Advertisement

“நிலா… பயப்படாதே… கார்த்திக் என்னை நம்பினான்… நீயும் என்னை நம்பற தானே…”
“ம்ம்…” மௌனமாய் தலையாட்டியவளின் மனது, “உன்னை மட்டும் தான் நம்புறேன் கெளதம்…” என்றது. தன் மனதுக்குள் ஒலித்த குரலைக் கேட்டு சட்டென்று திகைத்தாள் நிலா.
அவனுக்கு அருகில் இருக்கையில் அவளுக்கு எதிர்காலத்தைக் குறித்த யோசனை மட்டுமே இருந்தது… தன் பாதுகாப்பை கெளதம் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் எந்தக் குறைவும் இல்லை… அது அவளுக்கே அதிசயமாய் தோன்றியது.
அவன்மீது அவள் எத்தனையோ கோபப்பட்டிருக்கிறாள்… ஆனாலும், அவன் அருகாமையில் மனதுக்குள் தோன்றும் பாதுகாப்புணர்வு அவளுள் வியப்பை விதைத்தது.
“சொல்லு நிலா, நீ என்னை நம்புகிறாயா…” ஆண்மை நிறைந்த குரல் மறுபடியும் அவள் செவிகளை உரச, நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தாள்.
அந்த விழிகளில் என்ன கண்டாளோ… ஆனால், அவள் மனதில் ஒரு நிதானம் தோன்ற அந்தப் பார்வை போதுமாய் இருந்தது.
“ம்ம்… நம்பறேன் கெளதம்…” அவளது உதடுகள் அவனது முகத்தை நோக்கி உதிர்த்த வார்த்தைகள் அவனுக்குள் இருந்த சோர்வை எல்லாம் விரட்டியடிக்க, அவன் முகத்தில் சிறு புன்னகை மலர்ந்தது. அதை வியப்புடன் தன் விழிகளுக்குள் சேகரித்துக் கொண்டாள் நிலா.
அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கத் தொடங்கியவன் எழுந்தான்.
“நிலா… இருட்டாகப் போகுது… இனி இங்கே கார்த்திக்கிற்காய் காத்திருந்து பயனில்லை… நாம ராத்திரி தங்கறதுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணுவோம்…. அவன் மொபைல் ஆன் ஆகும்போது என் நம்பருக்குக் கூப்பிடுவான்… சரி வா, நாம போகலாம்…” என்றவன் எழுந்து நடந்தான்.
மனது கணக்குப் போட்டுக் கொண்டே வந்தது. கையில் இருக்கும் தொகை அதிகம் இல்லை. கார்த்திக்கிடம் கொடுப்பதற்காய் ஒரு தொகையைக் கொண்டு வந்திருந்தான். யோசித்துக் கொண்டே பேருந்து நிலையத்துக்கு வெளியே வந்தனர். நிலா அமைதியாய் அவனைத் தொடர்ந்தாள்.
ரோட்டைக் கிராஸ் பண்ணுவதற்காய் அவன் நிற்க, அவன் அருகில் அவளும் நின்றாள். அவன் திட்டிவிடுவானோ என்று பயந்து கொண்டே வண்டிகளைப் போகவிட்டு கிராஸ் பண்ணத் தயங்கி நின்று கொண்டிருந்தாள் அவள்.
ரோட்டைக் கிராஸ் செய்து எதிர்ப்புறம் சென்று திரும்பிப் பார்த்த கெளதம், அவள் அங்கேயே நின்று கொண்டிருப்பதைப் பார்த்துத் திரும்ப ஓடி வந்தான்.
“நிலா… என்ன இது, வண்டியே இல்லை… கிராஸ் பண்ணாமல் அப்படியே நின்று கொண்டிருக்கிறாய்… சீக்கிரம் வா…” என்று அவளது கையைப் பிடித்து அழைத்துச் சென்றான். “நல்லவேளை… இவன் திட்டவில்லை…” என நினைத்துக் கொண்டே அவனுடன் நடந்தாள் நிலா.
இரவினை பகலாக்கும் முயற்சியில் தெருவெங்கும் ஒளிர்ந்து கொண்டிருந்த தெருவிளக்குகள்… வேகவேகமாய் சாலையில் பல தேவைகளுக்காய் பாய்ந்து கொண்டிருந்த இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள். யாருக்கும் பொறுமையின்றி வேகமாய்ப் பறந்து கொண்டிருந்தனர். அதையெல்லாம் எப்போதும் வேடிக்கை பார்க்கும் நிலாவின் கருத்தில் இன்று அது எதுவும்  பதியவில்லை.
“பாலாஜி ரெசிடென்ஸ்…” என்று பொன்னிற எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு நியான் விளக்கில் மின்னிக் கொண்டிருந்த அந்த மத்தியதர, லாட்ஜுக்குள் நுழைந்தனர். ரிசப்ஷனில் இருந்த இளைஞன், குனிந்து லெட்ஜரில் எதையோ எழுதிக் கொண்டிருந்தான். இவர்களைக் கண்டதும் நிமிர்ந்தான்.
“வாங்க சார்…” பவ்யமாய் வரவேற்றான்.
நிலாவுக்கு அந்த சூழல் புதியதாய் இருந்தது. அந்த இளைஞனின் பார்வை அவர்கள் இருவரையும் மாறி மாறித் துளைத்தது. திருதிருவென்று முழித்துக் கொண்டு நின்ற நிலாவுக்கு உடலெல்லாம் கூசுவது போலத் தோன்றியது. தர்மசங்கடமாய் நின்று கொண்டிருந்தாள்.
அதை கெளதம் கவனித்துவிட்டான்.
“நிலா… நீ அந்த சோபாவில் போயி உக்காரு…” என்று சோபாவைக் காட்டிய கெளதம், அவள் நகர்ந்ததும் அந்த இளைஞனிடம் பேசினான்.
“ரெண்டு சிங்கிள் ரூம் வேணும்….” தயக்கமாய் வந்தது கௌதமின் வார்த்தைகள்.
“ம்ம்… சரி சார்… 24 ஹவர்ஸ் செக் அவுட் இருக்கு… உங்களுக்கு எத்தனை நாளைக்கு ரூம் வேணும்…”
“ஒரு நாள் போதும்…”
“ஓகே… அவங்க யாரு…”
“அவங்க என் பிரண்டு… ஒரு வேலை விஷயமா வந்திருக்கோம்… ரெண்டு ரூமும் அடுத்தடுத்த ரூமா குடுத்திருங்க…” என்றான் கெளதம்.
“ஓகே… உங்க அட்ரஸ், சொல்லுங்க…” என்றவன் கெளதம் சொல்லுவதைக் குறித்துக் கொண்டு அட்வான்சாக ஒரு தொகையை வாங்கிவிட்டு சாவியை அவனிடம் கொடுத்தான்.
அவர்களின் இரண்டு பாகை எடுத்துக் கொண்டு ரூம் பாய், அங்கிருந்த மாடிப் படியில் ஏறத் தொடங்க, நிலாவை அழைத்துக் கொண்டு அவனுக்குப் பின்னால் நடந்தான் கெளதம். மானின் மருண்ட பார்வையோடு மங்கையவள் செல்ல, மனதுக்குள் இனம் புரியாத பயம் ஒன்று பந்தாக உருளத் தொடங்கியது. ரூம் பாய் அறையைத் திறந்து அவர்களின் பாகை வைத்துவிட்டு நின்றான்.
“ஏதாவது வேணும்னா இண்டர்காம்ல கூப்பிடுங்க சார்…” என்றுவிட்டு நகர்ந்தான்.
அறைக்குள் நுழையாமல் வராண்டாவிலேயே தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தவளின் மனநிலையை அவள் முகமே உணர்த்த கௌதமிற்கு நிலாவைக் கண்டு பரிதாபமாய் இருந்தது.
அவளது அறைக்குள் முதலில் நுழைந்தவன், ரூம் முழுவதும் பார்வையை ஓட்டினான். ஒற்றைக் கட்டிலின் மெத்தையின் மீது வெண்ணிற விரியும் பெட்ஷீட்டும் சுத்தமாய் விரித்து வைக்கப் பட்டிருந்தது. சுவரில் LED TV பதிக்கப் பட்டிருக்க அதற்கு அருகில் ஒரு சுவர் அலமாரியும் டீப்பாயும், ஒரு நாற்காலியும் இருந்தது. ஒரு ஆளுக்கு அந்த அறையில் இருந்த வசதிகள் தாராளமாய் போதும். அடுத்து குளியலறையைத் திறந்து பார்த்தான். அதுவும் நீட்டாக இருந்தது.
நிலா வெளியிலேயே ஒருவித தயக்கத்துடன் நின்று கொண்டிருக்க, அவளிடம் வந்தவன், “நிலா ஒரு நிமிஷம் நீ அங்கேயே நில்லு…” என்றுவிட்டு கதவை சாத்தினான். அவளுக்குப் புரிந்தது. “காமிரா பயம்… அறையில் ஏதாவது காமிரா மறைத்து வைக்கப்பட்டுள்ளதா…” என அவன் பரிசோதிக்கப் போகிறான் என்று.
ஜன்னல் எல்லாம் சாத்தப்பட்டிருக்க, சூரிய ஒளியோ எந்த வெளிச்சமோ உள்ளே வரவில்லை… அவனது அலைபேசியை உயிர்ப்பித்தவன், ஒளிர்ந்து கொண்டிருந்த லைட்டையும் அணைத்துவிட்டு அலைபேசியில் இருந்த காமிராவை இயக்கினான். அடுத்து குளியலறைக்கும் சென்று அதே போல் செய்தான். எந்த மாற்றமும் இல்லை. மறைவாக காமிரா எங்காவது பொருத்தப்பட்டிருந்தால் அவனது அலைபேசிக் காமிராவில் ஒளிரும் சிறு சிவப்பு ஒளியை வைத்துக் கண்டு பிடித்துவிடலாம்… பரிசோதித்து முடித்தவன், லைட்டை ஒளிர வைத்து கதவைத் திறந்து நிலாவிடம் வந்தான்.
“நிலா… எல்லாம் செக் பண்ணிட்டேன்… பயப்படாம உள்ளே வா…” அவள் அப்போதும் பயத்துடனே வந்து தலையைக் குனிந்து கொண்டு நிற்க, அவனுக்கு சங்கடமாய் இருந்தது.
“நிலா… வருத்தப் படாதே, எல்லாம் சரியாகும்… இன்னைக்கு இப்படில்லாம் நடக்கணும்னு நம்ம தலைல எழுதி இருக்கு… மனசைத் தளர விடாதே… நாளை கார்த்திக் வந்திருவான்னு நம்புவோம்… போயி குளிச்சு பிரஷ் ஆகிட்டு வா… சாப்பிட ஏதாவது கொண்டு வர சொல்லறேன்… நான் பக்கத்துக்கு ரூமில் தான் இருப்பேன்… பயப்படாம இரு, சரியா…”
ஒரு குழந்தையிடம் சொல்லுவதைப் போல அவன் பொறுமையாக சொல்லுவதைக் கேட்டு அவள் மௌனமாய் தலையாட்டினாள். இத்தனை நேரம் அவனது கோபத்துக்கு பயந்து அழுகையை அடக்கி வைத்திருந்தவளின் மனது, அவனது அன்பான அக்கறையான பேச்சைக் கேட்டதும் கண்ணில் நீர் நிறைந்து கன்னத்தில் வழியத் தொடங்கியது.
“நிலா… என்ன இது, இவ்ளோ நேரம் தைரியமா இருந்துட்டு இப்ப இப்படி அழுதா எப்படி… கண்ணைத் துடைச்சுக்கோ… பயப்படாதே, கார்த்திக் வந்த வண்டில ஏதும் பிரச்சனையோ என்னவோ… நாளைக்கு கண்டிப்பா வந்திருவான்…”  அவளது கண்ணீர் அவனது மனதில் வலியைக் கொடுக்க பதறினான். அவள் கண்ணைத் துடைத்துக் கொண்டாலும் மீண்டும் நிக்காமல் வழிந்தது கண்ணீர்.
“இ…இல்ல கெளதம்… நா…நான் அவசரப் பட்டுட்டேன்… கார்த்திக் சொன்னதும் எதைப் பத்தியும் யோசிக்காம வீட்டை விட்டு வந்தது ரொம்பத் தப்பு… அதுவும் உங்களை இந்த சிக்கல்ல மாட்டி விட்டது ரொம்பப் பெரிய தப்பு… எங்களோட காதலுக்கு நாங்க கஷ்டப்பட்டா பரவாயில்லை… உங்களை எதுக்கு கஷ்டப் படுத்தணும்… உங்களுக்குன்னு இருந்தது அப்பா மட்டும்… இப்ப அவருக்கும் எத்தனை மனசங்கடம்… ஆல்ரெடி உங்க அம்மா பண்ணின தப்புக்காக எவ்ளோ வேதனைப்பட்டார்னு எனக்குத் தெரியும்… இப்போ உங்களையும் அதே கண்ணோட்டத்துல தானே பார்க்குறார்…” அவள் தேம்பிக் கொண்டே கூறினாள். அவனுக்காக அவள் எதற்கு இத்தனை வருத்தப்படுகிறாள் என்று அப்போது அவளுக்குத் தோன்றவில்லை.
“ஹேய்… நிலா, என்ன இது… எதுக்கு இப்படில்லாம் பேசறே… கார்த்திக் என் உயிர் நண்பன்… அவனுக்காக தானே நான் இதெல்லாம் செய்தேன்… என்ன, நடுவுல விதி விளையாடுனதுல எல்லாம் கொஞ்சம் ஸ்லிப் ஆயிடுச்சு… நீ கவலைப் படாதே, கார்த்திக் வந்தா எல்லாம் சரியாகிடும்… அழாதே ப்ளீஸ்…” என்றான் கெளதம் வேதனையுடன்.
“இல்ல கெளதம், இப்ப உங்களுக்கும் கெட்ட பேரு… நீங்க கண்டிப்பா நம்ம ஊருக்குத் திரும்பிப் போக முடியாது… எல்லாம், என்னால தான்… கார்த்திக் காதலை சொன்னபோது நான் ஒத்துகிட்டதே தப்பு… இதெல்லாம் ஒத்து வராதுன்னு நீங்க எவ்ளோ சொல்லியும் உங்க பேச்சைக் கேட்கக் கூடாதுன்னு திமிர்ல நான் அவன்கிட்டே ஓகே சொன்னதுக்கு இப்போ தண்டனையை அனுபவிக்கறேன்… நான் ரொம்பப் பெரிய தப்பு பண்ணிட்டேன்…” என்றவள் தேம்பி அழத் தொடங்கினாள்.
அவளை என்ன சொல்லித் தேற்றுவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான் கெளதம்.
“நிலா… போதும், ப்ளீஸ்… எனக்கு கஷ்டமா இருக்கு… நடந்ததை யாராலயும் மாத்த முடியாது… இனி நடக்க வேண்டியதைப் பத்தி யோசிப்போம்… நீ குளிச்சு, சாப்பிட்டு நல்லா தூங்கு… காலைல மனசுக்கு தெம்பா இருக்கும்…”
“ம்ம்…” என்றவளின் கண்ணில் இருந்து மீண்டும் உற்பத்தியான கண்ணீர் அவனுக்கு இதயத்தில் குருதியை வரவழைத்தது. எப்போதும் அவனை சீண்டிக் கொண்டே, கோபத்துடன் வலம் வருபவள், இன்று இப்படி அழுவது மனதைப் பிசைந்தது. பாக்கெட்டில் இருந்த கைக்குட்டையை எடுத்து அவனே அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டான்.
“நிலா… என்னைப் பத்தி நீ யோசிக்காதே, நீ விரும்பி வந்த வாழ்க்கை இது… உன்னை கார்த்திக்கோட சேர்த்து வைச்சு உங்க மனசுப்படி வாழ வச்சிட்டு தான் நான் என்னைப் பத்தி யோசிப்பேன்… அதுவரை உனக்குத் துணையா நான் இருப்பேன்… உன்னை விட்டு போக மாட்டேன், பயப்படாம போயி தூங்கு மா…”
“ம்ம்… தேங்க்ஸ் கெளதம்…” என்றவளின் கையில் தட்டிக் கொடுத்து, “நீ போயி பிரெஷ் ஆகு நிலா… நான் அடுத்த ரூம்ல தான் இருக்கேன்… ஏதாவது வேணும்னா ஒரு குரல் கொடு சரியா…” என்றவன் அவனது அறைக்கு சென்றான்.
மாற்றுத் துணியுடன் டவலை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள் நிலா. ஷவரில் இருந்து செயற்கை மழை, தூறலாய் சில்லென்று மேனியைத் தழுவிக் கொண்டு வழிந்தோடியது தண்ணீர். அதில் சிறிது நேரம் அப்படியே நின்றவளின் மனது அவளையே குற்றப் படுத்தி அரற்றிக் கொண்டிருந்தது.
“கடவுளே, என்ன சோதனை இது… கார்த்திக் எங்கே சென்றான்… அவனுக்கு என்னவாயிற்று… இப்போது இப்படி ஒரு சூழலில் இங்கே தங்குவதெல்லாம் எதற்காக… என் தலையில் விதி என்ன என்னதான் எழுதி வைத்திருக்கிறது…”
“அம்மா, எனக்காக நீங்கள் துடிச்சுகிட்டு இருப்பிங்களே… என் மீது நீங்க வைத்த நம்பிக்கையை எல்லாம் தவிடு பொடியாக்கிட்டேனே… அண்ணாவை இனி எப்படி பார்ப்பேன், என்னை எதிரியா தானே பார்ப்பான்… அத்தையும் சுதாகரும், அவமானத்துல உங்களை என்னல்லாம் சொல்லி இருப்பாங்களோ…” மனதுக்குள் பேசிக் கொண்டிருந்தவள் வாய் விட்டுக் கதறி அழத் தொடங்கினாள்.
“என்னை மன்னிச்சிரும்மா, இது வரை என்னை நேசிக்க மட்டுமே செய்த உங்க மனசு இனி, என்னை சபிக்குமா… நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் மா… என்னை மன்னிச்சிருங்க… வெறுத்துடாதிங்கம்மா, ப்ளீஸ்…” என்றவளின் குரல் ஷவரில் இருந்து இறங்கி ஓடிவந்த தண்ணீரில் கலைந்து சிதறிப் போனது.
உன் கண்கள் என்னை
கொலையே செய்கிறது…
உன் கோபம் என்னை
என்ன செய்துவிடும் கண்ணா…
உனக்கு என்மீது விருப்பம் இல்லையென்று
உன் உதடுகள் உச்சரித்தாலும்
உன் விழிகள் என்னிடம் கெஞ்சுகிறதே…
எனை விட்டு விலகி விடாதே என்று…
எப்படி நானும் பிரிந்திடுவேன்…
இமைக்க மறப்பது போல்
உனைக் கண்டால் என் இதயம்
துடிக்க மறப்பதுவும் ஏனடா….
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே
உன்னால் நான் இறந்து பிறப்பது
தான் எத்தனை முறையடா…
இதயம் இருக்கும் இடத்தில்
இப்பொழுது நீ இருப்பதால் தான்
இத்தனை கனமாக இருக்கிறதா இதயம்…
நெஞ்சுக் கூட்டில் கூடுகட்டிய
பறவையாய் எப்போதும் நீ
கூச்சலிடுவது உன்னையே
நினைக்க வைக்கத் தானோ…

Advertisement