Advertisement

நிலா – 12
சென்னை மத்திய புழல் சிறைச்சாலை.
இரவு நேரம். சுவரில் ஒட்டிக் கொண்டிருந்த பழைய கடிகாரத்தில் சிறிய முள் பெரிய முள்ளை ஒன்பதில் எட்டிப் பிடித்திருக்க, அதன் பெண்டுலம் ஒன்பது முறை இசைத்து ஓய்ந்தது. அது, நான் யாருக்கும் அடிபணியாமல் ஓடிக் கொண்டே இருப்பேன் எனக் காலம் கர்வத்துடன் கூறுவது போலத் தோன்றியது.
எங்கேயோ விடாமல் குரைத்து ஓய்ந்தது, நாயின் குரல் ஒன்று. இரவு நேர சில்வண்டுகள் தங்கள் பாடலை ரீங்காரத்துடன் ஆரம்பித்திருக்க, சிறை அலுவலர் மாணிக்கம் செல்லில் இருந்த கைதிகளின் அறையை நோட்டமிட்டுவிட்டு அடுத்த செல்லுக்குள் நுழைந்தார்.
3000 கைதிகளை அடைப்பதற்கான வசதியுள்ள, புழல் மையச் சிறைச்சாலை வளாகம் அமைதியாய் இருந்தது. இரவு உணவு முடிந்து கைதிகள் எல்லாம் அறையில் இருக்க வராண்டாவில் இருந்த டியூப் லைட், சோகையாய் வெளிச்சத்தை துப்பிக் கொண்டிருந்தது. மாணிக்கம், ஒவ்வொரு அறையாக நோட்டமிட்டுக் கொண்டே கையில் இருந்த இரும்புத் தடியால் கைதிகளின் அறைக் கதவின் கம்பிகளைத் தட்டிக் கொண்டே நடந்தார். அந்த அறையைக் கடக்கும் போது நின்றார்.
“என்னப்பா காசி, தூக்கம் வரலயா… மோட்டு வளையைப் பார்த்து சிரிச்சுட்டு படுத்திருக்கே…” தரையில் மல்லாந்து படுத்திருந்தவன், அவர் குரலைக் கேட்டதும் எழுந்து கம்பிக் கதவின் அருகே புன்னகையுடன் வந்தான். சிறைக் கைதிகளுக்கான வெள்ளை சீருடையில் இருந்தாலும் கசங்காமல் நேர்த்தியாய் அணிந்திருந்தான்.
“ம்ம்… தூங்கணும் சார்… தூக்கம் தான் வருவேனான்னு பிடிவாதம் பிடிக்குது…”
“ஓ… எப்படித் தூக்கம் வரும்… நாலு வருஷம் சிறை தண்டனை வாங்கிட்டு உள்ள வந்த… இப்ப தண்டனையைக் குறைச்சு மூணு வருஷத்துலயே உன்னோட நன்னடத்தையால வெளிய விடப் போறாங்களே, சந்தோஷமா தானே இருக்கும்…” சிரித்தார் மாணிக்கம்.
அவனது நடத்தையை கவனித்த தலைமை நன்னடத்தை கண்காணிப்பு அலுவலர், அவனைப் பற்றி நல்ல விதமான அறிக்கையை நீதிமன்றத்திற்கு அனுப்ப, அவனது தண்டனை காலத்தை நீதிமன்றம் குறைத்திருந்தது.
“ம்ம்… மூணு வருஷம் என் மனசு பட்ட வேதனை எனக்கு தான் தெரியும்… இப்ப வெளியுலக காத்தை சுவாசிக்கப் போறோம்னு நினைச்சாலே ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்…”
“நீ இந்த சிறைக்கு வந்த நாள்ல இருந்து எப்பவும் கேக்கணும்னு நினைச்சுக்குவேன்… சரியான சந்தர்ப்பம் அமையல… உன்னைப் பார்த்தா தப்பு பண்ணற ஆளைப் போலத் தெரியலயே… நல்லா படிச்ச பையனைப் போலவும் இருக்கே… நீ எப்படி இந்த வெடிகுண்டு வழக்குல சிக்கினே…”
அவரையே ஒரு நிமிடம் உறுத்து நோக்கினான் அவன்.
“விதி… என் தலையில் எழுதி வைக்கப்பட்ட விதி… அன்னைக்கு சனி என் மடியில வந்து உக்கார்ந்துகிட்டு இருந்துச்சு… அதை மாத்த யாரால முடியும் சார்…” என்றவனின் குரலில் விரக்தி இருந்தது.
“உன்னைப் பார்க்க இது வரைக்கும் யாருமே ஜெயிலுக்கு வந்ததில்லை… நீயும் வெளியுலகத்துல யாரையுமே தொடர்பு கொள்ளல…. உன்னோட விரக்தியான பதிலே நீ தப்பு எதுவும் பண்ணியிருக்க மாட்டேன்னு சொல்லுது…” அவன் அமைதியாய் இருக்க அவர் தொடர்ந்தார்.
“இந்த சிறைச்சாலை எத்தனையோ விதமான கைதிகளைப் பார்த்திருக்கு… ரொம்ப மோசமான சுபாவம் உள்ளவங்கல்ல இருந்து சாட்சி சந்தர்ப்பம் காரணமா சூழ்நிலைக்கு பலியாகி, குற்றம் சுமத்தப்பட்டு சிறை தண்டனை அனுபவிச்ச நிரபராதிகள் வரைக்கும் பலவிதமான சுபாவமுள்ள மனிதர்கள்… நீயும் அந்த வகைல தான், சந்தர்ப்பம் காரணமா கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவிக்கறேன்னு நினைக்கறேன்…”
“ம்ம்… ரொம்ப சரி சார், என்னோட சந்தர்ப்பமும், சூழ்நிலையும் என்னைக் குற்றவாளியாகிடுச்சு… ஆனால் நான் எந்தத் தப்பும் செய்யலைன்னு என் மனசாட்சிக்குத் தெரியும்…” அவன் முகமே மனதின் பக்குவத்தை சொல்லியது.
“அது சரி, ஏன், நீ நிரபராதின்னு உன்னை நிரூபிக்க முயற்சி செய்யல… உனக்காக வாதாட யாரையும் ஏன் ஏற்பாடு பண்ணிக்கலை…”
“சார்… இன்னும் சில நாள்ல நான் சிறையில் இருந்து விடுதலை ஆகப் போறேன்… இப்ப எதுக்கு சார் அதெல்லாம், விடுங்க…” என்றான் அவன்.
“இல்லப்பா… ஏதோ ரொம்ப நாளா மனசுக்குள்ள உறுத்திட்டே இருந்துச்சு… இப்போதாவது தெரிஞ்சுக்கலாமேன்னு தான் கேட்டேன்… எனக்கும் உன் வயசுல ஒரு மகன் இருக்கான்… வாழ வேண்டிய வயசுல சிறை தண்டனை அனுபவிக்கறதுங்கிறது கொடுமை… எதிர்காலமே கேள்விக் குறியாகிடும்… என்ன நடந்துச்சுன்னு என்கிட்டயாவது சொல்லு காசி… உன் மன பாரம் குறையுமே…” என்றார் அவர்.
அவரையே தீர்க்கமாய் பார்த்தவன், “ம்ம்… சொல்லறேன் சார், என் பேர் காசியில்லை… கார்த்திக், நான் அநாதை இல்லை… எனக்கும் குடும்பம் இருக்கு…” என்றான்.
பெயரையே அவன் மாற்றி சொன்னதைக் கேட்டதும் அவர் திகைத்துப் போனார்.
“என்னப்பா புதுசா ஒரு பெயரை சொல்லுற… ரெக்கார்டுல உன் பெயர் காசி, நீ ஒரு அனாதைன்னு தானே இருக்கு… அதெல்லாம் பொய்யான தகவலா…”
“ம்ம்… ஆமாம் சார், இந்த வழக்குல கைதாகி வரும்போது அப்படித்தான் இங்க சொல்லி இருக்கேன்… நான் ஒரு MBA பட்டதாரி… சந்தர்ப்ப சூழல் என்னை குற்றவாளியா அடையாளம் காட்டிருச்சு… என் உண்மையான முகத்துக்கு இதனால எந்த பங்கமும் வந்திடக்கூடாதுன்னு தான் ஒரு முகமூடியை நானே போட்டுகிட்டேன்…”
“ஓ… என்னப்பா சொல்லுறே… இவ்ளோ படிச்ச பையனா இருந்தும் எப்படி உன் பேர்ல உள்ள வழக்கை எதிர்த்து எதுவும் செய்யாம இருந்திருக்கே…”
“அதுக்கு காரணம் இருக்கு சார்… என் அப்பா எப்பவும் சிறைக்கு வந்திட்டு போற ஒரு நிரந்தர குற்றவாளி… அவர் அடிதடி, சண்டைன்னு ஒரு குட்டி தாதாவா இருந்தவர்… வெட்டு, குத்துன்னு அப்பப்போ அவரைப் போலீஸ் கைது செய்துட்டு போறதெல்லாம் சர்வ சாதாரணம்…” சற்று நிறுத்தியவன், 
“என் அம்மா ரொம்ப அப்பாவி… புருஷனோட அராஜக குணம் பிடிக்கலைன்னாலும் அவங்களால எதுவும் செய்ய முடியல… நான்  கொஞ்சம் பெருசானதும் அப்பாவைக் கேள்வி கேக்க ஆரம்பிச்சேன்… அவரோட பையன்ங்கிற காரணத்தாலேயே என்னோட யாரும் அவங்க வீட்டுப் பசங்களைப் பழக விட மாட்டாங்க… எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போயிரும்… ஒரு நாள் அப்பாவைக் கண்டபடி திட்டிட்டேன்… அதுல கோபம் வந்து அப்பா என்னை நல்லா அடிச்சுட்டார்… அம்மா பொறுக்க முடியாம அப்பாவைத் தடுக்கப் பார்த்தாங்க… அவர் என்னைக் கொன்னே ஆகணும்னு அருவாளைத் தூக்கவும் அம்மா அவரைத் தள்ளிவிட்டுட்டாங்க…”
“ம்ம்… அப்புறம் என்னாச்சு…” என்றார் மாணிக்கம்.
“இதுவரை தன்னை எதிர்த்து ஒரு கேள்வி கூட கேக்காம இருந்த பொண்டாட்டி தன்னைப் பிடிச்சுத் தள்ளி விட்டுட்டாளேன்னு அவருக்குத் தாங்க முடியாத கோபம் வந்திருச்சு… நல்லா தண்ணி அடிச்சிட்டு வந்தவர், அம்மாவை அடி உதைன்னு பின்னி எடுத்திட்டார்… அன்னைக்கு கோவிச்சுகிட்டு வீட்டை விட்டுப் போனவர் தான்… கொஞ்ச நாளைக்குப் பிறகு அவர் ஏதோ கொலை வழக்குல ஜெயிலுல இருக்கார்னு தெரிஞ்சுது… அப்புறம் அவர் அங்கயே மாரடைப்புல இறந்துட்டதா செய்தி வந்துச்சு…”
“ஓ…” என்றார் மாணிக்கம் வருத்தத்துடன்.
“போலீஸ்காரங்க விசாரணைல அடி தாங்காம இறந்து போயிட்டார்னு சிலர் சொன்னாங்க… என் அம்மா எதையும் கண்டுக்கலை… அதுக்குப் பிறகு இருக்குற காடு, கழனியை வச்சு அம்மா என்னை நல்லாப் படிக்க வச்சாங்க… ஆனாலும் என்னோட யாருமே பழக மாட்டாங்க… என் அப்பா செய்த தப்புக்கு எல்லாரும் என்னை வெறுத்தாங்க… நான் என்ன தப்பு பண்ணினேன்… எல்லாரும் என்னை விட்டு விலகிப் போறாங்கன்னு நான் எத்தனையோ நாள் தனிமைல அழுதிருக்கேன்… அது ஒரு ஏக்கமாவே என் மனசுல இருந்துச்சு…”
“ம்ம்… சரி தம்பி, அதுக்கும் நீ இந்த வழக்குல உள்ளே வந்ததுக்கும் என்ன சம்மந்தம்…” என்றார் அவர் புரியாமல்.
“ம்ம்… சொல்லறேன் சார்…” என்றவன் தொடர்ந்தான்.
“தனிமைல மூச்சு முட்டி நான் தவிச்சுட்டு இருக்கும் போது தான் எனக்கு என் பள்ளியில் புதிய ஒருத்தனோட நட்பு கிடைச்சது…” நண்பனைப் பற்றிய நினைவில் அவன் முகத்தில் புன்னகை பூத்தது.
“அதல பாதாளத்துல விழுந்து கிட்டு இருந்த எனக்கு, என்னைக் காப்பாத்த வந்த தேவதூதன் மாதிரி… வறண்ட பாலைவனத்துல தண்ணி கிடைக்காம செத்திட்டு இருந்த எனக்கு, தாகத்தைத் தணிக்க வேண்டி கடவுள் அனுப்பிய மழை போல ஒருத்தன் வந்தான்… என் நண்பன் கெளதம்… அவன் அறிமுகம் கிடைச்ச பின்னால தான் எனக்கு வாழ்க்கைல ஒரு பிடிப்பு வந்துச்சு… எனக்காக தன் உயிரையே கொடுக்கத் தயங்காத என் நண்பன்…” சொல்லும் போதே அவனது உடல் சிலிர்த்தது.
“ம்ம்… அந்த மாதிரி நண்பன் இருந்தும் ஏன் நீ இந்த வழக்குல இருந்து வெளியே வர முயற்சி செய்யலை…” குறுக்கிட்டார் மாணிக்கம்.
“நான் யாருக்குமே இந்த விஷயத்தைப் பத்தி தெரியப் படுத்தலை சார்…”
“சரி… அப்புறம் என்னாச்சு…”
“என்னோட உலகமே அவன் தான்னு நான் நினைச்சிட்டு இருக்கும் போது தான் என் தேவதையைப் பார்த்தேன்…. நிலா… வானத்து நிலவு பூமிக்கு இறங்கி வந்தது போல அவள் இருக்கிற இடமே அவ்ளோ பிரகாசமா இருக்கும்… அவளை என் உயிருக்கு உயிராய் நேசிக்கத் தொடங்கினேன்… அவ என் வாழ்க்கைல வந்தா சின்ன வயசுல இருந்து நான் இழந்துட்ட சந்தோசத்தை எல்லாம் திரும்ப அனுபவிக்க முடியும்னு நம்பினேன்… அவகிட்ட என் காதலையும் சொன்னேன்… அவளை என் உயிரா நினைச்சேன்…” சொல்லும்போதே அவள் நினைவில் அவன் முகம் மென்மையானது.
“அந்தப் பொண்ணும் உன்னை விரும்புச்சா…”
“ம்ம்… அவளும் என் காதலை ஏத்துகிட்டா, அவளோட நினைப்புல நாட்கள் சந்தோஷமா போயிட்டு இருந்துச்சு… அப்புறம், நாங்க படிப்பை முடிச்சதுமே  திடீர்னு அவளுக்கு கல்யாணம் முடிவாகிருச்சு… வெளிநாட்டுல வேலை செய்யுற அவளோட அத்தை பையன் விடுமுறைல இந்தியா வரவும், கல்யாணம் பண்ணி இவளையும் அவனோட அனுப்பி வைக்குறதா வீட்டுல முடிவு பண்ணிட்டாங்க… உடனே கல்யாணம்னு சொல்லிட்டாங்க… எங்களுக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியலை… என்னோட நண்பன் கெளதம் வேற சொந்தத்துல யாரோ இறந்துட்டாங்கன்னு வெளியூர் போயிருந்தான்… உதவி பண்ணவும் வேற யாருமில்லை…”
“நீ போயி அந்தப் பொண்ணு வீட்டுல பேசி இருக்கலாமே…” என்றார் அவர் பொறுப்பான தந்தையாக.
“அதில் ஒரு சிக்கல் இருக்கு… ஒண்ணு, எங்க ஊருக்கும் அவங்க ஊருக்கும் எப்பவும் சேராது… அடிதடி, ரகளைன்னு எப்பவும் நடக்கும்… இன்னொன்னு பக்கத்து ஊரா இருந்தாலும் என் அப்பாவைப் பத்தி தெரிஞ்சதால அவங்க வீட்டுல கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க… அவங்க நல்ல வசதியான குடும்பம்…”
“ஓ… அப்புறம் என்ன ஆச்சு… அந்தப் பொண்ணு அந்த மாப்பிள்ளையையே கட்டிகிட்டும்னு விட்டுட்டியா…”
“இல்லை, நிலாவோட கல்யாணத்துக்கு முந்தின நாள் கெளதம் ஊர்ல இருந்து வந்திட்டான்… அவன்கிட்ட விஷயத்தை சொல்லி, எப்படியாவது நிலாவை அவ வீட்டுல இருந்து கூட்டிட்டு வர சொல்லிக் கெஞ்சினேன்… அவன் முதல்ல ஒத்துக்கவே இல்லை… அப்புறம் நான் நிலா எனக்குக் கிடைக்கலேன்னா, என் உயிரையே போக்கிக்குவேன்னு சொன்னதும் சம்மதிச்சுட்டான்…”
“என்னது… கல்யாணத்துக்கு முந்தின நாள் பொண்ணைக் கூட்டிட்டு வந்துட்டிங்களா…” அதிர்ச்சியாகக் கேட்டார் மாணிக்கம்.
“ம்ம்… எங்களுக்கு வேற வழி இல்லை… முந்தின நாள் ராத்திரி நிலாவைக் கூட்டிகிட்டு கெளதம் சென்னைக்கு ரயில் ஏறிடுவான்… அடுத்த நிறுத்தத்துல அதே ரயில்ல நானும் ஏறிடுவேன்… இதான் பிளான்… அது பொங்கல் சமயம்… எல்லா ரயில், பேருந்துலயும் ரொம்பக் கூட்டம்… கெளதம் நிலாவைக் கூட்டிட்டு கிளம்பும் போது அவங்களை நிலா வீட்டு ஆளுங்க பார்த்துட்டு துரத்திட்டு வந்தாங்க…”
“அப்புறம்…” என்று மாணிக்கம் கேட்க,
“கெளதம் பைக்ல வந்ததால குறுக்கு வழியா எப்படியோ ரயில் நிலையத்துக்கு வந்து அங்கே கிளம்பறதுக்கு தயாரா நின்னுட்டு இருந்த ரயில்ல ஓடி வந்து ஏறிட்டாங்க…. ரயில்ல ரொம்பக் கூட்டம்… ரயில் எண்ணை அவசரத்துல கவனிக்கலை…. அது நாங்க ஏற வேண்டிய ரயில் இல்லை… அதுக்கு முன்னாடி வர வேண்டிய ரயில், அன்னைக்கு தாமதமா வந்து நின்னுட்டு இருந்திருக்கு… இதான் நாங்க ஏற வேண்டிய வண்டின்னு நினைச்சு இதுல ஏறிட்டாங்க… அப்புறம் தெரிஞ்சாலும் இறங்கினா நிலா  ஆளுங்க கிட்டே மாட்டிக்க வேண்டி வரும்…”
“ம்ம்… அதும் சரிதான், அப்புறம் அவங்க என்ன பண்ணினாங்க… நீ எப்படி இந்தக் கேசுல வந்த…” அவருக்கு இப்போதும் தெளிவாகவில்லை.
“ம்ம்… சொல்லறேன் சார்…”  என்றவனின் கண்ணில் அந்த நாள் காட்சி விரிந்தது.

Advertisement