Advertisement

ஒரு நிமிடம் அவளையே வலியுடன் பார்த்தவன், “யோசிக்காம இருந்தா நடந்த எல்லாம் சரின்னு ஆகிடுமா… என் அப்பா, என்னை எப்படில்லாம் வளர்த்தார்… பொண்டாட்டி, விட்டுட்டு ஓடிப் போயிட்டாளேன்னு வாழ்க்கையே வெறுத்துப் போனவர், எனக்காக தானே மனசைத் தேத்திகிட்டு வாழ்ந்திட்டு இருந்தார்…” அவனது கண்கள் கலங்கியது.
“அவரோட மரணத்துக்கு நானே காரணமாகிட்டனே… ஒரேயொரு பிள்ளையா இருந்தும், அவருக்கு செய்ய வேண்டிய இறுதி கடமையைக் கூட செய்ய முடியாத பாவி ஆகிட்டேன்… இதை விட எனக்கு பெரிய சாபம் என்ன இருக்க முடியும்…” என்றவனின் கண்கள் கலங்கி இருக்க எழுந்து தன் அறைக்கு சென்று விட்டான்.
அவனது கலக்கம் அவளுக்கும் வருத்தத்தைக் கொடுக்க, அவர்களின் வாழ்வில் விதி விளையாடத் தொடங்கிய அந்த நாள் அவளது மனக்கண்ணில் விரிந்தது.
சென்னை ரயில் நிலையத்தில் இறங்கி எங்கே செல்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர் நிலாவும் கௌதமும். இரவு உறங்காமல் இருந்த களைப்பும், தெரிந்தே செய்த தவறின் வேதனையும் அவர்களை சோர்வடைய செய்தது. கெளதம் மீண்டும் மீண்டும் கார்த்திக்கின் அலைபேசிக்கு முயற்சித்துக் கொண்டே இருந்தான். அது அணைத்து வைக்கப்பட்டிருப்பதாய் கூறி ஒரு பெண் குரல் கடமையாற்றியது.
கௌதமின் எண்ணிற்கு வேறு அவனது ஊர்க்கார நண்பர்களும் கதிரும் மாறி மாறி அழைத்துக் கொண்டிருந்தனர். அவனது அலைபேசியோ, எனக்குக் கொஞ்சம் சார்ஜ் போடப் போகிறாயா, இல்லை அணைந்து விடட்டுமா… என்று மிரட்டிக் கொண்டிருந்தது.
ரயில் நிலையத்தில் இருந்த பெஞ்சில் அமர்ந்து கார்த்திக்கின் அழைப்பிற்காய் காத்திருந்தனர். வெகுநேரம் காத்திருந்தும் அவனது அழைப்பு வரவே இல்லை.
அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் குழம்பியவன், நிலாவிடம் சிடுசிடுத்தான்.
“இதெல்லாம் தேவையா, உங்க ரெண்டு பேருக்கும் உதவப் போயி எனக்கு இப்ப ஊரே பகையாப் போயிருச்சு… எல்லாம் செய்ய சொல்லிட்டு அந்தப் பிசாசுப் பயலை வேற ஆளையே காணோம்… காதலாம் காதல்… கருமம் பிடிச்ச காதல்… எல்லாரையுயும் கஷ்டப் படுத்திட்டு எதுக்கு இந்த காதல்… அங்கே உன் அம்மாவும் அண்ணனும் எத்தனை தவிப்பாங்க… சுயநலம் பிடிச்ச காதல்…”
தீக்கனலாய் சுட்டது அவனது வார்த்தைகள். இருந்தும் அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமைதியாய் இருந்தாள் நிலா.
“எல்லாம் செய்துட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி உக்கார்ந்துக்க வேண்டியது…” அவன் முணுமுணுக்க, இப்போது அவனை ஏறிட்டாள் நிலா.
“கெளதம்… சும்மா, என்னைக் குத்திக்காட்டிப் பேசிட்டு இருக்காதிங்க… உங்களுக்கு இந்த விஷயத்தை செய்யப் பிடிக்கலைனா அதை கார்த்திக் சொன்ன போதே முடியாதுன்னு சொல்லி இருக்க வேண்டியது தான… நானா உங்களோட வரேன், என்னை கார்த்திக் கிட்டே விட்டுருங்கன்னு சொன்னேன்… அவன் இன்னும் போன் கூடப் பண்ணலையேன்னு நானே இங்கே தவிச்சிட்டு இருக்கேன்… அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்காம சும்மா திட்டிட்டே இருக்க வேண்டியது…” சோர்வும், பசியும் அவளையும் கோபப்பட வைத்தது.
“ஹூம்… இந்த வெட்டிக் கோபத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை… சரி வா, ரொம்பப் பசிக்குது… எதையாவது சாப்பிட்டு வருவோம்…”
“ச்சே… இந்த கார்த்திக்கிற்கு வேண்டி இவனை எல்லாம் சகிக்க வேண்டி இருக்கு…” மனதுக்குள் முனங்கிக் கொண்டே எழுந்தாள் அவள்.
“அப்படியொண்ணும் என்னை சகிச்சுக்க வேண்டிய அவசியம் இல்லை… உங்களுக்கு உதவப் போயி இப்போ என் உயிருக்கு உத்திரவாதம் இல்லாமப் போயிருச்சு… நீங்க எங்காவது போயி செட்டில் ஆகிருவீங்க… நான் எப்படி மறுபடியும் அங்கே திரும்பி போவேன்… உன் அண்ணனே என்னை வெட்டிப் போட்டிருவான்… என் அப்பா, என்னைப் பத்தி என்ன நினைப்பார்… எல்லாத்தையும் பொறுத்துகிட்டு உங்க கூட நிக்கறேன்னா அதுக்குக் காரணம், அந்த எழவெடுத்த காதலுக்கு வேண்டி இல்லை… என் நண்பன் செத்துத் தொலைச்சிரக் கூடாதேன்னு தான்… என்னமோ ரொம்பதான் சலிச்சுக்கறே…”
படபடவென்று பட்டாசாய் பொரிந்து விட்டு பாகை எடுத்துக் கொண்டு நகர்ந்தவனை, அதிர்ச்சியாய்ப் பார்த்துக் கொண்டு நின்றாள் நிலா.
“நான் மனசுக்குள்ளே தானே நினைச்சேன்… இவனுக்கு எப்படிக் கேட்டுச்சு, ஒருவேளை வெளியே உளறிட்டேனோ… துர்வாசர் மாதிரி கத்திட்டுப் போறான்… ம்ம்… இவனையெல்லாம் கட்டிக்கப் போறவ பாடு திண்டாட்டம் தான்…” என நினைத்துக் கொண்டிருந்தாள் அவள்.
“என்ன வரியா… இல்லியா…” என்றான் அவன் திரும்பி நின்று.
“வ…வரேன்…” என்றவள் அவளது பாகை எடுத்துக் கொண்டு அவன் பின்னில் ஓடினாள். அதற்குள் கௌதமின் அலைபேசி அலற, அதை எடுத்துப் பார்த்தவன், கதிரின் எண்ணைக் கண்டதும் முகத்தை சுளித்தான்.
“உன் அண்ணன் தான் கூப்பிட்டுகிட்டே இருக்கான்… எப்படியோ என்னைத் திரும்ப அந்த ஊருக்குப் போக வழியில்லாமப் பண்ணிட்டீங்க…” புலம்பிக் கொண்டே ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தான்.
அவனுடனே முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு பின்னில் வந்தாள் நிலா. அவளது மனது கார்த்திக்கை அர்ச்சித்துக் கொண்டிருந்தது.
“சரியான இடியட்டா கார்த்திக் நீ… உனக்கெல்லாம் எதுக்குடா லவ்… லவ்வரைக் கடத்திட்டு வரக் கூட உனக்கு வக்கில்லாம ஒரு துர்வாசரை ஏற்பாடு பண்ணிருக்கே… அவன் வேற அப்பப்போ மலை ஏறிகிட்டு கத்துறான்… போன் கூடப் பண்ணாம நல்லா பஸ்ல தூங்கிட்டு இருக்கியா…” என்று திட்டிக் கொண்டிருந்தவள் கெளதம் சாலையைக் கடப்பதற்காய் நிற்பதை கவனிக்காமல் பைக் வரும்போதே கிராஸ் பண்ணப் போனாள்.
அவளது முழங்கையைப் பிடித்து நிறுத்திய கெளதம், “கண்ணு இருந்தா மட்டும் பத்தாது… திறந்து பார்க்கவும் வேணும், வண்டி வர்றது தெரியலை…” என்று அதற்கும் கத்தினான். அங்கே கிராஸ் பண்ண நின்றவர்கள் அதை வேடிக்கை பார்க்க, நிலாவிற்கு அவமானமாய் இருந்தது.
அவளது கண்ணில் சட்டென்று கண்ணீர் முத்துக்கள் உற்பத்தியாக, அதைக் கண்டதும் கெளதமின் மனம் வருந்தியது.
“ச்சே… குடும்பத்தை விட்டுவிட்டு, கார்த்திக்கிடம் நான் எப்படியும் கூட்டிப்போய் சேர்த்துவிடுவேன் என்று என்னை நம்பி வந்திருக்கிறாள்… இவளை எதற்கு நாம் நோகடிக்க வேண்டும்…. பாவம், இனி இப்படிப் பேசக் கூடாது…” என மனதுக்குள் தீர்மானம் செய்து கொண்டான்.
இருவருமாய் அங்கிருந்த ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தனர். ஒவ்வொருத்தராய் பிரெஷாகி வந்து அமர்ந்தனர். மிதமான கூட்டமே இருந்தது.
“நிலா, என்ன சாப்பிடற…”
“எனக்கு எதுவும் வேண்டாம்…”
“காப்பியாவது குடிக்கறியா…”
“ஒண்ணும் வேண்டாம்…”
“ஓ… இட்ஸ் ஓகே, வேண்டாம்னா வேண்டாம்… எனக்கு செம பசி, நான் சாப்பிடறேன்…” என்றவன், வெயிட்டரை அழைத்தான்.
“நாலு இட்லி வடை, ஒரு மசால் தோசை, ஒரு காப்பி… பர்ஸ்ட் இட்லி கொண்டு வாங்க…” என்றவனை எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் நிலா.
அவன் ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்த இடைவெளியில் கார்த்திக்கின் அலைபேசிக்கு முயற்சிக்க, மீண்டும் அணைத்து வைக்கப் பட்டிருப்பதாகவே பதில் வரவும், அவனுக்குக் கடுப்பானது. 
“ச்ச்சே… இவன் என்னதான் பண்ணிட்டு இருக்கான்… மணி பத்தாகுது, இந்நேரத்துக்கு வந்திருக்கணும்… மொபைல் ஆப் ஆகிட்டா ஏதாவது பூத்துல இருந்தாவது கூப்பிடறதுக்கென்ன… என் மொபைல் வேற சார்ஜ் இல்லாம ஆப் ஆகிடும் போலருக்கு…” புலம்பிக் கொண்டிருக்கும்போதே அது அணைந்து இயக்கத்தை நிறுத்திக் கொண்டது.
அதைக் கண்டு திகைத்த நிலா, “இப்போ என்ன பண்ணுறது கெளதம்… கார்த்திக் எப்படிக் கூப்பிடுவான்…” என்றாள் சங்கடத்துடன்.
“எனக்கு மட்டும் எப்படித் தெரியும்… இரு, சார்ஜ் போட முடியுமான்னு பார்க்கறேன்…” என்றவன் அவனுக்கு வெயிட்டர் இட்லியைக் கொண்டு வந்து வைக்கவும் அவனிடம் விசாரித்தான்.
அவன் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு மல்டி சார்ஜரைக் கை காட்டினான்.
நன்றியைப் புன்னகையுடன் உதிர்த்துவிட்டு, சார்ஜரில் மொபைலை போட்டுவிட்டு அமர்ந்து கொண்டான் கெளதம். அந்த ஹோட்டலில் நிரம்பி இருந்த பல வகை உணவுகளின் மணமும், நெய் வாசனையும் மூக்கத் துளைக்க, பசியோடு இருந்த நிலாவின் வயிறு அவளிடம் கோபத்துடன் கேள்வி கேட்டது.
“நான் இங்கே பசியோடு இருக்கிறேன்… கெளதம் கேட்டபோது வீம்புக்கு எதுவும் வேண்டாம் என்கிறாயே, உனக்கு எத்தனை திமிர்…” என வயிற்றுக்குள் இருந்து கட முடாவென சத்தம் போட்டது. அவஸ்தையோடு அமர்ந்திருந்தாள் அவள்.
முன்னில் அமர்ந்து இட்லியை சாம்பாரில் குழைத்து வயிற்றுக்குள் தள்ளிக் கொண்டிருந்தான் கெளதம். அவளையறியாமல் எச்சிலை விழுங்கிக் கொண்டு அமர்ந்திருந்தவளுக்கு பசியில் மற்ற கவலைகள் பின்னுக்குப் போயிருந்தன.
அடுத்து மசாலா தோசையை வைத்து விட்டு சென்றான் வெயிட்டர்.
குனிந்து வடையை சாப்பிட்டுக் கொண்டே, “ம்ம்… போதும் நான் சாப்பிட்டதைப் பார்த்தது… எனக்கு வயிறு வலிக்கப் போகுது…, மசால் தோசையை எடுத்து சாப்பிடு…” என்றான் அவன்.
“ச்சே… இவனுக்கு மண்டைலயும் கண்ணிருக்கும் போலருக்கு… எது செய்தாலும் கண்டு பிடிச்சுடறான்… சரி… இனி இந்த வெட்டி வீராப்பு உதவப் போறதில்லை… பேசாம சாப்பிட்டுடலாம்…” என நினைத்தவள், அசடு வழிந்து கொண்டே அந்த மசால் தோசையை அவசரமாய் விழுங்கத் தொடங்கினாள்.
“நான் பங்குக்கெல்லாம் வரமாட்டேன்… மெதுவா சாப்பிடு… தொண்டைல மாட்டிக்கப் போவுது…” கூறிக் கொண்டே கை கழுக எழுந்து சென்றான் அவன். அவனையே திகைப்புடன் நோக்கினாள் அவள்.
மைவிழிக்குள் மையல் கொண்டேன்…
மனம் அதிலே மயங்கக் கண்டேன்…
சத்தமில்லாமல் யுத்தம் செய்கின்றாய்…
சம்மதமின்றி என்னைக் கொய்கின்றாய்…
இதுவரை நான் உணர்ந்திடாத உணர்விது…
என் இதயத்தில் நீ வந்து போன சுவடிது…
உன் உள்ளங்கையில் என் உலகை ஏன்
ஒளித்து வைத்தாய்… உனக்கென்ன
ஒளிந்து கொள்ள இடமா இல்லை…
ஏன் எனக்குள் இடம் கேட்டு இம்சிக்கிறாய்…
காட்டுத் தீயென இருந்தேன் நான்…
உனைக் கண்டபின்னோ காற்றில்
அணையும் தீக்குச்சியானேன்…
இதழெல்லாம் உன் பெயரை
இசைக்கக் கண்டேன்… என் உயிர் கூட
பனியாக உருகக் கண்டேன்…
இரும்பையும் ஈர்த்து விடும்
உன் காந்த விழிக்குள்
அரும்பான என் இதயம் மாட்டிக்
கொண்டால் என்ன செய்யும் பெண்ணே…
கண்களாலே என்னைக் களவாடுகிறாய்
எனத் தெரிந்த பின்னும் கலந்து விடுகிறேன்…
உன் விழிகளோடு இணைந்திட்ட 
என் பார்வையைப் பிரித்தெடுக்க முடியாமல்…

Advertisement