Advertisement

“அய்யோ சாமி… ஆளை விடு… நமக்கு இந்த ஆட்டம், பாட்டமெல்லாம் ரொம்ப தூரம்…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே நாலைந்து சுரிதார் அணிந்த பட்டாம் பூச்சிகள் அவர்களை நெருங்கி வந்தன. அதில் நடுநாயகமாய் இருந்த ராணிப் பட்டாம்பூச்சி ஒன்று கதிரிடம் வந்து தேன்சுளை உதடுகளைப் பிரித்துப் பேசத் தொடங்கியது. மற்ற பட்டாம் பூச்சிகளின் பார்வை அவ்வப் போது கௌதமை ஆவலுடன் தழுவிக் கொண்டிருக்க, அவர்கள் வந்ததுமே கண்டு கொள்ளாமல் அலைபேசியை நோண்டத் தொடங்கிவிட்டான் அவன்.
“என்னண்ணா… இங்கே நின்னுட்டு இருக்கே… புரோக்ராம் பார்க்கப் போகலையா…” என்றாள் கதிரின் உடன் பிறந்த தங்கையான நிலா.
“ம்ம்… போகணும் நிலா… சரி… நீங்கள்ளாம் என்ன… இங்கே சுத்திட்டு இருக்கீங்க… இந்த மாதிரி நிகழ்ச்சின்னா நீங்கதானே முதல் வரிசைல இருப்பீங்க…” என்றான் சிரித்துக் கொண்டே.
“என் பிரண்டு காயத்ரியும் இன்னைக்கு பாடுறாண்ணா… இத்தன நேரம் அவ அதுக்கு ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருந்தா… அதான் அவளோட இருந்தோம்… இப்போ அங்கே தான் போறோம்… சரிண்ணா… நாங்க வரோம்…” என்று அவள் விடை பெற, அதுவரை அவர்கள் அங்கே நின்று பேசியதையே உணராத போல அலைபேசியில் நோண்டிக் கொண்டிருந்தான் கெளதம்.
விடை பெறும் முன் தன் பார்வையை அண்ணனின் நண்பன் மேல் பதித்த நிலா, அவனது கண்டு கொள்ளாமையால் சிவக்கத் தொடங்கிய முகத்தை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்.
அதே கல்லூரியில் அவர்கள் பிஎஸ்சி மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்தார்கள்.
“ஏய்… கெளதமைப் பார்த்தியா… ஜீன்ஸ், ஷர்ட்ல செம ஹான்ட்சமா அழகா இருக்கான்ல…” என்றாள் கண்ணில் மயக்கத்தை தேக்கி ஒருத்தி.
“ம்ம்… ஆமாண்டி… அப்பப்போ ஸ்டைலா அவன் முடியைக் கையால கோதிக்கிறது எவ்ளோ அழகா இருக்கு…” ரசனையோடு வந்தது மற்றொருத்தியின் வார்த்தைகள்.
“ம்ம்… நம்ம அவன் பக்கத்துல போயி நின்னும் கொஞ்சம் கூட கண்டுக்கவே இல்லயே… அவன் பார்க்க மாட்டானானு நான் பார்த்துட்டே இருந்தேன் தெரியுமா…” ஏமாற்றம் வெளிப்பட்டது மற்றொருத்தியின் வார்த்தையில்.
“எவ்ளோ அழகா இருக்கான்… அவன் மீசையைப் பிடிச்சு அப்படியே இழுக்கணும் போலத் தோணுச்சுடி… நான் கஷ்டப்பட்டு என் கையைக் கன்ட்ரோல் பண்ணிகிட்டேன் தெரியுமா…” என்றாள் ராகவி. தோழிகளின் உரையாடல் அவள் முகத்தில் சினத்தை வரவழைத்தது.
“ஏய்… போதும் வாங்கடி… அவனுக்குப் பெரிய ஹீரோன்னு நினைப்பு… அவன் பார்க்கலைன்னு ரொம்பதான் வழியாதீங்க… பிகரா நாலஞ்சு பொண்ணுங்க பக்கத்துல வந்து நின்னு பேசிட்டு இருக்கோம்… ஆம்பளையா லட்சணமா நம்மளை சைட் அடிச்சோமா… மொக்கை போட்டோமான்னு இல்லாம, என்னமோ மொபைல்ல குடும்பம் நடத்திட்டு இருக்கவன் போல அதையே நோண்டிட்டு இருக்கான்… இவன்லாம் ஒரு ஆளுன்னு இவன் பார்வைக்காக நீங்கல்லாம் அலையுறீங்க… அடச்சீ… உங்களுக்கு வெக்கமா இல்ல… வாங்கடி… உள்ளே போவோம்…” அவர்களைத் திட்டி தன் மனதை ஆற்றிவிட்டு ஆடிட்டோரியத்திற்குள் நுழைந்தாள் நிலா.
நிலா… பெயருக்கேற்றாற்போல் நிலாவே தான்… அழகான வட்ட முகம்… கரிய பெரிய விழிகள்… எடுத்து வைத்தாற்போன்ற எடுப்பான மூக்கு… சிவந்த மெல்லிய உதடுகள்… அளவான உயரத்தில் அழகான உடலமைப்புடன் இருந்தாள். தோழியருடன் அவள் நடந்து வந்தது நட்சத்திரங்களுடன் நிலவு உலா போவது போல அழகாய் இருந்தது.
கல்லூரியில் மாணவர்கள் எல்லாம் அவளது கடைக்கண் பார்வைக்காய் காத்திருக்க, தன் அழகின் மீது சிறு கர்வம் கொண்டிருந்த நிலாவுக்கு அவளைக் கண்டு கொள்ளாத கெளதம் மீது ஆத்திரமாய் வந்தது.
கெளதம் எப்போதும் இப்படித்தான்…. அவள் அழகைக் கண்டு கொண்டதே இல்லை… நண்பனின் தங்கையோடு பழகவோ, பேசவோ வாய்ப்புக் கிடைத்தாலும் அவன் அவளோடு பேசவே மாட்டான்.
அவளை நிமிர்ந்தும் கூடப் பார்க்காத அவனது பார்வை, அழகான அந்த தேவதையின் அழகிற்கு கிடைக்காத அங்கீகாரமாகவே அவளுக்குத் தோன்றும்… அதனால் அவன் மீது வரும் கடுப்பை இப்படி எதையாவது சொல்லித் தீர்த்துக் கொள்வாள்.
அவளது தரிசனம் கிடைக்காதா என்று கல்லூரி மாணவர்கள் காத்துக் கிடக்க, அவளை ஒரு பொருட்டாகவே மதித்திடாத கெளதமின் மீது அவளுக்குக் எப்போதும் கோபம் கனன்று கொண்டே இருந்தது.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு அறிகுறியாய் மைக்கில் அறிவிப்பு வரவே, கலையரங்கத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த மாணவர்களும் உள்ளே சென்று அமரத் தொடங்கினர். கதிரின் வற்புறுத்தல் தாங்காமல் கௌதமும் கலையரங்கத்துக்குள் நுழைந்தான்.
மாணவர்களும், மாணவிகளும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் திறமையைக் குரலில் குழைத்து பாட்டில் கொடுத்துக் கொண்டிருந்தனர். கெளதம் சொன்னது போல எல்லாரும் காதலையே பாடிக் கொண்டிருந்தனர்.
அடுத்து பாடுவதற்காய் மைக்குடன் மேடை ஏறினான் கார்த்திக். அவனது கம்பீரமான குரல் மைக்கின் வழியாக கலையரங்கம் எங்கும் பரவத் தொடங்கியது.
“ஒரு பொய்யாவது சொல் கண்ணே….
உன் காதல் நான்தான் என்று…
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்…
பூக்களில் உன்னால் சத்தம்…
அடி மௌனத்தில் உன்னால் யுத்தம்…
இதைத் தாங்குமா என் நெஞ்சம்…
இதைத் தாங்குமா என் நெஞ்சம்…”
அழகான கம்பீரமான குரலில் உணர்வைக் குழைத்து உருகி உருகிப் பாடிக் கொண்டிருந்தான் கார்த்திக். அவனது குரலில் அனைவரும் லயித்துப் போய் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று மேடையில் ஏறிய கெளதம், அவனிடமிருந்து மைக்கைப் பறித்து, “சாரி பிரண்ட்ஸ்… கார்த்திக்கிற்கு இந்தப் பாட்டு மறந்து போயிருச்சாம்… அதுனால… வேற பாட்டு பாடுவான்…” என்று அவனை முறைத்துக் கொண்டே கையில் மைக்கை கொடுத்துவிட்டு கீழே இறங்கினான்.
அதைக் கண்டு சில மாணவர்கள் கூக்குரலிட, கௌதமின் செய்கையைக் கண்டு நிலாவிற்கு எரிச்சலாய் வந்தது.
அப்போது கார்த்திக் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அடுத்த பாடலைப் பாடத் தொடங்கினான்.
“நிலவு தூங்கும் நேரம்… நினைவு தூங்கிடாது…
இரவு தூங்கும் நேரம்… உறவு தூங்கிடாது…
இது ஒரு தொடர்கதை… தினம் தினம் வளர்பிறை…”
“ஹூம்… இவன் திருந்த மாட்டான்… நான் வெளியே இருக்கேன்…” என்ற கெளதம், கதிரின் பதிலை எதிர்பார்க்காமல் எழுந்து வெளியே சென்றான். அவனது செய்கையை பிடிக்காமல் பார்த்துக் கொண்டிருந்த நிலா, கார்த்திக்கின் பாடலில் லயிக்கத் தொடங்கினாள்.
பழைய நினைவுகளில் மூழ்கி இருந்த நிலா, அவளைத் தொட்டு அழைத்த ஒரு பெண்மணியின் அழைப்பில் நிகழ்வுக்கு வந்தாள்.
“ஏம்மா… நீங்க கொஞ்சம் அந்தப் பக்கம் உக்கார்ந்துக்கறீங்களா….. குழந்தையைக் கொஞ்சம் படுக்க வச்சுக்கறேன்…” வெகுநேரமாய் குழந்தையை உறக்கப் பாடுபட்டு ஒருவழியாய் குழந்தையை உறக்கி இருந்தாள் அதன் தாய்.
அவள் காட்டிய இருக்கையின் அருகில் கண்ணை மூடி அமர்ந்திருந்தான் கெளதம். மெல்ல எழுந்த நிலா அவனுக்கருகில் சென்று அமர்ந்தாள்.
“காதல் பாட்டு கூடப் பிடிக்காத கெளதம், இன்னைக்கு… எனக்கு வேண்டி, என் காதலுக்கு வேண்டி எவ்ளோ மாறிட்டான்…” அவனை நினைக்கும்போது அவள் மனம் பாகாய் உருகியது.
சோர்வுடன் அமர்ந்திருந்தவனைக் காணுகையில் அவளது மனது அவளைக் குற்றப் படுத்தியது.
“எல்லாம் என்னால் தானே… எனக்காகத் தானே… கெளதம் இத்தனை ரிஸ்க் எடுத்தான்… அவர்கள் கையில் சிக்கி இருந்தால் இப்போது என்னவாயிருக்கும்…” நினைத்தவளின் மனது பதறியது.
வெளியே பார்வையைப் பதித்தவளின் மனம் சற்று முன் நடந்தவைகளை அசை போடத் தொடங்கியது.
மாலை நேரம்…
சூரியன் தன் கடமையை முடித்துக் கொண்டு அடுத்து பூமியில் உள்ள உயிர்களுக்காய் கடமையாற்ற காத்துக் கொண்டிருந்த நிலாவின் கையில் பொறுப்பை மாற்றிக் கொடுத்து விட்டு மேற்கில் விடை பெற்றிருந்தான்.
அந்த கல்யாண மண்டபம் விளக்கு வெளிச்சத்தில் ஜெகஜோதியாய் மின்னிக் கொண்டிருந்தது. சொந்தங்களும், பந்தங்களும் சந்தோஷ முகத்துடன் பட்டுச் சேலை சரசரக்க, பொன்னகையுடனும், புன்னகையுடனும் உலவிக் கொண்டிருக்க விடிந்தால் நடக்கப் போகும் கல்யாணத்திற்காய் அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர்.
“கதிர் அண்ணே…” பின்னால் ஒலித்த குரலில் திரும்பிய கதிரவன் புன்னகைத்தான்.
“அடடே… வாங்க வாங்க… உங்களைக் காணாம தான் நிலா மூஞ்சத் தூக்கி வச்சிட்டு உக்கார்ந்திருக்கா… ஏம்மா, உங்க தோழி கல்யாணத்துக்கு கொஞ்சம் சீக்கிரமா வர்ரதில்லையா…” என்றான் நிலாவின் தோழியரிடம்.
“சாரிண்ணா… எல்லாரும் ஒண்ணு சேர்ந்து கிளம்ப நேரமாயிடுச்சு…”
“சரி… சரி… நீங்க போயி நிலாவைப் பாருங்க…”
“அதுக்கு முன்னாடி நாங்க நிலாவைக் கட்டிக்கப் போற மாப்பிள்ளையைத்தான் பார்க்கணும்… எங்களுக்கு அவரை அறிமுகப் படுத்தி வைங்கண்ணா…” என்று சிரித்தாள் ராகவி.
“சரி… வாங்க…” புன்னகையுடன் அவர்களை மாப்பிள்ளையின் அறைக்கு அழைத்துச் சென்றான்.
————————————————————————————————————மையல் கொண்ட நிலவாய்
மனம் மயங்குது உன்னிடம்…
உன் விழிகளின் உரசலில்
என் இதயம் இடறி விழுகிறது…
உன் உள்ளக் கிடங்கில்
எனக்கும் ஒரு இடமுண்டா…
தனிமை எனை வாட்டும்
துயில் கொள்ளா இரவில்
உன் நினைவுகளை துணைக்கழைத்து
என் உறக்கம் தொலைத்திருந்தேன்…
உன் நினைவுகள் முள்ளென்று தெரிந்தும்
எடுத்துக் கீறிக் கொள்கிறேன் – மனதை…
உனக்காக என் விழிகள்
சிந்தும் கண்ணீர்
உன் விரல் தொட்டு
குளிர வேண்டும்…..
என் விழிகளின் தேடல் எல்லாம்
உன்னில் தொடங்கி உன்னிலேயே
நிறைவு பெறக் காத்திருக்கிறது……
ஓயாமல் ஒளிந்தோடும் வெண்ணிலாவே
உன் மையல் தீரும் நாள் எப்போது….
                                                                                                                 

Advertisement