Advertisement

நிலா – 13
கார்த்திக் அவனது கதையை சொல்லிக் கொண்டிருக்க, வருத்தத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார் மாணிக்கம்.
“அந்தப் பையன், பாகை உன்கிட்ட கொடுத்துட்டு போலீசைப் பார்த்ததும் இறங்கிட்டானா…? அவன் யார், என்னன்னு எதுவுமே விசாரிக்கலயா… இப்படிதான் முன்னப் பின்னத் தெரியாதவங்க கிட்ட ஒரு பொருளை வாங்கி வச்சுக்கறதா… அதுல தான் வெடிகுண்டு இருந்துச்சா…” அவரது கேள்விகளில் சற்று கோபமும் கலந்திருந்தது.
“சார், ஒரு உதவி தானேன்னு நினைச்சு செய்தேன்… அது என் வாழ்க்கையையே தலைகீழா மாத்திடும்னு நான் நினைக்கல… எனக்கு இதுல எந்த சம்மந்தமும் இல்லைன்னு நான் எவ்ளோ சொல்லியும் போலிஸ்காரங்க நம்பவே இல்ல… கையில ஆதாரத்தோட பிடிபட்டதால சந்தர்ப்பமும், எனக்கு எதிரா அமைஞ்சிருச்சு… நான் குற்றத்தை ஒத்துக்கலைன்னு அவங்க ரொம்ப அடிச்சு துன்புறுத்தினாங்க… என்னைப் பத்தின விவரத்தைக் கேட்டபோது எனக்கு மனசுக்குள்ளே என் அப்பா நினைவு தான் வந்துச்சு… நான் செய்யாத தப்புக்காக ஜெயிலுக்குப் போனாலும் ஒரு குற்றவாளியா தானே என்னையும் உலகம் பார்க்கும்… அதுனால தான் என்னைப் பத்தி உண்மைய சொல்லாம, பேரை மாத்தி, அனாதைன்னு சொல்லி என் விவரத்தை மறைச்சுட்டேன்…”
“ம்ம்… அது சரிதான்… சிறை தண்டனை சில காலமா இருந்தாலும் சிறைக்குப் போயிட்டு வந்தவன்கிற கண்ணோட்டத்துல இந்த உலகம் தர்ற தண்டனை ரொம்பப் பெருசு தான்… அப்ப உன் அம்மாக்கு நீ எங்கே இருக்கேன்னு இது வரைக்கும் சொல்லவே இல்லியா…” என்றார் அவர் ஆதங்கத்துடன்.
“அவங்களைப் பொறுத்தவரை நான் லவ் பண்ணின பொண்ணோட ஓடிப் போயிட்டேன்… திரும்பி வந்திருவேன்னு காத்திட்டு இருப்பாங்க… அந்த நம்பிக்கை அப்படியே இருக்கட்டும்னு, நான் இதுவரைக்கும் அவங்களுக்கு தெரிவிக்கல சார்…” என்றான் அன்னையின் நினைவில் கண்கள் பனிக்க.
“ம்ம்… இருந்தாலும் இவ்ளோ நாளா தெரிவிக்காம இருக்கலாமா… அவங்க எவ்ளோ வேதனைப் படுவாங்க… உனக்காக உன் நண்பன் கூட்டிட்டு வந்த அந்தப் பொண்ணு என்ன ஆனாங்க…”
“அதைப் பத்தி எனக்கும் தெரியல… ஆனால் கெளதம், நிச்சயமா நிலாவுக்கு எந்த ஆபத்தும் வராமப் பார்த்துக்குவான்… நான் ரிலீஸ் ஆனதும் அம்மாவைப் பார்க்கப் போறேன்… அப்புறம் தான் கௌதம் பத்தி தெரிஞ்சுக்கணும்…”
“ம்ம்… அந்தப் பொண்ணு நிலமை ரொம்பப் பாவம்… கல்யாணம் நிச்சயம் பண்ணினவன் கூடவும் இல்லாம, காதலிச்சவன் கூடவும் இல்லாம சம்மந்தம் இல்லாத ஒருத்தன் கூட, உன்னை நம்பிப் போயிருக்கு… அவங்க திரும்பி வந்திருந்தா அவ வீட்டுல என்ன நடந்திருக்குமோ… ஒரு வேளை திரும்பி வரலைன்னா, உன் பிரண்டோட வாழ்க்கை என்னாகியிருக்கும்… இப்படி ஒரு பிரச்சனைல மாட்டிகிட்டு உங்க மூணு பேரோட வாழ்க்கையும் சிக்கலாகிடுச்சே…” உண்மையான வருத்தத்துடன் கூறினார் அவர்.
“ம்ம்… கெளதம், நிச்சயமா நல்ல முடிவு தான் எடுத்திருப்பான்… நிலா, எனக்காக நிச்சயமா காத்திருப்பா… இவ்ளோ நாள் அவளைத் தவிக்க விட்டு வந்ததுக்கு, பரிகாரமா என் கண்ணுக்குள்ள வச்சு நான் பார்த்துக்க தான் போறேன்… நாங்க சந்தோஷமா வாழத்தான் போறோம்… அதுக்காகத்தான் காத்திட்டு இருக்கேன்…” உணர்ச்சிப் பூர்வமாய் சொல்லிக் கொண்டிருந்தவனைப் பரிவுடன் நோக்கினார் மாணிக்கம்.
“ம்ம்… சரிப்பா, இனியாவது உன் வாழ்க்கைல எல்லாம் சந்தோஷமா நடக்கட்டும்… இன்னும் ஒரு வாரத்துல உன் தண்டனை காலம் முடிஞ்சு ஊருக்குக் கிளம்பிடுவ… இப்பவாவது உன் அம்மாவுக்கு நீ வரப் போறதைத் தெரியப்படுத்தலாமே…”
“இல்ல சார்… அவங்க எல்லார் முன்னாடியும், சொல்லாமக் கொள்ளாமப் போயி நின்னு இன்ப அதிர்ச்சி கொடுக்கப் போறேன்…”
“ம்ம்… எல்லாம் நீ நினைச்ச போல நல்லபடியா நடந்தா சந்தோசம் தான்… சரி, ரொம்ப நேரம் ஆச்சு… படுத்துத் தூங்கு… நாம இன்னொரு நாள் பேசுவோம்…” என்றவர், அவனிடம் விடைபெற்று நடந்தார்.
கண்களைத் திறந்து கொண்டே கனவு கண்டு கொண்டிருந்தான் கார்த்திக். அவன் மனது நிலாவைக் காணப் போகும் நாளுக்காய் சந்தோசத்துடன் காத்திருந்தது.
கெளதமின் கை சரியானதும், அவன் அலுவலகம் செல்லத் தொடங்கி இருக்க நாட்கள் அதன் பாட்டில் நீங்கத் தொடங்கி இருந்தது. அவனுக்கு அன்று பகல் ஷிப்ட். வேலை முடிந்து மாலையில் சோர்வுடன் வீடு திரும்பினான். வானம் இருண்டு மேகங்கள் மழையைப் பிரசவிப்பதற்காய் காத்திருந்தன.
அம்முவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த நிலா, கௌதமைக் கண்டதும் காப்பி எடுக்கப் போனாள்.
“அப்பா…” உற்சாகத்துடன் கெளதமிடம் கை நீட்டிய அம்மு, அவன் குனிந்ததும் கழுத்தில் பிடித்துக் கொண்டு தொங்கினாள்.
“அப்பா… நம்ம சஞ்சய் இதுக்கான்ல… அவன் ஒரு புது பென்சில் வாங்கிதுக்கான்… நொம்ப அழகா இதுக்கு… எனக்கும் அது போல வாங்கித் ததீங்களா… அதுல மிக்கி மவுஸ் எல்லாம் போத்திதுக்கு…”
“சரிடா, வாங்கித் தரேன்…”
“அப்புதம்… அவனோட லப்பர் இதுக்குல்லப்பா… அதுல சூப்பதா ஸ்மெல் வதுது… அதும் வாங்கித் ததணும்…”
“ம்ம்… சரிம்மா, எல்லாம் வாங்கலாம்… அப்பா போயி பிரெஷ் ஆகிட்டு வந்திடட்டுமா…”
“ம்ம்… சதிப்பா…” என்றவள் அவன் கழுத்தில் இருந்த கையை எடுத்துவிட்டு  சோபாவுக்கு குதித்தாள்.
“அச்சோ… அம்மு, பார்த்துமா… கீழ விழுந்திடாத…” கூறிக் கொண்டே அவன் அறைக்கு சென்றான்.
அவன் உடை மாற்றி பிரஷாகி வர, காப்பியுடன் ஒரு தட்டில் முறுக்கை வைத்து எடுத்துக் கொண்டு வந்தாள் நிலா. அவளது முகம் தெளிவில்லாமல் இருப்பதை கவனித்தாலும் ஏதும் கேட்காமல் காப்பியை வாங்கிக் கொண்டான் கெளதம்.
“நிலா… நிலா…” அப்போது அழைத்துக் கொண்டே உள்ளே வந்தார் ருக்மணி.
“வாங்கம்மா, காப்பி குடிக்கறீங்களா…”
“ம்ம்… குடு நிலா,. தனி ஒருத்திக்கு காப்பி கலந்து குடிக்க சோம்பேறித்தனமா இருக்கு…” என்றார்.
“அதுக்கென்னம்மா… இங்கே வாங்க நான் காப்பி போட்டுத் தரேன்…” கூறிக் கொண்டே அவருக்கும் ஒரு கப்பில் காப்பியை ஊற்றினாள் நிலா.
“மழை வர போல இருக்கு… அதான் நீ வாசல்ல காயப் போட்ட கோதுமையை எடுத்துட்டு வந்தேன்… இந்தா…” என்று ஒரு கவரை நீட்டினார்.
“ம்ம்… ஆமாம்மா… கோதுமை காயப் போட்டிருந்ததை மறந்தே போயிட்டேன்…” என்றவள் அதை வாங்கிக் கொள்ள காப்பியை வாங்கிக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தார்.
“பாத்தி… முதுக்கு எதுத்துக்கங்க…” அம்மு அவரிடம் பிளேட்டை எடுத்து நீட்ட, சிறு துண்டை மட்டும் எடுத்துக் கொண்டவர், அவளது பிஞ்சுக் கன்னத்தை செல்லமாய்க் கிள்ளினார்.
“என் செல்லம்… பாட்டிக்கு எங்கடா முறுக்கு சாப்பிட பல்லு இருக்கு… இருக்கறதே அங்கொண்ணும் இங்கொண்ணுமா நாலு பல்லு…” என்றவர், அதை வாயில் போட்டு சப்பிக் கொண்டிருந்தார்.
“பாத்தி… உன் பல்லு எல்லாம் எங்க போச்சு…” என்றாள் அம்மு அவரது வாயை கவனமாய் பார்த்துக் கொண்டே.
அவள் பேசுவதைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் கெளதம்.
“பாட்டிக்கு வயசாகுதுல்ல… ஒவ்வொரு பல்லா எல்லாம் விழுந்து போயிடுச்சுடா…” என்றார் அவர்.
“அப்ப நீங்களும் என்னை மாதிதி சின்னப் பொண்ணா மாதிருங்க… பல்லு போகாது…” என்றாள் அவள் அதற்கு தீர்வாக.
“ஹஹா… அடி வாயாடி…” என்று அவளை தன் அருகில் இழுத்துக் கொண்டவர்,
“எல்லாருக்கும் வயசாகும்டா… உனக்கும் வயசானா பல்லெல்லாம் போயிடும்…”
“அப்பதின்னா எனக்கு வயசாக வேந்தாம்…” என்றாள் அவள் பெரிய மனுஷியாக.
“ம்ம்… அது சரி…” என்று சிரித்துக் கொண்டவர், “என்ன தம்பி… அம்முவை எப்ப ஸ்கூலில் சேர்த்தப் போறீங்க… அவளுக்கும் மூணு வயசு முடியப் போகுதுல்ல…”
அதைக் கேட்டதும் திகைத்தான் கெளதம்.
“அம்முவுக்கு மூன்று வயது ஆகிவிட்டதா… அப்படியானால் நாங்க வீட்டை விட்டு வந்து மூணு வருஷம் ஆகப் போகுதா…” என்றவனின் மனதுக்குள் அந்த நிகழ்வுகள் வந்து போக, தந்தையின் முகம் தோன்றி வேதனைப் படுத்தியது.
“என்னப்பா யோசிக்கற…  நீங்க இந்த வீட்டுக்கு வரும்போது அம்மு பச்சக் குழந்தை… அடுத்த மாசம் நீங்க இங்கே வந்து மூணு வருஷம் ஆகப் போகுது… ஆமாம்… அம்முவோட பிறந்த நாள் முடிஞ்சிருச்சா… எப்ப வருது…” என்றார் நிலாவிடம்.
“அ…அது வந்தும்மா… அம்முக்கு அ… அடுத்த வாரம் தான் பிறந்த நாள்…” என்றாள் அவள் சமாளிப்பாக. 
“ம்ம்… பிறந்த நாளுக்கு டிரஸ் எல்லாம் எடுத்தாச்சா…”
“இன்னும் இல்லம்மா… இனிமே தான் எடுக்கணும்…”
“சரிம்மா…” என்றவர், “சரி நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன்… நீங்க இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து அதே வாடகை தான் வாங்கறேன்… அதான் அடுத்த மாசத்துல இருந்து வாடகை கொஞ்சம் அதிகம் பண்ணலாம்னு நினைக்கறேன்… ஐநூறு ரூபா வாடகைல சேர்த்திக் குடுத்திருங்க…” தான் வந்த விஷயத்தை சொல்லி முடித்தார் ருக்மணி.
“ம்ம்… சரிங்கம்மா, கொடுத்திடறோம்…” என்றாள் நிலா சம்மதமாக.
“என்ன தம்பி… நீங்க எதுவும் பேசாம இருக்கீங்க… உங்களுக்கு இதுல ஒண்ணும் வருத்தம் இல்லையே…” என்றார் யோசனையுடன் அமர்ந்திருந்த கௌதமிடம்.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லைம்மா… மூணு வருஷமா நீங்க அதே வாடகை வாங்கினதே பெரிய விஷயம்… கண்டிப்பா சேர்த்துக் குடுத்திடறோம்…” என்றான் அவன்.
“ம்ம்… சரிப்பா, அம்முவை பால்வாடிக்கு விடலையா… அந்த சஞ்சய் ரெண்டு நாளா போறானே…” அவன் ப்ரீ கேஜிக்கு போவதை தான் அவர் அப்படிக் கூறினார்.
“இல்லம்மா… அம்முவை நேரடியா எல்கேஜிலயே சேர்த்துக்கலாம்னு இருக்கோம்… பிளே ஸ்கூல்கு அனுப்பலை…” என்றான் கௌதம்.
“அப்பா… நானும் ஸ்கூல் போவத்தா…” என்றாள் அம்மு கண்ணில் ஆர்வம் மின்ன.
“ம்ம்… சரிம்மா, போலாம்…” என்றான் மகளை அணைத்துக் கொண்டே.
“அய்யா… ஜாலி… நானும் பாகெல்லாம் மாத்தித்து ஸ்கூல் போவனே… அப்பா… எனக்கு புது பென்சில், புக்கு, லப்பர், எல்லாம் வாங்கித் ததுவிங்களா…”
“ம்ம்ம் வாங்கித் தருவேண்டா…”
“என் செல்ல அப்பாக் குத்தி…” என்றவள் அவனைக் கட்டிக் கொள்ள, ருக்மணியும், நிலாவும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“நல்ல அப்பாவும் பொண்ணும் தான் போங்க… சரி நிலா, நான் வரேன்… கதவைத் திறந்து போட்டு வந்திருக்கேன்… அம்முச் செல்லம், பாட்டி கூட வரியா…” என்றவர் காலியான காபி டம்ளரை நிலாவிடம் நீட்டினார்.
“ம்ம்… நானும் வதேன் பாத்தி…” என்ற அம்மு,
நிலாவிடம் “அம்மா… நான் பாத்தி வீத்துக்குப் போயி விளையாதுதுதேன்… பாத்தி பாவம்… தனியா இதுக்காங்க… உனக்குதான் அப்பா இதுக்காங்கள்ள… நான் போவத்தா…” என்றாள்.
“ம்ம்… சரிடா, பாட்டியைத் தொந்தரவு பண்ணாம விளையாடணும் சரியா…” என்று மகளை அனுப்பி வைத்தாள் நிலா. கெளதமின் இறுகிய முகமும் சுருங்கிய நெற்றியும் அவன் ஏதோ யோசித்துக் கொண்டிருப்பதை உணர்த்தியது.
அவனது யோசனைக்கான காரணம் நிலாவுக்குப் புரியாமலில்லை. அவன் வரும் வரை அவள் மனதை அலட்டிய விஷயமாயிற்றே… நாளையோடு அவர்கள் வீட்டை விட்டு ஓடி வந்து மூன்று வருடம் ஆகி விட்டது. கௌதமின் தந்தை இறந்தும், மூன்று ஆண்டுகள் ஆகப் போகிறது… தந்தையின் நினைவில் அவனது முகத்தில் தெரிந்த வேதனை அவளுக்கும் மனதை வலிக்க வைக்க, அவனிடம் சற்று ஆறுதலாய்ப் பேச நினைத்தாள்.
“கெளதம்… காப்பி ஆறிடுச்சு, வேற கொண்டு வரட்டுமா…” அன்போடு கேட்டவளைப் பார்க்காமல் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தான் அவன்.
“ப்ளீஸ் கெளதம்… எதையாவது யோசிச்சு மனசை குழப்பிக்காதிங்க…” சடாரென்று அவளை நோக்கி முகத்தை திருப்பினான்.

Advertisement