Advertisement

நிலா – 14
பொன்னிறக் கதிர்களை பூமிக்கு அனுப்பி மனிதர்களை சுட்டெரித்துக் கொண்டிருந்த சூரியன் மேற்கு திசையை நோக்கி மெல்ல இடம் பெயர்ந்து கொண்டிருந்தான். இளம் மாலை வெயில் தென்றலை வரவேற்கத் தொடங்க, பள்ளி, கல்லூரி முடிந்து அழகுப் பட்டாம்பூச்சிகள் அந்தப் பேருந்து நிலையத்தை வண்ணமயமாய் சுற்றி வந்து கொண்டிருந்தன.
பலதரப்பட்ட மனிதர்கள், பலவித உணர்வுகளுடன் யோசனை படிந்த முகத்துடன் தங்கள் பேருந்துக்காய் காத்திருந்தனர். சோர்வும், வேதனையும் முகத்தில் நிறைந்திருக்க, அடுத்து என்ன செய்வது எனப் புரியாமல் பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு கவலையுடன் அமர்ந்திருந்தாள் நிலா.
அவளுக்கு சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த கெளதம், கார்த்திக்கை அழைப்பதற்காய் அவ்வப்போது அவனது அலைபேசியை ஆன் செய்து பிறகு ஆப் செய்து கொண்டிருந்தான். அவனது ஊரில் உள்ள நண்பர்களும், கதிரும் மாற்றி மாற்றி அவனது அலைபேசிக்கு அழைத்துக் கொண்டிருந்ததால் அதை அணைத்து வைத்திருந்தான்.
அலைபேசியை ஆன் செய்ததும் அது அலறத் தொடங்கியது. அதில் ஒளிர்ந்த எண்ணைக் கண்டதும் அவனது முகம் அச்சத்தில் நிறைந்தது.
“அ…அப்பா… கூப்பிடுறாரே… இந்தக் கதிர் அவர்கிட்டே போயி ஏதாவது பிரச்சனை பண்ணி இருப்பானோ… அச்சச்சோ… ஏண்டா, இப்படிப் பண்ணினேன்னு அப்பா கேட்டா, நான் என்ன பதில் சொல்லுவேன்…” தவிப்புடன் பார்த்துக் கொண்டே யோசித்துக் கொண்டிருக்க, நிலா எழுந்து வந்தாள்.
“கெளதம்… போன்ல யாரு, ஏன் டென்ஷனா இருக்கீங்க…”
“அப்பா கூப்பிடுறார்… டென்ஷன் ஆகாம என்ன பண்ணுறது… அவர்கிட்டே நான் என்ன சொல்லுவேன்…” என்றான் அவன் கடுப்புடன். அதைக் கேட்டதும் அவள் முகம் சுருங்கிப் போனது.
ஒரு முறை அழைத்து ஓய்ந்து மீண்டும் ஒலிக்கத் தொடங்கியது அலைபேசி.
“மறுபடியும் அப்பா தான் கூப்பிடறார்… அச்சோ, என்ன சொல்லுவேன்…” என்று நிலத்தை கோபத்துடன் எட்டி உதைத்தவன்,
“டேய் கெளதம், இதெல்லாம் உனக்குத் தேவையாடா…” என்று அவன் முகத்துக்கு நேராகவே விரலை நீட்டிக் கேட்டுக் கொண்டான். நிலா கண்ணில் தளும்பிய கண்ணீருடன் அருகில் நின்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மனது கடவுளிடம் முறையிட்டுக் கொண்டிருந்தது.
“கடவுளே, இவனுக்கு வாய்ல நாக்கை வச்சியா… இல்லை… தேள் கொடுக்கை வச்சியா… எப்ப சான்ஸ் கிடைச்சாலும் என்னை கொட்டிகிட்டே இருக்கான்…” ஒரு நொடி, தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்ட கெளதம், அலைபேசியை எடுத்து ஹலோவினான்.
“ஹ…ஹலோ… அப்பா…”
“ம்ம்… அப்பாதான், அது நினைவிருக்கே… ரொம்ப சந்தோசம்… ஹூம்… ஆம்பளை வளர்த்த பையன் இப்படித்தான் இருப்பான்னு நிரூபிக்க, எனக்கு ரொம்ப நல்ல பேரை வாங்கித் தந்திட்ட… என்ன இருந்தாலும் உன் அம்மாவோட ரத்தமும் உனக்குள்ளே ஓடுதுல்ல… அதான், இந்த ஓடிப் போகுற குணம் உனக்கும் இருந்திருக்கு…” அவர் அமைதியாய், ஆனால் அழுத்தத்துடன் பேசிக் கொண்டே போக, தாங்கிக் கொள்ள முடியாமல் இடையிட்டான் அவன்.
“அ…அப்பா… அது வந்து, நான் ஏன் அப்படி…”
“வேண்டாம் கெளதம்… நீ எந்த பதிலும் சொல்ல வேண்டாம்… நான் எதையும் கேக்குற நிலைமைல இல்லை… ஆனா ஒண்ணு, எப்ப இப்படி ஒரு காரியத்தை நீ பண்ணினாயோ… அப்போதே எனக்கு என் மகன் இல்லாமப் போயிட்டான்… இனி நீ என்ன சமாதானம் சொன்னாலும், செய்தாலும் அது என்னை பாதிக்காது… நீ எனக்கு யாரோதான்…”
“அப்பா, ப்ளீஸ்… இப்படில்லாம் சொல்லாதிங்க… நான் சொல்லுறதைக் கொஞ்சம் கேளுங்க… கேட்டுட்டு அப்புறம்…”
“வேண்டாம்னு சொன்னேன்ல… வேண்டாம், எதுவும் வேண்டாம்… எனக்கு யாரும் வேண்டாம்… நீ போனது போனதாவே இருக்கட்டும்… தயவு செய்து இனி இந்த ஊருக்குத் திரும்பி வந்துடாதே… நான் செத்தே போனாலும் இனி உன் முகத்தில் விழிக்கக் கூடாதுன்னு நினைக்கறேன்… எனக்கு இனி போன் செய்யவோ, வந்து பார்க்கவோ செய்யாதே… நான் உன்னை பார்த்துப் பார்த்து வளர்த்தினத்துக்குப் பிரதிபலனா அது ஒண்ணை மட்டுமாவது செய்… இனி என் கண்ணுல நீ படவே கூடாது… உன் அப்பா செத்துட்டான்னு நினைச்சுக்கோ…”
அமைதியாய் தான் சொல்ல வேண்டியதை சொல்லி முடித்து அவன் பதிலை எதிர் பார்க்காமல், போனை வைத்துவிட்டார்.
அவர் மிகவும் அமைதியாக தான் அந்த வார்த்தைகளை உதிர்த்தார். ஆனால் அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் அவன் மனதில் ஊசியாய்த் துளைக்க, அத்தனை நேரம் அவன் செய்த விஷயத்தை பெரிதாய் எடுத்துக் கொள்ளாமல் இருந்தவன் முதன் முறையாக மனதுக்குள் நொறுங்கிப் போனான்.
கார்த்திக்குடன் நிலாவை நல்லபடியாக சேர்த்து வைத்து பிறகு ஊரில் சென்று சமாதானம் செய்து கொள்ளலாம்… என்று அவன் மனதில் சாதாரணமாய் நினைத்த ஒரு விஷயம் இப்போது பூதாகரமாய் தோன்றியது. அவனது ஒரே உறவு, அவனது தந்தை… அவரும் இப்போது அவனை வெறுத்துவிட்டார்… மனது அவனைக் குற்றப்படுத்த வேதனையுடன் நின்று கொண்டிருந்தான்.
“நான் சொல்ல வந்ததைக் கூடக் கேக்காமல் என்னவெல்லாம் பேசிவிட்டார்… அவர் மனதில் இந்த செயல் இத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நான் நினைக்கவில்லையே…” கௌதமின் முக மாறுதலும், அவன் முகத்தில் தெரிந்த வேதனையும் நிலாவுக்கு பயத்தைக் கொடுக்க, அவன் அருகில் வந்தாள்.
“க… கெளதம்…”
அவன் அமைதியாய் இருக்க, அவள் மீண்டும் அழைத்தாள்.
“எ…என்னாச்சு கெளதம்… அப்பா என்ன சொன்னார்… ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க… கார்த்திக் பத்தி எதுவும் தெரிஞ்சதா…” அதைக் கேட்டதும் நிமிர்ந்தவனின் கண்கள் நெருப்பைக் கக்கிவிடுவது போல ஜொலித்தன.
“ம்ம்… என் அப்பா சொன்னார்… நாம செய்த செயலைப் பாராட்டி நமக்கெல்லாம் ஊருல சிலை வைக்கப் போறாங்களாம்… திறப்பு விழாவுக்கு மறக்காம வந்திருங்கன்னு சொன்னார்… போதுமா, இப்பக்கூட உன்னால சுயநலமா தானே யோசிக்க முடியுது…” என்றவனின் வார்தைக் கனலில் அப்படியே பொசுங்கிப் போய் விட்டால் பரவாயில்லை என்று நிலாவுக்குத் தோன்றியது.
“என் அப்பா எத்தனை வருத்தமா பேசினார் தெரியுமா… அவர் மனசுல எந்த அளவுக்கு வேதனை இருந்தா இப்படிப் பேசியிருப்பார்… என் மேல் அவர் வச்சிருந்த நம்பிக்கையை நானே இல்லாமப் பண்ணிட்டேன்… என்னையும் அந்த ஓடிப் போன பொம்பளை லிஸ்ட்ல சேர்த்திப் பேசிட்டார்… இனி என் முகத்துலேயே முழிக்காதேன்னு சொல்லிட்டார்…” அவனது வார்தைகள் வேதனையோடு வந்து விழ கண்கள் கலங்கி இருந்தன. அதைக் கேட்ட நிலாவுக்கு என்ன பதில் சொல்லுவதென்று புரியவில்லை.
“யோசிக்காமல் அவசரப்பட்டு இப்படி செய்தது தவறோ…” என்று அவள் மனதும் யோசிக்கத் தொடங்கி இருந்தது.
“கௌதமின் தந்தையே இப்படியெல்லாம் வேதனைப் படுகிறார் என்றால் அம்மா… என் அம்மா, எப்படித் துடித்துப் போயிருப்பார்… அய்யோ… கார்த்திக்கைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருந்ததில் அம்மாவை மறந்து விட்டேனே… அத்தையும், சொந்தக்காரர்களும் எப்படியெல்லாம் அம்மாவை அவமானப் படுத்திப் பேசினார்களோ… அண்ணன் வேறு அத்தனை கோபமாய் இருந்தானே…” அம்மாவை உடனே பார்த்துக் கதறி அழ வேண்டும் போல அவள் மனது துடித்தது.
“நான் இதையெல்லாம் முதலிலேயே யோசித்திருக்க வேண்டுமோ… கார்த்திக்கின் பேச்சைக் கேட்டு இதற்கு சம்மதித்தது பெரிய தவறோ… அவனை வேறு இன்னும் காணவில்லையே, எங்கே போயிருப்பான்… ஏதும் பிரச்சனை ஆகி விட்டதோ… அண்ணன் அவனைப் பிடித்திருப்பானோ…” அவள் மனது இன்னதென்று இல்லாமல் எல்லாவற்றையும் யோசித்துக் குழம்பிக் கிடந்தது.
அப்போது மீண்டும் கெளதமின் அலைபேசி அலறியது. கெளதம், கதிரின் நெருங்கிய நண்பன் ராம் தான் அழைத்திருந்தான்.
“எடுப்பதா வேண்டாமா…” எனக் குழப்பம் இருந்தாலும், ராம் சற்று நிதானமான ஆள் என்பதால், கெளதம் அதை ஆன் செய்து காதுக்குக் கொடுத்து அவன் தானா என்பதை அறிய பேசாமல் இருந்தான்.
“கெளதம்… நான் ராம்…”
“சொ…சொல்லு ராம்…” என்றான் கெளதம் தயக்கத்துடன்.
“நீ, ஏன் இப்படி ஒரு நம்பிக்கை துரோகமான காரியத்தைப் பண்ணினேன்னு நான் கேக்கப் போறதில்லை… ஏன்னா அது உனக்கே தெரியும்…”
“ராம்… அது வந்து… நீயாவது நான் சொல்ல வர்றதைக் கொஞ்சம் கேளேன்…”
“இல்லை கெளதம்… நீ என்ன காரணத்தை சொன்னாலும் அது உன்னை நம்பின கதிருக்கு சமாதானமாக முடியாது… உன் காரணத்தைக் கேட்டுகிட்டு இருக்க எனக்கு நேரமும் இல்லை…”
“டேய் ராம்… நீயே இப்படி சொன்னா எப்படிடா…” குற்றவுணர்வுடன் வந்தது கௌதமின் வார்த்தைகள்.
“இங்க பாரு, உன்னோட சிம்மை வச்சு நீங்க இருக்குற இடத்தைத் தெரிஞ்சுக்க கதிர் முயற்சி பண்ணிட்டு இருக்கான்… அந்த நம்பரை கொஞ்ச நாளைக்கு யூஸ் பண்ணாதே… இப்போ கதிர் இருக்கிற கோபத்துல நீங்க அவன் கைல மாட்டினா கொன்னே போட்டுடுவான்… அதுனால கொஞ்ச நாளைக்குப் பாதுகாப்பா இருங்க… நம்ம ஊர்ப்பக்கம் வந்துடாதீங்க… ஒரு நண்பனா உனக்கு ஆபத்துன்னு தெரிஞ்சும் கண்டுக்காம இருக்க என்னால முடியலை… அதான் உன்னை  எச்சரிக்கை செய்ய கூப்பிட்டேன்… சரி நான் வச்சிடறேன்…” என்ற ராம், அவனது பதிலை எதிர்பார்க்காமல் போனை வைத்துவிட்டான்.
“என்னை நம்பிக்கை துரோகி என்று சொல்லாமல் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டானே…” என மனசு வலித்தாலும், சிறிது நேரம் வேதனையுடன் இருந்தவனுக்கு, அவன் சொன்ன விஷயம் மனதில் உரைக்க, அதற்குப் பிறகு சும்மா இருக்க முடியவில்லை.
நேரம் வேறு இருட்டிக் கொண்டே வந்தது.
மீண்டும் ஒரு முறை கார்த்திக்கின் அலைபேசிக்கு அழைக்க, அப்போதும் அது அணைத்து வைக்கப் பட்டிருப்பதாய் கூறியது. கார்த்திக்கை எப்படி தொடர்பு கொள்வது என யோசித்தவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.
கௌதமின் அலைபேசியில் இரண்டு சிம் இருந்தது. இணையத்துக்கு உபயோகிக்க மட்டும் ஒரு சிம் தனியே வைத்திருந்தான். அந்த நம்பர் அவன் யாருக்கும் கொடுக்காமல், உபயோகிக்காமல் இருந்ததால் யாருக்கும் தெரியாது. அந்த எண்ணைக் குறிப்பிட்டு, அதற்கு அழைக்குமாறு கார்த்திக்கிற்கு மெசேஜ் அனுப்பினான் கெளதம்.
அவனது முகத்தில் தெரிந்த பரபரப்பைக் கண்டு அருகில் வந்த நிலா, “என்னாச்சு கெளதம், இப்ப என்ன பண்ணுறது… கார்த்திக் ஏன் இன்னும் வரலை… அவன் அண்ணாவோட ஆளுங்க கிட்டே மாட்டி இருப்பானோ…” வரிசையாய் கேள்விகளை எழுப்பினாள்.
“உன்னோட தானே நானும் இருக்கேன்… எனக்கு மட்டும் என்ன ஜோசியமா தெரியும்… நானே என்ன பண்ணறதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்கேன்… இதுல உன்னோட குடைச்சலை தான் சகிக்கவே முடியலை… ச்சே, எதுக்குடா இந்தக் காரியத்தைப் பண்ண சம்மதிச்சோம்னு எரிச்சலா இருக்கு…”
“சாரி… கெளதம்…” அவளது தழுதழுத்த குரல் அவனை நிமிர வைத்தது. அவளது முகத்தை ஏறிட்டான் கெளதம். அவளது பளிங்கு முகம், விடை கிடைக்காத கேள்விகளையும், எதிர்காலத்தைப் பற்றிய பயத்தையும் சுமந்து கொண்டு வேதனையோடு தெரிந்தது.
ஒரு நிமிடம் அவன் மனது உருகியது.
“பாவம்… எத்தனை கனவுகளை சுமந்து கொண்டு வீட்டை விட்டு வந்திருப்பாள்… இப்போது எத்தனை வேதனைகளை அனுபவிக்கிறாள்… கஷ்டம் என்பது என்னவென்றே தெரியாமல் வளர்ந்தவள்… அவளது கனவுகளை நிஜமாக்க வேண்டியவனை காணவும் இல்லை… அவளது மனது எத்தனை போராட்டத்துடன் இருக்கும்… இவளைக் கலங்க விடக் கூடாது, என்னை நம்பி வந்துவிட்டாள்… இவளைக் காத்து கார்த்திக்கிடம் ஒப்படைக்க வேண்டியது என் கடமை…” மனதுக்குள் தீர்மானங்கள் ஓடிக் கொண்டிருக்க, அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனை மீண்டும் அழைத்தாள் நிலா.
“சாரி நிலா… டென்ஷனை உன்கிட்டே காட்டிட்டேன்… ராம் தான் கால் பண்ணான்… என்னோட சிம்மை வச்சு நாம எங்கிருக்கோம்னு கண்டு பிடிக்க கதிர் டிரை பண்ணிட்டு இருக்கானாம்…”
“ஓ… நாம இப்போ என்ன பண்ணப் போறோம்… கெளதம்… சிம் இல்லைன்னா கார்த்திக் எப்படி நம்மை காண்டாக்ட் பண்ணுவான்…” அவளது கேள்வியில் தெரிந்த வலி அவனை உலுக்கியது.

Advertisement