Advertisement

“அத்தை உள்ள படுத்துருக்காங்க. ராதிகா சாதம் வடிக்க உள்ள போனா டா…..”
“ஓ அப்படியா? அப்புறம் அம்மா உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்னு நினைச்சேன்”
“என்ன டா?”
“நாங்க இன்னைக்கு சென்னைக்கு போகலாம்னு இருக்கோம்”, என்று சொன்னதும் திக்கென்று இருந்தது யசோதாவுக்கு. 
“என்ன பாண்டி சொல்ற?”
“ஆமா மா, ராதிகாவுக்கு நவீன் நினைவாவே இருக்கு போல? நைட் எல்லாம் கனவு கண்டு அலறுறா? ஒரெட்டு பாத்துட்டு வந்துட்டா நிம்மதியா இருக்கும்”
“ஓஹோ எல்லா முடிவும் நீங்களே எடுத்துருவீங்க அப்படித் தானே? அந்த அளவுக்கு பெரிய மனுசனா ஆகிட்ட? நாளான்னைக்கு அறுப்பு இருக்கு நினைவு இருக்கா? இல்லை நானே தனியா கிடந்து அல்லாடணும்னு நினைச்சியா?”
“அம்மா”
“என்ன டா அம்மா? இன்னைக்கு கிளம்ப போறோம்னு இப்ப வந்து சொல்ற? ஏன் முன்னாடியே சொல்லணும்னு இல்லையா? நேத்து மதியம் உன் முன்னாடி தானே கதிர் அறுக்குற மிசினுக்கு அட்வான்ஸ் கொடுத்தேன். அப்ப எல்லாம் கமுக்கமா இருந்துட்டு இப்ப வந்து இப்படி சொல்ற?”
“இல்லை மா நாளான்னைக்கு தானேன்னு நினைச்சு தான்….”
“என்ன விளையாடுறியா? இன்னைக்கு கிளம்பினா காலைல போய் செருவீங்க. அப்புறம் நாளான்னைக்கு எப்படி வருவ? நாளைக்கு நைட்டே கிளம்பிருவியோ? அப்படியே கிளம்பினாலும் நைட் முழுக்க பஸ்ல வந்துட்டு உடனே வயல்ல இறங்குவியா? ஏன் உன் பொண்டாட்டிக்கு அவ அம்மா அப்பாவை பாக்காம இருக்க முடியலைன்னு உன்னை கூட்டிப் போகச் சொன்னாளோ? அவ சொன்னான்னு நீயும் கிளம்பிட்டல்ல? இங்க இருக்குற வேலை எல்லாத்தையும் மறந்துட்ட? உன் அக்கா வீட்டுக்கு விருந்துக்கு போக வேண்டியதையே மறந்தவன் தானே? நீ ரொம்ப மாறிட்ட பாண்டி”, என்று யசோதா பொங்கிக் கொண்டிருக்கும் போதே “ஆஆ… அம்மா….”, என்ற ராதிகாவின் அலறல் சத்தம் உள்ளே இருந்து கேட்டது. 
“ஐயையோ என்ன ஆச்சு?”, என்று யசோதாவும் “ராதிகா என்ன ஆச்சு?”, என்று பாண்டியும் பதறிய படியே உள்ளே சென்று பார்க்க அங்கே தரையில் கிடக்கும் மீன் போல துடித்துக் கொண்டிருந்தாள் ராதிகா. 
ஒரு பானை சோறும் அவள் காலில் தான் கவிழ்ந்திருந்தது. அதைக் கண்டு பதறியவன் ஒரு குடம் தண்ணீரை எடுத்து அவள் காலில் ஊற்றி அவள் காலில் இருந்த சோற்றுப் பருக்கைகளை அகற்றினான். 
யசோதாவும் அதிர்ந்த படி பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு சட்டென்று என்ன செய்ய என்று தெரிய வில்லை. மற்ற நேரமாக இருந்திருந்தால் ஏதாவது செய்யத் தோன்றி இருக்குமோ என்னவோ? 
பாண்டி சென்னைக்கு போகிறோம் என்று சொன்னதும் மொத்தக் கோபமும் ராதிகா மேல் திரும்பியதால் இப்போது என்ன செய்ய என்று தெரியாமல் நின்றாள் யசோதா. 
“எதுக்கும்மா இவளை இந்த வேலை எல்லாம் செய்ய வைக்கிற? வர வர உனக்கு மூளை வேலை செய்யுறதே இல்லை. நான் சேகர் அண்ணன் ஆட்டோல இவளைக் கூட்டிட்டு ஆஸ்பத்திரிக்கு போறேன்”, என்று யசோதாவிடம் கத்தி விட்டு ராதிகாவைக் கைகளில் தூக்கிக் கொண்டான் பாண்டி. 
தண்ணீர் ஊற்றியதால் எரிச்சல் சிறிது அடங்கியிருக்க ராதிகாவின்  கவனம் பாண்டி மேல் சென்றது. மிக அருகில் தெரிந்த அவன் முகத்தை பார்த்தாள் ராதிகா. அவன் முகத்தில் இருந்த பதட்டம் அவளுக்கு சுகமாக இருந்தது. அது அவளுக்கானது அல்லவா? ஏனோ தனக்கென்று ஒருவன் இருக்கிறான் என்று முதல் முறையாக பூரித்துப் போனாள். 
அவனது அகன்ற நெற்றி, அடர்த்தியான புருவம், கம்பீரமான கண்கள், லேசான தாடியுடன் கூடிய கன்னம், தடித்த உதடுகள் என அவள் பார்வை அவன் முகத்தில் ஊர்வலம் போனது. பக்கத்து வீட்டில் இருந்த ஆட்டோவை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு சென்றார்கள். போகும் போதெல்லாம் அவன் அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டே வர அவளோ அவன் அன்பில் கரைந்த படி அவன் கையணைப்பில் இருந்தாள். 
அவர்கள் போன பாதையை பார்த்துக் கொண்டு எரிச்சலின் உச்சத்தில் நின்றாள் யசோதா. அப்போது தான் தூங்கி எழுந்து வந்த சொர்ணம் “என்ன ஆச்சு யசோ? எதுக்கு வாசலையே பாத்துட்டு நிக்குற?”, என்று கேட்டாள். 
“என்னத்த சொல்ல? எப்பவும் போல நான் சமையல் செஞ்சிட்டு இருந்தேன் அத்தை. ராதிகா வந்து ஏதாவது செய்யனுமான்னு கேட்டா. நான் சாதம் வெந்துருச்சு வடிக்க போறேன்னு சொன்னேன். நான் வடிக்கேன்னு போய் அப்படியே கால்ல கவுத்துக்கிட்டா”
“என்ன சொல்ற யசோ?”
“ஆமா அத்தை இறக்க தெரியாம இறக்கி அவ கால்ல கொட்டிக்கிட்டா”
“ஐயையோ அப்புறம் என்ன ஆச்சு?”
“அதான் உங்க பேரன் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிருக்கான். எல்லாம் என் நேரம். நல்லா வந்து வாச்சிருக்கா பாரு”
“என்ன உன் நேரம்? எதுக்கு அவளை திட்டுற?”
“இப்படி சோறு வடிக்க கூட தெரியாத மருமக வந்து வாச்சிருக்கா. நாளைக்கு நமக்கு உடம்பு சரியில்லைன்னா யார் இதெல்லாம் செய்வா? அது மட்டுமில்லாம இவன் வேற எதுக்கு என் பொண்டாட்டியை இந்த வேலை எல்லாம் செய்ய சொல்றனு கத்திட்டு போறான்? எனக்கு மூளையே இல்லையாம்? இவளால இது வரை என்னைத் திட்டாத மகன் என்னைத் திட்டிட்டு போறான். இப்படி எல்லாம் நடக்கும்னு தான் இந்த சம்பந்தம் வேண்டாம்னு நான் அப்பவே சொன்னேன்”, என்று சொல்லிக் கொண்டே சிந்தியிருந்த சோற்றை எல்லாம் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். 
மகன் எங்கே மருமகளுக்காக கூஜா தூக்கம் ஆரம்பித்து விடுவானோ என்று யசோதா பயப்படுகிறாள் என்பதை புரிந்து கொண்டாள் சொர்ணம். 
“தெரியாம கொட்டினா அவ என்ன செய்வா யசோ? அவனும் பதட்டத்துல பேசிருப்பான். ரொம்ப காயம் ஆகிருச்சா? நாமளும் ஆஸ்பத்திரிக்கு போவோமா யசோதா?”
“வேண்டாம் அத்தை. வீட்டுக்கு தானே வருவாங்க? காயம் எந்த அளவுக்குன்னு எல்லாம் பாக்கலை. வந்தா தான் தெரியும். ஆனா உங்க பேரனையும் சும்மா சொல்லக் கூடாது அத்தை. பொண்டாட்டிக்கு கொஞ்சம் அதிகமா தான் சப்போர்ட் பண்ணுறான். இன்னைக்கு அவளை சென்னைக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னான். கடவுளே இப்படி பண்ணிட்டார்”
“என்ன யசோ இப்படி எல்லாம் சொல்ற?”
“வேற என்ன சொல்ல சொல்றீங்க? நாளான்னைக்கு வயல் அறுப்பு இருக்கு. ஆனா இந்த ராதிகா சென்னை போறதுக்கு அவனுக்கு தூபம் போட்டுருக்கா. முன்னாடி இருந்த பாண்டி இப்படி எல்லாம் இருப்பானா? எல்லாம் அவ வந்த நேரம்”
“இது தான் கோபமா? அவளுக்கு அவ அம்மா அப்பா பத்தி கவலை. ஆனா நீ அவங்க உறவை முறிக்க சொன்னது இவங்களுக்கு எப்படி தெரியும்?”
“அத்தை….”, என்று திகைப்பாக அழைத்தாள் யசோதா. 
“நான் உண்மையை தானே சொன்னேன்? நான் இப்ப என்ன சொன்னாலும் அதை உன் மனசு ஏத்துக்குமான்னு எனக்கு தெரியலை யசோதா. கொஞ்சம் அமைதியா மட்டும் இரு. அப்புறம் பேசிக்கலாம். தேவையில்லாம எதையாவது பேசி வைக்காத”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் சொர்ணம். 
யசோதா அடுப்படியை சுத்தம் செய்வதில் கவனம் செலுத்தினாள். உள்ளே சென்ற சொர்ணத்துக்கு யசோதா மனது தெளிவாக புரிந்தது. 
யசோதா மனது தவறான பாதையில் செல்ல தொடங்கி விட்டதை சொர்ணம் புரிந்து கொண்டாள். 
“யசோதா மனசை சீக்கிரம் மாத்தணும். இப்ப எடுத்து சொன்னா, கூட கொஞ்சம் தான் அவளுக்கு கோபம் வரும். ஆற அமர அவளுக்கு சொல்வோம்”, என்று எண்ணிய சொர்ணம் ஹாஸ்பிட்டலில் இருந்து அவர்கள் எப்போது வருவார்கள் என்று காத்திருந்தாள். 
ஹாஸ்பிட்டலில் மருந்திடும் போது ராதிகாவுக்கு வலி உயிர் போனது. சூடான சாதத்துடன் அந்த வடி தண்ணீரும் சேர்ந்து ராதிகா காலில் கொப்புளங்களை உண்டாக்கி விட்டது. 
நர்ஸ் மருந்து போடும் போது பாண்டியின் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள். அவளுடைய கண்ணீர் அவன் சட்டையை நனைப்பதிலே அவள் வலியை புரிந்து கொண்டான். 
“நீ ஏன் மா இதெல்லாம் செஞ்ச? இப்ப பாரு எப்படி வலிக்குது? புண்ணைப் பாக்கவே பயங்கரமா இருக்கு”, என்று அவளுக்கு ஆறுதல் சொன்னான் பாண்டி. 
அந்த வலியிலும் அவனுடைய பாசமான பேச்சை ரசித்தாள் ராதிகா. 
அதன் பின் வலி குறைய ஒரு ஊசியும், மருந்தும், டாக்டரின் சில பல அறிவுரைகளையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்கள். 
வீட்டுக்கு வந்ததும் அவளை தரையில் விடாமல் அவனே தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் சென்றான். சொர்ணமும் யசோதாவும் அவர்கள் அருகில் வந்தார்கள். 
“அம்மா ஆட்டோ அண்ணனுக்கு பைசா கொடுத்துரு”, என்று சொன்னவன் அவளை தூக்கிக் கொண்டு மாடிக்கு ஏறப் போக “எதுக்கு டா மாடிக்கு? இங்கயே இருந்தா நாங்க பாத்துக்குவோம்ல?”, என்றாள் சொர்ணம். 
“இல்லை பாட்டி, மாடில ரூமுக்குள்ளே பாத்ரூம் இருக்கு. இங்கன்னா வெளிய தான் போகணும். அதனால ராதிகா மேலயே இருக்கட்டும். நான் அவளை பாத்துக்குறேன்”, என்று சொல்லி மாடிக்கு சென்று விட்டான்.
சொர்ணமும் அவர்கள் பின்னே மாடிக்கு சென்றாள். ஆட்டோவுக்கு பணத்தை கொடுத்து விட்டு யசோதாவும் மேலே சென்றாள். அவர்கள் சென்னை போவது தடை பட்டதால் யசோதாவின் கோபம் சிறிது மட்டு பட்டுவிட்டது போல? அதனால் “ரொம்ப வலிக்குதா ராதிகா? இதுக்கு தான் நானே செய்றேன்னு சொன்னேன்?”, என்று மருமகளிடம் நலம் விசாரித்தாள். 
“சாரி அத்தை, நான் கவனமா தான் பிடிச்சிருந்தேன். துணி தான் வழுக்கிருச்சு. எல்லா சாதமும் கொட்டி போச்சு. எல்லாம் என்னால தான்”
“சோறு போனா திருப்பி பொங்கிக்கலாம். ஆனா இந்த காயம் சீக்கிரம் ஆறுமா? என்ன பொண்ணும்மா நீ?”, என்று தன்னுடைய பேத்தியை கடிந்து கொண்டாள் சொர்ணம். 
“யசோ, நேரம் ஆச்சு பாரு. பிள்ளைங்களுக்கு சாப்பாடு கொடு”, என்று சொர்ணம் சொல்ல இருவருக்கும் சாப்பாடை மாடிக்கு எடுத்து வந்து கொடுத்தாள் யசோதா. 
அதன் பின் அவர்களை ஓய்வெடுக்க சொல்லி விட்டு சொர்ணமும் யசோதாவும் கீழே வந்தார்கள். “கொஞ்ச நேரம் தூங்குறியா ராதிகா?”, என்று கேட்டான் பாண்டி. 
“இல்லை, வேண்டாம் அத்தான்”, என்று சொன்னவள் மெதுவாக எழ முயற்சி செய்து அப்படியே அமர்ந்து விட்டாள். 
“என்ன ஆச்சு மா? ஏதும் வேணுமா?”
“பாத்ரூம் போகணும்”, என்று சங்கடமாக முணுமுணுத்தாள். 
“என்னைக் கூப்பிட வேண்டியது தானே? உன்னால இப்போதைக்கு காலை ஊனி நடக்க முடியாது. இன்னும் எது வேணும்னாலும் என்னைக் கேளு”, என்று சொல்லி அவளை நெருங்கியவன் அவளை அப்படியே தூக்கி அவளை பாத்ரூமுக்குள் விட்டான்.  
“முடிஞ்சதும் என்னைக் கூப்பிடு”, என்று சொல்லி கதவை தாழ்ப்பாள் போட்டவன் வெளியே வந்து நின்று கொண்டான். “கதவை திறங்க அத்தான்”, என்று அவள் சொன்னதும் கதவை திறந்தவன் மீண்டும் அவளை தூக்கி கட்டிலில் விட்டான். 
அவளுக்கு அவனுடைய அருகாமை மிகவும் பிடித்தது. இப்படி ஒரு கணவன் கிடைத்தால் யாருக்கு தான் பிடிக்காது? அவனுடைய அருகாமையில் வலி கூட குறைந்தது போல இருந்தது அவளுக்கு. 
அவள் கால்களை தன்னுடைய மடி மேல் வைத்துக் கொண்டு காலில் மருந்திட்டு விட்டு அவன் எழப் போகும் போது அவன் கையை பற்றியவள் “ரொம்ப எரியுது அத்தான். கொஞ்ச நேரம் என் பக்கத்துலே இருங்களேன்”, என்றாள். 
அவள் அருகில் அமர்ந்தவன் அவளது தோளில் தட்டிக் கொடுத்தான். தன்னுடைய தலைக்கு அடியில் இருந்த தலையைனையை எடுத்து விட்டு அவன் மடியில் தலை வைத்தாள் ராதிகா. அவள் செய்கையில் வியந்து தான் போனான். இதை அவன் எதிர் பார்க்கவே இல்லை. அவளுடைய ஒற்றுதலான செய்கையை ரசித்தவன் புன்னகைத்துக் கொண்டான். அவன் கைகள் அவளது தலையை வருடி கொடுத்தது. 
புன்னகையுடன் அவள் அவனை நிமிர்ந்து பார்க்க “ரொம்ப வலிக்குதா?”, என்று அன்பொழுக கேட்டான் பாண்டி. “இப்படி எல்லாம் நீங்க என்னைப் பாத்துக்குவீங்கன்னா எனக்கு தினம் தினம் அடி பட்டா கூட சந்தோஷம் தான்”, என்று சொல்ல அவள் உதடுகளை தன்னுடைய விரலால் மூடினான். 
அவள் சிரிக்க “தேவையில்லாம பேசக் கூடாது. எதையும் யோசிக்காம தூங்கு ராதிகா. கால் சரியான பிறகு உன்னை சென்னைக்கு கூட்டிட்டு போறேன்”, என்று சொல்லி அவள் தலையை வருட ஆரம்பித்தான். அவன் வருடலில் அவள் கண்கள் மெதுவாக மூடியது. சிறிது நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாள்.
தேடல் தொடரும்…..

Advertisement