Advertisement

நிலா – 1
தடக் தடக்…. தடக் தடக்……
குலுங்கிக் குலுங்கித் தாலாட்டுவது போல் சென்னையை நோக்கி விரைந்து கொண்டிருந்தது அந்த ரயில். பல வித முகவரிகளுடன் கூடிய மக்களும் பல விதக் கவலைகளைத் தாங்கிக் கொண்டு, பயணித்துக் கொண்டிருந்தனர். சிலர் பர்த்திலும், சிலர் அமர்ந்து கொண்டேயும் உறங்கிக் கொண்டிருக்க, சிலர் யோசனை படிந்த முகத்துடன் உறங்க இடமில்லாமல் அசதியுடன் பயணித்துக் கொண்டிருந்தனர்.
வானிலிருந்து மங்கலாக ஒளி வீசிக் கொண்டிருந்த நிலாவொளியில் கலைந்த ஓவியமாக, சோர்வுடன் அமர்ந்திருந்தாள்  நிலா. அவளது மனது அச்சத்திலும், என்ன நடக்கப் போகிறதோ, என்ற தவிப்பிலும் நிலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது.
கதிரவன் தன் கடமையைத் தொடங்க, “இன்னும் நேரமிருக்கிறதே…” என நேரம் பார்த்துக் கொண்டிருக்க, விடியலின் வெளிச்சத்திற்காய் கொட்டாவியுடன் காத்திருந்தனர் சில பயணிகள்.
வசதியாக உறங்க முடியாமல் கைக்குழந்தை ஒன்று வீலென்ற அலறலுடன் சத்தமாக அழத் தொடங்கியது. ஜன்னலோர இருக்கையில் வெளியே இருட்டில் கண்ணீருடன் பார்வையைப் பதித்து தனை மறந்து யோசனையில் உலாவிக் கொண்டிருந்த நிலா அந்த சத்தத்தில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
அழுத குழந்தையைத் தாண்டி ஓடிய அவளது நீண்ட, அகண்ட, கண்ணீர் தோய்ந்த பெரிய விழிகள் சுற்றுமுற்றும் பார்வையை ஓட்டி யாரையோ தேடியது. 
அவள் தேடலுக்குரியவன் கதவோரத்தில் நிற்பதைக் கண்டதும் சற்று சமாதானத்துடன் பார்வையை மீட்டுக் கொண்டது.
மீண்டும் இருட்டில் வெளிச்சத்தை தேடி பார்வையை வெளியே பதித்தாள். இமைக்கும் நொடிக்குள் சரசரவென்று கடந்து சென்ற மரங்களும், சுகமான இரவு வாடைக் காற்றும், இதமாக இருந்தாலும் அவையெதுவும் அவள் கருத்தில் பதியவில்லை. அவள் மனதில் நிறைந்து கிடந்த கவலை மேகங்கள் அவளது கண்ணை மறைத்திருந்தன.
ரயிலுக்கு இணையான வேகத்துடன் பயணித்துக் கொண்டிருந்த அவள் எண்ண ஓட்டத்தை தடை செய்வது போல் நீண்ட ஹாரனை எழுப்பி மெல்ல வேகத்தைக் குறைத்துக் கொண்ட புகை வண்டி, ஸ்டேஷனில் தன் பெருத்த உடலின் இயக்கத்தை நிறுத்திக் கொண்டு அமைதியானது.
“டீ… காப்பி… டீ.. காப்பி…” ஒலிக்கத் தொடங்கிய ரயில் சிப்பந்திகளின் குரல்களைத் தொடர்ந்து பயணிகள் இறங்கவும், ஏறவும் எனப் பரபரப்பாக, அவளை நோக்கி வந்தான் அந்த நெடியவன்.
ஆறடி உயரத்தில் கம்பீரமாய் இருந்தான். தலையில் அடர்ந்திருந்த சிகை காற்றில் கலைந்திருக்க, கண்களில் ஒரு அலட்சியபாவம்… புன்னகைக்க மறுக்கும் உதடுகள்… திருத்தமான முகம்… அழகான கட்டியான மீசை… சிரித்தால் மிகவும் அழகாய் இருப்பான் எனத் தோன்ற வைக்கும் தோற்றம்… அந்த நேரத்திலும் வாயில் சுயிங்கத்தை அசை போட்டுக் கொண்டிருந்தவன், வாயைத் திறந்தான்.
“காப்பி வேணுமா…….”
அவனது அழுத்தமான குரலில் சட்டென்று திரும்பிய நிலா, வேண்டுமென்பது போலத் தலையசைத்தாள்.
ஒரு பேப்பர் கப்பில் காப்பியுடன் அவளிடம் வந்தவன், “இந்தா…” என்று நீட்டினான்.
அதை வாங்கிக் கொண்டவள் மெல்ல பருகத் தொடங்க, எதிரில் உள்ள காலி இருக்கை ஒன்றில் சாய்ந்து அமர்ந்தவன் சோர்வுடன் கண்ணை மூடிக் கொண்டான். கண்களுக்குள் அசைந்து கொண்டிருந்த கண்மணிகள் அவன் எதையோ தீவிரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்த்த, அவனைத் திரும்பிப் பார்த்த நிலாவின் மனது அவனைப் பற்றிய பழைய நினைவில் மூழ்கியது.
சேலத்தில் இருந்த அந்த இருபாலினருக்கான கலைக்கல்லூரி விழாக் கோலம் பூண்டிருந்தது.
பல வண்ணப் பட்டாம் பூச்சிகளாய் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்க, கல்லூரிகளுக்கு இடையே நடைபெறும் பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள அனைவரும் பரபரப்புடன் காத்திருந்தனர்.
நண்பனைத் தேடிக் கொண்டிருந்த கதிரவன், பைக் ஸ்டாண்டின் அருகில் பைக்கில் அமர்ந்து அலைபேசியில் நோண்டிக் கொண்டிருந்த கெளதமை நோக்கி வந்தான்.
“கெளதம்… இங்க என்னடா பண்ணிட்டு இருக்கே… புரோகிராம் தொடங்கப் போகுது… வா, ஆடிட்டோரியம் போகலாம்…” சுயிங்கத்தை வாயில் அசை போட்டுக் கொண்டு பைக்கின் மீது அமர்ந்திருந்த நண்பனிடம் வந்தான் கதிரவன்.
அழகான ஆகாய நீல வண்ண சட்டையை பேண்டுக்குள் நுழைத்து ஸ்டைலாய் பைக்கின் மீது அமர்ந்திருந்தான் கெளதம்.
“ப்ச்… சுத்த போர்டா… என்ன பாடிடப் போறாங்க… ஆளாளுக்கு காதல், காதல்னு வேற பாட்டே இல்லாத போலப் பாடிட்டு இருப்பாங்க… அதைக் கேட்டாலே எனக்கு எரிச்சலா இருக்கு… நீ போ… நான் வரலை…” என்றான் அலட்சியத்துடன்.
நண்பனின் மனநிலையை நன்கு அறிந்த கதிர், “டேய்… எல்லாரும் உள்ளே போயிட்டு இருக்காங்க… நீ இங்கே தனியா உக்கார்ந்து என்ன பண்ணப் போறே… உனக்குக் காதல் பிடிக்கலைனா பரவாயில்லை… நீ யாரையும் காதலிக்கவும் வேண்டாம்… காதலைப் பாடவும் வேண்டாம்… வாடா… சும்மா வேடிக்கை பார்க்கலாம்…” என்றான்.
இருவரும் சிறுவயது முதலே நண்பர்கள். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். கதிரின் தந்தை செல்வ செழிப்போடும், செல்வாக்கோடும் வாழ்ந்தவர். அதனால் அவரது குடும்பத்திற்கு அவர்கள் ஊரில் நல்ல மதிப்பு இருந்தது. ஒரு ஆண்டுக்கு முன்பு விபத்து ஒன்றில் காலமாகி இருந்தார்.
கௌதமிற்கு காதல் என்ற வார்த்தையைக் கேட்டாலே பிடிக்காது… காதல் என்றாலே வெறுப்பு…
அவனது அன்னை கல்யாணத்திற்கு முன்பு ஒருவனைக் காதலித்து, வேறு வழியில்லாமல் இவன் தந்தையை மணந்து, குழந்தையும் பெற்று, மகனது சிறு வயதிலேயே மீண்டும் அந்தக் காதலனுடன் ஊரை விட்டு ஓடிப் போய் விட்டார். அதில் வந்த அவப் பெயரில் கூனிக் குறுகிப் போய்விட்டார் அவன் தந்தை கைலாசம்.
தன் கம்பீரமான தந்தையை வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கச் செய்த தாயின் செயலால் அவனுக்கு காதல் மீதே வெறுப்பாய் இருந்தது. தாயில்லாமல் தந்தையின் பொறுப்பில் வளர்ந்ததால் எல்லாக் காரியத்திலும் ஒரு அலட்சிய பாவம்… எதற்கும் பயப்படாமல் துணிந்து காரியத்தில் இறங்கி விடும் சுபாவம்.
சிறுவயது முதலே அவனது நண்பர்கள் தான் அவனை உயிர்ப்புடன் வைத்திருந்தனர். அன்னையின் செயலை குத்திக் காட்டி, எங்காவது யாராவது பேசினாலும் அவன் நண்பர்களே அவனுக்கு துணையாக நின்று அவன் மனம் சுருங்கி விடாமல் காத்தனர். அதனால் நட்புக்காக உயிரையே கொடுப்பான்.
அப்போது வேகமாய் பைக்கில் வந்த கார்த்திக், அதை நிறுத்திவிட்டு, “கெளதம்… இன்னும் பங்க்ஷன் தொடங்கலையே…” என்றான்.
அவனைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டான் கதிர். இருவரும் பக்கத்துக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்கள்… இரண்டு ஊருக்கும் எப்போதும் ஆகாது… அடிதடி சண்டை என்று அவ்வப்போது மோதிக் கொள்வது வழக்கம்.
அதுவும் இல்லாமல் கார்த்திக்கின் தந்தை அடிதடி, வழக்கு, கட்டப் பஞ்சாயத்து என்று போலீசும், வழக்குமாகவே வாழ்ந்து முடித்தவர். நிறைய முறை சிறை தண்டனை அனுபவித்தவர். அவரது மகன் என்ற காரணமும் சேர்ந்து கொள்ள கார்த்திக்குடன் அதிகம் யாரும் பேச மாட்டார்கள்… கதிரும் பேச மாட்டான். மூவரும் MBA இறுதி ஆண்டு மாணவர்கள்.
கெளதம் அவனுடன் நட்பாக இருப்பது கதிருக்குப் பிடிக்காவிட்டாலும், நண்பர்கள் விஷயத்தில் எது சொன்னாலும் கெளதம் விட்டுக் கொடுக்க மாட்டான் என்பதால் அவர்கள் இருவரும் பழகுவதைக் கண்டு கொள்ள மாட்டான்.
கௌதமிற்கு ஏனோ கார்த்திக்கை விலக்கி வைக்க மனமில்லை… தனக்கு தாயின் அவசெயல் போல, கார்த்திக்கின் தந்தையின் செயலால் அவனும் பாதிக்கப் பட்டிருந்ததால் அவன் மீது ஒருவகைப் பிரியம் கௌதமிற்கு.
“எங்கடா போயிருந்தே… நீ ஏதோ பாடப் போறேன்னு சொல்லிட்டு இருந்தே…” என்றான் கெளதம்.
“ம்ம்… ஆமாம் கெளதம்… ஒரு விஷயமா வெளியே போயிருந்தேன்… சரி… நீ எதுக்கு இங்கே நிக்கறே… வா… உள்ளே போவோம்…”
“ச்சேச்சே… நான் வரலை டா… உலகத்துல காதலைத் தவிர வேற எதுவுமே இல்லாத போல எல்லாரும் அதையே பாடுவீங்க… கேட்டாலே கடுப்பாகிடும்… நீயும் போயி அதையே பாடு போ…” என்றான் அடர்ந்த சிகையைக் பைக் கண்ணாடியில் நோக்கி கோதிவிட்டுக் கொண்டே.
“புரோக்ராம் தொடங்கினதும் கொஞ்ச நேரமாவது வாடா… நான் பாடறதை மட்டுமாவது கேட்டுட்டுப் போ… சரி, நான் உள்ளே போறேன்…” என்றவன் ஆடிட்டோரியத்தை நோக்கி நகர்ந்தான்.
“என்னடா… அவனைப் பார்த்ததும் நீ மௌன விரதமா…” என்றான் கதிரிடம் கிண்டலுடன்.
“ஹூம்ம்… அவன்கிட்ட பேசாதேன்னு உன்கிட்ட சொன்னா கேக்கவா போற… அதுக்கு நான் பேசாம கம்முன்னு இருந்திடலாம்… என்ன இருந்தாலும் அவன் ஊருக்கும் நம்ம ஊருக்கும் ஆகாது… நீ அதை எப்பவும் மனசுல வச்சுக்கோ… அவன்கூட ரொம்பவும் சுத்தாதே…”
“நட்புக்குள்ள ஊரு எங்கடா வந்துச்சு… பாவம்… அவன் அப்பா குணத்தால அவனை எல்லாரும் தள்ளி வச்சே பழகுறாங்க… அவன் நல்லவன் டா… சரி விடு… நீ எதுவும் பாடலையா…”
“ஹூக்கும்… நான் பாடினா எனக்கே சகிக்காது… அப்புறம் மத்தவங்க எப்படி கேப்பாங்க… கொடுமையா இருக்காது… உன் குரல் நல்லாருக்கே… நீ காதல் இல்லாம ஒரு பாட்டுப் பாட வேண்டியது தான…” என்றான் கதிர்.

Advertisement