Advertisement

நேரம் நள்ளிரவு ஒரு மணி… பொம்மிடி ரயில் நிலையம்…
அங்கங்கே பயணிகள் தூக்கக் கலக்கத்துடன் தங்கள் ரயிலுக்காகக் காத்திருந்தனர். பொங்கல் நேரமாதலால் நிறைய சிறப்புப் பேருந்துகள் இருந்தாலும் எல்லா வண்டிகளிலும் மக்கள் கூட்டம் நிறைந்து வழிந்தது. உடலை ஊசியாய்த் துளைத்து நுழைந்த காற்று அவஸ்தையாய் குளிரைத் தோற்றுவிக்க, தவிப்புடன் அங்கிருந்த பயணிகளுக்கான இருக்கையில் அமர்ந்திருந்தான் கார்த்திக். அவனது கண்கள் அனிச்சை செயலாய் நொடிக்கொரு முறை கைக்கடிக்காரத்தை வெறித்துக் கொண்டிருந்தது.
“எந்தப் பிரச்னையும் இல்லாமல் நிலாவைக் கூட்டிட்டு கெளதம் கிளம்பி இருப்பானா…. எந்த விவரமும் இல்லையே… கூப்பிட்டா போனை எடுக்கவும் மாட்டேங்கிறான்…” என நினைத்தவன் மறுபடியும், அலைபேசியை எடுத்து கெளதமின் எண்ணிற்கு அழைத்தான்.
அது முழுவதுமாய் ஒலித்து எடுக்கப்படாமல் அணைந்து போனது.
“என்ன ஆச்சுன்னு தெரியலை… போனை வேற எடுக்க மாட்டேங்கிறான்… சரி நிலாவுக்கு அழைச்சுப் பார்க்கலாம்…” என நினைத்தவன், அவளை அழைக்க முயற்சித்தான்.
செல்போன் இசைத்து நிற்கப்போகும் தருவாயில் எதிர்ப்புறத்தில் எடுக்கப்பட்டது.
“ஹ…ஹலோ… கார்த்திக்…”
“ம்ம்… நிலா… கிளம்பிட்டீங்களா, எதுவும் பிரச்சனை இல்லையே… ஸ்டேஷனுக்கு வந்துட்டு இருக்கிங்களா… கெளதமை கூப்பிட்டேன்… அவன் எடுக்கலை…” அவன் கேள்வியாய் அடுக்கிக் கொண்டே போக, எதிர்புறத்தில் பதட்டமாய் ஒலித்தது நிலாவின் குரல்.
“கா…கார்த்திக்… இங்கே ரொம்பப் பெரிய பிரச்சனை ஆகிடுச்சு… நாங்க கிளம்பினதை வீட்டுல பார்த்துட்டாங்க… அண்ணன் ஆளுங்களை கூட்டிட்டு எங்க பின்னாடி வந்துட்டு இருக்கான்… நாங்க பைக்ல வந்துட்டு இருக்கோம்… எப்படியாவது ட்ரெயின்ல ஏறிட்டு கூப்பிடறோம்… நீங்க…” என்று பேசிக் கொண்டே போனவளின் குரல் காற்றில் தேய்ந்து போக, அவளது அலைபேசி காற்றின் அலைவரிசையில் கை நழுவி சாலையில் விழுந்து உயிரை நிறுத்திக் கொண்டிருந்தது.
“நிலா…நிலா… லைன்ல இருக்கியா, என்னாச்சு… மொபைல் கீழே விழுந்திருச்சா…” என்று அவன் கேட்டு கொண்டிருக்க அவனது குரல் காற்றில் கரைந்து போனது.
பதட்டத்துடன் எழுந்தவன், அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான்.
“கடவுளே… எப்படியாவது என் நிலாவை என்னிடம் நலபடியாக கொண்டு வந்து சேர்த்தி விடு… என் நண்பனுக்கு எந்த ஆபத்தும் வராமல் நீதான் காப்பாத்தணும்…” மனதுக்குள் வேண்டிக் கொண்டவன், “கதிர் மிகவும் கோபக்காரன் ஆயிற்றே… நிலாவை கெளதம் அழைத்து வந்தது தெரிந்து அவனை என்ன சொல்லுவானோ… என்னால் கெளதமிற்கு பெரும் பிரச்சனை ஆகி விட்டதே… அவன் இனி எப்படி அங்கே திரும்ப செல்லுவான்…” யோசித்தவனுக்கு ஒரு வழியும் தெரியவில்லை.
“காதல் தான் பெருசுன்னு அநியாயமா கெளதமை இந்தப் பிரச்சனையில் மாட்டி விட்டாயே கார்த்திக்…” அவனது மனதே குற்றப்படுத்த தவிப்பாய் இருந்தது.
“அய்யோ… இப்போ என்ன பண்ணறதுன்னு தெரியலயே…. நிலா போனுக்கு வேற ஏதோ ஆயிருச்சு போலருக்கே… ம்ம்… வேற வழியில்லை… இனி கெளதம் அழைக்கும் வரை காத்திருக்க வேண்டியது தான்…” என நினைத்தவன், அங்கே காத்துக் கொண்டிருந்த பயணிகளை நோட்டமிடத் தொடங்கினான்.
ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி கவலையுடன் அமர்ந்திருக்க, அவரை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான் அந்த இளைஞன். அந்தப் பெண்மணியின் மகனாய் இருக்கலாம்… சோர்வுடன், உடல்நிலை சரியில்லாதது போல இருந்தான்.
“அம்மா… எப்பவும் என்னைப் பத்தியே நினைச்சு கவலைப் படாதிங்க, எனக்கு ஒண்ணும் ஆகாது… அதான் சென்னை போறோம்ல… கண்டிப்பா எனக்கு சரியாகிடும்… என்னை நினைச்சு வருத்தப்பட்டு உங்க உடம்புக்கு ஏதும் வந்திடப் போகுது…” நம்பிக்கையோடு, அன்னைக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான்.
கவலை நிறைந்த கண்களுடன் மகனது கையைப் பரிவாய்ப் பற்றிக் கொண்டார் அந்தத் தாய். அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்கிற்கு அன்னையின் நினைவு வந்தது.
“அம்மா, என்னை மன்னிச்சிருங்கம்மா… இந்த விடியல் கண்டிப்பா உங்களுக்கு சந்தோஷமா இருக்கப் போறதில்ல… என் மனசுக்குப் பிடிச்சவளோட நான் ஊரை விட்டுப் போகிறேன்… என்னைத் தேட வேண்டாம்னு நான் எழுதி வச்சிட்டு வந்த கடிதம் கண்டிப்பா உங்களுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும்னு எனக்குத் தெரியும்… உங்களுக்கு பெரிய வேதனையா இருக்கும்னும் எனக்குத் தெரியும்…”
“கொஞ்சம் பொறுத்துக்கங்க மா… நிலாவோட நான் சென்னைல செட்டில் ஆனதும் உங்களையும் என்னோட கூட்டிட்டுப் போயிடறேன்… அது வரைக்கும் நான் அசலூர் பொண்ணோட ஓடிப் போயிட்டேன்னு யார் கிட்டயும் சொல்லிடாம நான் லெட்டர்ல எழுதி இருக்குற போல வேலை விஷயமா வெளியூர் போயிருக்கிறேன்னு நீங்க சொல்லிட்டாப் போதும்…” என்று அன்னைக்கு மனதுக்குள் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான்.
அப்போது அவனது அலைபேசி அழைக்கவே எடுத்துப் பேசியவனின் முகம் யோசனையாய் சுருங்கியது.
“என்ன கெளதம் சொல்லற… சென்னை எக்ஸ்பிரஸ்க்கு பதிலா சென்னை டொரண்டோ எக்ஸ்பிரஸ்ல மாறி ஏறிட்டிங்களா… அய்யய்யோ, அது ஸ்பெஷல் வண்டியாச்சே… அது பொம்மிடில நிறுத்த மாட்டானே… மதுரைல எடுத்தா சேலம் அடுத்து சென்னைல தான் நிறுத்துவாங்க…” பதறினான்.
“இப்போ நாங்க என்னடா பண்ணுறது… கதிர் ஆளுங்களோட எங்களைத் துரத்திட்டு கார்ல வந்துட்டு இருக்கான்… நாங்க பைக்ல எப்படியோ குறுக்கு வழியா ரயில்வே ஸ்டேஷன் வந்து சேர்ந்துட்டோம்… இந்த டிரெயின் நின்னுட்டு இருந்துச்சு… சென்னை வண்டியானு கேட்டு, ஆமான்னு ஒருத்தர் சொன்னதும், அவசரத்துல கவனிக்காம ஏறிட்டோம்… அங்கே இருந்தா கதிர் வந்திருப்பானே…”
“ம்ம்… சரி கெளதம், நீ சொல்லுறதும் சரிதான்… நீங்க பத்திரமா சென்னை போயி இறங்குங்க… நாம போக நினைச்ச சென்னை எக்ஸ்பிரஸ் வரதுக்கு இன்னும் ரொம்ப நேரம் இருக்கு… நான் ஒண்ணு பண்ணறேன், பஸ்ல சென்னை வந்திடறேன்… நீங்க பத்திரமா வாங்க…”
“ம்ம்… சரி கார்த்திக், விஷயம் கை மீறிப் போயிடுச்சு… எல்லாரும் என்மேல கொலவெறில இருக்காங்க… அவங்க கைல மட்டும் நாங்க மாட்டி இருந்தோம், அவ்ளோ தான்… இதெல்லாம் ரொம்பத் தப்புன்னு சொன்னா நீ கேக்கறியா… சரி, இனி இதைப் பத்திப் பேசி பிரயோசனமில்லை… வர்றதைப் பார்த்துக்கலாம்… நீ பத்திரமா பஸ்ல வந்து சேரு…” என்றான் கெளதம்.
“ம்ம்… நீ எவ்ளோ பெரிய ரிஸ்க் எடுத்திருக்கேன்னு எனக்குத் தெரியும் கெளதம்… இதை என் வாழ்நாளில் நான் மறக்க மாட்டேன்… இது ரொம்பப் பெரிய உதவி… நிலாவை பத்திரமாய்ப் பார்த்துக்கோ… ரெண்டு பேரும் ஜாக்கிரதையா சென்னை வாங்க, நானும் வந்திடறேன்… அங்கே பேசிக்கலாம்… வச்சிடட்டுமா…”
“ம்ம்… சரி டா கார்த்திக்… பார்த்துடா, சீக்கிரமா வந்திடு…” என்று கெளதம் கூறியதும் அலைபேசியை அணைத்தான் கார்த்திக். தனது கருப்பு நிற பாகை எடுத்துக் கொண்டு பேருந்து நிலையத்தை நோக்கி சென்றான்.
சென்னை செல்லுவதற்கான பேருந்துகள் எல்லாம் அந்த நேரத்திலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. மக்கள் பொங்கல் விடுமுறையைக் கொண்டாட தங்கள் ஊருக்கு பயணப்படத் தயாராகிக் கொண்டிருந்தனர். கார்த்திக் பேருந்து நிலையத்துக்குள் நுழையும் போது ஒரு சென்னைப் பேருந்து புறப்படத் தயாராய் நிற்க, அதில் பயணிகள் நிறைந்திருந்ததால், அவனால் ஏற முடியவில்லை. அடுத்தடுத்து பேருந்துகளும் நிறைந்து கொண்டே இருந்தது.
கெளதமை அழைத்து தான் பேருந்துக்காய் காத்திருக்கும் விவரத்தைக் கூறிவிட்டு காத்திருந்தான் கார்த்திக். ஒரு சென்னை அரசுப் பேருந்து அப்போது தான் உள்ளே நுழைய காத்திருந்த பயணிகள், முண்டியடித்துக் கொண்டு இருக்கையைப் பிடிக்கப் பாய்ந்தனர்.
கார்த்திக் எப்படியோ திக்கித் திணறிப் பேருந்துக்குள் நுழைந்து மூவர் அமரும் இருக்கையில் ஓரமாய் இருந்த இருக்கையில் அமர்ந்தான். கூட்டம் நெட்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைய, நிறையப் பயணிகள் சீட் கிடைக்காமல் நின்று கொண்டிருந்தனர். சிறிது நேரத்திலேயே பேருந்து புறப்பட்டு விட அலைபேசியைத் தேடியவன் காணாமல் திகைத்தான்.
“நெருக்கியடித்துக் கொண்டு பேருந்தில் ஏறிய போது கீழே எங்கானும் விழுந்து விட்டதோ… இல்லாவிட்டால் எவனாவது அடித்து விட்டானா… அய்யய்யோ, மொபைலைக் காணவில்லையே… இப்போது என்ன செய்வது…” என்று நினைத்தவன், புரியாமல் குழப்பத்துடன் அமர்ந்திருந்தான்.
“ச்சே, இன்னைக்கு பார்த்து ஏன் எல்லாம் இப்படியே நடக்குது… இப்போ எப்படி நான் கெளதம்க்கு கூப்பிட்டு சொல்லுவேன்… இனி பஸ்ல இருந்து இறங்கி ஏதாவது பூத்துல போய் தான் அவங்க கிட்டே பேச முடியும்…” தன் தலைவிதியை நொந்து கொண்டே அமர்ந்திருந்தவன் வெளியே பார்வையைப் பதித்தான். நிறைந்திருந்த இருட்டில் கடந்து செல்லும் ஓரிரு வெளிச்சப் புள்ளிகள் மட்டுமே.
விடியலுக்காய் காத்திருக்கும் வானம் போல அவனும் விடிவதற்காய் காத்திருக்கத் தொடங்கினான். படிக்கு அருகில் நின்றிருந்த பயணிகளை உள்ளே தள்ளி நிற்குமாறு நடத்துனர் திட்டிக் கொண்டிருக்க, கார்த்திக்கின் அருகில் வந்து நின்றான் ஒருவன். சுற்றுமுற்றும் பார்த்தவன் மேலே லக்கேஜை வைக்க இடம் இல்லாமல் கையில் ஒரு பாகைப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான்.
கார்த்திக்கிடம், “சார்… நீங்க சென்னையா…” என்றான்.
“ஆமாம்… ஏன்…” என்றான் கார்த்திக்.
“நானும் சென்னை தான்… இந்த பாகைக் கொஞ்சம் மடில வச்சுக்கறிங்களா, ப்ளீஸ்…” என்றான் கையில் இருந்த சின்ன பாகை நீட்டி. ஆள் பார்ப்பதற்கு இளவயதில் ஸ்மார்ட்டாக இருந்தான்.
அவனை ஏறிட்ட கார்த்திக், “மேலே லக்கேஜ் வைக்குற இடத்துல வச்சுக்குங்களே…” என்றான்.
“மேலே இடம் இல்லை சார்… இதுல கண்ணாடி பொருள் வேற இருக்கு… வெயிட் இருக்காது, கூட்டத்துல கீழே விழுந்திடுமோனு பயமா இருக்கு… கொஞ்சம் பத்திரமா மடியில வச்சுக்கங்க சார்… எனக்கு சீட் கிடைச்சு நான் உக்கார்ந்ததும் வாங்கிக்கறேன்….” என்றான் கெஞ்சலாக.
சம்மதமாய் அவன் கையில் இருந்த கருப்பு நிற சின்ன பாகை வாங்கி மடியில் வைத்துக் கொண்டான் கார்த்திக். இரவு முழுதும் உறங்காமல் அசதியாய் இருக்க வெகுநேரம் ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தவன், தன்னை மறந்து உறங்கத் தொடங்கினான்.
விடியலுக்கு அடையாளமாய் மெதுவாய் வெளிச்சம் வரத் தொடங்கி இருந்தது. பேருந்து சென்னையை நெருங்கிக் கொண்டிருக்க, சட்டென்று வண்டி நின்றது. ரோட்டில் ஒரு ஜீப் நின்றிருக்க, அதன் அருகில் நின்று கொண்டிருந்த காவல்துறை அலுவலர்கள், பஸ்ஸில் உள்ள பயணிகளைப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று டிரைவரிடம் கூறிக் கொண்டே பேருந்துக்குள் நுழைந்தனர்.
“எல்லாரும் அவங்கவங்க உடமையைக் கையில் எடுத்துக்கோங்க…” என்றவர்கள் பரிசோதனையைத் தொடங்கினர். இது எதுவும் தெரியாமல் அசதியில் உறங்கிக் கொண்டிருந்தான் கார்த்திக். அவனை ஒரு போலீஸ்காரர் தட்டி எழுப்ப தூக்கக் கலக்கத்துடன் திருதிருவென்று விழித்தான் அவன்.
“தம்பி, உன் பாகை ஓப்பன் பண்ணு…” என்றார் அவர்.
“அது…வந்து… சார்… இது என் பாக் இல்லை சார்…” என்றவன், அந்த பாகின் உரிமையாளரைத் தேடி பார்வையை சுழற்றினான். அப்போது தான் போலீஸ் பட்டாளம் பேருந்தில் எல்லோரையும் பரிசோதித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். “அப்ப இது யாரோட பாக்…” என்றார் அந்தப் போலீஸ்காரர் சந்தேகமாக.
“இங்கே ஒருத்தர் நின்னுட்டு இருந்தார்… பாகை என் மடில வச்சுக்க சொன்னார்… அவர் இங்கதான்…” என்றவன், மீண்டும் பேருந்துக்குள் கண்ணை சுழற்ற, “எழுந்திருடா…” என்றார் அந்தப் போலீஸ்காரர்.
“இந்த மாதிரி எத்தனை பேரைப் பார்த்திருப்போம்… பாகை ஓப்பன் பண்ணுடா, திருட்டுப் பயலே…” என்றவர் அவன் கன்னத்தில் ஓங்கி அறைய, அதிர்ந்து போனான் அப்பாவி கார்த்திக்.
உன் முகம் பார்த்து மயங்குகிறேன்…
உன் குரல் கேட்க ஏங்குகிறேன்…
இருந்தும் எனக்குள் தயங்குகிறேன்…
என்னைக் கேட்டா எனக்குள் வந்தாய்…
ஏன் தவிக்க விட்டு விலகுகின்றாய்…
உதடுகள் உரைத்தது காதலா…
உள்ளத்தில் உணர்ந்தது காதலா…
காலம் கடந்து உணர்ந்தேன் – என்
காதல் நீயென அறிந்தேன்…
என்னை உருக்கி உன்னை செய்து
உன்னில் என்னை உணர்ந்தேனே…
விட்டுக் கொடுக்கத் தெரியாதவள் – உன்னில்
எனையே விட்டுக் கொடுத்து தவிக்கின்றேன்…
யாருக்கும் கட்டுப்படாதவள் – உன்
கண் பார்வையில் கட்டுண்டு நிற்கிறேன்…
அமைதியாய் அகிம்சை செய்கிறாய்…
ஆயுதம் இன்றி என்னைக் கொல்கிறாய்…
உள்ளமெல்லாம் நீயிருந்தும்
ஊமையாகி அழுகின்றேன்…
இருதலைக் கொல்லி எறும்பானேன்…
இதயம் இருந்தும் இரும்பானேன்… உனை
மறக்க நினைத்து எனக்குள் புதைக்கிறேன்…
நீயோ மண்ணைத் துளைக்கும் விதையாக
மனதில் முட்டி முளைக்கிறாய் துளிராக…

Advertisement