Advertisement

“இங்க பாரு கார்த்திக்… இந்தக் காதல், கண்றாவில எல்லாம் மாட்டிக்காம ஒழுங்கா படிப்பை முடிக்கப் பாரு… இந்த மண்ணாங்கட்டி எல்லாம் வாழ்க்கைக்கு ஒத்து வராது… அந்த மாயைல தேவையில்லாம மாட்டிக்கிட்டு உன் வாழ்க்கையை வீணாக்கிக்காதே…”
“கெளதம்… ப்ளீஸ், இது எனக்கு இப்போ தோணின உணர்வு இல்ல… ரெண்டு வருஷமா எனக்குள்ளேயே ஒளிச்சு வச்சு அந்தக் காதலைத் தவிர்க்க முடியாம தவிச்சிட்டு இருக்கேன்… என்னால நிலாவை மறக்க முடியாது, மறந்தா நான் செத்திடுவேன்…” உணர்ச்சி வேகத்தில் அவன் பேசிக் கொண்டிருக்க, கெளதம் நிலாவை முறைத்துவிட்டு கார்த்திக்கிடம் திரும்பினான்.
“சும்மா உளறாதேடா, நீயா கற்பனை பண்ணிக்காதே… காதல்னு எதுவும் இல்லை… அது ஒரு மாயை… அது உன் வாழ்க்கையை அழிச்சிடும்… இந்தப் பெண்களை நம்பாதே… அவங்க நம்மை அழிக்கப் பிறந்தவங்க…”
“இல்லை கெளதம், நான் உளறலை… உணர்ச்சி வசப்பட்டு காதலை சொல்லலை… நாங்க காதலிச்சா என்னெல்லாம் பின் விளைவுகள் வரும்னு யோசிக்காமலும் இல்லை… என்னால் நிலாவை மறக்க முடியலை… அவளை இழந்தா நான்…நான்… செத்திருவேன்…” கலங்கினான் கார்த்திக்.
“போதும் நிறுத்துடா… அந்த அளவுக்கு உனக்கு காதல் கண்ணை மறைக்குதா… இடியட்…” கோபமாய் நண்பனைத் திட்டியவனின் மீது ஆத்திரமாய் வந்தது நிலாவுக்கு.
அவன் கார்த்திக்கை புரிய வைப்பதாய் நினைத்து பெண்களையும், காதலையும் இழிவு படுத்திப் பேசிக் கொண்டே போக, நிலாவுக்கு சகிக்க முடியாமல் கோபம் வந்தது. அவள் அங்கே நிற்பதைப் பொருட்படுத்தாமல் இவர்களுக்குள் பேசிக் கொள்ள, அவள் எதற்கு அங்கே நிற்க வேண்டும் என நினைத்தவள், கோபத்துடன் நிமிர்ந்தாள்.
“இங்க பாருங்க கார்த்திக்… உங்க ஆருயிர் நண்பன் காதலைப் பத்தியும், பெண்களைப் பத்தியும், இப்படிக் கேவலமாப் பேசறதைக் கேக்கறதுக்கா என்னை வர சொன்னிங்க… நான் போறேன்…” என்றாள் கெளதமை முறைத்துக் கொண்டே.
“நிலா… ப்ளீஸ் போயிடாதே… அவனுக்கு என்னோட காதலின் ஆழம் தெரியாமப் பேசறான்… நான் உன்னை என் உயிராய் நினைக்கறேன்… நீ இல்லைன்னா நான் செத்திடுவேன் நிலா…” கண்ணீருடன் கெஞ்சிக் கொண்டே அவள் கையைப் பற்றி நிறுத்தினான்.
“கார்த்திக், என்ன இது எதுக்காக அவகிட்டே கெஞ்சிட்டு இருக்கே… இதெல்லாம் உனக்கு சரிப்பட்டு வராது… காதலாம்… காதல்… கருமம் பிடிச்ச காதல்…” கெளதமின் வார்த்தைகள் நிலாவுக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை.
கௌதமின் முன்னால் அவனது நண்பன் தன்னிடம் காதலிப்பதாய் சொல்லி செத்து விடுவேன் என்று கெஞ்சவும் அவளுக்கு மிகவும் பெருமையாய் இருந்தது. பெண்புத்தி பின் புத்தி என்பதற்கு ஏற்ப, அறியாத வயதில், புரியாத காதலை கௌதமின் திமிரை அடக்க வேண்டும் என்பதற்காய் ஒத்துக் கொண்டாள் அவள்.
“ஏன்… கார்த்திக்கிற்கு காதலிக்கும் உரிமை இல்லையா… உங்களுக்கு காதலைப் பற்றி என்ன தெரியும்… ஒரே கண்ணோட்டத்தில் எல்லாப் பெண்களையும் பார்ப்பது தானே உங்கள் வழக்கம்… உங்கள் நண்பனும் காதலிக்கக் கூடாது என்று தடை போட உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது…” கெளதமிடம் சாடியவள்,
“கார்த்திக், எப்படியும் நான் ஒருவரை கல்யாணம் பண்ணிதான் ஆகணும்… அந்த ஒருவர், என்னை நேசிப்பவராய் இருப்பது எனக்கு சந்தோஷமே… உங்கள் காதலை நான் ஏற்றுக் கொள்கிறேன்…” என்றாள் கெளதமை அலட்சியமாய் நோக்கி.
“நிலா… என்ன உளறுகிறாய், இதனால் வரப் போகும் பின்விளைவுகளைப் பற்றி யோசித்தாயா…” உறுமும் குரலில் கேட்டான் கெளதம்.
“எந்தக் காதலில் தன் பிரச்சனை இல்லை… எது வந்தாலும் நாங்களும் எதிர்கொள்ளத் தயாராயிருப்போம்…” என்றாள் திமிராக. அவளுக்கு கௌதமிற்கு பதிலடி கொடுப்பது ஒன்று மட்டுமே அப்போது குறிக்கோளாய் இருக்க, வேறு எதைப் பற்றியும் யோசிக்க மறந்தாள்.
தன் காதலை அவள் ஏற்றுக் கொண்டதாய்க் கூறவும் கார்த்திக்கின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது. கண்கள் கலங்க அவள் கையைப் பற்றிக் கொண்டவன்,
“நிலா… ஐ லவ் யூ நிலா… நான்…நான்… ரொம்ப சந்தோஷமா இருக்கேன்… நம்ம படிப்பு முடியும் வரை நான் உன்னை எந்த விதத்திலும் தொந்தரவு செய்ய மாட்டேன்… நீ என் காதலைப் புரிந்து கொண்டு சம்மதித்ததே போதும்… எந்தப் பிரச்சனை வந்தாலும் அதை எதிர்கொண்டு உன்னை மணம் முடிப்பேன்… இது நிச்சயம்…” என்றான் சந்தோஷத்துடன்.
கெளதம் இருவரையும் கோபத்துடன் பார்த்துக் கொண்டே, “என்னவோ பண்ணித் தொலைங்க… இது மட்டும் கதிருக்குத் தெரிஞ்சா நீங்க தொலைஞ்சிங்க…” என்று கடுப்புடன் கூறிக் கொண்டே அங்கிருந்து சென்று விட்டான். நல்ல வேளையாய் கதிரவன், ஒரு நண்பனை பேருந்து நிலையத்தில் விடச் சென்றிருந்தான்.
நிலா, கௌதமின் மேலிருந்த அடக்க முடியாத கோபத்தில் தன்னை மறந்தாள்… தன் குடும்பம், அன்னை, அண்ணனை மறந்தாள். கௌதமின் பாரா முகத்துக்கு பதிலடி கொடுப்பது மட்டுமே அவளது நோக்கமாய் இருந்தது. அறிவுப் பூர்வமாய் யோசிக்க மறந்து உணர்வுப் பூர்வமாய் முடிவெடுத்து விட்டாள். அவளது அந்த முடிவு பின்னாளில் எத்தனை இழப்புகளையும், வேதனைகளையும் கொடுக்கப் போகிறதோ என்பதை யோசிக்காமல் புத்தி மழுங்கி இதை செய்து விட்டாள்.
ஒருவேளை கெளதம் மட்டும் கார்த்திக் காதலை சொல்லும்போது நடுவில் வராமல் இருந்திருந்தால்… நிலா கார்த்திக்கின் காதலை ஏற்க மறுத்திருப்பாளோ என்னவோ…  விதி அவளைப் பார்த்து கை கொட்டிச் சிரித்துக் கொண்டிருந்தது.
அதற்குப் பிறகு வந்த நாட்களில் வெறும் புன்னகைப் பரிமாற்றங்களிலும், பார்வைப் பரிமாற்றங்களிலுமாய் கார்த்திக் காதலை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தான். நிலாவும் பதிலாய் புன்னகைத்து அவனை காதலிப்பதாய் மனதுக்குள் உருவேற்றிக் கொண்டிருந்தாள். கௌதமின் முன்னால் கார்த்திக்கிடம் இனிக்க இனிக்கப் பேசி அவனை வெறுப்பேற்றுவாள். இது எதுவும் கதிரவனுக்கும் மற்ற யாருக்கும் தெரியாது.
தேர்வு முடிந்து வீட்டில் இருக்கும்போது அவளுக்கு அவ்வப்போது அலைபேசியில் அழைக்கத் தொடங்கினான் கார்த்திக். நிலாவும் அவனோடு சகஜமாகப் பேசிப் பழகத் தொடங்கினாள். அவனைக் காதலிக்கிறோம்… கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்… என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டாள்.
அப்போது தான் அவளது அத்தை மகன் சுதாகர் வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் வர, அவனுக்கு உடனே நிலாவை மணமுடித்து அனுப்பி வைக்க பெரியவர்கள் தீர்மானித்தனர். சிறு வயதிலேயே பேசி வைத்திருந்ததால் சட்டென்று இந்த முடிவுக்கு வந்திருந்தனர்.
“காதலித்தவனை ஏமாற்றி விட்டு வேறு ஒருத்தனை கை பிடிப்பதா… அப்படி செய்தால் கௌதமின் எண்ணம் சரியாகி விடுமே…” என நினைத்து வேதனித்தாள் நிலா.
எப்படியாவது கெளதமுக்கு, பெண்களின் மீதுள்ள தவறான எண்ணத்தை மாற்றி விட வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு, அவனது எண்ணம் சரி என்று தோன்றத் தானே காரணமாகி விடக் கூடாது என்று துடித்தாள்.
அவளது எண்ணங்கள் எப்போதும் கௌதமை தான் சுற்றிக் கொண்டிருக்கின்றன என்பதை அப்போது அவள் புரிந்து கொள்ளவே இல்லை… பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் கார்த்திக் அவளை வீட்டை விட்டு வரச் சொன்ன போது வேறு வழியில்லாமல் அதற்கும் சம்மதித்தாள்.
கல்யாணத்திற்கு முந்தின நாள் கார்த்திக்கின் கோரிக்கையைத் தட்ட முடியாமல் கௌதமே அவளை வீட்டை விட்டுக் கூட்டி வரவேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப் பட்டான்… நிலா இல்லாவிட்டால் உயிரை விட்டுவிடுவேன்… என்று கெஞ்சியே கெளதமை இந்தக் காரியத்தை செய்ய சம்மதிக்க வைத்தான் கார்த்திக்.
ஏனென்றால் கார்த்திக் பக்கத்துக்கு ஊரை சேர்ந்தவன். இரு ஊருக்கும் எப்போதும் சேராது என்பதால் நட்புக்காய் உயிரையே கொடுக்கும் கெளதமிற்கு நண்பனுக்காய் அந்த செயலை செய்ய சம்மதிக்க வேண்டி வந்தது. கதிரவனும் நண்பன் என்றாலும் கார்த்திக்கிற்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டான். கார்த்திக் நிலாவின் காதல் பற்றி யாருக்கும் தெரியாததால் அனைவரின் கோபமும் கௌதமின் மீது விழுந்தது.
பழைய நினைவுகளில் மூழ்கி இருந்த நிலா, அம்மு சிணுங்கிக் கொண்டே எழுந்து அமரவும், அவளிடம் திரும்பினாள்.
“என்னாச்சு அம்மு,எதுக்கு எழுந்துட்ட…”
“அம்மா, எனக்குத் தண்ணி வேணும்…” கண்ணைக் கசக்கிக் கொண்டே கூறியவளுக்கு தண்ணீரை எடுத்துக் கொடுத்து தானும் குடித்துக் கொண்டாள்.
“சரிடா செல்லம், நீ தூங்கு…” என்றதும் படுத்துக் கொண்டவள், “நீ தூங்கலையாம்மா…” என்றாள் அன்னையிடம்.
அவளது அக்கறையான கேள்வியில் நெகிழ்ந்தவள், அவளது நெற்றியில் முத்தமிட்டு,
“ம்ம்… நானும் தூங்கறேன் அம்மு… நீ படுத்துக்கோ…” என்றவள், அவள் அருகில் படுத்துக் கொண்டு அவளுக்கு மெதுவாய் தட்டிக் கொடுக்க அவள் கண்ணை மூடி நித்திரைக்கு செல்லத் தொடங்கினாள்.
“எந்த சலனமுமில்லாத நிம்மதியான உறக்கம்… குழந்தைகளாகவே இருந்திருந்தால் இப்படியெல்லாம் உறக்கம் தொலைத்து யோசித்து கஷ்டப்பட வேண்டியதில்லையோ…” நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவள், சரிந்து படுத்துக் கொண்டு அம்முவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அம்மு… என் செல்ல மகள், இவள் மட்டும் என் வாழ்வில் வராமல் இருந்திருந்தால்????”
“எத்தனை பிரச்சனைகள், என்னெல்லாம் மாற்றங்கள்… நான் என்னாகிப் போயிருப்பேனோ… எனது வேதனைகளை மறக்க வைத்து என்னைப் புன்னகைக்க வைப்பதற்காய் என் மடியில் விழுந்த புன்னகை மலர்…”
உறக்கத்திலும் சிரித்துக் கொண்டிருந்த அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் நிலா.
அவளது தலையில் வருடிக் கொடுக்க, சரிந்து படுத்த அம்மு, நிலாவின் மீது காலைப் போட்டுக் கொண்டு அணைத்துக் கொண்டாள். அவளுக்கு எப்போதும் அப்படி உறங்குவது தான் மிகவும் பிடிக்கும்.
சின்ன பொம்மை போல தன்னை அணைத்துக் கொண்டு உறங்குபவளைப் பார்த்துக் கொண்டிருந்த நிலாவின் மனது,
“இப்போது நான் வாழ்கின்ற கௌரவமான வாழ்க்கை என் அம்முவால் வந்தது தானே… இல்லாவிட்டால் எனது கதி என்னவாகியிருக்கும்…” யோசித்துக் கொண்டே அம்முவின் நினைவில் மூழ்கியவள் மெதுவாய் உறங்கிப் போனாள்.
வாசல் வந்த தேவதையே…
வானில் மின்னும் தாரிகையே…
வண்ணவிழித் தூரிகையால்
வானவில்லைக் காட்டினாயே…
வானத்தில் முளைத்த விடிவெள்ளியாய்…
என் வாழ்வில் வந்த பொக்கிஷமே…
எவர் வீட்டில் நீ மலர்ந்தாய்…
என் மடியில் தான் வளர்ந்தாய்…
என் மனதில் நிறைந்த ஓவியமே…
என் மகளெனும் தேவதையே…
ரோஜாக் குவியலாய் கையில் வந்தாய்…
பூந்தோட்டமாய் வாழ்வை மணக்க செய்தாய்…
நீயென் வாழ்வில் வந்த பின்னே
நாளெல்லாம் உணர்ந்திட்டேன்
ஒளி நிறைந்த பௌர்ணமியை…
நீ செல்லமாய் சிணுங்கும்போது
வெள்ளிச்சலங்கைகள் சிதறுகின்றன…
நீ அழகாய் புன்னகைக்கையில்
பூக்களும் ரசித்துப் புன்னகைக்கின்றன…
உன் கொஞ்சும் மொழியில்
இலக்கணப் பிழையே கண்டதில்லையடி…
உனதன்பால் எனை ஆள்கிறாய்…
என்னைத் தாயாக்க வந்த மகளே…
உன் அன்புத் தாலாட்டில் நான்
கண்டு கொண்டேன் எனது தாயை…

Advertisement