Advertisement

நிலா – 10
சூரியனும், நிலவும் தங்கள் வேலையை நிறுத்தாமல் செய்து கொண்டிருக்க, இரவும் பகலும் மாறி மாறி வந்து கொண்டிருந்தது.
கெளதம் ஒரு வாரம் விடுமுறை எடுத்திருந்தான். அவன் வீட்டில் இருந்ததால் அம்முவுக்கு ஒரே கொண்டாட்டமாகி விட்டது. அவன் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தாள். கௌதமின் சின்ன சின்ன தேவைகளையும் அவன் சொல்லாமலே கவனித்துக் கொண்டாள் நிலா. ஒவ்வொரு விஷயத்திலும் சிறு குழந்தையைப் போல அவள் தன்னைப் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்டது கௌதமின் மனதுக்குள் மழைச்சாரலை தூவிச் சென்றது.
எத்தனை கட்டுப்படுத்தியும் அவள் அருகில் வருகையில் தவித்துப் போகும் மனதைக் கட்டுப்படுத்த அவனால் இயலவில்லை. அவள் அருகாமையில் தன்னையே தொலைத்துக் கொண்டிருந்தான். இப்போதெல்லாம் அவனை அடங்கிப் போக சொல்லும் மனதின் மீது வெறுப்பு தான் வந்தது. கண்ணுக்கு முன்னால் நடமாடும் தேவதையின் அழகில் அவனது ஆண்மை விழித்துக் கொள்ள, அவளுக்குத் தெரியாமல் அவளை ரசிக்கத் தொடங்கி இருந்தான்.
அம்முவை குளிக்க வைத்துக் கொண்டிருந்தாள் நிலா. தினசரியை இடது கையால் பிடித்து பார்வையை அதில் பதித்திருந்த கெளதம், “அப்பா…” என்று அருகில் ஓடி வந்த மகளின் அழைப்பில் திரும்பினான்.
“அம்மு செல்லம், குளிச்சாச்சா… என்ன ஈரத்தோட வந்திருக்க, விழுந்துடப் போற…” தலை துவட்டாமல் ஈரத்துடன் ஓடிவந்த அம்முவிடம் கூறினான். அவளைத் தொடர்ந்து பின்னிலேயே ஓடி வந்தாள் நிலா.
“அம்மு, நில்லு… ஓடாத… எங்காவது வழுக்கி விழுந்து வைக்கப் போற…” கூறிக் கொண்டே கெளதமிடம் ஓடி வந்தவளை எட்டிப் பிடித்து வைத்தாள்.
“என்ன அம்மு இது, புதுப் பழக்கம்… தலை துவட்டாம வீட்டுக்குள்ள ஓடி வந்து தரையெல்லாம் ஈரம் ஆகிடுச்சு பாரு… துவட்டாம அப்படியே இருந்தா சளி பிடிக்கும்ல, வர வர உனக்கு குறும்பு அதிகம் ஆகிட்டே இருக்கு…” அதட்டிக் கொண்டே அவளது தலையைத் துவட்டத் தொடங்கினாள்.
நிலா திட்டியதும் அம்முவின் முகம் வாடிப் போக, உதவிக்கு வந்தான் கெளதம்.
“சரி விடு நிலா… அம்மு இனி இப்படிப் பண்ண மாட்டா, இல்லடா செல்லம்…” மகளுக்கு ஆதரவு கொடுத்தான் கெளதம்.
“ஹூக்கும்… இப்படி செல்லம் கொடுத்துட்டே இருந்தா அவ அப்படித்தான் பண்ணுவா…” வாய்க்குள் முனங்கிக் கொண்டே மகளின் தலையை துவட்டத் தொடங்கினாள் நிலா.
கெளதமிற்கு அவளது முனங்கல் காதில் விழ, முறுவலித்துக் கொண்டே அவளைப் பார்த்தான். காலையில் குளித்து முடித்து ஈர ஜடை பின்னி நீல வர்ண பருத்திப் புடவையில் பாந்தமாய், எந்தவித ஒப்பனையுமில்லாமல் அழகாய் தீப சுடர்போல ஒளிர்ந்து கொண்டிருந்தவளை விழிகளை நீக்கிக் கொள்ள முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அம்முவுக்கு தலை துவட்டி முடித்து நிமிர்ந்தவள், தன் மேல் நிலைத்திருந்த கௌதமின் பார்வையில் திகைத்துப் போனாள். உடலிலுள்ள ரத்தம் முழுதும் முகத்தில் பாய்ந்தது போல் சிவந்து போய் தலை குனிந்து கொண்டவளைக் கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த கெளதம், அம்முவின் குரலில் கலைந்தான்.
“அப்பா, நீயும் சீக்கிதம் குளிச்சித்து வா… சாப்பித்து விளையாதலாம்…” அவனது கையைப் பற்றி இழுத்தாள். இப்போது அவளுக்கு தந்தை தான் விளையாட்டுத் தோழன். இருவரும் கதைகள் பேசி எதையாவது விளையாடிக் கொண்டிருப்பார்கள். நிலா ஒருவித படபடப்புடன் அவனை ஏறிட்டுக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தவள், கௌதமிற்கு குளிக்கையில் கை நனையாமல் இருக்க கட்டிக் கொள்ளும் பிளாஸ்டிக் கவரை எடுத்து வந்தாள். அவனது கையில் அதை சுற்றிக் கட்டி விட்டவள், “கெளதம்… குளிச்சிட்டு வாங்க…” டவலை எடுத்து நீட்டினாள்.
தனது பார்வையை அவள் கண்டு கொண்டாள் என்பதை உணர்ந்தவன் தயக்கத்துடன் நகர்ந்தான். நிலாவின் மனம் மீண்டும் போராட்டத்தில் தவித்தது. அவனது பார்வையில் சுருண்டு அவனது காலடியில் விழுந்துவிடத் துடித்த மனத்தைக் கட்டுப்படுத்த அவள் படும் பாடு அவளுக்குத்தானே தெரியும்.
“கடவுளே… இத்தனை நாளாக இல்லாமல் எங்கள் மனதில் இப்போது ஏன் இந்த சஞ்சலம்… ஏக்கமாய் எனைத் தொடரும் கௌதமின் பார்வை எனை எரித்து பஸ்மமாக்கி விடும் போலிருக்கிறதே… என் மனது ஓயாமல் இப்போது அவனையே நினைத்துத் தவிக்கிறதே… எதனால் இந்த சலனம், நான் கார்த்திக்கை நேசித்தது காதலா… கௌதமின் மீது தோன்றுவது காதலா…”
“கார்த்திக் வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் எனக்கு கௌதமின் மீது காதல் வருவது சரியா… அத்தனை மோசமானவளா நான், இல்லை… இதை இப்படியே வளர விடக் கூடாது… கௌதமின் மனதில் என் மீது மலரத் தொடங்கி இருக்கும் காதலை அரும்பிலேயே கிள்ளிப் போட்டு விட வேண்டும்… அவனுக்கு என்னால் ஏமாற்றத்தைக் கொடுக்க முடியாது… அவன் ஏமாறுவதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது…” என்று ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தவள், குளியலறையில் ஏதோ த்தட்… என்று பலமான சத்தத்துடன் கீழே விழுந்தது போலக் கேட்க சட்டென்று கலைந்தாள்.
வேகமாய் அங்கு ஓடியவள், கதவைத் தட்டினாள்.
“கெளதம், என்னாச்சு… உள்ள என்ன சத்தம்… கீழே விழுந்துட்டீங்களா, கதவைத் திறங்க…” பதட்டத்துடன் கேட்டாள்.
கையில் இருந்த கப் கீழே நழுவ அதை ஒற்றைக் கையில் பிடிக்க முயன்று பக்கத்தில் இருந்த பக்கெட்டில் கால் தடுக்கி கீழே விழப் போயிருந்தான் கெளதம். இடுப்பில் டவலை மட்டும் கட்டிக் கொண்டிருந்தவன் மெதுவாய் சமாளித்துக் கொண்டு அங்கிருந்த பைப்பைப் பிடித்து எழுந்தான். அதற்குள் வெளியே இருந்து கதவை உடைத்து விடுவது போலத் தட்டிக் கொண்டிருந்தாள் நிலா.
“கெளதம் கதவைத் திறங்க, கீழ விழுந்துட்டிங்களா, ஏதாவது சொல்லுங்க…” பதறினாள் அவள்.
“நி…நிலா… ஒண்ணும் இல்லை, கொஞ்சம் ஸ்லிப் ஆகிட்டேன் அவ்ளோதான்… நவ் அயாம் ஓகே…” உள்ளிருந்து அவன் குரல் கொடுத்தாலும் அவளுக்கு சமாதானமாகவில்லை. அதற்குள் அம்முவும் வந்து அவளுடன் சேர்ந்து கொண்டாள்.
“கெளதம், நீங்க கதவை முதல்ல திறங்க… ப்ளீஸ்…” என்று வம்படியாய் அவள் நிக்க, “கதவைத் திதங்கப்பா…” என்றாள் அம்முவும். அவன் கதவைத் திறக்க உள்ளே நுழைந்தவள், அவனது கை கால்களை ஆராய்ந்தாள்.
“சரி… முதல்ல வெளியே வாங்க… நானே உங்களுக்கு தண்ணி ஊத்தி விடறேன்….”
“என்னது, நீயா… அ…அதெல்லாம் சரிவராது… வேண்டாம், நேத்து நான் தானே குளிச்சேன்… கவனமா பார்த்துக்கறேன்…” என்றான் அவன் தவிப்பை மறைத்துக் கொண்டே.
“ப்ளீஸ் கெளதம், முடியாத கையை வச்சுட்டு எதையாவது இன்னும் வரவழைச்சு வைக்காதிங்க… ஒரு நர்சா என்னை நினைச்சு இதுக்கு ஒத்துக்கங்க…” என்றாள் கெஞ்சலாக.
“அடிப்பாவி… மனசுக்குள்ளே சிம்மாசனம் போட்டு உக்கார்ந்துட்டு அப்படி இப்படி கொஞ்சம், நகரக் கூட செய்யாம இருக்கிற உன்னை என்னால எப்படி நர்சா நினைச்சுக்க முடியும்… நீ பக்கத்துல நிக்கும்போதே என் மனசு தவிச்சுப் போறது எனக்குதானே தெரியும்… நானும் எவ்ளோ நாள் தான் கெட்டவன் போலவே உர்ருன்னு சுத்திட்டு இருக்குறது… என்னை மீறி ஏதாவது வெளிப்படுத்திட்டேன்னா… அப்புறம் நம்ம ரெண்டு பேருக்கும் தான் கஷ்டம்…” மனதுக்குள்ளேயே யோசித்துக் கொண்டு நின்றவனை அவள் மீண்டும் அழைத்தாள்.
“கெளதம், வெளியே வாங்க…” அவனது கையைப் பிடித்து இழுத்து வந்து அங்கிருந்த துவைக்கும் கல்லில் அமர்த்தியவள், பக்கெட்டில் தண்ணீரைப் பிடித்து எடுத்து வந்தாள். வெற்று மார்புடன், இடுப்பில் டவலுடன் கூச்சத்துடன் அமர்ந்திருந்தான் அவன். அதற்குள் குளியலறைக்குள் சென்று சோப்பை எடுத்து வந்த அம்மு,
“அம்மா, அப்பாக்கு நான் குளிப்பாத்தி விதத்தா…” ஆவலுடன் கேட்டாள்.
“வேண்டாம் செல்லம்… நீ இப்பதானே டிரஸ் மாத்தின… அதெல்லாம் நனைஞ்சிடும், நீ போ… அம்மா அப்பாக்குத் தண்ணி ஊத்திட்டு வந்து ஊட்டி விடறேன்…” என்றாள் நிலா.
“ம்ம்… சதிம்மா, அப்பாக்கு சாம்பு வேணுமா… நான் எதுத்து வதத்தா…” என்றாள் உற்சாகத்துடன்.
“வேண்டாம் அம்மு, நீ போயி விளையாடு…” என்று அவளை அனுப்பினாள் நிலா.
“அடிப்பாவிகளா, ரெண்டு பெரும் சேர்ந்து என்னை ஒரு வழி பண்ணாம விட மாட்டிங்க போலருக்கே…” மனதுக்குள் புலம்பிக் கொண்டே அவஸ்தையாய் அமர்ந்திருந்தான் அவன்.
நிலா தண்ணீரை எடுத்து அவன் மீது ஊற்ற, சில்லென்ற நீர் மேலே பட்டதும் சிலிர்த்துப் போனான்.
தண்ணியை ஊற்றிவிட்டு, சோப்பை கையில் எடுத்தவளைத் தடுத்து, “ப்ளீஸ் நிலா, வேண்டாம்… நானே தேச்சுக்கறேன்…” என்று கையை நீட்ட, அவனது அவஸ்தையான முகம் அவனது தவிப்பை வெளிப்படுத்த, நிலாவும் மறுக்காமல் அவன் கையில் சோப்பைக் கொடுத்து விட்டாள்.
அவன் ஒரு கையாலேயே சோப்பு தேய்த்து முடிக்க, தலையோடு தண்ணீர் ஊற்றி விட்டாள் அவள். அவனது வெற்று மார்பில் நிறைந்திருந்த முடிக்கற்றைகள் தண்ணீரில் ஒட்டிக் கொண்டு பளிச்சென்று தெரிய, அவளுக்கு ஒரு மாதிரி கூச்சமாய் இருந்தது.
அவஸ்தையாய் மனதுக்குள் அலையடிக்க, முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் தண்ணீர் ஊற்றி முடித்து டவலை எடுத்து அவன் உடலில் துடைத்து விட்டாள்.
எப்போதும் கோபத்துடன் நடந்து கொண்டாலும், அனுமதியின்றி மனதிற்குள் மெதுவாய் நுழைந்து விட்டவளின் அருகாமை அவனை மதி மயக்கியிருக்க, மனதுக்குள் உணர்ச்சி அலைகள் திணறடித்துக் கொண்டிருந்தன.
தான் இழந்து போன எத்தனையோ உணர்வுகளை, ஏக்கங்களை அவளது பரிவான செயல்கள் ஒவ்வொன்றும் நினைவுபடுத்த, தான் சிறுவயதிலேயே இழந்துவிட்ட தாய்மையை அவளிடம் உணர்ந்தான் அவன். தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியாமல் தவித்தவன், அவனது தலையைத் துவட்டிக் கொண்டு நின்றிருந்தவளை இழுத்து அவள் வயிற்றில் தன் முகத்தைப் பதித்துக் கொண்டான். ஒரு நொடியில் அதிர்ந்து போனாள் நிலா.
“கெளதம்…” அவளது நாக்கு தொண்டையில் ஒட்டிக் கொள்ள, வார்த்தைகள் வெளிவராமல் தவித்தது. அவனைத் தள்ளி விட வேண்டுமென்று மூளை துடித்தாலும், அசைய முடியாமல் ஏதோ ஒன்று கைகளை கட்டிப் போட்டது.
குழந்தையாய் அவள் வயிற்றில் முகம் புதைத்து கேவிக் கொண்டிருந்தான் அவன். முதலில் அவனைத் தவறாய் நினைத்தவள், அழுவதைக் கண்டதும் திகைத்துப் போனாள்.
“கெளதம், என்னாச்சு… எதுக்கு அழறீங்க…” அவளுக்கும் கலக்கமாய் இருந்தது. சில நிமிடம் அப்படியே மௌனமாய் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தவன், மெதுவாய் அவளை விட்டு விலகினான்.
“ச…சாரி நிலா… என்னை மன்னிச்சுக்க….” கண்ணைத் துடைத்துக் கொண்டவனைக் காண அவளுக்குப் பரிதாபமாய் இருந்தது.
“இ…இட்ஸ் ஓகே… கெளதம், என்னாச்சு உங்களுக்கு… எதுக்கு அழுதீங்க…” தன்னைக் கவர்ந்த, கம்பீரமான ஆண்மகன் தனக்கு முன்னில் சிறு பிள்ளையாய் அழுதது அவள் மனதை கலங்க வைத்தது.
“சின்ன வயசுல இருந்து எல்லாத்தையும் தனியாவே செய்து பழகினவன் நான்… இல்லன்னா அப்பா செய்து விடுவார்… ஒரு அம்மாவோட பாசம் எப்படி இருக்கும்னு நான் உணர்ந்ததே இல்லை… இப்ப எனக்கு முடியலைன்னு நீ ஒவ்வொண்ணும் பார்த்துப் பார்த்து செய்யும்போது எனக்கு… எனக்கு…” என்று வார்த்தைகள் வராமல் திணறியவனை இழுத்து தன் வயிற்றில் சேர்த்து அணைத்துக் கொண்டாள் அவள். அவனது வார்த்தைகள் மனதைக் கூறு போடுவது போல வலித்தது.
“கெளதம்… ப்ளீஸ், அழாதிங்க… நீங்க அழறதை என்னால பார்க்க முடியலை…” தேற்றுவதாய் நினைத்து சேர்ந்து கலங்கிக் கொண்டிருந்தாள்.
“ச்சே… ஒரு நிமிடம் என் கௌதமை நானே தவறாக நினைத்து விட்டேனே… என்னில் தாயைத் தேடி அழுதிருக்கிறான்…” என்று அவளையே கடிந்து கொண்டாள் அவள்.
தண்ணீரை விலக்கி பாலைக் குடிக்கும் அன்னப் பறவை போல் காமத்தை விலக்கிய காதல் அங்கே பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது.  அடுத்து வந்த நாட்களில், இருவரும் விலகி இருக்க நினைத்தே மனதுக்குள் நெருங்கிக் கொண்டிருந்தனர். ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளாமலே இதயம் இடமாற்றம் செய்யத் தொடங்கி இருந்தது.
பௌர்ணமி நிலவு அழகாய் வானில் உலா வரத் தொடங்கி இருந்தது. அப்போது தான் வீட்டுக்குள் நுழைந்த கதிரவன் அன்னை திலகத்தின் அறைக்கு சென்றான்.
“சாந்திக்கா, அம்மா தூங்கிட்டாங்களா…” அன்னையை கவனித்துக் கொள்ளும் பணிப்பெண்ணிடம் கேட்டான்.

Advertisement