Advertisement

நிலா – 11
கருப்பு வானத்தில் வெள்ளித்தட்டை வைத்த போல அழகாய் பிரகாசித்துக் கொண்டிருந்தது பௌர்ணமி நிலவு. மிதமான வெளிச்சம் பூமியை நனைத்துக் கொண்டிருக்க, சுகமான தென்றல் இதமாய் வருடிச் சென்றது. ஜன்னலின் அருகில் நின்றிருந்த நிலாவின் பார்வை, நிலவில் நிலைத்திருந்தது.
தெளிந்த வானம், நிறைந்த நிலவு… அங்கங்கே கண் சிமிட்டும் நட்சத்திரங்கள்… ஊர்வலம் போகும் மேகங்கள்… அவளது பார்வை ரசனையாய் படிந்திருந்தது.
“பௌர்ணமி எத்தனை அழகு… ஆனால் நிலவே, உனக்கும் என்ன ஏக்கமோ… நாளை முதல் நீ தேய்ந்து கரைந்து போவாயே…” நிலாவை ரசித்துக் கொண்டே யோசித்துக் கொண்டிருந்தாள் நிலா. சட்டென்று நிலவை மேகம் மறைக்க அவள் மனது தவிப்புடன் அன்னையை நினைவு கூர்ந்து வருந்தியது.
பௌர்ணமி நாளன்று பிறந்ததால் தான் அவளுக்கு நிலா என்று பெயர் வைத்திருந்தனர். நிலாவைக் காட்டி எத்தனை கதைகள் அன்னையின் வாயால் கேட்டிருப்பாள்… சிறு வயது முதலே இரவில், அமைதியாய் நிலவை பார்த்துக் கொண்டிருப்பது அவளுக்குப் பிடித்தமான விஷயம்… ஒரு நெருங்கிய தோழமையுடன் நிலவுடன் எதையாவது பேசிக் கொண்டிருப்பாள். அவள் எதையும் சொல்லாமலே மனதில் உள்ளதைப் புரிந்து கொள்ளும் தோழியல்லவா…
நிலவையே வெறித்துக் கொண்டிருந்தவளின் மனதுக்குள் மேகக் குழப்பமாய் சஞ்சலங்கள் நிறைந்திருந்தது. அம்மு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, நிலவை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள் நிலா.
கெளதமின் கைக்கட்டைப் பிரித்து விட்டிருந்ததால், அவன் நாளை முதல் வேலைக்கு செல்லுவதாய் இருந்தான். வெகு நாட்களாய் அவனது கோப முகத்தை மட்டுமே கண்டு பழகி இருந்தவளுக்கு, சில நாட்களாய் அவனிடம் தெரிந்த அமைதியான புதிய முகம் வித்தியாசமாய் தோன்றியது. அவனது இந்த மாற்றம், அவளை விட்டு விலகி நிற்க முயற்சி செய்வது போல அவளுக்குத் தோன்றியது.
அவன் அவளைத் திட்டும்போது அதில் ஏதோ உரிமை தோன்றும் அவளுக்கு இப்போது அவன் கோபப்படாமல் பேசுகையில் ஒரு விலகல் வந்தது போல வலித்தது. எதையோ இழந்து விட்டது போலத் தோன்றியது. குழப்பத்துடன் யோசித்துக் கொண்டிருந்தவள் அவளையே திட்டிக் கொண்டாள்.
“ச்சே… நான் ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறேன்… கெளதம் என்னோடு கோபப்படாமல் இருந்தால் சந்தோஷிக்கத்தானே வேண்டும், ஏன் வருத்தப் படவேண்டும்… இந்த மனதின் போக்கை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே… அவனைப் பற்றி இப்போது எதற்கு யோசனை…” என நினைத்தவள் மீண்டும் நிலவை வெறித்தாள்.
“என்னை சிந்திக்காமல் இருக்க உன்னால் முடியுமா நிலா…” நிலாவில் தெரிந்த கௌதமின் முகம் கேள்வி கேட்க, மனது தவிக்கத் தொடங்கியது.
“கடவுளே, என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய்… எப்போதும் என் நினைவுகள் கௌதமை சுற்றியே வந்து கொண்டிருக்கிறதே… என் கண்ணுக்குள்ளேயே பிரியாமல் நிறைந்திருக்கும் இவனைப் போல் கார்த்திக்கின் மீது எனக்குத் தோன்றவில்லையே… அப்படியானால் நான் கார்த்திக்கை காதலிக்கவில்லையா… பிறகு எப்படி அவன் காதலை ஒத்துக் கொண்டேன்…”
“அதை நீயாகவா ஒத்துக் கொண்டாய்… அப்போது கெளதம் மீதிருந்த கோபத்தில் தானே ஒத்துக் கொண்டாய்… அப்போதும் உனக்கு கௌதமின் மீது ஒரு விருப்பம் இருக்கத்தானே செய்தது…” என்றது மனதுக்குள் இருந்து ஒரு குரல்.
“இல்லை, நான் எங்கே கௌதமை விரும்பினேன்… எப்போதும் உர்ரென்று பெண்களை ஏறெடுத்தும் பார்க்காமல் அலட்சியப் பார்வை வீசி செல்லுபவன் மீது எனக்கு எங்கே விருப்பம் இருந்தது… கோபம் தான் இருந்தது…”
“அந்த கோபம் எதனால்… அவன் பெண்களைப் பார்க்காமல் இருந்ததாலா…”
“பிறகு எதனால்… உலகத்தில் உள்ள எல்லாப் பெண்களும் அவன் அன்னையைப் போல சுபாவம் கொண்டவர்கள் என்று எண்ணி உதாசீனப் பார்வை பார்க்கும் அவன் மீது எனக்கு கோபம் தானே இருந்தது…”
“ஹஹஹா… இல்லை, உன் கோபம் அதற்காக மட்டும் இல்லை…” என்று எகத்தாளமாகச் சிரித்தது மனதுக்குள் இருந்து அவளோடு பேசிக் கொண்டிருந்த குரல்.
“என்ன சொல்கிறாய்… எனக்கு கெளதம் மீது கோபமில்லை, காதல் தான் என்கிறாயா…” சீறினாள் நிலா.
“ஹஹா… எதற்காக உனக்கு இந்தக் கோபம், நன்றாக யோசித்துப் பார்… கெளதம் உன்னைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை என்று தானே உனக்குக் கோபம்… அவன் ஏன் உன்னைப் பார்க்க வேண்டும் என்று நீ தவித்தாய்…”
“அ…அது வந்து… ஒரு அழகான பெண்ணை ஒரு ஆண் கண்டு கொள்ளாமல் இருப்பது அவளது அழகுக்குக் குறைச்சல் அல்லவா… அதனால் தான் கோபம் கொண்டேன்…” என்றாள்.
“ம்ம்… அது சரி, அவன் ஏன் உன்னைப் பார்க்க வேண்டும்… எல்லா ஆண்களும் உன்னைப் பார்க்க வேண்டும் என்று நீ ஆசைப்பட்டாயா…” கிண்டலாய்க் கேட்டது குரல்.
“இ…இல்லை… தவிப்புடன் மென்மையாய் ஒலித்தது அவளது குரல்.
“ஹஹா… அடி லூசுப் பெண்ணே, இது தான் காதல்… அவன் உன்னைக் காண வேண்டும், பேச வேண்டும்… கொண்டாட வேண்டும்… என்று உனக்குள் தோன்றிய உணர்வை நீ அலட்சியம் செய்து அவன் மீது பொய்யான ஒரு கோபத்தை உருவாக்கி வைத்திருந்தாய்… இப்போது அந்தக் காதல் தான் வெளியே வந்து உன்னைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கிறது… இது போல உனக்கு கார்த்திக்கிடம் தோன்றி இருக்கிறதா…” சிரித்தது மனக் குரல்.
“இ…இல்லை… கார்த்திக்கிடம் எனக்கு இப்படியெல்லாம் தோன்றியதில்லையே… அ…அய்யோ… இது எப்படி சாத்தியம்… நான் கார்த்திக்கிற்காய் அல்லவா காத்திருக்கிறேன்… இப்போது கெளதமின் மீது காதல் வந்தால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்…”
“அது உன் பாடு… நீதான் யோசிக்க வேண்டும்… யார் மீது உனக்கு உண்மையிலேயே காதல் என்பதை நீ இப்போது புரிந்து கொண்டாயா…”
“ம்ம்…” மௌனமாய் தலையாட்டியவளை நோக்கி சிரித்துக் கொண்டே விடை பெற்றது மனக் குரல்.
அவள் மனது இப்போதும் போராட்டத்திலேயே இருந்தது.
“கார்த்திக்கை காதலிப்பதாய் சொல்லியாயிற்று… கல்யாணம் வரை ஆசை காட்டி இனி மறுத்து சொல்ல முடியுமா… காதலிக்கா விட்டால் செத்திடுவேன் என்று அன்றே மிரட்டியவன் ஆயிற்றே… இல்லை, என்னால் கார்த்திக்கிற்கு துரோகம் செய்ய முடியாது… இது…இந்தக் காதல்… நான் கெளதமின் மீது உணர்ந்து கொண்ட என் காதல் இப்படியே எனக்குள்ளேயே முடிந்து போகட்டும்… இனி கௌதமிடமும் சொல்லிக் குழப்பி அவன் வாழ்க்கையை சீரழிக்க வேண்டாம்…” என நினைத்துக் கொண்டவள் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டாள்.
“இனி கெளதமைப் பற்றி நினைப்பது அநாகரீகம்… கார்த்திக்கிற்காய் காத்திருப்பவள் நான்… அன்று வீட்டை விட்டு ஓடி வந்தபோதே அவனுடன் கல்யாணம் முடிந்திருந்தால் இப்போது எனக்கு இந்த எண்ணமெல்லாம் வந்திருக்காது… கார்த்திக் நல்லவன்… என் மீது உயிரையே வைத்திருக்கிறான்… அவனுக்கு துரோகம் செய்து அவன் வாழ்வை நாசமாக்கக் கூடாது…” என்று நினைத்துக் கொண்டவளின் கண்களில் இருந்து அவள் அனுமதி இல்லாமலே கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.
அது அவளது மனதுக்குள் அரும்பு விடத் தொடங்கி இருந்த காதல் செடியை அவள் கிள்ளிப் போட நினைத்ததால் வந்த கண்ணீர். நிர்பந்தமாய் கார்த்திக்கின் முகத்தை மனதில் கொண்டு வந்தவள், அவன் அவளிடம் காதலை சொன்ன நாளை மனதுக்குள் ஓட விட்டாள்.
கல்லூரியில் பாட்டுப் போட்டி களைகட்டி இருக்க, கார்த்திக் நிலவு தூங்கும் நேரம் பாடலைப் பாடி முடித்து மேடையில் இருந்து கீழே இறங்கினான். உற்சாகமான கரகோஷம் அவனுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தது.
கெளதம் எழுந்து வெளியே சென்றதும் அவன் பின்னாலேயே கதிரவனும் சென்றிருந்தான். நிகழ்ச்சியின் நடுவில் கெளதம் மேடையேறி அலட்சியமாக நடந்து கொண்டதைக் கண்டு நிலாவுக்கு கோபம் தாறுமாறாய் வந்தது. கௌதமை ஓங்கி அறைய வேண்டும் போலத் தோன்றியது.
கார்த்திக் இறங்கி வந்ததும், அவனது நண்பர்கள் சென்று அவனைப் பாராட்டினர். கார்த்திக்கின் குரலில் நிறைந்திருந்த பாவனை நிலாவை வெகுவாய் ரசிக்க வைத்தது. அவனைப் பாராட்டி இரண்டு வார்த்தை சொன்னால் தான் கௌதமின் மீது உள்ள கோபம் அடங்குவதாய் தோன்றியது.
கார்த்திக்கிடம் பேசிவிட்டு அவனது நண்பர்கள் நீங்க, நிலாவும் அவனைப் பாராட்டுவதற்காய் சென்றாள்.
அவளிடம் சிநேகமாய் புன்னகைத்தான் கார்த்திக்.
“ஹாய் கார்த்திக், ரொம்ப நல்லா பாடினிங்க… அருமையான குரல், உணர்ச்சியைக் கலந்து பாடின போல இருந்துச்சு… நான் ரொம்ப ரசிச்சேன், வாழ்த்துக்கள்…” என்றாள் நிலா. அவளது பாராட்டில் ஆயிரம் தாமரைகள் ஒன்றாய் மலர்ந்தன அவன் முகத்தில். அது அவளை நினைத்து பாடிய பாடல் ஆயிற்றே.
“தேங்க்ஸ் நிலா… நீங்கல்லாம் பாராட்டும் போது தான் நான் நல்லா பாடுவேன்னு எனக்கே தெரியுது… அப்புறம் ஒரு விஷயம் உங்கிட்டே சொல்லணும்…” தயக்கத்துடன் நிறுத்தியவன் கண்ணை நாலாபுறமும் சுழல விட்டான்.
“என்ன சொல்லணும் கார்த்திக்… சொல்லுங்க…” கார்த்திக்குடன் பேசுவதை அண்ணன் கதிர் பார்த்து விடுவானோ என்று பயந்து கொண்டே பேசிக் கொண்டிருந்தாள் நிலா. அதற்குள் அடுத்து ஒருவன் மேடையேறி பாடத் தொடங்கியிருக்க எல்லோரும் அதில் கவனத்தைப் பதித்தனர்.
ஒலி பெருக்கியின் சத்தத்தில் பேச முடியாமல், “நிலா… கொஞ்சம் அந்தப் பக்கம் தள்ளிப் போய் பேசலாமா…” என்றான் கார்த்திக். அவனைப் புரியாமல் பார்த்தவள், சம்மதமாய் தலையசைத்தாள். ஆவலுடன் ஆடிட்டோரியத்துக்கு வெளியே இருந்த மரத்தின் அருகே அவளுடன் நடந்தான் கார்த்திக்.
“கார்த்திக், என்ன சொல்லணும்… சீக்கிரம் சொல்லுங்க, என் அண்ணன் பார்த்தா கத்துவான்… உங்களுக்கே அவனைப் பத்தி தெரியும்ல…” என்றாள் அவசரமாய்.
“ம்ம்… வந்து… நீ என்னைத் தப்பா நினைச்சுக்கக் கூடாது… நம்ம ரெண்டு ஊருக்கும் சேராது, பெரிய பகை தான்… உன் அண்ணனுக்கு கூட என்னைப் பார்த்தாலே பிடிக்காது… இதெல்லாம் என் மூளைக்குப் புரிஞ்சிருந்தாலும் மனசு ஒத்துக்காம அடம் பிடிக்குது… இன்னும் சில நாள்ல நம்ம படிப்பு முடிஞ்சிரும்… அதான் என் மனசுல ரொம்ப நாளா பூட்டி வச்சிருக்குற விஷயத்தை உன்கிட்டே சொல்லிட நினைச்சேன்…” தயக்கத்துடன் எதை எல்லாமோ சொல்லி, சுற்றி வளைத்தவனைக் புரியாமல் பார்த்தாள் நிலா.
“நீங்க என்ன சொல்ல வரீங்க கார்த்திக்… நேரடியாவே சொல்லிடுங்க…” என்றவளின் புருவங்கள் குழப்பத்தில் முடிச்சிட்டுக் கொண்டன.
“வ…வந்து… நான் உன்னை ரெண்டு வருஷமா லவ் பண்ணிட்டு இருக்கேன்…”
அவன் சொன்னதும் அவள் முகம் அதிர்ச்சியைக் காட்ட, “இதை முன்னாடியே சொல்லி உன் படிப்பு பாதிச்சிடக் கூடாதுன்னு தான் இதுவரை சொல்லலை… நம்ம ரெண்டு குடும்பத்துக்கும் சேராதுன்னு எத்தனையோ முறை என்னை நானே மாத்திக்க முயற்சி செய்தும் என்னால மறக்க முடியல… எதுவா இருந்தாலும் உங்கிட்ட சொல்லிடணும்னு தான் இப்போ சொல்லிட்டேன்… இன்னைக்கு நான் பாடிய பாடல் கூட உன்னை நினைச்சு தான்…”
“டேய் கார்த்திக், என்னடா சொல்லற… நீ லவ் பண்ணுறியா…” மரத்துக்குப் பின்னால் இருந்து கேட்ட குரலில் இருவரும் திடுக்கிட, அங்கே உதயமாகி இருந்தான் கெளதம்.
அவர்கள் பேசுவதை மரத்தின் பின்னிலிருந்து ஒளிந்து நின்று கேட்ட கெளதமின் செய்கை அநாகரிகமாய் தோன்ற அவன் மீது நிலாவுக்குக் கோபமாய் வந்தது. கார்த்திக்கின் முகமோ கெளதம் கேட்டு விட்டானே என்று அதிர்ச்சியைக் காட்டியது.
“அ…அது வந்து கெளதம்…” என்று திணறியவனின் அருகில், வாயில் அசை போட்டுக் கொண்டிருந்த சுவிங்கத்துடன் வந்து நின்றவன், “என்னடா கார்த்திக், நீயும் இந்தக் காதல், கத்தரிக்காய்னு சொல்லிட்டு இருக்கே… உனக்கெல்லாம் இது சரியாகுமா…” என்றான் சற்றுக் கோபத்துடன்.
இடையில் நுழைந்து கார்த்திக்கை அதட்டுபவனைக் கண்டு நிலாவுக்கு எரிச்சலாய் வந்தது. “காதலிப்பது அவனது விருப்பம்… ஏற்றுக் கொள்ளுவதும், மறுப்பதும் எனது விருப்பம்… அவன் காதலித்தால் இவனுக்கு என்ன… இவனைப் போல எல்லாரும் காவியுடுக்காத சாமியாரைப் போல அலைய வேண்டுமா… நடுவில் இவன் எதற்கு பஞ்சாயத்து பண்ண வருகிறான்…” என நினைத்துக் கொண்டே நின்றிருந்தாள் அவள். அவளைப் பொருட்படுத்தாமல் கார்த்திக்குடன் பேசிக் கொண்டிருந்தான் கெளதம்.

Advertisement