது கார்த்திக்கிற்கு தெரியாதே… அவன் எப்படி நம்ம கிட்டே வருவான்…”
“ம்ம்… அதான் எனக்கும் தெரியலை நிலா… சரி, உனக்கு முதல்ல காய்ச்சல் சரியாகட்டும்… அப்புறம் இதைப் பத்தி யோசிக்கலாம்… நல்லா தூங்கினா தான் காய்ச்சல் விடும்… நீ தூங்கு… நான் என் ரூமுக்குப் போறேன்… மதியம் இதைப் பத்தி யோசிப்போம்…”
“ப்…ப்ளீஸ் கெளதம்… என்னைத் தனியா விட்டுட்டுப் போகாதிங்க… இங்கயே இருங்க, எனக்கு இப்படில்லாம் இருந்து பழக்கம் இல்லை… ரொம்ப பயமா இருக்கு… அதான் நைட் தூக்கமே வரலை… ப்ளீஸ் போகாதிங்க…” கெஞ்சினாள்
கௌதமின் மனதுக்குள், வேறு ஒரு எச்சரிக்கை மணி அடித்தது. ஒரே அறையில் இருவரும் தங்குவது வேறு ஏதாவது பிரச்சனையை இழுத்துவிட்டால்…
“நிலா… இது லாட்ஜ், நாம ரெண்டு பேரும் ஒரே அறையில் தங்க முடியாது… நான் வேணும்னா உன் அறையை வெளியே பூட்டிட்டுப் போறேன்… வேற யாரும் வர மாட்டாங்க… நீ நிம்மதியா தூங்கு… நான் மதியம் வந்து உன்னைப் பார்க்கறேன்…”
அவன் ஏன் அப்படி சொல்கிறான் என்று அவளுக்கும் புரிந்தது. எத்தனை சினிமாவில் பார்த்திருக்கிறாள். போலீஸ் ரெய்டு ஏதும் வந்து பிரச்சனை ஆகிவிடுமோ என்று அவன் பயப்படுகிறான் என அவளுக்கும் புரிந்தது.
“ம்ம்… சரி…” என்று அரைகுறை மனதோடு தலையாட்டினாள்.
“சரி… நீ படுத்துக்க… நான் வெளியே பூட்டிட்டுப் போறேன்… நீ உள்ளே லாக் பண்ண வேண்டாம் சரியா…”
“ம்ம்…” என்றவள் படுத்துக் கொள்ள, அவன் வெளியே கதவைப் பூட்டிவிட்டு அவனது அறைக்கு சென்றான்.
ஆனாலும் அவளுக்கு அந்தத் தனிமை பயமாகவே இருந்தது. தலைக்குள் இடி இடிப்பது போல தலைவலி உயிரை வாங்கியது. கண்களை மூட முடியாமல் கார்த்திக்கும், சம்பவங்களும் அவளைத் துரத்தின. கெளதம் அங்கிருக்கும் வரை அமைதியாய் இருந்த மனது தனிமையில் ஏதேதோ நினைத்துக் குழம்பியது.
தலை வலி தாங்க முடியாமல் எழுந்தவள், டவலை தண்ணீரில் நனைத்து தலையில் இறுகக் கட்டிக் கொண்டாள். சற்று சுகமாய் இருந்தது. ஆனாலும் உறக்கம் வரவில்லை.
ஏதேதோ நினைத்து அவசரப்பட்டு செய்த செயல்கள், அடுத்த நிமிட வாழ்வின் நிலையில்லாமையை உணர்த்த, அவளது மனது, குற்றப் படுத்திக் கொண்டே இருந்தது.
உடல் சோர்வும், நடந்த சம்பவங்களில் குறைந்திட்ட மன பலமும் அவளை அமைதியிழக்கச் செய்தன. உறங்காமல் புரண்டு கொண்டே படுத்திருந்தவளுக்கு காய்ச்சலும் அதிகமாகவே செய்தது. மதியம் கண்ணைத் திறக்கவே முடியாமல் அனத்திக் கொண்டு படுத்திருந்தாள்.
பனிரெண்டு மணிக்கு காப்பியும் ரொட்டியும் வாங்கிக் கொண்டு அவளது அறைக்கு வந்தான் கெளதம். அவன் கதவைத் திறந்தது கூடத் தெரியாமல் அனத்திக் கொண்டு படுத்திருந்தாள் நிலா. அவளது மயங்கிய நிலையைக் கண்ட கெளதம் பதறிப் போனான்.
மருத்துவமனையில் நிறைந்திருந்த மருந்து வாசமும் டெட்டால் வாசமும் நாசியை வருட, மெதுவாய் கண்ணை விழித்தாள் நிலா. அவளுக்கு அருகில் வெள்ளைக் கோட்டுடன் டாக்டர் ஒருவர் நின்றிருக்க, அவளுக்கு அருகில் வெள்ளை யூனிபார்மில் நின்று கொண்டிருந்தாள் நர்ஸ்.
ஒரு கையில் குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருக்க, மறு கையில், டாக்டர் அவளது நாடியைப் பரிசோதித்து முடிக்கவும், நர்ஸ், ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்தாள்.
அவர்களுக்கு அருகில் நின்று வருத்தம் தோய்ந்த விழிகளுடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான் கெளதம். நிலாவுக்கு காய்ச்சல் அதிகமாகி இருக்க, அவளை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தான் கெளதம். அவளைப் பரிசோதித்த டாக்டர், ஹாஸ்பிடலில் அட்மிட் செய்துவிட்டார். அப்போது அவர் போட்ட ஊசிக்கு உறங்கத் தொடங்கியவள், மாலையில் அவர் மீண்டும் பரிசோதிக்க வரும்போது தான் கண் விழித்தாள்.

Advertisement